Skip to content
Home » மௌனமே வேதமா-5

மௌனமே வேதமா-5

அத்தியாயம்-5

   மதிய வேளையில் டிபன் பாக்ஸ் திறக்கவும் தான் இது பிரணவி சமையல் என்றதே ஆத்ரேயனுக்கு நினைவு வந்தது.

  சுற்றிமுற்றி பார்த்துவிட்டு ஏதோ வெடிகுண்டு பெட்டியை திறப்பது போல பவ்வியமாய் திறந்தான்.

   நெய் வாசம் மூக்கை துளைத்தது. கேரட் சாதம் தான் செய்து கொடுத்திருந்தாள். ஆனால் அதில் நெய் ஊற்றி முந்திரி தாளித்து சிறிதளவு தேங்காய் துருவி செய்திருக்க மணம் வீசியது.

  இதில் சைட் டிஸ்ஸாக வெங்காய பக்கோடா இருந்தது. இதெல்லாம் எப்ப சமைச்சா? நான் காலையில் கிச்சன் போனப்ப உப்புமா தான் சமைச்சி டேபிளில் வச்சிருந்தா?!

   உப்புமான்னு ஒதுக்க நினைச்சா அதுவுமே நல்லா தான் செய்திருந்தா’ என்றவன் ஸ்பூனால் அள்ளி விழுங்கினான்.

   அப்படியொன்றும் சமையல் சொதப்ப மாட்டாளென்று புரிந்தது. பிரணவி தந்தை ஜெகநாதனுக்கு இதனால் தான் பெண்ணை  சமையல் தெரியாவிட்டாலும் கட்டி தர தைரியம் பிறந்திருக்கும்.

  மிச்சம் வைக்காமல் சாப்பிட்டான். மதியத்தை தாண்டி இரண்டாம் பீரியட் பிரணவி வகுப்புக்கு செல்ல நேரும்‌.

   அப்படியே சந்தித்தாலும் யாரோ ஒருத்தியாக தான் கடப்பது உறுதி.

   இங்கு பிரணவியோ சாப்பிடாமல் ஸ்பூனில் கோலமிட, மோனிகா கைமுட்டியால் இடித்து, “என்ன?” என்றாள்.

   “இன்னிக்கு நானே சமைச்சிருக்கேன்.” என்றாள்.

  ”நல்லா மணமா இருக்கு.” என்று கொஞ்சம் பகிர்ந்து உண்ணும் நேரம் ருசித்த மோனிகா உரைத்தாள்.

    “அவர் சாப்பிட்டுயிருப்பாரா? என்னனு தெரியலை.” என்று சோகமாக.

   “ஏய்… அதான் பீலிங்கா. அதெல்லாம் நல்லா ஜம்முனு சாப்பிட்டு தெம்பா வருவார். யார் கண்டா மல்லிப்பூ அல்வா வாங்கிட்டு, நைட் பூஜையே நடக்கும்” என்று கண் சிமிட்ட, ‘ஆஹ்’ ‘அச்சோ’ என்று பிரணவி அலறாத குறையாக மாறினாள்.

   ”என்ன?” என்று மோனிகா கேட்டதும், “ஒன்னுமில்லை” என்று மறைத்தாள்.

   மோனிகா நெருங்கி வந்து, “கேட்டா தப்பா எடுத்துக்க கூடாது. படிக்கிறப்ப டிஸ்டப் பண்ணுவாறா? உன்னால படிக்க முடியுதா?” என்று ஒன்றும் பாதியுமாக கேட்க, திருமணமானதில் அரிச்சுவடி கூட தாண்டாத பிரணவியோ புரியாத பார்வை பார்த்தாள்.‌

   “என் ஹஸ்பெண்ட் எல்லாம் அசைமெண்ட்ஸ் எழுதணும்னு சொன்னாலும், நாளைக்கு எழுதிக்கோன்னு பெட்ரூமுக்கு தூக்கிட்டு போயிடுவார்.

   முதல்ல ஹாப்பியா இருந்தது. அதே மிதப்புல படிப்புல டல்லாயிட்டேன். இப்ப என்னதான் கண் முழிச்சு படிச்சாலும் மண்டையில ஏறுவது கஷ்டமாயிருக்கு.” என்றதும் பெட்ரூம் என்றதும் புரிந்ததது. அதுவும் தூக்கிக்கொண்டு செல்வதாக கூறியதும் சங்கடமாய் மோனிகாவை பார்க்க, கடைசியாக கூறியதை கேட்டு அவளை கண்டு பரிதாமே தோன்றியது.

    “என்ன விடு. உனக்கு எப்படி? சொந்தக்காரரா? அசலா? கல்யாணமாகி இரண்டு வாரம் கூட முடியலைன்னு சொன்ன.” என்று கேட்டதும் தன்னிலை கூறமுடியாது நொந்தாள்.

    தொண்டையை செருமி, “அதெல்லாம் படிப்புக்கு முக்கியம் கொடுப்பார். அதோட நாங்க சொந்தமெல்லாம் கிடையாது. அசல்… பெற்றவங்க தரகரிடம் சொல்லி வச்சி,  ஜாதகம் பொருந்தி மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் நேரிடையாக என்னை பார்த்து, பேசி இந்த கல்யாணம் நடந்தது.
 
   முக்கியமா என்‌ படிப்புக்கு எந்த தடையும் வராது. அதுல என் கண..வர் தெளிவாயிக்கார்” என்று மனம் போன போக்கில் மொழிந்தாள்.

     ”படிக்க விட்டா நல்லது தான்.” என்று டிபன் பாக்ஸை மூடி வைத்தாள்.

   இரண்டாம் பீரியட் ஆத்ரேயன் வகுப்புக்கு வரவும், ”குட் ஆப்டநூன் சார்” என்றனர் மாணவ மாணவிகள் கோரஸாக.

  பிரணவி மட்டும் வாய் திறவாமல் மௌனமாய் எழுந்தாள்.

   “குட் ஆப்டர்நூன் ஸ்டூடண்ட்ஸ். என்றவன் மடமடவென அட்டனன்ஸ் எடுத்தான்.

   ஒவ்வொரு மாணவி பெயரை உச்சரிக்க, “பிரசெண்ட் சார்” என்ற குரல்கள் குதுகலமாய் ஒலித்தது.

  பிரணவி பெயர் வரவும், “பிரணவி” என்று கூப்பிட “பிரசெண்ட் சார்” என்று கீச்சுக்குரலில் பதில் தந்து அமர்ந்தாள்.

    மாணவர்களையும் அதே போல பெயரிட்டு வருகை பதிவேடு எடுத்து அப்புத்தகத்தை மூடினான்.

   பாடம் நடத்தும் புத்தகத்தை எடுத்து, நேற்று எடுத்த பாடத்தின் தொடர்ச்சியை திருப்பும் முன், நேத்து நடத்திய பாடத்துல சந்தேகம் இருந்தா கேளுங்க. சந்தேகத்தை நீக்கிட்டு நெக்ஸ்ட் சேப்டர் போலாம்” என்று கூறி மேஜை மீது அமர்ந்து ஒற்றை காலை மட்டும் தரையில் ஊன்றி ஒயிலாக நின்றான்.‌

   “சார்… சந்தேகம் தான். ஆனா பாடத்துல இல்லை.” என்று ஒரு மாணவன் எழுந்தான்.‌

    “சந்தேகத்தை கேளு” என்று புத்தகத்தை கையில் வைத்து கேட்க, “சார் நீங்க கல்யாணம் ஆனவரா ஆகாதவரா?” என்று கேட்டு விட்டு பயந்து‌‌ நின்றான் துடுக்கான மாணவன் ஒருவன்.

   மாணவனை கண்டு, “ஏன் இந்த கேள்வி?” என்று ஆத்ரேயன் வினவ, “சார் ஒரே நாள்ல உங்க பெயர் இந்த காலேஜ்ல பேமஸ் ஆகிட்டிங்க சார். பொண்ணுங்க எல்லாம் உங்களை பத்தி தான் ஹாட் டாப்பிக். அட்லீஸ்ட் நீங்க கல்யாணமானவர் என்று தெரிந்தாளாவது சில பொண்ணுங்க உங்களை விட்டு எங்களை பார்ப்பாங்கல சார்” என்றான்.‌

  பிரணவியோ ‘ம்கூம் இப்படி யாராவது கிளம்பி வந்துடுங்க. ஏற்கனவே ஒரு காலேஜ்ல மிதுனா பண்ணியது போதாதா?’ என்று முனங்கினாள்.

ஆத்ரேயனோ மாணவன் கேட்டதற்கு சிரிப்பதா கண்டிப்பதா என்று புரியாது, அவனின் இயல்பான குணத்தோடு கடந்திடும் முடிவோடு, “எனக்கு கல்யாணமாகிடுச்சு. அதனால் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். நான் இங்க வந்தது பாடத்தை நடத்த. அதனால ஸ்டூடண்ட்ஸ் பாடத்தை கவனிங்க” என்று புத்தகத்தை எடுத்து பாடம் நடத்த ஆரம்பித்தான்.‌

    இன்றும் பிரணவி இருக்கும் திசைப்பக்கமே பாராது பாடம் நடத்தி முடித்து வெளியேறினான்.

    பிரணவிக்கும் ஆத்ரேயன் சென்றதும் அப்பாடி என்றானது.

   கல்லூரியில் ஆத்ரேயன் வகுப்பை கடந்திட, பிரணவி கற்றுக்க முடிவெடுத்தாள்.

  மாலை வீட்டுக்கு வரும் பொழுது, ஆத்ரேயன் காபி கலந்து சுவைத்திருக்க, சற்று தாமதமாக பிரணவி வந்தாள். அவளுக்கு பேருந்துக்கு காத்திருந்து ஒவ்வொரு நிறுத்தமாய் நின்று வர தாமதமாகின்றது.

   ஆத்ரேயனுக்கு அப்படியில்லை. அங்கே இருசக்கர வாகனத்தை முறுக்கினால் வீடு வந்து சேரும் வரை  பந்தய குதிரை போல சீரான வேகம்.

   பிரணவி வரவும் ஏறிட்டு பார்த்துவிட்டு காபியை பருக, அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.

   சற்று நேரம் கழித்து முகம் கைகால் கழுவி டிபன் பாக்ஸை எடீத்து வந்து கிச்சனில் வைத்து விம் போட்டு தேய்த்தாள்.
   
   “சார் உங்க டிபன் பாக்ஸ்” என்று கேட்க, “லஞ்ச் பேக்ல இருக்கு” என்று கூறிவிட்டு அவனது அறைக்குள் அடைகாத்தான்.‌

     சங்கவி போன் போடவும் “செல்லுக்கா” என்றான்.‌

   “என்னடா சொல்லணும். உனக்கு அங்க எல்லாம் சௌகரியமா இருக்கா? காலேஜிக்கு இரண்டு நாள் போனப்பிறகு கால் பண்ணலாம்னு தான் இப்ப போட்டேன். எப்படி போகுது. உன் பொண்டாட்டி என்ன பண்ணறா?” என்று ரயில் பெட்டியாக வினவவும் காதை தேய்த்து, ‘இப்பவும் போன் போடாமலே இருக்கலாம்’  என்றவன் மனதில் நினைத்ததை வெளியில் உரைக்காது, “எனக்கு காலேஜ் ஓகே. இரண்டு நாள்ல ஓரளவு பிடிச்ச மாதிரி இருப்பதே அதிசயம்.  

    பிரணவிகிட்ட நீயே பேசு. எனக்கு வேலையிருக்கு.” என்று துண்டிக்க போக, “டேய் போனை அப்படியே அவளிடம் பாஸ் பண்ணு. நான் பேசிக்கறேன்” என்று கூற பச் சலித்து கொண்டு பிரணவியிடம் நீட்ட, அவளோ பாத்திரம் கழுவியதும் தன் உடையிலேயே துடைத்து ஆத்ரேயனை காண, “அக்கா பேசணுமாம்” என்று கொடுத்தான்.‌
  
    பிரணவி பவ்யமாய் வாங்க, அவன் சட்டையில் போனை மீயூட்டில்  வைத்து, “அக்கா ஏதாவது கிறுக்குத்தனமா கேட்டா அதுக்கு ஏற்றது போல பெர்ஃபெக்ட் பதிலா பேசி சமாளி.‌ ஏதாவது பேசி குளறுபடி பண்ணிடாத. ஆஹ்… காலேஜ் வரை நான் பைக்ல கொண்டு போய் விடறதா சொல்லிடு.” என்று மீயூட்டை எடுத்துவிட்டு தந்தான்.

  தலையாட்டி வாங்கிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

   “அண்ணி.” என்று ஆரம்பித்ததும், “நல்லாயிருக்கியா பிரணவி. வீடு பொருட்கள் எல்லாம் அரேஞ்ச் பண்ணியாச்சா?” என்று சுமூகமாய் ஆரம்பித்தார் சங்கவி.

   “நல்லாயிருக்கேன் அண்ணி. கேஸ் அடுப்பு இல்லை. அந்த ஒரு குறை தவிர எல்லாம் நல்லாயிருக்கு.” என்று பதில் தந்தாள்.

   “கேஸ் அடுப்பா? அதான் இன்டெக்ஸ் ஸ்டவ், ஓவன் இருக்கே. கரண்ட் கட் ஆனா கூட கிச்சனுக்கும் உங்க மாஸ்டர் பெட்ரூமுக்கும் ஜென்ரேட்டர் வசதி இருக்கே.” என்று படை திறந்து பேசவும் “ஆஹ் இருக்கு அண்ணி. நான் இன்டெக்ஸ் ஸ்டவ்வ யூஸ் பண்ணுறேன். ஓவன் பழகிப்பேன். சா…அவரு… கத்து தர்றதா சொன்னார்.” என்றாள்.

   ‘சா…ர்’ என்றதும் ஆத்ரேயன் எதிரே நின்று பல்லை கடிக்க மாற்றிவிட்டாள்.

  “காலேஜிக்கு எதுல போற? இன்னிக்கு என்ன சமைச்சு?” என்று கேட்டாள்.
  
  “அ..அவரு கூட பைக்ல போறேன் அண்ணி. இன்னிக்கு காலையில் உப்புமா, மதியம் கேரட் சாதம் வெங்காய பக்கோடா செய்தேன்.” என்று கூறினாள்.

   “என் தம்பி உன் எதிர்ல இருந்து பேசறதை கேட்கறானா?” என்றதும், ஆஹ்… என்று திடுக்கிட, “ஆமான்னா தனியா வந்து பேசு. அசையவிடாம நிறுத்தினா பீரியட்ஸ் டேட் கேட்கறாங்கன்னு மழுப்பி தனியா வா. நீ பீரியட்ஸ் ஆரம்பிச்சாலே அவன் முகம் திருப்பிட்டு தனியா பேச அனுப்பிடுவான்.” என்றதும், பிரணவிக்கு பதிவை தந்தது.

    சங்கவி கூறுவது போல எதிரே நின்று தான் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தான் புரப்பஸர் ஆத்ரேயன்.

   “என்ன வந்துட்டியா?” என்றதும், ஆத்ரேயனோ “பேசலையா?” என்று செய்கையில் கேட்டான்.

   அவனை போலவே மீயூட்டில் போட்டுவிட்டு, “அவங்க பெர்சனலா சிலதை கேட்கறாங்க.” என்று நழுவ பார்த்தாள்.

‌  “ஏய்… ஒரு பெர்சனலும் தேவையில்லை இங்கிருந்தே பேசு.” என்றான்.

   “அவங்க பீரியட்ஸ் டேட் பத்தி கேட்கறாங்க சார். நீங்க முன்ன நின்றா எப்படி” என்று அலுத்தாள்.

    ஆத்ரேயன் தலையில் அடித்து, “போய் தனியா பேசு” என்றான்.‌

    பிரணவி தனியாக வந்ததும் மீயூட்டை விடுவித்து, “சொல்லுங்க அண்ணி.” என்றுரைத்தாள்.

   “அவன் இல்லையே?” என்றதும் இல்லைங்க அண்ணி.” என்றாள்.

   “இவ்வளவு நேரம் எதிர்ல தானே இருந்தான்.” என்று கேட்டாள் சங்கவி.

    “அப்படியெல்லாம் இல்லைங்க அண்ணி” என்றாள்.

   “என் தம்பியை பத்தி எனக்கு தெரியும் பிரணவி.

  சரி விடு…

   அவன் பைக்ல தனியா வந்ததா அங்க வேலைக்கு ஒருத்தரிடம் சிபாரிசு செய்த அங்கிள் சொல்லிட்டார். உன்‌ புரப்பஸருக்கு பொய் சொல்லித்தர தெரியலை. உனக்கு அதே பொய்யை சரியா பேச தெரியலை.

    என்னவோ நடுவுல நடந்த பிரச்சனையை தவிர்த்து உன்னை அவனுக்கு கட்டி வச்சது நாங்க. அவன் உன்னை கல்யாணம் பண்ண ரொம்ப தயங்கினான்.‌ உண்மையிலேயே அவனை ப்ரைன் வாஷ் பண்ணி தான் விட்டது.

   ஆனாலும் என்‌தம்பி அவ்வளவு சுலபத்துல உன்னை கட்டியதுக்கு உங்கப்பா தான் காரணம்.

  கல்யாணம் ஆனதால் நீங்க அன்பா வாழ்க்கையை ஆரம்பிப்பிங்கன்னு எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஏன்னா என்‌ தம்பி கேரக்டர் அப்படி.

   அவன் பிடிச்ச முயலுக்கு மூனுக்கால் என்று அடம் பிடிக்கலாம்.

  நீயாவது அவனோட வாழணும்னு எண்ணமிருக்கா? உங்க பாட்டி அட்வைஸ் பண்ணியிருந்ததா கேள்விப்பட்டேன். எங்கதரப்புல அம்மா என்ன சொன்னாங்களோ?
என் தம்பிக்கு கல்யாணம்னு நான் ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.

    என் கல்யாணத்துல அவன் பண்ணின அலப்பறையை விட நான் நாத்தனாரா ரொம்ப ரகளை பண்ணி, மேடையில என் தம்பி கட்டிக்க போறவளை நெளிய வச்சி அவனை வெட்கப்பட வச்சி, அவன் வாயல அவன் பொண்டாட்டிக்கு ஆதரவாக பேசணும்னு என்னனென்னவோ நினைச்சேன்.
   இப்பவும் உனக்கு ஆதரவாக பேசறான்.‌‌ ஆனா ஒரு ஸ்டூடண்ட் படிக்கணும்னு நினைக்கிற புரப்பஸர் மைண்ட்ல.

    இந்த ஒரு வருஷ வாழ்க்கையை வச்சி பல வருடம் வாழ வாழ்க்கைக்கு அடித்தளம் போடாம இருக்காதிங்க.

    ரூம்லயாவது தங்கறானா? இல்லை ஹால்ல படுத்துக்கிடக்கானா” என்று கேட்டதும் வாய் திறக்காமல் கேட்டிருந்த பிரணவியோ,  “அண்ணி. ரூம்ல தான் படுத்துக்கறார்” என்றாள்.

   சங்கவிக்கு தெளிவாக கூறவில்லை. ஆளுக்கு ஒரு ரூமில் படித்திருப்பாரென்று நினைத்தால் ‘அவன் உன்னுடன் ஒரே அறையில் இருக்கின்றானா?’ என்று கேள்வியை மாற்றியிருப்பார்.

   “பரவாயில்லை… இந்தளவாது மனசு வந்ததே. உன் நம்பருக்கு இனி பஸ்ல ரிட்டர்ன் வர்றப்ப கால் பண்ணுவேன். சரியா?” என்று வினவ, மறுக்க முடியாமல் தலையாட்டினாள்.‌

   “என்ன உம்முனு இருக்க?” என்று அதட்டவும், தலையாட்டினேன் அண்ணி” என்றாள்.

   சரி சரி போனை அவனிடம் கொடு” என்றதும் அப்பாடி என்று நெஞ்சில் கைவைத்து ஆத்ரேயனை தேடினாள்.

   அவன் அறைக்கு சென்று குறுக்கும் நெடுக்கும் நடந்தவன் இவள் கொலுசொலி கேட்டதும், “பேசிட்டியா” என்று வந்தான்.

   அவனுக்கும் தலையாட்டி முகம் பாராது கொடுக்க, அவனுமே அக்கா என்னென்ன கேட்டாளோ? இவயென்ன என்ன சமாளிச்சாளோ? வேறேதாவது என்றால் கேட்கலாம். பீரியட்ஸ் பத்தி பேசியிருக்கறப்ப என்னத்த கேட்கறது. 

   எப்படியும் எடக்குமடக்கா பேசியிருப்பா’ என்று அக்காவை பற்றி அறிந்தவனாய் இருந்தான்.

-தொடரும்.
   
  

14 thoughts on “மௌனமே வேதமா-5”

  1. Sangavi kita Athreiyan oda endha pechum edupada la eppudi partha mathiri correct ah avan ah pathi solluran ga
    Pranavi rombhavae pavam ella pakka um vara kelvi ku bathil solli yae nondhuduva pola

  2. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 5)

    அய்யய்யோ…! ஆத்ரேயன் அவன் புடிச்ச முயலுக்கு மூணே கால்ன்னு சொன்னாலும் பரவாயில்லைங்க, கிறுக்குப் புடிச்ச பயமவன், மூணே முக்கால்ன்னு சொல்றது தான் கொடுமையே..! எப்படின்னு கேட்டா, மூஞ்சியை முக்கால் முழத்துக்கு தூக்கி வேற வைச்சுக்குறான்… சரியான குசும்பு புடிச்சவன். இதுல சார்ன்னு கூப்பிடக் கூடாதுன்னு வேற சொல்றான், வேறெப்படி கூப்பிடறதுன்னும் சொல்ல மாட்டேங்கிறான். முன்னால போனா முறைக்கிறான், பின்னாடி வந்தா கடுக்கிறான்
    எங்கே போய் முட்டிக்கன்னே தெரியலை.

    போகட்டும், இந்த ப்ரபொஸர் அக்காவுக்காவது பயப்படறானே… சரியான வணங்காமுடி.

    அது சரி, யாரு அந்த மிதுனா ?
    அவ அப்படி என்னத்தை பண்ணி வைச்சு, இவனை இப்படி முசுடு புரபஸரா மாத்தி வைச்சான்னு தெரியலையே..?

    அம்மா பிரணவி, உனக்கு இனி நிதைக்கும் நித்ய கண்டம் பூரண ஆயுசு தான் போ..!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *