Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 18

மனம் உன்னாலே பூப்பூக்குதே 18

பூ 18

பின் வந்த நாட்களில் கோகுல் ஆருத்ரா விடம் பானு பற்றி விளக்க முனைய, அவளோ,

“அதெல்லாம் எதுவும் எனக்கு தேவையில்ல பப்பாளிப்பழம். நீங்க எனக்கு தான். நான் உங்களுக்கு தான். முடிஞ்ச விஷயத்தை மூக்கை மூடிட்டு எதுக்கு இப்ப திறந்து பார்க்கணும்? தேவையே இல்ல.” என்று அவனை தடுத்தாள்.

ஒரு வகையில் அவன் மேல் அவள் கொண்ட நம்பிக்கை பிடித்திருந்தாலும் தன் மனதில் உள்ள உணர்வுகளை கேட்க மறுக்கிறாளே என்ற வருத்தம் எழவே செய்தது கோகுல் மனதில்.

ஆருத்ராவின் அலுவலகப் பணி கழுத்தை நெறித்தது. புதிதாக தொழில் ஆரம்பித்திருந்த கோகுல் கம்பெனிகளுக்கு சென்று பார்த்து பேசுவது, சிறு சிறு கணக்குகள் முடித்து தருவது என்று அவனும் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தான்.

அன்று அலுவலகம் கிளம்பும்போது ஆருத்ரா சமையலறையில் சாதம் வெந்த வாசனைக்கு வேகமாக சென்று குளியலறையில் வாந்தி எடுத்தாள்.

ஏனோ குடலே வெளியே வந்துவிடும் அளவுக்கு அவள் வயிறு புரட்டி எடுக்க பயந்து போனாள்.

அன்று ஒரு பெரிய கம்பெனிக்கு முதல் காலாண்டு கணக்கை சரிபார்க்க கோகுல் நேரத்தோடு கிளம்ப வேண்டும் என்று சொல்லி இருந்தான். இந்நிலையில் அவளுக்கு உடல்நலமில்லை என்று தெரிந்தால் வேலையில் சரியாக கவனம் செலுத்த மாட்டான் என்று எண்ணி, எதுவும் பேசாமல் காலை உணவை முடித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டாள்.

பத்து மணி அளவில் கணவனுக்கு ‘ஆல் தி பெஸ்ட்’ என்று மெசேஜ் அனுப்பியவள் முகத்தில் லேசாக வெட்கம் வந்து போனது.

முதல் நாள் இரவில் அவளிடம் அத்தனை சேட்டைகள் செய்திருந்தான். இன்றைய வேலை சிறப்பாக முடிய அவளிடம் ஒத்திகை பார்ப்பதாக கணக்கு வழக்கை அவள் அங்கங்களில் சரி பார்த்து அவளை கூச வைத்திருந்தான்.

அவளிடம் தெரிந்த வெட்கம் கண்டு அவளிடம் எழுந்து அருகில் வந்தாள் கேத்தரின்.

அவளைக் கண்டு மீரா தன் இருக்கையை தோழியின் பக்கம் நகர்த்திக் கொண்டு வந்தாள்.

இருவரும் அருகே வந்ததை அறியமால் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள் ஆருத்ரா.

மீரா அவளைக் கண்டி கேலியாக கேத்தியை நோக்கி சிரிக்க, அவளோ ஆருவின் தோளில் தலை சாய்த்து,

“மேடம் எங்க டூயட் பாடுட்டு இருக்கீங்க?”என்று கேட்டு வைத்தாள்.

தன் சுற்றுப்புறத்தை கவனித்த ஆருத்ராவுக்கு மேலும் வெட்கம் கூடிப்போனது.

“ச்சூ, சும்மா இரு கேத்தி” என்று அவள் கன்னத்தில் தன் கன்னம் வைக்க,

கேத்தரின் உபயோகிக்கும் பெர்ஃப்யூம் வாசனை ஆருத்ராவின் நாசியில் நிறைந்தது.

அடுத்த நொடி வயிற்றை பிரட்டிக்கொண்டு வர, கேத்தரினை தள்ளிக்கொண்டு வாஷ்ரூம் நோக்கி ஓடினாள் ஆருத்ரா.

திடீரென தோழி ஓடுவதைப் பார்த்ததும் மீராவும் கேத்தரினும் அவள் பின்னால் சென்றனர்.

பெண்கள் ஓய்வறையில் வாடி வதங்கி அங்கிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள் ஆருத்ரா.

மீரா அவள் முகத்தை துடைத்து, “என்னாச்சு டி?” என்று அக்கறையாக வினவ,

“அட மக்கு, இது கூட தெரியலையா? அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டரை மாசம் ஆகுது, இப்ப வாந்தி, சோர்வு… அப்ப டூ பிளஸ் டூ ஈவல் டு என்ன… டுட்டுடூ தானே! ஏ… வாழ்த்துக்கள் டி ஆருத்ரா” என்று கட்டி அணைக்க,

மறுபடி அவள் வாசனை திரவத்தால் வாந்தி எடுக்க ஓடியவள் சிந்தனை தனது நாள் கணக்கை மனதிற்குள் ஓட்டிப் பார்த்தது.

‘ஆமாம், நாள் தள்ளிச் சென்றிருக்கிறது. எப்படி கவனிக்க மறந்தேன்?’ என்று சிந்தித்தவளாக தோழிகளிடம் மீண்டும் வந்து,

“டாக்டர் கிட்ட போகணும் டி. தெரியாம எதுவும் முடிவு பண்ண கூடாது.” என்றாள்.

“என்ன டி முகத்துல சந்தோஷத்தையே காணோம்?” என்று கேத்தரின் சற்று தள்ளியே நின்று வினவினாள்.

தான் அருகே சென்று தான் இருமுறையும் வனதி எடுத்தாள் என்பதை கவனித்ததால் வந்த எச்சரிக்கை உணர்வுடன்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல டி. கோகுல் என் மேல பிரியமா தான் இருக்காரு. மாமா கூட சில நேரம் என் செயல் புரியாம அமைதியா இருந்தாலும் புரிஞ்சதும் சாதாரணமா பேச ஆரம்பிச்சிடுறாரு. ஆனா மாமி தான். என்னோட எல்லா செயல்லையும் குறை கண்டுபிடிச்சுகிட்டே இருக்காங்க.” என்று வருத்தமாகக் கூறினாள்.

“இது யுனிவர்சல் மாமியார் கோட் தானே! புதுசா எதுவும் இல்லையே!” என்று கேத்தரின் இலகுவாகக் கேட்க,

“எல்லாருக்கும் சாதாரணமா இருக்கலாம் கேத்தி. ஆனா எனக்குன்னு ஒரு குடும்பம் வேணும்ன்னு ஆசையா கல்யாணம் பண்ணின எனக்கு இது பெரிய ஏமாற்றம்.”என்றாள் வலியோடு.

மீரா அவளை ஆதரவாக அணைத்துக் கொள்ள,

“இங்க பாரு ஆரு, இந்த உலகத்துல அம்மா அப்பாவுக்கு பிறகு நம்ம இரத்த சொந்தம்ன்னா கூடப் பிறந்தவங்க, அப்பறம் நமக்கு பிறக்கிற பிள்ளைங்க. கல்யாணம் பண்ணி நம்ம வாழ்க்கைக்குள்ள வர்ற ஆணுக்கு என்ன தான் நம்ம உயிரையே கொடுத்தாலும் கடைசில அவங்களும் தன்னோட இரத்த உறவுகள் மேல அதிகமா அன்பு வைப்பாங்க. இந்த காதல் எல்லாம் ஒரு எல்லை வரை தான். குடும்பத்தோட பிடிப்பு எப்பவும் குழந்தையை வச்சு தான் டி.  அப்படிப் பார்த்தா  உன்னோட இரத்தமா வரப்போற குழந்தை தான் உன்னோட குடும்பம்.

நீ உன் கணவர், மாமா, மாமி மேல அன்பா தானே இருக்க, அதையும் மீறி அவங்களுக்கு என்ன வேணும்? அப்படி நம்மளை நம்மளா ஏற்காதவங்க எதிர்ப்பார்ப்புக்காக உனக்குன்னு உருவாகற சொந்தத்தோட சந்தோஷத்தை அனுபவிக்காம இருக்காத. நீ நீயா இரு டி. உன்னால முடிஞ்ச வரைக்கும் அவங்க அன்பை சம்பாதிக்க நீ முயற்சி பண்ணிட்ட. நடக்கல. அதுக்காக கஷ்டப்பட்டுட்டு இருக்க முடியுமா? அவங்க புரிதல் அவ்ளோ தான். நீ கடந்து போ. இல்ல அந்த வீடு உனக்கு ஜெயில் மாதிரி ஆகும். உன் நிம்மதி போகும்.” என்று அறிவுரை கூறியவாறு கேத்தரின் தன் கையில் இருந்த கைபேசி மூலமாக அருகில் இருந்த மருத்துவமனை பற்றி இணையத்தில் தேடி ஆருவுக்கு மகப்பேறு மருத்துவரைப் பார்க்க அப்பாயின்மெண்ட் வாங்கினாள்.

“மீரா நீ அவளை கூட்டிட்டு போயிட்டு வா. என் பெர்ஃப்யூம் தான் அவளுக்கு குமட்டுது போல. நான் தள்ளியே இருக்கேன்.” என்று கூறியதும் அவளை வந்து அணைத்துக் கொண்டாள் ஆருத்ரா.

“நீ சொன்னது உண்மை தான் கேத். தேங்க்ஸ். வீட்டு விஷயத்தை பேச வேண்டாம்னு தான் இவ்வளவு நாள் நான் எதுவுமே சொல்லல. முதல்லயே சொல்லி இருந்தா இந்த தெளிவான அட்வைஸ் அப்பவே கிடைச்சிருக்கும். நானும் இத்தனை நாள் மனசுல வருந்திட்டே இருந்திருக்க மாட்டேன்.” என்று தேம்பினாள்.

“ச்சீ என்ன டி அழற? ஆருன்னா சும்மா கெத்தா இருக்க வேண்டாமா? முதல்ல தள்ளி நில்லு. மறுபடி வாமிட் வந்தா நீ டீஹேட்ரேட் ஆகிடுவ.” என்று மீராவுடன் அவளை அனுப்பி வைத்தாள் கேத்தரின்.

மருத்துவமனை செல்லும் வழியில் கோகுல் எண்ணுக்கு அழைத்தாள் ஆருத்ரா. முழுமையாக அடித்து ஓய்ந்தது.

வேலையாக இருப்பான் என்று எண்ணியவள் மருத்துவரை சந்தித்து பரிசோதனை முடிவை வாங்கிப் பார்க்கும் போது கண்களில் கண்ணீரின் ஆட்சி.

‘ஆம். உறுதியாகி விட்டது. ஆருத்ரா கருத்தரித்திருக்கிறாள்!’

இத்தனை நேரம் இல்லாத ஒரு உணர்வு நெஞ்சுக்குள் குடியேறியது.

அடிவயிறு திடீரென்று கனமாக மாறியது போன்ற பிரமை. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பூமிக்கு வலிக்குமோ எனும்படி அத்தனை மென்மையும் கவனமும் கூடி இருந்தது.

மீரா தான் மருத்துவரைக் குடைந்து கொண்டிருந்தாள். தோழியின் உடல்நிலை பற்றி அவள் கேட்ட சந்தேகங்களை சிரித்த முகத்துடன் தீர்த்த அவர் கூறியது ஒன்றே ஒன்றைத் தான்.

“ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக வேண்டாம் பா. அலைச்சலை குறைக்கச் சொல்லுங்க.” என்று அனுப்பி வைத்தார்.

மருந்து மாத்திரைகளை நேரம் வாரியாக பிரித்து அதற்கான மாத்திரை பெட்டி வாங்கி போட்டுக் கொடுத்தாள் மீரா.

“எதுக்கு டி இதெல்லாம். நான் பார்த்து போட மாட்டேனா?” என்று அலுப்பாக கேட்ட ஆருத்ராவை முறைத்தவள்,

“யாரு நீ தானே! போன வருஷம் காய்ச்சல் வந்து டாக்டரை பார்த்து மருந்து வாங்கினப்ப என்ன டி செஞ்ச நீ? அந்த பிரவுன் கவரை பிரிக்க கூட இல்ல. கேட்டா மாத்திரை பிடிக்காதுன்னு நாலு நாள் கழிச்சு சொன்ன.

இந்த தடவை நீ அப்படியெல்லாம் இருக்க முடியாது ஆரு. வயித்துல உள்ள பாப்பாவுக்கு இந்த சத்து மாத்திரையெல்லாம் ரொம்ப அவசியம். காலைல ஆபிஸ் வந்ததும் மாத்திரை போடு. மதியம் நான் நினைவு படுத்துறேன். நைட் உன் ஹப்பி பார்த்துப்பாரா? இல்லைன்னாலும் நான் கால் பண்ணுறேன். ஒழுங்கா சாப்பிடு. ஏச்சு கட்டலாம்ன்னு நினைக்காத அடி வாங்குவ.” என்று மிரட்டினாள்.

“சரி டி” என்று அதனை வாங்கி தன் பேக்பேக்கில் வைத்தாள்.

மறுபடி கோகுல் எண்ணுக்கு அழைத்தாள்.

சில வினாடிகளுக்கு பின் எடுத்தவன், “ஆபிஸ் டைம்ல என்ன சும்மா போன் பண்ணிட்டே இருக்க? இன்னிக்கு ஆடிட் போறேன்னு சொல்லிட்டு தானே வந்தேன்” என்று கத்திவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் அப்படியே துண்டித்து விட்டான்.

இத்தனை நேரம் மனதை வருடிக்கொண்டிருந்த உணர்வுகள் எல்லாம் சட்டென்று வடிந்து போனது ஆருத்ராவுக்கு.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேவைக்கு மீறி எந்த ஒரு காரணத்திற்காகவும் அலுவலக நேரத்தில் கைபேசியில் அழைத்ததே இல்லை. இன்று இருமுறை அழைக்கும் காரணம் என்னவாக இருக்கும் என்று சற்றும் யோசிக்காமல் திட்டியதோடு, அவளைப் பேச விடாமல் அழைப்பை வைத்ததில் அவளுக்கு எகக்கசக்க வருத்தம்.

காட்டிக்கொள்ளாமல் மீராவுடன் மீண்டும் அலுவலகம் செல்ல, கேத்தரின் இருவரையும் கண்டு துள்ளி குதித்தாள்.

ராம்ஜி அவளுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, “உடம்பை கவனிச்சுக்கோ ஆருத்ரா. அதே நேரம் ஸ்ட்ரெஸ் ஆகாம உன் வேலையை பிரிச்சு வச்சு செய்.” என்று அறிவுரை கூறியதும்,

“நீங்க திட்டாம இருந்தா போதும் ஜி.” என்று வம்புக்கு இழுத்தாள் கேத்தரின்.

அவன் அவளை முறைத்துவிட்டு விலக,

“ச்ச இன்னிக்கு பார்த்து நித்தின் லீவு. இருந்திருந்தா ஒரு ரகளையே செய்திருப்பான்.” என்று நண்பன் இல்லாத வருத்தத்தை வெளியிட்டாள்  மீரா.

அன்று அலுவலகத்தில் அவளையே அனைவரும் பார்த்துக் கொண்டு, கவனம் என்று சொல்லிக் கொண்டும் இருக்க, ஆருத்ராவுக்கு ஒரே வெட்கமாகிப் போனது.

வீட்டிற்கு கிளம்பிச் சென்ற போது இதை எப்படி அனைவரிடமும் சொல்வது என்று திணறிக்கொண்டு நுழைந்தாள்.

அவள் வீட்டிற்கு வரும் முன்னரே வீட்டில் விருந்தாளிகள் வந்திருக்க, அமைதியான முகத்துடன் நுழைந்தாள்.

அங்கே அவள் இதுவரை பார்த்தறிய சொந்தங்கள் அமர்ந்திருக்க, மரியாதையாக வணக்கம் மட்டும் கூறிவிட்டு மாமியாரை நோக்கினாள்.

அவரோ, “கேட்டேளே என் நாட்டுப்பொண்ணு எங்கன்னு. இதோ வந்துட்டா பாருங்கோ.” என்று அறிமுகம் செய்தவர்,

“இவர் என் மாமா. அன்னைக்கு உன்னைப் பார்க்க வந்ததா சொன்னேன் நினைவிருக்கா?” என்றதும்,

அவர் அருகில் அமர்ந்து நலம் விசாரித்தாள் ஆருத்ரா.

அவள் சோர்வான முகம் கண்ட பெரியவர், “என்னம்மா முகமெல்லாம் வாடி இருக்கே!” என்று கேட்டதும்,

“எங்க? வீட்ல ஒரு வேலையும் நான் சொல்றதில்ல. ஆபிஸ் வேலை தான் பார்க்கிறா. ஏசில உட்கார்ந்து வேலை செய்யும்போதே இப்படி. நம்மளைப் போல இவால்லாம் அலைஞ்சு திரிஞ்சு ஃபேன் கூட இல்லாத ஆபிஸ்ல வேலை செஞ்சிருந்த்தா என்னவா ஆவாளோ தெரியல” என்று சலிப்பகக் கூறினார் சுபாஷிணி.

அவர் பேசியது ஆருத்ராவுக்கு சற்றும் பிடிக்கவில்லை என்ற போதிலும் மற்றவர் முன் ஏதும் சொல்லாது அமர்ந்திருந்தாள்.

ஆனால் அந்த பெரியவர் அப்படி எண்ணி இருக்கவில்லை.

“என்ன சுபா இப்படி பேசிட்ட? அந்த காலத்துல பேப்பரும் பேனாவும் டைப்ரைட்டரும் தானே! ஆனா இப்ப அப்படியா? அதுவும் இல்லாம அவ சாஃப்ட்வேர் டெவலப்பர் வேற. நாம கணக்கு பார்த்ததும் அவா உருவாக்குறதும் ஒன்னாகுமா?”என்று ஆதரவாக ஆருத்ரா கரத்தில் தட்டிக் கொடுக்க, அவள் கண்களில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது.

அங்கிருந்த பெண்மணி ஒருவர் மாமா தாத்தாவின் மருமகள் போல, “ஏம்மா ஏதாவது விசேஷம் உண்டா?” என்று கேட்டு வைக்க,

“இப்போ தானே கல்யாணம் ஆயிருக்கு உத்ரா. அதுக்குள்ள என்ன கேள்வி இது?” என்று மருமகளை கண்டித்தார் அவரின் மாமி.

“இல்லம்மா கேட்டேன்…” என்று இழுத்து வைத்தார்.

“இப்ப வரைக்கும் ஒண்ணுமில்ல உத்ரா. நீ தான் சமத்தா முதல் கல்யாண நாளைக்கு ஒரு மாசக் குழந்தையோட வந்து நின்ன.” என்று சுபா சிரிக்க, ஆருத்ராவுக்கு மெல்ல கோபம் அதிகரித்தது.

சரியாக அந்த நேரம் வீட்டினுள் நுழைந்தான் கோகுல கிருஷ்ணன்.

கணவனைக் கண்டதும் அவன் காலையில் திட்டியதெல்லாம் மறந்து போய் அந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர மனம் பரபரத்தது.

வந்தவன் பெரியவர்களிடம் பேசிவிட்டு மனைவியை முறைத்தான். கணவனை புரியாமல் நோக்கியவள் வந்தவர்கள் கிளம்பும் வரை காத்திருந்தாள்.

இரவு உணவை முடித்துக்கொண்டு அவர்கள் கிளம்ப, கணவனிடம் பேச அவன் பின்னாலேயே சென்றாள்.

அதற்குள் சுபா அவளை சமையலறை சுத்தம் செய்ய அழைக்கவே, பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு வேலைகளை செய்து முடித்து அறைக்கு செல்ல, கோகுல் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

அவள் மனம் மிகவும் சோர்ந்து போனது. சாய்ந்து அமர்ந்தவள் கைபேசியை எடுத்துப்பார்க்க மீரா அவளை மாத்திரை உட்கொள்ளும் படி நினைவு படுத்தி செய்தி அனுப்பி இருந்தாள். அதைக் கண்டவளுக்கு முகத்தில் புன்னகை அரும்பியது.

தன் ஆபிஸ் பையை எடுத்து அதிலிருந்த மாத்திரையை உட்கொள்ளும் போது இன்னும் கோகுலகிருஷ்ணனுக்கு சொல்ல வில்லையே என்று மனம் துடித்தது.

கையில் தண்ணீர் பாட்டிலுடன் அமர்ந்திருந்த அவள் மடியில் வந்து தலை வைத்துப் படுத்தான் கோகுல்.

“எழுந்துட்டிங்களா கிருஷ்?” என்று ஆர்வமாக அவன் தலையை வருடினாள்.

அவன் தூக்கக் கலக்கத்தில், “இல்ல, தூங்கறேன். உன் மேல கோவம்.” என்று சொல்ல,

அமைதியாகி விட்டாள் ஆருத்ரா. அவளிடம் பதில் வராமல் இருக்கக் கண்டு எழுந்து அவளைப் பார்த்து அமர்ந்தான்.

“ஏன் ருத்தும்மா நான் இன்னிக்கு முக்கியமான ஆடிட் இருக்குன்னு சொல்லிட்டு தானே போனேன். சாப்பிட கூட நேரம் இல்லாம எல்லாமே நான் ஒரு ஆளா செய்துட்டு இருந்தேன். போன் எடுக்கலன்னா விட மாட்டியா?” என்று கேட்டவன் கடைசி வரியில் கோபம் அதிகமாக தெரிந்தது.

“எப்பவாவது நான் ஆபிஸ் நேரத்தில் கூப்பிட்டு இருக்கேனா?” கேட்டவள் குரலில் எந்த உணர்வும் இல்லை.

அவன் இல்லை என்று தலையசைக்க,
“அப்ப ஏதோ முக்கியமான விஷயமா இருக்கும்ன்னு தோனலயா உங்களுக்கு?” என்றபோதும் அவள் குரல் மரத்தே ஒலித்தது.

அதை கவனித்தவனுக்கு அப்பொழுது தான் தன் தவறு உறைத்தது.

“சாரி ருத்தும்மா. அந்த பானு போன் எடுக்கலன்னா, எடுக்கிற வரை கால் பண்ணிட்டே இருப்பா. எனக்கு பிடிக்காது. நீ இன்னிக்கு நான் எடுக்காம போனதும் மறுபடி அரை மணி நேரம் கழிச்சு கூப்பிட்டியா, அதான்..” என்று சொல்லி விட்டு அவள் முறைப்பதைக் கண்டு விழித்தான்.

ஆருத்ரா அவனுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. தண்ணீர் பாட்டிலை இரவு விளக்குக்கு அருகில் வைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

அவள் ஒன்றும் பேசாமல் படுக்கவும் கோகுல் மீண்டும் விழிக்கலானான். தான் என்ன சொன்னோம் என்று சிந்தித்தவனுக்கு பானு பற்றிய பேச்சு வந்ததும் அவள் அப்படி எதிர் வினையாற்றுகிறாள் என்று எண்ணிக் கொண்டான்.

“இங்க பாரு ருத்தும்மா, இதுக்கு தான் அன்னைக்கே அவளைப் பத்தி பேசி முடிச்சிடலாம்னு சொன்னேன்.” என்று இழுக்க,

சட்டென எழ இருந்தவள் வயிற்றிலிருக்கும் கருவை மனதில் கொண்டு மெதுவாக எழுந்தாள்.

“நான் அவளைப் பத்தி பேசலன்னா, பேசுற அளவுக்கு அவளுக்கு மரியாதை இல்லன்னு அர்த்தம். இத்தனை நாளும் நீங்க என்னை அவளை வச்சு தான் எடை போட்டு வாழ்ந்திங்களா? நான் கால் பண்ணும்போது உங்களுக்கு ஏன் அவளோட நினைவு வருது?” என்று  கத்தி விட்டாள்.

தண்ணீர் எடுக்க எதிர் அறையில் இருந்து வெளியே வந்திருந்த சுபாவுக்கு மருமகள் குரல் உயர்த்தி பேசுவது புரியவும், படபடவென்று கதவைத் தட்டினார்.

கோகுல் எழுந்து கதவைத் திறக்க,

“என்ன நெனச்சுண்டு இருக்க நீ? என் பிள்ளையை எதுக்கு கத்திண்டு இருக்க? காலைல ஆபிஸ் போனவன் வந்து இப்ப தான் தூங்க போறான். வெளில கேட்கறது  போல என்ன சத்தம் போட்டுன்டு இருக்க நீ?” என்று அவளிடம் எகிற ஆரம்பித்தார்.

மனைவியின் ஆங்காரமான குரல் கேட்டு அவ்விடம் வந்து சேர்ந்தார் ஆதிநாதன்.

அதற்குள் கோகுல் இடை புகுந்து, “அம்மா ஒன்னும் இல்லம்மா. நாங்க சும்மா தான் பேசின்டு இருந்தோம். நீ ஏன் மா அவளைத் திட்டற?” என்று அவரை பிடித்துக் கொள்ள,

தலையும் புரியாது வாலும் புரியாது நின்றார் ஆதி.

சுபா நிறுத்தாமல், “என்ன டா ரொம்ப தான் சப்போர்ட் பண்ற? அவ உன்னை திட்டற சத்தம் கேட்டு தானே வந்தேன். என்னவோ மரியாதை, எடை போடுறதுன்னு காதுல விழுந்ததே! என் மாமா ஆத்து மனுஷா வந்ததும் இவ உன்னன்ட சண்டைக்கு வராளா?”என்றது தான் தாமதம்,

எங்கிருந்து ஆருத்ராவுக்கு கோபம் வந்ததோ தெரியவில்லை.

“ஆமா உங்க மாமா மாட்டுப்பொண்ணு பேசினது எனக்கு பிடிக்கல. அதை அந்த பெரியவா எவ்வளவு நாசுக்கா தப்புன்னு சுட்டிக் காட்டினா, அப்பவும் நீங்க உள்ள புகுந்து அவளை காப்பாத்தறேள்.  ஆனா தப்பே பண்ணாத என்னை எல்லார் முன்னாடியும் விட்டுக் கொடுத்து, திட்டி பேசறேள். இதெல்லாம் நன்னா இல்ல.” என்று மூச்சு வாங்கக் கூறினாள்.

கோகுல் மனைவி பக்கம் வந்து, “சும்மா இரு ஆருத்ரா. அம்மா பத்தி தெரியாதா உனக்கு? கேட்டதுக்கு மட்டும் பதில் சொன்னா போதாதா? ஏன் சண்டையை பெருசு பண்ற?” என்று அவள் கையை அழுத்தமாகப் பற்றியதும் அவளுக்கு வலி எடுத்தது.

சட்டென்று அவன் கையைத் தட்டி விட்டவள், “உங்களை போய்.. “என்று வாயில் வெளிவரத் துடித்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.

நேராக மாமனார் முன்னே சென்றவள் அவருக்கு நமஸ்காரம் செய்ததும் ஆதி  திகைத்து விழித்தார்.

“என்னம்மா ஏன் என்னாச்சு?” என்று பதறி அவளை எழுப்பி விட,

“நீங்க தாத்தா ஆகப் போறேள் அப்பா.” என்றாள்.

அவளின் வாசகத்தில் இருந்த இரு விஷயங்களும் அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்த,

“என்ன டா கண்ணு சொல்ற?” என்று அவள் கைகளைப் பற்றிக் கொள்ள,

“ஆமாப்பா. மத்யானம் ஹாஸ்பிடல் போய் கன்பார்ம் பண்ணிண்டு வந்தேன். அவர் கிட்ட தான் முதல்ல சொல்லணும்னு ஆசையா இருந்தேன். ஆனா அவர் என்னையும் அவரோட முன்னாள் காதலியையும் ஒரே தாரசில் வச்சு அளந்து பார்த்ததுண்டு இருக்கார். அதான் என்னை இந்த வீட்ல ஒரு மனுஷியா, பொண்ணா நினைக்கிற உங்க கிட்ட முதல்ல சொல்றது தான் நன்னா இருக்கும்ன்னு சொல்லிட்டேன் பா.”என்றவள்,

“மாடில உள்ள ரூம்ல இன்னிக்கு நான் படுத்துக்கறேன் பா. உங்களை அப்பான்னு கூப்பிடலாம் தானே!” என்று கேட்க,

அவர் கண்களில் நீருடன் “கூப்பிடு மா” என்று விட்டு,

“நீ இங்கேயே படுத்துக்கோ. அவனை நான் வெளில அழைச்சிண்டு போறேன்.” என்று மகன் கையைப் பற்றி தரதரவென்று அழைத்துப் போனார்.

மனைவி கூறிய செய்தியில் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றவன், அவளை எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் விழிக்கும் போது தந்தை இழுக்க, கோகுல் முதல் முறையாக தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்தான்.

அவர்கள் இருவரும் விலகிச் சென்றதும், மகனின் முன்னாள் காதலி என்ற வார்த்தையில் ஸ்தம்பித்துப் போயிருந்த சுபாவின் மூளை, அவள் படுக்கையை நோக்கிச் செல்வதை உணர்ந்து,

“என் பையனைப் பத்தி தப்பா சொல்லி அப்பா பையனுக்குள்ள சண்டை மூட்டி விட பார்க்கறியா? தனியா போக தானே இப்படி நாடகம் போடுற?” என்று அவள் கூறிய இனிய செய்தியை மறந்து கோபத்தில் பொங்க,

“இப்ப வரை எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்ல. ஆனா நீங்க சொல்லும்போது அப்படி செய்தா தான் நிம்மதியா இருக்க முடியுமோன்னு தோன்றது.”என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.

“உன் பாட்டி ஏன் எங்களுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லல? சாஸ்திரம் தெரிஞ்சாவா தானே? நேர்ல சீரெல்லாம் எடுத்துண்டு எப்ப வருவா?” என்று தன் மகனை குறை கூறியதை பொறுக்காமல் பாட்டியை குறை கூற முயன்றார் சுபா.

“நான் இன்னும் பாட்டிக்கு தகவலே சொல்லல. நான் இங்க இருக்கேன். நான் உண்டானா நீங்க என் பாட்டிக்கு சொல்லணுமா இல்ல அங்க இருந்து அவா உங்களுக்கு தகவல் சொல்லுவாளா? இதுல சாஸ்திரம் எங்கிருந்து வந்தது? கொஞ்சமானம் பிராக்டிகலா பேசுங்கோ.” என்றாள் எரிச்சல் மண்ட,

“என்னடி மரியாதை தேயரது? மாமின்னு கூட சொல்லாம பேசிண்டு இருக்க?” என்று எகிற,

“அவரை இப்ப நான் அப்பான்னு கூப்பிட்டேன். உங்களை மாமின்னா எப்படி? அதுக்காக என்னை கரிக்கிற உங்களை அம்மான்னு கூப்பிட முடியுமா? கூப்பிடாமலே இருக்க முயற்சி பண்றேன்.” என்று படுத்தே விட்டாள்.

சுபாவுக்கு கோபம் ஒருபுறம் இருந்தாலும், வீட்டின் வாரிசு வரும் செய்தியை இப்படி சொல்லி, சண்டைக்கு இழுத்து விட்டாளே என்று இருந்தது.

சண்டைக்கு காரணகர்த்தா தானே தான் என்பதை வசதியாக மறந்து போனார்.

16 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 18”

  1. Avatar

    அறிவு கெட்ட கிருஷ், எவ்வளவு சந்தோஷமா விஷயத்தை சொல்ல வந்தா , ஆதிப்பா முதல்ல இந்த சுபா மாமிய டைவர்ஸ் பண்ணுங்கோ

    1. Avatar

      கிருஷ் மனைவியையும் தன் முன்னாள் காதலியையும் இணைத்து பேசியது பெரிய தப்பு தான்

  2. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 18)

    சரியான லூசு மாமி, லூசு புள்ளை…! அவன் என்னடான்னா குரங்கை நினைச்சுக்கிட்டு மருந்தை குடிக்காதேங்கற கதையா..
    அந்த வீணாப்போன பானுவையே நினைச்சு பொண்டாட்டிக்கு அடிக்கடி செக் வைக்குறான். இந்த லஷ்ணத்துல அந்த பானு பெரிய என்சைக்ளோபீடியா மாதிரி, அவளைப்பத்தி ஆரு கிட்ட தெளிவா பேசிடறேன், தெளிவா பேசிடறேன்னு அடிக்கடி ஸீனை வேற போடறான். ஆரு தான் சொல்றா இல்ல, அவளுக்கு அத்தனை இம்பார்ட்டன்ஸ் கொடுக்கத்
    தேவையில்லைன்னு.. கொஞ்சமாவது புரிஞ்சிக்கிறானா…? அது என்ன அத்தனை அமர காவியமா ? இல்லை காதலா..? இதையே, ஆரு செஞ்சுட்டு தன்னோட பழைய காதலைப்பத்தி பேச வந்தாளோ, ஒப்பிட்டுப் பார்த்தாளோ சும்மா விட்டுடுவானா…? இதுல அந்தம்மா வேற எடுத்ததுக்கு
    எல்லாம் வரிஞ்சு கட்டிக்கிட்டு வாராங்க. ஆகாத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம், நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்ங்கிற மாதிரியே எடுத்துதுக்கெல்லாம்
    பாயுறாங்க.

    பாவம் ஆரு..! சந்தோஷமா சொல்ல வந்த விஷயத்தையே,
    சொல்ல விடாம பண்ணிட்டு, சொன்ன விஷயத்தோட
    சந்தோஷ மனநிலையையே கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டாங்க. ம்ஹூம்… இது
    சரிப்பட்டு வாராது… பேசாம தனிக்குடித்தனம் போயிட வேண்டியது தான். அது சரி, அதுக்கு முதல்ல கோகுல் இல்ல
    சரியா இருக்கணும். அவனே இதுவா, அதுவான்னு மதில்மேல் பூனையா இல்ல இருக்கான்.
    😃😃😃
    CRVS (or) CRVS 2797

    1. Avatar

      Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr Superrrrr Superrrrr superrrrrr sis👌👌👌👌👌👌

  3. Avatar

    Adi sir unga paiyan mandai ah konjam nalla kazhuvi kayavaingo appo va chum ipadi enna pesurom nu yosichi pesuna seri
    Mami panrathu ellam.pannitu ithula ungaluku kobam.vera ya aval um poruthu partha innaiku limit ah cross aagavum burst agita ah

  4. Kalidevi

    Aaru va pesa vachita gokul nee konjam ivala yosi ethuku antha banu vachi compare pani pAkura atha ava kittaye solra unaku kedachi irukurathu nalla ponnu avala vera mari akidatha unga athuku mela theve illama rensu perku nadula vanthu prachanai panranga

  5. Priyarajan

    Poruthathu pothum pongi elu aaru….. Spr going intha gokul mandailaye naalu podanum….. Intga maami yen ipti irukanga pesama ni thani kuduthaname poidalam….Waiting for nxt epi….

  6. Avatar

    அடப்பாவி யாரை யாரோட சேர்த்து வைச்சு பேசறான்… இந்த மாமி அவளை குறைச்ச சொல்லதான் தெரியும் போல

  7. Avatar

    சாயந்தரம் வீட்டுக்கு வரும்போது எவ்வளவு சந்தோஷமான மனநிலையில் வந்தா அது எல்லாம் இப்போ நாசமா போச்சு இந்த சுபா மாமியால.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *