புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-11

நீயின்றி வாழ்வேது-11

பொன்னுருக்குதல் செய்வதால் இருவீட்டாரும் வந்து குழுமியிருந்தனர்.

தன்னவளின் வருகையில்லையே என்று தவித்தவனாய் விஷாகன் இருக்க, வேலைகளை இழுத்து போட்டு உதயகுமார் பழைய உற்சாகத்தோடு திரிந்தார்.

எந்த இடத்திலும் ஒரு பெயரை சம்பாரித்து வைத்திருந்தவருக்கு ‘லேசான தவறென’ அலட்சியப்படுத்திட உதவியது.

அதுவும் விஷாகன் திருமணத்திற்கு எங்குச் சென்றாலும் ‘உங்களுக்கு இல்லாததா உதயகுமார். நாம அப்படியா பழகியிருக்கோம்.’ என்ற மரியாதை கிடைக்க மகனின் ஆதிக்கம் கண்டு தான் லேசாய் பயந்து விட்டோமோயென எண்ணம் வந்துவிட்டது.

அதிலும் ஊர்க்காரர்கள் பொன்னுருக்கல் நிகழ்ச்சிக்கு வந்து குவிந்திருந்ததே பெரிய விழாவாக இருந்தது.

விருஷாலி தந்தை சங்கரன், மகள் வாழும் இடத்தில் மதுவை அருந்திவிட்டு உலாவவும் அன்னத்திற்குத் தான் சங்கோஜமாகப் போனது.

செம்பருத்தி அம்மாச்சி விருஷாலியின் துணைக்கு என்று ஊரிலேயே இருக்க, விவேக் வந்து தந்தையைத் திட்டி பார்த்தான். தற்போது தான் வளரும் ஆண்மகன் என்பதாலோ என்னவோ அவன் சொல்லுக்கு அங்கே சங்கரன் செவி சாய்க்காமல் திரிந்தார்.

விஷாகனுக்கோ ‘இதென்னடா கூத்து’ என்றிருந்தது. தோழன் தனுஷூம் ரவியும் சங்கரனை தனியாகத் தள்ளி சென்றார்கள்.

உதயகுமாரோ அந்தக் கணம், விஷாகனை எள்ளலான பார்வையிட்டு ‘ஊர்ல அத்தனை ஆண்களும் இப்படித் தான் ஏதாவது தவறு செய்வான். அப்படிச் செய்தால் தான் அவன் ஆண்மகன்’ எனக் கூறாமல் கூறியது.

உறவுகள் முன் தந்தையை அதட்டவா முடியும்? தன்னவளின் கழுத்தில் கட்டும் புனித தாலிக்கு மரியாதை கொடுக்கும் பொருட்டு மௌவுனமானான்.

விவேக் வந்து தோளை சுரண்டி, “மன்னிச்சிடுங்க மச்சான். அப்பா சரியான தண்ணி வண்டி. இங்க பண்ண மாட்டாருனு நம்பினேன். ஆனா நம்பிக்கையைப் பொய்யாக்கிட்டார்.

இதை வச்சி தங்கச்சியை லேசா நினைக்காதிங்க. அவளுக்குச் செய்ய வேண்டியதை நான் கொஞ்சம் கொஞ்சமா செய்துடுவேன்.” என்று கண்ணீர் மல்க இறைஞ்சினான்.

சின்ன வயது… இவனுக்கு இருக்கும் அறிவு அந்தக் ‘குடிமகனுக்கு’ இல்லையே. மகனை கண்டிக்கும் இடத்தில் இருக்கும் தந்தையே தவறு செய்தால் மகன் தறுதலையாக மாட்டானா?

எண்ணங்கள் ஏதேதோ நெஞ்சில் அழுத்த, “அட விடுடா… அவரைப் பத்தி முன்னவே தெரியும். உனக்கு இந்தப் பழக்கமில்லையே… அப்பா தப்பு செய்தா நாமலும் செய்யணும்னு அவசியமில்லை.” என்று அறிவுறுத்தினான்.

“எனக்குப் பழக்கமில்லை மச்சான்.” என்றவன் அக்கம் பக்கம் பார்த்து “மச்சான்… விருஷாலி கூடப் பேச ஆசைப்பட்டிங்க. எங்கம்மாச்சி விடலை. இது எங்க விருஷாலி போட்டோ. முன்ன காலேஜிக்குப் பார்ம் பில் பண்ணறதுக்கு எடுத்துச்சுப் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. அன்னைக்குக் கட்டாயப்படுத்தி முழுச் சைஸ் போட்டோ எடுக்கச் சொன்னேன். அதுவும் இதுல இருக்கு” என்று சட்டை பாக்கெட்டிலிருந்து கவர் ஒன்றை எடுத்து கொடுக்க, விஷாகனோ இதை எதிர்பார்க்கவில்லை.

விவேக்கை தனியாக அழைத்து வந்து பேசியதால், கொடுத்த புகைப்படத்தை வாங்கி ஆசையாகப் பார்த்தான்.

ஒடிசலான தேகத்தில், இளஞ்சிவப்புச் சுடிதாரில், நிறமாய்த் தெரிந்தாள். கூடுதலாகக் கண்மை வைத்திருப்பாள் போல. கருவண்டு விழிகளை அழகாய்க் காட்டியது.

சமீபத்தில் எடுத்தவை என்பதால் ஏதோ நேரிலேயே அவள் நிற்பது போன்ற மாயத்தில் மிதந்தான்.

‘பொன்னுருக்கறதுக்கு வந்துட்டேன் பார்த்தியா’ என்று தலை சாய்த்து கேட்டவளாக எதிரில் தோன்றினாள்.

கனவா நனவா என்றிருக்க, பொன்னை உருக்கி அதற்குண்டான வேலையில் இல்லமே மகிழ்ச்சியில் திளைத்தது.

விவேக்கிடம் போட்டோ தந்ததற்கு நன்றி உரைத்தான்.

தனுஷூம் ரவியும் ஆளாளுக்கு விஷாகனை கேலியில் இறங்கிட, அன்றைய நாட்கள் முழுவதும் விஷாகன் சந்தோஷத்தில் மிதந்தான்.

அந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரெட்டு உதயகுமார் கள்ளத்தனமாய் அபர்ணாவை பார்த்து விட்டு வந்தார்.

அவருக்கு விஷாகனுக்குத் தெரியாமல் சென்று விட்டோமென்ற மிதப்பு இருந்தது. ஆனால் பொன்னுருக்க வந்த ஆட்கள் வீட்டில் நிரம்பி வழிய எதுவும் செய்து தன் திருமணத்தைத் தடைப்படாமல் விஷாகன் தந்தையை விட்டுப் பிடித்தான்.

பொன்னுருக்கல் நிகழ்ச்சி முடிந்ததும் ஊரிலிருந்து வந்தவர்களைப் பக்கத்திலிருக்கும் பெரிய ஷாபிங் மாலிற்கு அழைத்துச் சென்று ஊர்சுற்றிக் காட்டினான்.

ஷாபிங் மாலில் நெயில் பாலிஷ் மற்றும் சுடிதாரை வாங்கியவன் விவேக்கிடம் கொடுத்து விருஷாலியிடம் கொடுக்க நீட்டினான்.

அவனோ “அச்சோ… வேண்டாம் மச்சான். நான் உங்களிடம் வாங்கியதா தெரிந்தா அம்மாச்சி திட்டும்.” என்று வாங்க மறுத்தான்.

“அட நீ வாங்கிட்டு வந்ததா சொல்லு. என்னை ஏன் இழுக்கற, போன் தான் பேச விடலை.” என்று கூறியதும் விஷாகனின் எண்ணம் புரிந்தவனாகத் தலையாட்டினான்.

அடுத்த நாள் உறவினர்கள் கிளம்பவும், தனுஷ் ரவி விஷாகனை கிண்டல் செய்து பேச, விஷாகனோ “போங்கடா.. ஒரு போன் கால் கூட அவளிடம் பேச முடியலை. நிச்சயம் நடக்கும் போன் கிப்டா தரலாம்னு பார்த்தேன். நிச்சயம் இல்லாம நேரா கல்யாணம் வச்சிட்டாங்க.” என்று வருந்தினான்.

“மச்சி தங்கச்சியிடம் கிப்ட் கொடுக்கணும்னா நிச்சயம் நடக்கறப்ப தான் கொடுக்கணுமா டா. நீயா போனை வாங்கிக் கொரியர் பண்ணு.” என்று ரவி ஐடியா தந்தான்.

விஷாகனோ ஆசையாய் உடனே ஸாம்ஸங் போன் கடைக்குச் சென்று samsung galaxy A23 போனை இருபதாயிரத்திற்கு வாங்கி அவனை செல்பி எடுத்து பதிய வைத்தான்.

அதனைத் தந்தையின் கொரியர் அலுவலகம் சென்று அனுப்பலாமென, போனை அட்டைப்பெட்டியிலிருந்து எடுத்து பார்த்தபடி நடந்து வந்தான்.

கொரியர் அலுவலகத்திற்குள் “இப்ப தானடா ஆண்டு விழா முடிஞ்சுது. அதுக்குள்ள டூரா? அபர்ணா குட்டி எங்க போறிங்க?” என்று கொஞ்சும் குரலில் உதயகுமார் பேச்சு கேட்க, “வண்டலூர் ஜூ அப்பா. அங்க மிருகம் எல்லாம் இருக்குமாம். சிங்கம், புலி, யானை,” என்று பேச்சு கேட்க தந்தை மடியில் செல்லம் கொஞ்சி அபர்ணா இருக்கவும், கையிலிருந்த புதுப் போனை, தூக்கி எறிந்தான்.

அந்தச் சத்தத்தில் அபர்ணா பேச்சை நிறுத்தினாள்.

விஷாகனை கண்டு நடுங்கி, “அப்பா.. இவர் தான் அன்னைக்கு அம்மாவை திட்டினார். எனக்கு இவரைப் பார்க்க பயமா இருக்கு” என்று உதயகுமாரின் சட்டையில் முகம் புதைத்தாள் அபர்ணா.

விஷாகனோ “ஏன்யா அறிவு என்ன சுத்தமா வழிச்சி துடைச்சிட்டியா. அவ்ளோ அடிச்சியும் மரமண்டையில எதுவும் உறைக்கலையே.” என்றவன் அங்கிருந்த சாய்விருக்கையைத் தூக்கி அபர்ணா மீது போட வந்தான்.

“விஷாகா…. விஷாகா… குழந்தையை ஒன்னும் பண்ணிடாதடா. பச்ச குழந்தை டா. நானே சங்கீதாவுக்குத் தெரியாம பிள்ளையைக் கூட்டிட்டு வந்தேன்.

பிள்ளையை ஒன்னும் பண்ணாத டா. உன் கல்யாணம் முடிஞ்சதும் எல்லாத்தையும் நிறுத்திடறேன். என் மகளை அடிக்காதே.” என்று முன் வந்து மண்டியிட்டு கெஞ்சினார்.

அபர்ணாவோ கோபமாய்ச் சேரை தூக்கி நிற்கும் மனிதனின் முன் அப்பா மண்டியிட்டு இறைஞ்சிட, அபர்ணா கண்களை உருட்டி மிரண்டிருந்தாள்.

சேரை அப்படியே மற்றொரு பக்கம் தூக்கி போட்டு முடிக்க, “அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு போய் ஸ்கூல்ல விடு. இல்லை… ” என்று பற்கடித்தபடி பேச விஜயகுமாரோ அபர்ணாவின் புத்தகப்பையை எடுத்து மகளை அணைத்துப் பள்ளியில் விட ஓடினார்.

அரைமணி நேரம் தன்னைச் சமன் செய்ய முடியாமல், அங்கிருந்த தண்ணீர் பாட்டிலால் முகத்தில் அடித்துக் கழுவினான்.

சாய்விருக்கையில் அமர, அந்தப் பிஞ்சு முகம் கண்முன் வந்து இம்சை படுத்த, எழுந்தான். காலில் புதுப் போன் உடைந்து சிதறலாய்க் தட்டுப்பட்டு கிடந்தது.

தற்போது சினம் குறைந்து இருபதாயிரம் போன் போனதே என்று கவலைக்கொண்டான்.
அடுத்த நொடி இவரால வாழ்க்கையே போகுது என்ற கோபம் வர, விருஷாலிக்கு வாங்கிய போனை பரிசாக அனுப்ப முடியாமல் வீட்டுக்கு வந்தான்.

தந்தை கொரியர் அலுவலகம் வந்து கதவு மூடியிருக்கவும் வீட்டுக்கு வந்தார்.

சுகன்யா அப்பொழுது தான் வெளியே ஜாக்கெட் தைத்து இருந்ததை வாங்க சென்றிருந்தார்.

“உன் கல்யாணம் முடியவும் மொத்தமா நிறுத்திடறேன். குழந்தைக்கு உடனே நான் வரமாட்டேன்னு மனசுல பதிய கஷ்டப்படும். கொஞ்சம் கொஞ்சமா வராம தவிர்த்து, பிறகு பேசி புரிய வச்சா, குழந்தை கொஞ்சமாவது ஏற்றுப்பா.” என்று பேசினார்.

“உன்னை யாரு இங்க வரச்சொன்னா. நான் விருஷாலியை கல்யாணம் பண்ணிக்கறேன். நீ இங்க இருக்க வேண்டாம். கிளம்பு… அந்த வீட்டுக்கே போய்த் தொலை. எனக்கு அப்பன் வேண்டாம். மானம் மரியாதை வேண்டாம்.” என்று விரட்ட பார்த்துக் கழுத்தில் கை வைத்து வெளியே தள்ள முயன்றான்.

“உன் கல்யாணம் முடிஞ்சதும் மொத்தமா போறேன். அதுவரை இங்க இருக்க அனுமதி கொடு” என்று வீம்பாக நின்றார்.

விஷாகனுக்கு இனியும் தந்தை வேண்டுமா.? தன் திருமணத்திற்கு அவர் முக்கியமா என்று யோசித்து, “விருஷாலி அப்பா குடிகாரன், அப்படியிருக்க நீ ஒரு பொண்ணோட வாழறேன்னு தெரிந்தாலும் என் கல்யாணம் நடக்கும். நீ தேவையில்லை.” என்று கத்தினான்.

“ம்… நான் இல்லைனா உனக்கு யாரு பொண்ணு தருவா. என் தங்கச்சி அன்னம் உனக்கு விருஷாலியை கட்டிதர மாட்டா.

உதயகுமார் மகன் என்ற காரணம் தான் எந்தத் தடையும் இல்லாம உனக்குக் கல்யாணம் சுமூகமா நடக்குது.” என்று வார்த்தையை விட்டார். மகளை விட்டுவிட்டு சங்கரனை போல தண்ணி அடித்து விட்டு வந்திருந்தார்.

உதயகுமாருக்கு மகன் விஷாகனுக்கு விருஷாலியை மிகவும் பிடித்திருப்பதைக் கண்கூடாகப் பார்த்ததால், இதுவரை கணவன் என்ற அடையாளத்தால் இருக்க நினைத்தவர், அதற்கு மகன் அதிகப்படியாகவே மட்டம் தட்டியதும், “நான் தேவையில்லைனா என் வீட்டு உறவுல ஏன் பொண்ணு எடுக்கற, உன்னை நம்பி இங்க பொண்ணு இல்லை. பத்துப் பைசா கடன் கூடக் கொடுக்க மாட்டாங்க.” என்று பேச பேச விஷாகன் தன்மானம் அதிகமாகவே அங்கே அடிபட்டது.

“உன்னை வீட்டை விட்டு துரத்திட்டு கூட என்னால கல்யாணத்தை நடத்த முடியும் பார்க்கறியா?” என்று தன் தந்தையிடம் சாவலிட்டு முடித்தான் விஷாகன்.

“பண்ணு… பண்ணி பாரு… நான் இரண்டு நாள் இங்க தலை வைக்கலை. உங்கம்மாவை சமாளி. நான் சங்கீதா வீட்டைக்குப் போறேன். என் மகள் அபர்ணாவை பார்க்க.

நான் வேண்டாம்னு…. அப்பானு கூடப் பார்க்காம இழுத்து போட்டு அடிக்கிறலடா. அப்பா இல்லாம கல்யாணம் பண்ணு.” என்று சவாலிட்டு அங்கேயே சரிந்தார்.

லேசாய்க் குடித்திருப்பது விஷாகனுக்குத் தற்போது தான் புரிந்தது. இல்லையேல் இவருக்கு இந்தத் தைரியம் வருமா? எல்லாம் உள்ளே சென்ற மதுவினால் தைரியசாலிமாகப் பேசுகின்றார் என அலட்சியப்படுத்தினான்.

அவருக்கு இந்த மது பழக்கம் இல்லை. விருஷாலி தந்தை வந்து நடத்திய ஆட்டத்தால் உதயகுமார் புதிதாய் கற்றுக் கொண்டார்.

போதை தெளிந்து நிற்கட்டும் அப்பறம் இருக்கு என்று பற்களைக் கடித்து நடக்க, உதயகுமார் பேசிய வார்த்தைகள் கால் முளைத்து விஷாகனை தொடர்ந்தது.

போதையில் பேசினாலும் அவர் பேசிய வார்த்தை வெளியே வந்துவிட்டதே. அது விஷாகன் மனதை ரணமாக அறுத்தது.

அரைமணி நேரம் ‘விருஷாலியை மணக்க வேண்டுமா?’ என்று முடிவு செய்ய அவனுக்கு அவளைப் பிரிய மனமில்லை.

முடிவு எடுத்தவனாக அவளுக்கு அழைத்துக் கேட்டிடும் எண்ணத்தில் இருந்தான்.

விவேகிற்குப் போன் போட்ட பொழுது கூடப் படித்த பசங்க டூர் வந்ததாகக் கூறவும், தற்போது பேச முடியாதே மச்சான் என்றதும் விஷாகனுக்குக் கண்ணில் கிடைப்பது எல்லாம் தூக்கி எறியும் அளவிற்கு வெறியானது.

உடனடியாகப் போனை வாங்கவும் மனம் வராது, உனக்கு இருபதாயிரம் பணம் அனுப்பறேன் ஊருக்குப் போனதும் முதல் வேலையா விருஷாலியை கூட்டிட்டு ஒரு நல்ல போன் வாங்கிக் கொடு. உன்னை மாடியேட்டரா வச்சி பேச முடியலை.

ஏன்டா வீட்டுக்கு பேசணும்னா எப்படித் தான் உடனே பேசறது. வீட்ல ஒரு போன் வச்சிக்க மாட்டிங்க. இன்னுமா டா வளராம இருக்கிங்க” என்று கடுப்போடு வறுத்தெடுத்தான்.

“சாரி… சாரி மச்சான். எனக்கே இப்ப தான் வேலை கிடைச்சது. அப்பா இதுவரை கொண்டு வர்ற பணம் வீட்டுக்கு சரியா போகும். இப்ப தான் நான் பணம் சம்பாதிக்கறேன். விருஷாலி வேற விட்ட படிப்பை இப்ப படிக்கப் போகுதா… போன் எங்களுக்கு அத்தியாவசியமா முன்ன தோணலை. ஊருக்குப் போனதும் வாங்கித் தர்றேன் மச்சான்.” என்று விஷாகனின் காட்டுத்தனமான கத்தலுக்குத் தன் நிலையை விளக்கினான் விவேக்.

“சரிடா… ஏதாவது பத்தலைனா போன் பண்ணு” என்று நிதானமாய் பேசி அணைத்தான். தந்தை மீதான கோபத்தை விவேக்கிடம் காட்டிவிட்டோமே என்று கவலை அழுத்தியது.

-தொடரும்.
பிரவீணா தங்கராஜ்.






13 thoughts on “நீயின்றி வாழ்வேது-11”

  1. Vishakan kovam artham ullathu than but kovatha avan mela kamika kudathu la avan pavam . Aana intha udhaya kumar ku romba tha ipo ivar illana mrg nadakathu nu pesuraru ivar sonthama athanala koduka matangala mrg pani pathuka porathu un paiyan avan nalla pathupan shali ah.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!