Skip to content
Home » நினைவில் ஒரு வானவில் – 1

நினைவில் ஒரு வானவில் – 1

You rescued me And I believe That God is love And he is all I need

என்ற ஆங்கிலப்பாடல் வரிகள் அலைபேசியில் இருந்து அழகாய் ஒலிக்க, வாய்க்குள் பாடலை முணுமுணுத்தபடி சமையற்கட்டில் வேலை செய்துகொண்டிருந்தான் தமிழ்வேந்தன். பாடல் வரிகள் வாயில் முணுமுணுத்தாலும் சமையல் வேலை தடபுடலாக நடந்துகொண்டுதான் இருந்தது.

சமையலின் மணம் வீட்டை முழுவதும் பரப்பாமல் இல்லை.

“பப்பா (அப்பா)… ஸ்மெல் பேஷ்ஷா இருக்கு” என்று நன்கு மூச்சை இழுத்து வாசம்பிடித்தபடி வந்து நின்றிருந்தாள் அவனின் பெரிய தேவதை சப்திகா.

“உங்க அம்மாக்கு டஃப் குடுக்குறேனா குட்டி…” என்று கேட்டுக்கொண்டே சற்று உப்பை எடுத்து தேக்கரண்டி என்ற அளவில் தான் செய்து கொண்டிருந்த உருளைக்கிழங்கு வறுவலில் போட்டவன், அடுத்ததாக பொரி உருண்டையைச் செய்வதற்கு வெல்லத்தைக் கரைக்க ஆரம்பித்திருந்தான்.

“அம்மா உங்கள மிஞ்ச முடியுமா ப்பா… ஆல்சோ ஐ ஹேவ் எ டவுட் பப்பா…” என்று அவன் செய்யும் உணவு பதார்த்தங்களை கண்ணில் நிறைத்தபடியே கேட்க,

“சொல்லுடா குட்டி” என்று பதில் அளித்திருந்தான் தமிழ்வேந்தன்.

“அது ஏன்ப்பா நான்வெஜ் ஆர் வெஜ் எது பண்ணுனாலும் லாஸ்டா இந்த தயிர்சாதமும் பொட்டட்டோ ஃப்ரையும் பண்ணுறீங்க…”

சப்திகாவின் அந்தக் கேள்விக்குத் தமிழ்வேந்தன் முகத்தில் அழகாய் ஒரு புன்முறுவல்… அவனது மனைவியின் நினைவுகள் சில நொடிகளுக்குப் பரவின.

“உன்னோட அம்மாவுக்கு நான்வெஜ் சாப்பிட்டாலும் சரி வெஜ் சாப்பிட்டாலும் சரி கடைசியா தயிர்சாதம் சாப்பிட்டே ஆகணும்… இல்லனா வயிறு வலிக்குது னு சொல்லியே கத்தி ஊரக்கூட்டிடுவா… நல்லா காரசாரமா சாப்ட வேண்டியது.. அப்புறம் வயிறு வலிக்குதேனு அழுகுறது… வயிற்றுவலிக்கு மருந்தா குடுத்தது இப்போ ஆல்டைம் ஃபேவரைட்டா கர்ட் ரைஸ் மாறிடுச்சு.

“குழந்தைக்கு ஒரு கதையைச் சொன்னாலும் உண்மையான கதை அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த உண்மை. பெரிய பரம இரகசியம் ஒன்றும் இல்லை.

வேந்தன் கஷ்டப்பட்ட காலங்களில் திருமணமான புதிதில் தினமும் தண்ணி சோறு அல்லது பால்சாதம் தான் அவர்கள் உணவு. பத்து ரூபாய் ஆவின் பால் தான் இரு வேளையும் அவர்கள் வயிற்றுப்பசிக்கு உணவு. வேந்தன் தனியாக இருந்த வரையில் உண்டும் உண்ணாமலும் எதோ ஒரு வாழ்க்கை. அவள்… அவனின் அனைத்துமானவள் வந்த பின்னோ வயிற்றை காய வைக்கலாமா என்ற அவளின் அதட்டலில் பால்சாதம் தண்ணிசாதம் என்றாகி, பால்சாதத்திற்கு மாற்றாக தயிர்சாதம்.

அவள்… அழகே தோற்கும் அழகுசிலை எல்லாம் இல்லை. பக்கத்து வீட்டுப்பெண் எனும் அளவுதான். ஆனால் மனதால் தேவதைதான். நிறையில் குறைகாண்போர் மத்தியில் குறையில் நிறையைக் கண்டு, தன் காதலைத்தந்து பல போராடத்திற்குப் பின் ஒன்றாகியவள்.தன் கனவுகளுக்காவும் போராடி, தன் யாதுமானவனின் கனவுகளுக்கும் உயிர்வடிவம் கொடுத்தவள். உண்மையில் பெண்கள் எத்தனை மனபலம் கொண்டவர்கள் அல்லவா…

“என்ன பப்பா… அம்மாவ நினைத்து ட்ரீம்க்கு போய்ட்டீங்களா…” என்று தமிழின் கைகளில் தட்டி சப்திகா கேள்வி எழுப்ப, பின்னரே நினைவுலகம் வந்திருந்தான். மகளின் கேள்விக்குப் புன்னகையை பதிலாக வழங்கியவன் சமையல் வேலைகளை ஒதுக்கி மனைவியின் வரவுக்காகக் காத்திருந்தான்.

***

“Based on the etiological factor, the treatment can be done for peptic ulcer. If peptic ulcer is caused by H.pylori bacteria, antibiotics can be given. The best eg is” (வயிற்றுப்புண்ணிற்கான காரணங்களைப் பொறுத்து அதற்கான குணப்படுத்தும் முறைகளும் வேறுபடும். பைலோரை பாக்டீயாவினால் நோய் உருவாகியிருந்தால் அதற்கு எதிரான மருந்து வழங்குவோம். சிறந்த உதாரணம் ) என்று உரையாற்றிக் கொண்டிருக்க, “Pan 40” என்று பதில் கூறினாள் ஒரு மாணவி.

“ It’s wrong… Don’t confuse drugs. Okay… What is the full form of PPI… Can anyone tell the answer” (தவறு… மருந்துகளைக் குழப்பிக்கொள்ளாதீங்க… PPI ன் விரிவாக்கம் என்ன) என்று மறுகேள்வி கேட்க “Proton pump inhibitor” என்று ஒரு மாணவன் பதிலையும் கூறி முடித்திருந்தான்.

“Yes… “ என்று தன் உரையை முடித்து மறுநாள் வரும்போது செய்து முடிக்க வேண்டிய வேலைகளையும் கொடுத்து அவர்களை வார்டுகளில் வேலை செய்ய அனுப்பி விட்டாள்.

அவள் நறுமுகை. வயது கிட்டத்தட்ட முப்பத நான்கைத் தொடுகிறது. ஒரு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மற்றும் விரிவுரையாளராக பணியாற்றுகிறாள். காலை முதல் மதியம்வரை கல்லூரியில் மாணவச் செல்வங்களுக்குப் பாடம் கற்பிப்பவள் இரவு ஒன்பது முதல் காலை ஆறு வரை இரவு நேர செவலியப்பணி செய்து வருகிறாள்.

MSN எனப்படும் பொதுமருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சை பிரிவில் இரண்டாம் வருட மாணவர்களுக்கு மூன்று முதல் நான்கு மாதங்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்வர். இதனால் புத்தகத்தில் பார்த்து அறியும் ஒரு நோயினைப் பற்றி நேரில் இன்னமும் அறிந்துகொள்வர். சில நேரங்களில் புத்தகத்தில் இருப்பதில் இருந்து சற்றே வேறுபட்டதாக அந்த நோய் அமையும். அதை புரியவைக்கவும் செய்முறை தேர்வில் வெற்றி பெறவும் படிப்பு முடிந்து வேலைக்குச் செல்லும்போது நோயாளிகளைக் கையாளவும் இது மிகவும் பயன்படும்.

“ எந்தா பூக்குட்டி… முகத்தினு பிரகாசம்… லவ்வர் கால் செய்தோ” ( என்ன பூக்குட்டி… முகத்தில் பிரகாசம்… காதலர் அலைபேசியில் அழைத்தாரா…) என்று சக ஆசிரியர் மலர்மதியிடம் கேட்டபடியே கல்லூரிக்கு நடக்க ஆரம்பித்தாள் நறுமுகை. “ டீ நீ என்கிட்ட அடி வாங்கும்… எனக்கு கொறச்சு கொறச்சு தமிழ் அறியும்… என்ன களி ஆக்காதே போ… (கிண்டல் செய்யாதே) மலையாளம்ல பேசாதே ஓடு… ” என்று மலர்மதி தமிழில் பேச முயல,

“ அது கொறச்சு கொறச்சு இல்லமா… கொஞ்சம் கொஞ்சம்..‌. “ என்று பிழை திருத்தியவள் மலர்மதியோடு சில நிமிடங்களில் கல்லூரியை அடைந்திருந்தாள்.

“ முகே… இந்த காலேஜ் வேலையை மட்டும் நீ பாத்திட்டிருந்நே எங்கில் அது போதாதே… எதுக்கு ஈவினிங் வேலைக்கு போற‌‌… ஹெல்த் ஸ்பாயில் ஆகும்டி… சாரிடத்தே ஞான் கேள்கட்டே… “

கல்லூரி வேலையும் பார்த்து மாலை நேரத்திலும் நறுமுகை வேலைக்குப் போகிறாளே; அவள் உடல்நிலை என்ன ஆகுமோ என்கிற வருத்தம் மலர்மதிக்கு எப்போதும் உண்டு. அதனாலேயே நறுமுகையின் வீட்டில் பேசிப்பார்க்கவா என்று கேள்வி அவளிடத்தில்.

“ இல்ல பூக்குட்டி… நானே டூ (2) மந்த்ஸ்ல ஹாஸ்பிடல் வேலையை விட்டுருவேன். அவங்க ஸ்டார்ட் பண்ணியிருக்குற அகாடமில GI சிஸ்டம் பாடம் எடுக்க ஆளில்லாம இருக்குறாங்க… ஆள் வைத்தாலும் அவங்களுக்கு தனியா காசு கொடுக்கணும். நான் M.Scல GI தானே மேஜர்.” என்று இழுக்க,

“கடேசிவர, நின்னக் குறிச்சி ஆலோஷிட்கருதே” (உன்னைக் குறித்து யோசிக்காதே) என்ற மலர்மதியின் கூற்றில் வருத்தமே நிறைத்திருந்தது.

“எல்லாம் அவருக்காகத்தானே… பாத்துக்கலாம் பூக்குட்டி… அவர நான் பாத்துக்கிட்டா அவரு என்ன பாத்துக்க போறாரு… ஒரு ஹெல்தி மேரிட்டல் லைஃப்ல உன்ன நீ பாத்துக்குறத விட, உன் துணையை நீ பாத்துக்கிட்டா, உன் துணை உன்னைவிட அதிகமா உன்ன பார்த்துப்பாரு‌. இது என்னோட ஒப்பீனியன்”

எப்படியும் இதைக் குறித்து மேற்கொண்டு பேசினாலும் நறுமுகையின் சிந்தனை மாறப்போவதில்லை என்பதால் மேற்கொண்டு பேசாமல் தலையசைப்புடன் கடந்து சென்றாள். காதல் நல்லதுதான்.

ஆனால் அளவுகடந்த காதல் எத்தனை தூரம் தாங்கும்… தன்னையே உருக்கும் அந்த காதல் சுட்டுப் பொசுக்கிடாதோ… அதையும் செய்யும் நாள் நறுமுகைக்கு வெகுதூரமில்லை என்ற இயற்கையின் கூற்றை நறுமுகைக்குச் சொல்வது யார்…

****

தங்கமுனு ஊரு உன்ன மேலதூக்கி வைக்கும் திண்டுக்கல்லு பூட்டு இரண்டு மாட்டி பூட்டி வைக்கும் வுட்டு வாடி ராசாத்தி உன்ன நீயே காப்பாத்தி…”

ஹோம்தியேட்டரின் உபயத்தால் பாடல் அந்த வீட்டை விட்டு வெளிப்புறம்வரைக்கும் கேட்டுக்கொண்டிருந்தது.

கொளுத்தும் மதிய வேளையில் மெதுவாக குடையின் உதவியுடன் நடந்து வந்தவள், வீட்டிற்குள் நுழைய,

“ஹேப்பி பெர்த்டே குமரிமாஆஆஆ” என்ற பிறந்த நாள் வாழ்த்து காலை நிறைத்தது.

“தேங்க்ஸ் யூ குட்டீஸ்… பிளீஸ் கிட்ட வராதீங்க‌” என்று அவள்கூற,

அவளைத் தொடர்ந்து “அம்மா பாடில ஜெர்ம்ஸ் இருக்கு. ஃப்ரெஷ் அப் ஆகிட்டு வர்றேன். இதானே குமரிமா…” என்று நமட்டுப் புன்னகையுடன் குழந்தைகள் கோரொசாகக் கூற, புன்னகையுடன் தலையசைத்தவள், அவர்களைக் கடந்து தன் அறைக்கு சென்று தன்னை சுத்தம் செய்து வந்தாள்.

கட்டிலில் அமர்ந்து தலைமுடியைத் தளர்த்தி விட்டபடி அமர, பின்னிருந்து அணைத்துக் கொண்டான் தமிழ்வேந்தன்.

“என்னமா… ரொம்ப டயர்டா இருக்கீங்கபோல…” என்றவன் பின்னிருந்து முன்னே வந்து அவளின் கால்களைத் தன் மடியினில் வைத்தபடி கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

“ஏங்க இப்படி பிள்ளைய கிட்ட பொய்யி சொல்லி வச்சுருக்கீய… பிள்ளையளும் நம்புதுக… எனக்கு என்ன இன்னைக்கா பொறந்த நாளு… அது ஒன்னு தான் கேடும் பாருங்க” என்று முகம் சுருக்கிக் கொள்ள, அவளுக்கான பதிலை அழகாகத் தந்தான் அவளின் கண்ணாளன்.

“சரி நீயே ஒன் பொறந்த நாளச் சொல்லு. நானும் அந்த நாளுல கொண்டாடிடுதேன். என்னடி முழிக்கிய…”

“அது தெரிஞ்சா நான் சொல்ல மாட்டேனாக்கும்… என்னைய குப்பையிலயோ ஆத்துலயோ எதோ ஒரு எடத்துல கண்டெடுத்த நாள்தான் இருக்கு…” என்றவளின் மனதில் சிறுவருத்தம் தான். தாய் தந்தையின்றி வளர்ந்து அநாதை என்ற பட்டத்துடன் வாழ்வது வலிநிறைந்தது தானே…

“ஏய் தோ பாருடி… மொதய்க்கு நீ அநாதை இல்ல, உனக்கு ஒரு குடும்பம் இருக்கு அப்படிங்குறத நெனவு வச்சுக்க… உன் தாழ்வுமனப்பானையைத் தூக்கி அடுப்புல வச்சு எரிச்சுடு… உன்கிட்ட தெறம இருக்கு. உன் காசுல உன் வாழ்க்கைய வாழுற… நாளபின்ன நானே இல்லெங்கி கூட உன் வாழ்க்கைய வாழ முடியும்… நம்ம பிள்ளைய ஆசப்படுற வாழ்க்கைய அமைச்சுக் கொடுக்க முடியும்.

இஞ்சேரு (இங்கப்பாரு)… அடுத்தவன் ஆயிரம் சொல்லுவான். அத எல்லாம் இந்த குட்டி மூளைக்குள்ள ஏத்துனா ஆகுமா… சீக்கிரம் டிப்ரஷன் வந்துடியம்மா… நாம இருக்குற இந்த மெடிக்கல் ஃபீல்டுக்கே மென்டல் இஷ்யூ வந்து செத்துடுவோம்… வெளிய இருந்து பாக்குறவனுக்கு நாம லட்சத்துல பொரளுறோம்னு நினைப்பாங்க… நமக்குதானே நம்ம நிலைமை தெரியும்.இப்ப வா…

நம்ம பிள்ளைங்க வெளிய காத்திருப்பாய்ங்க… அவங்க கூட சேந்து இந்த நாள அழகா கொண்டாடிலாம் சரியா…” என்ற கையோடு அழைத்து வந்து குழந்தைகளுடன் மகிழ்ந்திருக்கச் செய்தான். அந்த மகிழ்ச்சி முடிவின்றி தொடர்ந்தால் நன்றாக இருக்குமன்றோ…

நினைவுகள் தொடரும்

10 thoughts on “நினைவில் ஒரு வானவில் – 1”

  1. இவ்வளவு அன்பா இருக்குறவக்களுக்கு என்ன பிரச்சனை வரும்னு தெரியலையே!!!..

    1. Narumugai

      என்னவா இருக்கும் 😒

      சரி பொறுத்திருந்து பார்ப்போம் 🤗

      நன்றி மா 🤗

  2. Narumugai

    நன்றி மா…

    கதையின் போக்கில் பிரச்சினை என்னவாக இருக்கும் என்று பாப்போம் 🫣😁

  3. Story nalla iruku…..adutha adutha epi la tan theriyum enna nadakudhu nu…. waiting for next ud…. narumugai enaku romba pudicha name ….thank u 😍sis….

  4. CRVS 2797

    அச்சோ..! இத்தனை சநதோஷமா இருக்கிறவங்குக்கிடையே என்ன பிரச்சினை வரப் போகுதோ தெரியலையே…??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *