Skip to content
Home » தேநீர் மிடறும் இடைவெளியில்-8

தேநீர் மிடறும் இடைவெளியில்-8

தேநீர் மிடறும் இடைவெளியில்-8

அத்தியாயம்-8

கவிதா அவளது அன்னை ஆனந்தி இரண்டு எட்டு ஸ்டேஷனிலிருந்து நடக்க, அங்கே சஞ்சனா வந்தாள்.

“அம்மா ரம்யா வந்துட்டாளா?” என்று கேட்க, ஆனந்தி அழவும், கவிதாவிடம், ”கம்பிளைன் தந்திங்களா?” என்று கேட்டாள்.

“அந்த சாரிடம் கொடுத்திருக்கேன் அக்கா” என்று தீப்சரணை சுட்டிக் காட்டினாள்.

''தீப்சரண் நேத்து தானடா ரம்யாவை பார்த்தோம்." என்று உரிமையாக பேச, அவனோ நெற்றி கீறி முன் வந்தான்.‌

“அம்மா… இவரை தான் காதலிக்கறேன். அடுத்த வாரம் நிச்சயம்னு ரம்யா சொல்லிருப்பாளே.” என்று அறிமுகப்படுத்தி நிறுத்தினாள்.

இந்த நிலையில் அறிமுகம் தேவையற்றது. ஆனால் சஞ்சனாவோ “ஏதாவது உதவின்னா தயங்காம இவரிடம் கேளுங்கம்மா. எதுவும் மறைக்காதிங்க.” என்று ஆனந்தியிடம் கூறிவிட்டு, தீப்சரணிடம், “சரண் உனக்கு தெரியும்ல… எனக்கு சுவாதியை விட ரம்ஸ் எவ்ளோ க்ளோஸ்னு. கொஞ்சம் வேகமா கண்டுப்பிடிடா. எந்த உதவின்னாலும் செய் சரண்.” என்று இறைஞ்சினாள்.

“ஏய்… அதெல்லாம் ஆல்ரெடி தேடறதுக்கு கிளம்பிட்டேன். இரண்டே நாள்ல வந்துடுவா” என்று சமாதானம் செய்தான்.

“அக்கா… ரம்யா அக்கா போன்ல யாரோ லவ் பண்ணறதா மெஸேஜா அனுப்பியிருக்காங்க. அக்கா எதுக்கும் ரிப்ளை பண்ணலை. ஆனா எனக்கு அந்த நம்பர் மேல டவுட்டா இருக்கு.” என்று அழுதாள் கவிதா.

“லவ்வா…? என்ன நம்பர்? இங்க காட்டு” என்று சஞ்சனா கேட்கவும், “சாரிடம் போன் கொடுத்துட்டேன்.” என்று கவிதா சரணை சுட்டிக்காட்டினாள்.

“விசாரிக்கறதுக்காக நானே வச்சிருக்கேன் சஞ்சனா.” என்று தன் பேண்டில் பத்திரமாக இருந்த போனை தொட்டு பதில் தந்தான்.

“போனை கொடு. யார் அனுப்பியிருப்பானு பார்க்கறேன்.” என்று கையை நீட்டி கேட்டுவிட்டாள்.

“நான் விசாரிக்கறேன்னு சொல்லறேன்ல” என்று தரமறுத்தான்.

சஞ்சனாவோ விடாமல், “நேரத்தை கடத்துற ஒவ்வொரு நொடியும் ஆபத்து சரண்” என்று கூறிட, அவனோ “சஞ்சு” என்று கூற ஆரம்பிக்கும் முன் அவன் பேண்டில் கையை விட்டு, சஞ்சனா ரம்யாவின் போனை எடுத்தாள்.

கட்டிக்க போகும் உரிமை அவன் பேண்டில் கையை விட்டு எடுத்துவிட்டாள். சஞ்சனா பல நேரம் பர்ஸ், போன், குட்டி சீப்பு என்று இவ்வாறு எடுப்பாள். அதனால் அவளுக்கு தயக்கமில்லை.

தீப்சரணோ அவளை பார்த்து “சஞ்சு” என்று பதட்டம் கொண்டான்.

சஞ்சனா ரம்யாவின் போனில் வந்த மெஸேஜ் கால்ஸ் நம்பரை ஆராய்ந்து அடிக்கடி தீப்சரணை முறைத்தாள்.

அவனோ அவளை சங்கடமாக பார்த்து தலைகவிழ, சஞ்சனாவோ, ஸ்தம்பித்து போனாள்.

கவிதாவோ “யாருனு தெரியுமா அக்கா? இந்த லவ் மேட்டர் பத்தி அக்கா ஏதாவது சொன்னாளா?” என்று கேட்டாள்.

சஞ்சனாவோ “லவ் பத்தி சொல்லிருக்கா. ஆனா… அது வேற. இது வேற. இது புதுசா இருக்கு. இப்படி போன்ல டார்ச்சர் செய்ததை அவ என்னிடம் சொன்னதில்லை” என்றவள் போனை வெறித்து பேச, சரணோ வெடுக்கென போனை வாங்கி, “ரொம்ப நேரமாகுது. வீட்டுக்கு போங்க. ரம்யாவை பத்தி இன்பர்மேஷன் கிடைச்சா சொல்லறேன்” என்று அனுப்ப முயன்றான்.‌

சஞ்சனாவுக்குமே போன் மெஸேஜை கண்டு பதறவில்லை. அவளுக்கு தான் அதை யார் அனுப்பியதென்ற உண்மை தெரியுமே‌. மாறாக கவிதாவிடமும் ஆனந்தியிடமும் ”நேரமாச்சு அம்மா. இந்த நேரத்தில் இங்க இருப்பது ஸேப்டியில்லை‌ வீட்டுக்கு போங்க. ரம்யா கிடைச்சிடுவா.” என்று அனுப்பிவிட்டு சரணிடம் சண்டையிட துடித்தாள்.

"உங்களை தான் மலை போல நம்பியிருக்கேன் சஞ்சனா." என்று ஆனந்தி கூற, கவிதாவோ ஸ்கூட்டி அருகே சென்றாள்‌. 

‘இப்ப தானே பதினெட்டு முடிந்தது ஸ்கூட்டிலாம் பொறுமையா ஓட்டு’ என்று ரம்யாவின் அதட்டல் பேச்சு செவியில் கேட்டது.
கவிதாவுக்கு ரம்யாவை எண்ணி கண்ணீர் வடிந்தது‌.

“ஏம்மா விஷாலை கூட்டிட்டு வரலாம்ல” என்று கேட்டாள் சஞ்சனா.

“அண்ணா இரண்டு நாளா வீட்டுக்கு வரலை அக்கா. அக்கா எதுக்கோ அடிச்சா. அப்ப சண்டை போட்டுட்டு வீட்டில இருந்து ஓடினான். அம்மாவும் பிரெண்ட் கூட இருந்துட்டு வாடானு சொன்னாங்க. இப்ப வரை வரலை.” என்று ஆனந்தியை ஏறிட்டு சஞ்சனாவிடம் கூறி முடித்தாள்.

ஆனந்தியோ “அக்காவுக்கும் தம்பிக்கு எப்பவும் போல சண்டைம்மா. அவனை வீட்டை விட்டு போக சொல்லிட்டா. அவனும் கிளம்பிட்டான். ரம்யா மறந்துட்டு அவனை வீட்டுக்கு வரச்சொல்லுங்கனு சொல்லிட்டா. ஆனா அவன் இன்னும் வரலை‌. இரண்டு நாளா பிரெண்ட் கூடவே இருக்கான்னு ரம்யாவிடம் பொய் சொல்லிருந்தேன். இன்னிக்கு கூட கேட்டா. மூடியிருந்த ரூம்ல இருக்கான்னு பொய் சொன்னேன்.
ரம்யாவுக்கு என்ன அவசரமோ கிளம்பிட்டா.” என்று ஆனந்தி விஷாலை பற்றி கூறினார். சஞ்சனா சுவாதியை இருவரை பொறுத்தவரை ரம்யாவின் தந்தை மதுகிருஷ்ணாவை பற்றி கேட்க மாட்டார்கள். அவர் தான் இருந்தும் இல்லாதது போல எண்ணுவார்கள்.

“சரி நீங்க போங்க” என்று அனுப்பி விட்டு, ஸ்டேஷனுக்கு திரும்ப, அவசரமாய் தீப்சரணோ காவலதிகாரி தொப்பியை அணிந்து, “சஞ்சு… அவசரமான ஒரு வேலை. நான் வந்து பேசறேன். ஒரு பொண்ணு மர்டர் பண்ணி புதைக்கப்பட்டிருப்பதை நேர்ல பார்த்ததா ஒருத்தன் போன் பண்ணிருக்கான்.‌‌ அவசரமா அங்க போகணும். ஏதாவது என்றால் நாளைக்கு பதினொன்றுக்கு பேசுவோம்‌” என்று புயலாக புறப்பட்டான்.‌

“ஒரு பொண்ணா..அது?” என்று ஆனந்தி பதற, “ஆன்ட்டி… ரம்யாவா இருக்காது. தைரியமா வீட்டுக்கு போங்க‌. சஞ்சு.. வீட்ல போய் விட்டுடு” என்று புறப்பட்டான்.

“அக்கா… அது நம்ம அக்காவா இருந்தா?” என்று கவிதா கூட அழுதாள்.

“ரம்யாவா இருக்க சான்ஸே இல்லைம்மா. அந்த போன் நம்பர் பார்க்க தெரிந்தவங்க மாதிரி தெரியுது. அந்த அளவுக்கு போக மாட்டாங்க. நீ வா.” என்று கவிதாவை வண்டியை கிளப்ப கூறினாள்.

கவிதா ஸ்கூட்டியை கிளப்ப, ஆனந்தியும் ஏறி அமர்ந்தாள்.

சஞ்சனாவோ கவிதா வண்டியை பின் தொடர்ந்து வந்தாள்.

இந்த சரணுக்கு எவ்ளோ திமிரு. ஏன் இப்படி செய்தான்?’ என்று கோபமாக பின் தொடர்ந்தாள்.

சரணோ ஒரு போன் காலை நம்பி அவசரமாக சஞ்சனாவிடமிருந்து தப்பித்து செல்லும் நோக்கில் கிளம்பிவிட்டான்.
மனமோ, ‘அங்கிருந்தேன் சஞ்சனா சட்டையை பிடிச்சி உலுக்கியிருப்பா. ஸப்பா… கொஞ்சம் கூட கேப் விடாம கேள்வி கேட்பா. எல்லாத்துக்கு குற்றவாளி மாதிரி நான் பதில் சொல்ல திண்டாடணும்.
இப்ப கொஞ்சம் நேரம் கிடைச்சதே.’ என்று மேல் சட்டை பட்டனை திறந்து காற்று வாங்கினான். போலீஸ் காரை டிரைவர் மாரியப்பன் ஓட்டி வந்தார். அதனால் ரம்யாவின் போனை எடுத்து ஒவ்வொரு சாட்டும் வாசித்தான்.‌

இதெல்லாம் ஏன் அழிக்காம இருக்கா? ரம்யா அப்ப இதெல்லாம் ரசித்திருப்பா தானே? ஆமா இந்த ரம்யா எங்க போனா? கடத்தல் நடந்திருந்தா எனக்கு தெரியாம இருக்காது. வேற யாராவது கடத்தியிருப்பாங்களா? மிஸ்ஸிங் கேஸ் பைல் பண்ணிருக்கா அவ தங்கை.

தாராளமா ரம்யா போட்டோவை வேற ஸ்டேஷனுக்கு அனுப்பி விசாரணையை தொடங்கணும். ஆனா இந்த போன்.. இந்த போன் ஆபத்தானது. என்னவோ இதை அனுப்பியவன் தான் கிட்னாப் பண்ணியதா கேஸை மாத்தி விட்டுடும். முதல் வேலையா இதையெல்லாம் அழிக்கணும். இந்த போனால எத்தனை பிரச்சனைகள் உருவாகுது ச்சை” என்றவன் இறங்க வேண்டிய கட்டிடம் வந்தது.

அவ்விடத்தை சுற்றி பார்த்தான், ஆங்காங்கே தள்ளி தள்ளி பேக்டரி கட்டிடம் மட்டுமே இருந்தது. வீடு வாசலென்று பக்கத்தில் எதுவுமில்லை. தெரு விளக்கு மட்டும் மின்னி மின்னி மறைந்தது

போலீஸ் வண்டி என்றதும் பதுங்கியிருந்த ஒருவன் ஓடிவந்து, "சார் சார்.... கொலை சார். ஒரு பொண்ணை கொண்ணு புதைச்சதை கண்ணால பார்த்தேன் சார்" என்று பிச்சைக்காரன் ஓடிவந்தான். 

“மாரியப்பன்” என்று கூப்பிட, “டேய் டேய்… தள்ளி நில்லு. என்ன‌பார்த்த? ஏது பார்த்த, அய்யாவை தொடாம சொல்லு” என்று பிச்சைக்காரனின் தோற்றத்தை வைத்து தள்ளி நிறுத்தினான்.‌

“சார் பெரிய கார் சார். இங்க வந்துச்சு. அதுலயிருந்து ஒரு பொண்ணை தூக்கிட்டு போய் புதைச்சாங்க. நான் இரண்டு கண்ணால பார்த்தேன்” என்றான். கரித்துணி போல உடையணிந்தவன், கக்கத்தில் ஒரு திருவோடு தட்டு, அதில் சிலேட்டில் ‘எனக்கு கண்ணு தெரியாது’ என்ற வார்த்தைகள் எழுதியிருந்தது.

“கண்ணு தெரியாத பிச்சைக்காரன் பிச்சை எடுக்கற. நீ கொலையை பார்த்த? நீ பிச்சைக்காரன் இல்லைடா திருடன்.” என்று கூறினான் தீப்சரண்.

மாரியப்பனோ கழுத்தில் இரண்டு தட்டு தட்டி, “ஏலேய்…. இரத்திரி நேரம் என்ன போலீஸிடம் விளையாடறியா? செவுளில் நாலரை விடுவேன்.” என்று அடித்தான்.‌

“ஐய்யா.. நான் பொய் சொல்லி பிச்சையெடுக்கறவன் தான். ஆனா நான் சொன்னது உண்மை சார்.” என்று கத்தினான்.

தீப்சரணோ பேக்கெட்டிலிருந்து சிகரேட்டை பற்ற வைத்து, நுரையீரலுக்கு கேடு விளைவிக்க புகையை இழுத்து விட்டு, நல்ல வேளை சஞ்சனாவிடமிருந்து முதல்ல தப்பிச்சாச்சு. இல்லை அந்த பிசாசு கேள்வி கேட்டு இப்பவே டார்ச்சர் பண்ணிருப்பா.’ என்று சுற்றி முற்றி பார்க்க இரண்டு மூன்று நாய்கள் மட்டும் நடமாடியது.

“சாமி சத்தியமா பொணத்தை புதைச்சாங்க சார். அதோ அந்த பில்டிங்ல” என்று கை நீட்டினான்.

தீப்சரண் பிச்சைக்காரன் நீட்டிய இடத்தை பார்த்து, மெதுவாக நடந்தான். அவனுடன் பிச்சைக்காரன் கூடவே அடியெடுத்து வந்தான்.
மாரியப்பனோ இன்னமும் பிச்சைக்காரனை திட்டியபடி தொடர்ந்தார்.

தீப்சரண் அந்த இடத்தில் வந்ததும் சுற்றிப்பார்க்க, பெரிய இடமாகவே கட்டி இருந்தது.

ஒவ்வொரு இடமாக வர, “இந்த பக்கம் வலது சைட்ல சிமெண்ட் மூட்டைக்கு பின்னால சார்.” என்று கூற, அவ்விடத்தை தீப்சரண் தொட்டு பார்க்க, கொஞ்ச நேரம் முன் சிமெண்டை கரைத்து பூசியதாக தெரிந்தது.

“மாரியப்பன் என்னனு பாருங்க” என்று கூறிவிட்டு ஓரமாக நின்றான்.

மாரியப்பனோ அங்கிருந்த கருவிகள் மூலமாக மெதுவாக கொத்தியெடுக்க, வெள்ளை நிற உடை தென்பட்டது.

“சார் ஏதோ வெள்ளை டிரஸ் தெரியுது. நிஜமாவே பொண்ணு கொண்ணு புதைச்சிருக்காங்க” என்று ஊர்ஜிதப்படுத்தினான்.

தீப்சரண் இதற்கு மேல் பதட்டம் இல்லாமல் இருப்பானா? “பாரான்சிக் ஆட்களை கூப்பிடுவோம். மற்றதை அவங்க கவனிக்கட்டும்” என்று முழுதாக தோண்டாமல் அப்படியே நிறுத்த கூறினான்.

அடுத்த அரை மணி நேரத்தில் புதைத்த பெண்ணை தோண்டி எடுக்க ஆட்கள், புகைப்படத்தை எடுக்க போட்டோகிராப்பர், பாரன்சிக் ஆட்கள் என்று அவ்விடமே பரபரப்பாக மாறியது.
தடைசெய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு, போலீஸ் ஆட்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தீப்சரண் இறந்துப்போன பெண்ணின் முகத்தை பார்க்க, இடைவிடாமல் சஞ்சனாவிடமிருந்து போன் அழைப்பு வேறு.

அதை துண்டித்தபடி, இறந்த பெண்ணின் உடலை வெறித்தான்.
அவன் கண்ணுக்கு ரம்யா இறந்தது போல தோன்றியது. கண்ணை கண்ணை கசக்கி அப்பெண்ணை கண்டான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

6 thoughts on “தேநீர் மிடறும் இடைவெளியில்-8”

  1. Sanjana ku therinjidha super nalla avana ketkattum🤨 paavam avanga family Eva Ella nu therinja enna pannuvaangalo paavam😢

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *