Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3

அத்தியாயம்-3

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   சரவணன் அதிகாலை குப்பைகளை அப்புறப்படுத்த, ஆரம்பித்தான்.
சில நேரம் இந்த காலை நேரம் சோர்வாகவும், சில நேரம் தங்கள் போன்றவரின் நிலையை எண்ணி கடப்பான்.

  இன்று ஏதோ உற்சாகம் தொற்றியது போல வேலையில் சுறுசுறுப்பு.
   குடலை புடுங்கும் பழைய ப்ரியாணியை அப்படியே போட்டு வைத்திருக்க, குப்பை கூடையில் இல்லாமல் கீழே சிதறியிருந்தது. அதிலிருந்து புழுக்கள் உற்பத்தியாகி ஊர்ந்திருந்தது. அதை எல்லாம் க்ளவுஸ் அணிந்த கைகளால் வழித்து போட்டு குப்பை தொட்டியின் இஞத்தை சுத்தம் செய்து விட்டு அடுத்த தெருவிற்கு வண்டியை இழுத்து சென்றான்.

  சற்று பெரிய குப்பை தொட்டி, சில நேரம் சரவணன் இழுத்து வரும் குப்பையை இங்கே போட்டு விட்டு வேறு தெருவிற்கு குப்பையை சேகரிக்க செல்வான்‌. இந்த குப்பை தொட்டியிலிருந்த குப்பையை பெரிய லாரி வந்து அப்புறப்படுத்தும்.
 
  சரவணன் குப்பையை போட்டுவிட்டு திரும்ப, ஏதோ பளபளத்தது. தங்க நிறத்தில் பளபளத்ததை திரும்பி பார்த்தான். தங்கை கேட்ட பார்க்கர் பேனாவின் வடிவம் அங்கே குப்பையில்.

  வேகமாக அதை எடுத்து க்ளவுஸை நீக்கி கையில் எழுதி பார்த்தான். பேனா எழுதியது, ‘அடடா மை இருக்கும் போலயே’ என்று பார்க்கர் பேனாவின் ரீபிளை திரும்பி பார்வையிட்டான்.
  முழுமையான பேனா முழு ரீபிளாக இருந்தது. சரவணன் மகிழ்ச்சி அளவில்லாமால் போனது.
   சில நேரம் இப்படி தான். குப்பையில் நிறைய பொருட்கள் கிடைக்கும். ஒருத்தருக்கு வேண்டாமென நினைத்து குப்பையில் போடுவார்கள். ஆனால் அதை எடுத்து பலவருடம் பயன்படுத்தும் மக்கள் உலகில் இருக்கின்றனர்.‌
    சரவணன் அணிந்திருந்த ஷூவே இப்படி குப்பையில் கிடைத்ததாக, தந்தை கணேஷ் கொண்டு வந்து கொடுத்ததே.
இது போல நிறைய பொருட்கள் குப்பையில் இருந்து அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களது உடமையாக மாறியதெல்லாம் நிறைய…. இன்று பார்க்கர் பேனா.
யாராவது அருகேயிருந்தால் பகிர நினைத்தான். இன்று பார்த்து குப்பையில் கிளற அங்கே நாய் தான் சுற்றியபடி இருந்தது.

   ‘பச்… அனிதா கேட்ட பேனா.” என்று தன் பேண்ட் பேக்கெட்டில் வைத்து மகிழ, அங்கே ஒரு பெண் அரை உயிராய் அரை நிர்வாணத்துடன் கிடப்பதை அதன்பின்னே கவனித்தான்.
 
  நெஞ்சுக்கூடு பகீரென்று தூக்கி போட்டது.
அழகான இளம்பெண் குப்பையில் கிடக்கவும் இறந்துவிட்டால் என்று நினைத்து பயந்தே போனான்.

  “யாராவது வாங்களேன். இங்க ஒரு பொண்ணு இருக்கு” என்று கத்தினான்.‌ அருகே செல்ல பயந்தவனாக எட்டியெட்டி பார்த்தான்.

  ஜாக்கெட்டும் பாவாடையுமாக யாரோ ஒருவனின் வன்புணர்வுக்கு ஆளாகி குப்பையில் இருக்க வேண்டும்‌ ஏனெனில் சேலையற்ற அப்பெண் மூச்சு விடும் நிலையை அவளது மார்புகூடு லேசாக ஏறியிறங்க கண்டதும், “உ…உயிர் இருக்கு. இந்த பொண்ணு உயிரோட இருக்கா” என்று அவனுக்குள் பேசியவன், “யாராவது வாங்க. இந்த பொண்ணு சாகலை.” என்று கத்தினான்.

  அந்த நேரம் அங்கே வாக்கிங் வந்த மற்றொரு நபரோ “தம்பி முதல்ல போலீஸுக்கு தகவல் சொல்லணும். கேஸ் பதிவாகிடும். தேவையில்லாத பிரச்சனையில மாட்டிப்பிங்க” என்று கையில் நாயை பிடித்தபடி வந்தவர் கூறினார். 

  “டாக் லவ்வர்ஸ்யா நீ? யோவ்.. அங்கயிருப்பது மனுஷ உயிரு. போயா.. மயிரு மாதிரி பேசிட்டு. வந்துடுவானுங்க… பெரிய பருப்பு மாதிரி… ஐந்தறிவு உயிருக்கு மூச்சு பிடிச்சி பேசுவானுங்க. ஆறறிவு உயிரு இவனுங்களுக்கு கில்லுகீரை.” என்று கத்திவிட்டு, அப்பெண்ணை தூக்கினான்.

  “சொன்னா கேட்க மாட்ட. அப்பறம் பிரச்சனைனு வந்து நிற்ப.” என்று பேச, அதற்குள் சரவணனை போல குப்பை தொட்டியை இயக்கும் மற்றொரு வண்டி வர, அதிலிருந்த ஒரு அக்காவோ “முதல்ல ஹாஸ்பிடலுக்கு போவோம் சரவணா.” என்று அருகேயிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

  எல்லாம் சரவணனின் குப்பை வண்டியில் தான் அப்பெண்ணை கொண்டு சென்றனர். அந்தக்கா கலா மட்டும் குப்பையில் நாராக கிடந்தவளை தன் சேலையால் மறைத்தவாறு “அம்மாடி.” என்று தட்ட, அவளோ இமை சொருகியே கிடந்தாள்.

  அந்த ஏரியாவில் உள்ள அரசு மருத்துவமனை முன் நிறுத்தி தூக்கி கொண்டு சென்றான். அங்கே  போலீஸுக்கு தகவல் கூறிவிட்டு மேற்படி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சரவணனும் கலாவும் தான் அங்கிருந்த பம்ப் குழாய் நீரில் முகம் கைகால் அலம்பி ஓரளாய் இருந்தனர்.

  போலீஸ் ஒரு பக்கம் ‘அந்த பெண்ணை எங்க பார்த்திங்க? என்ன நிலையில் பார்த்திங்க? யார் முதலில் கவனித்தது. அந்த பொண்ணை தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டனர்.

  சரவணனோ “அதெல்லாம் தெரியாது சார்.” என்று கூறினார்.‌ கலா அக்காவோ, “ஏன் போலீஸ் தம்பி… நாங்களே காலையில வயித்துக்கு டீயை தள்ளிட்டு, வீடு வீடா குப்பை வண்டி இழுத்து, குப்பையை அள்ளிட்டு போறவங்க.  குப்பை வண்டில ஒரு பொண்ணு இருக்குன்னு பார்த்து சேர்த்தது ஒரு குத்தமா? அந்த பொண்ணு கண்ணை துறந்தா யாரு என்னனு தீர விசாரி” என்று துணிந்து பதில் தந்தார்.
 
  இத்தனை கால சர்வீஸ் அந்த பெண்மணிக்கு அச்சமின்றி போலீஸிடம் பேச போதுமானதாய் இருந்தது.

   போலீஸும், “அந்த பொண்ணு கண்ணு முழிக்கும்னு சொல்லியிருக்காங்க. முழிச்சதும் வாக்குமூலம் தரும் அப்ப தெரியும்” என்று காத்திருந்தனர். என்னவோ சரவணன் கலா தான் குற்றவாளி போல பேசி நகின்றார் கான்ஸ்டேபிள்.

   அன்றைய பொழுது சரவணனுக்கு ஹாஸ்பிடலே கதியென்று ஆனது.

  மனதில் ‘அம்மாவுக்கு கூட உடம்பு சரியில்லாதப்ப வேலைக்கு போயிட்டேன். இந்த பொண்ணுக்காக இங்க வெளியே உட்கார்ந்துட்டு இருக்கேன். வேலைக்கு போகலாம்னா கூட போலீஸ் எங்கயும் போகாதனு சொல்லிட்டாங்க. கலா அக்காவும் கூடயிருக்கு’ என்று தான் தோன்றியது.

  இந்நேரம் அனிதா பள்ளிக்கூடம் சென்றியிருப்பாள். அம்மா பழையசோற்றை வைத்து மூடிவிட்டு அவர்களும் வேலைக்கு போயிருப்பாங்க. நான் இங்க உட்கார்ந்துட்டு மனதோட புலம்பிட்டு இருக்கேன்.’ என்று அவன் சேர்த்த பெண் இருக்குமிடம் எட்டியெட்டி பார்த்தான்‌.

அழகான வட்ட முகம், அழகென்றாலே ஆபத்து தானே. ஏதாவது பொறுக்கியின் கைங்கர்யம் என்று எண்ணினான்.

   மதியம் தாண்டி கண்விழித்தாள் அப்பெண்.
   டாக்டர் அதன்பின் விவரம் கேட்க, “என் பெயர் பாரதி டாக்டர்.” என்று சோர்வும் வலியுமாக கூறியவள், தாய் தந்தையின் விவரத்தையும் தெரிவித்தாள்.

  மடமடவென பாரதியின் பெற்றோரான சௌந்தரராஜன் மணிமேகலைக்கு தகவல் போனது.
  நேற்று இரவிலிருந்து பெண்ணை காணவில்லை என்று பதட்டமடைந்து போன் போட்டு துவண்டு அழுதவரே. பிரஷாந்திடம் நெயிர்சியாக கேட்க ‘பாரதியோட பேசி முடிச்சி அவ அப்பவே போயிட்டாளே’ என்றதும் அவனிடம் வேறு கேட்கவில்லை.
   இன்று தான் போலீஸில் புகார் அளித்திட செல்ல, அதே நேரம் மருத்துவமனையில் இருப்பதாக தகவல் வரவும் அவசரமாய் வந்து சேர்ந்தனர்.

  “ரஞ்சித் என்ன ஒன் சைட்டா காதலிச்சான் சார். நான் அப்பா அம்மா சொல்லற பையனை தான் கல்யாணம் செய்வேன்னு அவனை அவாய்ட் பண்ணிட்டேன். எப்பவும் தூரத்துல இருந்து பார்த்துட்டு போயிடுவான். பிரச்சனைனு இதுவரை செய்ததில்லை. அதனால் அப்பாவிடம் சொல்லலை. ஆனா எனக்கு பொண்ணு பார்த்து முடிவாகுதுன்னு தெரியவும், அவன் தான் என்னை அடிச்சி கார்ல இழுத்துட்டு போய், என்னை… ரேப் பண்ணிட்டான்.” என்று கூறும் போதே கண்ணீர் இருபக்கமும் காது வரை வழிந்தது.

  அதை வெளியே கேட்ட அவளது பெற்றோர் ‘அய்யோ’ என்று கதறி அழ அவ்விடமே திரும்பி பார்க்கப்பட்டது.

சரவணனோ “சார் அந்த பொண்ணை பெத்தவங்க வந்துட்டாங்க. நான் போகலாமா? தினகூலி வேலைக்கு போனா தான் வருமானம் சார். இப்படி காலையிலிருந்து பிடிச்சி வச்சிக்கிட்டா என்ன சார் பண்ணறது? கூட்டிட்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்தது குத்தமா?” என்று கேட்டான்.

“யோவ்.. அந்த பொண்ணு வாக்குமூலம் தந்துடுஞ்சு. ஐயா வந்தார்னா அவரே போக சொல்வார். சும்மா நொய்நொய்னு பேசி நீயா ஏதாவது வாங்கி கட்டிக்காத” என்றார் வெளியேயிருந்த போலீஸ்.

    கலாவோ வீட்டில் போன் பேசி வைத்ததும், போலீஸ் வெளியேவர, சரவணனை அனுப்ப கூறிவிட்டனர்.

  அப்படியிப்படி பேசி சரவணன் அவ்விடமிருந்து இயல்பு நிலைக்கு திரும்ப மணி இரண்டானது.
   கலா அக்காவும் அவனும் தங்கள் குப்பை வண்டியை பொறுப்பாக அவர்கள் வேலை செய்யுமிடத்தில் விட்டுவிட்டு வீடு திரும்பினான்.
 
  “என்ன சரவணா.. காலையில் ஆளையே காணோம்?” என்று பக்கத்து வீட்டு அக்கா கேட்க, “வேலைக்கு போயிட்டேன் அக்கா” என்று கூறி வீட்டை திறந்து வந்தான்.

  குளித்து முடித்து காலையில் வைத்திருந்த பழையச்சோறு லேசான புளிச்சை வாடை வீச, இருந்த பசிக்கு ஒரே மடக்கில் குடித்து விட்டு அங்கிருந்த பேக்கெட் ஊறுகாயை பிதுக்கி வாயில் வைத்து விழுங்கினான்.
 
  அரசாங்கம் தந்த டிவியை இயக்கினான்.

  டிவியில் ஒரு இளம்பெண் கற்பழித்து வீசியெறிந்துவிட்டு ஓடியதை காணவும், காலையில் சந்தித்த பெண்ணின் நினைவு வந்தது.

‘அந்த பொண்ணு பேரு பாரதினு சொல்லுச்சு. பாவம் பச்’ என்று போனுக்கு சார்ஜ் மாட்டினான் சரவணன்.

  டிவியில் கற்பிழந்த பெண் இறந்துவிடுவதாக படத்தில் காட்டவும், சரவணனோ ‘பச் இந்த பொண்ணு என்ன பண்ணிக்குமோ? அங்க நின்று கொஞ்சம் வேவு பார்த்திருக்கலாம். போலீஸ் கேஸ் அதுயிதுனு ஏதாவது பிரச்சனை வரும்னு அவசரம்னு வந்துட்டேன்.’ என்று மனதோடு புலம்பினான்.

  வீட்டில் மதிய நேரம் விமலா சோறு வடித்து வைத்திருக்க, அதை அள்ளி போட்டு சாப்பிட்டான்.

  விமலா வந்தப்பொழுது, தட்டில் சோறும், டிவியும் பார்த்தவனை கண்டு அதிருப்தியடைந்தார். ஏதோ பெயருக்கு வேலைக்கு போகின்றான்
மற்ற நேரம் இப்படி வந்து டிவி பார்க்கின்றானோ என்ற எண்ணம்.

  “அம்மா.. இன்னிக்கு என்னாச்சு தெரியுமா?” என்று கூற வர, விமலாவோ “போதும் சரவணா.. என்னோட பேச முயற்சி பண்ண வேண்டாம். உன்னால ஏதாவது நல்லது நடந்து உன்னை யாராவது பாராட்டட்டும். பிறகு என்னிடம் பேசு.” என்று வெடுக்கென கூறிவிட, தன் பேண்ட் பேக்கெட்டிலிருந்து பார்க்கர் பேனாவை எடுத்து காட்டினான்.

  விமலா அதனை ஆச்சரியமாக பார்வையிட, ”தங்கச்சிக்கு அவ கேட்ட பேனா வாங்கிட்டேன் மா. கூடிய சீக்கிரம் நீங்க எப்படி என்னை எதிர்பார்க்கறிங்களோ அப்படி மாறுவேன். அப்ப என் பையன் சரவணன்னு பெருமையா பேசுவிங்க.” என்றவன் சாப்பிட்ட தட்டை அப்படியே வைத்துவிட்டு கிளம்பினான்.

  மாலை தங்கை அனிதா வரும் வரை வீட்டுக்கும் வரவில்லை‌…
  பார்க்கர் பேனாவை தான் வாங்கியதாக அன்னையிடம் தெரிவித்ததில் லேசான குற்றவுணர்வோடு நடந்தான்.

ஒரு பக்கம் கற்பழிந்த பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்ற யோசனை சென்றாலும், மறுபக்கம் தங்கையிடம் பேனா தந்து அவளது மகிழ்ச்சியை காண ஆவலாகவும் இருந்தான்.  ஒருவிதத்தில் அவனாக சம்பாதித்து வாங்கியதை தான் கொடுக்க வேண்டும். ஆனால் இங்கே குப்பையில் கிழிந்த நாராக கிடந்த பெண்ணுடையதாக இருக்கலாம்.
  ஏதோ மீண்டும் என்றாவது பார்க்கர் பேனா வாங்கி தந்தால் தன் நிலை மாறிடும். அதுவரை அன்னையின் பார்வையில் இப்பொழுதாவது வாங்கி தந்ததில் மகிழ்ச்சியடைவாரே. இப்படி தான் நினைத்தான்.

   தங்கை அனிதா வந்ததும் பேனாவை நீட்டவும் “அண்ணா நீ வாங்கி தந்துடுவனு தெரியும். அம்மா இங்க பாரு” என்று மகிழ்ந்தாள்.

விமலா பையனுக்கு இந்த அளவாது பொறுப்பு வந்ததே. தங்கை கேட்டதால் வாங்கி தந்துவிட்டான் என்று பூரித்தார்.


ஒருபக்கம் பாரதியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுயிருந்தார் சௌந்தரராஜன். 

போலீஸுக்கு எல்லாம் சரிக்கட்டி ஓரளவு மகளின் பெயர் வராமல் பார்த்துக்கொண்டார். என்னயிருந்தாலும் போலீஸ் மூலமாக மீடியாவுக்கு இவ்விஷயம் தெரிய நேர்ந்தால் நாளை மாப்பகள்ளை வீட்டாருக்கு பதில் சொல்ல நேருமே.
மருத்துவமனைக்கு மாற்றிவிட்டு கேஸ் பையில் ஆகாமல் பார்த்துக் கொள்ளவே சௌந்தரராஜன் பணத்தை கொடுத்து கையிலும் காலிலும் விழுந்து படாத பாடுபட்டார்.

இதில் பாரதி கண்ணீர் வழிய, ‘ரஞ்சித் மேல கேஸ் போடலையாப்பா?” என்று கேட்டாள்.

“என்னனு கேஸ் போட? உன்னை ரேப் பண்ணிட்டதா கேஸ் பைல் பண்ணினா நாளைக்கு பிரஷாந்திற்கு தெரிந்திடும். நாங்களே கையில கால்ல விழுந்து போலீஸை சரிக்கட்டினோம்.
இதுல நீ சொன்னேன்னு புகார் தந்தா நாமளா நம்ம நிலையை வெளியே சொல்லிக்கணுமா? நடந்ததை யாருக்கும் தெரியப்படுத்தாம பிரஷாந்தோட கல்யாணம் நடக்கட்டும்.” என்றார் சராசரி அப்பாவாக.

“அப்ப… ரஞ்சித்தை போலீஸிடம் மாட்டிவிட மாட்டிங்களா? என்னை இந்த நிலையில் கஷ்டப்படுத்தி குப்பை வண்டியில போட்டுட்டானேப்பா” என்று அழுதாள்.

“எல்லாத்தையும் மறந்து பிரஷாந்தோட வாழப்பாரு. பிரஷாந்திடம் எதையும் சொல்லிடாத. அப்பறம் யாரை தன் மேல மண்ணை அள்ளி கொட்டின கதையா மாறிடும்.
அந்த பையனை போலீஸிடம் சொல்லி தட்டி வைக்க சொல்லியிருக்கோம்‌. அவனை காணலை.” என்றார்.

பிரஷாந்தோடு வாழ வேண்டுமா? அதுவும் அவனிடம் தனக்கு நேர்ந்ததை தெரிவிக்காமல்? இதில் ரஞ்சித்தை தட்டி வைத்தால் போதுமா? அவனுக்கான தண்டனை?’ ஒரு பெண்ணை அத்துமீறி கடத்தி தூக்கிக்கொண்டு சென்று வன்புணர்வு செய்தானே? அப்படியிருக்க கேஸ் பைல் எல்லாம் தேவையற்றதா? என்று உடல் வலியை விட மனவலி அவளை கொன்றது.

பாரதி என்ற பெயர்… பெயரில் மட்டும் தான் என்ற வலியோடு தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தவனையும் திட்டினாள். இப்படியே செத்து தொலைத்திருக்க வேண்டும். ஏன் காப்பாத்தின. கடவுளே ஏன் என்னை காப்பாத்தின?’ என்று குமைந்தாள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்

 
‌ ரீடர்ஸ்… உங்க கமெண்ட்ஸை போதவில்லை. முகநூலில் கருத்திடலைன்னா எங்கயும் ஷேர் பண்ணாம கமுக்கமா விடவா ?

11 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-3”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 3)

    அச்சோ…! ஏன் இப்படி பண்றாங்க பாரதியோட அம்மா அப்பான்னு கேட்கத்தான் தோணுது, ஆத்திரத்தோட திட்டத்தான் தோணுது.
    ஆனா, இ்ந்த சொஸைட்டியில பாதிக்கப்பட்ட பெண்ணை எந்தளவுக்கு மீடியாவும், பொதுமக்களும் விமர்சனம் பண்றேன்ங்கிற பேர்ல எந்தளவுக்கு நாறடிச்சு கிழிப்பாங்கன்னு நல்லாவே தெரிஞ்சு தான் பெத்தவங்க கேஸ் ஃபைல் பண்ணாம மூடி மறைக்க நினைக்கிறாங்கன்னு தெரியுது. ஆனா இ, இதுவே அந்த ரஞ்சித்துக்கு அட்வான்டேஜ் ஆகி திரும்பவும் அவளை நாறடிக்க மாட்டான்னு என்ன நிச்சயம் ? அவனை அடிச்சா மட்டும் போதுமா ? இல்லை அடிச்சவுடனே திருந்தி செஞ்ச தப்புக்கு பாவமன்னிப்பு கேட்டா கொடுத்தடணுமா என்ன ?

    எனக்கென்னவோ, இது பேக் ஃபயர் தான் ஆகும்ன்னு தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Oru pethavangala avanga ninaikirathu crt than nalum oru thappu panavanuku thandanai venume summa adichi mirati vituta sari aeiduma vali anupavicha ponnuku than therium ippadi punishment koduka vidra vali

  3. Dharshini

    Super sis nice epi 👍👌 bharadhi nu name vechitu puratchi pannama erukalama kandipa manadhairiyathoda vandhu yethirthu nikkanum ponunganna avlo easy ya poiduchi evanungala mathiri alungalukku😠 edhula en saganum nu nenaikanum kandipa koodadhu bharadhi meendu varanum pa🥺

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!