Skip to content
Home » தீரனின் தென்றல்-59

தீரனின் தென்றல்-59

தீரனின் தென்றல் – 59

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

அந்த கனரக வாகனம் தீரனின் கார் மீது மோதிய சத்தம் கேட்ட அந்த நொடி “தீரா” என்று உடல் அதிர அலறினாள் தென்றல். தென்றல் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ரூபி தென்றலை உலுக்க அவளோ எதுவும் பேசும் நிலையில் இல்லை…

“புள்ளை… தென்றல் என்னாச்சு ஏய் எதுக்குடி கத்துன…”  அதிவேகத்தில் மூச்சிரைக்க படுக்கையில் நிலை குத்திய பார்வையுடன் அமர்ந்திருந்தாள் தென்றல்.

“ஏய் என்னடி ஆச்சு?” கமலம் பொன்னி இருவரும் ஓடிவர

“தெரியல அத்தை எதுவும் பேச மாட்டேங்குறா..” ரூபி சொல்ல

“தென்றல் என்னமா ஆச்சு? இந்தா முதல்ல தண்ணீ குடி…” என்று கமலம் நீரை எடுத்து தர

“அம்மா… அவரு அவரு வந்துட்டாரா?” என்று திக்கி திணறி கேட்க

“யாரைடி கேட்குற?” ரூபி புரியாது கேட்டிட

“உன்… உன் அண்ணன் தான் ரூபி மீட்டிங் போனாருல வந்துட்டாரா?” என்று பதட்டம் குறையாமல் தென்றல் கேட்க

“சாப்பாட்டு நேரத்துக்கு வர முடிஞ்சா வரேன் இல்லைனா நேரா சைட்டுக்கு போறேனு தானே தென்றல் தம்பி சொன்னாரு… மணி ரெண்டை தாண்டிடுச்சு இன்னும் மீட்டிங் முடிஞ்சதோ என்னவோ இல்ல வேற வேலையா போயிடுச்சோ தெரியலையே…” கமலம் சொல்ல இன்னும் தெளியாத முகத்துடன் பதட்டத்தோடு அமர்ந்திருந்த தென்றல் அருகில் அமர்ந்த பொன்னி

“தென்றல் என்ன ஆச்சு உனக்கு? ஓய்வெடுக்க தானே ரூம்க்கு வந்த சரி நீயே எழுந்து வருவனு நாங்களும் உன்னை தொந்தரவு பண்ணல என்னடி ஆச்சு சொல்லேன்…” பொன்னி கேட்க

“அம்மா… அம்மா கனவு மா…” தென்றல் படபடப்பாக சொல்ல

“கனவா?” அனைவரும் ஒரே நேரத்தில் கேட்க

“ஆமா… கனவு.. அது கனவா தான் இருக்கனும்… இல்ல அதை நான் கனவுல கூட கண்டுருக்க கூடாது” என்று ஏதேதோ உளறிக் கொண்டு இருக்க

“என்னம்மா ராத்திரி கண்ட கனவா? அதையே யோசிச்சிட்டு படுத்திருப்ப அதான் அதுவே கனவா வந்திருக்கும் தென்றல்” என்று கமலம் அவள் பதட்டத்தை குறைக்க முயல

“இல்ல கமலாம்மா கனவுல கூட வந்திருக்க கூடாது… ஆமா..” என்றவளுக்கு கண்கள் கலங்கி ஊற்ற அவள் நிலை கண்டு பயந்து

“இரு அண்ணனுக்கு ஃபோன் பண்றேன் எனக்கு இவ பண்ற எல்லாம் பார்த்து எனக்கு பயமா இருக்கு…” என்று ரூபி ஆதீரனுக்கு அழைக்க போக

‘ஒருவேளை கனவுல வந்த மாதிரி தீரா கார் ஓட்டிட்டு இருந்தா..’ என்று சிந்தித்த தென்றல்

“வேண்டாம் ரூபா… அவரு… அவர் வரட்டும்… எனக்கு ஒன்னும் இல்ல கமலாம்மா சொன்ன மாதிரி ராத்திரி கண்ட கனவை நினைச்சுட்டே தூங்கி அதான்.. வேற ஒன்னும் இல்ல… விடுங்க… விடுங்க எல்லாம்” என்று தன் பதட்டத்தை மறைத்து பேச மற்றவர்கள் இயல்பாகினர்.

“சரி தென்றல் எழுந்திரிச்சு முகம் கழுவிட்டு வா சாப்பிடுவ..” பொன்னி கூற

“ம்ம்… சரிமா பாப்பா எங்க வந்துட்டாளா?” என்று அபூர்வாவை விசாரிக்க

“அவளும் சக்தியும் கீழே தூங்கிட்டு இருக்காங்க தென்றல்… நீ வா சாப்பிடலாம்” என்று ரூபி சொல்ல

தென்றல் தயாராகி கீழே வர தீரனின் கார் சத்தம் கேட்க வேகமாக வாசலுக்கு வந்தாள் தென்றல்.

“என்ன தென்னு..” அவன் இயல்பாக கேட்க

“சாப்பிட்டீங்களா?” என்றாள்

“இல்ல தென்றல் மீட்டிங் முடியவே லேட் ஆகிடுச்சு அதான்… க்ளைன்ட் அவரோட லஞ்ச் ஜாய்ன் பண்ண சொன்னாங்க.. பட் நீ காலையிலயே ஒரு மாதிரி டல்லா இருந்த அதான் அப்படியே உன்னை பார்த்த மாதிரியும் இருக்குமேனு வந்தேன்.” என்று சொல்லிக் கொண்டே ஷோபாவில் அமர

“என்ன உட்காருறீங்க சாப்பிடலை இல்லையா போய் ஃப்ரஸ் ஆகிட்டு வாங்க… சாப்பிட…” தென்றல் சொல்ல

“ஆமா அண்ணா நல்லவேளை நான் உனக்கு கால் பண்ண நினைச்சேன் நீயே வந்துட்ட… இவளும் இன்னும் சாப்பிடலை ஏதோ கனவு கண்டிருப்பா போல திடீர்னு அலறிட்டா..” ரூபா சொல்ல

“என்னாச்சு தென்னு ஏன்?” என்று ஆதீரனும் பதற

“இல்ல ஒன்னும் இல்ல நீங்க சாப்பிடுங்க…” என்று தென்றல் கூற அவளை ஒரு நொடி உறுத்து விழித்து விட்டு அறைக்கு சென்று ஃப்ரஸ் ஆகி வந்தான் ஆதீரன்.

தென்றல் பரிமாற போக “ஏய் நீயும் இன்னும் சாப்பிடலை உட்காரு நான் ரெண்டு பேருக்கும் பரிமாறுறேன்…” ரூபி சொல்ல தென்றல் ஆதீரன் அருகில் அமர்ந்தாள். தெளிவாக இருக்க முயன்றாலும் அவளின் முகத்தில் குழப்பம் அப்பட்டமாக தெரிந்தது ஆதீரனுக்கு…

சாப்பிட்டு முடித்து “தென்னு நீ ஓகே தானே?” தீரன் கேட்க

“ஆ… நான் ஓகே தான்.. ஒன்னும் இல்ல…” தென்றல் வழிய வந்த புன்னகையோடு கூற

“இல்ல உடம்பு எதுவும் பண்ணா சொல்லு ஹாஸ்பிடல் போகலாம்…” என்று ஆதீரன் கேட்க

“இல்ல ஹாஸ்பிடலாம் தேவை இல்லைங்க… நான் நார்மலா தான் இருக்கேன்…” என்றிட

“சரி நீ ஓகே தானே…” மீண்டும் ஒரு முறை கேட்டவன் “சரி ரூபிணி எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு மா… குமார் வந்தாலும் நான் வர வரைக்கும் நீ கொஞ்சம் இவ கூடவே இருமா ஏதாச்சும்ன்னா எனக்கு உடனே கால் பண்ணு…” என்று கூறியபடியே தீரன் எழப்போக

“ஒரு நிமிஷம்… உங்க கூட நானும் வரேன்” என்று எழுந்தாள் தென்றல்.

“பரவாயில்ல தென்றல் நம்ம ப்ராஜெக்ட் நடக்குற சைட்டுக்கு தான் போறேன்… வேலை நடக்கிறதை பார்த்துட்டு வரதுக்கு ஈவ்னிங் ஆகிடும். நீ வீட்லயே இரு..” தீரன் சொல்ல

“இல்ல எங்காவது வெளியே போன கொஞ்சம் நல்லா இருக்கும் நானும் உங்க கூட வரேன்… ரெண்டு நிமிஷம் ட்ரெஸ் சேன்ஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்” என்று அவசரமாக அறைக்கு ஓடினாள்.

சொன்னது போல உடனே தயாராகி வந்திட ஆதீரனோடு காரில் ஏறி கிளம்பினாள் தென்றல்.

சற்று தூரம் சென்று தொண்டையை செருமிக் கொண்டு பேச்சை துவங்கினான் ஆதீரன்.

