அகலாதே ஆருயிரே
23
ஹர்ஷா கண்டிப்பாக இன்று மாலை அபினவ் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சென்று அவனை
சந்திப்பது என்ற முடிவுடன் இருந்தான். வீட்டுக்கு சென்றவன் தன் பள்ளிச்சீருடையை துவைக்க
போட்டுவிட்டு, பாட்டி தந்த சத்துக்கஞ்சியை குடித்தான்.
அவன் முகத்தில் தெரிந்த தெளிவைக் கண்ட பாட்டி சாந்தலட்சுமி அவன் தலையை வருடியபடி,
“என்ன தம்பி இன்னிக்கு முகம் பளிச்சுன்னு இருக்கு. நேத்து இவ்வளவு இல்லையே. “,என்று
கேட்க,
தனக்கும் அபிக்குமான நட்பை சொன்னவன் அவனின் சூழ்நிலையையும் சொல்ல, சாந்தலட்சுமி,
“பொறுப்பான பையனா இருக்கான் பா. இப்படி பட்ட பசங்க நட்பை என்னைக்கும் விடக்கூடாது.
ஒண்ணா சேர்ந்து விளையாடுவதும் ஊர் சுற்றுவதும் இல்ல நட்பு. நட்புன்னா பார்க்காம எத்தனை
வருஷம் இருந்தாலும் அவங்க எண்ணம் நம்ம மனசுல பசுமையா இருக்கணும். இக்கட்டுல
இருக்கான்னு காத்து வாக்குல தெரிஞ்சா பறந்து போய் உதவி செய்யணும். எந்த காரணம்
கொண்டும் பிரதிபலன் எதிர்பார்க்காம இருக்கணும். நான் அன்னிக்கு செஞ்சேனே இன்னிக்கு
எனக்கு கஷ்டம் வரும்போது அவன் செய்யலேயேன்னு நினைக்க கூடாது. அப்பவும் அவன்
இடத்துல இருந்து என்ன பிரச்னையோன்னு யோசிக்கணும். புரியுதா?”, என்று சொல்ல, நண்பன்
என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள வாழ்வியல் புரிய திகைப்போடு நின்றான் ஹர்ஷா.
“என்ன முழிக்கிற?”, என்று கேட்டபடி வந்த கோமதிநாயகம், பேரனின் நட்பை கேட்டு மகிழ்ந்து,
அவன் திகைத்து நிற்பதை பார்த்து, “சும்மா வா தம்பி சொன்னாங்க? உன் நண்பன் யார்ன்னு
சொல்லு நீ யார்ன்னு நான் சொல்றேன்னு. ஒரு நண்பன் தப்பு வழியில போனா அவனை ஒரு
நல்ல நண்பன் திருத்தணும் இல்ல கண்டிக்கவாவது செய்யணும். அவன் நண்பன் என்பதற்காக
கூட சேர்ந்து தப்பு பண்ணக் கூடாது. அது தான் சிறந்த நட்பு. போ போய் உன் நண்பனை
பார்த்துட்டு வா.”
அவர் அவள் தோளை வளைத்து முன்னால் தள்ளி மகிழ்வோடு அனுப்ப, அன்று அபி ஒரு
பெண்ணை அவனும் கூடப்படிக்கும் ஒருவனும் கிண்டல் செய்த போது கண்டித்தது நினைவில்
வர, உண்மையில் அபி என் நண்பனாக கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும். என்று நினைத்து
முகம் மலர சிரித்தபடி தன் வண்டியை அபி வேலை செய்யும் கடை நோக்கி செலுத்தினான்.
ஆருஷி பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருக்க வேணி நாலு ப்ரெட் துண்டுகளை டோஸ்ட் செய்து
கொடுக்க, கடுப்பானவள், “என்னமா இது. மாலாக்கா இருந்தா குறைந்தபட்சம் இட்டிலியாவது
கிடைக்கும். உன்னோட இதே ரோதனை தானா? இந்த காஞ்ச ரொட்டியை யார் திங்கறது. ச்ச..”
என்று எழுந்து வெளியேறினாள்.
வாசலில் சைக்கிளில் ஏறி மிதிக்க முயன்றவள் முடியாமல் திணறி நிற்க, அப்போது தான் ஒரு
உடற்பயிற்சிக்கூடத்தில் இருந்து வந்த கேசவன், ஆருஷி வாசலில் நிற்கும் கோலத்தை
பார்த்துவிட்டு, காரை அவள் அருகில் நிறுத்தி, “போ மா போய் சைக்கிளை வச்சிட்டு வா. நான்
உன்னை ஸ்கூலில் விடறேன். “,என்றிட,
“இல்ல எனக்கு ரிது வீட்டுக்கு போகணும்.”, என்றாள் சிறுப்பிள்ளையாக.
“சரி வா கூட்டிட்டு போறேன்”, என்று சிரித்தபடி அவர் சொல்ல, சைக்கிளை அதன் இடத்தில்
நிறுத்தி விட்டு, பையுடன் வந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் முன்னால் அமர்ந்தாள்.
அதிகம் ஆரூ அவள் தந்தையோடு காரில் பயணிப்பது இல்லை. ஏன் அவருடன் எங்கும் செல்வதே
இல்லை என்பது தான் உண்மை. அன்று பள்ளியில் பிரச்சனை என்ற போது அவருடன் வந்தவள்
பின்பு இன்று தான் வருகிறாள். வேடிக்கை பார்த்தபடி வந்தவள், ஒரு கடையை கண்டதும்அவள்
கண்கள் மின்ன, கேசவன் வாகனத்தின் வேகம் குறைத்துப் பார்க்க, அது ஒரு ஐஸ்கிரீம் கடை,
“இரு ஆரூ வரேன். “,என்று சொல்லிவிட்டு வண்டியை விட்டு இறக்கியவர், ஒரு பேமிலி பேக்
ஐஸ்கிரீம்முடன் திரும்ப, அவளோ கண்டும் காணாமல் இருந்தாள்.
“இந்தா மா “,என்று அவர் நீட்ட வாங்கி பையினுள் வைத்தாள்.
“சாப்பிடு. “,என்று அவர் அவளை ஆவல் பொங்க பார்க்க, அவளோ,”இருக்கட்டும்.” என்று
சொல்லி முன்னால் பார்த்தாள்.
சரி அவள் இன்னும் தன்னிடம் சகஜமாக பேசவில்லை என்பதை உணர்ந்தவர் நேராக ரிதுபர்ணா
வீட்டு வாசலில் நிறுத்த, பையை கையில் எடுத்துக்கொண்டு, தன்னை ஒரு ஜீவன் அழைத்து
வந்தது என்ற எண்ணமே இல்லாமல் அவள் வீட்டினுள் சென்று விட்டாள்.
காரை பூட்டு விட்டு அவரும் வர, அவர் கண்களில் பட்ட காட்சி இது தான். சசி தன் மக்கள்
இருவருக்கும் காலை உணவு ஊட்டிக்கொண்டு இருக்க, நாராயணன் ரிஷியின் பள்ளி நேர
அட்டவணைப்படி நோட்டு புத்தகங்கள் சரியாக இருக்கிறதா என்று எண்ணிக்கொண்டு இருந்தார்.
ஆரூ உள்ளே நுழைய, “வாடா”, என்ற நாராயணனின் குரலில் அவ்வளவு வாஞ்சை.
சசி அடுத்த கவள உணவை ஆருஷியை நோக்கி நீட்ட, கண்கள் கலங்க பெற்றுக்கொண்டவள்,
சசியை கட்டி அணைத்தாள்.
நாராயணன் இதை கண்டபடியே, ரிஷியின் பென்சிலை சீவி, பேனாவுக்கு மையிட்டார்.
அப்போது தான் கேசவன் வந்ததை கண்டவர் ,”வாங்க வாங்க சார். நான் பார்க்கவே இல்ல
உங்களை. சாரி”, என்று கைப்பற்றி உள்ளே அழைத்தார்.
கேசவன் எடுத்தவுடன் கேட்டது ஒன்றே ஒன்று தான்.” நீங்க ஏன் சார் பசங்க பை எடுத்து
வைக்கிறீங்க? பேனா மை கூட அவன் ஊத்திக்க மாட்டானா?”, என்று ரிஷியை பார்த்தபடி
சந்தேகமாக கேட்க,
நாராயணன் வாயை திறக்கும் முன்னால், “எங்க அப்பா வேற மாதிரி அங்கிள், உங்களைப்போல
இல்ல. என்னை பற்றி அப்பாவுக்கு நல்லாவே தெரியும். ஒரு பொருள் இல்லாம போனா நான்
எவ்ளோ பதறுவேன் தேடுவேன் என்று. அதான் நான் எடுத்து வச்சாலும் அவர் ஒரு தரம் சரி
பார்ப்பார். மறந்துட்டா எடுத்து வைப்பார். மை ஊத்துறது ஒரு வேலையா? அது எனக்கு செய்ய
தெரியாதா?” என்று எரிச்சலாக ரிஷி மொழிய,
நாராயணன் சிரித்தபடி, “டேய் அமைதியா இரு. பெரியவங்க கிட்ட அப்படி பேசக்கூடாது.”,
என்று சொல்லிவிட்டு,
“குழந்தைங்க காலைல எட்டு மணியில் இருந்து சாயங்காலம் டியூஷன் முடிஞ்சு ஆறு மணிக்கு
வரும் வரைக்கும் படிப்பு, மிஸ், பிரெண்ட்ஸ் இப்படி வேற உலகத்துல இருப்பாங்க. அப்பறம்
கொஞ்ச நேரம் விளையாடினாலும் மறுபடி ஹோம்ஓர்க். இதுல கடைக்கு போ, அதை எடு, இதை
வை ன்னு வீட்டுல நம்ம வேற நம்ம கடுப்பைக் காட்டுவோம். இதுல சில நேரம் முக்கியமான
புத்தகமோ, பேனாவுக்கு மை ஊத்துறதோ மறந்து போய்டும். ஆனா அதோட பாதிப்பு பள்ளியில்
பெருசா இருக்கும். நாம கொஞ்சம் இது போல சின்ன விஷயங்களை கவனிச்சா பள்ளியில்
பிள்ளைகள் மற்ற பிள்ளைகள் முன்னால சங்கடப்படாம சிரிச்சு நிம்மதியா இருப்பாங்க
இல்லையா?”, என்று சொல்ல,
இந்த விளக்கம் கேசவனுக்கு புதிதாக தெரிந்தது. இருந்தும், “பேனாவுக்கு மையை மறந்தா என்ன
சங்கடம்?”, என்று கேட்க,
“அங்கிள், ஒரு நாள் நான் மறந்து போய் போய்டுறேன்னு வைங்க, அன்னைக்கு பள்ளியில் ஏதோ
எக்ஸாம். எனக்கு எப்படி இருக்கும்?? சரி அது கூட வேண்டாம், நான் மறந்துட்டேன் தொடர்ந்து,
ஒரு நாள் பக்கத்துல இருக்கிறவன் ரெண்டு சொட்டு மை தருவான். இரண்டவது நாள் அது
ஒன்னாகும். அப்புறம் முறைப்பான். ஏண்டா பேனாவுக்கு மை போட கூட உங்க அப்பா காசு
தரமாட்டாரான்னு கேப்பான். இதெல்லாம் தேவையா??ஒரு சொட்டு மையிக்காக எங்க அப்பா
வரைக்கும் சங்கடப்படணும் “, என்று சொல்ல கேசவனுக்கு ‘இவ்வளவு நுணுக்கங்கள்
இருக்கின்றனவா??’, என்றே தோன்றியது.
நாராயணன் சிரித்தபடி அவனுக்கு சாக்ஸ் போட்டு விட்டார். “நீங்க கிளம்ப வேண்டாமா?”, என்று
கேசவன் கேட்க,
“காலைல சீக்கிரம் எழுந்து எல்லா வேலையும் முடிச்சிட்டு பசங்க கிளம்பும் வரை எங்க ரெண்டு
பேர் நேரமும் அவங்களுக்கு தான்.”, என்று சிரித்தபடி சொன்னவரை. இப்படியும் ஒரு மனிதனா
என்று பார்த்தார் கேசவன்.
அதற்குள் சசி ஊட்டிய உணவை மூவரும் உண்டு முடிக்க, ஆருஷி தன்னிடம் இருந்த ஐஸ்கிரீமை
காட்டி சிரித்தாள். மூவரும் ஒன்றாக அந்த டப்பாவை காலி செய்ய, கடைசி ஒரு ஸ்பூன் மிஞ்சி
இருக்க, அது யாருக்கு என்ற சண்டை வலுக்கத் தொடங்கியது.
ரிது ஆருஷிக்கு விட்டுக்கொடுக்க, ரிஷி அவளை ஓரக்கண்ணால் முறைத்தப்படி ,”நீயே சாப்பிடு
ஆரூ அக்கா”, என்றான்.
அவள் அந்த ஒரு ஸ்பூனை வாயருகில் கொண்டு சென்றுவிட்டு, சட்டென்று ரிஷியின் வாயில்
திணிக்க, அவன் கண்களில் மின்னல்,
“அக்கா”, என்று அவளை அணைத்துக்கொள்ள, மூவரும் சேர்ந்து நகைத்தனர்.
கேசவன் தன் மகள் இப்படி சிரித்து பார்த்தேயிராதவர், கண்கலங்கக் கண்டார்.
அன்று அபிக்கு டேபிள் சர்வீஸ் அலாட் ஆகி இருக்க, ஒரு டேபிளுக்கான உணவை வண்டியில்
வைத்து தள்ளிக்கொண்டு சென்றான்.
அதை அவன் அங்கு டேபிளில் அடுக்க, அங்கே அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், “என்னப்பா
இப்படி சூப் சூடே இல்லையே”, என்றார். அவன் அதை கவனித்துவிட்டு, மன்னிப்பு
வேண்டிக்கொண்டு அதை மீண்டும் சமையலறைக்கு எடுத்து சென்றான்.
அவன் மீண்டும் சூடான சூப்போடு வர, அதை வாங்கியவர், “இங்க பாரு நீ வர்றதுக்குள்ள
வாங்கின பன்னீர் டிக்கா ஆறிப்போச்சு. போய் சூடு பண்ணி வாங்கிட்டு வா”, என்றார்.
அமைதியாக வாங்கிச்சென்றான். மீண்டும் வந்து அதை கொடுத்திட, பெற்றுக்கொண்டவர்,”
குடிக்க வெந்நீர் வேண்டும்”, என்றார்.
அளித்தான். தன் பிள்ளைக்கு குளிர்பானம் என்றார். கொண்டு வந்தான். மீண்டும் உணவு
வகைகள் ஆர்டர் கொடுத்தார். அதையும் இன்முகமாக பரிமாறினான்.
கிளம்பும் தருணம் அவனுக்கு ஐம்பது ரூபாய் வழங்கியவர். நல்ல பையன் என்று சொல்லி எழுந்து
சென்றார்.
இதை எல்லாம் பக்கத்து டேபிளில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த ஹர்ஷாவின் கண்களில்
ஊற்றாக கண்ணீர். தன் நண்பன் வீட்டின் சூழ்நிலைக்காக எவ்வளவு பொறுமை காக்கிறான்.
எப்படி இன்முகமாக அத்தனையும் செய்கிறான்.என்று உள்ளே அவனை மெச்ச,
அவனை கவனிக்காமல் அடுத்த வாடிக்கையாளர் வர அபி முழு கவனமாக அவர்களை கவனிக்க
ஆரம்பித்தான்.
ஹர்ஷா ஒரு குளிர்பானத்தை பெற்றுக்கொண்டு அவனையே பார்த்தபடி இருந்தான். கடைசியில்
அபியின் விழி வட்டத்தில் ஹர்ஷா விழ, அபி அவனை கண்டும் காணாமல் நகர்ந்து போக,
ஹர்ஷா குழம்பினான்.
பணம் கொடுத்துவிட்டு வெளியில் வந்து யோசனையாக நின்றவனை தோள் தட்டி அழைத்தான்
அபி.
“என்ன பங்கு. ஹோட்டல்ல வந்து கூல் ட்ரிங்ஸ் சாப்பிடற அளவுக்கு பெரிய மனுஷன்
ஆகிட்டீங்க. “, என்று கிண்டலடிக்க,
“ஏன் பங்கு என்னை பார்த்தும் நீ பேசல”, என்று அவன் கிண்டலை கண்டுகொள்ளாமல் பேசிய
ஹர்ஷாவை பார்த்தவன், “உள்ள நான் வெயிட்டர், நீ கஸ்டமர் டா. இதோ இந்த படியை
தாண்டிய பின்னாடி தான் நீ என் நண்பன். இப்போ பேசறது போல வேலை செய்யற இடத்துல
பேச முடியாது டா”, என்று சொல்ல,
“இவ்வளவு யோசிக்கணுமா டா??”, என்று பெருமூச்சு விட்டான் ஹர்ஷா.
“கண்டிப்பா யோசிக்கணும் தம்பி”, என்ற குரல் பின்னால் வர, அங்கே ஹோட்டல் உரிமையாளர்
நின்றிருந்தார்.
“ஏன் சார் “, என்று ஹர்ஷா அவரை வினவ, “ஒண்ணு அவன் பெயர் சொல்லி நீ சாப்பிட்டு பணம்
கொடுக்காம போய்ட்டா அவன் சம்பளம் போய்டும். இது பொது. ஆனா உன்னை தெரிஞ்சா
மாதிரி காட்டி உன்னை கவனிச்சா மத்த கஸ்டமர் தப்பா நினைப்பாங்க. இதுவும் பொது.நாம
எந்த இடத்துல இருந்தாலும் நம்மளால யாருமே பாதிக்கப்படக் கூடாது. அந்த கவனம்
இருக்கணும். தெரியாம நடந்தா பரவல்ல. ஆனா நம்ம கவனக்குறைவால் நடக்க கூடாதுப்பா.”
“இந்த இடத்துல மட்டும் தான் இப்படியா சார்?”, என்றான்.
“இல்லப்பா. எந்த வேலையிலும் இது போல நமக்கு நாமே சில பொது கொள்கைகள்
வச்சுக்கணும். அப்போ தான். நம்மால நல்ல பெயரும் சரி, உயர்வும் சரி அடைய முடியும். அந்த
விஷயத்துல உன் நண்பன் கெட்டி. சரி பேசிட்டு உள்ள வா அபி. “,என்று சொல்லிவிட்டு
நகர்ந்தார்.
ஹர்ஷா ஆச்சர்யம் மாறாமல் நின்றான்.
அகலாதே ஆருயிரே
24
ஆருஷி ரிதுவுடன் அவள் சைக்கிளில் சென்றுவிடுவதாகக் கூறி கேசவனை கிளம்பச் சொல்ல,
“என்னம்மா விளையாடுறியா?? ஆளுக்கு பொதி மூட்டை மாதிரி ரெண்டு பை வச்சுக்கிட்டு,
டபிள்ஸ் அடிக்கிறேன்னு சொல்ற? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் கார்லயே கூட்டுட்டு
போறேன். நீயும் வாம்மா.”,என்று மகளிடம் ஆரம்பித்து ரிதுவிடம் கேள்வியோடு அவர் நிறுத்த,
“அங்கிள் நாங்க பேசிக்கிட்டே போகும்போது ஒண்ணுமே தெரியாது. ஜாலியா இருக்கும். நீங்க
போங்க. “, என்று ரிது சொல்ல,
“வேண்டாம் அது ரிஸ்க்”, என்று கொஞ்சம் வேகமாக சொன்னார் கேசவன்.
நாராயணன் மகள் கரம் பற்றி, “இவ்ளோ தூரம் சொல்லறாரு இல்ல. இன்னிக்கு அவர் கூட
போங்க. சரியா?”, என்று மென்குரலில் கூற,
“சரிப்பா”, என்றாள் ரிது ஆமோதிப்பாக.
கேசவன் முகம் தெளிந்தவராக, “வாங்க போவோம்.”,என்று முன்னால் நடக்க
காரின் முன் சீட்டில் இருவரின் பையையும் வைத்து விட்டு, இருவரும் பின் இருக்கையில் வாகாக
அமர, ஆருஷி, ரிதுவின் தோளில் தலை சாய்த்து, ஏதோ பள்ளிக் கதைகளை பேசிக்கொண்டு வர,
சிரித்த முகம் மாறாமல் அதை கேட்டுக்கொண்டு வந்த ரிதுவை கண்ட கேசவனுக்கு கொஞ்சம்
ஆச்சர்யம் தான். அவர்களின் பேச்சில் தான் தன் மகளின் பள்ளி வாழ்க்கை பற்றி முதல் முறை
அறிந்தவர், அவள் வாலிபால் விளையாடும் போது வேண்டுமென்றே எதிரணியின் ஒரு
போட்டியாளரை தாக்கியதாக சொல்ல, ரிது அவளை முறைத்துப் பார்த்தாள்.
“என்ன டி லுக்? அவ வேணும்ண்ணே பாலை நெட்டுக்கு பக்கத்துல போடறா. அது கூட கேம்னு
விடலாம். சரியா சர்வீஸ் ஆனா பாலை இல்லன்னு சொல்லி கம்ப்லைன்ட் பண்றா. எத்தனை தரம்
எங்களுக்கு சப்போர்ட் பண்ணுவார் சார்?? சில நேரம் போகுது விடுங்கம்மா சும்மா ஏதாவது
சொல்லிகிட்டே இருக்காங்க. நாளைக்கு எப்படியும் செலெக்ஷன்ல இதை ஒத்துக்க மாட்டாங்க.
அதனால நீ சரியா விளையாடுன்னு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டார்.”
“அதுக்கு??”
“அதான் என் சர்விஸ் தப்புன்னு சொன்னவ மூஞ்சிலே அதே சர்விஸ் பாலை வச்சு விட்டேன் ஒரே
அப்பு…”, என்று ரைமிங்காக அவள் சொல்ல, ரிது சிரித்தாலும்,
“அவளுக்கு விளையாட்டு புரியல டா, அவளுக்கு வெறிகொண்டு சரியா விளையாட வேண்டிய
அவசியம் இல்ல. ஆனா நீ அப்படி இல்ல. நீ ஸ்டேட் பிளேயரா வரணும். அதனால இப்போவே
இப்படி பாலை வச்சு பண்ற வன்முறையை நிறுத்து. இல்லனா நாளைக்கு மெயின் மேட்ச்ல
யாராச்சும் போங்கு பண்ணினாலும் நீ இதே வேலையை பார்ப்ப.. “, என்று சொல்ல,
எ”ப்படி டி?? நேத்து அவள அடிச்சு மூக்கை ஒடச்சப்ப என் மனசுல இதே தான் ஓடுச்சு. “,என்று
ஆரூ சிரிக்க,
“உன்னை எனக்கு தெரியாதா?? குரங்கு சேட்டை..”, என்று அவள் காதை திருக..
“ஏய்.. விடு.. “, என்று லாவகமாக காதில் இருந்து கையை எடுத்துவிட்டவள், “உன் கைல
பொங்கல் வாசனை அடிக்கிது ரிது. ஆன்ட்டி செஞ்ச பொங்கல் தான் எவ்ளோ ருசி.. ச்ச..
அடிச்சுக்கவே முடியாது. நான் லன்ச் க்கு அதை டப்பால வாங்கிட்டு வந்துட்டேன்.. “,என்று
பெருமையாக சொன்னவளை சிரிப்போடு பார்த்தாலும் ரிதுவின் முகத்தில் ஏதோ ஒன்று ஒளிந்து
இருப்பதை கண்ணாடி வழியாக பார்த்த கேசவன், “என்னம்மா ரிது உன் சிரிப்புல என்னவோ
இருக்கே.. “, என்று கேட்க,
அவள் சற்று பெரிதாக நகைத்து, “பார்த்துட்டீங்களா அங்கிள்?”, என்று கேட்டாள்.
“என்ன?? என்ன?? சொல்லு.. என்ன பார்த்தார். ஒழுங்கா சொல்லு இல்ல..”, என்று செல்லமாக
ஆரூ மிரட்ட,
“நீ பொங்கல் தானே மதியத்துக்கு வாங்கின?? நான் ஸ்பெஷல் வெஜ் புலாவ் கொண்டு
வந்திருக்கேன்.”, என்று சொல்ல,
“அடிப்பாவி.. வீட்லயே சொல்றதுக்கு என்ன?? ஆன்ட்டியோட பொங்கலே அவ்ளோ டேஸ்ட்..
இதுல வெஜ் புலாவ்.. ஒழுங்கா டிபன் பாக்ஸ் என்கிட்ட வரணும்.. இல்லனா நீ அவ்ளோ தான்..”,
என்று புலம்பலில் ஆரம்பித்து மிரட்டலில் முடித்த அவளை வாஞ்சையாக பார்த்தவள்,
“ஏன் டி நீ வீட்ல சாப்பிடலையா?? லன்ச் கொண்டு வரலையா??”,என்று ஆழ்ந்து கேட்க,
அங்கே கேசவன் இருப்பதையே மறந்திருந்த இருவரும், “இன்னிக்கி அம்மா வெறும் ப்ரெட் தான்
வச்சாங்க ரிது, கோபத்துல சாப்பிடவும் இல்ல, டிபன் எடுத்துட்டு வரவும் இல்ல.”,என்று முகத்தை
தூக்கி வைத்துக்கொண்டு அவள் சொல்ல,
“என்ன ஆரூ. முடிஞ்சா செஞ்சு தர மாட்டாங்களா?? நீ தான் கொஞ்சம் சீக்கிரம் எழுந்து
அவங்களுக்கு ஹெல்ப் பண்ணினா என்ன??”
“என்ன ரிது என்னை போய் சமைக்க சொல்ற??”
“ஏன் சமைச்சா என்ன?? இவ்ளோ நேரம் உங்க ஆன்ட்டி பொங்கல் என்று புகழ்ந்தியே, அது நான்
செஞ்சது. அம்மா டிபன் பாக்ஸ் மட்டும் செய்ய சொல்லிட்டு நான் தான் காலைல டிபன்
செஞ்சேன். அதுக்குள்ள அம்மா வீட்டோட மத்த வேலையெல்லாம் முடிச்சாங்க. இப்போ பாரு
நாமளும் கிளம்பிட்டோம், பின்னாடியே ரிஷியும் அப்பாவும் கிளம்பிடுவாங்க. அதுக்கு அப்பறம்
அம்மா காலைல சாப்பிட்டு உக்காந்தா அவர்களுக்கான வேலைகளை அவங்க செய்வாங்க.
எப்பப்பாரு வீட்டு வேலையே செஞ்சுட்டு இருந்தா அவங்களும் ஒரு மாதிரி ஆகிடுவாங்க. அதான்
இப்போ அவங்களை கம்பல் பண்ணி, எம்பிராய்டரி கிளாஸ்ல சேர்த்து விட்டுட்டேன். எல்லாரும்
போனதும், அவங்க கிளாஸ் போய்ட்டு, வீட்டுக்கு வந்து சாப்பிட்டு, ரெஸ்ட் எடுத்து, கொஞ்சம்
வீட்லயும் எம்பிராய்டரி போட்டு பார்க்க நேரம் இருக்கும்.”, என்று சொல்ல, அவளை பிரமிப்பாக
பார்த்தார் கேசவன்.
“எனக்கு சமைக்க தெரியாதே ரிது”, என்று சிணுங்கினாள் ஆரூ.
“கத்துக்கோ. “, என்று சிரித்துக்கொண்டே ரிது கூற,
“அன்னைக்கு நூடுல்ஸ் பண்றதுக்கு கையை சுட்டுகிட்டேன் தெரியுமா? “, என்று உதட்டை
பிதுக்கினாள் அவள்,
“நூடுல்ஸ் க்கு கையை சுட்டுக்க என்ன டி இருக்கு ?”,என்று மலைத்து போய் கேட்ட ரிதுவை
கண்கள் சிமிட்டியபடி, “அது பாத்திரத்தை கைல எடுத்து கீழ வைக்கும் போது சுட்டுடுச்சு.”, என்று
சொல்ல,
“ஏன் இந்த இடுக்கி, டவல் எல்லாம் மேடம் யூஸ் பண்ண மாட்டீங்களோ.. “, என்று கேட்ட ரிதுவை
பார்த்து,
“ஓ.. அப்படி சில எக்யூப்மெண்ட்ஸ் இருக்கோ..”, என்று யோசனை செய்பவள் போல நாடியில்
கைவைத்து பேசிய ஆருவை முதுகில் செல்லமாக இரண்டு அடி வைத்தாள் ரிது.
இவர்களின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டு வந்த கேசவனுக்கு, தான் வாழ்வில் ஏதோ ஒரு
பெரும் பகுதியை தொலைத்து விட்டதாக தோன்ற, பள்ளி வளாகம் முன்னால் வாகனத்தை
நிறுத்தினார்.
ஆரூ பையை எடுத்துக்கொண்டு முன்னால் நடந்துவிட, ரிது தன் பையை தோளில் போட்டபடி,
“சாயங்காலம் நாங்க டியூஷன் போய்ட்டு ஆட்டோல வீட்டுக்கு போய்டுவோம் அங்கிள்,
கவலைப்பட வேண்டாம். நான் வரேன். “, என்று ரிது கிளம்ப,
‘ஆட்டோவுக்கு பணம் இருக்குமா?’, என்று யோசித்து பணத்தை எடுத்து நீட்டினார் கேசவன்,
“இந்தா டா பத்திரமா வாங்க”, என்று சொல்லி கொடுக்க,
அதை தவிர்த்தவள், “அப்பா வீட்ல இருக்கும் போதே குடுத்துட்டார் அங்கிள். நான்
பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க அங்கிள். இந்நேரம் ரெண்டு ஜிம் விசிட் முடிச்சிருப்பிங்க.”,
என்று சிரித்தபடி சொன்னவளை பார்த்து,
“உண்மைலேயே என் பொண்ணை பற்றி இன்னிக்கு தான் நான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன் ரிது
மா. “,என்று சிரித்துக்கொண்டே காரை எடுத்தார்.
அவர் சென்றதை பார்த்துவிட்டு திரும்பிய ரிதுவின் விழிகள் கண்டது, யாரோ ஒருவரோடு
பேசிக்கொண்டிருந்த ஆருவை தான்.
நெற்றியை சுருக்கி பார்த்தபடி அவள் ஆருவின் அருகில் சென்றாள்.
சங்கரியின் வங்கிக் கணக்கில் கடை முதலாளி பணத்தை போட்டுவிட, அபியின் யோசனைப்படி
ராகவேந்தரிடம் ஒன்றும் சொல்ல வில்லை அவர்.
இன்னும் நான்கு நாட்களே திருமணதிற்கு இருக்கும் நிலையில் ராகவேந்தரிடன் அம்பதாயிரம்
மட்டுமே பணம் கிடைத்ததாக சொல்லிவிட, அவரும் இப்போதுள்ள திருமண வேலையை
பார்க்கலாம், பெரிய மகளுக்கு பின்னர் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்.
அவரின் முடிவை கேட்டு அபிக்கு மகிழ்ச்சி ஊற்றெடுக்க ஆரம்பித்தது. பத்து நாட்களாக
காலையில் அம்மாவின் பாக்கெட் போடும் வேலைக்கு உதவி விட்டு, அவைகளை உரிய
கடைகளில் சேர்பித்து, பின்னர் பள்ளிக்கு போய், மாலை வேலைக்கும் போய் அம்மாவின்
வேலைகளையும் அவரோடு சேர்த்து கவனித்து பின் வீடு திரும்பி, படித்து களைத்து போனான்
அபி.
அவன் எதிர்பார்த்ததெல்லாம் நியாயமான விஷயங்களை மட்டுமே. ரேகா அடாவடியாக பிடுங்க
முயற்சி செய்தால் ஸ்வாதி நைச்சியமாக அப்பாவிடம் பேசி இது வேண்டும் அது வேண்டும் என்று
செலவிழுத்து வைத்தாள்.
அபியின் மன வேதனை புரிந்த சங்கரி, “விடு அபி, இந்த கடனை எல்லாம் நாம தான்
அடைக்கணும். அவரும் ரெண்டு வேலை பார்க்கத் தான் செய்யறார். என்ன பண்றது விடு.”, என்று
ஆறுதல் தர, திருமணத்திற்கான விடுமுறையை எடுத்துக்கொண்டு, சொந்த பந்தம் வந்தால் தங்க
வைக்கும் ஏற்பாட்டில் மும்மரமாக இருந்தவனை பின்னால் இருந்து கண் மறைத்து விளையாடியது
ஒரு கரம்.
அடுத்த நொடி அபி, “பங்கு”, என்று அணைத்திட, அவனின் அணைப்புக்குள் சிக்கிக்கொண்டு
சிரித்தான் ஹர்ஷா.
“என்ன டா திடீர்ன்னு. ஸ்கூலுக்கு போகலையா??”, என்று கேட்டவனை முறைப்போடு பார்த்த
ஹர்ஷா,
“வீட்டுக்கு வந்தவனை வான்னு கூப்பிடுங்க டா முதல்ல, குடிக்க ஏதாச்சும் குடுங்க. கைல இருக்கற
லக்கேஜை வாங்குங்க. இதெல்லாம் விருந்தோம்பல்,எங்க அம்மா?? இதெல்லாம் உனக்கு
சொல்லித்தரலையா அவங்க??”, என்று கலாய்த்திட,
“பங்கு.. நீயா இது?? இவ்வளோ விவரமானவனா நீ?? இது தெரியாம இருந்துட்டேனே டா..”,
என்று நொந்துகொண்டது போல அபி நடிக்க,
“போதும் சீன் முடிஞ்சு போச்சு”,என்று உள்ளே போன குரலில் ரகசியம் பேசிய ஹர்ஷாவை என்ன
என்று புருவம் உயர்த்தி அபி கேட்டிட, அவன் விழியசைத்து காட்டிய திசையில் ராகவேந்தர்
வந்துகொண்டிருக்க, இருவரும் ஒதுங்கி நின்றனர்.
திரும்பி ஹர்ஷாவை பார்த்த ராகவேந்தர், “வாப்பா. என்ன கைல பை.”,என்று கேட்க,
“ஒன்னும் இல்ல அங்கிள், அபி அக்காவுக்கு கல்யாணம்ல கூட உதவிக்கு இருக்கலாம்ன்னு
வந்தேன். “,என்று சொல்லி அமைதியானவனை, ‘அப்படியா டா?’ என்று ஆச்சர்ய பார்வை பார்த்த
அபியிடம்,
“நம்பித்தொலை டா பங்கு. நான் நல்லவன்”, என்று பொறுமையாக சொன்னான் ஹர்ஷா.
“உள்ள வா ஏன் வெளில நிக்கிற”, என்று அவன் தந்தை உள்ளே போக , அவரோடு இணைத்து
இருவரும் வீட்டினுள் நுழைந்தனர்.
அதன் பின் அபி வேலை என்று கிளம்பிய போதெல்லாம் அவனோடு சென்று அவனுக்கு முடிந்த
உதவிகளை செய்தான்.
ஹர்ஷா அவன் வண்டியில் வந்திருந்ததால் அபியை வெளி வேலைகளுக்கெல்லாம் நேரம்
செலவாகாமல் அவனே அழைத்துக்கொண்டு சென்று வர, அபிக்கு வேலைகள் எல்லாம் எளிமை
ஆனது.
சங்கரிக்கு ஹர்ஷாவை முன்பே அதிகம் பிடிக்கும். இப்போது கேட்கவே தேவை இல்லாமல் ஹரி
ஹரி என்று தொட்ட தொன்னூறுக்கும் அவனையே அவர் அழைக்க, அபி உள்ளே
சிரித்துக்கொண்டான்.
ஹர்ஷாவும் சங்கரியிடன் சலுகையாக சாய்ந்துகொண்டு, பேசியபடி காபி குடித்து, அவர் களைத்து
தெரிந்த போது குடிக்க நீர் கொடுத்து அவரை தாங்க, ராகவேந்தர் மகனின் நண்பன் மீதான
நல்லெண்ணம் உருவானத்தோடு, மகன் எல்லா விஷயத்திலும் கவனமானவன் என்பதையும்
புரிந்து கொண்டார்.
இரவு படுக்க இருவரும் மொட்டை மாடிக்கு வர,
“ஏண்டா வீட்ல படுக்க மாட்டியா?”, என்ற ஹர்ஷாவின் கேள்விக்கு திரு திருவென்று விழித்த
அபி,
“இதுவும் எங்க வீடு தானே டா”, என்றான்.
தலையில் அடித்துக்கொண்ட ஹர்ஷா, “பங்கு வீட்டுக்குள்ள படுத்து தூங்க மாட்டியா?? “,என்று
பல்லைக் கடித்துக்கொண்டு கேட்க,
“கொஞ்ச நாளா நான் இங்கே தான் இருக்கேன்.”, என்று எங்கோ பார்த்துக்கொண்டு சொன்ன
நண்பனை இறுக்கி அணைத்தவன், “காத்து செம்மயா வருது பங்கு. தூங்குவோமா?? மேல கை
கால் போட்டா திட்ட மாட்டியே?”, என்று செல்லமாக கேட்க,
“ச்ச ச்ச .. அதெல்லாம் திட்ட மாட்டேன் பங்கு.”, என்று சொன்ன அபியை கன்னம் கிள்ளி
கொஞ்சிய ஹர்ஷாவின் தொடையில் கிள்ளியவன், “காலை உடைச்சிடுவேன் மேல
போட்டான்னா.. “, என்று சொல்ல.
“அடப்பாவி பங்கு..”, என்று தலையோடு போர்த்திக் கொண்டு படுத்தான் ஹர்ஷா..
அவனை கண்டு சிரித்த அபியும், அந்நாளின் அலைச்சல்களில் சோர்வுற்று இருந்தவன்,
ஹர்ஷாவின் சேட்டையில் முகத்தில் உறைந்த புன்னகையுடன் தூங்கிப்போனான்.
அகலாதே ஆருயிரே
25
கல்யாண களேபரம் ஆரம்பித்து இருந்தது அபினவ் வீட்டில். அவனும் அனைவருக்கும் ஈடு
கொடுத்து வேலைகளை செய்து கொண்டு இருந்தான். ராகவேந்தர் மாப்பிள்ளை வீட்டாரின்
தேவைகளை கவனிக்க, சங்கரி மகளை திருமண நிகழ்வுகளுக்கு தயார் படுத்த, ரேகா மட்டும்
முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அலைந்தாள்.
அவளை கண்டாலே ஏனோ ஹர்ஷாவுக்கு பிடிக்காமல் போக, அவள் கிழக்கில் வந்தால் அவன்
மேற்கில் சென்றான். அதை ஒருமுறை கண்டுகொண்டு கேட்ட அபியிடம்,
“உன்னைப்போல என்னால பேசாம இருக்க முடியாது. இல்ல கோவமாவும் பேச முடியாது. நான்
சிரிசிக்கிட்டே என்னத்தையாவது சொல்லி வச்சிருவேன். அப்பறமா உனக்கு தான் பிரச்சனை
ஆகும். அதான், துஷ்டனை கண்டா தூர விலகு கான்செப்ட் ஃபாலோ பண்ணறேன். “,என்று
சிரித்தான்.
அதன் பின் நேரம் யாருக்கும் நிற்காமல் வேகமாக ஓட, ரேகாவின் கணவன் விக்னேஷ் வந்து
சேர்ந்தான். மாமியாரை கண்டவன் ஸ்நேகமாக புன்னகை சிந்திவிட்டு மனைவியை அறைக்குள்
அழைத்து சென்றான்.
“இந்தா ரேகா, இதை உங்க அப்பா கிட்ட கொடுத்திடு. முன்னாடியே தரணும்ன்னு நெனச்சேன்.
ஆனா கடைசி நேர செலவுக்கு கொடுத்தா தான் சரியா இருக்கும்னு தோணுச்சு. குடுத்திடு. “,என்று
ஒரு கருப்பு தோல் பையை அவளிடம் நீட்ட,
“இது என்னங்க? “, என்று வாங்கியவள் விழிகள் பையினுள் இருந்த பணக்கட்டை பார்த்து வாயை
மூடிக் கொண்டது.
எச்சில் கூட்டி விழுங்கியவள், “இது எதுக்குங்க? “,என்று நயமாக கேட்டாள்.
“இதென்ன? அவர் பாவம் எப்படி ஒரு ஆளா எல்லாம் செய்வார். மூத்த மருமகனா எனக்கு கடமை
இருக்குல்ல ரேகா?”, என்று தான் நியாயவான் என்று நிரூபித்தான் விக்னேஷ்.
அவளோ உள்ளே பல்லை நர நர வென்று கடித்தபடி,” உங்க கிட்ட எங்க அப்பா கேட்டாரா?
“,என்று மெல்ல விசாரித்தாள்.
“இல்லையே. அவர் கேட்பார்ன்னு நான் எதிர்பார்த்தேன் ஆனா அவர் என்கிட்ட எதுவுமே
கேட்கல. அதான் அம்மா சொன்னாங்க உன் மாமனருக்கு நீ தானே பா மூத்த மகன் மாதிரி
கண்டிப்பா அவருக்கு செய்யின்னு சொன்னாங்க.”, என்று சொல்ல,
ரேகா விளக்கெண்ணெய் குடித்தவள் போல முகத்தை வைத்து, “சரிங்க நான் குடுத்திடுறேன். நீங்க
ஒன்னும் பேசிக்க வேண்டாம். அப்பறம் குடுத்துட்டு சொல்லிக் காட்டுறதா பேசப்போறாங்க. “,
என்று அவனை அழகாக இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்க வைத்தவள், பையை தன் சூட்கேஸில்
பத்திரப்படுத்தினாள்.
விக்னேஷும் தன் கடமையை சரிவர செய்துவிட்ட நம்பிக்கையில் அபிக்கு உதவியாக அவன் ஒரு
வேலையை இழுத்துப் போட்டு செய்ய துவங்கினான்.
ஹர்ஷா கண்களில் சங்கரியின் பரிதவித்த முகம் தெரிய, ‘என்ன ஆச்சு இவங்களுக்கு?’ என்று
யோசித்துக்கொண்டு அவர் அருகில் சென்றவன்,
“ஆன்ட்டி என்ன ஆச்சு? ஏன் என்னவோ போல இருக்கீங்க?”, என்று கேட்க,
முகத்தை சீராக்கி கொண்ட சங்கரி, “இல்ல ஹரி வேலை பார்த்த களைப்பு, வேற என்ன?”,
என்றிட,
“இல்லையே ஆன்ட்டி, உங்க முகம் சாதாரணமா இல்லையே. என்ன விஷயம் அபியை வர
சொல்லவா? “,என்ற நொடியில்,
“ஐயோ வேண்டாம் ஹரி, அபிக்கு தெரிஞ்சா அவ்ளோ தான். கண்டிப்பா சும்மா விட மாட்டான். நீ
இங்க வா “,என்று மாடிக்கு தனியாக அழைத்து சென்று அவர் தன் மனதில் இருந்த கஷ்டத்தை
சொல்லி அழ,
அவனோ, “இவ்வளவு தானா? இதுக்கெல்லாம் அழுவாங்களா ஆன்ட்டி? இந்தாங்க பிடிங்க.
“,என்று அவர் கையில் எதையோ திணிக்க,
கண்ணீர் நிறைந்த விழிகளில் அது அவருக்கு மஞ்சளாய் ஏதோ புலப்பட, இமை கொட்டி அதை
கண்டவர் திடுக்கிட்டார்.
“என்ன ஹரி இது? உன்னோட செயின் தானே இது?? இந்தா அதை கழுத்துல போடு. “, என்று
பதறியவராக திருப்பி தர முயல, “ஆன்ட்டி என்ன நீங்க? இப்போ இருக்கற சூழ்நிலை மறந்துட்டு
பேசறீங்க. இதை சின்ன அக்கா கழுத்துல போடுங்க. மூணு பவுன் சங்கிலிக்காக கல்யாணத்தில்
எந்த குழப்பமும் வேண்டாம்.”, என்று சொல்லிவிட்டு ,”அபி வெளில போகணும்ன்னு சொன்னான்.
நான் கிளப்புறேன். அழுகக் கூடாது சரியா?”, என்று கன்னத்தில் கிள்ளி விட்டு ஹர்ஷா செல்ல,
‘எவ்வளவு சாதாரணமா கழட்டி கொடுத்துட்டு போறான். வீட்டுல திட்ட மாட்டாங்களா? ஐயோ
இப்போ நான் என்ன பண்ணுவேன். ‘,என்று புலம்பியபடி கீழே இறங்கி மண்டபத்துக்கு கிளம்பும்
வேலையை கவனிக்க ஆரம்பித்தார் சங்கரி.
“யாரு ஆரூ இது? “,என்ற கேள்விக்கு ரிதுவை திரும்பி பார்த்தபடி,
“இவங்க ப்ளஸ் டூ வாம். அன்னைக்கு நமக்கு ஹெல்ப் பண்ணினார்ல, அவர் பிரெண்டாம். அவர்
நாலு நாள் ஸ்கூலுக்கு லீவாம். நம்ம கிட்ட சொல்ல சொன்னாராம்.”, என்று கிளிப்பிள்ளை போல
அவன் சொல்லியதை அப்படியே ரிதுவிடம் ஒப்பித்தாள் ஆரூ.
ரிது அவனை ஏற இறங்க பார்த்தாள்.
“அவர் எங்க கிட்ட சொல்ல சொன்னாரா?”, என்று கேட்டாள்.
“ஆமா கேர்ல்ஸ்”, என்று சொன்னவன் கண்களில் உண்மை இல்லை என்பதை உணர்ந்த ரிது,
“சரி, தான்க்ஸ். “, என்று ஆரூவை இழுத்துக்கொண்டு நடக்கத் துவங்கினாள்.
“அறிவு கெட்ட ஆரூ..”, என்று திட்டவும், “என்ன டி திட்ற?”, என்று சிணுங்கிய ஆருஷியை
தலையில் குட்டி, “இவ்ளோ பட்டும் உனக்கு அறிவே இல்ல. அந்த பையன் லீவ் போட்டா நம்ம
கிட்ட ஏன் சொல்லணும். அப்படி சொல்றவன் நேரா சொல்லிட்டு போக மாட்டானா? எவனோ
அவன் பேரை சொல்லி அட்வான்டேஜ் எடுக்க பாக்கறான். அது கூட புரியாம முட்டாள் மாதிரி
நிக்கிற”,.என்று ரிது பொறிய,
ஆருஷி ‘ஙே ‘ என்று விழித்தாள்.
“ஒருவேளை .. தகவல்… “,என்று அவள் இழுக்க,
“அவன் அன்னைக்கு ட்ரெஸ் வாங்கும்போது கூட தேவை இல்லாம ஒருவார்த்தை பேசல,
அப்படிப்பட்ட பையன் இன்னொருத்தனை அனுப்பி தகவல் சொல்லுவானா? ப்ளீஸ் ஆரூ, நான்
சொல்றேன்ன்னு கோவப்படாத, எல்லாரோடையும் இயல்பா பழகறது தப்பு இல்ல. ஆனா அவன்
உள்நோக்கத்தோட இருக்கானான்னு கண்டிப்பா தெரிஞ்சுக்கணும். காலம் கெட்டு கிடக்கு ஆரூ.
பதினேழு வயசு பசங்க இன்னிக்கு எல்லா தப்பும் செய்யறாங்க. நான் எல்லாரையும் சொல்லல.
ஆனா அப்படிப்பட்ட ஆட்கள் கண்ணுல நாம சிக்கிடாம இருக்கணும். அவங்களை அடையாளம்
காண தெரியணும். காட்டுல வழி தவறிப் போய்ட்டா எப்படி எச்சரிக்கையா இருப்போமோ அது
போல,கவனமா இப்போ ஊருக்குள்ள நடமாட வேண்டி இருக்கு. புரிஞ்சுக்கோ டா. எல்லா
நேரமும் உனக்கு நான் கைட் பண்ணிக்கிட்டே இருக்க முடியாது. இதை சொன்னா உனக்கு
கோபம் வரும். “, என்று தன்மையாக ஆரம்பித்து சலிப்பாக முடித்தாள் ரிது.
“சரி மா தாயே. கவனமா இருக்கேன்.”, என்று உண்மையில் மனதில் உணர்ந்து சொன்னாள்
ஆருஷி. அவளை அணைத்துக்கொண்ட ரிது, “அறுக்கறேனோ?? “, என்று கண்சிமிட்டி கேட்க,
“ச்ச ச்ச.. அப்படி எல்லாம் இல்லை டி”, என்று சொல்லி இரண்டு அடி தள்ளி நின்றவள், “ரொம்ப..
“,என்று சத்தமாக சொல்லிவிட்டு ஓட,
“ஏய்.. நில்லு டி வாலு.. “,என்று அவளை துரத்திக்கொண்டு ஓடினாள் ரிது.
“என்ன சாம்பார் இது விளங்கவே இல்ல..”, என்று பந்தியில் அமர்ந்திருந்த முறுக்கு மீசை ஆள்
கேட்க,
பரிமாறிக்கொண்டு இருந்த ஒரு பையன், “என்ன சார் என்ன ஆச்சு? எதுவும் வேணுங்களா??
“என்று வந்து நின்றான்.
“நீ யாரு டா?”, என்ற அந்த ஆளின் அலட்சியமான கேள்வியில் கடுப்பானவன்,
“சர்வ் பண்ற ஆள் சார். “,என்று சொல்ல, ” ஓ.. மாப்ள வீட்டு ஆளுங்களை கவனிக்க பொண்ணு
வீட்ல ஒருத்தனும் இல்லையோ. எங்களை அவமானப்படுத்துறீங்களா?”, என்று அவர் குரல்
எடுத்து பேச,
வேகமாக ஓடி வந்த ஹர்ஷா, “சொல்லுங்க சார். நான் பொண்ணு வீடு தான். உங்களை நான்
கவனிக்கிறேன்.”, என்று சொல்லி அந்த பையனை அனுப்பி வைத்தான்.
“சாம்பார் விளங்களவே இல்ல. “, என்று மீண்டும் முதலில் சொல்லியதைச் சொல்ல,
அவனோ, “அதனால என்ன சார் இதோ காரகுழம்பு இருக்கு ஊத்தட்டுமா?”,என்று பணிவாக
கேட்டான்.
“சரி ஊத்து”, என்று அதை முழுவதும் வயிற்றில் தள்ளியவர், இதுக்கு பேர் காரகுழம்பு இல்ல
வெறும் குழம்பு சப்புன்னு இருக்கு. “,என்று கிண்டலடிக்க,
‘அப்படியே இந்த ஆளை சப்புன்னு விட்டா எப்படி இருக்கும்?’, என்று மனதில் நினைத்த ஹர்ஷா,
“அதனால என்ன சார் இதோ பாருங்க ரசம். ஊத்தட்டுமா ?”,என்று மென்மையாக கேட்டதும்,
“சோறு யாரு உங்கப்பன் போடுவானா?”, என்று அந்த ஆள் வாயை விட, கோபம் துளிர் விட
ஆரம்பித்த ஹர்ஷா நண்பனை மனதில் கொண்டு,
“இதோ நான் போடறேன் சார். இதுக்காக எங்க அப்பா ஆபிஸ் வேலையை போட்டுட்டு வர
முடியுமா? “,என்று நக்கலாக கேட்டுவிட்டு, சாதத்தை அவர் இலையில் அள்ளி வைத்தான்.
ரசத்தை ஊற்ற, கலந்து கட்டி அடித்தவர், அப்பளம், பொரியல், கூட்டு என்று அவனை நிற்க
விடாமல் சுழற்றினார்.
பொறுமையை இழுத்து பிடித்து அவருக்கு ஒரு தம்பளரில் பாயாசம் வாங்கி வந்தவன் அவரிடம்
தர, “ஐஸ்கிரீம் இல்லையா?”, என்று நக்கலடித்தார்.
அவர் உண்டு முடித்த பின் தான் ஹர்ஷா அங்கிருந்து நகர்ந்தான். ஆனால் அடுத்த பந்தியில் அவர்
மீண்டும் வந்து அமர்ந்து அதே பேச்சு பேச, கடுப்பானவன்,
“இப்போ தானே சாப்பிட்டு போனீங்க?”, என்று சாதாரணமாக கேட்க,
“பொண்ணு வீட்டுக்காரன் சாப்பாட்டுக்கு கணக்கு கேக்குறான். “, என்று அவர் மண்டபத்தையே
ஒரு உலுக்கு உலுக்கி விட்டார். அவர் யாரென்றே தெரியாமல், மாப்பிள்ளை வீட்டுக்காரர் என்ற
வார்த்தையை மட்டும் கருத்தில் கொண்டு ராகவேந்தர் ஒன்றுமே விசாரிக்காமல் எங்கே தன்
மகளின் திருமணத்தில் பிரச்சனை வந்து விடுமோ என்று பயந்து, அந்த ஆளை சமாதானம் செய்ய
முயன்றவர்,அவர் திமிறி கொண்டு வர, நடுங்கிப்போனார்.
இதற்கெல்லாம் காரணம் ஹர்ஷா தானே, இன்னும் மாப்பிள்ளையின் பெற்றோர் வந்தால் தான்
மகள் கதி என்ன என்று பயந்து, ஹர்ஷாவை ஓங்கி அறைந்து விட்டார்.
“என்ன நினைச்சிட்டு இருக்க? சாப்பிட வந்தா போட வேண்டியது தானே? உனக்கெதுக்கு தேவை
இல்லாத பேச்சு. உதவி செய்ய வந்தியா இல்லை தொல்லை செய்ய வந்தியா? “,என்று கத்திவிட,
அப்போது தான் அங்கே கூட்டம் கூடியதை பார்த்து அபி வந்தான். தன் நண்பன் கன்னத்தில்
கைவைத்து நிற்பதை உணர்ந்தவன்,
“என்ன டா பங்கு?”, என்று அவனை அணைக்க,
“டேய் விட்டா கல்யாணத்தையே நிறுத்தி இருப்பான் டா. மாப்பிள்ளை வீட்டு ஆள் கிட்ட வம்பு
வளர்த்து வச்சிருக்கான். இனி என்ன ஆகப்போகுதோ “,என்று அவர் புலம்ப,
அபி ஹர்ஷாவை அணைத்துக்கொண்டு அம்மாவிடம் வந்தவன், “அம்மா கல்யாண வேலை
எல்லாம் முடிஞ்சிருச்சு. இனி மணமேடைக்கு உன் பொண்ணை அனுப்ப வேண்டியது தான்
பாக்கி. அதை நீங்களே பார்த்துக்கோங்க. நான் போறேன். அப்பறம் இனிமே நான் மாடியிலயே
இருந்துக்கறேன். யாரோடவும் பேச விரும்பல. “, என்று அழுத்தமாக சொல்லிவிட்டு ,” வாடா
பங்கு”, என்று ஹர்ஷாவுடன் மண்டபத்தை விட்டு வெளியற்றினான். சங்கரியின் எந்த
சமாதானமும், ஹர்ஷாவின் எந்த வேண்டுதலும் அவன் செவிகளில் விழவே இல்லை.
மகன் வெளியேறியதை பார்த்துவிட்டு மனம் வெறுத்துப்போன சங்கரி நேராக கணவரிடம்
வந்தவள், “யார் அந்த மாப்பிளை வீட்டு ஆள் காட்டுங்க. “,என்று கேட்க,அங்கே அந்த முறுக்கு
மீசைக்காரன் மீசையை முறுக்கிக்கொண்டு நின்றான். நேராக சம்மந்தகாரர்களிடன் சென்ற
சங்கரி, “அவர் யாருங்க? “,என்று கேட்க, அவர்களோ உதட்டை பிதுக்கி,” ஏதோ சுத்தி முத்தி
சொந்தமா இருக்கும். ஏன் மா இங்க என்ன பிரச்சனை. இப்போ தான் எங்க வீட்டு சின்ன வாண்டு
வந்து சொல்லிச்சு அதான் ஓடி வரேன்.”, என்று சொல்ல, சங்கரி அக்னி பார்வை ஒன்றை
ராகவேந்தருக்கு செலுத்தி விட்டு, “பொண்ணு தயாராகிட்ட, இந்த ஆள் மாப்பிள்ளை வீடுன்னு
ஒரே கலாட்டா.”, என்று மட்டும் சொல்ல, “ஏ ஏம்பா.. உனக்கு வேற வேலை இல்லையா?
அவங்களே கல்யாண களேபரத்துல இருக்காங்க. இம்சை பண்ணனிக்கிட்டு. போப்பா.. “,என்று
சத்தம் கொடுத்தவர். “கல்யாண வீடுன்னா அப்படி தான் நாலு பேர் இம்சை பண்ணுவாங்க.
கண்டுக்காதீங்க சம்மந்தி அம்மா.”, என்று சொல்ல, மீண்டும் தன் கணவரை முறைத்து விட்டு,”
சரிம்மா. மேடைக்கு போங்க. “,என்று அவரை அனுப்பி வைத்து, கணவர் அருகில் வந்தவர்,
“கொஞ்சம் அந்தப்பக்கம் வரிங்களா?”, என்று அழுத்தமாக கேட்க, இதுவரை அவர் தன்னிடம்
இப்படி பேசி கேட்டிடாத ராகவேந்தர், அமைதியாக அவர் பின்னால் சென்றார்.
“இங்க பொண்ணு கல்யாணம் இப்போ நடந்துடும். கவலைப்படாம இருங்க. ஆனா இது எப்படி
நடக்குதுன்னு உங்களுக்கு தெரிய வேண்டாமா?”, என்று நிறுத்த,
ராகவேந்தர் என்ன என்பது போல புருவம் உயர்த்தி பார்க்க, “இந்த முறுக்கு ஆர்டர் பிடிக்க
காரணம் அந்த பையன் ஹரி தான். அபி எனக்கு அந்த கடைல வேலை வாங்கி தரப்போய் தான்
இப்போ சீதனத்துக்கு பணம் கிடைச்சது. “,என்று சொல்ல,
‘அப்படியா ‘, என்பது போல விழித்தார். “அது கூட என் வேலையை நம்பி தந்தாங்க . நானும்
அபியும் திருப்பி கொடுத்திடுவோம். ஆனா இன்னிக்கு சுவாதி கல்யாணம் நடக்கப்போகுதுன்னா
அதுக்கு ஒரே காரணம் அந்த பையன் ஹரி தான்.”, என்று அவரை எரிச்சலாக பார்க்க, அவரோ
ஒன்றும் புரியாமல், “அவன் என்னாம்மா பண்ணினான்.?”,என்று கேட்டிவைக்க,
இருந்த கோபம் மொத்தத்தையும் கூட்டி, “உங்க பொண்ணுக்கு வாங்கின நகையில மூணு பவுன்
நெக்லஸை காணோம். திடீர்ன்னு மூணு பவுனுக்கு என்ன பண்றதுன்னு நேத்து நான் தவிச்சு
நின்னப்போ, ஹரி அவன் கழுத்துல இருந்த செயினை கழட்டி கொடுத்து கவலைப்படாதீங்கன்னு
சொன்னான். அவன் செஞ்ச செயல் எங்க? நீங்க அவனை நடத்தின விதம் எங்க? அவன் செஞ்சது
எனக்கும் அவனுக்கும் மட்டும் தான் தெரியும். அபிக்கு கூட தெரியாது. அந்த பிள்ளையை போய்
ச்ச..”,என்று சங்கரி கோபம் காட்ட,
“ஐயோ அந்த நெக்லஸ் எங்கே போச்சு?”, என்று பதறிய ராகவேந்தர், அடுத்த நொடி வாயை
இறுக்கி மூடினார். அவரை கவனித்து விட்ட சங்கரி, பார்வையை அவர் பார்த்த திசைக்கு திருப்ப,
அங்கே உறவுப்பெண்களுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்த ரேகாவின் கழுத்தில் அந்த
நெக்லஸ் மின்னியது.
அதானே பார்த்தேன்… இவ எல்லாம் பொண்ணா…? சரியான பேய், பணப்பேய், பிசாசு… இரத்தத்தை உறிஞ்சு எடுத்திடும் ரத்த காட்டேரி…!
Eagarly waiting for nxt ud😍😍😍😍…. Nxt ud ckirama podunga sis plsssss😉😁😁😁😁
Waiting for next ud sis 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🤩😍😍🥰
Good 👍