��அகலாதே ஆருயிரே��
��19��
“என்னம்மா இது. எனக்கோன்னும் புரியலயே.”, வருத்தமாக கேட்ட நாராயணனை பரிதாபமாக
பார்த்த ரிது,
“அப்பா சாரிப்பா உங்க கிட்ட சொல்லணும்ன்னு தான் நெனச்சேன். ஆனா எப்படி சொல்றதுன்னு
யோசிச்சி விட்டுட்டேன்.”
“பரவால்ல சொல்லும்மா.”,அவளை உணவு மேசையின் நாற்காலியில் அமர்த்தியவர், தானும்
அவளுக்கு எதிரில் அமர்ந்தார்.
“அப்பா எனக்கு இதை எப்படி சொல்றதுன்னு தெரியலப்பா. நம்ம தெருவுல இருக்கற வருணா
அக்காவை உங்களுக்கு தெரியுமா அப்பா. அவங்களை அவங்க வீட்டுக்காரர் அன்னைக்கு
கிணத்தடில வச்சு அடிச்சிட்டாரு பா.”
“எல்லார் வீட்டுலயும் மனைவியை அடிக்கத்தான் செய்யறாங்க ரிதும்மா. அதுல என்னமோ
அவங்களுக்கு சந்தோசம் போல.”,கசப்பாக சொன்னார் நாராயணன்.
“ஆனா அந்த அக்கா அப்பறமும் அவர் கூட சாதரணமா தான் இருந்தாங்கப்பா. ஆனா இப்போ
அவங்களை அப்பாவோட வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. ஏதோ அவங்க செயல் சரி இல்லன்னு
சொல்லி அனுப்பிட்டாங்களாம்.”
“உனக்கு யார் சொன்னா?”
“அம்மா கிட்ட பக்கத்து வீடு ஆன்ட்டி சொன்னாங்க பா.”
“சரி, அதுக்கும் இந்த பேப்பர் கட்டிங்கும் என்ன சம்மந்தம்??”
“அப்பா, இந்த செய்தி எல்லாமே பேப்பர்ல வந்தது. வராம எத்தனையோ? இப்படி குடும்ப
வன்முறைக்கு ஆளாகுற பெண்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகம். ஆனா இவங்களுக்கு நியாயம்
கிடைக்குதான்னு கேட்டா பதில் இல்லப்பா.”
“உண்மை தான் மா. பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகமா தான் இருக்கு. அதுக்கு
எதிரா சட்டம் வந்தாலும் அதை சரி யா செயல்படுத்த முடியாதும்மா.”
“ஏன் பா?”,கேட்டவளின் குரலில் தான் நினைத்த காரியம் நடக்காதோ என்ற ஐயம்.
“யார் மேல புகார் குடுக்கணுமோ அவங்க கூடத்தானே காலம் பூரா வாழணும். அதுக்கு பயந்து
தான் பெண்கள் இதை பயன்படுத்த முடியாம தவிக்கிறாங்க.”
“அதை மாற்ற முடியாதா அப்பா?”
“நம்ம சமூக அமைப்பு அப்படி மா. ஆனா பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்கள் தான்
ரொம்பவே அடிபணிஞ்சு போக வேண்டிய கட்டாயம். மத்தபடி இப்போ வேலைக்கு போற
பெண்கள் இந்த குடும்ப வன்முறையை எதிர்க்க ஆரம்பிச்சுட்டாங்க.”
“அப்பறமும் ஏன் இது குறையல?”, கேள்வியோடு நின்ற மகளுக்கு எப்படி புரியும் படி சொல்வது
என்று நாராயணன் யோசிக்க, அவருக்கு துணையாக சசி வந்து சேர்ந்தார்.
“அப்படி எதிர்க்கற பெண்கள் மேல, திமிர் பிடித்தவள், ஊர்சுற்றி, பண்பில்லாதவள்ன்னு பல
பட்டம் கட்டி, அவளோட நடத்தையை கேள்விக்குறி ஆக்கறாங்க ரிது. அப்போ அவளாலயும் ஒரு
அளவுக்கு மேல இந்த சமூகத்தோடு பார்வையை பேச்சை தாங்க முடியாம பொறுத்து போறா.”
“என்ன சசி ரெஸ்ட் எடுக்கலையா?”
“உங்க பேச்சு சத்தம் கேட்டு வந்தேன். “,என்று அமர்ந்தவள், “இப்போ இதெல்லாம் தெரிஞ்சு
என்ன பண்ண போற ரிது நீ?”, நிதானமாக கேட்டாள் சசி.
“அப்பா, அம்மா நான் ஒரு முடிவு பண்ணி இருக்கேன்.”
இருவரும் அவளை கேள்வியாக பார்க்க,
“பெண்கள் முன்னேற்றத்துக்கான ஏதாவது ஒரு படிப்பை படிச்சு, அவர்களுக்காக போராடணும்.”,
என்று சொல்ல, நாராயணன் அவளை பெருமையாக பார்க்க, சசி மெல்ல சிரித்தாள்.
“யாரோட போராடுவ ரிது?”
பதில் சொல்ல தெரியாமல் ரிது விழிக்க, “ஏற்கனவே பல தன்னார்வ அமைப்புகள், சங்கங்கள்
எல்லாம் பெண்களை காக்க, போராட இருக்காங்க. ஆனா அவங்க நிலைமையை மாற்ற
அவர்களால பெருசா ஒண்ணும் செய்ய முடியாது.”, என்று நாராயணன் மகளுக்கு சொல்ல,
“அப்போ என்ன தான் மா பண்றது?”, தன் எண்ணங்களை செயல் வடிவப்படுத்த தெரியாமல்
கேட்ட ரிதுவின் கன்னம் தொட்டு,
“அதுக்கு அதிகாரம் வேணும். பதவி வேணும். சட்டத்தை செயல் படுத்தற பெரிய இடத்துல நீ
இருக்கணும் ரிது.”,சசி சொல்ல,
“அரசியல்வாதியா ஆகணுமா? அய்யே.. “,என்றால் முகத்தை சுருக்கி.
சசியும் நாராயணனும் வாய் விட்டு சிரித்துவிட்டு, “இல்ல டா ஆட்சியாளரா, ஆணையரா, உயர்
காவல் அதிகாரியா ஆனாலும் இதெல்லாம் செய்யலாம்.”,என்று மகளின் மனம் புரிந்த
பெற்றோராக இருவரும் உரைக்க, ரிது முகம் யோசனையில் ஆழ்ந்து.
மூவரும் பேச்சு மும்மரத்தில் இருக்க, அங்கே வந்த ரிஷி, “அடேய்களா.. எனக்கு பசிக்கிது. அம்மா
செய்யறேன்னு சொன்னாங்க, வேண்டாம் னு சொல்லிட்டு இப்படி கூடி உக்காந்து கும்மி
அடிக்கிறீங்களே. இதெல்லாம் நியாயமா??”
“கொஞ்ச நேரம் முன்னாடி தானே டா ஸ்னாக்ஸ் சாப்பிட்ட? “,என்று எரிச்சலாக ரிது கேட்க,”
நீயே சொல்லிட்ட, ஸ்னாக்ஸ்ன்னு இப்போ பசிக்கிது அக்கா.”
“சரியான சாப்பிட்டு ராமன் டா நீ.”
“நான் வளர்ற பையன். என்னை பார்த்து கண்ணு போடாதே அக்கா.”
“சரிதான் போ. பத்து நிமிஷத்துல தோசை ஊத்தி தரேன். உக்காரு.”
“நல்ல முறுகலா ஒண்ணு, பொடி போட்டு ஒண்ணு.”,என்று சமயலறைக்குள் நுழைந்து
கொண்டிருந்த ரிதுவை பார்த்து சொல்ல,
அவளோ தோசை கரண்டியை காட்டி மிரட்டினாள்.
“முடியலன்னா விடு ரிது மா. அப்பா செஞ்சு தரேன் இவனுக்கு.”, என்று நாராயணன் எழ,
“நைனா.. சாமி.. நீங்க உக்காருங்க. அக்கா நீ தோசையை குடுத்தா மட்டும் போதும். போம்மா..
போ.. “,என்று கும்பிடு போட்டு அக்காவை சமாதானம் செய்து அனுப்பினான் ரிஷி.
“ஏன்டா உங்க அப்பா தோசை செஞ்சு தரேன்னு சொன்னா வேண்டாம்ன்னு சொல்லிட்ட?”,என்ற
சசியை பார்த்து,”நீ சுட்டா அது தோசை, ரிது சுட்டா அது ரோஸ்ட். அப்பா சுட்டா.. “, என்று
இழுத்துவிட்டு, “அது வரட்டி மா. அது வரட்டி என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாக அவன் ஓட,
“அடேய்.. நில்லுடா. நாளைக்கு வயித்தை தடவிக்கிட்டு அப்பா பசிக்கிது ன்னு வருவல்ல..
அப்போ இருக்கு உனக்கு.”,என்று சொல்லி அவனை அவர் துரத்த, சசி டைனிங் டேபிளில்
சிரித்தபடி வேடிக்கை பார்த்தார்.
அபி கருமமே கண்ணாக, படிப்பும் வேலையும் என்று சுற்ற, சங்கரி தான் துவண்டு போனார்.
இளையவளின் திருமண நாள் நெருங்கிவிட்ட போதும் பணத்திற்கு வழி செய்ய முடியாமல்
திணறிக்கொண்டு இருந்தார். இதில் ஸ்வேதா கல்யாண கனவில் மிதக்க, சங்கரியின் தவிப்பு தான்
அதிகம் ஆனது.
அவளுக்கோ பணம் கையில் இல்லாமல் திருமணம் கேள்விகுறி ஆகி விடுமோ என்ற பயம். என்ன
செய்து நல்லபடியாக திருமணத்தை முடிப்பது என்று அவர் வருந்த, ராகவேந்தரும் இதே
சிந்தனையில் உழன்று கொண்டு இருந்தார்.
இருவரையும் இருதினங்களாக நோட்டம் விட்ட அபினவ், அன்று தாயிடம்,” சரி இப்போ
கல்யாண செலவுக்கு எவ்வளவு வேணும். சொல்லுங்க, என்னால முடிஞ்சதை நான் ஏற்பாடு
பண்ணறேன்.”
சங்கரி தயக்கமாக ராகவேந்தரை பார்த்து விட்டு,”எப்படியும் இன்னும் ஒன்றரை லட்சம் வேணும்
அபி.”, என்று உள்ளே போன குரலில் சொல்ல, “கல்யாண செலவை குறைச்சு தானே அவங்க
கேட்ட பணத்தை ஏற்பாடு பண்ணறேன்னு சொன்னிங்க. இப்போ கடைசி நேரத்துல இன்னும்
இவ்வளவு பணம் வேணும்ன்னு நிக்கிறீங்க. எனக்கு உங்க கணக்கே புரியல.”, என்று எரிச்சலும்
கோபமும் கலந்து அபி பேச,
“சின்ன பையன் உன்கிட்ட கணக்கு சொல்லணும்ன்னு என் அப்பாவுக்கு அவசியம் இல்லை டா.
உன்கிட்ட யார் இப்போ பணம் கேட்டா, ஒரு ஹோட்டல்ல பிசாத்து வேலை பார்த்துட்டு
என்னமோ அம்பானிக்கு சொந்தக்காரன் மாதிரி என்ன ஒரு பில்டப்பு..”, என்று ரேகா கிண்டலாக
சொல்ல,
அப்போதும் அமைதியாக தந்தை முகத்தை கூர்ந்து பார்த்தவன், “சரி நான் தான் சின்னப்பையன்,
உதவ முடியாதுன்னே வச்சுப்போம். நீ செய். உன் தங்கச்சி கல்யாணம் தானே”, என்று அபி
அவளை கோர்த்து விட,
“டேய் எனக்கு கல்யாணம் ஆகி நான் வேற வீட்டுக்கு போய்ட்டேன் டா. அங்க இருந்தா கொண்டு
வர முடியும்? என மாமியார் என்னை அசிங்கமா பேசுவாங்க டா”, என்று நழுவலாக பதில்
சொன்னவளிடம்,
“நீ ஒண்ணும் உங்க மாமியார் வீட்டு காசை தரவேண்டாம். இங்க இருந்து அப்பப்போ வாங்கிட்டு
போனதை குடுத்தாலே போதும்”, என்று சொல்லிவிட்டு, அம்மாவிடம் திரும்பி, “என்னம்மா
பிரச்சனை, வண்டி வேணும்ன்னா நான் டியூல எடுத்து தரேன் மா.”
“அதெல்லாம் இல்ல அபி, வண்டிக்கு சொல்லியாச்சு.”, என்று மீண்டும் சங்கரி தயங்க,
“வேற என்ன, மண்டபம், துணி மணி நகை, பாத்திரம் எல்லாம் தான் ஏற்கனவே முடிச்சாச்சே.”
“அது மாப்பிள்ளை வீட்ல கேட்ட ரொக்கம், அவர் வேலைக்காக. அதான் அபி.”
“அப்படின்னாலும் அது ஒரு லட்சம் தானே மா? நீ அதிகமா சொல்றியே? “,என்று குழப்பமாக
அவன் கேட்க,
“ரேகாவுக்கும் சேர்த்தே கொடுத்திடலாம்ன்னு.. உங்க அப்பா..”, என்று சங்கரி தன் மகனின்
கோபம் தெரிந்து, இழுத்து இழுத்து சொல்ல,
அபியோ அவர்கள் எண்ணத்திற்கு நேர்மாறாக, சிரித்தபடி,” என்னால அவ்வளவு பணம் தயார்
பண்ண முடியாது மா. “,என்று சொல்லிவிட்டு நகரப்போக,
“அதான் முடியாதுன்னு முதல்லயே தெரியும்ல? எல்லாம் சும்மா பந்தா. “,என்று ரேகா அவனை
ஏளனம் செய்ய,
“கண்டிப்பா பந்தா தான் . எனக்கு வயசு பதினெட்டு ஆகப்போகுது. ஆனா அப்பாவோட கையை
எதிர்பார்க்காம, என் படிப்பு செலவையும் அவர் தலைல போடாம என் வாழ்க்கையை இன்னிக்கே
நான் வாழறேன். ஆனா என்னை விட பெரியவ நீ. கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாங்க.
ஆனாலும் இன்னிக்கு வரைக்கும் சின்ன சின்ன செலவுக்கு கூட அப்பாவை எதிர்பார்க்கற. அப்படி
இருக்கும்போது, நான் பந்தா பண்ண கூடாதா?”, என்று அவளிடம் மொழிந்தவன், தாயிடம்
திரும்பி,
“ஒரு லட்சம் வரைக்கும் ஏற்பாடு பண்ண முயற்சி பண்ணறேன் மா. அதுவும் ஸ்வாதியை நெனச்சு
நீ கவலைப்படறதால. மத்தபடி தண்டச்செலவுக்கு கொடுக்க நான் அம்பானிக்கு சொந்தக்காரன்
இல்ல. “,என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று மாடி ஏறினான்.
சங்கரி மலைத்துப்போனார். அவருக்கு தெரியும் அபினவின் கோபம். ஆனால் இன்று
பொறுமையாக ,சரியாக ரேகாவின் தலையில் ஒரு இடி இடித்தவன், தந்தை தலையிலும் ஒரு
கொட்டு கொட்டிவிட்டே சென்றிருக்கிறேன். இதற்கு மேல் ராகவேந்தர் தான் யோசிக்க
வேண்டும். என்று நினைத்தவராக சமயலறைக்குள் செல்ல,
“ஏம்மா நீ ஏதோ முறுக்கு போடறேன்னு சொன்னியே? போட்டியா? நாளைக்கு ஒரு தூக்கு எடுத்து
வை. நான் எங்க வீடு வரைக்கும் போய்ட்டு வரணும். “,என்று சொல்ல,
இவளுக்கு அது தான் வீடென்றால் இன்னும் இங்கிருந்து தன்னை ஏன் படுத்துகிறாள் என்று
புரியாமல் முறுக்குக்கு மாவு பிசைந்தார் சங்கரி.
வேணிக்கு போன வாரம் முதலே உடல்நலம் சரி இல்லாது போக, வேலை செய்யும்
அனைவரையும் படுத்தி எடுத்தாள். மெனுவை மாற்றி, அவர்கள் மீதம் கொண்டு போவதை தடுத்து
என்று அவள் தொல்லை எல்லை மீற, மாலா,” நான் நாளைல இருந்து வேலைக்கு வரலம்மா.”,
என்று நின்றுவிட்டாள்.
வேணி செய்த அரைகுறை ரொட்டியை தின்றுவிட்டு அன்று பள்ளிக்கு கிளம்பிய ஆருஷி ரிதுவின்
பேச்சை மறந்து, அந்த வானரக்கூட்டத்திடம் மாட்டிக்கொண்டாள்.
ரிது காலையில் பள்ளிக்கு வந்ததுமே, அவளை வகுப்பாசிரியர் அழைத்து அன்று பள்ளியில்
நடைபெறும் ஒரு விழாவை தொகுத்து வழங்க அவளை அழைத்தார். சில நாட்களிலேயே அவளின்
திறமைகளை அவள் வெளிப்படுத்திய விதத்தில் பல ஆசிரியர்கள் அவளை அழைத்து வேலை
சொல்ல, இன்முகமாக அனைத்தையும் செய்தாள் ரிது.
அவள் சென்ற சில நேரத்திலேயே மூன்று நாட்களாக அவளை தொந்தரவு செய்த மாதாந்திர
பிரச்சனை இன்றும் உன்னை விடுவதில்லை என்று படுத்த, எப்போதும் அதற்காக வைத்திருக்கும்
சிறு பையை கையில் எடுத்துக்கொண்டு வெளியேறியவளுக்கு,சற்று நேரம் முன்னால் தன்
பள்ளிப்பையை அங்கேயே வைத்துவிட்டு தான் உடற்கல்வி அறைக்கு சென்று வந்தோம்
என்பதும், ரிது அவளை கவனம் கவனம் என்று சொன்னதும் மறந்து போய் இருந்தது.
��அகலாதே ஆருயிரே��
��20��
முதல் நாள் இரவு ரேகாவுடன் நடந்த பேச்சுக்களால் நேரம் கழித்தே படிக்க அமர்ந்த அபியால்
திட்டப்படி முழுமையாக படிக்க முடியாமல் போக, காலையில் அவசரமாக எழுந்து டியூஷன்
கிளம்பிக்கொண்டு இருந்தான்.
அவன் வாசலை அடைந்து அவன் சைக்கிளை எடுக்கும் நேரம், “அபி அபி..”, என்று கூப்பிட்டபடி
வந்தார் சங்கரி.
“என்னமா”, என்றான் மென்மையாக.
“இந்தா அபி இதை டியூஷன்ல ஹரியை பார்க்கும் போது கொடுத்திடு”, என்று ஒரு கவரில் சில
முறுக்குகள் வைத்து கொடுத்தார். அவரை முறைத்த அபியை கன்னம் கிள்ளி சமாதானம்
செய்தவர், “அவனுக்கு இந்த முறுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அபி. ஆசையா அன்னைக்கு
சாப்பிட்டான்.”, என்று சொன்ன அம்மாவை புன்னகையுடன் கண்டவன், “சரிம்மா”, என்று
வாங்கிக்கொண்டு சைக்கிளில் ஏறினான்.
அவன் விரைந்து டியூஷன் வகுப்பில் அமர்ந்து ஹர்ஷாவின் வரவுக்காய் காத்திருந்தான். ஆனால்
அவன் வந்த வழியை காணவில்லை. வகுப்பு முடிந்து வெளியில் வருகையில் தன் பள்ளிப்பை,
உணவுப்பை, சில ரெகார்ட் நோட்டுகள் போக அதிகப்படியாக இருந்த அந்த முறுக்குப்பையை
கண்டு அவனுக்கு எரிச்சல் மூண்டது. பள்ளிக்கு கொண்டுபோனால் காக்கைக்கு இட்ட சோறு
போல ஒரு நொடியில் பை காலியாகி விடும். ஆனால் கூடவே தொந்தரவாக அடிக்கடி கேட்டு
வைப்பார்கள். ஹர்ஷா வராமல் போனதில் கடுப்பாக இருந்தது அவனுக்கு. யோசித்தபடி
சைக்கிளில் பையை வைத்துக்கொண்டு இருந்தவனை, “என்னப்பா அபி இந்த பக்கம்”, என்ற குரல்
இழுக்க,
திரும்பியவன் விழிவட்டத்தில் விழுந்தது அவனுடன் கடையில் வேலை பார்க்கும் சுரேஷ்.
“அண்ணா”, என்று அருகில் செல்ல, “என்ன இங்க தான் நீ டியூஷன் படிக்கிறியா? “, என்று
டியூஷன் சென்டரின் போர்டில் கண் பதித்தபடி கேட்க, “ஆமா அண்ணா.”, என்றவன் மூளையில்
மணி அடிக்க, “அண்ணா இந்தாங்க இது அம்மா செஞ்ச முறுக்கு. கடைக்கு தானே போறீங்க
எடுத்துட்டு போங்க”, என்று கொடுத்தான்.
“ஸ்கூலுக்கு எடுத்துட்டு போகலையா அபி”, என்று கேட்டபடி அதை பெற்றுக்கொண்ட சுரேஷ்.
“என்ன கிளம்பிட்ட? சாப்பிட்டியா?”, என்று கேட்டதும் உண்மையில் அபியின் விழிகளில் நீர்
நிறைந்தது.
ஆயிரம் தான் நாம் ஒருவருடன் பழகினாலும், அக்கறையாய் அன்பாய் விசாரிக்கும் சிலரே நம்
வாழ்வில் இருப்பார்கள். அது போல அதிக ஒட்டுதல் இல்லாமல் பழகினாலும் சுரேஷ் அந்த
ஹோட்டலில் அபிக்கு அவனாலான அனைத்து உதவிகளையும் செய்தான். போக அவனுக்கு
சொல்லியும் கொடுத்தான். அதனால் சுரேஷின் மீது நிறையவே நன்மதிப்பு இருந்தது அபிக்கு.
இன்று அவனின் பேச்சில் தெரிந்த அக்கறையில் அபி மகிழ்ந்து,
“இல்லண்ணா இனி தான். அம்மா கொடுத்து விட்டிருக்காங்க. ஸ்கூலுக்கு போய்ட்டு
சாப்பிடணும். நேரம் ஆச்சு அண்ணா. நேத்தே ஒரு தியரம் படிக்கலை. நான் வரவா? சாயங்காலம்
பார்க்கலாம்.”, என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
அவன் கிளம்பியதும் அவன் போவதையே பார்த்திருந்த சுரேஷ் மனதில், “எப்படி தான் இப்படி
பறந்துகிட்டே இருக்கானோ தெரியல.”, என்று நினைத்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி
நடந்தான்.
தன் சிறுபையுடன் கழிவறையில் நுழைந்து விட்ட ஆருஷியை பின்னால் இருந்து வந்து
பார்த்துவிட்டு, சத்தம் போடாமல் தாள் போட்டுவிட்டு சென்றது அந்த வானரக்கூட்டம்.
அவள் நேரமோ என்னவோ அன்று நடந்த நிகழ்ச்சிக்காக அனைவரையும் ஆடிட்டோரியம் வரச்
சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட, அனைத்து மாணவர்களும் அங்கே செல்லத் துவங்கினர்.
ஆருஷி தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர எண்ணம் கொண்டு உள்ளே
சென்றவளுக்கு, தன் பையில் தன் தேவைக்காக வைத்திருந்த நாப்கின்கள் காணாமல் ஒரு கணம்
திகைத்தவள், எப்படியும் ரிது அதிகப்படி எப்போதும் கையில் வைத்திருப்பாள் என்று
அசட்டையாக வெளியில் வர நினைக்க, கதவோ வெளியில் தாள் போடப்பட்டு இருந்தது.
அவளின் நிலைமையும் சற்று மோசமாக, உடனே அவள் தேவைக்கான பொருளை வெளியில்
இருந்து பெறவும் முடியாமல் நிற்கும் தன் நிலையை நினைத்து நொந்தவளுக்கு அப்போது தான்
ரிது, கவனம் கவனம் என்று சொன்னதன் அர்த்தமும் , நந்தினியின் கூட்டத்தின் சதி வேலையும்
புரிந்தது.
ஆனால் இந்த நொடி அவளுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை உணர்ந்தவள் அடுத்து என்ன
செய்வது என்ற யோசனையில் இறங்கினாள் ஆரூ.
அவளின் கதவை தட்டும் ஓசை காலியான அந்த பிரதேசத்தில் எதிரொலித்ததே அன்றி யாரின்
காதுகளையும் சென்றடையவில்லை.
அவளின் உடலின் நிலையோ அவளின் மனநிலையும் சூழ்நிலையும் புரியாமல் அவளை
வாட்டியது.
அங்கே ஆடிட்டோரியத்தில் நந்தினியின் அருகில் இருந்தவள், “ஏன் நந்து, நம்ம பாட்டு இங்க
வந்துட்டோம், அவளோட திங்ஸ் கூட எடுத்து வச்சிட்டோம். அவ பாவம் இல்லையா?”, என்று
கொஞ்சம் மனசாட்சி உறுத்தி கேட்க,
“இதுக்கு தான் இவளை எல்லாம் நம்ம செட்டில் சேர்க்க வேண்டாம்ன்னு அன்னைக்கே
சொன்னேன் நந்து. கேட்டியா??”, என்று ஒருத்தி கூற,
“அதானே என்ன டி அவ பாவம். அன்னைக்கு நம்ம நந்துவ சப்புன்னு அறைஞ்சா தானே. அப்போ
நம்ம நந்து பாவம் இல்லையா?”, என்று இன்னொருத்தி வந்தாள்.
முதலில் பேசியவள், “அந்த ரிது தானே நந்துவை அடிச்சது, அதுக்கு எதுக்கு பா அந்த ஆருஷியை
இப்படி பூட்டி வைக்கணும்?”, என்று கேட்க,
“இவளுக்காக தானே டி அவ அன்னைக்கு அடிச்சா. இவளை அடிச்சா அவளுக்கு வலிக்கும்.”,
என்று சொல்லி விட்டு விஷமமாக சிரித்தது அந்த கூட்டம்.
அங்கே அருஷியோ சொல்லும் நிலையில் இல்லை. அவள் உடல்நிலை அவளை படுத்த,
அடைபட்ட கழிவறையில் துர்நாற்றம், மூச்சடைப்பது போல அவளை உணர வைக்க, முடிந்த
வரை கதவை அவள் தட்டினாள்.
அந்த பகுதியின் மறுபக்கம் ஆண்கள் கழிவறை இருக்க, உள்ளே இருந்தவனுக்கு அந்த ஓசை
காதில் விழ, பெண்கள் கழிவறைக்குள் செல்ல முடியாததால், வேகமாக விழா நடந்து கொண்டு
இருந்த ஆடிட்டோரியத்தை அடைய,
அங்கே இருந்த ஆசிரியையோ, “இன்னும் சுத்திக்கிட்டே இருப்பிங்களா டா? வந்து உட்காரு.”,
என்று கடிந்து அவனுக்கு ஒரு இருக்கையை காட்ட, அவனோ, “மிஸ்.. மிஸ்.. கொஞ்சம் வாங்க..”,
என்று திணறிக் கொண்டே இருந்தான்.
“வில் யூ பிளீஸ் சிட் டவுன்.”, என்று அவர் சத்தம் போட, வேறு வழி தெரியாது அமர்ந்தவன்
விழிகள், தன் பேச்சுக்கு செவிகொடுக்கும் ஆசிரியர் யாரேனும் அருகில் உள்ளனரா என்று
தேடினான்.
அவனின் போதாத வேளை ஒருவரும் இல்லை. அந்த கதவின் ஓசை இன்னும் அவன் காதுகளில்
ஒலிப்பது போல தோன்ற, துணிந்து எழுந்தவன் நடையை எட்டிப்போட்டான்.
மெல்ல பெண்கள் கழிவறைப் பகுதியை சுற்றி நோட்டமிட்டவன், இப்போதும் அந்த சத்தம்
கேட்கிறதா என்று கூர்ந்து கவனிக்க, அங்கோ நிசப்தமே நிறைந்து இருந்தது.
ஒரு மனம் என்ன ஆனதோ போய்ப் பார் என்று இடித்துரைக்க, மற்றொரு மனமோ, ஒரு வேளை
உள்ளே யாரும் இல்லாமல் போய் நீ போன நேரத்தில் பெண்கள் உள்ளே வந்தால் உனக்கு தான்
அசிங்கம். கவனம் என்றது. இரண்டுமே சரியானவையாக அவனுக்கு தோன்றினாலும் மேலும்
காதை தீட்டி சுவற்றின் ஓரமாக நடக்க ஆரம்பிக்க, குறிப்பிட்ட கழிவறையின் பின் பக்க சுவற்றில்
அவன் நெருங்கும் போது சன்னமான முனகல் ஒலி கேட்டது தான் தாமதம், எதைப்பற்றியும்
யோசிக்காமல் உள்ளே நுழைந்து அந்த அறை எங்கே என்று தேடத் துவங்கினான். இருந்த பத்து
கழிவறைகளில் ஒன்று மட்டும் வெளிப்பக்கம் தாள் போடப்பட்டு இருக்க விரைந்து அந்த
அறையை திறந்தவன் அதிர்ந்தான். அங்கே ஆருஷி அரை மயக்கத்தில் தரையில் அமர்ந்திருக்க,
அவளின் ஆடையில் ஆங்காங்கே குருதியின் திட்டுக்கள். அவனுக்கு ஏன், என்ன என்றெல்லாம்
விளங்க வில்லை. அவளை மெல்ல கைத்தாங்கலாக வெளியே அழைத்து வர, அவளோ பெண்கள்
கழிவறையை தாண்ட மாட்டேன் என்று அரை மயக்கத்திலும் அடம் பிடிக்க, அவனுக்கு என்ன
செய்வது என்றே புரியவில்லை.
அங்கிருந்த நீர்த் தொட்டியின் திட்டில் அவளை அமர்த்தியவன், “இங்கேயே இரு வரேன்.”, என்று
சொல்லி விட்டு கலையரங்கத்திற்குள் நுழைய,
அவனை தடுக்க வந்த ஆசிரியையை கோபமாக பார்த்துவிட்டு அங்கே தொகுத்து
வழங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் போனவன், மைக்கை அணைத்து விட்டு,
“உன்னோட பிரென்ட் அங்க பாத்ரூம்ல உடம்பு சரி இல்லாம இருக்கா. இதை விட்டுட்டு உடனே
வா.”,என்று சொல்ல,
ரிதுவோ ஒன்றும் புரியாமல் திகைத்தாள். அவளுக்கு அடுத்த நொடியே ஆருஷியின் மாதாந்திர
நாட்கள் இவை என்பது நினைவுக்கு வர, கண்டிப்பாக இவன் பொய் சொல்லவில்லை என்று
உணர்ந்து, தன்னுடன் சேர்ந்து தொகுத்து வழங்கிக் கொண்டு இருந்த பனிரெண்டாம் வகுப்பு
பெண்ணிடம், “அக்கா ஒரு அவசரம் பத்து நிமிஷத்துல வரேன். ப்ளீஸ் பார்த்துக்கோங்க.”, என்று
அவள் காகிதங்களை கொடுத்துவிட்டு எழுந்து வெளியேறினாள்.
அவள் பின்னால் வந்த அந்த பையனை ஒரு பார்வை பார்த்தவள், “ரொம்ப நன்றிங்க. நீங்க
வெளில நில்லுங்க. நான் என்னன்னு பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தவள்
கண்கலங்கி போனது.
சோர்ந்து களைத்து கிடந்த அவளை எழுப்ப, அவளோ நகரக் கூட முடியாமல் கண்ணீருடன்.
“முடில டி. எனக்கு அது வேணும். என் கிட் பேக்ல அதை காணோம். யாரோ வெளில பூட்டிட்டு
போய்ட்டாங்க. ஒரு பையன் இப்ப தான் வந்து திறந்து விட்டான். என் ட்ரெஸ் எல்லாம் நாசம்.
என்னால வெளில வர முடியாது டி.”,என்று அவளை அணைத்து கதறி விட்டாள்.
அவளை அணைத்து ஆறுதல் சொன்ன ரிது,” இரு வரேன்.”, என்று வெளியில் சென்று. “கொஞ்சம்
யாரும் உள்ள போகாம பார்த்துக்கோங்க. எதுவும் பிரச்சனை வந்தா நான் உங்களுக்காக
பேசுவேன். பயப்பட வேண்டாம். ரொம்ப பெரிய உதவி பண்ணி இருக்கீங்க.”,என்று சொல்ல,
அவனோ,
“அவங்க மேல ஒரே பிளட். எப்படி வெளில வருவாங்க? இன்னிக்கு ஸ்போர்ட்ஸ் இருக்கும் னு
என்னோட ஸ்போர்ட்ஸ்வேர் கொண்டு வந்தேன். எடுத்துட்டு வரவா?? அவங்களை யூஸ்
பண்ணிக்க சொல்றிங்களா?”, என்று கேட்டவனை நன்றியோடு பார்த்தவள்.
“ரொம்ப தேங்க்ஸ். கொண்டு வாங்க.”,என்று சொல்லிவிட்டு, அவள் வகுப்புக்கு சென்று அவள்
வந்திருந்த நாப்கினுடன் வந்தவள் அதை அருஷியிடம் கொடுத்து விட்டு, அவன் கொண்டு வரும்
துணிக்காக காத்து நின்றாள்.
அவனும் உடையை கொடுக்க அதை பெற்று, ஆருஷி மாற்றி வந்ததும். இருவரும் வெளியே வந்து
அவனுக்கு நன்றி சொல்ல,அவனோ,
“தண்ணி தெளிச்சு விட்ட பசங்கதான்னாலும் நல்ல பசங்கம்மா.”, என்று சொல்ல, முதல் நாள்
பார்த்த பனிரெண்டாம் வகுப்பு பையன் என்பது நினைவுக்கு வர, ரிது அவனிடம் மன்னிப்பு
வேண்டினாள்.
“பரவால்ல மா. என்ன பிரச்சனைன்னு எனக்கு புரியல. ஆனா நீ சமாளிச்சதை பார்த்தபோ
பெண்களுக்கு இது இயல்பு போல, நான் தான் பயந்துட்டேன். கவனமா கூட்டிட்டு போங்க. யார்
தாள் போட்டான்னு கண்டுபிடிச்சு நாலு சாத்து சாத்துங்க.”, என்று சொல்ல, ரிது தலையசைத்தாள்.
அவன் தன்னை தாங்கி நடந்து வந்ததே ஆருஷிக்கு நினைவில் ஆட, அவனை காண ஏனோ
உள்ளம் முணங்கியது. “தான்க்ஸ்”, என்று அவள் மென்று விழுங்கி சொல்ல,
அவனோ தன் கரம் நீட்டி,”ஹர்ஷா”. என்றான்.
Spr spr spr going waiting for nxt ud😍😍😍😍
வாவ்…! நம்ம ஹர்ஷா தானா அது… வெரி குட் பாய்.
Super