Skip to content
Home » மனம் உன்னாலே பூப்பூக்குதே 3

மனம் உன்னாலே பூப்பூக்குதே 3

பூ 3

தோழிகள் பேசியதில் சற்று தெளிவாக இருந்த ஆருத்ரா வீடு நோக்கிப் பயணித்தாள்.

வேலையில் சேரும்போது ஆருவின் அலுவலகம் சோழிங்கநல்லூரில் இருக்கவே அதற்கு பக்கமாக மேடவாக்கத்தில் தனியாக வீடெடுத்து தங்கி இருந்தாள். திருச்சியில் ரங்கனின் காலடியில் இத்தனை ஆண்டுகளை செலவு செய்த பாட்டிக்கு அவனை விட்டு வர மனதில்லை.

பாட்டி போடும் சம்பிரதாய கண்டிஷன்கள் எதுவும் ஆருத்ராவுக்கு உவப்பாக இருக்கவில்லை. அதனால் தனியே இருப்பதே உசிதம் என்று அவள் சென்னைக்கு ஜாகையை மாற்றிக் கொண்டபோது பாட்டியின் வில்லத்தனம் அவளுக்குத் தெரியாமல் போனது.

அவளுக்குத் தெரியாமல் சென்னையில் அவர் வலைவீசி மாப்பிள்ளை தேடி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் அவர் காட்டிய பல மாப்பிள்ளைகளை இரக்கமில்லாமல் ஓட விட்டிருக்கிறாள் ஆருத்ரா.

அவளது செய்கை அறிந்து மாப்பிளை பற்றி விசாரித்து பெண் பார்க்கும் படலத்தை அவளது சென்னை வீட்டில் வைத்தே பாட்டி அரங்கேற்றியபோது அவள் வேலைக்கு சேர்ந்து ஒன்றரை ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது.

அன்று வந்த மாப்பிள்ளை நல்லவன் போலத் ஹாலில் அமர்ந்து பேசினாலும் தனியே பேச வந்த போது அவளது சம்பளம், வேலை நேரம், அவளுக்கு வங்கியில் எவ்வளவு கடன் கிடைக்கும் என்று கேட்ட விபரங்களில் எரிச்சல் அடைந்தவள் அவனையும் ஓட வைத்தாள்.

அதில் கோபமான சந்தானலக்ஷ்மி இனி அவளை பெண் பார்க்க யாரையும் சென்னைக்கு அழைக்கப் போவதில்லை என்று திருச்சி சென்றார்.

பாட்டிக்கு கோபம் வந்துவிட்டது என்று அறிந்தபோதும் பிடிக்காத யாரோ ஒருவனை மணக்க அவளுக்கு விருப்பமில்லை. அதே நேரம் மாப்பிள்ளை வீட்டில் “நாங்க ரொம்ப ஆர்தடாக்ஸ் குடும்பம்” என்று சீன்களைக் கண்டு எரிச்சலும் அடைந்திருந்தாள்.

இனி பாட்டி சில நாள் தொந்தரவு செய்ய மாட்டார் என்று எண்ணி இருக்க, மூன்று மாதத்தில் அவளை அவசரமாக திருச்சிக்கு வரும்படி அழைத்தார்.

காரணம் கேட்டபோது அவளுக்கு அவராக மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்திருப்பதாகவும், சனிக்கிழமை வந்தால் ஞாயிறு நிச்சயம் நடக்கும் முன் மாப்பிள்ளையை ஒரு முறை பார்த்துப் பேச வாய்ப்பு தருவதாக அவர் குறிப்பிட ஆருத்ராவுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

அன்று இரவே திருச்சிக்கு பேருந்து ஏறி பாட்டியை பஸ்பமாக்க வேண்டும் என்று அவள் எண்ணியபோது அலுவலகத்தில் ஒரு பெரிய பிராஜெக்ட் முடித்ததற்கான கொண்டாட்டம் ஏற்பாடானது. அவளுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டிருந்ததால் கண்டிப்பாக அதில் அவள் கலந்து கொண்டாக வேண்டிய கட்டாயத்தில் பாட்டியை மறுநாள் வாணலியில் வறுத்துக் கொள்ளத் திட்டமிட்டாள்.

ஆனால் அவள் எண்ணியதெல்லாம் ஒருநாளில் மாற்றம் பெறும் என்று யார் கூறி இருந்தாலும் அன்று அவள் நம்பியிருக்க மாட்டாள். அதுவே தான் நிகழ்ந்தது.

எண்ணங்களில் சிக்குண்ட அவளை உன் மாமியார் வீட்டு வாயில் வரை அழைத்து வந்துவிட்டேன் என்று வாகனம் நிதர்சனத்துக்கு இழுத்து வந்தது.

மடிப்பாக்கத்தில் பதினைந்து செண்ட் இடத்தில் தோட்டத்துடன் கூடிய இரண்டடுக்கு தனி வீடு அது. அழகுடன்  வெள்ளை வெளேர் என்று நின்ற அதன் காலடியை பச்சை நிறத்தில் மாற்றி அதில் பல வர்ணங்களால் அலங்கரித்து வைத்திருந்தன அவளது மாமியார் கைவண்ணத்தில் உருவான தோட்டத்துச் செடிகள்.

வண்டியிலிருந்து இறங்கி வீட்டின் கேட்டைத் திறந்து அதனை உள்ளே தள்ளிக் கொண்டு வந்தாள்.

வேகமாக வீட்டின் வாசல் கதவு திறக்கப்பட்டு, “வாடிக் கண்ணு. மணி ஆறாகப் போறதே இன்னும் கோந்தையை காணோமேன்னு இப்ப தான் சொல்லிண்டே இருந்தேன்.” என்று அவளது அலுவலகப் பையை வண்டியிலிருந்து எடுத்துக் கொண்டார்.

மென்னகை ஒன்றை சிந்திய ஆருத்ரா, “நானே பை எடுத்துக்கறேன் மாமி” என்றாள்.

“அதெல்லாம் பரவால்ல, நீ இப்படியே பின்னாடிப் பக்கம் போயி கைகால் அலம்பிண்டு ஆத்துக்குள்ள வந்துட்டு. விளக்கேத்தணும் டா கண்ணு. பின்வாசல் வழியா வந்துடாத. சுத்தி முன்வாசல் வழியாகவே வா.” என்று கூறி உள்ளே சென்றார்.

காலையிலிருந்து கம்பியூட்டர் முன்னே அமர்ந்துவிட்டு, சிறுசேரியிலிருந்து வாகன நெரிசலில் பதினெட்டு கிலோமீட்டர் தொலைவு வண்டி ஓட்டி வந்த அவளுக்கு சற்று நேரம் முதுகை படுக்கையில் சரித்தால் போதும் போல இருந்தது.

ஆனால் இவரோ பின்னால் சென்று முகம் அலம்பி, முன்னே வந்து, விளக்கு ஏற்றி… நினைக்க நினைக்கவே நெஞ்சில் மூச்சு முட்டியது.

அந்த பெரிய வீட்டைச் சுற்றிக்கொண்டு சென்றவளுக்கு வரவேற்பாக அவளது சிவப்பு நிற டர்க்கி டவல் கொடியில் தயாராக தொங்கிக் கொண்டிருக்க,

முகம் அலம்பித் துடைத்துக் கொண்டு வீட்டினுள் வந்தவள் நேராக பூஜை அறைக்குச் சென்று விளக்கை ஏறினாள்.

“என்ன தான் ஸ்டிக்கர் பொட்டு வெச்சுண்டு இருந்தாலும் விளக்கு ஏற்றும் போது நெத்தில குங்குமம் வச்சுக்கணும் டி கண்ணு. வகுட்டுலையும் வச்சுக்கோ.” என்று வந்து உரிமையுடன் மாமியார் குங்குமம் வைத்துவிட அவரது அன்பும் உரிமையும் பிடித்தாலும் ஏதோ ஓரிடத்தில் மனம் நெருடிக் கொண்டே இருந்தது.

“உங்க ரூம்ல உனக்கு பட்டுப் புடவை எடுத்து வச்சிருக்கேன். போய் மாத்திண்டு வா. கல்யாணத்துக்கு வர முடியாதவா சிலர் இன்னிக்கு ஆத்துல உன்னைப் பார்க்க வரேன்னு சொல்லிர்கா.”  என்று கூறி அவள் கையில் காபியையும் திணித்தார்.

டிகாஷன் இறக்கி மணக்க மணக்க போட்ட அருமையான பில்டர் காப்பி. அதில் அவரது அன்பு அப்பட்டமாகத் தெரியத் தான் செய்தது. ஆனால் அவளுக்கு தான் காப்பி என்றால் அறவே பிடிக்காதே!

இந்த ஒரு வாரத்தில் அவர் இது போல திணித்த காபிகள் அனைத்தும் கோகுல கிருஷ்ணனின் கைகளுக்கு சென்ற மாயம் பற்றி அறியாத அவரிடம் இப்பொழுது எப்படி அவளுக்கு காபி பிடிக்கதென்று சொல்வது என்று புரியாமல் விழித்தாள் ஆருத்ரா.

“போடா கண்ணு” என்று சொல்லி வீட்டில் மலர்ந்திருந்த மல்லிகை மொட்டுகளை சோஃபாவில் அமர்ந்து தொடுக்க ஆரம்பித்திருந்தார் சுபாஷிணி.

“மாமி..” என்று அவள் தயங்கி அழைக்க,

“அவால்லாம் வந்திடுவா டா கண்ணு. சீக்கிரம் போய் புடவை மாத்து.” என்று பூவிலிருந்து கண்ணை எடுக்காமல் அவர் கூற, மனதில் எழுந்த சோர்வை மறைக்க முடியாமல் ஒரு பெருமூச்சை வெளியிட்டு காபியை அங்கிருந்த உணவு மேசையில் அப்படியே வைத்துவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.

அதை ‘தங்கள் அறை’ என்று அவளால் கண்டிப்பாக சொல்லிவிட முடியாது. அவ்வறையில் அவளுடைய துணிகள் எல்லாம் இன்னும் அவள் கொண்டு வந்த சூட்கேசில் தான் இருக்கிறது. அவள் உடமைகள் அனைத்தும் வீட்டிற்கு வந்த விருந்தாளியின் பயணப் பொதி போல அந்த அறையின் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஒரு வாரம் கழிந்தும் கூட, அவளுக்கு அந்நியத்தன்மை கொடுத்த அந்த அறையில் அவளுக்கு இருக்கவே சம்மதமில்லை. ஆனால் இப்பொழுது வேறு எந்த வழியும் இல்லை. புடவையை மாற்றிக்கொண்டு வெளியே சென்றாக வேண்டும். இல்லாவிட்டால் அன்று போல கதவு படபடவென்று தட்டப்படும்.

யோசித்தபடி அவர் வைத்திருந்த புடவையை எடுத்துப் பார்த்தவள் அது கனமாக இருப்பதைக் கண்டு மேலும் எரிச்சல் அடைந்தாள்.

வீட்டிற்கு வந்தால் இலகுவான உடையை மாற்றிக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு பின் மாமியாருக்கு சமையலில் உதவவேண்டும். அவரிடம் தன் மனதில் இருப்பதை பொறுமையாக சொல்லி விட வேண்டும் என்று எண்ணியிருந்த அவளுக்கு இப்பொழுது அது எதையும் செய்யும் பொறுமையோ ஆர்வமோ துளியும் இல்லை.

படுக்கையில் தன்னையும் மீறி பத்து நிமிடம் படுத்து ஓய்வெடுத்தாள். இல்லாவிட்டால் மறுநாள் அலுவலகத்தில் அமர முடியாத அளவுக்கு முதுகுவலி எடுக்கும். புடவையை வேகமாக சுற்றிக்கொள்ளலாம், தாமதத்துக்கு காரணம் கேட்டால் புடவையை சொல்லி விடலாம் என்று எண்ணி கண் மூடியவள் தன்னையும் அறியாமல் உறங்கி விட்டாள்.

சில நிமிடங்களில் கதவு தட்டும் ஓசை கேட்கவே பதறிக் கொண்டு எழுந்து தன் உடையைக் கண்டாள். வேகமாக மாமியார் வைத்த புடவையை மேலே சுற்றிக்கொண்டு கதவை திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டினாள்.

அவள் எதிர்பார்த்தது மாமியாரை. ஆனால் அங்கே நின்று கொண்டிருந்தவன் கோகுல கிருஷ்ணன்.

மனைவி  முயல்குட்டி போல தலையை மட்டும் நீட்டுவதை விசித்திரமாக கண்டவன்,

“சௌபர்ணிகாவும் அவ அம்மாவும் வந்திருக்கா. இந்தா இந்த பூவை வச்சிண்டு அம்மா உன்னை ஹாலுக்கு வரச் சொன்னா.” என்றவன்,

“கதவைத் திற நான் உள்ள போகணும்.” என்று சலிப்புடன் கூறினான்.

“புடவை மாத்துறேன் கிருஷ். ஒரு பத்து நிமிஷம் மாமியை சமாளிக்க முடியுமா ப்ளீஸ்” என்று குழந்தை போல அவள் கேட்டபோது முகத்தில் தூக்கக் கலக்கமும் சோர்வும் அப்பட்டமாகத் தெரிந்தது.

“சரி சீக்கிரம் வா” என்று மட்டும் கூறிவிட்டு அவன் விலக, கதவை மூடி பரபரவென்று புடவையை மாற்றினாள்.

பாட்டி சாஸ்திரம் சம்பரதாயம் என்று சொல்லிய பல விஷயங்களை காதில் வாங்காதவளுக்கு சேலை மேல் ஏற்பட்ட பிரேமை அதனை அழகாக உடுத்திக்கொள்ள பழகிக்கொள்ள வைத்தது.

இன்று அவசரத்துக்கு ஏதுவாகவும் இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு லேசாக தலையை வாரிக்கொண்டு வெளியே வந்தாள்.

அடர்ந்த சிவப்பில் தங்க ஜரிகை போட்ட அந்த புடவை அவளது சந்தன நிறத்துக்கு அத்தனை எடுப்பாக இருந்தது.

அவள் ஹாலில் வந்து அங்கே இருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க மாமியைப் பார்த்து கைகூப்பி நமஸ்காரம் கூறியவள், அவரருகில் அலட்சியமாக அமர்ந்திருந்த இளம் வயதுப் பெண்ணைக் கண்டு சிநேகமாக சிரித்தாள்.

அந்த மாமியோ, “வாம்மா பொண்ணே! நீ தான் எங்க கோகுலுக்கு பொண்டாட்டியா? என்ன படிச்சிருக்க?”என்று கேள்வி எழுப்ப,

“பி. டெக்” என்றாள் அமைதியாக.

“எங்க சௌபி, இப்ப எம். டெக் முடிக்கப் போறா. ஆத்துக் காரியம் எல்லாம் நன்னா பண்ணுவா. நீ எப்படி?” என்று கேட்க அவள் பார்வையோ மாமியாரை தீண்டியது.

அவர் அந்த மாமியை பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டவள்,

“ஓரளவு பண்ணுவேன்.” என்று சொல்லி கோகுல கிருஷ்ணன் அமர்ந்திருந்த சோஃபாவில் அவனுக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள்.

அதை இடுங்கிய கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த அந்த மாமி, “என்னைத் தெரியுமா நோக்கு? உன் மாமியார் சொன்னாளா? நான் கோகுலுக்கு ஒண்ணு விட்ட அத்தை. இது என் பொண்ணு சௌபர்ணிகா. இவளைத் தான் உன் ஆத்துக்கரனுக்கு கொடுக்கறதா இருந்தது. என்னவோ இவ படிப்பு முடியறதுக்குள்ள சட்டுன்னு கோகுலுக்கு உன்னை கல்யாணம் பண்ணிட்டா.”என்று சற்று குத்தலாக சுபாஷிணியைப் பார்த்துக் கூறினார்.

என்னடா இவர் இப்படிக் கூறுகிறார் என்று கோகுல கிருஷ்ணனை அவள் பார்க்க அவனோ இங்கே இல்லாதவன் போல முகபாவம் காட்டினான். அதற்குள்,

“மன்னி தப்பா நினைக்காதேள், கோகுல் ஜாதகத்துல உடனே கல்யாணம் பண்ணனும்னு சொல்லவே நான் நேரா உங்காத்துக்கு தானே வந்தேன். சௌபி படிப்பு முடியணும்ன்னு சொன்னதால தானே நான் வெளிலயே பொண்ணு பார்த்தேன். ஆருத்ரா ரொம்ப தங்கமான பொண்ணு. பார்த்து பேசினதுமே கல்யாணம் முடிவாயிடுத்து.” என்று மாமியார் பேசியதை கேட்டுக் கொண்டே தன் அருகில் இருந்த கணவன் முகத்தை மீண்டும் ஆராய்ந்தாள் ஆருத்ரா.

‘ம்ம்ஹ்ம் ‘ பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையார் போல கையில் இருந்த கைபேசியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் அவன்.

“நீ சொன்னா சரிதான் சுபா. எங்க உன் நாட்டுப்பொண்ணை ஒரு பாட்டு பாடச் சொல்லு கேட்போம்.” என்று சௌகர்யமாக சாய்ந்து அமர்ந்து கொண்டார் அந்த மாமி.

இவள் திருதிருவென்று விழிக்க, திருமணத்தில் நலுங்கில் அவளைப் பாடச் சொன்ன போது சற்று நேரம் யோசித்து தசாவதாரம் படத்தில் வந்த ‘முகுந்தா முகுந்தா’ பாடலை பாடி வைத்தாள் அவள். காரணம் கேட்டபோது பல்லைக் காட்டி கோகுலை கைக்காட்ட, பாடலில் கிருஷ்ணன் என்று வந்ததால் பாடி இருப்பாள் என்று அனைவரும் நினைத்துக் கொண்டனர்.

ஆனால் உண்மையில் திடீரென பாடு என்றால் அவள் மூளை கற்று வைத்திருந்த அத்தனை பாடல்களையும் மறந்து போகச் செய்யும் அற்புதமான படைப்பு என்று அவளால் எப்படிக் கூற முடியும்.

இன்றும் அதே நிலை. ஆனால் அவளை ஏளனமாக பார்க்கும் அந்த சௌபி முன்னே அவமானப்படவும் அவளுக்கு விருப்பம் இல்லை.

ஆனால் மூளையில் பாடல் உதிக்க வில்லையே! அவள் சிந்திக்க, அருகில் இருந்த கோகுல்,

“அன்னைக்கு ‘தேவி நீயே துணை’ நன்னா பாடினியே ஆரும்மா அதையே பாடேன்.”என்று ஆதர்ச  கணவன் போலக் கூறி தன் கையில் இருந்த செல்போனை அவள் பக்கம் திருப்பிக் காட்டினான்.

அதில் பாடல் வரிகள் தெளிவாகத் தெரிய, இதழில் உதித்த புன்னகையுடன்,

தேவி நீயே துணை தென்மதுரை வாழ் மீனலோசனி

தேவாதி தேவன் சுந்தரேசன்

சித்தம் கவர் புவன சுந்தரி

மலையத்வஜன் மாதவமே

காஞ்சன மாலை புதல்வி

மகாராணி

அலைமகள் கலைமகள் -பணிகீர்வாணி

அமிழ்தனை இனிய முத்தமிழை வளர்த்த…

என்று கீரவாணி ராகத்தில் அழகாகப் பாடினாள்.

“பரவல்லையே பாபநாசம் சிவன் பாட்டெல்லாம் தெரிஞ்சிருக்கே!” என்று அந்த மாமி மெச்சிக் கொண்டு தன் மகளை ஓரக் கண்ணில் பார்த்தார்.

பின் பேசி, உணவை முடித்துக் கொண்டு அவர் சென்றதும் மாமியாருக்கு சமையல் அறையை ஒதுங்க வைக்க உதவிவிட்டு அறைக்குள்ளே வந்தவள் அங்கே லேப்டாப்புடன் அமர்ந்து கொண்டிருந்த கோகுல கிருஷ்ணனிடம் சென்று,

“ரொம்ப தேங்க்ஸ். சட்டுன்னு பாடச் சொன்னா எனக்கு மறந்து போய்டும். டைம்லி ஹெல்ப்” என்றவள் அவன் முன்னே எப்படி உடை மாற்றுவது என்று தயங்கி கொண்டிருக்க, அதைப் புரிந்து கொண்டவன் போல,

“நான் கார்டன்ல வாக் போயிட்டு வர்றேன்” என்று அவன் எழுந்துகொண்டான்.

அவள் முகத்தில் சிறு நிம்மதி தென்பட்டதும்,

“அந்த மாமி பேசினது பத்தி என்கிட்ட எதுவும் நீ கேட்கணுமா?” என்றான் சிறுகுரலில்.

அவளோ விழிகளை உருட்டி, “அவா நிறுத்தாம நிறைய பேசினாளே, அதுல எதை சொல்றீங்க?” என்று அவனுக்கு அருகில் வந்தாள்.

“அதான் சௌபியை எனக்கு பேசினாதா சொன்னது…” என்று இழுத்தான்.

“ம்ச்.. எல்லா ஓல்ட் பீபிளும் செய்யுற வேலை தானே இது. அவங்க பேசின்டாங்க. ஆனா உங்களுக்கு தான் அந்த சௌபியை பிடிக்கலையே!” என்று சர்வசாதாரணமாக கூறிவிட்டு தன் பெட்டியை கட்டிலில் வைத்து இரவு உடையை தேடி எடுக்கத் துவங்கினாள் ஆருத்ரா.

அவளை விசித்திரமாக பார்த்துவிட்டு வெளியேறினான் கோகுல கிருஷ்ணன்.

15 thoughts on “மனம் உன்னாலே பூப்பூக்குதே 3”

  1. M. Sarathi Rio

    மனம் உன்னாலே பூப்பூக்குதே…!
    (அத்தியாயம் – 3)

    எனக்கென்னவோ ஆரு சாதாரணமாவும், எல்லாத்தையும் சுலபமாவும் கேட்ச் பண்ணி ஹாண்டில் பண்ணவும் செய்யுறா…!
    பாருங்க புருசன்காரன், சௌபியை பத்தி ஏதாவது தெரிஞ்சிக்கணுமான்னு கேட்டதுக்கும், ரொம்ப சிம்பிளா எல்லா ஓல்ட் ஏஜ் பீப்பிளும்
    இப்படித்தான் யாரையாவது தலையில கோர்த்து விடப்
    பார்ப்பாங்க. அதெல்லாம் டோண்ட் கேர் மேட்டர்ன்னு
    எத்தனை சாதாரணமா முடிச்சிட்டா. தவிர, வீட்டுக்கு வாழ வந்த பிள்ளையை பத்து நிமிசம் ரெஸ்ட் கூட எடுக்க விடாமல் விளக்கேத்த வாங்கிறதெல்லாம் ரொம்ப ஓவர். இப்ப, அவ நேரத்துக்கு வரலைன்னா மாமியார்காரி தானே ஏத்தியிருக்கணும். ஏன், இதெல்லாம் புரிஞ்சுக்கவே மாட்டாங்களோ..?

    பட், இந்த புருஷ்காரன் தான் மனசுக்குள்ள ஏதையோ போட்டு
    உருட்டிட்டே இருக்கிற மாதிரி தெரியுது. தவிர, பொண்டாட்டியா வாழ வந்தவளுக்கு, அவ திங்க்ஸை வைச்சுக்க ஒரு அலமாரியை கூட கொடுக்காம இருக்கானே…?
    இவனையெல்லாம் எந்தவகையில சேர்க்கிறது..?
    ம்ஹூம்… இவன் கொஞ்சம் கூட சரியில்லை… சரியான தேவதாஸா இருக்கிறானே…!!!

    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Yen rendu perum ippadi irukanga avan etho yarkittayo pesura mari pesuran virupam illama mrg nadanthu iruku ena reason irukum gokuk ku

  3. Avatar

    ஆருவோட மாமியாரு நல்ல மாமியார் தான் ஆனா என்ன கொஞ்சம் ஓல்ட் ஃபேஷன் மாமியாரா இருக்காங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *