தீரனின் தென்றல் – 54
Thank you for reading this post, don't forget to subscribe!“அப்பா… நான் கார் ஓட்டுறேன் எனக்கு சொல்லித்தாப்பா..” என்று கொஞ்சலாக கெஞ்சலாக கேட்ட மகளை தென்றல் முறைக்க ஆதீரனோ “வாடா குட்டிமா… அப்பா மடியில உட்கார்ந்துக்கோ அப்பா சொல்றதை மட்டும் தான் கேட்கனும்…” என்றபடி தென்றல் மடியில் இருந்த குழந்தையை தூக்க
“இது சேஃப் கிடையாது… குழந்தை ஆசைப்படுறா னு தேவையில்லாத வேலை பார்க்காதே..” ஆதீரனை தென்றல் அதட்ட
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது தென்றல்… நான் பார்த்துக்கிறேன்..” என்று தூக்கி தன் மடியில் வைத்து கொண்டு காரை இயக்கத் துவங்கினான். அபூர்வாவை வெறுமனே ஸ்டியரிங்ல் கையை மட்டும் வைக்கச் செய்து மொத்தமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்…
தான் தான் காரை இயக்குவதாக நினைத்து குழந்தை மகிழ்வாக வர அதை பார்த்து தென்றலும் மகிழ்ந்தாள். மகள் மீதும் சாலை மீதும் கவனம் வைத்து கார் ஓட்டிய ஆதீரனை பார்க்கும் போது பார்ட்டியில் தர்மலிங்கம் பேசியது தான் நினைவில் வந்தது தென்றலுக்கு…
ஆதீரன் சாப்பாடு எடுத்து கொண்டு பேசிக்கொண்டு இருந்த தென்றல் அருகில் வந்து நின்றவன் அவனும் ஷ்ரதாவை கண்டு கொள்ளவே இல்லை.. கோபத்தில் தரையை உதைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள் ஷ்ரதா. “சார்… நீங்களும் எங்களோட டின்னர்ல ஜாய்ன் பண்ணிக்கோங்களேன் சார்…” ஆதீரன் சொல்ல
“ஓகே ஆதீ… சரி நீங்க சாப்பிடுங்க நான் எனக்கு ஃபுட் எடுத்துட்டு வரச் சொல்றேன்…” என்று தன் உதவியாளரை அழைத்து கூற சாப்பாடு வந்தது.
தென்றல் அபூர்வாவிற்கு ஊட்டிக் கொண்டே சாப்பிட ஆதீரன் தன் தட்டில் இருந்து குழந்தைக்கு பிடித்தவைகளை சிறு சிறு விள்ளலாக எடுத்து ஊட்டிட அதை பார்த்து தர்மலிங்கம் “ஆதீ… பிஸ்னஸ் ல நீ என்னை மாதிரி ஒரு ஆளா வரனும் னு நான் நினைச்சுருக்கேன்… ஆனா ஒரு குழந்தைக்கு அப்பாவா உன்னை பார்த்து நான் கத்துக்கணும் னு தோணுது ஆதீ…” என்று சொல்ல ஒரு தந்தையாக பெருமையாக உணர்ந்து புன்னகைத்தான் ஆதீரன்.
“அதுமட்டும் இல்ல… ஒரு கணவனாவும் உன்னை விட பெஸ்டா யாரால இருக்க முடியும்?” தர்மலிங்கம் சொல்ல ஆதீரனை ஏற இறங்க பார்த்து முறைத்தாள் தென்றல்.
‘ஏன் சார் இப்படி கோர்த்து விடுறீங்க’ என்று ஆதீரன் விழிக்க
“ஆமா தென்றல்… இத்தனை வருஷம் உன்னை பிரிஞ்சு இருந்தானே.. அவனவன் பொண்டாட்டி கூட இருக்கும் போதே ஆயிரம் துரோகம் பண்றாங்க. ஆனா, ஆதீ தம்பி என் மொத்த சொத்தையும் தாரேன் னு சொல்லியும் உன்னை மறக்க முடியாது னு உறுதியா சொல்லிட்டாரே… அதோட ஏன்ப்பா உன் மனைவி மேல இப்படி பாசம் னு கேட்டா
‘சார் எங்களோட காதல் அப்படி… என்னோட சின்ன வயசுல இருந்து என் மாமா பொண்ணு தான் என் வாழ்க்கை னு முடிவு பண்ணி அவளோட நல்லா வாழத்தான் நல்லா படிச்சேன் நல்ல வேலயில சேர்ந்தேன்.. சின்ன வயசுல இருந்து எனக்கு காதல் இருந்தாலும் நான் காட்டிக்கிட்டதே இல்லை… ஆனா என் தென்றல் எனக்கு நேர்மாறா அவளோட பிரியத்தை ஒரு நாள் கூட மறைச்சதே இல்ல.. அவளை எப்படி மறக்க முடியும்’ னு கேட்டாரு..” என்று தர்மலிங்கம் சொல்ல சொல்ல ஆதீரனை ஆச்சரியமாக பார்த்தாள் தென்றல்.
அதே ஆச்சரிய பார்வை மாறாமல் இப்போதும் தந்தை மகளின் குறும்பை ரசிக்க சிறுவயதில் தன் தந்தையின் டிவிஎஸ் பைக்கை தான் ஓட்ட ஆசை பட்டு தென்றலை முன்னால் அமர வைத்து ரங்கநாதன் தங்கள் ஊரை வலம் வந்த காட்சி நினைவடுக்குகளில் வந்து செல்ல முணுக்கென்று ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்க அவன் பார்க்கும் முன்பு துடைக்க நினைத்தும் ஆதீரன் கண்ணில் பட்டுவிட்டது…
சட்டென்று வண்டியை நிறுத்தி விட்டு “தென்றல் என்னாச்சு? ஏன் மா அழற?” என்று அவன் பதற
“ஒன்னும் இல்ல… அப்பா நியாபகம்…” என்று அவள் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பி கொள்ள இதுவரை இருந்த இலகு மனம் கொஞ்சம் கனத்துப் போனது ஆதீரனுக்கு… எதுவும் பேசாமல் வண்டியை மீண்டும் இயக்க சற்று நேரத்தில் அபூர்வா கண்ணை தேய்க்க
“பாப்பாக்கு தூக்கம் வந்திடுச்சு நான் தூக்கிக்கிறேன்…” என்று தென்றல் அபூர்வாவை வாங்கி மடியில் வைத்து கொள்ள ஆதீரன் வீட்டை நோக்கி பயணத்தை தொடர அபூர்வா தென்றல் மடியில் உறங்கினாள்.
காரை நிறுத்தி விட்டு குழந்தையை கையில் வாங்கிக் கொண்டு தென்றல் இறங்க உதவிட “வந்துட்டீங்களாமா… வந்ததும் உங்களுக்கு சுத்திப் போடனும் னு தான் உக்கார்ந்து இருக்கோம்..” என்று கமலாம்மா அருகில் வர
“ஓ… குழந்தை தூங்கிட்டாளா? தூங்குற பிள்ளைக்கு திருஷ்டி சுத்த கூடாது.. மாப்ளை நீங்க பாப்பாவை ஷோபால படுக்க வைச்சுட்டு நீங்களும் தென்றலும் சேர்ந்து நில்லுங்க..” பொன்னி கூற
“எதுக்கு மா இதெல்லாம்…” தென்றல் சொல்ல
“இல்லமா… இன்னைக்கு உங்க மூணு பேரையும் பார்த்து எங்க கண்ணே உங்க மேல பட்டுருக்கும்.. வெளியே போய்ட்டு வந்திருக்கீங்க… எல்லார் பார்வையும் நல்லதாவே இருக்காதே..” கமலம் சொல்ல
“அப்போ பூர்வி குட்டிக்கு திருஷ்டி எடுக்க வேண்டாமா?” என்று ஆதீரன் கேட்க
“அவளுக்கு நான் காலையில எடுத்துக்கிறேன் மாப்ளை.. நீங்க நில்லுங்க” என்று பொன்னி கூற கமலம் உப்பு மிளகாய் எடுத்து வந்து இருவரும் திருஷ்டி எடுத்து “சரி நேரமாச்சு நீங்க போய் ட்ரெஸ் மாத்திட்டு தூங்குங்க…” என்றிட தென்றலும் ஆதீரனும் அபூர்வாவோடு அறைக்கு செல்ல பொன்னி கமலம் அவர்கள் அறைக்கு சென்றனர்.
தென்றல் இந்த வீட்டுக்கு வந்தது முதல் ஆதீரன் அறையில் தான் தங்குகிறாள்… இல்லை இல்லை… அபூர்வாவை வைத்து “அம்மா அப்பா கூட ஒன்னா தூங்கனும்” என்று சொல்ல வைத்து ஒரே அறையில் அடைக்கப்பட்டிருக்கிறாள்… தென்றலை பொறுத்தவரை அப்படி தான்…
இன்றும் அப்படி தான் ஆதீரன் குழந்தையை படுக்கையில் மையமாக படுக்க வைத்து அவளுக்கு போர்த்தி விட்டு ஏசியை குறைந்த அளவில் வைத்து மகளை ரசித்துக் கொண்டு இருக்க தென்றல் தன் உடைகளை மாற்றி விட்டு இயல்பான குர்த்தா அணிந்து வர அவளை பார்த்த ஆதீரன்
“ரொம்ப தேங்க்ஸ் தென்றல்… “
“எதுக்கு?” என்றாள் அவனை நிமிர்ந்து பார்த்து…
“அது… எல்லாத்துக்கும் தான்… நான் வாங்கி கொடுத்த ட்ரெஸ் வளையல் எல்லாம் ஏத்துக்கிட்டதுக்கு… என்னோட பார்ட்டிக்கு வந்ததுக்கு அங்க நடந்துகிட்ட எல்லாத்துக்கும்…” என்றிட மார்பின் குறுக்கே கை கட்டி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் இப்போவும் சொல்றேன்… பார்ட்டிக்கு வந்தது தர்மலிங்கம் சார் மேல உள்ள மரியாதையால… நீ வாங்கி கொடுத்த எல்லாம் அக்சப்ட் பண்ணது அம்மா கமலாம்மா புவிக்குட்டி சந்தோஷத்துக்காக… இதுல எதுவும் உனக்காக இல்ல…” என்று நிமிர்வாக தென்றல் சொல்ல அவளை சுவாரஸ்யமாக பார்த்த ஆதீரன்
“ஓ… அப்படியா தென்றல்… இதெல்லாம் எனக்காக பண்ணல.. ஓகே தான்.. ஆனா அங்க எனக்காக சப்போர்ட் பண்ணி பேசுனது கூட எனக்காக இல்லையா மைடியர் வொய்ஃப்?” என்று புருவம் உயர்த்தி கேட்க என்ன பதில் சொல்லுவாள் அவனின் பாவங்களில்… மயங்கியதை மறைக்க முகத்தை திருப்பி முதுகை காட்டினாள் அவனுக்கு…
அவளின் மனதை படிப்பவனுக்கு முதுகின் பின்னால் மறைத்த முகபாவணையை தெரிந்து கொள்ள சிரமம் இல்லை… ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் மெத்தையில் விழுந்தான்… இன்றைய மகிழ்வு அவனுக்கு சீக்கிரம் உறக்கத்தை தந்திருக்க அதுவரை திரும்பி படுத்திருந்த தென்றல் இந்த பக்கம் திரும்பி ஆதீரன் முகத்தை பார்த்தபடி எப்போது என்றே தெரியாமல் உறங்கி போனாள்.
நாட்கள் யாருக்கும் சிரமம் தராது இலகுவாக நகர தென்றல் தீரனுக்கு இடையே ஒரு கண்ணாடி திரையை அவர்களே போட்டுக் கொண்டு விலக்க வழி தெரிந்தும் யார் முதலில் கை வைப்பது என்று தெரியாதபடிக்கு தவிர்க்க தாமரை இலை தண்ணீர் போல தான் இருவரின் உறவும் கூடி கலக்கவும் இல்லை.. விலகி செல்லவும் இல்லை என்று நகர தீரன் தென்றலை எப்படி பிரிப்பது என்ற தீவிர யோசனையில் இருந்தாள் ஷ்ரதா…
- தொடரும்…