தேவதை 21
அவள் முன்பு கைகளை ஆட்டிக் கொண்டிருந்தான் அரவிந்த். அவள் சுய நினைவில் இல்லை என்று தெரிந்ததும் சொடக்கிட்டான்.
“ஹான்” எதிலிருந்தோ மீண்டு எழுபவள் போல எழுந்தாள் மாலினி. அவளைப் பார்த்து வசீகரமாக புன்னகைத்தான்.
இவன் சிரிப்பு அழகாக இருக்கிறது மனமார சிரிக்கிறான். வெளி தோற்றத்திற்காகவோ, ஏதோ சிரிக்க வேண்டுமே என்று சிரிக்கவில்லை. நடிக்கவும் இல்லை. மனதின் உள்ளிருந்து வரும் சிரிப்பு என்பதெல்லாம் வரம் தான். அந்த வரம் இவனுக்கு கிட்டி இருக்கிறது. தான் தொலைத்த சிரிப்பு இவனிடமாவது நிலைத்திருக்க வேண்டும்“, அவன் சிரிப்பை ஆராய்ச்சி செய்தபடியே அவள் அதற்கான வேண்டுதல்களையும் வைத்துக் கொண்டே நின்று இருந்தாள்.
கிச்சன் மேடையிலேயே சாய்ந்து கொண்டு கைகளை கட்டிக் கொண்டு நின்றவன். “எப்படி கொஞ்சமாச்சும் பாஸ் ஆனேனா?”, என்று அதே வசிகரிக்கும் சிரிப்புடன் கேள்வி கேட்டான் அரவிந்த்.
அவள் புரியாமல் விழிக்க.
“நீ என்ன சைட் அடிச்சேன்னு சொல்ல மாட்டேன். எனக்கு தெரியும் நீ அந்த டைப் இல்லன்னு. அடிச்சாலும் தப்பு இல்ல, நான் உன் புருஷன் தான். இப் ஐ நாட் ராங், நீ என்னையும் என் சிரிப்பையும் அளவெடுத்துக் கொண்டிருந்த. அதாவது ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்த. இல்லனா அத பத்தி ஏதோ சிந்திச்சுகிட்டு இருந்த கரெக்டா?“, என்று அதே சிரிப்பினோடு கேட்டு வைக்க. அவள் அதிர்ந்து விட்டாள்.
“இவன் மனதில் இருப்பதை அப்படியே படிக்கிறான். இவனிடம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று அவசரமாக அவள் முகபாவனையை மாற்றிக் கொண்டாள். அதற்கு அவனிடம் இளநகை மட்டுமே.
“எதிர் வீட்டு ஆன்ட்டி ரொம்ப நல்ல டைப். இங்க வந்ததுல இருந்து ரொம்ப நல்லா பேசிட்டு இருப்பாங்க. முதல் முதலில் இந்த வீட்டுக்கு நான் தனியா வரும்போது குடும்பம் இல்லையா??, பேச்சுலருக்கு வீடு கொடுத்திருக்காங்களான்னு முகத்தை சுளிச்சு கேட்டாங்க. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு குழந்தை இருக்குன்னு சொன்னதுக்கப்புறம் தான் அவங்க முகத்துல புன்னகையை பார்க்க முடிஞ்சுது. இந்த மாதிரி அப்பார்ட்மெண்ட்ல பக்கத்துல இருக்குறவங்களோட துணையும் நமக்கு தேவை. எல்லாரையும் முறைச்சுக்கவும் முடியாது. பகச்சிக்கவும் முடியாது. அதே சமயத்துல நல்லவங்களா இருந்தா அவங்க கிட்ட தோழமை பாராட்டலாம். அவங்க வீட்டுக்கு கூப்பிட்டு நாம போகலனா சரி இருக்காது. இஃப் யூ டோண்ட் மைண்ட் நைட் டின்னருக்கு அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்துடலாமா?“, அதற்கும் அவளிடம் சம்மதம் கேட்டான்.
“கூப்பிட்டா கூப்பிட்ட இடத்துக்கு வர. அது உன்னோட வேலை”, பற்களுக்கு இடையே வார்த்தைகளை நரநரத்தவனின் (ஆகாஷ்) முகம் அவள் கண் முன்னால் வந்து மறைந்தது. கண்களை அழுந்த மூடி கொண்டாள். கருமணிகள் அலைமோதி கொண்டிருந்தது. மூடி இருந்த அவள் இமைகளை புரியாமல் பார்த்தான் அரவிந்த்.
“ஏதாவது தப்பா கேட்டுட்டோமோ?, இல்ல தப்பா யோசிச்சிட்டோமா?, அவசரமாக அவன் மனம் சிந்தித்தது.
“ஓகே ஓகே, கூள் கூள். நான் அவங்க கிட்ட சொல்லிடுறேன். உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிடுறேன்”, என்று கூறிவிட்டு அவன் அகல போக.
“இல்லை, அது இல்லை. வந்து, போகலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல. அவங்க தான் நம்மள வரவேற்றாங்க. அவங்க கூப்பிட்டு போகலனா நல்லா இருக்காது”, தடுமாற்றத்துடன் கூறினாள்.
“இதை செஞ்சுதான் ஆகணும்னு எந்த கட்டாயமும் இல்லை மாலினி. உனக்கு பிடிக்கலைன்னா எதுவுமே செய்ய வேண்டாம். சும்மா வாய் வார்த்தைக்காக இல்ல. உன்ன காம்ப்ரமைஸ் பண்றதுக்காக இல்ல. உன்ன இம்ப்ரஸ் பண்றதுக்காக சொல்லல. நோ மீன்ஸ் நோ. அது எனக்கு நல்லா தெரியும். அதில் எல்லாத்துக்குமே தான். லைஃபை காம்பெர்மைசோடவே வாழ முடியாது இல்லையா. அவங்க நல்ல மாதிரி தான்”, என்றான் அரவிந்த்.
“போகலாம், இங்கேயே இருக்க போறோன்னும் போது. அவங்களும் நமக்கு ஹெல்ப்பா இருப்பாங்க. உங்களுக்கும் ஹெல்ப்பா இருந்திருக்காங்கன்னு சொல்றீங்க, போகலாம். குழந்தை இதுவரைக்கும் தனியா வளர்ந்துட்டாள். இனிமேல் இதுபோல துணைகள் தேவைப்படும்”, என்றால் அவள்.கண்கள் மின்ன முக மலர்ந்து அவளை பார்த்தவன்.
“அப்ப அடுத்த குழந்தையை ரெடி பண்ணலாமா? “, என்று கேட்டுவிட்டான்.
அவள் அதிர்ந்து கண்களை அகல விரித்து, வாயைப் பிளந்து பதட்டத்துடன் நிற்க.
“ஓகே ஓகே, நீ சொன்னதை நான் வேற அர்த்தம் புரிஞ்சுகிட்டேன்னு புரியுது. கல்யாணம் ஆகி மூணு நாள் தான் ஆகுது. அதுக்குள்ள எல்லாம் நீ இறங்கி வந்துடுவியா என்ன?. அட்லீஸ்ட் மூணு வருஷமாவுது ஆகும்னு நான் கால்குலேட் பண்ணி வச்சிருக்கேன். ஆனா முப்பது வருஷமா ஆக்கினாலும் ஆக்கிருவேன்னு எனக்கு தெரியும். பெண்களோட மனசை யாராலும் அறிய முடியாது. அதை கடவுளாலேயே அறிய முடியலன்னு போது. இந்த அரவிந்தால் மட்டும் முடியுமா என்ன??, ஆனா கொஞ்சம் கன்சிடர் பண்ணு. நான் இன்னும் வெர்ஜினா இருக்கேன்”, என்று பேசிக்கொண்டே அவன் அங்கிருந்து அகன்று செல்ல நினைத்தவன்..
அவள் முகம் சடார் என்று மாறியதை அவனும் கவனித்துவிட்டான். பேசியதை ரீகால் செய்தான்.
“ஆனா நான் வெர்ஜின் இல்லையே?“, அவள் மனம் அவசரமாக கலங்க துடித்தது. அரவிந்தா உனக்கு அறிவே இல்லடா அவனை அவனே மானசீகமாக திட்டிக் கொண்டான்.
“அரவிந்த் பேசும்போது ஜாக்கிரதையா பேசணும். நீ ஏதோ பேச, அவள் ஏதோ புரிஞ்சுக்க கூடாது. செயல் பேச்சு எல்லாத்தையும் கவனமா இருக்கணும்”, என்று தந்தை கூறியது ஞாபகத்தில் வந்தது.
அவளின் அந்த நிலை தான் பேசியதால் வந்தது என்று தோன்றியது. தான் ஒன்று பேச, இவள் வேறு ஏதோ புரிந்து கொண்டாள்.
“இங்க பாரு மாலினி, நான் இப்படித்தான் எதையாவது ஜாலியா பேசுறதா நினைச்சு பேசிடுவேன். அதுக்கெல்லாம் நீ வேற எதையோ அர்த்தம் பண்ணி குழம்பிக்காத. உன்னோட பாஸ்ட் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை. உன்னோட ப்ரெசென்ட் தான் நான் என் லைஃபோட ஷேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். ஃபியூச்சர் பத்தி கூட நான் யோசிக்கல. ப்ரெசென்ட் அது ரொம்ப முக்கியம். அத பத்தி மட்டும் யோசி. எல்லாருக்குமே பாஸ்ட் இருக்கும் அது ஃவர்ஸ்ட்டா தான் இருக்கும்”.
“அடடா அரவிந்தா டி ஆர் ரேஞ்சுக்கு அழகா ரைமிங்கா சொல்லிட்டியே?”, என்று தன் முகத்தை தானே கிள்ளி முத்தம் கொடுத்துக் கொண்டவன்.“என்ன பாக்குற நீ பாராட்ட மாட்ட அதனால நானே பாராட்டிக்குறேன். நீ முத்தம் கொடுக்கவும் மாட்ட அதனால நானே கொடுத்துக்குறேன்“, என்று இலகுவாக சிரித்தான்.
முதல் பாதியை கூறும்போது முகத்தை தீவிரமாக தான் வைத்துக் கொண்டிருந்தான். ஆனால் கோர்வையாக பேசும் போது அவன் முகத்தில் தீவிரம் மறைந்து லகுத்தன்மை குடி கொண்டது. கடைசி வாக்கியத்தில் புன்னகையை மீட்டெடுத்து இருந்தான்.“எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக் கொள்கிறான். உடனே காம்ப்ரமைஸ் ஆகி விடுகிறான். தன்னையும் காம்ப்ரமைஸ் செய்ய விளைகிறான். தனக்காகவும் சிந்திக்கிறான், தன் மனதிற்காகவும் யோசிக்கிறான். தான் வருத்தப்படக் கூடாது என்று நினைக்கிறான். மொத்தத்தில் ஆண் மகன் என்றால் எப்படி இருக்க வேண்டுமோ?, அதற்கு இலக்கணமாக இருக்கிறான். இவன் உண்மையில் நல்லவன் தானோ?” அவள் அவனைப் பற்றி சிந்தித்து கொண்டு இருக்க. வாசல்வரை சென்றவன். சமையல் அறை வாசலில் நின்று மாலினியை பார்த்து குரல் கொடுத்தான்.
“குழந்தைக்கு பசிக்குது உன் முகத்தை பார்த்துட்டு இருக்காள் பாரு, வா போகலாம். கிரோசரீஸ் ஆர்டர் பண்ணிட்டேன். நைட்டுக்கு பாப்பாக்கு பால் வேணும் இல்லையா”, அவள் குழந்தையை தூக்கிக் கொள்ள அவர்கள் வீட்டை நோக்கி அழைத்துச் சென்றான்.எதிர்பார்த்து இருந்தார்கள் போல முகம் மலர புன்னகையுடன் வரவேற்றார்கள். அவள் பார்த்த இரண்டு பெண்மணிகளோடு சேர்ந்து இன்னும் இரண்டு ஆண்களும் இரண்டு சிறு குழந்தைகளும் இருந்தனர். குழந்தைகளை பார்த்ததும் மாலினியின் முகம் மலர்ந்தது. பெரியவர்களை தவிர்த்து விட்டு குழந்தைகளின் மீது அவளுடைய பார்வை இருந்தது.“என்னங்க, உங்களுக்கு குழந்தைன்னா ரொம்ப பிடிக்கும் போல? “, என்று அந்த இளைய பெண்மணி கேட்டாள். தன்னை சுதாரித்து மீட்டுக் கொள்வதற்குள் அவன் அவளுக்கு வாயாக செயல்பட்டான்.
“என்னம்மா பிடிக்குமான்னு சாதாரணமா கேட்டுட்ட?, குழந்தைன்னா என் பொண்டாட்டிக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். உன் ரெண்டு குழந்தைங்கள கூட அவள் கிட்ட விட்டுடு. ஜம்முனு சந்தோஷமா பாத்துப்பாள். இப்பவே சொல்லிட்டேன் பாக்கியா. சண்டேயானா உங்க ரெண்டு குழந்தைகளும் எங்க வீட்ல தான் இருக்கணும். என் பொண்ணு தனியா வளந்தே பழக்கப்பட்ட்டுட்டா அவளுக்கு மத்தவங்களோட பழகுற ஹாபிட்ட கொண்டு வரணும்”, என்று உரிமையாக அந்த பெண்மணியிடம் பேசினான்.
அவன் பேசும்போதெல்லாம் வாயை பிளந்து அவனைப் பார்ப்பதே அவளுக்கு இப்போது வாடிக்கையாகி விட்டிருந்தது. அவனைப் பற்றி அவளுக்கு தெரியவில்லை இப்போது தான் அறிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறாள். ஆனால் அவனோ ஒவ்வொரு பரிமாணங்களாக காட்டிக் கொண்டிருக்கிறான்.
“அதனால என்ன அண்ணா தாராளமா கூட்டிட்டு போங்க”, என்று இலகுவாக கூறினாள் அந்தப் பாக்கியா.“வாசல்லையே எவ்ளோ நேரம் இருப்பீங்க?, உள்ள வாங்க சாப்பிடலாம். வாம்மா? “, என்று அங்கிருந்த பெரியவர் அவளை அன்போடு அழைத்தார். அவள் தந்தை வயது தான் இருக்கும் என்று தோன்றியது. இல்லை அதைவிட மூத்தவராக கூட இருக்கலாம். யாரோ ஒரு பெண்ணிடம் எவ்வளவு அன்பாக பேசுகிறார் என்று அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒட்ட வைத்த சிரிப்புடன் அந்த வீட்டினுள் சந்தோஷமான மனநிலையுடன் நுழைந்தனர் மூவருமே. மரியாதை நிமித்தமாக வரவேற்பறையின் அமர வைத்தனர். தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் பாக்யா.“என்ன பாக்கியா? சாப்பாட்டுக்கு வர சொல்லிட்டு தண்ணிய நீட்டுற, எனக்கு கொலபசி, என் பொண்ணுக்கு அதை விட பசி. நானும் என் பொண்ணும் உங்க எல்லாரையும் தின்றதுக்குள்ள ஒழுங்கு மரியாதையா எங்களுக்கு சோறு போட்டுடுங்க”, என்று கூறியவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மாலினி.
‘இவன் என்ன இப்படி பேசுகிறான்?? மானத்தை வாங்குகிறான்’, அவசரமாக மற்றவர்களின் முகத்தை கவனித்தால் யாராவது தவறாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று ஆனால் அனைவரும் அவனைப் பார்த்து சிரித்து வைத்தனர்.
“அரவிந்தா எனக்கு கூட அதே பசி தான்பா, உங்க ஆன்ட்டி நீ வந்தா தான் சோறுன்னு சொல்லிட்டாள். இப்பயும் டைனிங் டேபிள் கூட்டிட்டு போகாமல் இங்க உட்கார வச்சவுடனே, என் மைண்ட் வாய்ஸ்ல அது தான் ஓடுச்சு. அதுக்குள்ள நீயே கேட்டுட்ட”, என்றார் பாக்யாவின் மாமனார்.
“சரி வாங்க சாப்பிடலாம்”, என்று சிரித்துக் கொண்டே பார்வதி அழைக்க. எல்லோரும் எழுந்து கொள்ள அவள் அவசரமாக அரவிந்தனை சீண்டினாள்..
“என்ன? என்று அவன் பார்வையால் கேட்க. “ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? “, அவள் சிறு குரலில் கேட்டாள்.
“பசிமா மதியானம் சாப்பிட்டது இன்றைக்கு நிறைய வேலை வேற? “, என்றான் அரவிந்த். பார்வதியும் பாக்யாவும் எல்லோருக்கும் உணவுகளை பரிமாற ஆரம்பித்தார்கள். அவள் சங்கடமாக அமர்ந்திருக்க அவன் உண்ண ஆரம்பித்தான்.
“என்ன மாலினி நீ சாப்பிடலையா??”, என்று பார்வதி சகஜமாக கேட்டார்.
“குழந்தைக்கு ஊட்டிட்டு தான் சாப்பிடுவேன் ஆன்ட்டி அவள் பசி தாங்க மாட்டாள். இங்க இருக்கிறது எல்லாம் கொஞ்சம் ஹெவி ஃபுட்டா இருக்கு நான் நைட்ல ரசம் சாதம் இல்லன்னா பால் சாதம் தான் கொடுப்பேன். அவளுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது. ஹெவி ஃபுட் நைட்ல டைஜஷன் ஆகாது”, என்று மாலினி பேச.
ஒரு தாய் எப்போது தாயாக மட்டுமே சிந்திக்கிறாள் என்று அங்கிருந்த ஒவ்வொருவரும் யோசித்தார்கள்.
“அதுக்கென்னமா கேக்க வேண்டியது தானே?, அரவிந்த் இவ்வளவு நாள் வீட்ல இல்லாததுனால பாலும் வீட்ல இருந்திருக்காது. நான் எக்ஸ்ட்ரா பால்கவர் வச்சிருக்கேன் நீ எடுத்துட்டு போயிடு நைட்டுக்கும் குழந்தைக்கு யூஸ் ஆகும் “, என்று பார்வதி பேசிக்கொண்டிருக்கும் போது பாக்யா ஒரு கிண்ணமும் கிளாஸும் பாலும் எடுத்து வந்தார் குழந்தைக்காக.
“ஆன்ட்டி, இப் யூ டோன்ட் மைண்ட். அவள தூக்கிக்கிட்டு பால்கனில நின்னு ஊட்டவா??”, என்று தயக்கத்தோடு மாலினி கேட்க.“அவளுக்கு நான் போட்டுடுமா ? “, என்று கேட்டாள் பாக்கியா.
இப்பொழுது மாலினி வாயை திறப்பதற்கு முன்பாகவே அரவிந்த் அவளுக்காக பேசியிருந்தான்.
“நீ ஊட்டுவ ஆனா அதை யார் சாப்பிடுறது?, என் பொண்ணு சரியான அம்மா பொண்ணு. மாலினியன்ன தவிர வேற யார்கிட்டயும் சாப்பிட மாட்டாள். அவ்வளவு க்ளோஸ்”, என்று கூறியவன் அதன்பிறகு சாப்பிடவில்லை மனைவிக்காகவும் மகளுக்காகவும் காத்திருந்தான். ஆண்கள் இருவரும் உணவை முடித்துக் கொண்டு எழுந்து விட அங்கிருந்து குழந்தைகளுக்கு பாக்யா ஊட்டி கொண்டிருக்க.
மாலினி திரும்பி வரும்போது அவன் பார்வதியுடன் கதை அழந்து கொண்டிருந்தான். எல்லோரிடமும் சகஜமாக பேசுகிறான். எல்லோரிடமும் தோழமை பாராட்டுகிறான். என்று அவனைப் பற்றி சிந்தித்துக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு வந்தாள் மாலினி.
Aravindh oda genuineness malini ku nambikai kudukuthu and avan appa oda advice ah yum follow panrathu na la malini ah chinna tha kooda hurt panna matran
Super super👍👍👍
Hero sirrrrrrrr romba nalla payyana irukkaare, superrrrrrrrr superrrrrrrrr
ARAVIND unakagave vanthu irukan malini unaku nadanthatha vachi nee thappa ninaika ry panra aana nadakurathu ellam unaku different ah iruku la compare pana tha vaikum mind but compare panama atha rasika start panu malini