Skip to content
Home » தாமரையின் தழலவன் அத்தியாயம் 12

தாமரையின் தழலவன் அத்தியாயம் 12

அத்தியாயம் 12

மெல்லிய பிங்க் கலர் சில்க் சாரியில், வெள்ளி நகைகளோடு மஞ்சள் தாலி மின்ன, ஆடம்பரம் இல்லாமல் மிதமான ஒப்பனையோடு நின்றிருந்த தாமரையின் அருகில், கருநீல கோட் சூட்டில் அலட்சியமாக நின்றிருந்தான் தமிழ்.

வந்தவர்களை வரவேற்கும் படலம் ஒரு புறம் நடக்க, இன்னொரு பக்கம் புகைப்படக் கருவி அழகழகாக மணமக்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் நஸ்ரூல் முன்னே வர, அவன் பின்னே ஒயிலாக உள்ளே வந்து கொண்டிருந்தாள் வரலக்சுமி.

வரலக்சுமிக்கு அந்த திருமண வரவேற்பிற்கு வரும் வரையில் கூட தெரியாது, தமிழரசனுக்கு திருமணம் ஆன விசியம்.

“யாருக்கு ரிஷப்ஷன் டார்லிங்.. நீங்கள் சொல்லவே இல்லையே..”

“நமக்கு ரொம்ப ரொம்ப வேண்டப் பட்டவங்க தான்.. அதை நீயே அங்கு வந்து தெரிஞ்சிக்கோ..”

“நீங்கள் எப்பவுமே இப்புடி தான் டார்லிங்.. எல்லாமே சர்ப்ரைஸ் தான் குடுப்பீங்க..”

“என்ன செய்ய எல்லாம் என்ரை கெட்ட நேரம்..”

“புரியலை டார்லிங்..”

“இல்லை கிளைமேட் ரொம்ப மோசமா இருக்குனு சொன்னேன்..”

“லைட்டா அப்புடி தான் இருக்கு.. அப்புறம் சொல்லுங்க நான் என்ன டிரெஸ் போட்டுக்கிட்டா உங்களுக்கு பிடிக்கும்..”

“அது இருக்கட்டும்.. உனக்கு தமிழைத் தெரியுமா..”

“எந்தத் தமிழ்..”

“உனக்கு எத்தினை தமிழைத் தெரியும்..”

“எனக்கு ரெண்டு மூணு தமிழைத் தெரியும்..”

“ஓ.. தமிழரசன் தெரியுமா..”

“ஓ.. ஏன் கேக்கிறீங்க..”

“இல்லை.. அவனோட கம்பெனியோட எனக்கு புது ஒப்பந்தம் ஒண்ணு உருவாகி இருக்கு.. அதோட அவனுக்கும் எனக்கும் ஒரு பழைய கணக்கு ஒண்ணும் இருக்கு..”

“என்ன கணக்கு அது..”

“நாம ஒண்ணா படிக்கிற காலத்துல.. யாருக்கு சூப்பர் பிகரு லவ்வரா வருவானு பாக்கலாம் அப்புடினு ஒரு சாலஞ்ச் பண்ணோம்.. அதான் எனக்கு நீ கிடைச்சிட்டே அதை அவனுக்கு தம்பட்டம் அடிக்க வேண்டாமா..”

“ஐயோ அதெல்லாம் வேண்டாம்..”

“ஹேய் நீ எதுக்கு பதறுறாய்.. உன்னை அவனுக்கு நான் காட்டிப் பெருமைப் பட்டே ஆகோணும்..”

“எப்போ.. எனக்கு இந்த மந்த் முழுக்க நேரம் இருக்காதே..”

“ஓ அப்புடியா.. சரி உனக்கு நேரம் கிடைக்கும் போது சொல்லு..”

“அப்போ சரி..”

“அப்புறம் இன்னொரு விசயம் இன்னும் ரெண்டு நாள்ல என்னோட பிரெண்ட் ஒருத்தனுக்கு ரிஷப்சன் அப்புடினு சொன்னேனே‌.‌‌. அதுக்கு வர நேரம் இருக்கா..”

“நான் வரலைனா நீங்க கவலைப் படுவீங்களே டார்லிங்.. கண்டிப்பா வர்ரேன்..”

“கண்டிப்பா நீ வரலைனா நான் கவலைப் படுவேன்‌..”
என முடித்துக் கொண்ட நஸ்ரூல், இதோ வரலக்சுமியோடு தமிழின் ரிஷப்சனுக்கு வந்திருந்தான்.

வரலக்சுமியை உள்ளே வரும் போதே பார்த்து விட்ட தாமரைச்செல்வி, வேகமாகத் திரும்பித் தன் கணவனைப் பார்த்தாள், அவனோ யாருக்கு வந்த விருந்தோ என்பது போல வரலக்சுமியை பார்த்ததும் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

ஆக அவன் சொன்னது பொய்யில்லை, அவன் இப்போது வரலக்சுமியை ஒரு ஆளாகவே மதிக்கவில்லை என்பது, தாமரைக்கு லேசாக உள்ளூர இனம் புரியாத ஒரு நிம்மதியைக் கொடுத்தது.

தான் ஒரு தலையாக நேசித்தவன் தனக்கு மட்டும் காதலனாக இருந்த போது, வேறொருத்தியை நேசிக்கிறான் என்பதை மனதளவில் ஏற்றுக் கொண்டவளால், அவன் தன் கணவனான பின்னர், முன்பு இருந்தது போல அந்த வேறொருத்தி மீது காதலில் இருக்கிறான் என்பதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அவளுக்கு இல்லை என்பது தான் உண்மை.

நஸ்ரூலின் கரத்தை இறுகப் பிடித்துக் கொண்டு, அந்த மண்டபத்தின் பிரமாண்டத்தையும் அலங்காரத்தையும் நோட்டம் விட்டுக் கொண்டு வந்த வரலக்சுமியின் விழிகள் எதேச்சையாக மணமேடைக்குத் தாவி, அங்கே நின்றிருந்தவனைப் பார்த்ததும் அப்படியே நிலைகுத்தி நின்றது.

அங்கே மேடையில் மணமகனாக நின்றிருந்தவனைப் பார்த்ததும் அதிர்ந்து விழித்தவள், சட்டென்று அருகில் நின்றிருந்தவளை ஆராய்ந்தாள்.

அந்த நேரத்தில் தாமரை குனிந்து தன் பக்கத்தில் நின்றிருந்த பெண்மணியோடு ஏதோ பேசிக் கொண்டு இருந்ததால் அவளது முகம் சரியாகத் தெரியவில்லை.

“என்ன டார்லிங்.. வேறை யாரோ பிரெண்டுக்கு தானே ரிஷப்ஷன்னு சொன்னீங்க.. இங்க என்ன இவரு இவரு..”
என வரலக்சுமி தடுமாற,
“எவரு.. ஓ தமிழரசனா.. ஆமா எனக்கும் இங்க வரும் வரை தெரியாது இவரு தான் மணமகன்னு..”
என ஒரு பொய்யை வழமை போல நஸ்ரூல் அவிழ்த்து விட, அவனைக் கேள்வியாகப் பார்த்தாள் வரலக்சுமி.

“என்ன அப்படிப் பார்க்கிறாய்.. எனக்கு பொண்ணைத் தான் தெரியும்..”

“ஓ பொண்ணு.. ரொம்ப பெரிய இடமோ..”

“இனிமேல் பெரிய இடம் தான்..”

“புரியலை டார்லிங்..”

“தமிழரசனை கட்டினால் இனி பெரிய இடம் தானேனு சொன்னேன்..”

“ஓ..”
என்று கொண்டு, மீண்டும் தமிழின் பக்கத்தில் நின்றிருந்தவளைப் பார்த்தாள் வரலக்சுமி.

அவளை ஏமாற்றாமல் தரிசனம் கொடுத்தாள் தாமரைச்செல்வி.

தாமரையை மணமகளாகப் பார்த்ததும் மேலும் அதிர்ச்சியானாள் வரலக்சுமி.

இந்த ஒரு மாதமாக தமிழரசனிடம் இருந்து ஒரு ஒதுக்கத்தை உணர்ந்த வரலக்சுமிக்கு, அவன் திடுதிப்பென்று தன்னை விட்டு வேறு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வான் என்கிற எண்ணம் மட்டும் துளி கூட வரவேயில்லை.

ஆனால் இப்போது அவனை மணமகனாகப் பார்த்ததும் எப்படி உணர்ந்தாள் என அவளுக்கே தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு வேளை இவள் உண்மையாக நேசித்து, தமிழ் அவளை ஏமாற்றி வேறு பெண்ணைத் திருமணம் செய்திருந்தால், மனமுடைந்து போயிருப்பாளோ என்னவோ, ஆனால் அவளுமே உண்மைக் காதல் செய்யாமல் பணம் பகட்டை மாத்திரமே பார்த்தாள் என்பதால், சட்டென்று தன்னைச் சுதாரித்துக் கொண்டாள்.

அடுத்த நொடியே தன்னை விட்டு வோறொருத்தியை மணந்த தமிழை எப்படிப் பழி வாங்கலாம் என்கிற எண்ணம் சடுதியில் அவளுக்கு உருவானது.

அதற்குள் அவளை அழைத்துக் கொண்டு மேடையேறி இருந்தான் நஸ்ரூல்.

நஸ்ரூலோடு வந்தவளது முகத்தை தமிழ் ஏறெடுத்துக் கூடப் பார்க்காதது, வரலக்சுமியின் ரோஷ நரம்பை வேகமாகப் பிடித்துச் சுண்டியிழுத்தது போலும், அவள் தமிழரசனை முறைத்து விட்டு, தாமரையை வன்மமாகப் பார்த்து வைத்தாள், தாமரையை அந்த இடத்தில் தமிழுக்கு ஜோடியாகப் பார்க்க அவள் மனம் முரண்டியது.

தான் தமிழைக் காதலிக்கிறேன் என்று சொல்லித் திரிந்த காலத்திலேயே, நஸ்ரூலையும் காதலிக்கிறேன் என்று சொல்லி வலம் வந்தது அவளுக்கு தோதாக மறந்து போக, தமிழரசனைக் குற்றவாளி போலப் பார்த்தாள் வரலக்சுமி.

மேடையேறி தமிழ் பக்கத்தில் போனவள்
“என்னைய விட்டிட்டு.. போயும் போயும் இந்த மிடில்கிளாஸைத் தான் நீ கட்டிக்கிட்டியா தமிழ்.. உனக்கு வேறை பொண்ணுங்களே கிடைக்கலையா.. பார்க்கவே காமெடியா இருக்கு.. இவ என்னைய விட எந்த விதத்தில பெட்டர்னு சொல்லு.. சரியான பட்டிக்காட்டு பொண்ணு..”
என்று அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்ல, கேட்க வேண்டியவனுக்கு கேட்டதோ இல்லையோ தாமரைக்கு நன்றாகவே கேட்டது.

அன்றைய நாள் விடிந்ததில் இருந்து பொறுமை பொறுமை என இழுத்துப் பிடித்தபடி இருந்த தாமரைக்கு, வரலக்சுமி சொன்ன வார்த்தைகளில் பொறுமை விடைபெற்றுக் கொண்டு வேகமாக மண்டப எல்லையைத் தாண்டிக் கொண்டு போனது.

3 thoughts on “தாமரையின் தழலவன் அத்தியாயம் 12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *