தனக்குள் ஓடிய எண்ணத்தை மீண்டும் ஒரு முறை நிதானமாக நினைத்துப் பார்த்தான் அருளாளன்.
இதன் பொருள்தான் என்ன???
அவளைத் தான் உயிரோடிருக்கும் போது பார்த்திருந்தால் என்ன செய்திருப்பான்?
திருமணமா?
இந்த எண்ணம் அவனுக்கு மேலும் திகைப்பூட்டியது…
அவன் உயிரோடிருந்த இருபத்தேழு வயது வரை எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்.
ஆளை அசத்தும் அழகுடையவர்களும் அளவில்லாத திறமையுடையவர்களும் மெத்தப்படித்தவர்களும் கலகலவென கவரும்படி பேசுபவர்களும் அதில் அடக்கம்.
ஆனால் அவர்களையெல்லாம் பார்க்கும் போது நட்பும் மதிப்பும் சிலரிடம் வெறுப்பும் தோன்றியதே தவிர இதுபோன்றதொரு உணர்வு தோன்றியதில்லை…
யாரிடமும் தோன்றாத உணர்வு இவளிடம் மட்டும் தோன்றியதேன்?
அதுவும் இறந்துபோய் பேயாக அலையும்போது?
அவனுடைய மனதில் கேள்விகள் புற்றீசலாகக் கிளம்பி வர, கடைசியாகத் தோன்றிய கேள்வி அவனுடைய எண்ணவோட்டத்திற்கு அணைபோட்டது.
‘ஆம். சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன் இறந்து விட்டான். ‘
அதுதான் நிதர்சனமான உண்மை. அவனுடைய மனதில் வெறுமை படர்ந்தது…
‘நல்லவேளை அவளை நான் உயிரோடிருக்கும் போது பார்க்கவில்லை… அப்படி பார்த்திருந்தால் நிச்சயம் அவளைக் காதலோ திருமணமோ புரிந்திருப்பேன்…
ஒருவேளை அப்படி எதுவும் நடந்திருந்தால் இப்போது நான் இறந்த பிறகு அவளது கதி…??? ‘
அவனுடைய மனம் கூற,
‘ஏன் நீ நினைத்திருந்தால் உன்னால் உன்னுடைய இறப்பைத் தடுத்திருக்க முடியாதா? ‘
அவனுடைய மனதின் மற்றொரு மூலையில் இன்னொரு கேள்வி தோன்றியது.
இரண்டுக்கும் இடையில் அலைபட மனமின்றி, தன்னிடம் இது போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்ல,எந்தவித உணர்வுகளுக்கும் இடமில்லை, இனிமேல் அமிழ்தா முன் தோன்றக்கூடாது என உறுதியாய் முடிவெடுத்தவனாய் காற்றில் கரைந்து மறைந்தான் அவன்…
அந்த உறுதியும் அவனைப் போலவே கரையப்போவது தெரியாமல்…
மேல்வேலைக்காக வந்திருந்த வாட்ச்மேனின் மனைவி கெங்கம்மா வைத்த இரண்டாவது தோசையின் மேல் சூடான சாம்பாரை ஊற்றிய அமிழ்தாவின் முகத்தில் அவளையறியாமல் மென்னகை படர்ந்திருந்தது.
‘ நேற்று இரவு என்னவெல்லாம் அளந்தான் அவன்? அருளாளனாம்…கலெக்டராம்…பேயாம் … இரண்டு வருடத்திற்கு முன்பு இறந்து…’ இவ்வளவு நேரம் புன்னகையில் இருந்த அவளது முகம் கோபத்தின் சாயலைப் பூசியது.
‘சீ… விளையாட்டுக்காகக் கூட இறந்து போனதா சொல்லலாமா? இன்னைக்கு வரட்டும்… வச்சுக்குறேன்… ‘என மனதில் எண்ண, ‘ஆமாம்…இன்னைக்கு எப்படி வருவான்? இரண்டு நாட்கள் எதேச்சையாக வந்தான்… ‘
திடீரென, ‘எதேச்சையாகத் தானா?’ என்றொரு ஐயமும் தோன்ற
ஒரு கணம் ‘அவன் எதுவும் சதித்திட்டத்தோடு தன்னை அணுகுகிறானோ’ என்றுகூடத் தோன்றிவிட்டது.
ஒரே ஒரு கணம் தான்.
பின் தலையை உலுக்கியவள்
‘சை, அவனையே சந்தேகப்படுகிறேனே ‘என்று தலையில் கொட்டினாள். அவள் கொட்டிய கொட்டில் தட்டியெழுந்த அவளது மூளை ‘அதென்ன? அவனையே???’ என்று கேள்வி கேட்டது.
தன்னைத்தானே கொட்டி,
தட்டி விழித்துக் கொண்டிருந்தவளை வினோதமாகப் பார்த்த கெங்கம்மா “என்னம்மா? ” என்று கேட்க, “ஒண்ணமில்ல”என்று சற்று நேரம் அமைதியாக உண்ட அமிழ்தா பின் அவரிடம் பேச்சுக்கொடுத்தாள்.
” ஏன்க்கா உங்க வீட்டுக்காரர் எப்பவுமே இப்படிதானா?”
“எப்படிம்மா”
“பயந்து நடுங்கிட்டு…
நேத்தும் என்னைப் பார்த்துப் பயந்தாரே… “
ஆம். நேற்றும் அதுதான் நடந்திருந்தது. அருளாளனிடம் துடுக்காய்ப் பதிலளித்து விட்டு மானாகப் பாய்ந்தோடி வந்தவளைக் கண்டு மருண்டுப் பயந்து போய் ‘அம்மா… பேய்’ என்று கதறியிருந்தார் அந்த வாட்ச்மேன்…
“முன்னாடில்லாம் இல்லம்மா, இப்ப வரிசையா இப்படி நடக்கவும் தான்… நீங்களே சொல்லுங்கம்மா, வரிசையா காரணம் தெரியாம 5 மரணம் நடந்த வீட்டுல நட்டநடுராத்திரில எப்படிம்மா ஒரு மனுஷனால பயமில்லாம இருக்க முடியும்? “
‘நான் இருக்கேனே’ என்று எண்ணியவள் “சரிக்கா,அப்ப அவருக்கு வேற ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செஞ்சுட்டு இங்க வாட்ச்மேன் வேலைக்கு வேற யாரையாவது போட சொல்லவா? “
“இல்லம்மா… வேண்டாம். அதுக்கு ரா்ததிரில முழிச்சு வாட்ச்மேன் வேலை பார்த்து பார்த்து ராத்ரில முழிப்பும் பகல்ல உறக்கமுமா வழக்கமாகிப் போச்சு. வேற வேலைல்லாம் அதுக்கு ஒத்துக்காது.அதுவுமில்லாம இங்க வேற யாரும் வேலைக்கும் வர மாட்டாஙகம்மா, “
தன் கணவனின் வேலை பறிபோய்விடக்கூடாதே என்ற பயத்தில் சொல்கிறோரோ என்று நினைத்து,அவரது முகத்தைக் கூர்ந்தவள் “ஏன்? ” என்றாள் ஒற்றைச்சொல்லாக,
“அதான் சொன்னேனேம்மா… இந்த இடத்துல மேல இருக்க பயம்… நீங்களே பாத்துருப்பீங்களே, இருட்டான பிறகு யாரும் அந்தப் பக்கம் வர மாட்டாங்க,
இதுவே அருள் தம்பி நம்மளை எதுவும் பண்ணாதுங்கற நம்பிக்கைல தினமும் அவரை மனசில வேண்டி கிட்டு தான் வேலைக்கு வருது… “
ஏற்கனவே அவள் மூளை தட்டிய தட்டில் மனதை ஓரத்திற்கு அனுப்பிவிட்டு விழித்திருந்தாள். இப்போது இருட்டிய பிறகு யாரும் இங்கு வரமாட்டார்கள் என்று கெங்கம்மா கூறவும் ‘இங்கு ஏதோ சதி நடைபெறுகிறது… அதை தொடரவே வதந்திகள் பரப்பப்பட்டு, இவ்விடம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் முடக்கப்படுகிறது ‘என்று எண்ணியவளின் மனதில் ஒருகணம் மட்டும் ஏற்கனவே முளைவிட்டிருந்த சந்தேகம் வளர ஆரம்பித்தது.
‘தன்னிடம் அருளாளன் என்று கூறியவனும் இந்தச் சதி கூட்டத்தில் ஒருவன் என்றும் தன்னை அச்சுறுத்துவதற்கான முதற்படி இது’ என்றும் மனதில் தீர்மானித்தவள் கெங்கம்மாவிடம் தன் கேள்விகளைத் தொடர்ந்தாள்.
“அருள் தம்பியா? இறந்து போன கலெக்டர் அருளாளன சொல்றீங்களா?செத்துப்போனவர் என்ன பண்ணப்போறாரு… “
“ஆனா அவர் ஆக்ஸிடன்ட்டுகள் இறந்து போனதுக்குப் பிறகு இந்த ஊருக்கு வந்த 5 கலெக்டருமே மர்மமான முறையில இறந்து போனாங்க…அருள் தம்பி தான் இதுக்குக் காரணம்ன்னும் அவரோட நடமாட்டம் இங்க இருக்கிறதாவும் பேசிக்கிறாங்க. ஆனா எனக்கு அவர் அப்படி எதுவும் பண்ணிருக்கமாட்டாருன்னு தான்மா தோணுது.உயிரோட இருக்கப்பவே யாருக்கும் கெடுதல் நினைக்காத தங்கமான மனுஷன்ம்மா அவரு… செத்தபிறகா வந்து அஞ்சுபேரைக் கொல்லப்போறாரு… “
என்று விட்டு கெங்கம்மா தன் வேலையைப் பார்க்கப் போக, அருளாளனுடைய அதாவது பேய் நடமாட்டம் இருப்பதாக வதந்தி பரவியிருந்தால், அது நிச்சயம் அந்தச் சதிகாரனின் வேலைதான் என்று தோன்றியது.
ஏனோ அவனைச் சதிகாரன் என்று நினைக்கக்கூடப் பிடிக்கவில்லை அவளுக்கு.
அவன் அப்படி மட்டும் இருந்துவிடக்கூடாது என்று மனதில் வேண்டியவள், ‘சி. பி. ஐ. அருளாளனுடைய மரணத்தைத் துரதிருஷ்டவசமான விபத்து என்று மூடிவிட்டு பிற ஆட்சியர்களுடைய மரணத்தைத் தான் தோண்டிக்கொண்டிருக்கிறது . முதலில் இந்த அருளாளனுடைய மரணம் எப்படி நடந்தது என்று அறியவேண்டும்.பின்னர் அருளாளனுடைய பேயாக அலைந்து கொண்டிருப்பவன் யார் எனக் கண்டறிய வேண்டும் ‘என எண்ணமிட்டவாறே உண்டு முடித்துக் கிளம்பினாள்.
‘அப்பா நான் இனி உன்னை அருணான்னு தான் கூப்புடுவேன்… ‘
‘ஏன்டா கண்ணா… ம்ம்ம்… ‘
சோபாவில் அமர்ந்திருந்த அவருடைய முதுகில் ஏறி கழுத்தைக் கட்டிக்கொண்ட அருளரசன் தொடர்ந்தான்.
‘எங்க கிளாஸ்க்கு புதுசா ஒரு டீச்சர் வந்துருக்காங்கன்னு சொன்னேன்லப்பா… அவங்க பேர் அருணாப்பா… எவ்வளவு அன்பா பேசுனாங்க தெரியுமா? நீ எங்கிட்ட பேசுற மாதிரியே இருந்துச்சுப்பா…அதான் உன் பேருலயும் அருணா இருக்குல்லப்பா…உன்னையும் அருணான்னே கூப்புடுறேன்பா… ப்ளீஸ்… ‘
கெஞ்சிய மகன் தந்தையின் கன்னத்தில் முத்தமொன்றை வைத்தான்.
‘அப்பாவை பேர் சொல்லிலாம் கூப்புடக்கூடாது’
பத்மினி அதட்ட,’என் அரசுக்கு இல்லாத உரிமையா? ‘என அவரை அதட்டியவர் அவனிடம் நீ கூப்புடுடா என் ராஜா… எனத் தானும் ஒரு முத்தத்தை அவனுடைய கன்னத்தில் பதிக்க,
“தாங்க்ஸ் அருணா…”அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டுக் குதூகலித்த மகனை அணைத்துத் தூக்கினார் அருணாச்சலம்.
பசுமையான நினைவுகளில் ஆழ்ந்திருந்த அருணாச்சலத்தை “அப்பா, அப்பா…அப்ப்பா…என்ற சக்தியின் குரல் அசைக்க, அவனைப் பார்த்து “என்னய்யா? ” என்று கேட்டார் அருணாச்சலம்… குரலில் அன்பு ஒழுகியது.
“இல்லப்பா… நான் லா தான் படிச்சேன். உங்களுக்கு இதை வச்சு ஏதாவது உதவி பண்ண முடியும்மான்னு சொல்லுங்கப்பா பண்றேன்”
“கண்டிப்பாய்யா… நான் பாக்குற காரியத்துக்கெல்லாம் எனக்கு வக்கீலோட வசதி இருக்கிறது நல்லதுதான்யா, அப்பனுக்குத் தேவையான படிப்பைத் தான் படிச்சுருக்க…ஆனா ஏற்கனவே நம்ம சண்முகம் பார்த்துகிட்டு இருக்காரே… அவரு மனசு சங்கடப்பட்டுடக்கூடாது பாரு… “என்று இழுத்தார் அருணாச்சலம்.
“சரிப்பா ஒண்ணும் பிரச்சனை இல்ல… அப்ப நான் இங்கே கோர்ட்டுல ரிஜிஸ்டர் பண்ணிட்டு தனியா ஒரு ஆபிஸ் ஆரம்பிச்சுக்கவாப்பா? “
“தாராளமா செய்ப்பா, நான் எதுவும் செஞ்சுகொடுக்கணும்னாலும் தயங்காம கேளு என்ன?… “
“ம்ம் சரிப்பா” என்று நகரப்போனவனிடம் எதையோ எதிர்பார்த்துக் கிடைக்காமல், “அரசு ஒரு நிமிஷம் நில்லுய்யா” என்றவர்,” ஏன்ப்பா இப்பல்லாம் நீ என்னை எப்பயும் கூப்புறமாதிரி கூப்புடாம அப்பா அப்பான்னே கூப்புடுற? ” என்று கேட்க, சக்திக்கு மூச்சடைத்தது.
( தொடரும்…)
Nice
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Interesting