Skip to content
Home » நதி தேடும் பெளவம்-7

நதி தேடும் பெளவம்-7

பௌவம்-7

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

மதியம் குரு சாப்பிட்டுக் கொண்டிருக்க, மஹா அவனை இடித்துக் கொண்டு பரிமாறவும், அங்கிருந்த ஜனகராஜை கண்டு குரு தள்ளி தள்ளி நகர்ந்தான்.

ஜனகராஜிற்கு உணவு எப்பொழுதும் குரு வீட்டில், மகள் மஹா கையால் தான். முன்பு போல அவரால் உழைக்க இயலவில்லை. வயது ஒத்துழைக்கவில்லை. குரு தான் “இன்னா மா மகன் இருந்தா அவன் வீட்ல கைநனைப்ப தானே. அப்படி நினைச்சுக்குனு இங்க துண்ணு. மஹா பொண்ணு, என்ன பையனா பாரு” என்றான் குரு.

ஜனகராஜுக்கு உள்ளம் நிறைய, சாப்பிட்டு கிளம்பினார். மஹா குருவின் சட்டையைப் பிடித்து இழுக்க, “கொழுப்பெடுத்தவளே… சும்மா இருக்க மாட்ட. இன்னிக்கு உன்கு இன்னமோ ஆயிடுச்சு. விடுடி. மெக்கானிக் கடையில பைக்க வாங்க ஒரு கஸ்டமரு வருவாரு. ராப்பொழுதுக்கு வர்றேன்.” என்று ஓடினான்.

“யோவ். இன்னிக்கு பீச்சிக்கு கூட்டிட்டு போற” என்று இவளும் கத்த, “வூட்டுக்கு முன்ன தானே கீது போடி.” என்று பைக்கை உதைத்தான்.

எப்படியும் அழைத்துச் செல்வான் என்பது அவள் எண்ணம்.

மாலை பைக்கில் வந்தவன் முன்னே மல்லிப்பூவு இருக்க, அதை எடுத்துக்கொண்டு கதவின் மீது கை வைக்க, மஹா சேலையில் கதவு திறந்து நின்றாள்.

“இன்னா ஏதாவது பங்ஷனா? சேலை கட்டிக்கிற. இந்த நேரத்துல. எப்பவும் அழுக்கு நைட்டி தானே கோணீப்பை மாதிரி கவுத்திருப்ப.” என்று கையில் பூவை வைக்கவும், முதலில் அவன் பேசியதுக்கு முறைத்தவள் அவன் கொடுத்த பூவில் வெட்கம் கொண்டாள்.

நானு பீச்சுக்கு போலாம்னு சொன்னேன் காதுல விழலை.” என்று “ரெடியாகு” என்றாள்.

“இன்னாத்துக்குப் பீச்…? போய் வேலையைப் பாருடி” என்றவனைப் பேச்சை கேட்காமல் சட்டை பட்டனை கழட்டி அவளாகவே எடுத்து வைத்த சட்டையை மாற்றினாள்.

தலைவாறி விட்டாள். “இன்னாடி” என்றவனைக் கன்னம் பற்றி “போணும். அம்புட்டு தான்” என்றாள் மஹா.

“ஒன்னோட இம்சை டி” என்றவன் பைக்கை கிளப்பினான்.

“எங்க போகணும்.” என்றான். “அங்க தான்.” என்றாள். கேட்பவருக்கு மண்டை காயும்.

குரு நிறுத்தி திரும்ப மஹா பார்த்த இடத்தில் ரதிதேவி அமர்ந்திருந்தாள்.

மஹா சந்தோஷம் கொண்டு ரதியருகே ஓடினாள்.

குரு அமைதியாகப் பின் தொடர்ந்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனோ கால்கள் மஹாவை பின் தொடர்ந்து செல் என்று மட்டும் ஆணையிட்டது.

மஹா ஏதோ குருட்டு நம்பிக்கையில் தான் வந்தது. ரதிதேவி வருவாளென எதிர்பாராதது தான்.

மஹா வந்ததும் ரதிதேவி எழுந்து நின்றாள்.

இருவரும் சிறிது நேரம் தயங்கினர். பிறகு மஹாவிடம் “சாரி மஹா” என்றாள்.

“அய்ய.. இன்னாத்துக்குச் சாரி… நாங்க மனசுல ஒன்னும் தப்பா எத்துக்கலையே. இன்னா குரு.” என்று கூட்டு சேர்த்தாள். அவனோ “அடிங்க… வாய மூடுதா பாரேன்” என்று மனதில் வைதான்.

“உட்காரு மஹா” என்றதும், மஹாவும் “நீங்களும்… உட்காருங்க” என்று ரதிதேவியைச் சொன்னாள்.

“காலையில அவருக்கு என்ன ஆச்சுனு கூடக் கேட்காம உங்க ரெண்டு பேரையும் திட்டிட்டேன்.” என்றாள். ரதிதேவியின் பார்வை குருவை காண அடுத்த நிமிடமே மஹாவை கண்டு பயந்தது.

“அது ஒன்னுமில்லை ரதி… கஜாபுயலில இந்த அழுக்கன் மாட்டிக்கிட்டு அப்படியே… கடலில மயங்கிட்டான். கண்ண திறந்தா இலங்கை காராங்க கிட்ட மாட்டிக்கிட்டானாம்.

அங்க தான் கைதியா கடந்தது. ஒரு வர்ஷம் கழிச்சு, இந்த மூஞ்சியை ரிலீஸ் பண்ணியிருக்காங்க.

2020 கிட்ட வூட்டுக்கு வந்துடுச்சு. இன்னா ஒரு வருஷம் இரண்டு மாசம் எல்லாம் மனசை நெருப்புல போட்டு வதக்கிடுச்சு.” என்று பதில் தந்தாள் மஹா.

குருவை நிமிர்ந்து பார்க்க அவனோ தூரத்தில் சூரியன் நீரில் அமிழ்வதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.

‘குரு அங்க பார்றேன் சன் எவ்ளோ அழகா கடலுக்குள் போகுது.’ என்ற ரதிதேவிக்கு, குரு பதில் தராமல் ரதியின் வதனத்திலேயே அவன் கண்கள் மொய்க்க, ‘யூ சீட் அங்க பாருனா என்ன பார்க்கற’ என்று கன்னம் கடித்த நினைவுகள் வர, அதிர்ந்து போனாள்.

இத்தனை நிமிடம் மஹாவின் கணவனையா கண்ணெடுக்காமல் பார்த்தேன் என்று அதிர்ந்து மஹாவை பார்க்க, “அதோட கன்னத்துல கீறலா.? அது அந்தப் பாவி பசங்க அடிச்சானுங்களாம். அதுல கீறி வடுவா போச்சு. கையை அடுப்புல ஒடிக்க” என்று திட்டினாள்.

“நீங்க நல்லாகீறிங்க தானே.?” என்றதும் “ம்ம்” என்பதாய் தலையசைத்தாள்.

ரதிதேவியின் போன் அலறவும் எடுத்தாள். “சொல்லு பிரேம்.” என்றாள்.

”லேப்ல பாஸிடிவ்னு சொல்லிட்டாங்க. ரதி நீ அம்மாவாகப் போற” என்றான் கீச்சுக் குரலில் மெதுவாக.

“ம்ம்… நீ கூடத் தான்.” என்றவள் குரல் துள்ளியது. முகமும் விகாசித்தது.

“சரி நீ ஹாஸ்பிடல்ல இருக்கப் பிடிக்கலைனு கிளம்பிட்ட. எங்க இருக்க.” என்றான் பிரேம்.

“வீட்டுக்கு பக்கத்துல தான். காந்தி சிலை நியர் பை.” என்றாள்.

“அங்கயே இரு பிக்கப் பண்ணிக்கறேன்.” என்றான் பிரேம். சரி என்று அணைத்து மஹாவை கண்டாள்.

அதே நேரம் மாங்கா பத்தை போட்டு விற்றுக் கொண்டு வந்த சிறுவனின் தட்டை ஏக்கமாகப் பார்க்க மஹா அதைப் புரிந்து வாங்கி நீட்டினாள்.

“இல்ல… வேண்டாம்.” என்றாள் ரதி.

“ஆசையா பாத்தியே. வாங்கித் தின்னு. ஏன் நான் வாங்கிக் குடுத்தா தின்ன மாட்டியா” என்று கேட்டாள் மஹா.

“நோ நோ.. அப்படியில்லை. இப்ப தான் நான் கர்ப்பமா இருப்பது ரிசல்ட் வந்தது. அதான் ஆசையா பார்த்தேன்.” என்று மஹாவிடம் கூறினாள்.

“அப்படியா…. சந்தோஷம்… அப்ப முதல்ல பிடி துன்னு. நாக்குக்குப் புளிப்பு பிடிக்கும்.” என்று கொடுக்க மறுக்காது வாங்கினாள்.

“மஹா… உனக்குக் குழந்தை….?” என்று கேட்க கூடாதவையைக் கேட்டு விட்டோமோ என்று பயந்தாள்.

பின்னே இந்தக் கேள்வி சிலருக்கு எத்தகைய வலியை கொடுக்குமென்று அறியாதவளா.

ஆனால் மஹாவோ, ”எங்க இதுகிட்ட சொல்லிட்டேன். கையில காசு கொஞ்சம் சேத்துட்டு தான் பிள்ளை பெத்துக்கணும். என் பிரசவத்துக்கு எவன்கிட்டயும் கையேந்த கூடாதுனு ஓவரா பேசறான்.

இன்னா பேசினாலும் ராவுக்கி கையும் காலும் சும்மா இருக்காது.” என்று பேசி அவளே வெட்கம் கொள்ளவும் செய்தாள் மஹா.

குரு மஹாவை ‘அய்யோ மானத்தை வாங்கறாளே’ என்பதாய் நெளிந்தான்.

மஹாவின் வெள்ளெந்தி பேச்சில் ரதிதேவி உண்மையிலேயே நிம்மதியுற்றாள்.

பிரேம் ஹாரன் அடிக்க, ரதிதேவி அதன் சத்தத்தில் திரும்பி மஹா குருவை கண்டாள்.

மஹாவோ குருவை இடித்து வழியனுப்பு என்றவாறு சமிக்ஞை செய்தாள்.

“குழந்தை வளர நல்லா சாப்பிடுங்க. எதையும் மனசுல போட்டு ஒழப்பாதிங்க. உங்க ஹஸ்பண்ட் வெயிட்டிங்” என்றான். ரதிக்குத் தன்னிடம் பேச வார்த்தையைத் தேடும் குருவை எண்ணி “ம்.. மஹா இது உனக்கும் தேவைப்படலாம் ” என்று மாங்காயை நீட்டினாள். மஹா வாங்கிச் சிரித்தாள்.

ரதிதேவி பிரேமின் பைக்கில் புறப்பட்டுப் புள்ளியாய் மறைய, மஹா அந்தப் பக்கமே பார்க்க, தலையைத் தட்டினான் குரு.

“இன்னா பேச்சு பேசற மஹா. என் மானத்தை வாங்கற. உன்னைய…” என்று துரத்த, அவளோ ஓட முயன்றாள். அவளை இழுத்து “வண்டில ஏறு” என்று அதட்டினான்.

இரவு மட்டன் பிரியானி மஹா முன் நீட்ட அவளோ முட்டை கண்ணை விரித்து வாங்கி உண்ண ஆரம்பித்தாள். ஜனகராஜூம் சாப்பிட்டு கிளம்ப குரு இரத்த பொரியலை சட்டியில் மிச்சம் வைக்காமல் உண்டு முடித்தான்.

இருவரும் காலார நடந்து எதிரே இருந்த கடலின் கரைக்கு வந்தார்கள்.

அங்கே குமாரின் படகு இருக்க, அங்கே சாய்ந்தமர்ந்தனர். இங்கே வழக்கமாக சில நேரம் வருவார்கள். ஓட்டு வீட்டின் புழுக்கம் அதிகரித்தால், கடலில் பாய் விரித்துப்படுப்பது இங்குள்ள குடிசை வாசிகளின் வழக்கம் தான்.

மஹா குருவின் தோளில் சாய்ந்து கொள்ள, அவனோ மஹாவின் முன் ப்ரூட் சாலேட் எடுத்து நீட்டினான்.

“லவ் யூ டா குருவி தலை.” என்று வாங்கி ருசிக்க, குருவின் உதட்டில் முறுவல் கூடியது.

ரதிதேவியைப் பற்றி இனி பேசுவதாக மஹா எண்ணம் இல்லை. குருவை பொறுத்தவரை அவன் எப்போவோ பேசக்கூடாதென முடிவெடுத்திருந்தான்.

மஹா காதலை முன்னே அவமதித்து இருந்தான். தற்போது அவள் காதல் மட்டுமே தன்னை உயிர்போடு வைத்திருப்பதை உணர்ந்தான்.

ஒரு வருடம் சிறை கைதியாக அடுத்தத் தேசத்தில் இருந்தானென்றால், 2020 முழுவதும் தன் வீட்டில் காலடி எடுத்து வைக்க, தன்னைச் சேரில் அமர வைத்து குளிப்பாட்டி, தனிமையாகத் தாயில்லாமல் தவித்தவனின் அருகே வந்து உணவுவூட்டினாள்.

அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் தான் இறந்து விட்டதாக எண்ணியிருக்க மஹா என் குரு சாகலை வருவான் என்றதாகச் சொல்வாள் என அறிந்தும், தந்தை வேறொரு திருமணம் என்று தூக்குமாட்டி மிரட்டும் நேரத்திலும், அவளும் அதே போல மிரட்டி குருவுக்காகத் திருமணம் வேண்டாமென உறுதியாக இருந்ததை எடுத்துரைத்தனர்.

தான் இல்லை என்ற கணம் மஹாவின் வேதனை, கவலை, நண்பர்கள் கூற கூற கேட்டறிந்தவனின் உள்ளமோ அவளின் உண்மை காதலுக்கு தான் இதுவரை தகுதியில்லாமல் இருக்கலாம். இனி அவள் காதலுக்குத் தகுதியானவனாக மாற முயன்றான்.

அவனின் தேவையை அறிந்தவளாக அடிக்கடி துணையாக வந்து துணைவியாகவே மாறி போனாள்.

பழச்சாலட்டை மிச்சமின்றிச் சப்பு கொட்டி உண்டவளை கண்டான். காலி கோப்பையை வழித்துக் கொண்டிருந்தவளை மணலில் சரித்து மேலே படர்ந்து இதழில் முத்தமிட்டான்.

மஹாவோ அவனின் சீண்டலை ரசித்து கழுத்தில் மாலையாகக் கோர்த்து கொண்டாள்.

-சுபம்.
-பிரவீணா தங்கராஜ்.

சென்னையில் பிறந்து வளர்ந்த பொண்ணு. சென்னை பாஷை ஓரளவு வந்துச்சா. குறுநாவல். இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருந்தா சொல்லுங்க நன்றி.

1 thought on “நதி தேடும் பெளவம்-7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *