Skip to content
Home » ராஜாளியின் ராட்சசி-5

ராஜாளியின் ராட்சசி-5

அத்தியாயம்-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

அர்னவ் மிரட்டவும், பாவனா கையெடுத்து அர்னவை கும்பிடவும், ஜீவனால் பொறுத்துக் கொள்ள இயலாமல், “என்ன ஹீரோவா அவதாரம் எடுக்கறியா? இவ என்னிடம் பணத்தை வாங்கியிருக்கா. இங்க வந்து மறுக்கறா. எடுத்து சொன்னா அவளே என்னோட காலை பிடிப்பா.” என்று அர்னவிடம் பேசியவன் பாவனா பக்கம் திரும்பி, “என்னடி பத்தினி மாதிரி அவன் எதிர நாடகம் ஆடற. வேலைக்கு வந்த ஒரே மாசத்துல எண்பதாயிரம் கைநீட்டி வாங்கியிருக்க. அதோட ட்ரிப்க்கு வர சம்மதிச்சு ஓகேன்னு டெர்ம்ஸ் ஆஃப் கண்டிஷன்ல சொல்லியிருக்க. இங்க நான் ரேப்பே பண்ணினாலும் உன் சம்மதம் அதுல இருக்கு. என்னடி நடிக்கற? உன்‌ பிரெண்ட் இதெல்லாம் சொல்லாமலா இங்க வந்த?” என்று ஜீவனின் வார்த்தையில் பாவனா திடுக்கிட்டாள்.

“சார் அதெல்லாம் நான் சரியா கூட படிக்கலை. எனக்கு அவசரமா பணம் தேவைப்பட்டது. பிரெண்ட்ஸிடம் கேட்டேன், அவ உங்களிடம் வேலை இருக்கு முன்பணம் தருவாங்கன்னு சொன்னா. மத்தபடி டெர்ம்ஸ் ஆஃப் கண்டிஷன் எதுவுமே நான் சரியா படிக்கலை‌. என்னை விட்டுடுங்க. நீங்க நல்லவர்னு நினைச்சேன்” என்றாள்.

“அதெல்லாம் இங்க வந்து சொல்லற? தனிவிமானத்துக்கு எவ்ளோ லட்சம் தெரியுமா செலவு பண்ணிருக்கேன். ஒரு நாள் தொழில் ரீதியா முடிந்துப்போச்சு. அடுத்து வர்ற நாள் நீ என் கூட படுக்க மட்டும் தான். லட்சம் லட்சத்துல தண்ணியா செலவு பண்ணி தனி தீவுல வந்தது என்னோட நீ பிஸிக்கலா இருக்க தான்.” என்று உறுமியவன், “நீ யாருடா..‌. உன் வேலையை பாரு. இவளுக்கு உதவி செய்யறேன்னு வேலையை இழக்காத.” என்று அர்னவ் அடித்ததை கூட பொருட்படுத்தாது மன்னித்ததாக ஜீவன் கூற, அர்னவோ பாவனாவை கவனித்தான்.

“சார் ப்ளிஸ்… உதவுங்க. நான் என்‌ மானத்தை விற்று எந்த பணத்தையும் இவரிடம் கேட்கலை.” என்று கெஞ்சினாள்.

இதில் சந்தோஷோ மச்சான் பிளைட் ஓட்ட வா. எனக்கு இது சரியாபடலை” என்று அழைத்தான்.

“போ.. உன் பைலட் வேலையை ஒழுங்கா பாரு. இவ என் கூட படுத்து பதிலுக்கு எல்லாம் அடைச்சிடுவா. என்ன கொஞ்சம் முரண்டு பிடிப்பா. முரண்டு பிடிச்சாலும் இந்த விஷயத்துல நல்லாதான் இருக்கும்.” என்று பாவனாவை நெருங்க, அடித்திட முனைந்தாள்.

“நீ ஆம்பளை தானே உனக்கு தெரியாது‌. போடா போ” என்று ஜீவன் கூறி பாவனா கைகளை பிடித்திட, பாவனா ஜீவன் கையை உதறி, அர்னவ் பின்னால் ஒளிந்து அவன் தோளை பற்றி “ப்ளீஸ் காப்பாத்துங்க. என் தெய்வமா உங்களை காலத்துக்கும் நினைப்பேன்” என்று ஒரு வார்த்தை உதிர்த்தாள்.

அதை தாண்டி ஜீவன் பாவனாவை பிடிக்க, அங்கே இருமலைகள் மோதிக்கொண்டது போல அடுத்தடுத்து கலவரம் உண்டாகி சேதாரமானது.

“அர்னவ்… தேவையில்லாத வேலை இங்க வா.” என்று சந்தோஷ் பதட்டமாய் கூப்பிட, அர்னவ் செவிக்கு எட்டவில்லை.

ஜீவன் அர்னவின் அடியில் போராடி தோற்றவன், அவன் கொண்டு வந்த பையில் எதையோ தேடினான்.

பாவனாவோ அர்னவிடம், “சார்‌ என்னை எப்படியாவது சென்னையில் சேர்த்துடுங்க. உங்களுக்கு கோடிப்புண்ணியமா போகும்” என்று கெஞ்சி மன்றாட, அர்னவ் தோளை உரசி புல்லட் ஒன்று பாய்ந்தது.

லேசாக புஜத்தை உரசி போக, தள்ளாடினான். அவனை மட்டும் தாக்கியிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவனை உரசி சென்ற புல்லட், சந்தோஷ் ஆட்டோமெடிக் பைலட்டில் போட்டுவிட்டு கதவை திறக்க, புல்லட் விமானத்தை ஓட்டும் உபகரணத்தில் பட்டு தெறித்தது. கூடுதலாக ஜீவனும் அர்னவும் விமானத்தை ஓட்டும் இடத்தில் வந்து விழுந்தனர். ஜீவன் மீண்டும் துப்பாக்கியை சுட, ஏடாகூடமாய் விமானத்தை இயக்கும் உபகரத்தில் மீண்டும் சுடப்பட்டது.

அடுத்த நிமிடம் அலாரம் செட்டப் போல விமானத்தில் ஏதோ பழுதாகியதாக அபயக்குரல் கணினியில் உச்சரித்தது‌.

சந்தோஷோ “அர்னவ்” என்று அவனை தோளை பற்றினான்.‌

“இடியட். ஆட்டோமெடிக் மாத்திட்டு ஏன் வந்த.” என்று எட்டி பார்த்தவன் “ஷிட் இப்ப தரையிறங்க முடியாதபடி, புல்லட் விமானத்தை இயக்கும் பகுதியில் பழுதாக்கியிருக்கு பாரு” என்று ஜீவனை தள்ளி விட்டு நண்பனிடம் கத்தினான்.‌

இதில் அர்னவ் ஜீவனிடமிருந்த புல்லட்டை வேறு பிடுங்கி தூரயெறிய, ஜீவனோ பெருமூச்சை வெளியிட்டான். விமானத்தில் ஏதோ தன்னால் தவறாகி பிரச்சனை பெரிதாகுவதை யூகத்தால் அறிந்துவிட்டான்.

“ஷிட் ஏற்கனவே ஆயிரம் பிரச்சனை. இப்ப புதுப்பிரச்சனை வேற‌, நான் வீட்டுக்கு போகணும்டா. குடும்பம் குழந்தைன்னு இருக்கு. அய்யோ… லேண்டிங் ஆகறது சாத்தியமில்லை. செத்து தொலையப் போறோம்.” என்று சந்தோஷ் புலம்பினான்.‌

“இடியட் பேரசூட் இருக்கு. புலம்பாத” என்று கையில் புல்லட்டால் உரசிய ரத்தத்தால் முகம் சுணங்கி உரைத்தான் அர்னவ்.

“அய்யோ என்னால தான் இதெல்லாம்” என்று பாவனா அழுவ, “ஏய் அழாம இருக்கியா.” என்று எரிந்து விழுந்தான் அர்னவ். தனிவிமானத்தை சரிப்படுத்த இயலாத வேதனை அவனுக்கு.

“பேரசூட் எடு” என்று விமானத்தில் ஏதேனும் சரிப்படுத்த முடியுமா என்று கூடுமானளவு பார்வையிட, ஜீவனோ பைத்தியம் போல உள்ளுக்குள் பதட்டமானான்.

புல்லட்டால் ஒருவனை சுட்டு முடித்துவிட்டோம். விமானத்திலும் ஏதோ பழுதாகிவிட்டது. இனி உயிர் பிழைக்க இயலாதென்று புத்தி உரைக்க, சந்தோஷோ பேரசூட்டை எடுத்து, இதை எப்படி உபயோகப்படுத்தறதுன்னு சொல்லி தர்றேன். கவனிங்க,” என்று ஜீவனுக்கு அணிவித்து, பாவனாவிடம் கற்றுக்கொடுக்க, பாவனா கண்ணீரோடு கவனித்தாள்.
ஜீவனோ அனைத்தும் அறிந்தப்பின் குறுக்கு புத்தியில் பேரசூட்டை கவனித்தான். அளவோடு நான்கு பேரசூட் அங்கிருந்தது. ஒன்று அவனுக்கு சந்தோஷே அணிவித்திருக்க, இனி கீழே குதித்ததும் பறக்கும் விதமாக மாற்றிட மட்டும் செய்ய வேண்டும்.
மற்ற மூன்று பேரசூட் சந்தோஷ் கை வசம் இருந்தது.
அதில் ஒன்றை பிடுங்கிவிட்டு, “என்னை இந்தளவு நிராகரிச்சவ உயிரோட திரும்ப மண்ணில் காலடி எடுத்து வைக்க கூடாது.” என்று பாவனாவிடமிருந்த பேரசூட்டை பிடுங்கி குதித்தான்.

“செல்ஃபிஷ் அடேய்” என்று சந்தோஷ் கத்த, ஜீவன் கீழே குதித்திருந்தான்‌. நிச்சயம் இவர்கள் பேச்சு அவன் செவிக்கு எட்டாது.

எப்படியும் மீதி இரண்டு பேரசூட் மட்டுமே இருக்கே, ஆண்கள் இருவரும் ஆளுக்கொன்று உபயோகப்படுத்துவார்கள் பாவனா எப்படியும் செத்து தொலைவாள் என்று கெக்கரித்தான் ஜீவன்.

“என்னடா இது அவன் இந்த பொண்ணுக்கிட்ட இருந்த பேரசூட்டை பிடுங்கிட்டு குதிச்சிட்டான்.” என்று சந்தோஷ் தலையிலடிக்க, பாவனாவோ அதிர்ச்சியில் உறைந்தாள்.

அர்னவோ, “குதிக்கும் போது இவளை தள்ளிவிடாம பேரசூட்டை எடுத்துட்டு மட்டும் குதிச்சானேனே சந்தோஷப்படு சந்தோஷ்.” என்றவன் கையில் ரத்தம் உதிர, சில பொருட்களை சந்தோஷிடம் போட்டு வைத்து, “நீ குதி” என்றான்.

“பேரசூட் இரண்டு தானேடா இருக்கு. நான் ஒன்னு யூஸ் பண்ணிட்டா. மீதி ஒன்னு தானே இருக்கும்.” என்று நண்பனிடம் கேட்டான்.

“ஓ… எனக்கும் கணக்கு தெரியும். நேரம் இல்லை சந்தோஷ் குதி” என்று பிடித்து தள்ளாத குறையாக தள்ளிவிட்டான்.‌

பாவனாவோ வானத்தில் பறந்துக்கொண்டிருக்கும் விமானத்திலிருந்து, இருவர் தொபுக்கடீரென குதித்திட, மூளை வேலை செய்ய இயலாமல் திகைத்தாள். அவளால் தானே இத்தனையும் என்ற குற்றவுணர்வு.

அர்னவோ “இதை போடு” என்று பேரசூட் ஜாக்கெட்டை அணிய தர, “இ..ல்லை.. எனக்கு வேண்டாம். நீங்க போட்டுக்குங்க. நீங்க உயிர் தப்பிச்சா போதும்‌.” என்று தடுமாறி அழுதாள்.

“பைத்தியமா நீ. உலகில் முதல்ல நமக்கு முக்கியம் நம்ம உயிர் தான். போட்டுக்கிட்டு குதி. சந்தோஷ் சொல்லிக் கொடுத்தான்ல?” என்று கவனித்தாயா என கேட்டான்.

“இல்லை.. எனக்கு வேண்டாம். இதை உபயோகப்படுத்தவும் தெரியாது. அதைவிட முக்கியம். என்னால நீங்க அடிப்பட்டு ரத்தம் வந்து நிற்கறிங்க. செல்பிஷ்ஷா உங்களை விட்டு என்னால போக முடியாது. அப்படி போனா என்‌ மனசாட்சி குத்தி கொதறும்.” என்று மறுத்தாள்.

கைகடிகாரத்தை பார்த்த அர்னவோ நேரம் குறைவாக தோன்ற, மடமடவென ஜாக்கெட்டை அவன் அணிய தயாரானான்.

அவன் எடுத்து வைத்த பொருட்களை கொண்ட முதுகு பையை பாவனாவை அணிய வைத்தான். அவளோ புரியாமல் விழிக்க, அலாரம் சத்தம் ஏதோ மலையில் மோதுவதாக அலறியது.

அர்னவோ பாவனாவை கட்டிப்பிடிக்க தயங்க, அவளோ முழிக்க, விமானத்தின் முன்பக்கம் மலையில் மோதும் தூரத்தை கவனித்து, “வேற வழியில்லை‌” என்று அவளை தன்னை கட்டிபிடிக்க கூறினான்.

“கட்டிபிடிக்கணுமா?” என்று தயங்கினாள். அவனோடு அவளையும் சேர்த்து குதிக்கும் திட்டத்தை புரிந்துக்கொண்டாள். ஆனாலும் அர்னவை அணைக்க தயங்க, “ஆர்யூ மேட். விமானம் இன்னும் ப்யூ மினிட்ஸ்ல மலையில் மோதி வெடிக்கும்.” என்றான்.

பாவனா அவன் சுட்டிக்காட்டிய இடத்தை கண்டு, வேகமாய் அர்னவை கட்டிக்கொண்டாள்.

அடுத்த நிமிடம் “டைட்டா கட்டிப்பிடிச்சிக்கோ” என்று குதித்திருந்தான்.
பாவனாவோ கண்களை இறுக மூடி, அர்னவை கட்டிப்பிடித்து கொண்டிருந்தாள்.

அடுத்த சில நொடியில் வெடிக்கும் சத்தம் பாவனா செவியில் அதீத ஓசையில் கேட்டது. ஆனாலும் கண்களை திறக்கவில்லை‌. அர்னவை தான் இறுக கட்டிக்கொண்டிருந்தாள்.

காற்று உடலை உரசி செல்ல, செவியில் வெடித்து சிதறிய ஓசையை தாண்டி, காற்றை கிழித்து அவள் கீழே பூமிக்குள் குதித்து கொண்டிருக்கும் உணர்வை உணர்ந்தாள்.

இமைதிறந்து தன்னை சுற்றி நடக்கும் சம்பவத்தை காண அஞ்சியவளாக தன் கைகளை கூடுதலாக இறுகினாள்.

அர்னவோ தனது டிரைனிங் பீரியடில் இது போல பேரசூட்டில் தரையிறங்கிய நாட்களை எண்ணி, இன்றும் அதே ஆனந்தத்தில் இருந்தான். அவனை பொறுத்தவரை வானத்திலிருந்து எவ்விதத்தில் பறந்தாலும் மகிழ்ச்சி மட்டுமே. அவன் ஒரு ராஜாளியாகவே மகிழ்வான். இதுவும் அப்படிப்பட்டவையே.

விமானம் வெடித்ததையோ, ஜீவனிடம் ஏற்பட்ட தகராறோ, அல்லது அவனால் கலவரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூடோ, ஏன் ஜீவன் ஒன்றும் பாதியுமாக தன்னை பற்றி அவதூறு சொன்னால் தன் வேலை பறிப்போவதை கூட அவன் அந்த நேரம் நினைக்கவில்லை.

வெண்மேகத்தினுள், காற்று இதமாக மோத வானத்திலிருந்து கீழே பூமியை முத்தமிடும் தருணம் எல்லாம் அவன் அனுபவித்து பேரசூட்டை வலது இடதென தான் தரையிறங்கும் இடத்திற்கு தோதாக இயக்கியபடி இயற்கையை ரசித்தான்.

கூடுதலாக தன்னை உடும்பாக ஒட்டிக்கொண்ட பெண்ணவளின் படபடக்கும் இமைகள் அவனுக்குள் மேலும் புதுமையை கூட்டியதே.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

9 thoughts on “ராஜாளியின் ராட்சசி-5”

  1. M. Sarathi Rio

    ராஜாளியின் ராட்சசி…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 5)

    அடப்பாவி ! பதட்டமான நேரத்துல கூட இயற்கையையும் பறக்குறதையும் ரசிக்கிறானே, இவன் நிசமாவே டைட்டிலோட சொந்தக்காரன் தான்.

    அந்த வீணாப் போன ஜீவன், செத்தானா, உயிர் பிழைச்சானா ? கீழே குதிக்கப்போற நேரத்துல கூட
    என்னவொரு நல்லெண்ணம் இவனுக்கு. பாராசூட்டை சுட்டுட்டே குதிக்கிறான் பாருங்க.

    இந்த பாவனாவை சொல்லணும், அக்ரிமெண்ட்ல என்ன எழுதியிருக்குன்னு கூட படிக்காமலா கைெயழுத்தைப் போடுவா ஒரு படிச்ச பொண்ணு..? எத்தனை எமர்ஜன்ஸியா வேணுமின்னாலும் இருக்கட்டுமே, அதுக்குன்னு இப்படியா கண்மூடித்தனமா இருக்கிறது ? சரியான கிறுக்கச்சி. அந்த இடத்துல அர்னவ் சந்தோஷ் இருந்ததால மானத்தோட உயிர் பிழைச்சா, வேற எந்தவொரு பைலட்டா இருந்தாலும் மானமும் போயிருக்கும், உசிரும் போயிருக்கும் தானே..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!