புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

நீயின்றி வாழ்வேது-20

நீயின்றி வாழ்வேது-20

மதியம் கறிச்சோறே நிறைய இருக்கவும் அதனைத் தனிதனியாக உணவு பெட்டியில் வைத்து விவேக் சாப்பிட தோதுவாய் கட்டி வைத்திருக்க, பேருந்தில் பயணிக்கும் போது ஆளுக்கொரு உணவு பொட்டலத்தைக் கொடுத்தான்.

அபர்ணா உறங்கவும் விவேக் விஷாகன் அருகே காதில் “பாப்பா தூங்குதே மச்சான்” என்றான். “எழுப்பிக் கொடு விவேக்” என்றான்.

அபர்ணாவை தட்டி எழுப்பி உணவை தரவும், அவளோ கண்ணைக் கசக்கி “வேண்டாம்மா” என்று உறக்கத்திலேயே மறுத்தாள்.

“பாப்பா சாப்பிட்டு தூங்கு” என்று கன்னம் தட்ட, “எனக்கு வேண்டாம்” என்று உறங்கத்தில் கண் திறவாமல் பேசினாள்.

உதயகுமாரோ உணர்ச்சி வசப்பட்டு எழுந்து விட, விஷாகன் வேகதடை போல வழிமறைத்தான்.

“நீங்க போனா தூக்க கலக்கத்துல அப்பானு உளறிடுவா. அம்மா…நீங்க போய் ஊட்டிவிட்டுடுங்க” என்றான்.

சுகன்யாவுக்கு லேசாய் கோபம் பொங்கியது. “நான் ஏன்டா ஊட்டணும்.” என்று மறுத்தார்.

பேருந்தில் கடைசியாக அமர்ந்ததில் இதுவொரு வசதி. விருஷாலி படத்தைக் கண்டு சாப்பிடவும், உதயகுமார், சுகன்யா விஷாகன் மூவரும் கமுக்கமாய் ரகசியம் போலச் சண்டையிட்டனர்.

விஷாகன் பொறுமை பறந்து, “ஏன் தப்பு செய்தவருக்கு அன்னைக்கு இட்லி ஊட்டிவிட்டிங்க. ஒரு தப்பும் பண்ணாத இந்தச் சின்னப் பிள்ளைக்கு ஊட்டி விடமாட்டிங்களா?

இவர் என்ன பண்ணினாலும் தலையாட்டிட்டு வீட்ல இருந்ததால தான் இந்த அவஸ்தை. தப்பே செய்துட்டு வந்தாலும் ஹாஸ்பிடல்ல பார்த்து பார்த்து கவனிச்சிங்க. அன்னைக்கே முகம் திருப்பிட்டு டிவோர்ஸ் கொடுத்திருக்க வேண்டியது தானே.

உங்களுக்குத் தப்பே செய்தாலும் புருஷன் வேண்டும்.” என்று பேசவும் சுகன்யா வாயடைத்து விட்டார்.

“நீயே இப்படிப் பேசினா எப்படிடா?” என்று அழத்துவங்கவும், “அம்மா..ம்மா.. ம்மா.. அந்தக் குழந்தை அம்மாவை இழந்துட்டு இருக்காமா. அதுக்கு நாம நல்லது செய்யறோமோ இல்லையோ. முதல்ல வயிறார சோறு போடணும்.” என்றதும் சுகன்யா மகனின் நியாயமான பேச்சில் கண்ணைத் துடைத்து அபர்ணாவிடம் சென்றார்.

“அபர்ணா.. அபர்ணா… இங்க பாரு… பாப்பா.” என்று கன்னம் தட்டி எழுப்ப, சுகன்யா என்றதும் திடுக்கென விழித்தாள்.

“சாப்பிடாம படுத்தா நடுராத்திரி பசிக்கும். கொஞ்சம் போலச் சாப்பிடு” என்று ஊட்டிவிட்டார்.

சுகன்யா என்றதும் மொத்த உறக்கமும் தொலைந்து அபர்ணா எழுந்து அமர்ந்தாள்.
ஊட்டிவிடவும் மறுக்க வழியின்றி ‘ஆ’வாங்கினாள். முதலில் சக்களத்தியின் மகளெனப் பார்த்து ஊட்டிய சுகன்யா, அபர்ணாவின் குழந்தை முகத்தில் ‘தாயற்ற பெண்’ என்று பாவப்பட்டது.

உதயகுமாரோ என்ன நினைத்தாரோ சட்டென மகனின் காலில் விழுந்துவிட்டார்.

“அப்பா…” என்று மற்றவர்கள் பார்த்து விட்டார்களாயென நாலாப்பக்கமும் திரும்பினான்.

விவேக் அப்பொழுது தான் பார்த்துத் திரும்பினான். விஷாகன் தந்தையைப் பிடித்து எழுந்திருக்க வைக்கும் நேரம் சங்கரன் பார்த்தார்.
அவருக்கு விஷாகன் உதயகுமார் காலில் விழுகின்றான் எனத் தவறாய் நினைத்தார்.

விருஷாலி திரும்பவும் விஷாகன் லேசாய் புன்னகைத்து வீழ்த்தி அருகில் அமர்ந்தான்.

“நான் எல்லாம் இந்த மாதிரி அம்மா இல்லாம எங்கயும் போகமாட்டேன். இந்தப் பாப்பா எப்படித் தான் நாலு நாள் அப்பா அம்மாவை விட்டு பிரிஞ்சி இங்க இருக்கா.

இப்பவும் காலேஜை தவிர்த்து தனியா ஊர்லயிருந்து எங்கயும் போனதில்லை. டவுனுக்குக் கூட..” என்று விருஷாலி கூறவும், “டோண்ட் வொர்ரி ஷாலிம்மா. சென்னை வந்ததும் உன்னை மொத்தமா மாத்தறேன். நீயே தனியா உங்க அம்மா வீட்டுக்கு வர்ற அளவு ட்ரையின் பண்ணறேன் பாரு.” என்று அவளிடம் கூறினான்.

“அச்சச்சோ.. நானாவது தனியா சென்னைலயிருந்து ஊருக்குத் தனியா போறதாவது. நீங்க வரலைனா நான் வீட்ல இருந்து வெளிவாசல்ல கூடக் காலை எடுத்து வைக்க மாட்டேன் அத்தான்.” என்று இப்பவே மறுத்தாள்.

“உன்னை மச்சான், அத்தான்னு கூப்பிட சொன்னதும் பழைய லைப் ஸ்டெயில்லயே இருக்க. எல்லாத்தையும் மாத்தணும்.

முதல்ல அங்க போனதும் உனக்குப் புதுசா ஸ்மார்ட் போன் வாங்கணும். பிறகு நீ இங்க பஸ்ட் இயர் மட்டும் எழுதிட்ட. லீவுல செகண்ட் இயர் அங்க வேற காலேஜ்ல சேர்த்து விடமும். பிறகு சென்னையில முக்கியமான கோவில், ஷாபிங்மால், எண்டர்டெயின்மெண்ட் பிளேஸ் எல்லாத்துக்கும் கூட்டிட்டு போய் வரணும்.

அங்கயெல்லாம் தனியா நீயே போற அளவுக்கு உனக்குப் போல்டா மாத்தி..” என்று அடுக்கி கொண்டே போக, “கண்ணைத் திறந்துட்டே கனவு காணுங்க, எங்க அம்மாச்சி என்னைத் தலையில தட்டி தட்டியே வளர்த்துடுச்சு. நானா மாறணும்னாலும் அது முடியாது. என் சுபாவமா மாறிடுச்சு.” என்று பேசினாள்.

“அவ அவ ப்ரீடம் தந்தா சந்தோஷப்படுவாங்க. நீயென்ன நான் இப்படியே இருந்துக்கறேன்னு அடம் பண்ணற. முன்னயும் இப்படித் தான் போன் வாங்கித் தர சொல்லி விவேக்கிடம் பணத்தைத் தந்தா போன் வேண்டாம்னு சொல்லிட்டியாம். வாய் எல்லாம் நல்லா தான் பேசற. அறிவும் இருக்கு. ஆனா அதென்ன தனியா இருக்கவே தெரியலை. யாராவது கூடவேயிருப்பாங்களா?” என்று அதட்டினான்.

“முதல்ல சாப்பிடுங்க” என்று விருஷாலி சாப்பாட்டுப் பொட்டலத்தை நீட்டவும், அவளருகே நெருங்கி அமர்ந்து கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டிவிரலால் உதட்டை அழுத்தி பிடித்து, “என்னடி என்னையே அதட்டற?” என்று கேட்டதும் பட்டாம்பூச்சி விழியாகப் படபடத்து யாரும் தன்னைக் காண்கின்றனரா என்று தவித்துப் பார்த்தாள்.

“ஷாலிக்கு… பேசறது எல்லாம் தயக்கமில்லாம வருது. இப்ப பேசு.” என்று சில்மிஷம் செய்ய “விடுங்க அத்தான்” என்று பதறினாள்.

“அத்தான் பொத்தான் வேண்டாம். மச்சானும் வேண்டாம். வேற வேற வேண்டும். நீ புத்திசாலியா இருந்தா எனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு பெயரை வச்சி கூப்பிடற. என்ன புரிதா.?” என்று கேட்டான்.

அவளோ காதில் வாங்கிக் கொள்ளாமல் கறிச்சோறை தான் திண்றுக் கொண்டிருந்தாள்.

“சிக்கன் வறுவல் வேண்டுமா?” என்று கேட்டான். “ம்… லெக்பீஸ்” என்று கேட்க, “அடிங்க…. நான் என்ன பேசறேன். திங்கறதுல இருக்க.” என்று இடையைக் கிள்ள, அவள் துள்ள, அவள் மேலே சாதம் சிந்தியது.

“நல்ல சேலை… இப்ப பாருங்க.. எண்ணெய் கறையா இருக்கப் போகுது. கையைக் காலை வச்சிக்கிட்டுச் சும்மாயிருக்க மாட்டிங்க” என்று கோபப்பட்டாள்.

“அட மூக்கு சிவக்குது. கோபம் எல்லாம் வருமா. கத்தறதும் கத்தற.. கொஞ்சம் சத்தமா கத்தேன். ஏன் அஸ்கி வாய்ஸில கத்தற?” என்றான் விஷாகன்.

“ஆசை தான்.. எங்கம்மா இப்பவே வண்டியை நிறுத்திட்டு என் அண்ண மகனிடம் வாயாடறியா கழுதைனு என்னைத் திட்டும். எங்கம்மாச்சி அதுக்கும் மேல என்ன பேச்சு பேசின. நான் எல்லாம் ஆறு மாசம் ஆச்சு உங்க தாத்தாவோட முகத்தை நிமிர்ந்து பார்க்கனு பழைய புராணம் பாடும்.
நாலு திட்டு கூட வாங்கிப்பேன். இந்தப் புராணத்தை இழுத்தா ஸப்பா.. காது பஞ்சர் ஆகிடும்.” என்று சிரித்துப் பேசிக்கொண்டே இரவினை கடத்தினார்கள்.

நேற்றைய போதை தேவையென்று மனம் அடம் பிடிக்கப் பேருந்தில் இருந்ததால் மனக்கட்டுப்பாட்டைப் பெற்று கைகளைக் கட்டி உறங்க ஆரம்பித்தார்கள்.

இடையிடையே உறக்கம் தட்டி விஷாகன் விழிக்க, விருஷாலியின் பூமுகம் கண்டு, ‘இந்தளவு தன்னோட இயல்பா பொருந்துவா’னு எதிர்பார்க்கலை.

பேசவே ‘தயக்கமிருக்கும்’ என்று எண்ணினான். ஆனால் நீண்ட காலமாகத் தன்னோடு உறவாடி தன் உள்ளத்தில் குடியிருந்தவள் போலத் தனக்குள் காதல் தாக்கம் ஏற்படுத்தும் அவளை இமைக்காமல் இரவெல்லாம் பார்த்து ரசித்தான்.

செங்கல்பட்டு தாண்டவும் ஓரிடத்தில் வண்டி நிறுத்தப்பட்டுக் காபி, டீ என்று பருக ஆரம்பித்தார்கள்.

விஷாகன் காபி, டீ என்று சுகிர்தனோடு வாங்க சென்று அவனிடமே கொடுத்தனுப்பினான்.

விருஷாலியிடம் “அண்ணி காபி” என்று தன்னை விடச் சிறியவளென்றாலும் மரியாதை நிமித்தமாக அழைத்தான்.

“சுகிர்… அவளுக்குப் பாக்கெட் பால் ஒத்துக்காது. நான் வேற ஏதாவது வாங்கித் தந்துடறேன்.” என்று கூறவும் இரு குடும்பமும் விஷாகன் பேச்சை கேட்டு ஆச்சரியப்பட்டது.

சற்று தள்ளி இளநீர் இருக்கவும், தன்னவளுக்காக இளநீர் வாங்கி அவனே கொண்டு வந்து கொடுத்தான்.

அன்னமோ மகளின் வாழ்வில் இனி எந்தக் கஷ்டமும் இல்லை. இந்தளவு புரிந்து தாங்கும், அண்ணன் மகன் கணவனாக அமைந்துவிட்டானே என்று ஆனந்த கண்ணீர் வடித்தார்.

செம்பருத்தி அம்மாச்சியோ “பாரு விருஷாலி… என் அக்கா பேரன் உன்னைத் தங்க தட்டுல தாங்கறான்.
அதுக்கு ஏத்த மாதிரி நீ தான் மகாலட்சுமியா இருக்கணும். பொண்ணுங்க லட்சுமியா இருக்கற வரை ஆம்பளைங்க தாங்குவாங்க. புரிஞ்சிக்கோ” என்று இனி இந்தக் கட்டை வேக, காலன் அழைப்பிற்குக் காத்திருக்கத் தயாராகிவிட்டார் செம்பருத்தி அம்மாச்சி.

அம்மாச்சி கூறிவிட்டுப் பேருந்தில் ஏறவும், இளநீர் குடித்து விஷாகனையே ஏறிட்டாள்.

அவன் வந்து “குடி” என்றதும் ஸ்ட்ராவில் உறிஞ்ச துவங்கினாள். தன்கால் சட்டையில் ஒய்யாரமாய்க் கையை விட்டு “நானும் டேஸ்ட் பண்ணலாமா?” என்று கேட்கவும், அவன் முன் நீட்டினாள்.

“உங்க அம்மாச்சி பார்க்கலை.” என்று கேலி செய்தான்.

“போங்க” என்று அவனிடம் இளநீரை தந்துவிட்டுப் பேருந்தில் ஏற ஓட்டமெடுத்தாள்.

மீதி இளநீரை குடித்து முடித்துக் குப்பையில் போட்டுவிட்டு ஏறினான்.

இருவரும் இருக்கையில் அமர்ந்தயும் “எங்கம்மாச்சி உங்களை ரொம்பப் புகழுது. என்னைத் தட்டுல தாங்கறீங்களாம்.” என்று கூறினாள்

“நினைச்சி பார்க்கலை ஷாலி. போன் கான்டெக் இல்லையே, பேசி புரிய வைக்க நேரமெடுக்கும். மத்தது எல்லாம் நடக்க ரொம்ப வெயிட் பண்ணணும். சின்னப் பொண்ணு வேற… எப்படி உன்னை அணுகறதுனு கூட ரோம்ப யோசித்தேன். இதுல வீட்டு பிரச்ச…” என்றவன் நிறுத்தினான்.

தொண்டையைச் செருமி தண்ணி வேண்டும் என்றான். அவளும் கைப்பையில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து கொடுக்கவும் பருகினான்.

நீரருந்தி ஓரக்கண்ணால் அவளை நோட்டமிட்டான். மனசாட்சியோ, ‘பல கனவோட உன் கூட வாழ வந்தவள். இன்னிக்கே சொல்லி அவளைக் குழப்பாதே. போதாதுக்கு ஏதோ அப்பா செய்த தவறுக்கு சட்டுனு கல்யாணம் பண்ணி வைக்கிறாங்கனு பேசவா? பொறுமை பொறுமை’ எனத் தனக்குள் கடிவளமிட்டு நிறுத்திக்கொண்டான்.

இதுவரை காதலில் கரைந்த இதயம், சிறுமி அபர்ணாவை பார்த்துப் புன்னகை உதிர்த்தான். அவளோ பால் குடித்துவிட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தாள். சுகன்யாவோ அபர்ணா அருகே அமர்ந்திருக்க உதயகுமாரை ஏறிட்டான்.

‘நேத்துல இருந்தே அபர்ணா கூடத் தான் இருக்கா.’ என்று கூறினார்.

அபர்ணாவை வைத்து நிறைய முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.
ஊரறிய அபர்ணாவை தந்தையின் மகளென்று அறிமுகப்படுத்தி, அவளைத் தாங்களே வளர்ப்பதா? இல்லை யாரிடமும் கூறாமல் அவளைப் படிக்க, போர்டிங் ஸ்கூலுக்கு அனுப்பிடலாமா? பள்ளி கல்லூரி எல்லாம் ஹாஸ்டலில் தங்கி கற்பதற்குப் பணத்தை மட்டும் செலவழிப்போமா?

தாங்களே வளர்ப்பதென்றால் பல இன்னல்களை அவமானங்களைத் தந்தை சுமக்க வேண்டும். ஆனால் தந்தை அன்பு கிடைக்கும். தாயாகச் சுகன்யா ஒரளவு கண்டித்து வழிநடத்தலாம். எதுவானாலும் முடிவெடுத்த பின் அதனை அமுல்படுத்தும் முன் விருஷாலியிடம் பகிர வேண்டும்.

அவள் தன் வீட்டை எப்படி எடுத்து கொள்வாளோ? தன் தந்தைக்காகத் தன்னை மணந்ததாக முன்பு கூறினாளே. இன்று அதே தந்தையின் குணமறிந்தால் தன்னை அவரோடு ஒப்பிடுவாளோ? என்று மெதுவாய் அவளை நோக்கினான்.

வருங்காலத்தில் என்னென்ன நடக்குமென அறியாது, ஜன்னல் வழியாக வெளிகாற்று முகத்தில் பட, வேடிக்கையில் திளைத்தாள் விருஷாலி.

-தொடரும்.
Praveena Thangaraj

15 thoughts on “நீயின்றி வாழ்வேது-20”

  1. Super sis nice epi 👍👌😍 vishagan sonnadhu romba correct pa purushan thappu pannalum gavanikiranga paavam andha kuzhandhi enna pannuchu😢🥺

  2. Nee village ponnu pesi palaga mata ninacha athellam ponnunga ipo smart . Nee ninaikira mari una purinjipa vishakan kavala padatha konjam porumaiya pesi mudivu eduthutu sollu onum agathu

  3. நீயின்றி வாழ்வேது…!
    (அத்தியாயம் – 20)

    உண்மை தானே அப்பன் பண்ண தப்புல, குழந்தை கிட்டப்போய் கோபத்தையோ, விரோதத்தையோ, நம்மோட உணர்வுகளையோ காட்டுறதால என்ன பிரயோஜனம்..?
    சொன்னா மாதிரி, அவரு அவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டு வந்தப்பிறகும் அவருக்கு சேவை செஞ்சதோட
    வாயில வேற ஊட்டிவிட்டு
    இருக்காங்க. இதுல அந்த குழந்தை என்ன தப்பு பண்ணிச்சுன்னு அது கிட்ட
    இம்புட்டு துவேஷத்தை காட்டணும்.

    எனக்கென்னவோ, இந்த விஷயம் விருஷாலிக்கு தெரிஞ்சா கூட, ஷாலி விஷாகனுக்கு தான் சப்போட்டா விப்பான்னு தோணுது.
    ஏன்னா, அவங்கப்பன் பண்ண தப்புக்கு விஷாகனுக்கு எதுக்கு தண்டனை கொடுக்கணும்..?
    அது நியாயமும் இல்லை தானே..? வேணுமின்னா, ஊரு
    அவர் மூஞ்சியில காறித் துப்பட்டும். விஷாகா.. நீ முதல்ல உன் பொண்டாட்டி கிட்ட உண்மையை சொல்லிடு..
    நீ தள்ளிப் போட, போட உனக்குத்தான் அதிக தலைவலியை கொடுக்கும்.
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!