அத்தியாயம்-27
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
பாரதி சரவணன் மீது உள்ள காதலை தெள்ள தெளிவாக உரைத்தப்பின்னும் கூட காதலுக்கு சொந்தக்காரனிடம் அவள் கூறவில்லை. முதலில் தன் தாய் தந்தையர் பதில் தரட்டுமென காத்திருந்தாள்.
  அவளது வாழ்வு அழகான நீரோடை போல இருந்தது.
  அலுவலகத்தில் உதய் அடிக்கடி நட்பாய் சிரிப்பான். அதை தவிர அவன் முகம் கூட காட்டவில்லை.
  அந்த விதத்ததில் உதய்யும் நல்லவனே.
அலுவலகம் வீடு என்று ஓட்டமும் நடையுமாக வாழ்க்கை பயணம் சென்றது பாரதிக்கு.
இதற்கு நடுவே அனிதா “பரீட்சை எல்லாம் முடிஞ்சிடுச்சு அக்கா” என்று போனில் பேசினாள்.
அப்பொழுது நள்ளிரவு மணி எட்டு. அதனால் அனிதாவுடன் சரவணன் விமலா என்று வீட்டில் அங்கிருந்தனர். விமலா அடுப்படியில் இருந்து தோசை வார்த்திருக்க சரவணனும் அனிதாவும் தோசை சாப்பிட்டபடி பாரதியிடம் பேசினார்கள்.
“வெரிகுட்… ரிசல்ட் வர்ற வரை என்ன செய்ய போற?” என்று கேட்டதும் அண்ணனை காண அவனோ தோசையை பிய்த்து வாயில் வைத்தவன் ‘என்ன செய்யணுமாம்?’ என்று உதடு பிரிக்காமல் செய்கையில் கேட்டான்.
அனிதாவோ அண்ணன் சொல்ல வந்ததை புரிந்துக்கொண்டு, “அக்கா… என்ன செய்ய போறன்னா… புரியலை.. என்ன செய்யணும்?” என்று கேட்டாள்.
“நீ காமர்ஸ் குரூப் தானே? ஏதாவது லீவுல கம்பியூட்டர் கோர்ஸ் பண்ணு” என்றாள்.
அனிதா இம்முறையும் அண்ணனை காணவும், கையை மடக்கி கட்டை விரலால் துட்டு எவ்ளோ ஆகுமென்று கேட்க கூறினான்.
”அ…அக்கா.. பீஸ் எவ்ளோ ஆகும்னு அண்ணா கேட்க சொல்லுது” என்றதும் சரவணன் தலையில் அடிக்க, அந்த சப்தம் கேட்டு பாரதி சத்தமில்லாமல் சிரித்தாள்.
“அதெல்லாம் கொஞ்சமா தான் செலவாகும். நான் ஒரு அட்ரஸ் தர்றேன். அங்க போய் ஜாயின் பண்ணு. ஆல்ரெடி அங்க 70% ஸ்காலர்ஷிப் மாதிரி தான். எனக்கு தெரிந்தவர்… நீ படிக்கறன்னா அந்த செலவை நான் பார்த்துக்கறேன். எனக்கு நீ படிச்சா போதும். ஏன்… நீ படிச்சு ஆளானப்பிறகு வேலைக்கு போய் எனக்கு ஒரு சுடிதார் வாங்கி தரமாட்டியா?” என்று ஒப்புக் கொள்ளும் விதமாக கேட்க, அனிதா சரவணனை கண்டாள்.
சரவணனோ யோசித்து சொல்வதாக கூற கூறினான்.
விமலாவோ “ஏன்டா…தோசை வேணுமா வேண்டாமானு நான் கத்திட்டு இருக்கேன். நீ என்ன ஊமை பாஷையா இவளிடம் பேசற. இத்தோட எட்டு தோசை ஆச்சு. ஒழுங்கா சொல்லுடா” என்று கேட்க, அனிதா சிரிக்கவும், மறுபக்கம் பாரதியும் சத்தமாய் சிரித்துவிட்டாள்.
சரவணனோ “எனக்கு போதும்.” என்று கத்த, “என்ன சொல்லிட்டேன் சலிச்சுட்டு பேசறான். எட்டு தோசை போதுமா வேணுமானு தானே கேட்டேன்.” என்று விமலா பேசியபடி சென்றார்.
பாரதியோ “அனிதா… இந்த லீவுல ஹாப்பியா இரு. அட்த சேம் டைம் கம்பியூட்டர் கோர்ஸ் போ. நான் சொல்லி வைக்கறேன். அப்பறம்… உங்கண்ணாவுக்கு எட்டு தோசை போதும்னு எனக்கு தோணலை. ரவுண்டா பத்து தோசையா மாத்திட சொல்லு குட்பை” என்று சட்டென வைத்தாள்.
  அனிதா குறும்புடன் அண்ணனை காண சரவணனும், போனை பிடுங்கியவன் அங்கிருந்த தனியறைக்குள் புகுந்தான். அங்கு சென்றப்பின் அனிதா பார்க்கவில்லை என்றதும் புன்னகை பூத்தான்.
அங்கிருந்த தந்தை கணேஷின் புகைப்படத்தை கண்டான்.
   அதில் துப்புரவு தொழிலாளர் உடையணிந்து மாலை மரியாதையுடன் இருந்த புகைப்படத்தை பார்த்தான். குப்பையில் ஒரு அறுபதாயிரம் பணம் கிடக்க அதை நேர்மையாக போலீஸில் ஒப்படைத்ததற்காக பரிசும் மரியாதையும் அளிக்கும்படியான புகைப்படம் அது.
  கணேஷ் அதை சரவணன் அனிதாவிடம் அடிக்கடி அவரது பெருமையாக எடுத்து சொல்லும் வரலாற்று புகைப்படம். ஆனால் அதை இன்று காணும் போது, சரவணனுக்கு தொண்டை அடைத்தது.
‘என்னயிருந்தாலும் துப்புரவு தொழிலாளியின் மகன். நானுமே அந்த பணியில் தான் இருக்கின்றேன். தன்னால் பாரதி போன்ற பெண்ணிடம் மனதை பறிக்கொடுத்து காதலிக்க கூட முடியவில்லை.’ என்று வாடினான்.
   பாரதி தனக்கு கிடைப்பது இந்த ஜென்மத்தில் இல்லை என்றதும், உயிர் போகும் வலி. நான் ஏன் ஏழையா பிறந்தேன். எங்கப்பா ஏன் இந்த தொழிலில் இருந்தார். நான் உயர மாட்டேனா? உயர்ந்தாலும் இந்த அடையாளம் மாறாதுல. என்னால பாரதியிடம் காதலிக்கறேன்னு கூட சொல்ல முடியாது. அந்தளவு இழிவா, ஏன் என் பிறவி இருக்கணும்.
  மனிதர்களை எல்லாம் ஒன்னுப்போல வீடு, வசதினு படைச்சிருக்க கூடாதா? கேட்டா கற்காலத்தில் அப்படி தான் படைச்சேன். மனுஷபயலுங்க தானேடா நாகரிகம் என்ற பெயர்ல வீடு, பணம், சாதி, மதம், நீ பெரியவனா நான் பெரியவனா என்றெல்லாம் உங்களுக்குள் பிரிவினையை கொண்டா வந்துக்கிட்டிங்கனு சொல்வ.
உனக்கென்ன… ஜாலியா என்னை மாதிரி ஆட்களை படைச்சிட்டு, தலையெழுத்துன்ற பெயர்ல என்னத்தையாவது கிறுக்கிடுவ.
காதல் வலிக்குதுயா… நீ வந்து இந்த வலியை அனுபவிச்சு பாரு.’ என்று மனதோடு புலம்பினான்.
முருகன் உருவத்தில் இருந்த காலண்டர் படமோ, ‘அதெல்லாம் என்ன பேசறியே பேசு’ என்பது போல பவ்யமாய் சிரித்தார்.
இங்கே அவன் மனதின் காயத்திற்கு ஏற்ப மருந்தாய் பாரதி மனதிலும் காதல் அம்பை எய்திவிட்டு வேடிக்கை பார்ப்பதை அவனிடம் இறைவனா சொல்ல முடியும்?
அழகான வலி தான் காதல் அனுபவிக்கட்டும். ஒரு தலை பட்சமாக காதலிப்பது ஒரு சுகம். சிந்தனை முழுக்க ஒருத்தி ஆட்சி செய்வது, மனமெல்லாம் மலர் தூவலில் கமழும்.
இதமான தன்னவளின் நினைப்புடன் கண்ணயர்ந்தான் சரவணா.
நாட்கள் நகர சௌந்திரராஜன் பாரதியை எதுவும் கூறவில்லை. அதே நேரம் அவனை மணக்க பெற்றோராக சம்மதமும் அளிக்கவில்லை. மணிமேகலை தான் சதா சர்வ நேரமும், சௌந்திரராஜனிடம் புலம்புவார். “நம்ம பொண்ணுக்கு இப்படியா நடக்கணும். நான்-நீ-னு போட்டி போட்டுக்கிட்டு கல்யாணம் செய்ய வர்றாங்க. பிரஷாந்த், ரஞ்சித், உதய்னு, ஆனா இவ சரவணனை விரும்பறா. புத்திமதி சொல்லி திருத்தலாம்னு பார்த்தா அவ பேச்சும் நியாயமா இருக்கு.
சம்மதிக்கலாம்னு இப்படியும் தலையாட்ட முடியலை. அவனை வேண்டாம்னு சொல்லி மொத்தமா கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடுவாளோனு பயந்து அப்படியும் தலையாட்ட முடியலை.
  நீங்க என்னடான்னா எதுவும் சொல்லாம இருக்கிங்க. என்ன தான் நினைக்கறிங்க” என்று கணவரிடம் கேட்க, “என்ன சொல்லற மணிமேகலை. அப்பாவா அவ நினைச்சதை நடத்த கூட இருந்திருக்கணும். அப்ப அதை செய்யலை.
  சராசரி மனுஷனா மானம், கௌரவம்னு பயந்து, விஷயத்தை வெளிய தெரியாம பார்த்துக்கணும் என்ற ஒன்று தான் புத்தில இருந்தது.
  பாதிக்கப்பட்ட என் பொண்ணோட நிலைமையும், அவ என்ன மாதிரி முடிவு எடுப்பான்னும் தெரியாம இருந்துட்டேன்.
  
  அவளுக்கு நல்ல அப்பாவா இருக்க மறுவாய்ப்பு தந்திருக்கா. அப்படியிருக்கறப்ப அவ விரும்பற பையனை சேர்த்து வச்சா தான் என்னனு இருக்கு.” என்று கூறவும், மணிமேகலை கணவரிடம் “அந்த பையன் வேற சாதிங்க. நம்ம அந்தஸ்துக்கு இல்லை. போயும் போயும் குப்பை அள்ளுற வேலைங்க. இவ ஐடில கைநிறைய சம்பாதிக்கறா. நாளைப்பின்ன ஊரும் சொந்தபந்தமும் என்ன சொல்லும்” என்று குழப்பமாய் நின்றார்.
  “அந்த ரஞ்சித் உசத்தியான சாதி. அந்தஸ்துல பெரிய இடம். முதலாளி என்ற பதவில தான் அவன் இருப்பான்.
அந்த பிரஷாந்த் நம்ம சாதி நம்ம அந்தஸ்து. ஐடில ஒரு லட்சம் சம்பளம்.
உதய்… அவனும் நல்ல சாதி அந்தஸ்து 75ஆயிரம் சம்பளம். நம்ம பாரதி கூட வேலை பார்க்கறான். இவரை நாம ஒன்னும் சொல்ல முடியாது. நல்லவர் தான்.
என்ன செய்ய காதல் சாதியை பார்க்காது. என் பொண்ணு தாழ்ந்த சாதினு யோசிக்கலை. நல்ல அந்தஸ்துல இருக்கானானு பார்க்கலை. பாரதியை விட சம்பளம் குறைவு அந்த பையனுக்கு. ஆனா…. என் பொண்ணு சந்தோஷமா இருப்பானு மனசு சொல்லுது மணிமேகலை. அவ வாழ்க்கையில ஒரு பொண்ணா படக்கூடாத கஷ்டத்தை அனுபவித்து மேல வந்துட்டா. அந்த பையன் இளமையில் வறுமை ஏழ்மைனு பார்த்து வளர்ந்தவன். தூக்கி விட ஒருத்தர் இருந்தா மேல வருவான்.” என்று கூறி அறைக்கு செல்ல, மணிமேகலையோ ‘இந்த மனுஷன் பொண்ணு காதலுக்கு பச்சை கொடியை கையில வச்சிட்டு தான் இருக்காரா? நான் தான் ஆரேஞ்சு கொடியை வச்சிட்டு சுத்தறேனா?’ என்று முனங்கி செல்ல, பாரதியோ வீட்டு வாசலில் நுழையும் முன் இவர்கள் பேசுவதை செருப்பு வைக்குமிடத்தில் நின்று கேட்டு, ‘அம்மா சிவப்பு கொடியில இல்லை. ஆரேஞ்சு தானே… பச்சை கொடி வர்ற வரை காத்திருப்பேன்.’ என்று பாரதியும் கூறிக் கொண்டாள்.
  ஒரு வழியாக அனிதாவுக்கு ஆட்டம் காண்பித்த பரீட்சை ரிசல்ட் வெளியானது. காலையிலேயே நம்பரை கணினியில் நம்பரை போட்டு மதிப்பெண்ணை பார்வையிட்டு, அனிதாவுக்கு வாழ்த்து சொன்னாள் பாரதி. அலுவலகத்தில் முக்கியமான மீட்டிங் இருப்பதால் மாலையில் வருவதாக கூற, “இல்லைக்கா.. கோவிலுக்கு போறோம்.. வீட்ல இருக்க மாட்டோம். நீங்க வர வேண்டாம். நானா சாக்லேட் எடுத்துட்டு வர்றேன்.” என்றுரைத்தாள். பாரதியும் சரியென்று கூறிவிட்டாள்.
  பாரதி அனிதாவிற்காக பரிசு வேறு வாங்க ஆயத்தமானள்.
இங்கு அனிதா 1106 மதிப்பெண் எடுத்திருந்தாள். சரவணனோ எந்த காலேஜ் சேர்ப்பது என்று குழம்பினான். எப்படியும் பாரதி வழிகாட்டும் விதமாக ஏதாவது கல்லூரி கூறுவாள். ஆனால் அரசாங்க கல்லூரியில் பக்கத்தில் உள்ள சாரதா கலை கல்லூரியில் சேர்ந்துக் கொள்வதாக அனிதாவே முடிவெடுத்தாள்.
மாலை கையில் உயர்தரமான ஸ்வீட் வாங்கி கொண்டு விமலா அனிதாவை பாரதி வீட்டிற்கு வந்திருந்தனர்.
காலையிலேயே அனிதா வந்தா வருவாம்மா. 1106 மார்க் வாங்கியிருக்கா. கிஃப்ட் வேற வாங்கணும். ஈவினிங் வர்றப்ப வாங்கிடுவேன்.’ என்று சொல்லி சென்ற மகள் வீட்டில் வந்ததும் டீயை பருக, காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் திறந்தாள் பாரதி.
அனிதா விமலா இருவரும் வாசலில் நின்றுயிருந்தனர்.
“அம்மா… கரெக்டான வீடு தான்” என்று அனிதா கூறவும். “நல்லவேளை யார் வூட்டு கதவையோ அடிச்சிட்டோம்னு பயந்தேன். அம்மாடி ஸ்வீட்.. அனிதா கொடு” என்று நீட்ட, அனிதாவே பாரதி காலில் விழ போனாள்.
பாரதி அதை அறிந்தவளாக ”ஏய் என்ன பண்ணற.” என்று அதட்டி, ”யாரும் யார் காலிலும் விழக்கூடாது தெரியுமா. நான் எல்லாம் யாரிடமும் ‘ப்ளீஸ்’ என்ற வார்த்தையை கூட யூஸ் பண்ண மாட்டேன்.” என்று கூறியவள் வாசலில் சரவணன் வந்திருக்கின்றானா என்று ஆர்வமாய் பார்த்தாள். ஆனால் அவன் அங்கேயில்லை.
  “அக்கா.. நான் நல்ல மார்க் வாங்குவேன்னு எனக்கு தெரியும் அக்கா. ஆனா எந்த சூழல்ல, எந்த இடத்துல மாற்றம் நிகழ்த்தி உதவியது நீங்க தான் அக்கா.” என்று இனிப்பை நீட்ட அதனை எடுத்து சுவைத்தபடி, “உட்காரு” என்றாள் பாரதி.
அனிதா தயக்கமாய் அமர, விமலாவோ ‘வீடெல்லாம் பெரிய இடத்து பொண்ணுனு சொல்லுதே. இந்த பொண்ணா, நம்மூட்டு வீட்டுக்கு பக்கத்துல ஒரு அழுக்கு வீட்ல இருந்தா? அப்படியென்ன அவசியம்? சரவணனையும் விரும்பலை.’ என்று குழப்பமாய் அமர்ந்தார். விமலாவுக்கு பேச்சு வரவில்லை. மணிமேகலை தான், டீ போட்டுகொண்டே சாப்பிட பழத்தை வெட்டி தட்டில் போட்டு நீட்டினார்.
அனிதா சௌந்திரராஜனுக்கும் மணிமேகலைக்கும் ஸ்வீட்டை தந்தவள், “அக்கா அடுத்து சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில சேரப்போறேன் அக்கா. ஃபார்ம் எல்லாம் வாங்கிட்டேன்.” என்று கூற, “ஏன் நான் பிரைவேட்ல” என்று ஆரம்பித்தவளிடம், “இல்லைக்கா… கவர்மெண்ட் காலேஜ் போதும். படிப்பு எங்க படிச்சா என்னக்கா.” என்று மறுத்தாள். அனிதா பேச்சில் அரசாங்க கல்லூரி தவிர்த்து நான் தனியார் போக மாட்டேன் என்ற எண்ணம் இருந்தது. முக்கிய காரணம் வேறென்ன பாசமிகு சரவணன் கடனாளியாக வேண்டாமென்ற நல்லெண்ணம் தான்.
“தனிச்சு முடிவெடுக்கற அளவுக்கு பக்குவம் வந்துடுச்சா அனிதாவுக்கு” என்று பாரதி கூற, “அப்படிலாம் இல்லைக்கா. அண்ணா கடன் வாங்க கூடாது. அது ஒன்னு தான் எனக்கு வேணும்” என்றவள் அம்மாவை இடித்து “கொடுங்க” என்றாள்.
விமலாவோ சுயநினைவை அடைந்தவராய், “சரவணன் உன்னிடம் ஒரு லட்சம் வாங்கினானே பாரதி. அதை திருப்பி தருவதா சொன்னான். ஆனா அவனால ஒரு லட்சம் புரட்ட முடியலை. இதுல முப்பதாயிரம் சேர்த்து வச்சியிருந்தான். மூனு தவணையா தந்திடுவதா சொல்லி அனுப்பினான். அடுத்த முறை 35 ஆயிரமா இரண்டு முறை தருவதா சொன்னான்.” என்று பணத்தை பிரித்து நீட்டினார்.
பாரதிக்கு முகம் வாட, “எதுக்கு ஆன்ட்டி? எ..என்ன.. அவசரம்?” என்றாள். மனமோ இதை திருப்பி தர வேண்டுமா என்ன? நான் திருப்பி தருவார் என்றா தந்தேன்’ என்று இதயம் வலித்தது.
மனதின் வலியை மறைக்க, “உனக்கொரு கிஃப்ட் கொண்டு வர்றேன்” என்று அறைக்குள் பதுங்கினாள். பீரோவில் சென்று பரிசை எடுத்தவளது கன்னம் தண்ணீரால் வழிய, அவசரமாய் துடைத்தாள்.
அனிதாவுக்கு பரிசு தரும் போது அழக்கூடாது என்று தேற்றிக்கொண்டாள்.
”அனிதா… இது என்னோட கிஃப்ட்” என்று தர, அனிதா வாங்கி பிரித்தாள். அதில் தங்க பிரேஸ்லேட் மின்னியது. பிரேஸ்லேட்டில் தேனும் தேனீயும் இருப்பது போல அழகாக நுணுக்கமாய் வடிவமைத்ததை வாங்கியிருந்தாள்.
“உன் பேரு அனிதால, அதனால ‘ஹனி’ இருக்கணும்னு இந்த பிரேஸ்லேட்டை வாங்கினா.” என்று மணிமேகலை வாய் திறந்தார்.
“முதல் முறையா பரிசு தருவது தங்கம் வெள்ளியா இருந்தா காலத்துக்கும் நிலைச்சி இருக்கும். உனக்கு பிடிச்சிருக்காம்மா?” என்று அபிப்ராயம் கேட்டார் சௌந்திரராஜன்.
“அய்யோ… அண்ணா திட்டும்” என்று அனிதா திருப்பி தர, பாரதியோ “உங்கண்ணாவிடம் பாரதி அக்கா தந்ததா சொல்லு திட்டமாட்டார். அதோட இந்த பணமும் எனக்கு வேண்டாம்.” என்று பாரதியே அனிதா கையில் பிரேஸ்லேட் அணிவித்து பணத்தை திருப்பி தந்தாள்.
விமலா பயந்தபடி, “மன்னிச்சிடும்மா… பணத்தை தரலைன்னா அவன் கத்துவான். இப்பவே இங்க வர்றப்ப ஆயிரம் கண்டிஷன். வளவளனு பேசி பாரதியோட அப்பா அம்மாவை எரிச்சல் படுத்தாதிங்க. தனியா இருக்கறப்ப பணத்தை தந்தா பாரதி வாங்காது. அவங்க அப்பா அம்மா இருக்கறப்ப கொடுங்க. சங்கடப்பட்டு மறுக்க முடியாம வாங்கிக்கும். அப்பறம் அதிகம் பேசாம சீக்கிரமா வாங்கன்னு அந்த பெரிய கேட் -கிட்ட இரண்டு மூனு முறை சொல்லி தான் அனுப்பினான்.” என்று பயந்து திருப்பி நீட்டினார்.
“ச…சர..வணன் வந்திருக்காரா?” என்று கேட்க, “ஆமாம்மா. உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன்ன ஒரு பார்க் இருக்குதே. அங்க உட்கார்ந்துட்டு இருக்கான். எங்களுக்கு தான் வீடு தெரியாதே. அதனால வீடை காட்ட இங்க வரை வந்தான். வீட்டுக்கு வாடானு கூப்பிட்டேன். அவன் தான் ‘இல்லை வரலை’ அதுயிதுனு மறுத்துட்டான். நான் கூட அன்னிக்கு உன்னை அவனோட சம்பந்தப்படுத்தி பேசியதுல சங்கடமா நினைக்கறான். என் தப்பு தான்” என்றதும் பாரதி சோகமானாள்.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Interesting
Super super super super super super super super super
Super
Interesting….
Interesting ah pothu next ena ena nu
Seekirama sollenma
Supersuper. Very intresting sis
மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
(அத்தியாயம் – 27)
பாவம் சரவணன், இன்ப்ரீயாரிட்டி காம்ப்ளக்ஸால உள்ளுக்குள்ளேயே நொந்து நூடூல்ஸ் ஆகிட்டிருக்கான் போல. அரசாங்க உத்யோகம் தான் என்றாலும் வேறெதாவது வேலையா இருந்தால் இந்தளவுக்கு ஃபீல் பண்ணியிருக்க மாட்டானோ என்னவோ..? இப்படி மீசைக்கும் ஆசை, கூழூக்கும் ஆசைன்னு
வாழறது ரொம்பவே கஷ்டம் தான் போல.
விமலா அம்மா கொஞ்சம் பேராசை பிடிச்சவங்களோன்னு நினைச்சேன், ஆனா பாருங்களேன், எத்தனை அழகா முப்பதாயிரம் பணத்தையும், தங்க ப்ரெஸ்லெட்டை பார்த்தும் எந்தவிதமான ஆசையும் இல்லாமல், மகனோட ஒத்த வார்த்தைக்கு பயப்படுறாங்க பாருங்களேன். இதைத்தான் சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைன்னு சொல்லுவாங்களோ…? அவனோட ஒத்த வார்த்தைக்குத் தான் எத்தனை மரியாதை, மதிப்புத் தராங்க பாருங்களேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Super super super super super super super super super super super super super super interesting ❤️❤️❤️
Super sis nice epi semmaiya pogudhu story 👍👌😍 bharadhi saravanan kita kaadhal ah solluvala parpom 🤔
super saravana sonna mariye panatha konjam konjama thrupi koduka ready aeita sikra poi vana kuptu vanthu un manasula irukuratha sollu bharathi yen rendu perum sollama ullukullaye marukitu irukanum
Super
Nice going