அத்தியாயம்-14
“கண்ணு முழிச்சிட்டிங்களா?” என்று அந்த செவிலி பேஷண்ட் பக்கமிருந்த பட்டனை தட்டிவிட்டாள். அங்கிருந்த கருவிகளில் எல்லாம் சரியாக உள்ளதா என்று ஆராய்ந்தாள்.
அவளை கண்காணிக்கும் செவிலியை தேடி மற்றொரு செவிலி வந்து சேர்ந்தாள்.
“அட இந்த பேஷண்ட் கண்விழிச்சிட்டாங்களா?” என்று வரவும், “ஆமா டாக்டருக்கு தகவல் தந்துடுங்க” என்று கூறவும் வேகமாய் சென்றார். செல்லும் போது ‘பேஷண்ட் கண் முழிச்சதை சொல்லணும் டாக்டர் வேற இப்ப தான் வீட்டுக்கு கிளம்பினார்’ என்று முனங்கி சொல்லவும், அங்கிருந்த ரம்யா வீட்டு ஆட்களின் செவியில் விழுந்தது.
சுதர்ஷனன் விஷால் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வையிட்டு வேகமாய் ரம்யாவாக இருக்கும் பெண் இருந்த பகுதிக்கு சென்றனர்.
விஷாலோ “அக்கா… அன்னைக்கு நீ என்னை தப்பா புரிஞ்சிக்கிட்ட. நான் பாத்ரூம் போக தான் வந்தேன். கவிதா அங்கிருந்தது எனக்கு சத்தியமா தெரியாது. நம்ம வீட்டு பாத்ரூம் தாழ்பாள் சரியில்லாம திறக்கவும், நான் அவ குளிக்கறதை பார்த்ததா நீ என்னை திட்டிட்ட. நான் அப்படிப்பட்டவன் இல்லைக்கா. தங்கச்சியை எப்படிக்கா” என்று அவள் கையை பிடித்து அழுதான்.
ரம்யாவாக கண்விழித்த பெண்ணோ சுதர்ஷனனை ஏறிட்டாள்.
“ஏ… என்ன பார்க்கற. ஆல்ரெடி போன்ல சாட் பண்ணினப்ப விஷாலை பத்தி சொன்னேன். நீ கூட என் வாய்ஸ் கேட்டு என்னை கண்டுபிடிச்சிட்ட தானே. போன்ல சன்?னு போட்டு வச்சியிருக்க.
ரம்யா.. நான் உன்னை இப்பவும் விரும்பறேன். இந்த முறை காலேஜில் நோ சொன்ன மாதிரி இப்ப நோ சொல்லிட்டு தங்கை படிக்கணும் தம்பி படிக்கணும். அவங்களை கவனிக்கணும்னு காரணத்தை அடுக்காத.
உங்க வீட்ல உங்க அம்மா அப்பா தங்கை, ஏன் உன் டியரஸ்ட் பிரெண்ட்ஸ் சுவாதி சஞ்சனாவிடம் கூட நம்ம லவ் சொல்லிட்டேன். எல்லாரும் என்னை அக்சப்ட் பண்ணிட்டாங்க.
உங்கம்மா ஆனந்திக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? உன் தங்கை கவிதா என்னை ‘மாமா’னு கூப்பிட்டா. உங்கப்பா மதுகிருணன் இரண்டு நாளா சரக்கை தொடலை. நீ இப்படி விபத்துல மாட்டிக்கிட்டதால பயந்து சரக்கை விட்டுட்டாரா என்னவோ. உங்கம்மா ஆனந்தி நீ காணோம்னு அவரை துவைச்சி தொங்கவிட்டுடாங்க.” என்றான்.
ரம்யா என்பவளாக பாவித்து பேசிக்கொண்டிருக்க அந்த பெண்ணோ, இருவரையும் மாறிமாறி பார்த்து விழிக்க, “ஏ… என்ன முழிக்கற விஷாலிடம் பேசு.” என்று சுட்டிக்காட்டி , “என்னை காதலிக்கற தானே?” என்று ஆசையாக கேட்டான்.
தன்னை பேசவிடாமல் இருவரும் மூச்சு விடாமல் பேச, அங்கிருந்த செவிலியோ, “சார் அந்த பொண்ணே இப்ப தான் கண்ணை திறந்திருக்கு. டாக்டர் வந்து செக்கப் பண்ணிட்டு சொல்வாங்க. அப்பறம் வந்து பேசுங்க” என்று அனுப்ப முயன்றாள்.
ஆனால் விஷால், சுதர்ஷனன் இம்மியும் நகரவில்லை. இதில் கூடுதலாக கவிதா ஆனந்தி மதுகிருஷ்ணன் வந்து சேர, கவிதாவோ “அக்கா ஏன்க்கா பயமுறுத்திட்ட.” என்று அழுதாள்.
ஆனந்தியோ “அம்மாடி குடும்ப தூணே நீ தானடா. எங்கடா போன? இரண்டு நாள் தவிக்க விட்டுட்டியே” என்று மகளாக நினைத்தவளின் கன்னம் தொட்டு பேசினார்.
மதுகிருஷ்ணனோ “நான் என்ன பேசினாலும் இந்த நிமிஷம் நீ நம்ப மாட்ட. ஆனாலும் சொல்லறேன் இனி அந்த குடி கருமத்தை தொட மாட்டேன்மா. இது உன் மேல சத்தியம்” என்று வாக்கு தந்தார்.
செவிலி பெண்ணுக்கோ தலையிலடித்து, “ஏங்க சொல்லறேனே அறிவில்லை. படிச்சவங்க தானே நீங்க. வெளியே போங்க. டாக்டர் வந்தா என்னை திட்டுவாருங்க” என்று வெளியே அனுப்ப, ரம்யாவும் நெற்றி பிடித்து சுணங்கவும் செவிலி தள்ளாத குறையாக வெளியே அனுப்ப வெளியேறினார்கள்.
சுதர்ஷனன் மட்டும் கடைசியாக வெளியேறும் போது, “சீக்கிரம் சரியாகி வா. நம்ம கல்யாணத்தை பத்தி நிறைய பேசணும்.” என்று சென்றான்.
அந்த பெண்ணோ அனைவரும் சென்றதும், “இது எந்த இடம்?” என்று கேட்டாள்.
“கேளம்பாக்கம் மலர் ஹாஸ்பிடல் மா. நீங்க ஈ.சி.ஆர் ரோட்ல ரோடு கிராஸ் பண்ணும் போது கார் மோதி தூக்கி வீசப்பட்டு, இங்க அட்மிட் ஆனிங்க. யாரு என்னனு தெரியாம இருந்தோம். மிஸ்ஸிங் கேஸ் ஆக்ஸிடெண்ட் கேஸ் செக் பண்ணவும் அவங்களா உங்களை தேடி வந்தாஙாக. உங்க குடும்பத்துல இருக்கறவங்களுக்கு தகவல் தெரிவித்தப்பிறகு குடும்பமா இங்கயே தவம் கிடக்கறாங்க. ஏன்மா துரத்தி விட்டும் போக மாட்டேங்கறாங்க. அதிலும் உன்னை கட்டிக்கப்போறதா சொல்லிட்டு போனாரே அந்த பையன் இங்கயே இருக்கான். உன் அப்பா, அம்மா, தங்கை எல்லாம் கூட வீட்டுக்கு போயிட்டு வந்தாங்க. உன் தம்பியும் அந்த தம்பியும் இங்கயே பழியா கிடக்கறாங்க.” என்றதும் தலையில் மெதுமெதுவாய் கைவைத்தாள். அவள் ரோட்டில் தூக்கி வீசப்பட்டது மட்டும் கண்ணில் வந்து செல்ல, அதற்குள் டாக்டர் வந்து பார்வையிட்டார்.
ரம்யாவிடம் அப்பா பெயர், அம்மா பெயர், உங்கள் தெழில் என்ன என்று அடுக்கடுக்கான வினா தொடுக்க, எல்லாவற்றிற்கும் “எனக்கு எதுவும் தெரியலை டாக்டர். என் பெயர் ரம்யாவா? இவங்க என் அப்பா அம்மாவா? அவ என் தங்கை, இவன் என் தம்பி, அவர் என்னை விரும்பினவரா?” என்று கேட்டு முடிக்க, அனைவரும் திகைத்தனர்.
“என்ன டாக்டர் ரம்யாவுக்கு எங்களை அடையாளம் தெரியலையா?” என்று பதட்டமாய் கேட்டனர்.
டாகடர் ரம்யாவை ஆராய்ந்து பார்த்து , “உனக்கு எதுவும் நினைவில்லையாம்மா?” என்று கேட்டார்.
“இ..இல்லை டாக்டர். என் பெயர் ரம்யானு நீங்க சொல்லி தான் தெரியுது. எனக்கா எதுவும் நினைவு வரலை.” என்று கவலையாய் உரைத்தாள்.
அவள் அப்படி உரைத்த நேரம் பைரவ் சுவாதி வந்திருந்தனர்.
சுவாதியோ “என்னை தெரியலையாடி. நான் உன் பிரெண்ட்” என்று அறிமுகப்படுத்தி கொள்ள, பைரவோ ரம்யாவையே அளவிட்டான்.
அவன் கையால் ரம்யாவை புதைத்த காட்சிகள் மின்னிமறைய, இந்த ரம்யாவை ஆச்சரியமாக பார்த்தான்.
பைரவிற்கு இங்கே இருப்பவள் ரம்யா இல்லை என்று புரிந்துவிட்டது. கூடுதலாக விபத்தில் அடிப்பட்ட இந்த பெண் தன் நினைவை இழந்து பேசுவதை யூகித்து கொண்டான்.
இந்த நேரத்தில் பயந்து பதட்டம் கொண்டு, தன்னிலையை தானே காட்டிக்கொள்ளாமல், நடப்பதை வேடிக்கை பார்க்கும் நிலையில் தள்ளி நின்றுக் கொண்டான்.
“அவங்க பழசை மறந்து நிற்கறாங்கம்மா” என்று டாக்டர் கூறினார்.
அதன்பின் ரம்யாவிற்கு பல ஆய்வு நடத்தப்பட்டது.
சுதர்ஷனன் போன் போட்டதால் சஞ்சனாவும் தீப்சரணும் வந்து சேர்ந்தார்கள்.
“என்ன சுவாதி சரண் என்னனென்னவோ சொல்லறார். ரம்யாவுக்கு பழைய நினைவு எதுவும் இல்லையாமே” என்று தோளைத் தீண்டினாள்.
“ஆமாடி. ஏதோ புது ஆட்களை பார்க்கற மாதிரி ஒவ்வொருத்தரையும் பார்க்குறா.” என்று கவலையாக சுவாதி உரைக்க, சஞ்சனாவோ அருகே வந்து ரம்யாவை ஆராய்ந்து பார்த்தாள்.
தீப்சரணும், “என் போலீஸ் மூளை வச்சி சொல்லறேன். ரம்யாவுக்கு நம்மளை யாரையும் சுத்தமா தெரியலைன்னு அவ முகமே சொல்லுது” என்று கூறினான்.
“நீங்க.. போலீஸா?” என்று பேயறைந்தது போல கேட்டாள் அந்த பெண்.
“ஏ ரம்யா… என்னடி புதுசா கேட்கற? நான் சஞ்சனா. இவர் என் லவ்வர் தீப்சரண். காதலிச்சு இப்ப தான் நிச்சயம் ஏற்பாடாகியிருக்கு. நிச்சயம் கூட இன்னும் மூன்று நாள்ல வரப்போகுது.
இது நம்ம சுவாதிடி. அவர் ஹஸ்பெண்ட் பைரவ். அவர் ஒரு பெரிய தொழிலதிபர். இப்ப கூட ரீசண்டா தொழிற்சாலை திறப்பு விழா இருந்தது. ஆனா சுவாதி அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. நீயும் ஹாஸ்பிடல்ல இருக்கன்னு அவர் திறப்பு விழாவையே தள்ளி வச்சிட்டார்.
நாங்க இரண்டு பேர் தாண்டி உன்னோட பெஸ்ட் பிரெண்ட். எல்லாத்தையும் மறந்துட்டியா?” என்று கேட்டு வாஞ்சனையாக கையை பிடித்தாள்.
“அப்படி தான் தெரியுது சஞ்சனா.” என்றவள் சஞ்சனாவிடம் விலகினாள். தீப்சரண் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவரை பற்றி வேறு எண்ண கூறுவது?!
ரம்யாவாக இருப்பவளோ தன்னை ரம்யா என்று எண்ணத்தில் பதிந்து போக, டாக்டரிடம் பேசி மருந்து மாத்திரையையே, நேரத்துக்கு சாப்பிட பரிந்துரைந்ததை கேட்டுக் கொண்டாள்.
இதுவரை கேட்டதையும் மற்றவர்கள் கூறியதையும் வைத்து அந்த பெண், தன் பெயர் ரம்யா, அப்பா பெயர் மதுகிருஷ்ணன், அம்மா ஆனந்தி, தனக்கு தம்பி விஷால் தங்கை கவிதா உடன்பிறப்புகள் என்றும், பாத்ரூமில் தங்கை குளித்ததை தவறுதலாக விஷால் கதவை திறக்க, தற்போது அதனால் இரண்டு நாட்கள் அவனோடு முகம் திருப்பி அவனுமே சங்கடம் கொண்டிருந்ததும், அவன் தற்போது மன்னிப்பு கேட்டதும் அறிந்துக்கொண்டாள். அதே போல தந்தை குடிப்பாரென்றும், அவள் அழகுநிலையம் வைத்திருப்பதாகவும் அறிந்தாள்.
அதோடு சுவாதி தொழிலதிபர் பைரவின் மனைவி. அவர்கள் தொழிற்சாலை சமீபத்தில் தான் தொலைந்து போன நாளின், அடுத்த நாளில் திறப்பு விழா நிகழ இருந்து, அவளது அம்மாவின் உடல்நலத்தால் தள்ளி போட்டிருப்பதையும் அறிந்துக்கொண்டாள். இதில் பைரவ் அடிக்கடி தன்னை காண்பதையும் அறிந்துக்கொண்டாள். இந்த தீப்சரண் போலீஸ் என்பதால் அவன் பக்கம் பார்வையை வீசாது விஷாலை பார்க்கவும் சங்கடம் உருவாக, சுதர்ஷனனின் காதல் பார்வையில் இதயம் பன்மடங்காய் தாளம் கூட்ட, பைரவை தான் அடிக்கடி பார்த்து முடித்தாள்.
பைரவிற்கு ரம்யாவை புதைக்காமல் இருந்தால் நிச்சயம் இந்த பார்வையை வைத்து இருவருக்குள் நடந்த கலவியால் கவனிப்பதாக கூட சிந்தித்து இருப்பான். ஏன் இப்பொழுது கூட ரம்யா புதைத்தப்பின் உயிரோடு வந்து விட்டாளா என்ற பயத்திலேயே அவளை ஆராய்கின்றான்.
இவ்வாறு அங்கே மருத்துவமனையில் ரம்யாவாக நினைக்க துவங்கிய பெண் தன்னை ரம்யாவாகவே எண்ணினாள்.
டாக்டர் பல ஸ்கேன் எக்ஸ்ரே இதர சிகிச்சை ஆய்வுகள் செய்து இதோ இன்று டிஸ்சார்ஜ் செய்யவும் வந்துவிட்டார்.
அவர் கூறிய மருந்து மாத்திரையை கேட்டுக்கொண்டு புறப்பட்டார்கள்.
சுதர்ஷனன் பைரவ் காரில் அழைத்து செல்ல சுவாதி வந்தாள். ஆனால் சுதர்ஷனன் மறுத்துவிட்டு கேப் புக் செய்தான்.
ஏனோ தீப்சரண் நண்பன். பைரவ் அப்படி அல்ல இல்லையா? அதனால் பைரவின் உதவியை சுதர்ஷனன் மறுத்தான்.
பைரவிற்கும் அவ்விஷயம் புரிய ஒதுங்க முயன்றான். சொல்லப்போனால் பைரவ் முற்றிலுமாய் ஒதுங்குவதை விரும்பினான். ஆனால் யாரிவள் ரம்யா பெயரில் இந்த வீட்டில்? இவளுக்கு நினைவு மறந்து விட்டதால் இந்த வீட்டிற்குள் வருகின்றாள். நினைவு எப்பொழுதாவது திரும்பினால் ரம்யா காணாமல் போனதாக மீண்டும் களோபரம் கிளர்ந்து எழுமே, அந்த பயம் கூடவே இருந்தது.
ரம்யா போன்றவளை இனி ரம்யா என்றே விவரித்து பேசுவோம்
ரம்யா அவள் வீட்டிற்கு அழைத்து வந்ததும், கவிதா மூலமாக இடம் சுத்தமாக மாற்றிய படுக்கயறையில் அவள் வீற்றுக்கொண்டாள்.
மாம்பலம் ஏரியாவில் மனிதர்களின் அவசரம், சின்ன அப்பார்ட்மெண்ட் வீடும் அவள் மிரட்சியாக கண்டாள். தனக்கான அறையில் வந்து அமரவும் சுதர்ஷனன் மருந்து மாத்திரை பெட்டியை அழகாக வரிசையாக அடுக்கி வைத்தான்.
ஒவ்வொருத்தருமாய் சஞ்சனா சுவாதி அவரவர் காதலன், புருஷன்மார்கள என்று கிளம்பினார்கள்.
தீப்சரண் போலீஸ் என்பதால் பெரிய கும்பிடு போட்டு வழியனுப்பினாள்.
பைரவ் சுவாதி போகவும் அவனை பாராது நன்றி உரைத்து அனுப்பினாள்.
விஷால் கவிதா கூட அக்காவுக்கு இதுநாள் வரை மருத்துவமனை வாசணையில் சாப்பாடு இறங்கியிருக்காது என்று அசைவம் சமைக்க தயாரானார்கள்.
மதுகிருஷ்ணன் அதெல்லாம் மகளுக்காக பார்த்து வாங்கி வந்தார். ஆனந்தி சமைக்க காய்கறி நறுக்கினார்.
சுதர்ஷனனோ ரம்யாவையே பார்வையிட்டவன், யாருமில்லாத சமயம் பார்த்து கன்னம் ஏந்தி முத்தமிட்டான்.
ரம்யாவாக இருந்த பெண் பயத்தில் மிரள, சற்று அரவம் கேட்டு விடுவித்தவன், “நீ செத்தே போயிட்டியோனு பயந்துட்டேன் ரம்யா. எனக்காக திரும்பி வந்ததா நம்பறேன். உனக்கு எதுவும் நினைவு இல்லைன்னு டாக்டர் சொல்லறாங்க. பரவாயில்லை… நினைவு வரவேண்டாம். என்னை கல்யாணம் செய்து வாழ அது போதுமா. இதெல்லாம் உன் போன், உன் பிரெண்ட்ஸ் கூட நீ எடுத்த போட்டோஸ், உனக்கு நினைவு வருதானு பாரு. ஆங்… அதுல ‘சன்?’ டவுட்டா நீ சேவ் பண்ணிருந்த. நான் சுதர்ஷனன் சேவ் பண்ணிட்டேன். நம்ம சாட் ஹிஸ்ட்ரி எதுவும் டெலீட் பண்ணலை. பொறுமையா கேளு. அதுல யாரோ ஒருத்தனா விளையாடியிருப்பேன். பயந்துடாத.” என்றவன் அவசரமாக எழுந்து நெற்றியில் முத்தமிட்டு வீட்டிலிருந்த மாமியார் மாமனாரிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப முயன்றான். ஆனால் இப்பொழுதே மாப்பிள்ளையாக பாவித்து இருந்து சாப்பிட்டு கிளம்ப கூறினார்கள் அவ்வீட்டு ஆட்கள்.
ரம்யாவோ பேயறைந்தது போல போனை எடுத்து அதிலிருந்த போட்டோ அனைத்தையும் பார்வையிட்டாள்.
-தொடரும்.
Edhu enna pa pudhu prechanaiya eruku endha ponnu yaaru nejamave marandhutala Ella nadikirala therilaiye 🙄 enna nadakudhu parpom 🧐
Super twist. Interesting😍 Eagerly waiting for next update👍
Wow super twist. Really unexpected one. Intresting sis.
தேநீர் மிடறும் இடைவெளியில்..!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 14)
அய்யய்யோ..! இது என்ன கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையா இருக்குது…? இவ ரம்யா இல்லைன்னா, அப்ப இவ யாரு ? எந்த ஊரு ? என்ன பேரு ?
😀😀😀
CRVS (or) CRVS 2797
Intha ponnu yaaru nu theriyalaye, palasa vera maranthuttaa
Ipo ithu puthu prachanaiya yaru iva yen ellam marathu pochu avaluku