Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 5

வஞ்சிப்பதோரும் பேரவா! – 5

அத்தியாயம் 5

செவியில் கேட்ட குரல்கள், மௌனிகாவை தலை முதல் பாதம் வரை நடுங்கச் செய்ய, மனதில் தோன்றிய ஐயம் மெய்யாகி விடுமோ என்ற பயமும் பதற்றமும் சேர்ந்து கொள்ள, நடுக்கத்தையும் மீறி, லேசாக திறந்திருந்த கதவை சத்தம் வராமல் தன் முகம் தெரியும் அளவிற்கு மட்டும் திறந்தாள்.

அப்படி உள்ளே முகத்தை மட்டும் நுழைத்தவளை வரவேற்றது, அந்த பெரிய திரையில் ஓடிக் கொண்டிருந்த யாரோ இருவரின் அந்தரங்கம்!

அதை பார்த்ததும் உண்டான அதிர்ச்சியில் ஒருநொடி அந்த திரையை வெறித்தவளின் பார்வையோ அதற்கு மேல் அதைக் காண முடியாமல், “ச்சீ…” என்ற லேசான முணுமுணுப்புடன் திரும்ப, அங்கு அவளின் கணவனோ அந்த திரையையே பார்வையை சற்றும் திருப்பாமல் வெறித்துக் கொண்டிருந்தான்.

யஷ்வந்த்தை இப்படி பார்க்கவே முடியவில்லை மௌனிகாவினால். அவன் பார்வையில் இருந்தது என்ன?

அதை சாதாரண ரசிப்பாக மட்டும் கருத முடியவில்லை மௌனிகாவினால்.

அவன் அங்கம் முழுவதும் அக்காட்சியை ரசிப்பது போல… சரியாக சொல்ல வேண்டும் என்றால், அதற்கென்று அடிமையானதை போல தெரிந்தான் யஷ்வந்த்.

யஷ்வந்த், அந்த பெரிய திரையை வெறித்துக் கொண்டிருக்க, மௌனிகா அவனை வெறித்துக் கொண்டிருந்தாள்.

தன் கணவன் இப்படிப்பட்டவனா என்ற அதிர்வு தாண்டி, அவனுடனான வாழ்வு இனி எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள் மௌனிகா.

அவளின் மனமோ, ‘அப்போ இதுக்கு முன்னாடி நைட் காணாம போனதெல்லாம் இதுக்கு தான?’ என்று எடுத்துக் கூற, தன்னுடனான உறவுக்கு பின், இந்த அறைக்கு வந்து இதை தான் அவன் பார்த்திருக்கிறான் என்பதை உணர்ந்த அந்த நொடி அருவருப்பாக இருந்தது அவளிற்கு.

உடல் முழுவதும் ஒரு ஒவ்வாத அவஸ்தை பரவ, அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல், வந்ததை போலவே மெதுவாக அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

என்னதான் பஞ்சு மெத்தை படுத்தவளை உள்ளிழுத்துக் கொண்டாலும், அவளால் அதில் சுகமாக உறங்க முடியவில்லை. வாழ்வே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்து உறக்கம் கொள்வது?

எத்தனை நொடிகள், நிமிடங்கள் கடந்ததோ, அவள் மீது விழுந்த கைகளின் அசைவில் மெல்ல கண் விழித்தவள் கண்டது, அவளை அணைத்தபடி துயில் கொள்ளும் யஷ்வந்த்தை தான்.

சில நாட்களுக்கு முன்னராக இருந்தால், அவளும் சந்தோஷமாக கணவனை அணைத்துக் கொண்டு உறக்கம் கொண்டிருப்பாள்.

ஆனால், சற்று முன்னர் அவள் கண்ட காட்சியின் விளைவால், அவளால் அவன் தொடுகையை கூட ஏற்க முடியவில்லை.

மனம் நிம்மதியை மொத்தமாக இழந்திருக்க, உறக்கமும் வராமல், நகரவும் முடியாமல், விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தாள் மௌனிகா.

தெரிய வந்த ஒரு நிகழ்விற்கே நிலை குழைந்து தான் போயிருந்தாள் மௌனிகா. இனி வரும் நாட்கள் அவளிற்காக வைத்திருக்கும் அதிர்ச்சிகள், அவளிடம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துமோ?

*****

காலை பொழுது புலர, அது அழகானதாக இருக்குமா என்ற கேள்வியுடனே விழித்தனர் புது மணமக்கள்.

“ரெண்டு பேரும் டர்ன் வைஸ் கட்டில்ல படுக்கலாம்.” என்று ஹர்ஷவர்தனின் முந்தைய இரவு அலைப்புறுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாள் பிரியம்வதா. அதன்படி, பிரியம்வதா கீழேயும், ஹர்ஷவர்தன் கட்டிலிலும் படுத்து முந்தைய இரவை கழித்திருந்தனர்.

அதை எண்ணி, மனதில் ஆச்சரியமும் நிம்மதியும் ஒருங்கே உருவானது ஹர்ஷவர்தனிற்கு. அதனால் உண்டான சிரிப்புடன் அவன் இருக்க, கீழே இருந்த போர்வை, தலையணை அனைத்தையும் எடுத்து வைத்த பிரியம்வதாவோ, அவனின் சிரிப்பை எட்டாவது அதிசயமாக பாவித்து, “என்ன ஹர்ஷா, நைட் நல்ல கனவு போல? இப்படி எழுந்ததும் சிரிக்கிறீங்க!” என்றாள்.

அவள் இயல்பாக கேட்டவாறு, அவன் பதிலை கூட எதிர்பாராமல் குளியலறைக்குள் சென்றுவிட, ஹர்ஷவர்தன் தான் தன்னை நினைத்தே ஆச்சரியத்துடன் அமர்ந்து விட்டான்.

‘நான் சிரிக்கிறேனா?’ என்ற திகைப்புடன் தன்னால் பிரஜனிற்கு அழைத்து விட்டான்.

முந்தைய தினம் தான் நண்பனை திட்டியதெல்லாம் மறந்து தான் விட்டான் போலும்!

ஆனால், தூக்க கலக்கத்தில் அலைபேசியை பார்த்த பிரஜனிற்கோ பக்கென்று இருந்தது.

‘இவன் எதுக்கு இந்த நேரத்துல கூப்பிடறான். ஒருவேளை, நேத்து சரியா திட்டலைன்னு, திரும்ப கூப்பிட்டு திட்டப் போறானோ?’ என்ற எண்ணத்துடன் தயங்கியபடி அழைப்பை ஏற்றான் பிரஜன்.

அதே சமயம், ஹர்ஷவர்தனிற்கு தான் செய்து கொண்டிருக்கும் காரியம் புரிய, ‘அடச்சே, இப்போ எதுக்கு ஓவரா எக்ஸைட் ஆகி, இவனுக்கு கால் பண்ணிருக்கேன்! இப்போ இவன் கிட்ட, நான் சிரிச்சேன்னு சொன்னா, அதை வச்சே என்னை கலாய்ப்பான்.’ என்று எண்ணும்போதே, பிரஜன் அழைப்பை ஏற்றிருந்தான்.

அழைப்பை ஏற்றவன் ‘ஹலோ’ கூட சொல்லாமல், “டேய், உனக்கு திட்டனும் போல இருந்தா, கொஞ்ச நேரம் கழிச்சு கூட கூப்பிட வேண்டியது தான டா. சுகமா தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பி தான் திட்டனுமா?” என்று படபடவென்று பேச, அதையே சந்தர்ப்பமாக ஏற்று, “சரி நான் வச்சுடுறேன்.” என்றான் ஹர்ஷவர்தன்.

‘இவன் எதுக்கு இப்படி பம்முறான்?’ என்று சுதாரித்த பிரஜனோ, “ஹே ஹே இரு இரு! நீ என்னை திட்ட கால் பண்ணலேனா, அப்போ…” என்று இழுத்த பிரஜனோ மெல்லிய குரலில், “நைட் ஏதாவது பிரச்சனையா மச்சான்? டோன்ட் வொரி, நாம நல்ல டாக்டரா கன்சல்ட் பண்ணலாம். நான் இருக்கேன் உன்னோட.” என்றான் குறும்பாக.

முதலில், அவன் கூறுவதை புரிந்து கொள்ளாத ஹர்ஷவர்தன், அது புரிந்ததும், நண்பன் ஆசைப்பட்டது போலவே திட்டி தீர்க்க, அது குளித்து முடித்து வெளியே வந்த பிரியம்வதா காதுகளிலும் விழுந்தது.

அவள் ஹர்ஷவர்தனை புருவம் உயர்த்தி பார்த்திருக்க, அவனோ அலைபேசியை காட்டி, “பிரஜன்…” என்று சமாளிப்பு புன்னகையை செலுத்தியபடி பால்கனிக்கு சென்று விட்டான்.

முந்தைய தினத்திற்கும் இப்போதைய ஹர்ஷவர்தனிற்குமான மாற்றத்தை உணர்ந்த பிரியம்வதாவோ, அது கொடுத்த தெளிவுடன் தன் மாமியாரை பார்க்க சென்றாள்.

இன்னமும் தன்னை திட்டிக் கொண்டிருந்த நண்பனின் மாற்றத்தை பிரஜனும் உணர்ந்தே இருந்தான்.

அது கொடுத்த சிறு நம்பிக்கையுடன், “ஹர்ஷா, விளையாட்டு போதும். நேத்து நீ எப்படி ஃபீல் பண்ண? அதாவது… இந்த லைஃப் உனக்கு அன்-கம்ஃபர்டபிளா இல்ல தான?” என்று கேட்ட பிரஜனின் குரலில் இருந்தது நண்பனின் மீதான அபரிமிதமான அக்கறையே.

அது தந்த ஆசுவாசத்துடனே பேச ஆரம்பித்தான் ஹர்ஷவர்தன்.

“உண்மையை சொல்லணும்னா, இந்த கல்யாண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிச்சதுல இருந்தே, எனக்கு ஒரு ஆக்வார்ட் ஃபீலிங் தான் பிரஜன். அது எப்படி சொல்ல…” என்று தயங்கிய ஹர்ஷவர்தன், ஒரு பெருமூச்சுடன், “நான் இப்போ சொல்றது, உனக்கு முட்டாள் தனமா தெரியலாம். ஏன், என்னை கேவலமா கூட நீ நினைக்கலாம். ஏன்னா, ஒரு சமயத்துல, எனக்கே என்னை நினைச்சா கேவலமா தான் இருந்துச்சு பிரஜன்.” என்று அவன் கூற, “டேய், உன்னை நான் ஜட்ஜ் பண்ண போறது இல்ல. இப்போ உன்னை பேச விட்டு கேட்குறது கூட, உன் மனசுல இருக்குறதை மொத்தமா இறக்கி வச்சுட்டு, புது வாழ்க்கைக்கு நீ தயாராக தான்!” என்று ஆறுதலளித்தான் பிரஜன்.

பிரஜன் கொடுத்த நம்பிக்கையில் மீண்டும் பேச ஆரம்பித்தான் ஹர்ஷவர்தன்.

“அந்த ஆக்வர்ட்னெஸ் எதனாலன்னு நான் சொல்லணும்னு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்.” என்றவன், முழுதாக ஒரு நிமிடம் மௌனத்தை தத்தெடுத்துக் கொண்டவன், பின்னர் தானாகவே, “நானும் மௌனிகாவும் முன்னாடி, கல்யாணத்தை பத்தி நிறைய பேசியிருக்கோம். இன்விடேஷன்ல இருந்து, டிரெஸ், மண்டபம்னு எல்லாமே. சோ, இப்போ அதெல்லாம் என் கண்ணு முன்னாடி நடக்கும்போது, என் மனசு முழுக்க, அவளோட நான் பேசுனது தான் நினைவுக்கு வந்துச்சு. எனக்கு தெரியும், இதெல்லாம் தப்புன்னு. ஆனாலும், என்னால என் எண்ணங்களோட போக்கை கட்டுப்படுத்தவே முடியல. அவ ஏற்கனவே கல்யாணம் ஆனவன்னு எனக்குள்ள பதிய வைக்க முயற்சி செஞ்சாலும், அது கொடுத்த தாக்கம் என்னை நிம்மதியாவே இருக்க விடல.” என்று அப்போதைய நினைவில் பாதித்தவனாக பேசியவனை குறுக்கிடாமல் அமைதியாக கேட்டபடி இருந்தான் பிரஜன்.

அதை புரிந்து கொண்ட ஹர்ஷவர்தனும் தொடர்ந்தான்.

“உண்மையா சொல்லணும்னா, கல்யாணத்தப்போ கூட என்னால சந்தோஷமா நிம்மதியா இருக்க முடியல. என் வாழ்க்கையோட சேர்த்து வதுவோட வாழ்க்கையையும் கெடுக்குறேனோன்னு குற்றவுணர்வும் என்னை ரொம்ப பாதிச்சது. ஆனா, இந்த இம்சை எல்லாம் நேத்து நைட் வரைக்கும் தான்.” என்றவனிடம் சிறு சிரிப்பு வெளிப்பட, அவனை விட்டு தொலைவில் இருந்தாலும், பிரஜனிற்கு அது தெரிந்தே இருந்தது.

அத்தனை நேரமிருந்த கடின சூழலை மாற்ற வேண்டி, “ஏன் பிரியா நேத்து நைட் எதுவும் மேஜிக் பண்ணாளா?” என்று பிரஜன் கேட்க, “மேஜிக்கா என்னன்னு தெரியல. ஆனா, இத்தனை நாள் இருந்த அவஸ்தை குறைஞ்சது போல ஃபீலாகுது. நீ சொன்னது போல, வது என்னை புரிஞ்சு நடந்துக்குறா. இன்ஃபேக்ட் என் பேரண்ட்ஸ் கூட, என்னை இவ்ளோ புரிஞ்சுப்பாங்களான்னு தெரியல.” என்றான் ஹர்ஷவர்தன்.

“பார்றா, ஒரு நைட்ல எப்படி இப்படி ஒரு சேஞ் ஓவர்? டேய், இப்படி ஓவர் நைட்ல மாறி எனக்கு ரொம்ப ஷாக்கை கொடுக்காத டா. வீக் பாடி நானு, பொட்டுன்னு ஏதாவது ஆகிடப் போகுது.” என்று கேலி செய்தான் பிரஜன்.

அதற்கும் சேர்த்து திட்டி விட்டு அழைப்பை துண்டித்தவனிற்கு தெரியவில்லை, இந்த நிம்மதி இன்னும் சற்று நேரத்தில் பறிபோகும் என்பது!

*****

காலை உணவு, பின் கோவில் வழிபாடு, மறுவீட்டு விருந்து என்று அன்றைய நாள் வேகமாக கழிய, மாலையில் தான் சற்று நிதானிக்க முடிந்தது அவ்வீட்டினரினால்.

திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க, மணமக்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என்று மொத்தம் ஐவர் தான் இப்போது அவ்வீட்டில் இருந்தனர்.

ஹர்ஷவர்தன் கூட, சற்று இயல்பாகவே இருந்தான். அவன் மனநிலையை சரியாக யூகித்த அவனின் அன்னையோ, “ஹர்ஷா, எத்தனை நாள் லீவு போட்டுருக்க?” என்று வினவ, அந்த பேச்சு துவக்கமே அவனிற்கு சஞ்சலத்தை உண்டு செய்தது.

“மொத்தமா ரெண்டு வாரம் மா. அதுல ஏற்கனவே எட்டு நாள் முடிஞ்சது. இன்னும் ஆறு நாள் லீவு இருக்கு.” என்றான் ஹர்ஷவர்தன் யோசனையுடனே.

அதைக் கேட்ட வள்ளியோ, எதையோ யோசித்தவராக, “அப்போ இன்னும் மூணு நாள்ல நம்ம கிளம்பினா தான சரியா இருக்கும்?” என்று மற்றவர்களிடம் கேட்க, ஹர்ஷவர்தனோ யோசனையுடன், “எங்க கிளம்பணும்?” என்று வினவினான்.

“என்னடா இப்படி கேட்குற?” என்று வள்ளி வினவும்போதே, “அத்தை, நான் இன்னும் அவருக்கிட்ட சொல்லல.” என்றாள் பிரியம்வதா.

“என்னம்மா, இன்னுமா சொல்லாம இருக்க?” என்று வள்ளி அங்கலாய்த்துக் கொள்ள, இன்னும் விஷயம் தெரியாததால் உண்டான சிறு கடுப்பில், “இப்போயாச்சும் என்னன்னு சொல்லுங்க.” என்றான் மனைவி மற்றும் தாயை நோக்கியபடி.

“பிரியாவை ஆஃபிஸுக்கு வந்து வேலை பார்க்க சொல்லிருக்காங்க ஹர்ஷா.” என்றார் வள்ளி.

இது அவனிற்கு புதிய செய்தியே ஆகும். இதுவரை, வீட்டிலிருந்த படியே தான் வேலை செய்து வந்தாள் பிரியம்வதா. அதே தான் தொடரும் என்று எண்ணிய ஹர்ஷவர்தனும் சென்னையில், அவன் இப்போது இருக்கும் வீட்டிலேயே இருக்கலாம் என்று தான் திட்டம் தீட்டியிருந்தான்.

இப்போது கிடைத்த புதிய செய்தியால், அடுத்து என்ன என்று யோசிக்க முடியாமல், இப்படி இறுதி நேரத்தில் தெரிய வந்ததினால் உண்டான எரிச்சலை மறைத்துக் கொண்டு, “எங்க இருக்கு உன் ஆஃபிஸ்?” என்று பிரியம்வதாவிடம் வினவினான் ஹர்ஷவர்தன்.

அவளோ, மெல்லிய குரலில், “ஹைதராபாத்” என்று கூற, கேட்க விரும்பாததை கேட்டது போல முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து விட்டான் ஹர்ஷவர்தன்.

அவன் முகத்தை கண்டே கோபத்தை உணர்ந்தவராக, “இப்போ எதுக்கு மூஞ்சியை இப்படி வச்சுருக்க? அவ என்ன செய்வா? திடீர்னு ஹைதராபாத் வர சொல்லிட்டாங்க. இப்போ வேலையையும் விட முடியாது. உனக்கு தான் வீட்டுல இருந்தே வேலை செய்யுற மாதிரி பண்ணிக்கலாமாமே. பிரஜன் சொன்னான். அதான், ரெண்டு பேரையும் ஹைதராபாத்ல குடி வச்சுட்டு வர நல்ல நாள் பார்த்துட்டு இருக்கோம்.” என்றார் வள்ளி.

இப்போது கோபம் பிரஜனின் புறம் திரும்பியது.

‘இடியட், என் கிட்ட சொன்னா, நான் ஒத்துக்க மாட்டேன்னு தெரிஞ்சே மறைச்சுருக்கான்.’ என்று பல்லைக் கடித்துக் கொண்டான் ஹர்ஷவர்தன். உண்மையும் அதுவே!

ஹர்ஷவர்தனின் முகம், அவன் எண்ணத்திற்கேற்ப மாற, அதைக் கண்ட பிரியம்வதாவோ, “இல்ல அத்தை. நான் திரும்ப ஒர்க் ஃபிரம் ஹோம் கிடைக்குமான்னு கேட்டுப் பார்க்குறேன்.” என்று கூற, பட்டென்று நிமிர்ந்து அவளை பார்த்தான் ஹர்ஷவர்தன். அவளும் அவனை தான் பார்த்தாள்.

“நீதான் கிடைக்காதுன்னு புலம்பிட்டு இருந்தியே.” என்று வள்ளி பிரியம்வதாவிடம் கூற, “அது… கிடைக்காது தான். இருந்தாலும், இன்னொரு முறை கேட்டுப் பார்க்குறேன். இல்லன்னா, சென்னைல வேற வேலைக்கு டிரை பண்ண வேண்டியது தான்.” என்றாள். இப்போதும் அவள் பார்வை ஹர்ஷவர்தனிடமே!

அவனிற்கு புரிந்து தான் இருந்தது, அவளின் இந்த முடிவு அவனிற்காக என்று!

“அட என்னம்மா நீ, நல்ல ஆஃபிஸ்… இந்த வேலையை விடப் போறேன்னு சொல்றியே!” என்று வள்ளி புலம்ப, ஹர்ஷவர்தனோ பிரியம்வதாவின் முகத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

முகத்தை பார்த்து மனநிலையை கணிக்க முயன்றானோ என்னவோ!

அவளின் களையிழந்த முகமே, அம்முடிவில் அவளிற்கு மகிழ்ச்சி இல்லை என்று பறைசாற்றியது.

அவன் மனமோ முதல் முறையாக மனைவிக்கு சாதகமாக பேச ஆரம்பித்தது.

‘எப்பவும் அவ தான் உனக்காக இறங்கி வரனுமா? ஏன் இப்போ ஹைதராபாத் போனா, உன் முன்னாள் காதலி பின்னாடி ஓடிப் போயிடுவன்னு பயமா இருக்கா?’ என்றெல்லாம் கேள்வி கேட்க, அதை பொறுக்க முடியாமல், “வேலையை விட வேண்டாம். ஹைதராபாத் தான, என் ஆஃபிஸ் பிரான்ச் அங்கேயும் இருக்கு. என்ன ஒரு மாசத்துக்கு முன்னாடியே சொல்லணும். நோ பிராபிளம், அதுவரை ஒர்க் ஃபிரம் ஹோம் எடுத்துக்குறேன்.” என்றான் ஹர்ஷவர்தன்.

அவன் கூறியதைக் கேட்ட மற்ற நால்வரும் திகைத்து நிற்க, வள்ளி தான் ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டார். அப்போது தான், மருமகளின் மீது அவருக்கு இருந்த பாசத்தை கண்டு கொண்டான் அவரின் மகன்!

அதன் பிறகு, திட்டம் போட, தேவையானவற்றை எடுத்து வைக்க என்று நேரம் கழிய, தனிமை கிடைத்த நேரத்தில், “ஏன் இந்த விஷயத்தை முன்னாடியே எனக்கு சொல்லல?” என்று ஹர்ஷவர்தன் பிரியம்வதாவிடம் வினவ, அவளோ மிகுந்த தயக்கத்துடன், “பிரஜன் அண்ணா தான் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டாரு.” என்றாள்.

“தெரியும், அந்த எருமை தான் இந்த வேலை எல்லாம் செய்வான்.” என்று வாய்விட்டு திட்டியபடி அலைபேசியை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான், வேறு எதற்கு நண்பனிடம் ‘பாசமாக’ பேசத் தான்!

தொடரும்…

7 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *