ருத்ரமாதேவி 3
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
தானும் ருத்ராவும் காதலிப்பதாக தமிழ் வேந்தன் கூறியதும் அதிர்ந்து விட்டாள் ருத்ரா.
ருத்ரா தன் உடன் இருந்தவர்களை பார்த்து மறுப்பாக இல்லை என்று தலையை ஆட்டியவாறே, “ஏய்.. எனக்கு இவர் யார் என்றே தெரியாது” என்றாள்.
“என்ன பேபி. இப்படி யாருனே தெரியாதுன்னு சொல்லிட்ட. அப்போ நாம லவ் பண்ணுறது எல்லாம் பொய்யா?” என்று நாடக பாணியில் வசனம் பேச,
பதறிய ருத்ரா, “சார் உண்மையா உங்களை இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லை சார். இன்னைக்கு தான் முதல் தடவை வகுப்பில் பார்க்கிறேன்” என்று அவனிடம் கூறி,
கண் கலங்க தன் நண்பர்களிடம், ” இவரை இதற்கு முன் தெரியாது. இப்போது தான் பார்க்கிறேன். இவர் சொல்வது பொய் ” என்று கூறினாள் கண்களில் கண்ணீர் தேங்க.
விட்டால் அழுது விடுவாள் போல இருக்க, அவளைப் பற்றி தெரியாதவர்களா? இவர்கள். அவளின் இருபுறமும் தோழியர் இருவரும் வந்து நின்று கொண்டு தமிழ் வேந்தனிடம், “ஆமா சார் அவளுக்கு உங்களை இதற்கு முன் தெரியாது” என்றாள் ஐஸ்வர்யா ருத்ராவின் ஒரு பக்கம் அவளை அணைத்தவாறு நின்று கொண்டாள்.
ப்ரணித் ப்ரணவ் இருவரும், ” ஆமாம் உங்களை இன்று தான் அவள் பார்க்கிறாள்” என்று கூறி அவளுக்கு காவலாக வந்தனர்.
“ஓஓஓ அப்படியா! அப்போ இது எப்படி” என்று தன் கைபேசியில் உள்ள புகைப்படத்தை காண்பித்தான்.
அப் புகைப்படத்தைக் கண்டு அனைவருமே அதிர்ச்சியில் வாய் அடைத்து நின்றனர். அனைவரின் அமைதி கண்டு, “ஹலோ என்ன எல்லோரும் சைலன்ட் ஆயிட்டீங்க. இதற்கு என்ன அர்த்தம் சொல்லுங்க” என்றான்.
அந்தப் புகைப்படத்தில் ருத்ராவின் பின்னால் அவளின் தோள் மீது கை போட்டபடி நின்றான் தமிழ் வேந்தன்.
அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்டது அன்பரசு. அவன் உடனே தயங்காமல் தமிழ் வேந்தனிடம், “இது நிச்சயம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகத்தான் இருக்கும்” என்றான்.
“எப்படி இவ்வளவு உறுதியாக கூறுகிறாய். எதற்கும் உன் தோழியிடம், இல்லை இல்லை உன் அன்பு தங்கையிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு பேசு” என்று ருத்ராவை நோக்கினான்.
ருத்ராவும் அதிர்ந்து எப்படி இது சாத்தியம் என்று யோசித்தாள். அவன் காட்டிய மூன்று படங்களிலும் அவளின் தோளில் கை போட்டபடியே நின்றான்.
முதல் இரண்டு படங்களும் அவளுக்கு அவ்வளவாக நினைவில்லை. ஆனால் கடைசி படம் பத்து நாட்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டது.
அவளுக்கு அன்றைய தினமும், அந்த நிகழ்வும் உடனே ஞாபகத்திற்கு வந்தது. பத்து நாட்களுக்கு முன்பு அவளின் தந்தையின் அலுவலகத்தில் வேலை செய்யும் மேனேஜரின் மகன் திருமண வரவேற்பு. அதற்கு தன் தாய் தந்தையருடன் சென்றிருந்தாள் ருத்ரா.
அன்று அவர்கள் குடும்பத்தை ராஜ உபசரனை செய்து வரவேற்றார் மேனேஜர். வரவேற்பு வெகு விமரிசையாக நடந்து கொண்டு இருந்தது.
காதல் திருமணம். வட நாட்டு பெண். மணப்பெண்ணின் உடையையும் அலங்காரத்தையும் பற்றி தன் தாயுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.
மேனேஜர் உணவு உண்ண அழைத்து சென்றார். உணவின் வகைகளை கண்டு மிரண்டே விட்டாள் ருத்ரா. அவ்வளவு வகை அங்கு இருந்தது அனைத்தையும் ருசிக்க அவளின் வயிறு தாங்குமா என்பதே சந்தேகம்.
இனிப்பு வகைகளே ஏழு எட்டு இருந்தது. அவளின் தாயும் தந்தையும் அவர்களுக்கு தேவையான உணவை எடுத்துக்கொண்டு ஒரு மேஜை அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்க, இவள் சுற்றி அனைத்தையும் பார்த்துவிட்டு வந்து அவர்களிடம் அமர்ந்தாள்.
அவளின் தந்தை, “என்ன பாப்பா. எதுவும் எடுத்துக் கொண்டு வரவில்லையா?” என்க,
“அப்பா எவ்வளவு வெரைட்டி இருக்கு என் வயிறு தாங்காது” என்றாள்.
அவளின் தாய் அவள் காதை திருகி, “ஏய் வாலு. உனக்கு தேவையான அளவு தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடு. சாப்பிட்டு சீக்கிரமா கிளம்பனும்” என்றார்.
“ம்ம்ம்” என்று சொல்லிவிட்டு ஒரு தட்டில் இனிப்புகளை மட்டும் எடுத்து வைத்து உண்டாள். அதன் பிறகு பழங்களையும் ஐஸ்கிரீமையும் சாப்பிட்டுவிட்டு அப்பா போதும் என்று தந்தையின் மீது சாய்ந்த அமர்ந்து கொண்டாள்.
அதன் பிறகு மணமக்களுக்கு பரிசு கொடுக்க மேடையை நோக்கி மூவரும் சென்றனர் அங்கு மணமகள் அருகே தந்தையும் தாயும் நின்று கொள்ள மணமகன் அருகே மேனேஜரும் அவளும் நின்றனர்.
அவர்தான் அவளின் தோளில் கை போட்டார் ஆனால் இன்று இந்தப் படத்தில் அவளின் தோளில் கை போட்டபடி நிற்பது தமிழ் வேந்தன். அதில் அவள் குழம்பி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
“இந்தப் புகைப்படம் மேனேஜரின் மகன் திருமணத்தில் எடுத்தது அண்ணா. அன்றுதான் நான் இந்த உடை அணிந்து இருந்தேன். ஆனால் என் அருகில் இவர் இல்லை அன்று மேனேஜர் தான் நின்றார்” என்று அன்பரசு இடம் கூறினாள்.
மேலும் “நான் தனியாகவும் இல்லை என் அப்பா அம்மாவுடன் தான் நின்றேன்” என்றாள்.
அனைவரும் சந்தேகமாக தமிழ் வேந்தனை காண, அவன் தலையை ஒரு பக்கம் சாய்த்து என்ன என்பதாய் புருவம் உயர்த்தினான்.
அனைவரும் இல்லை என்பதாக தலையை இடம் வலமாக ஆட்ட,
‘அது’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு ருத்ராவை பார்த்தான்.
ஆனால் அன்பரசு, “இப்ப தான் எனக்கு சந்தேகம் அதிகமாகிறது” என்றான்.
“என்ன சந்தேகம்!”
“ருத்ரா சொல்வது தான் உண்மை. அவள் அவளின் பெற்றோர் இல்லாமல் எந்த ஒரு விசேஷத்திற்கும் போக மாட்டாள்.
அப்படி இருக்க இது எப்படி சாத்தியம். ஆகவே நான் நம்ப மாட்டேன்” என்ற அன்பரசுவை நன்றியுடன் நோக்கினாள் ருத்ரா.
தன் நண்பர்கள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையை கண்டு மகிழ்ந்து, ‘பார்த்தீர்களா’ என்பது போல் தமிழ் வேந்தனை பார்த்தாள்.
அவன் உதட்டை மடக்கி இளக்காரமாக சிரித்து விட்டு, அந்த படங்களை அன்பரசுவின் கைபேசிக்கு அனுப்பினான்.
அனுப்பி விட்டு, “ஃபோட்டோஸ் உனக்கு அனுப்பி இருக்கிறேன். நீயே உண்மையா பொய்யா என்று விசாரித்துக்கொள்” என்று அன்பரசுவை பார்த்து சொல்ல,
அன்பரசு ‘என் நம்பர் இவருக்கு எப்படி தெரியும் என்று நினைத்தவாறு’ தன் கைபேசிக்கு வந்த புகைப்படங்களை பார்த்தான்.
“இட்ஸ் ஓகே பேபி. அவன் பொறுமையா விசாரிக்கட்டும். அதை பற்றி பிறகு பேசலாம்” என்று விட்டு,
தன் லேப்டாப் பேக்கை திறந்து அதில் இருந்து வண்ண காகிதத்தில் சுற்றப்பட்ட பரிசு பொதியை எடுத்து அவளின் முன் நீட்டினான்.
அவள் புரியாமல் அவனை காண,
“வாங்கிக்கோ பேபி. இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் இல்லையா? அதான் இந்த அத்தானின் சிறிய பரிசு” என்று அவளின் கையில் வைத்து விட்டு, “ஹேப்பி பர்த்டே டூ யூ மை டியர்” என்றான்.
‘என்னது அத்தானா என்று ஹே என விழித்தனர்’ கலைச்செல்வியும் ஐஸ்வர்யாவும்.
அதை சிறிதும் கண்டுக்கொள்ளாமல் ருத்ராவிடம் பரிசுடன் அவளின் கைகளை பிடித்து, “ஐ லவ் யூ டியர்” என்று கூறி ஒற்றை கண் சிமிட்டி கைகளில் அழுத்தம் கொடுத்து, “ஓகே நான் கிளம்புறேன். நீங்க லச் கட்டினுயூ பண்ணுங்க” என்று விட்டு கிளம்பினான்.
தமிழ் வேந்தனின் செய்கையில் அதிர்ந்து நின்றனர் அனைவரும்.
தொடரும்….
- அருள்மொழி மணவாளன்…