தன்னை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்து பேசும் ஜீவானந்தை சந்தேகமாக பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார் மரகதம். உறங்காமல் எங்கோ வெரித்துக் கொண்டு அமர்ந்து இருக்கும் மரகதத்தின் அருகில் வந்த உமா, “என்னம்மா? என்ன யோசனை? ஏன் ஏதோ போல் உட்கார்ந்திருக்கிறீங்க? என்று கேட்டபடி அவரின் அருகில் அமர்ந்தாள்.
“ஒன்றுமில்லை உமா. ஏதோ யோசனை. சரி நேரம் ஆகிவிட்டது. வேலை எல்லாம் முடிந்து விட்டதா?
பாத்திரம் மட்டும் கழுவ வேண்டும். மற்றபடி எல்லாம் முடிந்து விட்டது.
சரி நீ போய் தூங்கு. நான் செய்து விடுகிறேன்.
திருமணத்திற்கு சென்று வந்தது உங்களுக்கு அசதியாக இருக்கும். நீங்கள் சென்ற உறங்குங்கள். நான் வேலை எல்லாம் முடித்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அவரை சென்று படுக்கும்படி கூறி அனுப்பினாள்.
‘சரி நாளையில் ஆனந்திடம் கேட்டுக் கொள்வோம்’ என்று நினைத்துக் கொண்டு தூங்குவதற்கு சென்று விட்டார்.
அதன் பிறகு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு உமாவும் உறங்கி விட்டாள். மறுநாள் மரகதம் எழுந்திருக்கும் பொழுது ஜீவானந்த் தோட்டத்திற்கு சென்று விட்டான்.
அஞ்சலி பள்ளிக்கூடம் செல்ல, அவளை கவனித்துக் கொண்டாள் உமா. இப்படியே ஒரு வாரம் செல்ல ஜீவானந்த் வீட்டிற்கு வருவதை முற்றிலும் தவிர்த்துவிட்டு தோட்டத்து வீட்டிலேயே தங்கி கொண்டான்.
ஒரு வாரமாக பொறுத்துப் பார்த்த மரகதம் இன்று எப்படியாவது ஆனந்திடம் பேசி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுது பக்கத்து வீட்டு பெண்மணி மரகதத்தை கோயிலுக்கு வருமாறு அழைத்தார்.
சரி என்று கிளம்பிய மரகதரத்திடம் பள்ளியிலிருந்து வந்த அஞ்சலி தானும் வருவேன் என்று அடம் பிடித்தாள். அவரோ இரவு வர தாமதமாகும், உனக்கு தூக்கம் வந்துவிடும் என்று ஏதேதோ காரணம் சொல்ல, நான் வருவேன் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.
வேறு வழியில்லாமல் அவளை அழைத்துக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றார்கள்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு வந்தான் ஜீவானந்த். கண்களாலேயே அத்தையை தேடினான். அவனுக்கோ நேற்றிலிருந்து தலைவலி. அதனால் அவனின் முகம் வாடி இருந்தது. மரகதம் இருந்தால் ஏதாவது கசாயம் செய்து குடிக்க தருவார்.
அவனின் பார்வையை வைத்தே உமா பாரதி, “அம்மாவும் அஞ்சலியும் பக்கத்து வீட்டு அக்காவுடன் கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள்” என்று அவனிடம் கூறினாள்.
அவனும் ஏதும் சொல்லாமல் தனது அறைக்குச் சென்று படுத்து விட்டான். அவனின் முக வாட்டத்தை கண்டு சூடாக சுக்கு காபி போட்டு அவனது அறைக்குச் சென்று கதவை தட்டினாள்.
“என்ன?” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தான்.
“சுக்கு காபி” என்று மெதுவாக கூற, அது அவன் காதுகளில் விழவே இல்லை.
“உள்ளே வா” என்று அவன் மறு குரல் கொடுத்தவுடன் உள்ளே சென்றாள்.
காபியை அவனிடம் நீட்ட, டம்ளரையும் அவளையும் மாறி மாறி பார்த்து, வாங்கி குடிக்க, அவனது தலை வலிக்கு இதமாக இருந்தது. கண்களை மூடி ரசித்து குடித்துக் கொண்டிருந்தான்.
குடித்து முடித்ததும் வெளியே செல்ல இருந்த உமா பாரதி, “ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று தயங்கி அவனிடம் கேட்டாள்.
அவனும் பெருமூச்சு விட்டுக் கொண்டு “நேற்றில் இருந்து தலைவலி”
“நா.. நான் பிடித்து விடட்டுமா?”
எதுவும் பேசாமல் பிடித்து விடுவதற்கு வசதியாக எழுந்து நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்தான்.
உமா பாரதியும் நடுங்கும் கைகளை மெதுவாக, சூடாக இருந்த அவனது நெற்றியில் வைத்து தலையை மென்மையாக பிடித்து விட ஆரம்பித்தாள்.
சில்லென்று கைகளால் ஏற்பட்ட மிருதுவாக அழுத்தத்தில், கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி அவனை விட்டு போவது போல் உணர்ந்தான் ஜீவானந்த்.
நேற்றிலிருந்து வலித்துக் கொண்டிருந்த தலை, உமாவின் கை பட்டு ஐந்து நிமிடத்தில் சரியானதில் மெதுவாக கண்ணை திறந்தான்.
அவன் அமர்ந்திருக்கும் இடத்தின் எதிரில் இருந்த கண்ணாடியில் கவனமாக அவனுக்கு தலைப்பிடித்துக் கொண்டிருக்கும் உமா பாரதியை கண்டான்.
தலையைப் பிடித்துக் கொண்டிருக்கும் அவளின் ஒரு கையை பற்றி சட்டென்று முன்னே இழுத்தான். அவனின் திடீர் செயலில் சற்று தடுமாறி அவனின் முன் வந்து நின்றாள்.
அமர்ந்தவாறே அவளை இடையுடன் அணைத்து கொண்டு அவளின் வயிற்றில் முகம் புதைத்தான்.
தன் கணவனின் தீண்டலில் உடல் சிலிர்க்க, நின்றவரே அவனது தலை முடியை இறுக்கப் பற்றினாள். நேரமாக ஆக அவனது அணைப்பின் அழுத்தம் அதிகமானதே தவிர குறையவில்லை.
அவளின் வெற்று இடையில் முத்தம் கொடுத்து தன் தேடலை தொடங்க ஆரம்பித்தான். அவளோ “அம்மாவும் அஞ்சலியும் வந்து விடுவார்கள்” என்று அவனிடமிருந்து விலக போராடிய படியே கூறினாள். அவளது கூற்று அவனின் கால் காதுகளில் விழவே இல்லை. முழுவதும் தன்னவளை அடைந்த பிறகு அவளிடம் இருந்து விலகினான்.
அவன் விலகவும் கதவும் தட்டும் சத்தம் கேட்கவும் சரியாக இருக்க, பதட்டமாக எழுந்த உமா வேகமாக உடை உடுத்தி கண்ணாடியில் பார்த்து தன்னை சரிப்படுத்திக் கொண்டு கதவைத் திறக்கச் சென்றாள். அதற்குள் அஞ்சலி நாலைந்து முறை கதவை தட்டி விட்டாள்.
கதவை திறந்ததும் துள்ளி குதித்துக் கொண்டு அஞ்சலி வீட்டுக்குள் சென்று விட, “என்னம்மா இவ்வளவு நேரம்?” என்ற படியே மரகதமும் வீட்டிற்குள் வந்தார்.
“இல்லை அம்மா… அது.. தூங்கி விட்டேன்” என்று ஏதோ சொல்லி சமாளித்தாள்.
“தரிசனம் எல்லாம் நல்லபடியாக இருந்ததாம்மா” என்று என்றாள் உமா.
“நல்லபடியா பார்த்தோம். வரும்போது தான் பஸ் கொஞ்சம் தாமதமாயிடுச்சு. இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம். எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம். அஞ்சலிக்கு மட்டும் ஊட்டி விடு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அறையிலிருந்து வெளியே வந்தான் ஜீவானந்த்.
அவனை கண்ட உடனேயே கதவு திறக்க ஏற்பட்ட தாமதத்திற்கு காரணத்தை புரிந்து கொண்ட மரகதம் மனதிற்குள் நிம்மதி அடைந்தார்.
அஞ்சலியும் தன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டு இரவு உணவை முடித்தும் அனைவரும் உறங்கச் சென்றனர்.
மறுநாள் காலை வழக்கம் போல் விடிந்து. அவரவர் அவரவர் வேலைகளை செய்ய தொடங்க, வெளியே செல்ல தயாராக இருந்த ஜீவானந்தின் முன் வேகமாக வந்த மரகதம், “சென்ற வாரம் முழுவதும் ஏன் வீட்டிற்கு வரவில்லை?” என்று கேள்வி கேட்டார்.
அவனோ தயங்கியபடியே நிற்க, “உன் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசு ஆனந்த்” என்று விடாப்பிடியாக அவனை பேச வைத்தார்.
அவன் சுற்றும் மற்றும் பார்த்தான். அஞ்சலி இன்னும் எழுந்து வரவில்லை. உமா பாரதி தொழுவத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவர்கள் அருகில் யாரும் இல்லாததால் பேச ஆரம்பித்தான் ஜீவானந்த்.
அவனது கூற்றை கேட்டு மரகதம் அதிர்ந்ததை விட அதிகமாக அதிர்ந்தாள் வேலையை முடித்து வீட்டிற்குள் வந்த உமா பாரதி.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
Nice
Interesting