“தென்னு…” அவன் மென்மையாக அழைக்க

ஏதோ யோசனையில் இருந்தவள் “ஆ..ஹான்” என்று திடுக்கிட்டு விழிக்க

“என்னாச்சு தென்னு ஏன் காலையில இருந்து ஏதோ யோசனையிலயே இருக்க?” தீரன் கேட்க

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ரோட்டை பார்த்து ஓட்டுங்க…” என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பி…

“இல்ல… எனக்கு தெரியும் நைட்டே நீ சரியா தூங்கலை காலையில இருந்து ஒரு மாதிரியா இருக்க… அதான் கமலாம்மா கிட்ட சொல்லிட்டு போனேன். ஏதோ கனவு கண்டியாமே அம்மா நீ தூங்க ரூம்க்கு போனப்போ ஃபோன் பண்ணி சொன்னாங்க… இப்போவும் கனவு கண்டதா ரூபி சொல்றா என்னமா ஆச்சு? என்ன கனவு அப்படி என்னமா உன்னை டிஸ்டர்ப் பண்ணுது…” என்று குழந்தையிடம் கேட்பது போல பொறுமையாக கேட்க

“ப்ளீஸ் வேண்டாம்.. அதை பத்தி பேச வேண்டாம் ங்க… அந்த கனவு எனக்கு வந்திருக்கவே வேண்டாம்… அதை மறக்க தான் வெளியே வந்தேன்.” என்று தென்றல் சொல்ல

“ம்ம்…” என்று சில நிமிடம் மௌனம் காத்தான் ஆதீரன். பின், “ஆமா தென்றல் அந்த கனவு மட்டும் இல்ல.. நம்ம வாழ்க்கையிலயே சில நாட்கள் வராமலேயே போயிருக்கலாம்… இல்லையா தென்றல்…” என்று அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்த அதே வார்த்தைகளை தீரன் சொல்ல கண்ணீரை அடக்க சாளரம் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த தென்றல் கண்ணீரை அடக்க இயலாது அழுது விட்டாள்.

அவள் கண்ணீர் கண்டு காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்திய தீரன் “தென்னு..‌‌ தென்னு என்ன ஆச்சு டி? ஏய் என்ன னு சொல்லுமா நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா? தென்னு அழாதடி..” என்று அவன் பதைபதைக்க

“ஏன்டா.. ஏன் அப்படி பண்ண? அன்னைக்கு நீ அப்படி பண்ணாமா இருந்திருந்தா இன்னைக்கு வரைக்கும் இப்படி நான் மனசுக்குள்ள புலுங்கிட்டு இருந்திருப்பேனா?” என்று அவள் அழுகையினூடே கதற அன்றைக்கு தன் செயல் நினைத்து ஆதீரனுக்கு தன்மீதே கோபம் வந்தது…

“தென்னு சாரி டி..” கரகரத்த குரலில் சொல்ல தென்றல் எதுவும் பேசவில்லை.

கண்ணீரை துடைத்து கொண்டு தன்னை சமன் செய்ய நினைத்து கண்ணை மூடி மூச்சை இழுத்து விட்டு அப்படியே கார் சீட்டில் சாய்ந்தாள்.

“தென்னு….” தீரன் அழைக்க கண்ணை திறக்காமல் “வண்டி எடுங்க..‌ எனக்கு ஒன்னும் இல்ல..” என்று சொல்ல

“நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் தென்னு… ஆனா சத்தியமா உன்னை நோகடிக்க நான் நினைச்சதே இல்ல தென்னு… உன்னை என் உயிர்ல வச்சு தாங்கனும் உன்னை பத்திரமா பார்த்துக்கனும் னு தான் நான் எப்பவும் நினைச்சுருக்கேன். ஆனா நானே நீ அழ.‌.. கஷ்டப்பட காரணமாகிட்டேன்…

ஆனா இப்போ சொல்றேன் என் உயிர் இருக்கிற கடைசி நொடி வரை உன்னை பத்திரமா சந்தோஷமா பார்த்துப்பேன்… அதுக்கு என்ன வேணுமோ செய்வேன்…” என்று உறுதியளிதவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

அனைத்தையும் கேட்டிருந்த தென்றல் வாய் திறந்து பேசவே இல்லை அவளுக்கு ஏதோ ஒன்று இன்று தவறாக நடக்கப் போகிறது… அதுவும் தன் தீரனுக்கு தவறாக எதுவும் நடந்து விடக்கூடாது அதை எப்படி தடுப்பது என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது…

  • தொடரும்….
  • நன்றியுடன் DP ✍️

3 thoughts on “தீரனின் தென்றல்-59”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *