Skip to content
Home » தீரனின் தென்றல்-58

தீரனின் தென்றல்-58

தீரனின் தென்றல் – 58

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

“எனக்கு போதும்… மீட்டிங் டைம் ஆச்சு” என்று மூன்றாவது தோசையோடு எழப்போன ஆதீரன் தட்டில் நிறைய நெய் ஊற்றி மசால் தோசை ஒன்றை சூடாக வைத்தாள் தென்றல்.

“ஹேய் தென்னு… போதும்…” ஆதீரன் சொல்ல சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது போல பார்த்து விட்டு உள்ளே சென்று விட சிறு புன்னகையோடு மீண்டும் தோசையை ருசிக்க துவங்கினான் ஆதீரன்.

இப்போது எல்லாம் இப்படி தான் தீரன் எதிர்பார்க்காமலேயே அவனுக்கு வேண்டியன எல்லாம் பார்த்து பார்த்து செய்து தருகிறாள். அவ்வப்போது குடும்பத்தினர் இருக்கும் போது தென்னு என்று அழைத்தால் அமைதியாக கடப்பவள் இப்போது இருவர் மட்டும் தனிமையில் இருக்கும் போது எதைப்பற்றியாவது விவாதம் நடந்தால் ஆதீரன் “தென்னு” என்று அழைத்தால் செல்லமாக முறைத்து விட்டு அமைதியாகி விடுவாள் தென்றல்.

எதிர்பார்க்காமலே அவனுக்கு பிடித்த பிடிக்காத எல்லாம் தெரிந்து அவனின் தேவைகளை பூர்த்தி செய்கிறாள் தான்… ஆனாலும் ஆண்மகன் மனம் எதிர்பார்க்கும் ஒன்று… விபரம் தெரிந்த காலத்தில் இருந்து எத்தனையோ முறை ரங்கநாதன் பொன்னி பூரணி என்று ஆதீரன் உனக்கு மாமா முறை “மாமா என்றோ அத்தான் என்றோ கூப்பிடு” என்று கூறியும்

“மாட்டேன்… இவன் எனக்கு தீரா தான் நான் அப்படி தான் கூப்பிடுவேன்..” என்று அடம் செய்வாள் ஒரு முறை விளையாட்டாக பூரணி

“சரி இப்போ கூப்பிடுற நாளைக்கு நீ பெரியவளா வளர்ந்து உனக்கு கல்யாணம் ஆனாலும் இப்படி தான் என் மகனை உரிமையா தீரா னு கூப்பிடுவியா? உன் மாமியார் உன் வாய்லயே இடிப்பாளே..” என்று கேலியாக சொல்ல

“ஐயோ அத்தை நான்.. பெருசா வளர்ந்து பெரிய பொண்ணா ஆகி உன் மகனை தான் கல்யாணம் பண்ணுவேன்.. அப்போ நீ தான் என் மாமியார். நீ என் வாய்ல இடிப்பியா என்ன.. முடிஞ்சா பண்ணிக்கோ அத்தை. ஆனா நான் கடைசி வரைக்கும் தீராவை தீரா னு தான் கூப்பிடுவேன்.” என்று முதல் முறை தீரன் மீதிருக்கும் அன்பை கூறினாள் தென்றல்.

விபரம் புரியாத சிறுவயது தான் அப்போது… ஆனாலும் அன்றிலிருந்து ரங்கநாதனை ஆதீரன் அவமதித்து பேசிய நாள் வரையில் தென்றல் தன் நிலையில் இருந்து மாறவே இல்லை… ஏன் அண்ணபூரணிக்கு தென்றலை மருமகள் ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வேரூன்ற காரணமே இது தான்…

அப்படி இருக்க, இப்போது தென்றல் தீரனை மீண்டும் பார்த்து திருமணம் செய்து ஒரே அறையில் வாழும் போது கூட தீரா என்று அழைப்பதே இல்லை… வீட்டில் பெரியவர்கள் நண்பர்கள் இருக்கும் போது நேரடியாக தீரனை அழைப்பதோ பேசுவதோ இல்லை அப்படியே பேசினாலும் வெறுமனே வாங்க போங்க என்று யாரிடமோ பேசுவது போல தான் பேசுவாள்.

தனிமையில் இருக்கும் போது இன்னும் மோசம்… ஓரிரு முறை மேலோட்டமாக பேசும் போதே இவளின் பேச்சிற்கு அவன் செவி சாய்க்கவில்லை என்றால் “மிஸ்டர் ஆதீரன்..‌” என்று அதட்டல் போட்டே அடக்கி விடுவாள்.

அதனால் தென்றல் ஆதீரனை தீரா என்று அழைக்க வேண்டும் என்பது தீரனின் எதிர்பார்ப்பு மட்டுமின்றி ஏக்கமாகவே மாறிவிட்டது. பல முறை அவனின் விழிகளில் அந்த ஏக்கம் தெரிந்தாலும் கண்டும் காணாமல் கடந்து விடுகிறாள் தென்றல்.

உண்டு முடித்து விட்டு ஆதீரன் அலுவலகம் கிளம்ப “ஒரு நிமிஷம்” என்று நிறுத்தினாள் தென்றல் அவன் இவள் முகம் பார்க்க

“அது… மீட்டிங் போகனும் னு சொன்னீங்க ல்ல மதியம் லஞ்ச் ஆஃபிஸ்க்கு அனுப்பிடவா? இல்ல வீட்டுக்கு வந்து சாப்பிட்டு திரும்பி ஆஃபிஸ் போறீங்களா?” என்றிட

“ஏன் தென்றல் நீ ஆஃபிஸ் வருவ தானே..‌ லஞ்ச் அனுப்பவா னு கேட்குற?” ஆதீரன் புரியாமல் கேட்க

“இல்ல… எனக்கு இன்னைக்கு ஏதோ டயர்டா இருக்கு வீட்லயும் கொஞ்சம் வேலை இருக்கு அதான் அதை முடிச்சிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நினைச்சேன்…” தென்றல் தயக்கமாக கூறிட

“இதுக்கு ஏன் இவ்வளவு தயக்கம் உனக்கு… இதோ பாரு தென்றல் நீ வீட்ல சும்மா இருக்க னு தோணக்கூடாது உன்னோட படிப்புக்கான மதிப்பு கிடைச்சாகனும் னு தான் நீ மாப்ளையை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்த அப்புறமும் ஆஃபிஸ் போறேனு சொன்னப்போ சரி னு நான் அனுப்பி வைச்சேன்.

நீ என்னடான்னா ஓய்வே இல்லாம வேலை வேலை னு ஓடிட்டே இருக்க வீட்ல இருக்கிற வேலை அப்பறம் பார்த்துக்கலாம் நீ இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடு.” பொன்னி சொல்ல

“ஆமா தென்னு ஆஃபிஸ் ல கூட இம்பார்ட்டெண்ட் வொர்க் எதுவும் இல்லை மதன் எல்லாம் பார்த்துப்பான். மீட்டிங் முடியவே மதியத்துக்கு மேல ஆகிடும்… நான் முடிஞ்சா லஞ்ச்க்கு வீட்டுக்கு வரேன். இல்லைனா எனக்கு சைட்டுக்கு போற வேலை இருக்கு நேர அங்கே போயிடுறேன்…

நீ நல்லா ரெஸ்ட் எடு தென்னு… ரூபி குழந்தைங்களை கூட்டிட்டு வந்திடுவா…” என்றுவிட்டு கிளம்பினான் ஆதீரன்.

வெளியே வந்து செடிகளுக்கு தண்ணீர் விட்டு கொண்டு இருந்த கமலாம்மா அருகில் வந்து ஒரு நொடி நிற்க அதை கண்டு

“என்ன ஆதீ தம்பி ஆஃபிஸ் கிளம்பியாச்சா? எங்கப்பா தென்றல் வரலையா?” என்று கேட்க

“இல்லமா அவளுக்கு ஏதோ முடியலை போல டயர்டா இருக்கு இன்னைக்கு வரலை னு சொல்லிட்டா..” ஆதீரன் சொல்ல

“சரி தம்பி..‌ பாவம் வேண்டாம் னு சொன்னாலும் சமையல் எல்லாம் தென்றல் தான் பார்த்துக்குது.. வீட்டு வேலை ஆஃபீஸ் வேலை னு அலுப்பு வரத்தான் செய்யும்..‌” கமலாம்மா சொல்ல

“ஆமா ம்மா இன்னைக்கு அவ ரெஸ்ட் எடுக்கட்டும்.. அவ முகமே சரியில்லை அத்தை கேட்டாலும் சொல்லமாட்டா… எதுக்கும் நீங்க கேட்டு பாருங்க ரொம்ப ஏதாவது முடியலைன்னா எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க நான் வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்.” என்று சொல்லி விட்டு மனமே இல்லாமல் கிளம்பினான் ஆதீரன்.

இன்றைக்கு இந்த மீட்டிங் மிகவும் முக்கியமானது… இந்த க்ளைன்ட் மீட்டிங் முடித்துவிட்டு மாலை ஃபாரீன் செல்ல வேண்டும்.. போனால் திரும்பி வருவதற்கு மாதக்கணக்கில் ஆகும். இல்லையென்றால் வேறு ஒரு நாளைக்கு இந்த மீட்டிங்கை ஒத்தி வைத்து விட்டு தென்றல் அருகிலேயே இருந்து விடுவான்.

“சரி முடிந்த வரையில் சீக்கிரம் வந்து அவளை பார்க்க வேண்டும்” என்று மனதில் எண்ணிக் கொண்டு கிளம்பினான்.

கமலம் உள்ளே வந்து “என்ன தென்றல் ரொம்ப சோர்வா இருக்க.. உடம்பு எதுவும் முடியலையா ம்மா..” என்று ஆதூரமாக கேட்டபடி அவளின் நெற்றி கழுத்து என்று தொட்டு பார்க்க

“அதெல்லாம் ஒன்னும் இல்ல மா… நைட்டு ஏதோ கெட்ட கனவு.. அதை பத்தி நினைச்சுக்கிட்டே சரியா தூங்கலை” என்று தென்றல் கூற

“கனவா? என்ன கனவு தென்றல்… சொல்லவே இல்லை அதனால தான் காலையில இருந்து ஒரு மாதிரியா இருக்கியா?” என்று பொன்னி கேட்க

“கனவுல என்னமா பார்த்த? உனக்கு நியாபகம் இருக்கா ஏன் கேட்குறேன்னா பொதுவா கனவுல கெட்டது ஏதாவது நடந்தா அவங்களுக்கு ஏதாவது நல்லது நடக்கும் னு பெரியவங்க சொல்லுவாங்க…” என்று கமலம் சொல்ல

“அது…” என்று தயங்கியவள் “சரியா சொல்ல தெரியலை ம்மா கண்ணை திறந்ததும் கனவு சரியா நியாபகம் இல்ல..‌ ஆனா அதுக்கப்புறம் தூக்கமே வரலை…” எல்லாம் நினைவில் இருந்தும் சொல்லாமல் மறைத்தாள்.

அவளின் கனவில் தீரனுக்கு ஏதோ ஆபத்து நிகழ்வது போல தோன்ற வார்த்தைக்காக கூட அதனை அவளால் கூற முடியவில்லை…. அதனால் வெறுமனே கெட்ட கனவு மறந்து விட்டேன் என்று சொல்ல

“சரி தென்றல் மனசை போட்டு குழப்பிக்காம சாமிக்கு விளக்கேத்தி கும்பிட்டு கொஞ்ச நேரம் போய் படுத்து ஓய்வெடு… எல்லாம் சரியாகிடும்… உன் அப்பாவும் அத்தையும் எப்பவும் உன்கூட இருப்பாங்க.‌ அவங்க கடவுளா இருந்து உனக்கு எந்த தப்பும் நடக்காம பார்த்துப்பாங்க…” என்று பொன்னி ஆறுதலாக சொல்ல பூஜை அறைக்கு சென்றாள் தென்றல்.

“அப்பா… தீரா எப்பவும் நல்லவன் தான்… ஆனா உன்னை புரிஞ்சுக்காம இருந்ததுக்கு இத்தனை நாள் நான் அவனை புரிஞ்சுக்காம நிறைய தண்டனை கொடுத்துட்டேன். ஆனா இப்போ தீரனை நான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன்… எனக்கும் பாப்பாக்கும் வாழ்க்கை முழுக்க என் தீரா வேணும் ப்பா… ஆனா… ஆனா நான் கனவுல பார்த்த மாதிரி அவனுக்கு ஏதோ ஆபத்து வர மாதிரி மனசுல தோணிட்டே இருக்கு…

எனக்கு எந்த சாமி மேலயும் நம்பிக்கை இல்ல நீதான் எனக்கு சாமியா இருந்து எனக்கு துணையா இருக்கனும்…” என்று பூஜை அறையில் இருந்த தந்தை ரங்கநாதன் ஃபோட்டோ முன் நின்று மனமுருகி வேண்டிக் கொண்டு அறைக்கு சென்றாள் தென்றல்.

இங்கே ஆதீரன் மீட்டிங் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருக்க இன்னும் வீட்டிற்கு வரவில்லையே என்று அவனுக்கு தென்றல் அலைபேசியில் அழைப்பு தொடுக்க கார் ஓட்டியபடியே அழைப்பை ஏற்க

“சொல்லு தென்னு… ரெஸ்ட் எடுத்தியா இப்போ எப்படி இருக்கு பெட்டரா ஃபீல் பண்றியா?” என்று அடுக்கிக் கொண்டே போக

“நீ ஃபர்ஸ்ட் எங்க இருக்க?” என்று தென்றல் ஒருமையில் கேட்க ஆதீரன் ஏங்கி தவித்த அவளின் உரிமையில் சற்று திண்டாடி போனான் ஆதீரன்.

“தென்னு..‌ தென்னுக்குட்டி ஆர் யூ ஓகே… நீ நல்லா இருக்கியா மா” என்று அவன் வியந்து கேட்க

“ச்ச்… உனக்கு எப்போ பாரு என்னை பத்தி மட்டும் தான் நினைப்பு இருக்குமா தீரா…‌ நீ எங்க இருக்க ஃபர்ஸ்ட்… மணி ரெண்டாகுது சாப்பிட வராம எங்க போன?” என்ன தான் செய்வான் ஒரே நாளில் அவளின் மாற்றம் ஆதீரனுக்கு மூச்சடைப்பது போல இருந்தது…

“தென்னு… தென்னு எப்படி கூப்பிட்ட? இப்போ எப்படி கூப்பிட்ட? இன்னும் ஒரு தடவை கூப்பிடு மா ப்ளீஸ்…” ஆனந்தத்தில் காட்சிகள் மறைக்க கண்ணில் நீர் கோர்க்க அதோடு கெஞ்சலாக கோரிக்கை வைத்தான்.

“ச்சூ.. போ தீரா இப்படி ஃபோன்லயே கேட்டுட்டு இருக்க போறீயா? சீக்கிரம் வா நேர்லயே பேசலாம்…” தென்றலின் வெட்கத்தை அவளின் குரலில் உணர்ந்தான் ஆதீரன்.

“தென்னு.. பேசிட்டே இருடி அப்படியே மனசு றெக்கை கட்டி பறக்குது உன் குரலை கேட்டுக்கிட்டே பறந்து வந்திடுறேன் உன்னை பார்க்க..” ஆசையாக காதலாக ஆதீரன் கூறிட

“இல்ல ஃபோன் பேசிட்டே ட்ரைவ் பண்ண கூடாது நான் கட் பண்றேன் நீ சீக்கிரம் வா…” என்று அழைப்பை துண்டிக்க போக

“ஏய் ஏய் தென்னு ப்ளீஸ் டி..‌ ஒரு தடவை ஒரே தடவை தீரா னு சொல்லுடி ப்ளீஸ் ப்ளீஸ்…” என்று அவன் கெஞ்சிக் கொண்டு காரின் வேகத்தை அதிகரிக்க

“ம்கூம் நீ சீக்கிரம் வா..” என்று என்று அழைப்பை துண்டிக்க செல்லும் போது ஏதோ காதை பிளக்கும் சத்தம் கேட்டது..‌ அந்த பக்கம் தென்றலோடு பேசியபடி எதிரில் வந்த கனரக வாகனத்தை கவனிக்காமல் மோதி இருந்தான் ஆதீரன்.

அந்த சத்தத்தில் அதிர்ந்து “தீரா” என்று உடல் அதிர கத்தி இருந்தாள் தென்றல்.

  • தொடரும்…
  • நன்றியுடன் DP ✍️

3 thoughts on “தீரனின் தென்றல்-58”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *