தேவதை 9
மாலினி அன்று நடந்ததை கூறிக் கொண்டிருந்தாள். ஆனால் இன்று அது அவன் கண் முன் நடப்பது போல இருந்தது அரவிந்திற்கு. மாலினி பேசிக் கொண்டிருப்பது தன் தங்கையை பற்றி. அவளின் இறப்பைப் பற்றி, அவள் இறப்பின் ரகசியங்களை பற்றி. அவள் பேசட்டும் என்று அமைதியாக இருந்தாலும். உண்மையில் அவனால் அது முடியவில்லை. பரிதவிப்புடன் வரத் துடித்த கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான். மாலினி தன் பேச்சை தொடர்ந்தாள்.
“ஐயோ யார் பெத்த புள்ளைங்களோ,, ஸ்பாட்லயே செத்துருச்சுங்க. போலீசுக்கு போன் பண்ணுங்கப்பா. யாராவது ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்கப்பா. அவங்க ரெண்டு பேருக்கும் மூச்சு இருக்கான்னு பாருங்க”, யாராவது யாராவது என்று குரல் கொடுத்தார்களே தவிர. அலைபேசியில் தகவல் சொல்வதற்காக யாரும் முன்னேறவில்லை. ஒரு இளம் வயது ஆண் மகன் தான் உதவி செய்வதற்காக முன்வந்தான்.
அலைபேசியின் மூலமாக காவலருக்கும் ஆம்புலன்ஸ்க்கும் அறிவிப்பு கொடுத்தான். இவள் அந்த காரின் பின்னோடு தான் வந்தாள் . விபத்து நடந்ததும். அங்கேயே தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உடனே உதவி புரிவதற்காக தான் சென்றாள். ஆனால் பார்க்கும்போதே தெரிந்தது, உயிர் இல்லை என்று. இருந்தாலும் அந்த இளைஞன் அந்த பெண்ணின் முகத்தில் கையை வைத்து ஆராய்ந்தான். சுவாசம் வருகிறதா என்று. இல்லை என்ற உதட்டை பிதுக்கி கூறினான். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலினி. இப்பொழுது அவள் பார்வை காரின் உள்ளே கூர்மையாகியது. அங்கே குழந்தை உபயோகிக்கும் பொருட்கள் எல்லாம் இருக்க. குழந்தை வண்டியில் இருந்து தான் விழுந்திருக்குமோ என்று யோசித்தாள்.
ஆனால் வண்டியில் இருந்து விழுந்து இருந்தால் கண்டிப்பாக இதைவிட அதிக அளவில் அடிபட்டு இருக்கும். இவ்வளவு தூரம் தூக்கி எரியப்பட்டு இருந்தாலும் குழந்தைக்கு இன்னும் அடிபட்டு இருக்கும். லேசான கீரல் சிராய்ப்புகள் மட்டுமே குழந்தைக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவள். தாய் தன் குழந்தையைக் காக்க தூக்கி போட்டு இருக்கிறாள் என்று புரிந்தது. அது புரிந்த நொடி அவள் கண்கள் கலங்கிவிட்டது. ஒரு தாய் தன் உயிர் போகும் நிலையிலும் குழந்தையைக் காக்க எண்ணி இருக்கிறாள். ஆனால் தான்??, அவள் கண்கள் கலங்க தன் வயிற்றை தொட்டுப் பார்த்தாள். தன்னால் காப்பாற்ற முடியாத அந்த குழந்தையை எண்ணி கண்கள் கலங்கியது அவளுக்கு.
“ஏங்க, இந்த குழந்தை? “, என்று ஒருவன் அவளிடம் வந்து கேட்டான்.
“என்னோட குழந்தை”, என்றால் அழுத்தமாக.
” இல்ல இல்லங்க. இங்க வேற ஏதாவது குழந்தைய பாத்தீங்களான்னு கேட்க வந்தேன்”, என்று அதில் ஒருவன் தயக்கத்துடன் கேட்டான் .
“ஏங்க குழந்தைய காட்டுங்க” என்றான் மற்றொருவன்.
“நீ யாருயா??, உன்கிட்ட நான் ஏன் என் குழந்தைய காட்டணும் . போயி வேற வேலை இருந்தா பாரு”, என்று அவனை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டு ஆங்காரமாக பேச.அவன் சற்று அடங்கினான்.
“இல்லங்க ஒரு குழந்தையை தேடுறோம் அதான்”, என்று மற்றொருவன் பொறுமையாக பேசினான்.
“குழந்தை காணோம்னா, போயி போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுங்க. அவங்க தேடி கொடுப்பாங்க. வந்துட்டானுங்க என் குழந்தைய பாக்குறதுக்கு??, நானே குழந்தைய வெயில்ல தூக்கிட்டு வந்துட்டேனேன்னு கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். தூங்கிட்டு இருக்க குழந்தையை இவனுங்க கிட்ட காட்டணுமாம்”, என்று புலம்பிக்கொண்டே அவள் தன் வாகனத்தை நோக்கி சென்றாள்.
காரில் குழந்தை படுக்க வைத்தவள். சீட்பெல்டை அழுத்தமாக போட்டு விட்டு காரை எடுத்துக் கொண்டு பறந்து விட்டாள். அவளால் அவள் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை, ஆனால் காப்பாற்ற நினைத்த ஒரு தாயின் ஸ்தானத்திலிருந்து இந்த குழந்தையை காப்பாற்றி இருந்தால் அத்தருணத்தில்.
அவளையே உணர்ச்சிப் பிழம்பாய் பார்த்துக் கொண்டிருந்தவனை பார்த்தவள்.
“எட்வர்ட், இந்த பேரை தான் சொன்னாங்க . அவங்க பேசுனத வச்சு பார்க்கும்போது, அந்த பொண்ணோட குடும்பத்தார் தான் அந்த ஆக்சிடென்ட்க்கு காரணம்னு எனக்கு நல்லா தெரிஞ்சது. ஆப்போசிட்ல பேசின குரல் கூட எனக்கு சற்று தெளிவில்லாமல் கேட்டுச்சு. சுவாசத்தை பாரு உயிரோட இருந்தா கழுத்தை நெறித்து கொன்னுடுன்னு சொன்னாங்க. குழந்தையையும்”, என்று கூறிவிட்டு அழுதவள்.
மீண்டும் முகத்தை துடைத்துக் கொண்டு.
“இந்த மாதிரி அரக்கன் கிட்ட குழந்தை இருக்கணுமான்னு தோணுச்சு. ஆனா அதுக்காக நான் அப்படியே நிக்கல. போலீஸ் ஸ்டேஷனுக்கு போகணும்னு நினைச்சேன். ஆனா என்ன ஒன்னு உடனே பண்ணனும்னு நினைக்கல. எனக்கு அப்ப நிறைய குழப்பம் இருந்துச்சு என்ன பண்றதுன்னு தெரியல. ஆனா எங்க வீட்ல எல்லாரும் குழந்தையோட போகும் போது திட்டுனாங்க. கோவப்பட்டாங்க. ஏற்கனவே என் மேல இருக்க கோபத்தை சாக்கா வச்சு அப்பயும் திட்ட ஆரம்பிச்சாங்க. குழந்தையை தூக்கிட்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்திடுன்னு சொன்னாங்க. அவங்க தகப்பன் எல்லாம் தேடுவாங்கன்னு சொன்னாங்க. ஆனா கண் விழிச்ச குழந்தை என்ன அதோட தாயா நினைச்சு பசில எ, எ, என்ன“, என்று சொல்ல வந்தவள் அதை மிடறு விழுங்கிய படி தன் கீழ் உதட்டை கடித்தாள்.
அவள் சொல்லவில்லை என்றாலும் அவள் சொல்ல வந்தது அவனுக்கு புரிந்தது. அவள் சங்கடப்படுகிறாள் என்று பார்வையை அவள் புறம் இருந்து திருப்பினான். உறங்கும் குழந்தையை பார்த்தான். அவள் தன்னை சுதாரித்துக் கொண்டு மீண்டும் பேச்சை தொடர்ந்தாள்.
“உன்ன மாதிரி தானே மத்தவங்களும் குழந்தை தொலைச்சுட்டு காணாம தேடுவாங்க, அதனால போலீஸ் ஸ்டேஷன்ல போய் கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு வந்துடுன்னு சொன்னாங்க. ஹாஸ்பிடல் போயிட்டு குழந்தைக்கு ட்ரீட்மென்ட் பாத்துட்டு நான் வீட்டுக்கு போயி இவங்க கிட்ட எல்லாம் திட்டு வாங்கிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போனேன். ஆனா குழந்தை பசியில் அழுததும் ஒரு தாயா முதல்ல அந்த குழந்தையோட பசியை ஆற்றுவது தான் முக்கியம்னு நினைச்சேன்“, மீண்டும் கலங்கினாள். யார் என்றே தெரியாத ஒருவனிடம் அதைக் கூற முடியாமல் தடுமாறியவள்.
“முதல்ல குழந்தையோட பசியாற்றிட்டு, குழந்தையை போலீஸ் ஸ்டேஷன்ல குடுக்கலாம்னு நினைச்சேன். பால் புட்டி வாங்கிக்கிட்டு, டீக்கடையில் பாலவாங்கி அதை ஆத்தி பொறுமையா குழந்தைக்கு கார்லயே உட்கார்ந்து கொடுத்துட்டு அதுக்கப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனேன். அங்க யாரும் பெருசா இல்ல. எல்லாருமே ஆக்சிடென்ட்காக போய் இருக்காங்கன்னு சொன்னாங்க. நான் ஓரமா ஒக்காந்து இன்ஸ்பெக்டருக்காக காத்துகிட்டு இருந்தேன். திரும்பவும் குழந்தை பசிக்கு அழுதுச்சு. என்னன்னு பார்த்தேன் எதனால தெரிஞ்ச உடனே அதை போய் வாங்கிட்டு வந்து டைப்ரை மாத்திட்டு திரும்பவும் போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார்ந்துகிட்டு இருந்தேன்”.
“அப்ப அப்பத்தான் அந்த ஆள பார்த்தேன்”.
“யாரு? “, என்றவன் கேள்வி கேட்க..
“முதல்ல போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வந்த அந்த அடியாட்களை பார்க்கும் போது எனக்கு பயம் வந்துருச்சு. கொஞ்சம் மறைஞ்சு போய் உட்கார்ந்துகிட்டேன். அங்க இருந்த போலீஸ் என்னன்னு கேட்டாங்க. அந்த லேடி போலீஸ் கிட்ட பாத்ரூம் போகணும்னு கேட்டேன். அங்க போய் மறைஞ்சு நின்னுகிட்டேன். அவங்க என்ன பேசுறாங்கன்னு கேட்க ஆரம்பிச்சேன் “, மீண்டும் அந்தப் பழைய ஞாபகங்களுக்கு சென்றால்.
“சார் நான் தான் சொல்றேன்ல நான் அந்த பொண்ணோட மாமனார் தான். டிரைவர் கொஞ்சம் அப்படி இப்படிதான். ஆக்சிடெண்ட் தான் சார். நான் பாத்துக்குறேன். என் பையன் அவன் பொண்டாட்டி செத்ததுல உடைஞ்சுட்டான். அழுது மயக்கம் ஆயிட்டான். ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கேன்”, என்று அந்த பெரிய மனிதர் எதையோ கூறிக் கொண்டிருந்தார்.
பணத்தை கொடுத்த அந்த போலீஸை அவர் சரி கட்டினார். அலைபேசியில் கேட்டது தெளிவில்லை என்றாலும் அந்த குரல் அவளுக்கு பரிச்சயமானதாக தோன்றியது.மீண்டும் வெளியில் வரும் போது.
“ஏண்டா ஒரு வேலையை கொடுத்தா ஒழுங்கா பண்ண தெரியாதா??. இப்ப அந்த குழந்தையை எங்கடா போய் தேடுறது? “, என்று அடியாட்களிடம் கேட்டார். அவள் வாயில் கையை வைத்துக் கொண்டாள்..
“அடப்பாவி இவன்தான் மருமகளையே கொன்னு இருக்கானா?? . அப்படின்னா அப்பாவும் பையனும் சேர்ந்து பொண்டாட்டியையும் குழந்தையையும் கொல்ல நினைக்கிறாங்களா??, பணத்தைக் கொடுத்து போலீஸை வேற வாங்கிட்டானுங்களே??. இப்ப இங்க போய் குழந்தையை கொடுத்தா மட்டும் நியாயம் கிடைக்குமா??, குழந்தையை போலீஸ் கிட்ட கொடுத்தா இவனுங்க கிட்டயே தூக்கி குடுத்துருவாங்க. அடுத்த நிமிஷம் குழந்தையோட உயிருக்கு ஆபத்து “, என்று சிந்தித்துக் கொண்டே தன் கையில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்தாள் மாலினி .
அது தூக்கத்திலேயே அவளைப் பார்த்து சிரித்தது. “இந்தாம்மா கம்ப்ளைன்ட் கொடுக்க வந்துட்டு, இங்க என்ன நின்னுகிட்டு இருக்க? “, என்று அங்கிருந்த போலீஸ் கேட்க.
” என் பர்ஸ் தொலைஞ்சிடுச்சுன்னு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தேன் சார். ஆனா எங்க அப்பா இப்ப வேணான்னு சொல்லிட்டாரு. நான் கிளம்புறேன்”, வாய்க்கு வந்த எதையோ கூறிவிட்டு அவள் வெளியில் செல்ல.
“ஏம்மா அங்க நிக்கிற கார் உன்னுடையதா சீக்கிரம் எடும்மா”, என்று மற்றொரு போலீஸ் கூறினார். “இதோ போயிடுறேங்க”, என்று அவள் குழந்தையை மீண்டும் மறைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
“பர்ஸை தொலைஞ்சதுக்கு கார்ல வந்து கம்ப்ளைன்ட் கொடுக்குறாங்க? “, என்று இருவர் பேசிக் கொண்டிருந்தது.
அவள் காதில் தெளிவாகவே கேட்டது. அதை அசட்டை செய்து விட்டு, மீண்டும் வீட்டை அடைந்தாள். வீட்டிற்குள் நுழையும் போதே அவள் தந்தையுடைய கர்ஜனை. “வீட்டுக்குள்ள வரதா இருந்தா குழந்தை இல்லாம வா. போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்கலைன்னா எதாவது அனாதை ஆசிரமத்தில் விட்டுட்டு வா”, என்று தந்தையின் இடிச்சொல்லுக்கு அவள் கால்கள் வேரூன்றி அங்கேயே நின்றது.
“நாளைக்கு பாக்கறேன் பா”, என்று குழந்தைக்காக வாங்கிய அனைத்தையும் எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்று விட்டாள் . கண் விழித்த குழந்தை அவளைப் பார்த்து பொக்கை வாயை விரித்து சிரித்தது. “அனாதை ஆசிரமத்தில் கொடுத்தா கூட தேடிட்டு வந்து கொல்லுவானுங்க தானே. குழந்தையை எங்கு விட முடியும்?? என்று கேட்க.
குழந்தை மீண்டும் பாலுக்காக அவளிடம் ஒண்டியது. தன்னால் கொடுக்க முடியாத இயலாமையை எண்ணி வருந்தியவள் அப்படியே அதை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். ஒரு நாள் இரவு முழுவதும் குழந்தையை வைத்துக் கொண்டு கொட்ட கொட்ட விழித்திருந்தாள். என்ன முடிவெடுப்பது என்று தவித்து இருந்தாள்.. காலையில் தன் தந்தையிடம் வந்தவள்.
“இந்த குழந்தையை எங்கேயும் விட முடியாது. இத நானே வளர்க்க போறேன்பா”, என்றாள். “நீயே வளர்க்க போறியா???. அது க்ரைம் உனக்கு தெரியாதா?? குழந்தை சம்பந்தப்பட்டவங்க கிட்ட தான் கொடுக்கணும்”, என்றார் அவளுடைய தந்தை.
“குழந்தைக்கு பாதுகாப்பு இல்லப்பா”, என்று தான் பார்த்ததை கேட்டதை அறிந்ததை என்று அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தாள்.. “இங்க பாரு மாலினி நீ உன் இஷ்டத்துக்கு தான் ஆடுவேன்னா அதுக்கு இது இடம் இல்லை. குழந்தைக்கு பாதுகாப்பு இல்லைன்னா அது அந்த குழந்தையோட தலையெழுத்து. அதுக்காக நீ வச்சுக்கிட்டு இருப்பியா??, ஏற்கனவே ஊர்ல பேசுறதெல்லாம் காது கொடுத்து கேட்க முடியல. கல்யாணம் பண்ணி கொடுத்தாம்னா எப்படி இருந்தாலும் அவன் கூட வாழனும். அத விட்டுட்டு வாழா வெட்டியா வந்தா மரியாதை இருக்காது. சொல்ல சொல்ல கேக்காம டைவர்ஸ் வேற எடுத்து இருக்க. என்ன நெனச்சுக்கிட்டு இருக்க”, எதற்கு எதையோ கேட்டு அவர் திட்டிக் கொண்டிருக்க.
“அப்பா அந்த பொறுக்கி பண்ணதெல்லாம் நான் உங்ககிட்ட சொன்னதுக்கு அப்புறமும் அடங்கி போகணும்னு சொல்றீங்களா? “..
“ஆம்பளைங்கன்னா அப்படித்தான் இருப்பாங்க. அவன் என்ன போட்டோ எடுத்து சோசியல் மீடியால விட்டு காசா சம்பாதிக்கிறான். தனக்குன்னு தானே வச்சிருக்கான்”, .
தன் தந்தையா இப்படி பேசுவது?? என்று அவள் முகத்தை அசுசையாக வைத்துக் கொண்டு அவரை பார்த்தாள்..
“ஆம்பளைங்க என்ன எதிர் பாக்குறாங்களோ பொம்பளைங்க அதை கொடுத்து தான் ஆகணும்”, என்று அவள் முகத்தை பார்க்காமல் திரும்பிக் கொண்டு பேசினார் அவர். பேசியவரை துச்சமாக பார்த்தாள்.
இவரும் ஆண் பிள்ளை தான் என்று அவளுக்கு அந்த நொடி தோன்றியது. வேகமாக தன்னறைக்கு சென்றவள். சில உடைகளை எடுத்துக்கொண்டு அவளுடைய சர்டிபிகேட்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள்..
Nice and interesting
Malini kozhandhai ah kastapattu than kapathi vachi iruka pola
ava antha kolanthaiya kapathi nallathu panra aana oru appava thuku oru vali sollama nanum aambala than ra mari pesuraru
Super intresiting