Skip to content
Home » தேவதையாக வந்தவளே 24

தேவதையாக வந்தவளே 24

  • Sws14 

தேவதை 24

மதிய உணவையும் அவளே செய்து முடித்தாள். ஒன்றாகவே தலையில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.இதோ வாகனத்தில் பிரயாணம் செய்துகொண்டிருந்தால் மகள் அருகிலேயே சீட் பெல்டில் அமர்ந்திருக்க. கையில் பொம்மையை சுத்தி சுத்தி பார்த்துக் கொண்டிருந்தாள்..

அவளுடைய சிந்தனையோ அரவிந்தின் தந்தை கூறியதிலேயே தேங்கி நின்றது.கிரஷிலும் வேலை ஓடவில்லை இவனிடம் இன்னும் நிறைய ரகசியம் இருக்கிறது போலையே??. தன்னை எதற்காக அவன் திருமணம் செய்து கொண்டான் குழந்தைக்காக என்று தானே கூறினான்??. அவனுடைய தந்தை வேறு ஏதோ சொல்கிறாரே, வேறு என்னவாக இருக்க முடியும்?? குழந்தையை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?. எவ்வளவு சிந்தித்தாலும் அவளுக்கு பதில் என்னவோ கிடைக்கவில்லை. அன்றைய நாள் அப்படியே சென்றது. வாரத்தின் கடைசி நாள் என்பதால் வேலை அதிகமாகவே இருந்தது. ஒரு நாள் விடுப்பு என்பதால் எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டு தான் கிளம்ப முடிந்தது. பெற்றோர்கள் மிகத் தாமதமாக வந்து குழந்தையை பெற்றுக்கொள்ள. இன்னும் தாமதமாகி இருந்தது அவளுக்கு. அனைத்தையும் முடித்து குழந்தையை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்குள் நுழையும் போது.

கம கம என்று சமையல் வாசனை அவள் நாசியை துளைத்தது. பேகை ஹாலிலேயே போட்டவள். அவசரமாக கிச்சனை நோக்கி சென்றாள்.

“சாரி சாரி ரொம்ப லேட் ஆயிடுச்சு ஒரு பேரன்ட் குழந்தைய கூப்பிட லேட் பண்ணிட்டாங்க. இந்த நேரத்துல கிளம்புனதுனால டிராஃபிக்ல வேற மாட்டிக்கிட்டேன்”, அவசரமாக அவள் காரணங்கள் கூறிக் கொண்டிருக்க.

லோகநாதன் கையை கழுவிக் கொண்டிருந்தார். அவன் சமையலை முடித்து இருந்தான்.

“எதுக்கு இவ்வளவு பதட்டம் நீ ரெஃப்ரெஷ் ஆகிட்டு வா, எல்லாம் சேர்ந்து சாப்பிடலாம்”, என்றான் சாவதானமாக. அப்போதுதான் நேரத்தை கவனித்தாள். எட்டை தொட்டு கொண்டிருந்தது.

“ஐயோ” என்று தலையிலேயே கையை வைத்துக் கொண்டாள்.

“பசிக்குது மாலினி”, என்றான் அரவிந்த். அதற்கு மேல் அவள் யோசிக்கவில்லை சிறிது நேரத்திலேயே குழந்தையையும் அவளையும் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள்.பாத்திரங்கள் எல்லாம் தரையில் அடுக்கப்பட்டிருக்க. அவளுக்கு சங்கடமாக போய்விட்டது.

“சாரி மாமா சீக்கிரம் வரணும்னு தான் நினைச்சேன். ஆனா லேட் ஆயிடுச்சு”, தயக்கத்துடன் கூறினாள்.

“எதுக்குமா காலையில மத்தியானம்னு என்னை நல்லா கவனிச்சுட்டு தானே போன. ஒரு வேலை பையன் கையால சமைக்கிறது சாப்பிடுறேன்”, என்றார்.

“இருந்தாலும் நான் சீக்கிரம் வந்து இருக்கணும்”, என்றாள் அவள் தயக்கமாக.

“உங்க அத்தை எல்லாம் நைட் கிளப், பார்ட்டி, லேடிஸ் கிளப்னு பாதி இரவுக்கு மேல தான் வீட்டுக்கே வருவா?. அவ ஒருவாட்டி கூட என்கிட்ட மன்னிப்பு கேட்டது இல்ல நீ எதுக்குமா மன்னிப்பு என்ற பெரிய வார்த்தை எல்லாம் கேட்கிற??. குழந்தைகளை பார்த்துக்கிட்டு , பொறுப்பா அவங்க கிட்ட ஒப்படைச்சிட்டு வர. வேலைன்னு பாக்காம ஆத்மார்த்தமா செய்யற. நாளைக்கு முழுக்க வீட்லதான் இருக்க போறேன் உங்க ரெண்டு பேரோட சேர்ந்து நேரத்தை செலவழிக்க போறேன். முக்கியமா என் பேத்தியோட அருகில் அமர்ந்திருந்தவளின் கன்னத்தை கிள்ளி கொடுத்தார். அவள் கன்னத்தை தடவிக் கொண்டே தன் தாத்தாவை பார்த்து முறைத்தாள்.

“பாருடா அப்படியே சாதனா பாக்கற மாதிரியே இருக்கு? “, என்று கூறியவரின் குரல் உடைந்து விட்டது. கண்களிலும் நீர் வந்துவிட்டது..

அரவிந்த் தன் தந்தையை தோளோடு அணைத்துக் கொண்டான். அதிர்வுடன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த தன் மனைவியை பார்த்தவன்.

“சாதனா இப்படித்தான் ஓர கண்ணால ஓரப்பார்வை பார்ப்பாள். தப்பா இருந்தாலும் சரி, சரியா இருந்தாலும் சரி, திருட்டுத்தனமானாலும் சரி அவள் பாக்குற பார்வை வித்தியாசமா இருக்கும். முதல் முறையா ஷாலினி கிட்ட அதே பார்வையை பார்க்கும் போது இவ என் தங்கச்சி பொண்ணு தான்னு உறுதியா தெரிஞ்சது”, என்று தங்கையின் நினைவில் கூறியவனின் கண்களும் கலங்கி தான் இருந்தது.

“உயிர் இல்லாத பிரேதத்தை தான் நீ பாத்தியாமா? “, என்று லோகநாதன் கேட்க.

“ஆமா மாமா உயிர் இருந்தா கண்டிப்பா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருப்பேன். ஸ்பாட்டிலயே இறந்துட்டாங்க”, என்று கூறியவள் தலை தாழ்த்தி விட்டாள்.

அதற்குமேல் உணவு அவருக்கு இறங்க மறுத்தது. உண்கிறேன் என்று ஏதோ செய்துவிட்டு அமர்ந்தவர் மகனிடம் ஏதேதோ மகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்க. அவள் பாத்திரங்களை சீர்படுத்திக் கொண்டிருந்தாள். ஷாலினி என்ன நினைத்தாளோ விளையாடிக் கொண்டிருந்தவள் அழுது கொண்டிருக்கும் அந்த வயதானவரை பார்த்து எழுந்து சென்று எக்கி அவர் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டாள்.

“அழ அழ“, என்று தத்தி தடுமாறி கூறி தலையை இரு பக்கமும் கூடாது என்பது போல ஆட்டினாள். மழலை மொழியும் பாவனையும் அங்கிருந்த இருவருக்கும் புரிந்தது. சரியாக அந்நேரம் புடவை தலைப்பால் தன் கையை துடைத்துக் கொண்டு வந்த மாலினியின் கண்களுக்கு அது தவறாமல் பட்டது. இதழ்களில் லேசாக புன்னகையும் அரும்பியது. அவளுக்கு எப்பொழுதும் மகள் செய்யும் வாடிக்கையான செயல்தான். கிரஷ்சில் கூட குழந்தைகள் அழுது கொண்டிருந்தால் இதுபோல செய்வாள் தான். ஆனால் தன் தாத்தாவிற்கு அவள் செய்வது என்பது பெரிய விஷயமாகத்தான் அங்கிருந்த மூன்று பேருக்குமே தோன்றியது. ஏனென்றால் புதியவர்களிடம் அவள் நெருங்க மாட்டாள். பழகினால் மட்டுமே சிறிதேனும் பேசுவாள். அரவிந்திடம் ஒதுக்கம் காட்டுபவள், அவனுடைய தந்தையிடம் நெருக்கம் காட்டுவது அவர்களுக்கு ஆச்சரியத்தை தான் கொடுத்திருந்தது.

“தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடுவது என்பது இதுதான் போல?. உள்ளுணர்வுக்கு அவர் இரத்த சொந்தம் என்று அவளுக்கு தெரிந்திருக்கிறது என்று நினைத்தாள் மாலினி. லோகநாதன் பேத்தியை கட்டி அணைத்துக் கொண்டார்.

“அரவிந்தா அங்க வந்துடுங்களேன் டா. இவள பிரிஞ்சு என்னால இருக்க முடியும்னு எனக்கு தோணல”, என்றார் லோகநாதன்.

“அம்மா ரெண்டு பேரையுமே விட மாட்டாங்கப்பா. ஷாலினிய மாலினிய ஹாட் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அவங்க ஷாலினியை என்ன பண்ணுவாங்கன்னு நமக்கே தெரியாது. குழந்தை எப்படிப்பா இது எல்லாத்தையும் ஹேண்டில் பண்ணுவாள். மாலினி கிட்ட நான் ஏற்கனவே சொல்லித்தான் வச்சிருக்கேன். ஆனா சின்ன குழந்தை அவளால ஹாண்டில் பண்ண முடியாதுப்பா”, என்றான்.

“உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா இப்பயும் இங்க வந்து அது தான்டா பண்ணுவா?“.

” நான் பாத்துக்குறேன் பா. ஊருக்கு சொன்ன அதே கதை தான் அவங்களுக்கும். எனக்கு எப்பயோ திருமணமாயிடுச்சு. இவள் என்னோட இரத்தம் என்னோட குழந்தை அவ்வளவுதான்”, அவன் அழுத்தமாக கூறினான். தாயிடமே இப்படி கூறும் அளவிற்கு அப்படி என்ன அவருடைய தாய் செய்து விடுவார்?? என்று யோசித்தவள் அதற்கு மேல் சிந்திக்கவில்லை. தந்தை மகன் என்று இருவருமாக பேசிக் கொண்டிருக்க சற்று நேரம் அமர்ந்திருந்தவள். குழந்தைக்கு உறக்கம் வருவதை உணர்ந்து அவர்களிடம் சொல்லிவிட்டு தங்கள் அறைக்கு குழந்தையோடு வந்துவிட்டாள்.குழந்தையை தட்டிக் கொண்டிருந்தாலும் லோகநாதன் அரவிந்தை பற்றி கூறியது அவனுடைய தாயைப் பற்றி கூறியது என்று சிந்தனை முழுவதும் அதிலேயே தான் இருந்தது. மறுநாள் முன்பாகவே எழுந்தவள். அவசர அவசரமாக எல்லோருக்கும் சமையலை முடித்தாள். ஒன்றாக அமர்ந்து மொத்தமாக சாப்பிட்டவர்கள். அன்று வெளியில் செல்லலாம் என்று கிளம்பினார்கள்.சென்னையில் சுற்றிப் பார்ப்பதற்கா இடம் இல்லை??. வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க. முதலில் ஒரு மாலுக்குள் சென்றவர்கள் குழந்தைக்கு தேவையான உடைகளை எடுக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு மாலினிக்கும் லோகநாதன் உடைகள் எடுத்துக் கொடுக்க. அவள் வேண்டாம் என்று மறுத்தாள்.

“நீ காட்டன் சுடிதார், காட்டன் சாரி தான் நிறைய உடுத்துற என் மருமகளுக்கு நான் எடுத்துக் கொடுக்கிறேன். மறுக்கக்கூடாது”, என்று கூறியவர் கடை ஆட்களிடம் அவளுக்கு ஏற்ற வகையில் உடைகளை எடுத்து கொடுக்க சொன்னார். அரவிந்தனிடம் தடுத்தது போல அவளால் அவரிடம் தடுக்க முடியவில்லை.. மகனுக்கும் எடுத்து கொடுத்தார். வாங்கிய எல்லா பொருட்களையும் டிக்கியில் சேமித்து வைத்து மெரினா பீச்சுக்கு வந்து சேர்ந்தார்கள்.

“என்னடா இங்க பீச்சின்ற பேர்ல வரிசையா சமாதிய கட்டி வச்சிருக்காங்க?“, என்று லோகநாதன் கேட்டார்..

“அத பாக்குறதுக்கு தான் இங்க இவ்வளவு கூட்டம் பாருங்க? “, என்றான்.

மகன் காட்டிய இடத்தை பார்த்தார். அவ்வளவு நெரிசலாக மக்கள் கூட்டம். அவர்கள் அங்கே இறங்கவில்லை சற்று தூரம் வந்து விவேகானந்தர் இல்லத்தின் எதிரில் வாகனத்தை நிறுத்திவிட்டு கடற்கரைக்குச் சென்றனர். குழந்தைக்கு ஆர்ப்பாட்டம் தாங்க முடியவில்லை. கைகளைத் தட்டி குதுகளித்தவள் பார்ப்பதையெல்லாம் தன் தாயிடமும் காட்டி சந்தோஷப்பட்டவள். தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று மாலினியிடம் கேட்கவே இல்லை. ஆனால் அவள் பார்வையை புரிந்து கொண்டே அவளுக்கு என்ன தேவையோ அதை மாலினி வாங்கி கொடுத்தாள். தந்தை மகன் என்று இருவரும் அவர்களை கவனித்துக் கொண்டு ரசித்தபடி தான் நடந்து வந்தார்கள்.

“நீ சொல்லும்போது எனக்கு புரிஞ்சுது அரவிந்தா இருந்தாலும் இப்ப நேர்ல பார்க்கும்போது தெரியுது. இவங்க ரெண்டு பேர பிறிக்கவே முடியாது. உண்மையிலேயே மாலினி இந்த குழந்தையோட தாய் இல்லன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க”, என்றார்.

“மாமா குழந்தைக்கு ஐஸ்கிரீம் வாங்க போறேன். உங்க ரெண்டு பேருக்கும் கூட வாங்கிட்டு வரவா? “, திரும்பி பார்த்து அவள் கேட்க இருவரும் சம்மதமாக தலை அசைத்தனர். “என்ன பிளேவர் பிடிக்கும்? “, என்று அவள் தயக்கத்துடன் கேட்டாள்.

“எல்லாமே சாப்பிடுவேன்மா நீ உனக்கு பிடிச்சதை வாங்கிட்டு வா”, என்று லோகநாதன் கூற.

“மீ டூ”, என்று கண்களை சிமிட்டினான் அரவிந்த். நால்வருக்குமான ஐஸ்கிரீம் உடன் வந்து அமர்ந்தாள். எல்லோருக்குமே ஒரே பிளேவர் தான் பிஸ்தா பிளேவர்.“இதுதான் உனக்கு பிடிக்குமாம்மா? “, என்று லோகநாதன் கேட்க.

“இல்ல மாமா இதுதான் ஷாலுருக்கு பிடிக்கும். கண்டிப்பா அவளுக்கு பிடிச்சது உங்க ரெண்டு பேர்ல யாருக்காவது ஒருத்தருக்காவது பிடிக்கும்னு தோணுச்சு”, என்று கூறினாள்.

அவளுடைய அறிவு கூர்மையை மீண்டும் மெச்சிக்கொண்டான் அவள் கணவன். தங்கைக்கும் தந்தைக்கும் பிடித்த பிளேவர் அது. அவனுக்கு இதுதான் பிடித்தம் என்று இல்லை எல்லாவற்றையும் சாப்பிடுவான். பெரும்பாலும் தங்கைக்கு விட்டுக் கொடுத்து விடுவான். அவ்வளவு செல்லமாக வளர்ந்தவள் இன்று யாரும் அற்ற அனாதையா இறந்து கிடந்திருக்கிறாள். கண்கள் கரித்துக் கொண்டு வர துடித்தது. ஆனால் கண்ணீரை வெளியில் விழாமல் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டான்.

“அரவிந்துக்கு என்ன ஃபிளேவர் பிடிக்கும் உனக்கு தெரியுமாம்மா? “, என்று கேட்டார்.

“தெரியாது மாமா இதுவரைக்கும் நான் கேட்டதில்லை. அவரும் சொன்னதில்லை. இதான் ஃபர்ஸ்ட் டைம் எல்லாரும் வெளிய வரோம். கல்யாணம் ஆகியும் நிறைய நாள் ஆகலையே. அதனால தெரிஞ்சுக்க சந்தர்ப்பமும் கிடைச்சதில்ல”, மாமனாரிடம் கூறிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது பார்வையை அரவிந்தையும் தொட்டு தழுவி விட்டு மீண்டது. அவன் அவளையே விழி அகலாமல் பார்த்திருந்தான்.

“அவனுக்கு சின்ன வயசுல சாக்லேட் பிளேவர் தான் ரொம்ப பிடிக்கும். ஆனா அதுக்கப்புறம் எது கொடுத்தாலும் சாப்பிட ஆரம்பிச்சுட்டான். சாக்லேட் பிளேவர்ல இருக்கிற எல்லாத்தையும் ஒரு பிடி பிடிப்பான். அத நான் கவனிச்சிருக்கேன். ஆனா தங்கச்சிக்காக எப்பயும் விட்டுக்கொடுத்துருவான். இப்ப நீயும் உன் பொண்ணுக்காக விட்டுக் கொடுக்கிற மாதிரி”, என்று மகனின் தலையை தடவி கொடுத்தார். அவள் தொண்டையில் ஐஸ்கிரீம் சிக்கிக் கொண்டது. அவளுக்கும் அது தான் பிடித்த பிளேவர். மகளுக்காக இதையே வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டாள்.மகளைப் பற்றி அவள் நினைவுகளில் ஏதேதோ லோகநாதன் கூறிக் கொண்டிருக்க. மண்ணில் ஷாலினி விளையாடிக் கொண்டிருக்க. மாலினி குழந்தையை ஒரு பார்வையால் பார்த்துக் கொண்டே அவர் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தாள். உணவில் கூட ஷாலினி தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுவது அவர் கூறும் போது அவளுக்கு புரிந்தது. தாயைப் போல மகள் இருந்திருக்கிறாள். ஆனால் மகளை வளர்க்க அவளுக்கு கொடுப்பினை இல்லையே என்று வருத்தம் கொண்டாள் மாலினி.

முதலில் யாரோ ஒரு பெண் அவள். ஆனால் தன் மகளின் தாய் என்ற நிலையில் அவளை வைத்திருந்தாள். இப்பொழுது தன் கணவருடைய தங்கை உறவு முறைக்குள் வந்து சேர்ந்து விட்டாள் அந்தப் பெண். முன்பு போல இப்பொழுது இரட்டிப்பாக அவள் மீது வருத்தம் ஏற்பட்டது மாணவிக்கு.

“நீயும் தான் உன் குழந்தையை வளர்க்க கொடுப்பினை இல்லாமல் போச்சு “, என்று அவளது ஆழ்மனம் எடுத்துக்கூற. கண்கள் அந்த நொடி கலங்கிவிட்டது.

“போனத நெனச்சு நான் வருந்தி உங்களையும் வருந்த வைக்கிறேன். இழந்தது எப்பயும் திரும்ப கிடைக்காது. இருக்கிறத வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றது தான் வாழ்க்கை. என் மகளோட உருவத்துல இதோ என் பேத்தி. அந்த ஸ்தானத்துல நீ எனக்கு கிடைச்சிருக்க. அங்க இருந்து இருந்தா கூட இவள் இவ்வளவு சந்தோஷமா இருந்திருக்க மாட்டாள். யாரோ ஒரு பொண்ணுக்கு தாயா மாறி. இவள நல்லபடியா பார்த்துட்டு இருக்க. நீ அவளுக்கு கிடைத்தது அவளுக்கு கிடைச்ச வரம்”, என்று லோகநாதன் கூற.

“இல்ல மாமா அவள் தான் எனக்கு கிடைத்த தேவதை”, என்று கூறினாள் மாலினி. எல்லோரின் பார்வையும் ஷாலினியிடம் சென்றது. அவள் எந்த கவலையும் இல்லாமல் மண்ணை அள்ளி விளையாடிக் கொண்டிருந்தாள்.

“உன்ன பொறுத்த வரைக்கும் நீ சொல்றது உண்மையா இருக்கலாம் ஆனா எங்க ரெண்டு பேரை பொறுத்த வரைக்கும் ஷாலினிக்கு கிடைச்ச வரம்மா நீ. ஒரு நல்ல தாய் கிடைக்கிறது இங்க பெரிய விஷயம் இல்ல. ஆனா என் பையன் பொண்ணு விஷயத்துல அப்படி அமையல. அவங்களுக்கு அந்த வருத்தம் எப்பயுமே இருக்கும். என் பொண்ணுக்கும் சாகுற வரைக்கும் இருந்திருக்கும். அரவிந்த் இவளுக்கு நல்ல தகப்பனா இருப்பான்னு என்னால எப்படிநூறு சதவீதம் சொல்ல முடியுமோ?, அதை விட இறநூறு சதவீதம் நீ மட்டும் தான் இவளுக்கு நல்ல தாயா இருப்பேன்னு என்னால உறுதியா சொல்ல முடியும்”, என்றார். அந்த நெகிழ்வான வார்த்தையில், அவள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையில் அவள் கண்கள் கலங்கியது.“உங்களுக்குனு ஒரு குழந்தை வந்தாலும், இவள் உங்களோட மூத்த குழந்தையா இருப்பாள். எங்கேயோ இருந்திருந்தால் என்னால என் சாதனா குழந்தையோட இதுபோல நேரம் செலவழிக்க முடியாது.. ஆனா உங்ககிட்ட வளர்றதால என்னால அடிக்கடி வந்து பாக்கவாவது முடியும். அரவிந்த் சொல்றது உண்மைதான். என்னோட சுயநலத்துக்காக உங்களா நான் கூட்டிட்டு போனா. உங்களோட நிம்மதி தொலைஞ்சிடும். என்னோட சாபத்தை நான் மட்டுமே சுமக்கிறேன். நீங்களாவது நிம்மதியா இருங்க”, என்றார் லோகநாதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *