Skip to content
Home » மௌனமே வேதமா-6

மௌனமே வேதமா-6

அத்தியாயம்-6

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சங்கவி அண்ணி பேசியதையும் பாட்டி பவானி பேசியதையும், மனதில் ஓடவிட்டு பேனாவை கையில் பிடித்தபடி சிந்தனையை எங்கேயோ செலுத்தினாள்.

நேற்று இதே நேரத்தில் சாப்பிட கேட்டாளே இன்று ஏதாவது அக்கா பேசியதில் யோசிப்பாளோ? என்ற ஐயத்தோடு ஹாலுக்கு வந்தான்.

கதவு மூடியிருக்க மெதுவாக கை வைக்கவும் லேசான கீறிச்சிட்டு திறந்தது.

சிந்தனையை தறிக்கெட்டு செலுத்தியவளுக்கு ஆத்ரேயன் காண்பது உணரவில்லை.

“பிரணவி” என்றதும் ஆஹ் சார்” என்று எழுந்தாள்.

நோட்டும்‌ புத்தகமும் கீழே சரிந்தது. பேனா உருண்டு அவன் காலடி வந்தடைந்தது.

அதனை எடுத்து, “அக்கா போன் போட்டப்பவே நினைச்சேன். ஏதாவது திங்க் பண்ணிட்டு படிப்பை புறம் தள்ளிருப்பன்னு.
என்ன பேசினா?” என்று அதட்டினான்.

பிரணவி ஆத்ரேயனை ஏறிடாமல் தலை கவிழ, “இங்கப்பாரு… உன் பெர்ஸன்ல் லைப்ல யாரும் தலையிட கூடாது.

அது என் பேரண்ட்ஸ், உன் பேரண்ட்ஸா இருந்தாலும் சரி. அப்படியிருக்க என் அக்கா நம்ம லைப்பை டிசைட் பண்ண விடாத.
உன்னை கல்யாணம் பண்ணியதுக்கு முக்கிய காரணம். என்னால உன் லைஃப், உன் ஸ்டடிஸ் பாதிக்கப்படக்கூடாதுன்ற ஒரே காரணத்துக்கு தான்.

கடைசில என்னாலயே என் வீட்டு ஆட்களால் உன் ஸ்டடிஸ் பாதிக்க ஆரம்பிக்குது.

கல்யாண ஆனா தேவையில்லாம பேசுவாங்க. அதை இக்னோர் பண்ணிட்டு படிப்புல கவனத்தை வைக்கணும்.” என்று கூற‌ தலையாட்டினாள்.

“உன்‌ பே‌னா.” என்று நீட்டவும் பெற்றுக் கொண்டாள்.

புத்தகம் நோட்டை எடுத்து எழுத முனைய, பேனா விழுந்ததில் எழுதாமல் சதி செய்தது.

“பச்” என்று சலித்து கொள்ள, ஆத்ரேயன் திரும்பினான்.

கீழே விழுந்ததில் பேனா முனை தரையில் மோதி சரியாக எழுதவில்லை என்பது புரிந்தது.

தன் ஷர்ட் பேக்கெட்டில் இருந்து கோல்டன் பார்க்கர் பேனாவை வழங்க, வாங்க தயங்கினாள்.

“எழுதிட்டு கொடு” என்றான்.

அவளும் வாங்கிக் கொண்டு எழுதினாள்.

அசைமெண்ட் புத்தகத்தை பார்த்து தானாக எழுத ஆரம்பித்தாள்.

வேறென்ன செய்ய ஹாலில் ஆத்ரேயன் சோபாவில் அமர்ந்து இவளை கண்பார்வையில் வைத்திருக்க சிந்தனையை ஓடவிடாமல் எழுத ஆரம்பித்தாள்.

இப்படி வீட்டிலும் புரப்பஸராக கண்கானிக்க எதிரே உட்கார்ந்தால்…

பிரணவிக்கு ஒரு பக்கம் சிரிப்பாக இருந்தது.

பாட்டி பவானி பேசியது, அன்னை அமலா கொடுத்த அறிவுரை, அத்தை காஞ்சனாவின் போதனை, இன்று சங்கவி அண்ணியின் சுட்டிக்காட்டிய பேச்சு எல்லாமே ஒரு பெரிய பெட்டியில் மூடி வைத்து பூட்டு போட்டு அதற்கு மேல் ஆத்ரேயன் வீற்றிருப்பது போல தோன்றியது.

அவளாக கை வலிக்க எழுதி முடித்து திரும்ப கோதுமை தோசையும், தக்காளி ஊறுகாயும் தட்டில் எடுத்து வந்திருந்தான்.

“எழுதற கவனத்துல இருந்த, அதனால் தோசை சுட்டுட்டேன்.” என்று கொடுக்க, “உங்களுக்கு ஏன் சார் சிரமம்?” என்று வாங்கினாள்.

“இதெல்லாம் சிரமம் இல்லை.” என்று கூறிவிட்டு‌ அகலவும் பிரணவி சாப்பிட்டாள்.‌

நேற்று போல வெளிக்கதவை எல்லாம் அடைத்து விட, பிரணவி அறைக்கு அடியெடுத்து வைக்க, அவனும் அவனது அறைக்கு சென்றான்.

‘இத்தனை நாளா புரப்பஸர் மட்டுமா இருந்தார். இப்ப ஹாஸ்டல் வார்டனா மாறிட்டார்.’ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

அடுத்த நாள் பருப்பு ரசமும், அவரை பொரியலும் வைத்துவிட்டு, நேற்று கரைத்த கோதுமை மாவில் தோசை சுட்டு தேங்காய் சட்னி வைத்தாள்.

அதெல்லாம் கூட சுவையாக செய்யவும் ஆத்ரேயன் சாப்பிட்டு புறப்பட்டான்.

பிரணவியும் அவளது புத்தக பையை மாட்டிக்கொண்டு பேருந்தில் ஏறிக்கொண்டாள்.

நான்கு நிறுத்தம் தள்ளி மோனிகா ஏறவும் அவள் பையை வாங்கி மடியில் வைத்துக் கொண்டாள். மோனிகா நின்றபடி வந்தாள்‌.

ஒரு மூன்று ஸ்டாப் நின்று தான் வந்தாள்.

ஓரிடம் வந்ததும் குனிந்து ஜன்னல் பக்கம் பார்க்க, பிரணவியும் எங்க பார்க்கின்றாளென்று திரும்ப, ஆத்ரேயன் பைக் சிக்னலில் நின்றிருந்தது.

“அது ஆத்ரேயன் சார் தானே?” என்று மோனிகா கேட்க, ஹெல்மெட் அணிந்தவனாக ஆத்ரேயன் இருக்க, “ம்ம்” என்றாள் பிரணவி.

“இந்த மனுஷன் ஹெல்மேட் போட்டாலும் கண்டு பிடிச்சிட்டேன்.” என்று பெருமையாக பேசிக்கொண்டாள்.

பிரணவிக்கு அந்த பேச்சு உவப்பாக இல்லை என்றதால் அம்மாவிடம் பேசுவதாக தவிர்த்தாள்.

உண்மையில் அமுதா அழைத்திருந்தார். பஸ் ஏறும் நேரமென்பதால் தவிர்த்து இருந்தவள் பஸ்ஸில் உட்கார்ந்ததும் பேச முடிவெடுத்து மறந்திருந்தாள்.

“என்னம்மா?’ என்று தான் கேட்டாள்.

“என்னடி சமைச்ச?” என்று அம்மாவின் முக்கிய பணியை தான் தலையாய கடமையாக கேட்டார்.

“நேத்து காலையில உப்புமா, மதியம் கேரட் ரைஸ் பக்கோடா. நைட் கோதுமை தோசை. இப்ப காலையில் அதே கோதுமை தோசை மாவு ஊற்றி தேங்காய் சட்னி. மதியத்துக்கு பருப்பு ரசம், அவரக்காய் பொரியல். நானும் அவரும் காலேஜிக்கு போறோம். காலேஜ் போனா போன் பேச முடியாது.
சீக்கிரமா சொல்ல வந்ததை சொல்லுங்க.” என்றாள்.

“மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா பழகறாரா?” என்று அன்னை மனதாக கேட்டாள்.

“நல்லா பழகறார். என்ன பிரச்சனை. அவர் கூடயிருக்கறப்ப ஏதாவது கேட்டுட்டே இருக்காதிங்க. நான் ஈவினிங் வீட்டுக்கு வந்து பேசறேன்” என்று துண்டித்தாள்.

அமலாவும் பைக்கில் போகும் போது பேசினால் மாப்பிள்ளைக்கு கேட்குமென எண்ணினார்.‌ மாப்பிள்ளை தான் வண்டியை முறுக்கி கொண்டு முன்னால் சென்று விட்டானே.

பிரணவி ஆத்ரேயன் வாழ்க்கை மற்றவர்கள் தலையீடாமல் இப்படி தான் அழகாக கடந்தது.

அவர்கள் உண்டு அவர்கள் வேலையுண்டு என்று.

கல்லூரிக்கு சென்று பாடம் நடத்த, வீட்டுக்கு வர, சில நேரம் பிரணவியை கவனிப்பான்.‌

தான் கொடுத்த பேனாவை வைத்து எழுதுபவள், எழுதும் ஆர்வத்தில் தலையில் பேனாவை சொறுகுவாள். பேனாவை உதட்டில் வைப்பாள். சில நேரம் லேசாக அவள் பல்லில் கடிபடும்.

அதை பார்த்தபின் அவன் பேனாவை ஏன்டா கொடுத்தோம் என்றெண்ணுவான்.

ஆனாலும் அவன் பேனாவை கேட்கவில்லை.

பிரணவிக்கு படிப்பு வீடு சமையல் புது நட்பு என்று பொழுது போனது. ஆத்ரேயன் வகுப்பு கூட அவள் பக்கம் பாராது பாடம் நடத்தி செல்லவும் இவளுக்கு வசதியாக போனது.

அதே போல் மற்ற மாணவிகளுக்கு வசதியாக இருந்திருக்கும் போல, ஆத்ரேயனை வஞ்சனையில்லாமல் பார்த்து ரசித்தனர்.

அடிக்கடி பெண்கள் பக்கம் சலசலப்பு பேச்சு கேட்க, “கேர்ள்ஸ் பேசாம பாடத்தை கவனிக்கறிங்களா?” என்று அதட்டுவான்.‌

அதன்‌பின் வகுப்பு அமைதியாகும். அன்றும் அப்படியே சலசலப்பு கேட்க திரும்பியவன் பார்வைக்கு பிரணவி மோனிகாவிடம் பேசுவது கண்ணில்படவும் ”பிரணவி கிளாஸ் நடக்கும் போது என்ன பேச்சு. வெளியே போ” என்று கத்தினான்.

இதுவரை பூ முகமாக அழகனாக காட்சி தந்த முகம் ரௌத்திரம் பொங்க அதட்டவும் வகுப்பில் நிசப்தம் மட்டுமே.

“ஒவ்வொருத்தர் வீட்லையும் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு படிக்க அனுப்பறாங்க. அப்படியிருக்க தேவையில்லாம பேச எப்படி மனசு வருது.

என் கிளாஸ்ல அமைதியா பாடம் கவனிக்கறவங்க உள்ள இருங்க. இல்லையா வெளியே போயிட்டே இருக்கலாம்.” என்று காட்டு கத்தலில் பிரணவிக்கு அழுகை வந்தது.

ஆனால் பாடம் எடுக்கும் நேரம் பேசியது தன் தவறு என்று மௌனியானாள்.

இங்கு வந்து இந்த இரண்டு மாதத்தில் முதல் முறை கோபத்தை பார்க்கின்றாள்.

முன்பு மிதுனாவிடம் ஆத்ரேயன் காட்டிய ஆக்ரோஷத்தை காட்டிலும் குறைச்சல். ஆனாலும் பிரணவிக்கு ‘சார் திட்டிவிட்டார்’ என்றதில் சிறு வருத்தம் பெருகியது. அது மாலை திரும்பும் வரை அதே வருத்தம் நீடித்தது. மோனிகாவிடம் கூட பேசாமல் பேருந்தில் வந்தாள்.

நமக்கு எப்போழுது பள்ளியில் கல்லூரியில் பிடித்த ஆசிரியர் என்று சிலர் இருப்பார்கள். அப்படி தான் கல்லூரியில் ஆத்ரேயனை அவளுக்கு பிடிக்கும்.

அதுவும் மிதுனா போன்ற பெண் அவரிடம் காதலென கதைத்து வழிந்தும் முகம் கொடுக்காது பொறுப்பான ஆசிரியராக நடந்துக் கொண்டது ஆச்சரியம் இல்லையா?!

இதே ஆத்ரேயன் இடத்தில் வேறு ஒரு‌ புரப்பஸர் இருந்தால் மிதுனா போல உருகிஉருகி காதலிப்பதாக உரைத்தவளை மஞ்சத்தில் விழவைத்து காரியம் சாதித்து இருப்பார். மிதுனாவை அறைந்து அறிவுரை கூறி ஒரு பெரிய பிரச்சனையை சந்தித்து இதோ இப்படி வேறு கல்லூரியில் மாற்றிக்கொண்டிருக்க மாட்டார். இன்று தன்னை திட்டினாலும் அவர் மேல் தப்பில்லை என்று தான் பிரணவி அவள் மனதிடம் வாதாடுவாள்.

நடந்ததை எல்லாம் நினைத்து பார்க்க ஆரம்பித்தாள். சென்னை ‘சாரதா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி’ என்ற தனியார் கல்லூரியில் ஆத்ரேயன் கல்லூரி பேராசிரியராக இருக்க, பிரணவி இரண்டாம் வருடத்தில் படித்திருந்த காலம்.

கல்லூரியில் திருமணம் ஆகாத புரப்பஸர் என்ற காரணத்தாலும், பார்க்கவும் கட்டுமஸ்தான உடலும் அழகும், பழக இனிமையாகவும் இருப்பவன் ஆத்ரேயன்.‌ அதனால் அங்கே பயிலும் கல்லூரி மாணவிகள் சிலரும் ஆத்ரேயன்‌ என்றால் கொள்ளைப் பிரியம்.

ஆத்ரேயன் வகுப்பு என்றால் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் கூட வந்துவிடுவார்கள். பலரின் கனவு நாயகனாக அவனறியாது வலம் வந்தான்.

அவன் கல்லூரி படிக்கும் போது பலருக்கு க்ரஷாக இருந்தான்.‌ பேராசிரியராக மாறிய போதும் இம்மியளவு மாற்றமின்றி அதே போல பல இதயத்தை கொள்ளை அடித்தான்.

சீனியர் மாணவி மிதுனாவின் மனதையும் ஆத்ரேயன் கொள்ளையிட்டு இருந்தான்.

அதுவும் இரண்டு வருடமாய் நேசிக்கின்றாள். ஆத்ரேயன் வரும்போது போகும் போது மற்ற மாணவிகள் என்னதான் ஏக்கமாய் பார்த்தாலும் ஆத்ரேயனின் நேர்பார்வையில் ‘மாணவிகள்’ என்ற வட்டத்தில் சென்று கொள்வார்கள்.

மிதுனா மட்டும் அதை தாண்டி காதல் அம்பை வீசினாள்.

ஏற்கனவே புரப்பஸர் மாணவியை ‘தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது’ என்றும், ‘புரப்பஸர் ஸ்டூடண்ட் பந்தமானது புனிதமானது’ என்று கொள்கையில் இருப்பவன்.

அவனுக்கு வேதியல் பாடம் எடுப்பதால் மிதுனாவின் வேதியல் பார்வை அறியாமல் இருப்பவனா?

முதலிலேயே கண்டித்து அனுப்பினான்.

மிதுனாவின் மதிமயக்கம் ஆத்ரேயன் மீது பித்தாக, செவிகள் முடமாகியது. அவள் புத்திமதியை கேட்க மறுத்தாள்.

முதலில் பார்வையால் பறைச்சாற்றிய பொழுது உதாசினம் செய்துவிட்டான்.‌

நேரில் படிப்பில் சந்தேகம் என்று‌ கூறி நிற்க வைத்து காதலிப்பதாக கதைக்க, ஆத்ரேயன் “நீ படிக்க வந்தா படிக்க மட்டும் செய்யணும். காதல் கீதல்னு சுத்த கூடாது.
அட்லீஸ்ட் காலேஜ்ல கூட படிக்கிற பசங்களை விரும்பினா கூட பரவாயில்லை. என்னை காதலிக்க கூடாது. இது தப்பும் மா” என்று அறிவுறுத்தினான்.‌

அதை தாண்டி வந்து நின்றவளிடம் எரிந்து விழுந்தான். வீட்டில் பெற்றவரிடம் கூறிவிடுவதாக பயமுறுத்தி தள்ளி நிறுத்த போராடினான்.

உதாசினங்கள், எரிந்து விழுதல், அவமானம், என்று அனைத்தையும் தூரயெறிந்து ஆத்ரேயனை மணக்கும் முடிவோடு நடமாடினாள் மிதுனா.

மிதுனா வீட்டில் ஒரே பெண். வசதியான குடும்பம் என்பதால் அவளை உள்ளங்கையில் தாங்குபவர்கள். அதனாலே அளவுக்கதிகமாக செல்லமும் கொடுத்து கெடுத்து குட்டி சுவராக்கியிருந்தனர்.

அதன் பலன் மனம் விரும்பியதை அடைந்தே தீரும் குணம்.

கல்லூரியில் மிதுனா ஆத்ரேயன் என்று வகுப்பறை பலகையில் யாரோ எழுதியதாக காட்டி வகுப்பறைக்குயில் தன் காதலை பகிரங்கப்படுத்த, அடுத்து வகுப்பிலேயே கூப்பிட்டு வைத்து எல்லோர் எதிரிலும் திட்டி அனுப்பினான்.

அன்று தான் எம்.எஸ்.சி படிக்கும் சீனியர் மாணவி மிதுனா, புரப்பஸர் ஆத்ரேயனை விரும்புவது சிலரால் கசிந்து அங்கு பயின்ற பி.எஸ்.சி‌ மாணவி பிரணவிக்கு தெரிய வந்தது. பிரணவிக்கு மட்டுமில்லை சிலருக்கு பரவியது. அப்படியே சென்றாலும் மேனேஜ்மென்ட் வரை பரவியிருக்க வாய்ப்பில்லை.

வீட்டுக்கு வந்தவள் கையில் நரம்பு மண்டலத்தை கீறி முடித்தாள் மிதுனா. மெத்தையில் மல்லாக்க படுத்து ரத்தாறு ஓடியது.

அதன் பின்….

நடந்தவைகள் தான் ஆத்ரேயன் வாழ்வை சூறையாடியது.

-தொடரும்.

15 thoughts on “மௌனமே வேதமா-6”

  1. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 6)

    அது சரி, இவன் ஏன் இப்ப பவானி பாட்டி, அன்னை அமலா, அத்தை காஞ்சனா, சங்கவி அண்ணி… இவங்க எல்லாம் பேசிய பேச்சை ஒரு பெரிய பெட்டியில போட்டு பெரிய பூட்டா போட்டு அதுக்கு மேல வேற ஏறி உட்கார்ந்திருக்கான்னு
    புரியலையே…? ஒருவேளை, இதைத்தான் பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல்ன்னு சொல்லி வைச்சாங்களோ…?

    இதென்ன அதிசயம் ? வண்டியை முறுக்கிட்டு போறதாலத்தானே, அதனை
    மாப்பிள்ளை முறுக்குன்னே சொல்றாங்க.

    அட… ஆத்ரேயனோட “புரபஸர் மாணவியை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது, புரபஸர் ஸ்டுடண்ட் பந்தம் புனிதமானது”ங்கற கொள்கை சூப்பர்.

    ஒருவேளை, அதனாலத்தான் பிரணவியை கல்யாணம் பண்ணிக்கிட்டப் பிறகும்
    அவளை மனைவியா பார்க்காம
    வீட்லேயும் ஒரு மாணவியாவே பார்க்கிறானோ…? அவளோட படிப்பும் கெடக் கூடாது, அவனோட கொள்கையையும் உடைக்க கூடாதுன்னு படிச்சு முடிக்கிற வரைக்கும் ஸ்டிரிக்ட் புரபஸரா இதையேத் தான் மெயிண்டெய்ன் பண்ணப் போறான்னு நல்லாவேத் தெரியுது.

    அடிப்பாவி மிதுனா…! உன்னோட கொழுப்பெடுத்த வேலைக்கு அவனை ஏன்டி பலியாக்குன…? அப்படியே உன்னோடது அமரக்காதலா இருந்தாலும் படிச்சு முடிச்சிட்டு, பெத்தவங்க மூலமா அப்ரோச் பண்ணியிருக்கலாமே. அதைவிட்டு போர்ட்ல நாறடிச்சு, க்ளாஸ் ரூம்ல பழி போட்டு, கையை அறுத்து… உன்னோட அமரகாதலுக்கு நீயே ஏன்டி சமாதி கட்டிக்கிட்ட…? சரியான கிறுக்கு புடிச்சவளா இருக்காளே.

    இதுங்க எல்லாம் படிக்காம தப்பிக்கத்தான் இப்படி பண்ணுதுங்களோ என்னவோ..?
    நான் படிக்கிறச்ச கூட ஒருத்தி இப்படித்தான் அமரகாதல், அமராகாதல்ன்னு சொல்லி,
    படிக்காமலே தபாய்ச்சு, அந்த ஆளையே கட்டிக்கிட்டு….
    அந்த ஆளோட முதல் பொண்டாட்டி, குழந்தை வாழ்க்கையில மொத்தமா கும்மியடிச்சிட்டா. இத்தனைக்கும் அப்ப அவ டென்த், அந்த ஆளு மேத்ஸ் டீச்சர், அவ பணக்காரி, அவன் ஆர்டினரி. தவிர, அந்த ஆளு ஒவ்வொரு வருசமும் ஒரு பல பொண்ணுங்களை கணக்கு பண்ணிட்டே (சைட் அடிச்சிட்டே)
    இருப்பான். ஆனா, கட்டிக்கிட்டது இவளை மட்டும் தான். (பொண்டாட்டி போக) அதெப்படி தான் மைனர் பொண்ணை திருட்டுத்தனமா கட்டிக்கிட்டாரோ தெரியலை…?
    அதற்கப்புறம் விஷயம் லீக்காகி
    இவளோட ஸ்ட்ராங்நஸ்ஸாலயும், வீட்டுக்கு கடைசி பொண்ணு என்கிறதாலேயும் அவ நினைச்சதை சாதிச்சிட்டா. இத்தனைக்கும் அவளுக்கு அண்ணனுங்க தான் அதிகம். கொஞ்ச நாள் வீட்ல சேர்த்துக்கலை. ஆனா குழந்தை உண்டானப்பிறகு ரெண்டு பேரையும் சேர்த்துக்கிட்டாங்க. ஆனா, விஷயம் தெரிஞ்சு ஸ்கூல்ல விட்டு ரெண்டு பேரையும் தூக்கிட்டாங்க. அந்த கதையெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறமும் வந்து சுவாரசியமா சொல்லுவ.
    தெலுங்குகாரி. இந்த லஷ்ணத்துல அடிக்கடி ஒரு பாட்டை வேற பாடிட்டே இருப்பா
    அதுவும் ஸ்டேஜ் மேல ஒவ்வொரு பங்சன் அப்பவும்.

    “என் மாமன் ஒருநாள்
    மல்லிகை பூ கொடுத்தான்….”
    (படம்: ரோசா பூ ரவிக்கைகாரி)

    இந்த பாட்டை கேட்டா, அவ அந்த பாட்டை ஏன் பாடினாங்குற அர்த்தம் உங்களுக்கே புரியும். எனக்கே ரொம்ப நாள் கழிச்சுதான்ங்க அதோட அர்த்தமே புரிஞ்சது. அதுவரைக்கும் அவ ஸ்டேஜ் ஏறினாலே, பாடினாலே அந்த பாட்டை அப்படி ரசிப்போம். ஆனா, விஷயம் புரிஞ்சப்பிறகு
    எங்களுக்கு சீ’ன்னு ஆகிடுச்சு போங்க… ஏன்னா, அப்ப நான் ஒரு கூமுட்டை….! ஹ..ஹ..ஹ…!

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. M. Sarathi Rio

    மௌனமே வேதமா…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 7)

    அடேய்…! கல்யாணம் சொன்னவுடனே எந்த பொண்ணாயிருந்தாலும் பரவாயில்லை சொல்லிட்டு..
    பிரணவி போட்டோவை பார்த்துட்டு இவ்வளவு ஷாக்கானா எப்படி ஆத்ரேயா..?

    இந்த மிதுனா இத்தனை பெரிய வேலையைப் பார்த்தாளா…?
    ஆனாலும் இது ரொம்ப ஓவர் தான். உண்மை தெரிஞ்சா, தன்னோட பேர் கெடறது இல்லாம, லைஃப்பே ஸ்பாயில் ஆகிடும்ன்னு கூடவா இவளுக்கு புரியலை. இது இருந்து ஒண்ணு புரியுது மாணவி நினைத்தாள் நடத்தி காட்டுவாள்ங்கிறதுக்கு தவறான உதாரணம் இந்த மிதுனா தான். நல்ல வேளை, இவ கிட்டயிருந்து ஆத்ரேயன் தப்பிச்சது பிரணவி கைங்கர்யம் தான். ஸோ… ஆத்ரேயனோட உடல், பொருள், ஆவி எல்லாமே இனி டெ்டிகேட்டட் டூ பிரணவிக்கு மட்டும் தான்.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!