Skip to content
Home » தென்றல் நீ தானே-10

தென்றல் நீ தானே-10

அத்தியாயம்-10

Thank you for reading this post, don't forget to subscribe!

  ஹர்ஷா அண்ணாமலையின் அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து “அங்கிள் நான் ஹர்ஷா பேசறேன். ராம்கி கல்யாணம் நாளை என்பதால் அம்மா அப்பா இன்னிக்கே உங்க வீட்டுக்கு வர ஆசைப்படறாங்க. நான் வர்றது உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லைன்னா இப்பவே கூட்டிட்டு வரவா?” என்று அனுமதிக் கேட்டான்.‌ சொல்லாமல் கொள்ளாமல் யார் வீட்டுக்கும் செல்வது உசிதம் இல்லையே அதனால் மீண்டும் ஒரு முறை இன்று இப்பொழுது வரலாமா என்று கேட்டுக்கொண்டான்.

  “வீட்டுக்கு வர்ற விருந்தினரை வராதிங்கன்னு என்னைக்கும் சொன்னதில்லை தம்பி. தாராளமா உங்க அப்பா அம்மாவை கூட்டிட்டு வாங்க. வீட்ல வள்ளி மட்டும் இருப்பா. நீங்க வர்றதுக்குள் நான் வந்துடுவேன்.” என்று நேரத்தை கேட்டு கொண்டார்.

  ‘வள்ளி ஆன்ட்டி மட்டும் இருப்பாஙக்ன்னா, அப்ப துஷாரா கல்யாணம் செய்து போயிருக்காளா’ என்றவனுக்குள் மீண்டும் காதல் வலி நெஞ்சை அழுத்தியது.

  அதற்காக நன்றி கூற நேரில் செல்வதை தடுக்க முடியுமா? மனதை கல்லாக்கி கொண்டு கேப் புக் செய்தான்.‌

   காரில் இருக்கை மீது சாய்ந்தவனை நான்சி தலைக்கோதி, “டோண்ட் பீல் மை பாய்.” என்றதும் முறுவலிட்டு இயல்பானான்.

   துஷாரா வீடு வந்ததும், “அம்மா இந்த வீடு தான்” என்று சுட்டிக்காட்டி இறங்க அவசரப்பட்டான்.

  நான்சி காரை விட்டு இறங்கும் வரை காத்திருந்தே இறங்கியவன், வீட்டை பார்த்து “உள்ள வாங்க” என்று சொந்த வீடு போல தாய்தந்தையரை அழைத்தான்.

  தாமோதரன் நான்சி இருவரும் வர அண்ணாமலை வாசல் வந்து “வாங்க சார். வாங்கம்மா எப்படியிருக்கிங்க தம்பி” என்று ஹர்ஷாவின் காலை கவனித்தார்.

“இப்ப நல்லா நடக்க முடியுது அங்கிள். பெர்பெக்ட்லி ஆல்ரய்ட்” என்றவன் வீட்டுக்குள் வந்தான்.
 
  வள்ளியோ வந்தவர்களை “உட்காருங்க” என்று கூறிவிட்டு கணவரை கண்டு கைபிசைந்து நின்றார்.

  இமை மூடி ‘பதறாதே’ என்பது போல சமிக்ஜை தந்து “சாப்பிட எடுத்துட்டு வா. அதிரசம், முறுக்கு சுட்டியே” என்று கூறவும், கிச்சனுக்குள் ஓடினார் வள்ளி.‌

  “நீங்களும் உட்காருங்க” என்று தாமோதரன் எதிரே அமர கூறினார்.  “என்னதான் போன்ல நன்றி சொன்னாலும் இங்க வந்தா நேர்ல ஒருமுறை நன்றி சொல்லணும்னு பையனிடம் சொல்லிட்டே இருப்பேன்‌.

  ஹர்ஷாவோட கூட படிச்ச பையன் ராம்கிக்கு இங்க கல்யாணம் என்றதும் குடும்பமா வந்துட்டோம்‌. இவ்ளோ தூரம் வந்து உங்களிடம் நன்றி சொல்லலைன்னா தூக்கமே வராது” என்று பேச்சை துவங்கினார் தாமோதரன்.

“அட அதுவொரு பெரிய விஷயமேயில்லைங்க. கண்ணெதிரில் அன்னைக்கு சிரிச்சி பேசின தம்பி. சட்டுனு அடிப்பட்டு தூக்கியெறியவும், விட்டுட்டு போக மனசு வரலைங்க. அதை போய் பெரிசுப்படுத்திக்கிட்டு” என்று அதெல்லாம் பெரிய விஷயமேயில்லை என்று கூறினார் அண்ணாமலை.

“இல்லைங்க… ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியது வரை சாதாரண விஷயமா இருக்கலாம். அங்கிருந்தவங்க யாராயிருந்தாலும் செய்துடுவாங்க.

  ஹர்ஷா கூட யாருமில்லை என்றதும் கூடவேயிருந்து கவனிச்சு, ஹாஸ்பிடல் அட்மாஸ்பியர் வேண்டாம்னு சொல்ல, வீட்ல தங்க வச்சது எல்லாம் பெரிய விஷயம். சொல்லப் போனா அதெல்லாம் தான் ஏதோ ஒரு புள்ளியில் நம்மளை இணைச்சது.” என்று நான்சி அழகாய் தமிழில் உரைத்தார்.‌

  “உங்களுக்கு தமிழ் பேச வருமா?” என்று வள்ளி இதுவரை தயக்கமாய் இருந்தவர் அகமகிழ்ந்து கேட்டார்.

  “இவரை காதலிச்சு கல்யாணம் செய்தப்பிறகு தமிழ் கற்றுக்கிட்டேன். இத்தனை வருட வாழ்வில் தமிழ் சரளமா பேச வரும்.” என்று மொழியவும், பேச்சு சுவாரசியம் கூடியது‌.

   நன்றியெல்லாம் ஓரம் கட்டி ஒருவர் நலனை ஒருவர் கேட்டு கொண்டார்கள். மிக கவனமாக துஷாராவை பற்றி கேட்காமல் பேசினார்கள். மகனுக்கு வேதனை தந்திடக்கூடாதென்று.
   அண்ணாமலை என்ன நினைத்தாரோ அவருமே துஷாரா பற்றி பேச்செடுக்காமல் இருந்தார். 

   அங்கிருந்த ஹர்ஷாவிற்கு தான் துஷாராவின் திருமண புகைப்படம் இருந்தால் கூட அவள் முகத்தை பார்த்து அவள் நலனை அறிந்திட ஆவலாய் சுவரை வேடிக்கை பார்த்தான்.

  ஏற்கனவே அவன் இங்கேயிருந்த போதா இருந்த புகைப்படங்கள் தவிர அவளது திருமண புகைப்படம் இல்லை.

  அப்படியே கிளம்பிடலாம் என்று தான் நினைத்தான். அவளை பற்றி சிறு நலனும் தெரிந்திடாமல் அகலுவதே நல்லதென்று முடிவெடுத்திட, சடசடவென்று மழை துளிகள் விழுவது செவியில் கேட்டது.
 
  குளிர்ந்த காற்று வீச, மண் வாசமும் பிறக்க, “அச்சோ மழை” என்று வள்ளி வாசலை பார்த்து, “நல்லவேளை மாடில துணியெல்லாம் எடுத்துட்டேன்” என்று உரைக்க, அண்ணாமலையோ “இவளுக்கு சமையல், துணி காயப்போட்டு மடிச்சி வைக்கிறதும், அப்பளம் தட்டறதும் இந்த வீட்டை பற்றிய சிந்தனை தவிர்த்து மூளை எங்கயும் போகாது” என்று காலை வாறினார்.

  தாமோதரனும் நான்சியும் சிரிக்க, மெல்லிய வளையல் சத்தம் வாசலில் கேட்டது.

  ஹர்ஷாவின் இதயம் பலமடங்கு துடித்தது. அச்சத்தம் துஷாராவின் வருகை என்று உணர்த்தியது.

“அம்மா… அம்மா..” என்று ஈரமான உடையோடு வந்தவள் ஹாலில் ஹர்ஷாவை முற்றிலும் எதிர்ப்பார்க்கவில்லை.

  அதிர்ச்சியும் ஆனந்தமும் அவளை ஸ்தம்பிக்க வைக்க, இங்கே ஹர்ஷா நிலையும் அதுவே என்று தனியாக வரையறுக்க வேண்டுமா? இதில் கூடுதலாக அவள் கழுத்தில் தாலி இல்லாமல் முன்பு போலவே இருந்தவளை கண்டு பரவசமான கண்கள், அதன் பின்னே அண்ணாமலை எதிரேயிருப்பது நினைவுவர, துஷாராவை காண்பது புத்திக்கு உரைக்க மெதுவாய் அண்ணாமலையை பார்த்து தலை குனிந்தான். தந்தை எதிரிலேயே மகளை நோட்டமிட்டது உறுத்தியது.

  துஷாராவோ ஹர்ஷாவின் பெற்றவர்கள் என்று அறிந்து சிறு சிரிப்பை மரியாதைக்கு வழங்கினாள்.

அவளால் சாதாரண நலமறியும் வார்த்தையை கூட பேச முடியவில்லை‌.

   ஈரமான உடையோடு நிற்க “இதோ வந்துடறேன்” என்று மட்டும் உரைத்து விட்டு அறைக்குள் தஞ்சமடைந்தாள்.‌

  “உங்க பொண்ணுக்கு கல்யாணம் பேசியதா ஹர்ஷா சொன்னானே. மேரேஜ் முடிந்ததா இல்லை இனிமே தானா?” என்று தாமோதரன்  கேட்டதும், ஹர்ஷா அண்ணாமலையின் பதிலுக்கு காத்திருந்து அவரை ஏறிட்டான்.‌

  அண்ணாமலையும் ஹர்ஷாவை தான் பார்த்து “ஒரு வரன் பார்த்தோம், இரண்டு வீட்லயும் பேசி பிடிச்சிருந்தது. ஆனா நான் தான் இப்ப கல்யாணம் வேண்டாம்னு தள்ளி வச்சிட்டேன்‌.

  பெருசா காரணமில்லை… அவ மனசு அந்த ரூமை அடிக்கடி ஏக்கமா பார்க்குது. எதுக்கும் கல்யாணத்தை அவசரப்படாம தள்ளி வைப்போம்னு மனசு சொல்லிட்டே இருந்தது.

    ஒரு வேளை அவளை விரும்பிய பையன் திரும்ப வந்து என் பொண்ணை கேட்டா… அவருக்கே கட்டி வைக்கலாம்னு எண்ணம் இருக்கு.” என்று சிறிது இடைவெளியிட்டு, “நான் சாதாரண அப்பா. என் மக சந்தோஷம் எனக்கு முக்கியம்னு யோசிக்கறவன். மத்தபடி இது சின்ன குருவிக்கூடு. இங்க அன்பான பறவைகள் தாராளமா தங்கி, எங்க குடும்பத்தோட இணைய வந்தா, மறுத்து பேச முடியுமானு தெரியலை. அப்படியே வாழ்ந்துட்டேன்.” என்று ஹர்ஷாவின் உயிரை மீட்டு தந்தார்.

  “அங்கிள்… அங்கிள்… அப்ப துஷாரா….” என்றவன் தனக்குரியவளா என்பது போல அவன் நெஞ்சில் கைவைத்து கேட்டான்.

  அவன் அவ்வாறு கேட்கும் பொழுது கண்கள் கலங்கியது. “ஆமா தம்பி உங்க வீட்டில் சம்மதம் சொன்னா அவ உங்களுக்கு தான்” என்றார்‌.

  “மாம் டேட்” என்று திரும்ப, “அவரிடம் பர்மிஷன் கேட்டு அவளை போய் பாருடா.” என்று நான்சி கூறவும் மீண்டும் அண்ணாமலையை ஆனந்தமாய் பார்த்தான்.

  “போய் பாருங்க.. அவளுக்கு நான் ஏன் அவள் கல்யாணம் நிறுத்தினேன் என்ற காரணம் கூட தெரியாது. அவளிடம் நீங்க என்னிடம் விமான நிலையத்தில் பேசியதையும் சொன்னதில்லை.
நீ யாரையாவது காதலிச்சியாமா என்றும், நான் என் மகளிடம் கேட்கலை.

   இப்ப வீட்டுக்கு வந்ததும் உங்களை பார்த்து திகைச்சி, ஆனந்தமும் அழுகையும் சமாளிச்சு, மனசை அடக்கி அறைக்குள் ஓடினாலே அப்பவே மனசு நிறைந்துடுச்சு. என் பொண்ணு விரும்பியதை தான் அவளுக்கு தரப்போறேன்.

  உள்ள போய் பேசி கூட்டிட்டு வாங்க” என்று கூறவும் அடுத்த நிமிடம் ஹர்ஷா அவளது அறைக்குள் விரைந்தான்.

  தந்தையும் ஹர்ஷாவும் பேசுவதை புரிந்தும் புரியாமலும் கேட்டவளுக்கு ஹர்ஷா தன்னை விரும்பியதும், தன் மனதில், ஹர்ஷாவை பற்றி அபிப்ராயம் இருப்பதும் தந்தை அறிந்து திருமணத்தை நிறுத்தியிருப்பதை அறிந்து தந்தையை எண்ணி பூரித்தாள்.

   “துஷாரா” என்று ஹர்ஷா அழைக்க, அவனை ஏறிட்டு பார்த்தவளின் விழிகள் மெதுவாய் அருவியாய் பொழிய, அவனோ வேகமாய் வந்து அவளை அணைத்து கொண்டான்.

”உங்கப்பா என்னை அக்சப்ட் பண்ணிட்டார். என் காதலை புரிந்து உன்னை எனக்கு தரப்போறார். இப்பவாது என்னை காதலிப்பியா?” என்று கன்னம் பிடித்து கேட்டான். இமை மூடி அழுதவள் அவனை அணைத்துக் கொண்டாள்.

ஈரம் சொட்ட நின்றவளின் தலையில் முதல் முத்தம் பதிய சென்றவன், ஈரக்கூந்தலை கவனித்தான்.‌

  “என்ன இப்படி நனைஞ்சுட்டு வந்திருக்க?” என்று டவலை தேடினான்‌.

  அவனிடமிருந்து விடைப்பெற்றதில், “உனக்கு என்ன தைரியம். எங்கப்பாவிடம் என்னை விரும்பியதை சொல்லிருக்க?” என்று சட்டென்று மாறிய வானிலை அறிக்கை போல பேசினாள்.

  “ஆமா… உன்கிட்ட காதலை சொல்லி வேஸ்ட்னு புரிந்தது. நீ எப்பவும் அங்கிளோட மனசை கஷ்டப்படுத்த கூடாதுன்னு, என்‌மனசை வாட்டின. அதான் இங்கிருந்து போகறப்ப  நெஞ்செல்லாம் வலி. ஏர்ப்போர்ட்ல வச்சி ‘அங்கிள் உங்க பொண்ணை விரும்பறேன்’னு சொல்லிட்டேன்.

   அங்கிள் சோ ஸ்வீட்… கல்யாணத்தை நிறுத்திட்டு என் மேல இருந்த நம்பிக்கையில், நான் திரும்ப வருவேன்னு நினைச்சிருக்கார். இப்ப நீ எனக்கு கிடைச்சிட்ட” என்றவன் அவள் கூந்தலை செவிமடலுக்கு பின் ஒதுக்கி வைத்து, நெருங்கி வந்தான்.

   “அப்பா.. அப்பா வெளிய இருக்கார்.” என்று அவனை தள்ளிவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

  ஹர்ஷாவும் அவள் பின்னால் வந்து சேர, நான்சியும் தாமோதரனும் சிரித்தார்கள்.

  வள்ளியோ வாயை பிளந்து மகளை கண்டார்.
இந்த கூட்டத்தில் இந்த காதலர்களை எதிர்ப்பார்க்காத அப்பாவி ஜீவன்.

  “என்னடா ஷர்ட் ஈரமா இருக்கு. அழுதியா” என்று தாமோதரன் சிரிக்க உடையை கவனித்தான் ஹர்ஷா.

  துஷாரா இன்னமும் ஈர உடையோடு நிற்க வெட்கம் கொண்டாள்.

  தந்தையை பார்த்து விழிக்க, “முதல்ல ஈரத்தோட நிற்காத. டிரஸ் மாத்திட்டு வா” என்று கூறினார் அண்ணாமலை.

  முகமெங்கும் மலர்ந்து மீண்டும் அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள்.

  ஹர்ஷாவோ, “அங்கிள் ரியலி… ரியலி தேங்க்ஸ்.” என்று கட்டி பிடித்தான்.‌

   “இனி தம்பின்னு கூப்பிட முடியாது‌ மாப்பிள்ளை‌” என்று கூறினார்.

“என்னால இப்பவும் தம்பின்னு கூப்பிட முடியும் அக்கா பொண்ணை கட்டுற முறை வருமே” என்று வள்ளி கூற, அவ்விடம் சிரிப்பலை பரவியது.

  அதன் பின் இருவீட்டு பெற்றவர்களும், நிறைய பேசினார்கள். துஷாரா ஹர்ஷா திருமணத்தை பற்றி பேசி முடிவெடுத்தார்கள்.

  உடை மாற்றி வந்த துஷாரா தந்தையை அணைத்து, “நான் லவ் எல்லாம் பண்ணலைப்பா. ஆனா அவரை மிஸ் பண்ணினேன். உங்களை மீறி ஒரு வாழ்க்கையை நான் எப்பவும் யோசித்ததில்லை.” என்று மண்டியிட்டு கூற, அண்ணாமலை மகளை வாஞ்சையாக தடவி, “அது தெரிந்ததால தானடா அப்பா உன்னை புரிந்து நடந்தேன்” என்றார்.

    “நிறைய பெத்தவங்க செய்யற தப்பு. நம்ம பார்த்தவனை கல்யாண பண்ணாம எவனையோ காதலிச்சிட்டாளேனு வருத்தப்படுவாங்க. யாரும் நம்ம பொண்ணு காதலிச்சவனை கொஞ்சம் நாம கன்சிடர் பண்ணி பார்ப்போமானு யோசிக்கறதில்லை‌.

   நான் எப்பவும் என் பொண்ணுக்கு பிடிச்ச அப்பாவா இருக்க விரும்பறேன். உன் மனசு இதை விரும்புதுன்னும், சில குழப்பத்தில் இருக்கன்னு தெரிந்தும், நான் பார்த்த வரனை கல்யாணம் பண்ணி கடமை முடிந்ததுனு அவனுக்கு உன்னை கட்டிவச்சி காலாட்டி உட்கார பிடிக்கலை டா.” என்று அவளை தன் அருகே அமர வைத்தவர், “உனக்கு ஹர்ஷாவை பிடிச்சிருக்குமோன்னு சின்ன உறுத்தல் வந்ததும், என்‌மக காலம் கடந்து எதுக்காகவும் கஷ்டப்படக்கூடாதுனு கல்யாணத்தை நிறுத்திட்டேன். இதோ ஹர்ஷா வந்துட்டார்.” என்று மாப்பிள்ளையை கைகாட்டினார்.

ஹர்ஷாவை பார்த்து “கல்யாணம் ஏற்பாடு செய்யறதா இருந்தா என்ன முறை செய்யணும்னு சொல்லுங்க மாப்பிள்ளை‌. எங்களால் முடிந்தவரை என் மகளுக்கு செய்வேன்” என்று கலங்கி அழுதார். மகளை இப்பவே பிரிவது போல அழுகை நெஞ்சை அடைத்தது. 

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

Lovable Readers, கண்மணில என்னடைய புத்தகம் *கண்ணிலே மதுசாரலே* குறுநாவல் வெளிவந்துள்ளது. ஆதித்யா-திலோத்தமா உங்கள் மனதை கவர வந்துள்ளார்கள்.

அனைத்து நியூஸ் பேப்பர் கடைகளிலும் கிடைக்கும்‌. வாங்கி படித்து பாருங்கள். குறிப்பிட்ட நாட்கள் வரை….நன்றி

13 thoughts on “தென்றல் நீ தானே-10”

  1. Dharshini

    Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 happa oruvazhiya lovers serndhachu 😘❤️ eni enna kalyanam dhan🥰💞💕💞💕♥️💗♥️♥️♥️♥️💞💕💗

  2. M. Sarathi Rio

    தென்றல் நீ தானே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 10)

    உண்மையிலேயே… அண்ணாமலை தான் ரொம்ப பாசக்கார அப்பா. எல்லா க்ரெடிட்ஸூம் அவருக்குத்தான் போய் சேரணும். பொண்ணு சந்தோஷமா இருந்தா போதும், மத்தபடி வேறெதுவும் வேணாமுன்னு நினைக்கிறாரே. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.

    நிறைய அப்பாக்கள், பாசம் பாசம்ன்னு சொல்லிட்டே பிடிக்காத ஒண்ணை வலுகட்டாயமா திணித்து, பொண்ணோ வாழ்க்கையையும் பாழாக்கி, தன்னோட பாசத்தையும் கேள்விகுறியாக்கிடறாங்க.
    ஆனா, அருணாசலம் தான் அப்படியில்லைன்னு, மகள் சொல்லாமலே புரிஞ்சுக்கிட்டு
    ப்ரூவ் பண்ணிட்டாரு.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. தன் விருப்பத்தை விட
    தன் மகளின் ஏக்கத்தை தெரிந்து
    தன்னிடம் காதல் சொன்ன
    தம்பி ஹர்ஷாவின் காதல் வழி புரிந்து
    திருமணத்தை நிறுத்தி விட்டு
    தன் மகளின் நல்வாழ்வுக்காக
    தந்தை காத்திருக்க….

    காத்திருந்த காதலை
    காலம் சேர்த்து விட்டது….
    கல்யாணம் தான் அடுத்தது…. 🤩💐💐👏🏻👏🏻👏🏻👍🏻❤️🤩😘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *