Skip to content
Home » அகலாதே ஆருயிரே-25-30

அகலாதே ஆருயிரே-25-30

��அகலாதே ஆருயிரே��
��26��

“என்ன பங்கு நீ? அக்கா கல்யாணம் பங்கு. வா போவோம்.”,என்று மண்டப வாயிலில் அவன்
கையை பிடித்து கெஞ்சிக்கொண்டு இருந்த ஹர்ஷாவை தீப்பார்வை பார்த்தான் அபி.

“என்ன அபி முறைக்கிற. கோபப்படவேண்டிய நேரம் இது இல்ல டா. பொறுமையா இருக்க
வேண்டிய நேரம். என்ன டா? வா.”,என்று அவனை இழுக்க,

“நல்லா வாங்குவ பங்கு என்கிட்ட. இதை நாள் பொறுத்த நான் இன்னிக்கு பொறுக்க மாட்டாம
வெளில வந்திருக்கேன்னா? அதை யோசிக்க மாட்டாயா?”

“என்ன பங்கு? உங்க அப்பா தானே. பொண்ணு வாழ்க்கை முன்னாடி நானெல்லாம் தூசி பங்கு.
அவர் பாவம். எவ்ளோ தவிச்சு போயிருப்பாரு. விடு பங்கு. வா. “,என்று மீண்டும் மீண்டும் உள்ளே
அழைத்து செல்வத்திலேயே அவன் குறியாக இருக்க, வந்த ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதில் அபி
ஏறியதோடு, அவனையும் இழுத்து உள்ளே போட்டான்.

“என்ன பங்கு?”,என்று கடுப்பான ஹர்ஷா, “அண்ணே வண்டிய நிப்பாட்டுங்க. பிளீஸ்.” என்று
சொல்ல,

“வண்டிய நிறுத்துனது நான். காசு தரப்போறதும் நான் தான். நீங்க முன்னாடி பார்த்து ஓட்டுங்க
அண்ணா.”, என்று அபி இறுகிய குரலில் சொல்லவும்,

ஹர்ஷா அவன் மனநிலை புரிந்து அமைதியானான்.

நேராக ஹோட்டலில் வண்டி நிற்கவும், வாசலில் வேலையாக இருந்த சுரேஷ் இவர்களை கண்டு,
“நான் தான் கல்யாணத்துக்கு வர்றேன்னு சொன்னேனே? இதுக்கு ஆட்டோ எடுத்துட்டு கூப்பிட
வரணுமா? “,என்று கேட்க,

‘யாருடா இந்த கிறுக்கன்?’, என்ற பார்வையை ஹர்ஷா வீச, அபி பதிலுரைக்காமல் ஆட்டோவுக்கு
பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, “அண்ணா தனியா தங்க மேன்ஷன், இல்ல ரூம் ஏதாவது
கிடைக்குமா?”,என்று கேட்டதும் ஹர்ஷா பொறிந்து தள்ளி விட்டான்.

“இத்தனை  நாள் பொறுத்தவன், என்னை ஒரு அறை விட்டதும் அவங்க வேண்டாம்ன்னு
முடிவெடுக்கற அளவுக்கு போயாச்சா? ஏன் அபி இப்படி கோவப்படுற?  இந்த கோபம் தான்
உனக்கு எதிரி.”,என்று கத்த,

“டேய் அறிவு கெட்டவனே.. இத்தனை நாள் படிப்பை கூட ரெண்டாம் பட்சமா நினைச்சு அம்மா
கஷ்டப்படுறாங்கன்னு ஒரு காரணத்துக்கு தான் டா அவ்ளோ பொறுமையா
இருந்தேன்.வேலைக்கு வந்தேன். நாய் மாதிரி அலஞ்சேன். ஆனா அவருக்கு கடைசி வரைக்கும்
அவர் பொண்ணுங்க தானே டா முக்கியம். நான் இல்லையே. எனக்காக யோசிக்காம கழுத்துல
இருந்த செயினை கழட்டி கொடுத்தியே, நீ எங்கே? எவ்ளோ நடந்தாலும் என்னோட ஒரு
வார்த்தை பேசாத, என்னன்னு கூட கேட்காத அவர் எங்க? போதும் டா. முடியல. எனக்கு
எதிர்கால லட்சியம் இருக்கு. அதுக்கு நான் கடினமா படிக்கணும். ஆனா இவர் இதுக்கு மேலயும்
சும்மா இருக்க மாட்டார். ஆடி சீர், தீபாவளி, பொங்கல், வளைகாப்புன்னு இன்னும் ரெண்டு
வருஷத்துக்கு இழுதுக்கிட்டே தான் இருப்பார். கொஞ்சமா நமக்கு அளவா செய்யவும் மாட்டார்.
என்னால முடியாது பங்கு. நான் முடிவு பண்ணிட்டேன். முதல்ல பரவால்ல நம்ம குடும்பம்ன்னு
நெனச்சேன். ஆனா என்னை பற்றி துளி கூட கவலைப்படாத அவருக்காக, இனி எதுவும் செய்ய
மாட்டேன். செஞ்சா அது அம்மாவுக்காக மட்டும் தான்.”, என்று சொல்லிவிட்டு அபி
துவண்டவனாக ஹர்ஷாவின் தோளில் சாய,

“இவன் என்ன சொல்றான்?”, என்று கேட்ட சுரேஷிடன் பொறுமையாக அவன் குடும்ப
நிலவரத்தை விளக்க, சுரேஷ் அவனை பரிதாபமாக பார்த்தான்.

ஹர்ஷா அபியை சமாதானம் செய்தவனாக, “நான் செயின் கொடுத்தது உனக்கு எப்படி பங்கு
தெரியும்?”, என்று கேட்க,

அவனோ, “அதென்ன அரண்மனையா? இருக்கற ரெண்டு ரூம் இல்லனா மொட்டை மாடி,
பேசுனா காதுல விழுகாதா?”, என்று கோபமாக கேட்டவன், குரல் கரகரக்க, “உனக்கு நான்
எதுவுமே செஞ்சது இல்லையே பங்கு. உனக்கெப்படி யோசிக்காம தூக்கி கொடுக்க மனசு
வந்தது?” என்று கேட்க,

பக்கத்தில் இருந்த சுரேஷ், “அவனுக்கு அதோட மதிப்பு தெரிஞ்சிருக்காது அபி. பாரு அதுக்கு
எவ்ளோ பணம் என்று தெரிந்ததும், வீட்ல அடிப்பாங்க டா ன்னு பைசா கேட்டு வந்து நிக்க
போறான்.”,என்று கிண்டலடிக்க,

ஹர்ஷா சுரேஷை வெற்றுப்பார்வை பார்த்தவன், “அதோட மதிப்பு இன்னிக்கு தேதியில்
ஒண்ணேகால் லட்சம். அஞ்சு சவரன் செயின் அது.” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்
சொல்லிவிட்டு,

“அபி அதோட மதிப்பை விட எனக்கு உன்மேல மதிப்பு அதிகம் டா.உன்னை எனக்கு பிடிக்கும்
அவ்ளோ தான் நினச்சேன் கொஞ்சநாள் முன்னாடி வரை. ஆனா ஒரு நல்ல நண்பன் எப்படி

இருக்கணும்ன்னு என் தாத்தாவும் பாட்டியும் சொன்னாங்க. அதை கேட்டதும், உண்மையில்
எனக்கு கிடைச்ச பெரிய சொத்து உன்னோட நட்புன்னு எனக்கு தெரிஞ்சது அபி. நீ வேற லெவல்
டா பங்கு. லவ் யூ.”,என்று அவனை அணைத்தான் ஹர்ஷா.

இருவரும் தழுவியபடி நிற்க, “அடேய்.. போதும் நகருங்க டா. யாரும் பார்த்தா தப்பா நினைக்க
போறாங்க.”, என்று அவர்களை சுரேஷ் விலக்கி விட,

“என்ன பங்கு இவர் இப்படி சொல்றாரு..”, என்று முகத்தை அஷ்டகோணாலாக மாற்றினான்
ஹர்ஷா. “விடு பங்கு அவருக்கு பொறாமை”, என்று அபி அவனை மேலும் இறுக்கிக்கொள்ள,

“ஆமா, இவன் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நீ இவனை கட்டிக்கிட்டு நிக்கிறதை பார்த்து
பொறாமைப்பட.. போங்கப்பா அந்த பக்கம்.”, என்று அவர்களை சுரேஷ் கடக்க முயல,

“இவர் ட்ரெண்ட்லயே இல்ல பங்கு. இப்பயும் ஐஸ்வர்யா ராய் தான் இவங்க லெவல்.”,என்று
ஹர்ஷா கேலி பேச,

“தம்பி எவ்ளோ வருஷம் ஆனாலும் உலக அழகி சொன்னா ஒவ்வொரு இந்தியனுக்கும் முதல்ல
நினைவுக்கு வர்றது அவங்க தான்.”, என்று பெருமைப்பட்டு சுரேஷ் சொல்ல,

அபியும் ஹர்ஷாவும் வாய்விட்டு சிரித்தனர்.


தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட, ரிதுவும் ஆருஷியும் ஆர்வமாக தங்கள் கவனத்தை படிப்பில்
பதிக்க,

ரிஷி அவர்களை படிக்க விடாமல் குட்டி கலாட்டா செய்துகொண்டே இருந்தான்.

கடுப்பான ரிது, “ரிஷி உனக்கு என்ன தான் வேணும்? ஏன் இப்படி தொந்தரவு பண்ணிக்கிட்டே
இருக்க டா?”,என்று கேட்க,

“எப்பப் பாரு படிச்சிட்டே இருக்க ரிதுக்கா நீ. சரி நீ எப்படியும் போ. என்னோட விளையாடுற
ஆரூக்காவையும் இப்படி கெடுத்து வச்சிருக்க. பாரு. வந்து ஒரு மணி நேரம் ஆகுது. என்னை
திரும்பி கூட பார்க்கல.”, என்று அவன் குறைபட,

“டேய் எங்களுக்கு தொடர்ந்து எக்ஸாம் டா. அதான். வேற ஒண்ணும் இல்ல. எக்ஸாம் முடிஞ்சதும்,
உன்னோட தானே விளையாட போறோம்.”, என்று  அவனை சமாதானம் செய்ய,

அவனோ, முகத்தை தூக்கி கொண்டு போனான்.ஆரூ ரிதுவிடன் கெஞ்சி கூத்தாடி அரைமணி
நேரம் இடைவெளி வாங்கி, அவனுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட போனாள்.

இருவரும் பிடி, விடாதே, கேட்ச் என்று கத்த, ரிது அவர்களுக்கு தின்பண்டம் ஏதாவது செய்யலாம்
என்று சமயலறைக்குள் நுழைய,

“என்ன ரிது?”, என்ற அம்மாவின் கேள்வியில், “சும்மா ஏதாவது ஸ்னாக்ஸ் செய்ய வந்தேன்.”,
என்று சொல்லி, அவள் அடுப்புக்கு அருகில் செல்ல, அங்கே எண்ணெய் காய்ந்து கொண்டு
இருந்தது, பக்கத்தில் தட்டில் சமோசாக்கள் என்னை பார் என்னை பார் என்று முக்கோண வடிவில்
நின்றிருக்க,

“அம்மா.. “,என்று சசியை கட்டிக்கொண்டாள் ரிது. “எனக்கு தெரியும் ரிது, இடையில உங்களுக்கு
ஏதாவது வேணும்ன்னு தான் செய்ய ஆரம்பிச்சேன்.”,என்று சொல்ல,

அதன் பின் சமையலறை ரிதுவின் கட்டுப்பாட்டில் வர, சமோசாக்கள் எண்ணெயில் குளித்து,
பொன்முறுகலாக அவளைப்பார்த்து சிரிக்க,
அவள் அதை தட்டுகளில் அடுக்கி, அவ்விருவரையும் தேட, அவர்கள் வாயிலில் விளையாடிய
தடமே இல்லாமல் அமைதியாக இருந்தது.குழப்பப் பார்வை பார்த்தபடி தெருவில் பார்வையை
சுழற்ற, இருவரும் ஒரு வீட்டின் சுவரில் ஏறிக்கொண்டு இருந்தனர்.

ரிது இருவரையும் நோக்கி, “எருமைகளா, உங்களுக்காக சமோசா செஞ்சு கொண்டு வந்தா நீங்க
என்ன குரங்கு வேலை பார்த்துட்டு இருக்கீங்க?”,என்று குரலெடுத்து கூற,

“சும்மா இரு”,என்ற ஆரூவின் செய்கைகள் காற்றில் கரைய,

சமோசா ஆர்வத்தில் ரிஷி வெளியில் குதித்து வீட்டுக்கு ஓடிவிட, சுவற்றில் அமர்ந்திருந்த ஆருஷி
திரு திருவென்று முழிக்க, அந்த பெரிய வீட்டின் கேட் திறந்து யாரோ வந்தனர்.


வேகநடை போட்டு ரேகாவை அடைந்த சங்கரி, “ஏய் உள்ள வா டி”, என்று அழைக்க, எதற்கு
என்று தெரியாத அவளும் பேந்த பேந்த விழித்தபடி தாய் பின்னால் சென்றாள்.

அவளின் முழியே சரி இல்லை என்று உணர்ந்து,  அவள் பின்னால் சென்றான் விக்னேஷ்.
அவளின் கெட்டநேரம் அவனை அவள் கவனிக்கவே இல்லை.

மணமகள் மணமேடைக்கு சென்றுவிட்டதால், அறை காலியாக இருக்க,  ரேகா உள்ளே நுழைந்த
நிமிடம், சற்றும் யோசிக்காமல் அவளை கன்னத்தில் நாலு அறை விட்டார் சங்கரி, ராகவேந்தர்
உள்ளே பதறினாலும், நேற்றிலிருந்து சங்கரி படும் அவஸ்தையை அவர் இப்போது உணர்ந்து
கொண்டதால், ஒன்றும் சொல்லாமல் நிற்க,

“அப்பா பாருங்க, உங்க முன்னாடியே என்னை எப்படி அடிக்கிறாங்க?”, என்று உடனே கோள்
மூட்ட, அவரோ வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்.

அவரின் இந்த செயலை எதிர் பார்க்காத ரேகா, “அப்பா”, என்று அழைக்க,

“என்ன டி அப்பா? ஏது டி இந்த நெக்லஸ்?”, என்று கேட்க, அவளோ பதில் சொல்ல முடியாமல்
தடுமாறினாள்.

“பதில் சொல்லு.”, என்று சங்கரி மீண்டும் கையை ஓங்க, “என்ன சும்மா சும்மா அடிக்க வர,
அவளுக்கு பணம் தர்றீங்க தானே. எனக்கு தரலேயே அதான் அவளுக்கு வச்ச நகைல ஒண்ணை
நான் எடுத்துகிட்டேன்.”

“ஏன்டி இப்படி செஞ்சா கல்யாணம் நின்னு போய்டுமோன்னு உனக்கு தோணவே இல்லையா?
அவ உனக்கு தங்கச்சி தானே?”, என்று ஆதங்கத்துடன் சங்கரி கேட்க,

“என்ன அவளை அவ கேட்ட படிப்பை படிக்க வச்சிங்க. நான் டாக்டர் ஆகனும்ம்ன்னு
சொன்னேன். படிக்க வச்சிங்களா?”,என்று கேட்க,

ராகவேந்தர் உள்ளே உடைந்து போனார். ஸ்வாதி அவள் கேட்ட படிப்பிற்கான மதிப்பெண்
எடுத்தாள், படித்தாள்.  ஆனால் இவள் மதிப்பெண் பெறாமல் கேட்டால் அவரும் என்ன செய்வார்.
என்றோ நடந்ததை இன்று பேசும் மகளை நினைத்து மிகவும் வருந்தியவர், அதை
வெளிக்காட்டாது நகரப்போக,

அவரை கைபிடித்து தடுத்த சங்கரி, “சரி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா? நான்
காணோமேன்னு தேட மாட்டேனா?”, என்று கேட்க,

“அதான் அழகா கண்ணை கசக்கி அந்த பையன் செயின் வாங்கி சமாளிச்சிட்டியே.அப்பறம்
என்ன?”,என்று அலட்சியமாக பேசியவளை வெறுப்புடன் பார்த்தார் சங்கரி, நொறுங்கிப்போய்
பார்த்தார் ராகவேந்தர்.
யாரும் எதிர்பாரா நேரத்தில் ஓங்கி அவள் கன்னத்தில் தன் கைத்தடத்தை பதித்திருந்தான்
விக்னேஷ்.

��அகலாதே ஆருயிரே��
��27��

“என்ன டி பண்ணி வச்சிருக்க? “, கோபமாக கேட்ட விக்னேஷை பயம் கலந்த பார்வை பார்த்த
ரேகா,

“இல்லைங்க, அது.. “,என்று இழுக்க,

“என்ன என்னத்த சொல்லி சமாளிக்கலாம்ன்னு யோசிக்கிறியா? நான் குடுத்த பணம் மாமாக்கு
கொடுத்தியா இல்லையா?”

அவள் முழித்த முழியிலேயே பதில் தெரிந்த கொண்ட விக்னேஷ், ராகவேந்தரிடன் திரும்பி, “மாமா
நான் உங்க கிட்ட தர சொல்லு ஒன்றரை லட்சம் பணம் கொடுத்தேன் மாமா. இங்க என்ன
நடக்குதுன்னு புரியல. ஆனா என்னனாலும் நான் சரி பண்ணறேன். இப்போ மேடையில
உங்களை தேடுவாங்க. வாங்க போவோம். கல்யாணத்துக்கு தானே இவ்வளவு கஷ்டமும். அதை

கண்ணார பார்க்கலாம் வாங்க”, என்று அவரை சமாதானம் செய்து, மாமியாரையும்
அழைத்துக்கொண்டு திருமண பந்தலை அடைய,

பாதபூஜை முடிந்து, மாப்பிள்ளைக்கு மச்சான் முறை செய்ய அழைக்கவும், சங்கரி கண்ணீர் விட,
விக்னேஷ் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, மாப்பிள்ளை வீட்டு  மனிதர்களோ, “நேத்துல
இருந்து பம்பரம் மாதிரி சுத்திக்கிட்டு இருந்தானே உங்க பையன், முறை செய்யற நேரத்துல கூட
அவனுக்கு வேலை வைக்கணுமா? கூப்பிடுங்க.” என்று சொல்ல, ராகவேந்தர் குறுகிப்போனார்.

மகனைப்பற்றி அறியாமல், அவன் நண்பனை அடித்து, மகளை நம்பி மருமகன் முன் சறுக்கி,
சம்மந்தக்காரர்கள் முன் இப்போது குறுகி நிற்கும் நிலைக்கு தானே காரணம் என்று உணர்ந்து
அவர் வாட,

“அவன் ஏதோ வேலையா வெளில போனான்.”, என்று சங்கரி சமளித்துக்கொண்டு
இருக்கும்போதே,

“இதோ தம்பி வந்துட்டான். சீக்கிரம் வந்து உங்க மாமனுக்கு மாலையை போடு”, என்று ஒருவர்
சொல்ல, வியந்து வாசல் பக்கம் சங்கரியும் ராகவேந்தரும் பார்க்க,

கொஞ்சம் இறுகிய முகத்துடன் அபியும், அவன் ஒரு புறம் சிரித்த முகமாக ஹர்ஷாவும் மறுபுறம்
சுரேஷும் வர, சங்கரி தன் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், கண்களில் கண்ணீர் வடிய
அவனை காண, அவனோ வேண்டாம் என்று தலையசைத்து விட்டு இளைய மாமனுக்கு முறை
செய்ய சென்றுவிட்டான்.

ஹர்ஷாவிடம் வந்த சங்கரி, “எப்படி மறுபடி கூட்டிட்டு வந்த ஹரி? அவனை அவ்வளவு சீக்கிரம்
சமாதானம் செய்ய முடியாதே”,  என்று ஆச்சரியாக கேட்டவரிடம்,

“அவன் கிட்ட காரியம் ஆக, ஒரு மந்திர சொல் இருக்கு அம்மா”, என்று சிரித்து, அவரின்
கண்ணீரை அவன் துடைக்க,

பக்கத்தில் நின்றிருந்த ராகவேந்தர் புரியாமல் அவனை பார்க்க, அவன் சிரித்துக்கொண்டே,
“அம்மா பாவம் டா அவங்களுக்காக போகலாம்ன்னு நானும் சுரேஷ் அண்ணனும் நாலு தரம்
சொன்னோம். சரின்னு சொல்லிட்டான்.”, என்று கண்ணை சிமிட்டினான்.

உண்மையில் சங்கரி பூரித்துப்போக, ராகவேந்தர் தான் உள்ளே நொறுங்கிப்போனார்.
இவ்வளவுக்கு பின்னும் நண்பனுக்காக பார்க்கும் ஹர்ஷா, அம்மா என்ற ஒற்றை சொல்லுக்கு
அடங்கி விட்ட மகன் இவர்களை பார்க்கையில் தான் மிகவும் தாழ்ந்து விட்டது போல தோன்ற,
சற்று ஒதுங்கி நின்று கொண்டார்.

சங்கரி அவர் அருகில் நின்றாலும், கண்கள் அபியையே சுற்றி வந்தது. ஸ்வாதி புது பெண்ணுக்கே
உரிய நாணத்துடன் தன் வாழ்க்கையை பற்றிய வண்ணக்கனவுகளுடன் மணவறையில்
அமர்ந்திருக்க,

நல்ல நேரத்தில் அவள் கழுத்தில் தன் கரங்களால் மாங்கல்யம் சூட்டி மனைவியாக்கி கொண்டான்
மகேஷ்.

அவனின் வேலைக்கான பணம் கிடைத்து, திருமணமும் நடந்துவிட்ட திருப்தி அவன்
பெற்றோருக்கு.

மீதி இருந்த வேலைகளை ஹர்ஷா ஆர்வமாக செய்ய, அபியோ கொஞ்சம் விலகியே
அனைத்திலும் கலந்துகொண்டான்.

ஸ்வாதி அவள் புகுந்த வீட்டுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில், தன் உடமைகளுடன் வீட்டை
விட்டு கிளம்பி விட்டான் அபினவ்.

அந்த நொடி, அம்மா என்ற மந்திர வார்த்தையை யாரும் பிரயோகிக்க வில்லை. சங்கரியே
அவனை வெளியேற சொன்னதால் யாராலும் எதுவும் பேச முடியாமல் போனது.

ராகவேந்தர் நடப்பதை கவனிக்கும் மனிதராக மாறிப்போனார்.


சூடான சமோசா ரிஷியை வா வாவென்று அழைக்க,அவன் ஆருஷியை மறந்து சமோசாவை தேடி
ஓடி வந்து விட்டான்.

ஆனால் மதில் சுவரின் மேல் அமர்ந்திருந்த ஆருஷிக்கு யாருடைய துணையும் இல்லாமல்
அங்கிருந்து இறங்குவது சாத்தியம் இல்லாமல் போக, அவளின் ரிஷி, ரிஷி என்ற கத்தல்கள்
எதுவும் ரிஷியின் செவிப்பறையை சென்று சேரவே இல்லை.

ஆரூ வராமல் இருப்பதை கவனித்த ரிது,  “எங்க டா அவ? “,என்று கடிந்துக்கொண்டு வெளியில்
வந்து பார்க்க, அவள் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் அந்த சாலை அமைதியாக
இருக்க, ரிது ஒரு நிமிடம் ஆடிப்போனாள்.

அவளின் ஆரூ, ஆரூ என்ற குரல் மட்டுமே அந்த வேளையில் எல்லா பக்கமும் எதிரொலிக்க,
ரிதுவுக்கு பயம் பிடித்துக்கொண்டது.

காலம் கெட்டுக்கிடக்கும்  வேளையில் இவளின் செய்கையும், அதை தொடர்ந்த ஆருவின்
கவனமின்மையும் ரிதுவின் மனதில் விழ, அடுத்து என்ன என்று அவள் உழன்று நிற்கும்போதே,

அந்த பெரிய வீட்டின் கிராதி கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள் ஆரூ .

அவளை முழு உருவமாக, நல்ல நிலையில் கண்ட பின்பு தான் ரிதுவின் மரத்துப்போன மூளை
வேலை செய்ய துவங்கியது. அவளும் ஆருவை நோக்கி வேக எட்டுகள் வைத்து நடக்க,

“ரிது இந்த ரிஷிப்பய  என்னை விட்டுட்டு ஓடிப்போய்ட்டான் டி,  நான் வேற செவுத்துல ஏறி
உக்காந்து இருந்தேனா? அந்த வீட்டு கதவு திறக்கவும் ரொம்பவே பயந்துட்டேன். இறங்க வேற
முடியல”,  என்று வேக வேகமாக சொல்ல,

“எதுக்கு டி குரங்கு போல மேல ஏறி இருந்த?”, என்று தோளில் ஒரு அடி வைத்துக் கேட்டாள் ரிது.

“ஆஹ்ஹ்.. எதுக்கு அடிக்கிற மாடே.. வலிக்கிது. உன் அழகு தம்பி தான் சிக்ஸ் அடைகிறேன்னு
அந்த வீட்டுக்குள்ள பாலை போட்டுட்டான். எடுக்க தான் போனேன்.”

“ஏன் டி அவனோட சேர்ந்து நீயும் படுத்தற, அப்பறம் எப்படி இறங்கி வந்த? “, என்று எரிச்சலாக
கேட்டவளை முறைத்த ஆரூ.

“என்னை மாட்டிவிட்ட அவனுக்கு சமோசா கொடுப்ப, என்னை இங்கேயே வச்சு கேள்வி
கேட்டுட்டே இருப்பியா?  போடி “, என்று முகத்தை திருப்பினாள் ஆருஷி.

“அடியேய்.. இந்தா. இந்த தட்டு பூரா உனக்கு தான். சொல்லு. என்னாச்சு?”

“இல்ல நான் இறங்க முடியாம இருந்தேனா? அப்போ அந்த வீட்டுல ஒரு ஆன்ட்டி ஒரு பையன்
கூட கிளம்பி வந்தாங்க. அந்த பையன் கொஞ்சம் மூளை வளர்ச்சி குறைவான பையன் போல,
என்னை பார்த்து அவன் சிரிக்கவும், அந்த ஆன்ட்டி நான் கீழ இறங்க உதவி பண்ணினாங்க.
காம்பொன்ட்குள்ள  இறங்கி கேட் வழியா வரேன்”, என்று பெருமை பேசிய அவளின் தலையில்
ரிது ஒரு குட்டு வைக்க,

“என்ன டி”, என்று இழுத்த அவளிடம், “இனி இப்படி குரங்கு சேட்டை செய்யாதே.”, என்று
கண்டித்தாள்.

ரிஷி அவன் தட்டில் இருந்த சமோசாக்களை
முடித்தவன், ஆருவின் தட்டில் கைவைக்க, நடு முதுகில் நல்லப்படியாய் அவனுக்கு பரிசை
வழங்கிவிட்டு, போடா என்று முகத்தை திருப்பி, தட்டை ஒளித்துக்கொண்டாள்.

சிரித்த ரிஷி, சட்டென்று யோசனையில், “ஆமா பால் எங்க? “,என்று கேட்டான்.

அப்போது தான் ஆருஷிக்கு நினைவு வந்தது, தான் அவர்கள் உதவியோடு இறங்கி மட்டும் வந்து
விட்டோம் என்பது.

அவள் தன் பற்கள் மொத்தத்தையும் காட்டி சிரிக்க,

“உன்கிட்ட இப்போ யாரு பேஸ்ட் அட்வடைஸ்மெண்ட்கு நடிக்க கூப்பிட்டது?”,
என்று தலையில் குட்டு வைத்த ரிஷியை தலையை தேய்த்தபடி துரத்தினாள் ஆரூ.

அவர்களை கவனித்த சசி, மகளுக்கும் சூடான சமோசாக்களை அளித்து சாப்பிட சொல்ல,
அவளோ ,”அந்த குழந்தை பாவம் இல்ல மா?”, என்று கேட்க,

“யாரு டா ரிது?”, என்று புரியாமல் கேட்டார் சசி.

“அந்த பெரிய வீட்டு  குட்டி பையன்.”, என்று கொஞ்சம் சோகம் இழையோட சொன்னாள் ரிது.

“அவங்க ஹோட்டல்காரங்க டா. கடவுளை வேண்டுவோம். நம்மால வேற என்ன செய்ய முடியும்”,
என்றார் சசி.

“நியாயம் தான். கடவுள் செயல்”, என்று சாப்பிட துவங்கினாள் ரிது.

��அகலாதே ஆருயிரே��
��28��

காலை எழுந்த சங்கரி வழக்கம் போல வீட்டு வேலைகளோடு, பொடி பாக்கெட்டுகளை தயாரித்து
பையில் அடுக்க, வாக்கிங் போகும் பழக்கம் உள்ள விக்னேஷ் சீக்கிரம் எழுந்து வெளியில்
வந்தான்.

அவனைக் கண்டதும் சங்கரி காபி கொண்டு வர, சமையலறையை எட்டிப் பார்த்தவன்
வியந்தவனாக, “என்னத்த இப்போவே எல்லா வேலையும் முடிச்சிட்டீங்க? “,என்று கேட்க,

அதிகம் அவனோடு பேசிப்பழகாத சங்கரி சற்று கூச்சத்தோடு, “பழக்கம் தான் தம்பி, எப்பவும் அபி
இருப்பான், பாக்கெட் போடுவேன், நான் வேலையை முடிக்கும் போது சரியா இருக்கும். இனி
இதையும் சேர்த்து செய்யணும்ன்னா நேரத்தை சரியா கணக்கு போட்டு வேலைகளை
முடிக்கணுமே. “,என்றதும்,

“டைம் மானேஜ்மெண்ட் பத்தி எவ்ளோ அழகா சொல்றிங்க?”, என்று பாராட்ட,

“நீங்க என்ன சொல்றிங்கன்னு புரியல தம்பி. ஆனா இந்த நேரக்கணக்கெல்லாம் எனக்கு
சொல்லித்தந்தது அபி தான். காலைல நாலரைக்கு எழுந்து ராத்திரி பதினொன்ரைக்கு படுத்தாலும்
எப்பயும் நேர்த்தியா வேலை பார்த்தா அலுப்பே இருக்காது, இடையில நமக்கு ஓய்வும்

கிடைக்கும்ன்னு அவன் தான் சொல்லிக்கொடுத்தான். அவனை விட எனக்கு சுறுசுறுப்பு கம்மி
தான். “,என்று சிரித்தார்.

“இந்த வயசுல அவனோட மெச்சூரிட்டி பெரிய விஷயம் அத்த.”, என்று அவன் உணர்ந்து சொல்ல,
அவன் வாக்கிங் போவதை விடுத்து சங்கரியை காபி குடிக்க சொல்லி வற்புறுத்தியவன், அவருக்கு
உதவியாக பாக்கெட் போட்டான். வேலை முடியும் தருவாயில்,  எழுந்து வந்த ரேகா, தன்
அன்னையை நோக்கி, “ஏம்மா என் வீட்டுக்காரர் என்ன உன் வேலைக்கார ஆளா? பாக்கெட்
போட சொல்லி நீ இப்படி உக்காந்திருக்க. இதெல்லாம் நல்லாவா இருக்கு. “,என்று நாலு வீடு
கேட்கும் அளவுக்கு கத்த,

விக்னேஷ் ,”ஏய் இரு..”, என்று சொன்னதை காதில் வாங்காமல் அவள் பாட்டுக்கு
பேசிக்கொண்டே போக,

தனது அறையில் இருந்து வந்த ராகவேந்தர், “என்னம்மா என்ன சத்தம்?”, என்று கேட்ட கணம்,

“இங்க பாருங்க அப்பா, இவங்க காலாட்டிக்கிட்டு காபி குடிப்பாங்களாம், என் வீட்டுக்காரர்
பாக்கெட் போடணுமாம். நியாயமா? “,என்று கண்ணைக் கசக்கிக்கொண்டு கேட்க,

வீட்டுக்கு நெடு நாள் கழித்து வந்த மூத்த மருமகன் வேலை செய்ய மனைவி வேடிக்கை
பார்ப்பதா? என்ற சிந்தனை யார் இதை நம்மிடம் சொல்கிறார்கள் என்று யோசிக்க விடாமல்
மூளையை மழுங்கடிக்க,

“என்ன இது? மாப்பிள்ளைக்கு மரியாதை தரத் தெரியாதா?”, என்று சத்தம் கூட்டி அவர் கேட்டது
தான் தாமதம்.

“மாமா.. “,என்ற விக்னேஷின் குரல் அனைவரையும் அவன் புறம் திரும்ப வைத்தது.

“நான் அத்தைக்கு உதவி செய்யறேன்னு சொல்லி எதையோ செஞ்சிட்டு இருக்கேன். அவங்க
காலைல நாலு மணிக்கு எழுந்து வீடு வேலை எல்லாத்தையும் முடிச்சும் ஒரு காபி கூட குடிக்கல.
நான் தான் கட்டாயப்படுத்தி குடிக்க சொல்லிட்டு இந்த பாக்கெட் எல்லாம் போடறேன்னு
பண்ணினேன். என்னை ஒரு வார்த்தை கேக்காம, நீங்களா எப்படி முடிவு செய்வீங்க?”

“இல்ல மாப்பிள்ளை, அது ரேகா..”, என்று அவர் இழுக்க,

“அதான் தெரியுதே ரேகான்னு. எழுந்து வர்ற நேரத்தை பாரு. மணி ஏழரை, ஆடி அசைஞ்சு வர்ற,
சீக்கிரம் எழுந்து அத்தைக்கு உதவி செய்ய உனக்கென்ன கஷ்டம். அங்க எங்கம்மா ஒரு
வேலையும் செய்யவே விடறதில்லைன்னு கம்பலைன்ட் பண்ணின? இங்க இவ்ளோ இருக்கு. நீ
ஒரு காபி தம்பளர் கழுவி நான் பார்க்கலையே. இதென்ன? இதான் நீ எங்க வீட்ல போய் உதவியா
இருக்கேன்னு சொன்ன அழகா?”

நிறுத்தாமல் அவன் பேசிக்கொண்டே போக,

“போதும் தம்பி விடுங்க. அவ தினமும் உதவுவா. இன்னிக்கு தான் கொஞ்சம் அசதி, தூங்கிட்டா”,
என்று சங்கரி சமாளிக்க,

“இப்படியே நீ இவளை காப்பாத்தி காப்பாத்தி தான் இவ இந்த நிலைமைல இருக்கா.”, என்று
குரல் கொடுத்தபடி வந்தான் அபி.

“இந்தம்மா இதுல நீ கேட்ட சாமான் இருக்கு. நான் வரேன். என்னைக்கு தான் சொல்றது
உண்மையா பொய்யான்னு கேட்டு தெரிஞ்சு திட்டுவங்களோ. உலகம் தலைகீழா சுத்திடாது. ச்ச..
“,என்று எரிச்சல் மண்ட சொல்லிவிட்டு நகர்ந்தான் அபி.

“அவன் சொல்றது சரி தான் மாமா. இவ சொன்னா நீங்க என்னை கேட்க வேண்டாமா?,”, என்று
கொஞ்சமா காரமாகவே கேட்டுவிட்டான் விக்னேஷ்.

இங்கே இவ்வளவு கலவரம் நடக்கையில் சமயலறையில் எதையோ உருட்டிக்கொண்டு இருந்தாள்
ரேகா.

“என்னம்மா “, என்ற சங்கரியிடன், “இன்னிக்கு நான் சமைக்கிறேன் நீ போ.”, என்று உரக்க
சொன்னவள், உள்ளே இருந்த உணவை பார்த்து திருப்தியாக,

இன்னிக்கு பாருங்க, உங்களுக்கு நான் விருந்தே செஞ்சு தரேன். என்று உள்ளே பார்த்த
பதார்த்தங்களை அவள் சொல்ல, அதில் அவள் மறந்த அவரைக்காய் பொரியலை விக்னேஷ்
நியாபகப்படுத்தினான்.

அவள் திருதிருவென்று முழிக்க ,”ஏண்டி முன்னமே எழுந்து வந்தவன் நான். உள்ள சமையல்
முடிஞ்சுதா இல்லையான்னு எனக்கு பார்க்கத் தெரியாதா? பெரிய இவ மாதிரி உள்ள
இருக்கிறதை சொல்லி இவை செஞ்சது போல பில்டப் வேற.. “,என்று கத்திவிட்டு
வெளியேறினான்.

ரேகா அவமானத்தால் முகம் கறுத்து நின்றாள்.

**

“தம்பி உங்களுக்கு என்ன வேணாலும் கேளுங்க. உங்க சொந்த அக்கா போல நினைச்சுக்கோங்க.”
என்று சொன்ன அவரின் பாசமான பேச்சு அபியை உள்ளே கரைய செய்தது.

“இல்லக்கா எனக்கு ஒன்னும் வேண்டாம். தங்க இடம் கொடுத்ததே பெருசு. “,என்று அடக்கமாக
சொல்ல,

அவனின் பேச்சில் அவள் மிகவும் கவரப்பட்டாள். “சரிப்பா கொஞ்ச நேரம் தோட்டத்துல இரு.
இந்த ரூமை சுத்தம் பண்ணட்டும். “,என்று சொல்லிவிட்டு தன் மகனை அழைத்துக்கொண்டு
கிளம்பினாள் அகவழகி.

தோட்டத்தில் இருந்த கூடை நாற்காலியில் அபி அமர்ந்திருக்க, சற்று நேரத்துக்கெல்லாம் ஏதோ
சத்தம் கேட்டு தலையை திருப்பி பார்த்தான்.

அங்கே செடிகளுக்கு ஊடே ஒரு பெண், எதையோ ஆராய்ந்து கொண்டு இருக்க.

அவன் அதை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அவளின் பின்னால் வால் போல
ஒரு பையன், அவளை முறைத்தபடி, ஏதோ சொல்லிக்கொண்டு இருந்தான்.

சற்றுநேரத்தில் அவர்களுக்கு எப்படியோ நினைத்தது கிடைத்துவிட, மகிழ்ச்சியாக நடந்தவர்கள்,
கேட்டை நோக்கி போகாமல் மதில் சுவர் மீது ஏற, அது வரை அமைதியாக கண்டுகொண்டிருந்த
அபி பாய்ந்து ஒரே பிடியில் அந்த பெண்ணை நிறுத்த, அந்த வால் பிடித்த பையனோ மதிலை
கடந்து குதித்திருந்தான்.

“ஏய் என்னை விடு. யார் நீ? “,என்று அவள் கத்த,

அவனோ பிடித்த பிடி தளராமல், “என்ன எடுத்த? எதுக்கு சுவர் ஏறிப்போற?”

“உனக்கெதுக்கு இதெல்லாம்”, என்று திமிராக கேட்டிட,

அவன் அவள் கையை வளைத்து முறுக்கினான்.

“என்னன்னு சொல்லுவியா மாட்டியா?”

“சொல்ல மாட்டேன்.” என்றதும்.

“வெளில போன உன் வாலு உள்ள ஆள் கூட்டிட்டு வரும்ன்னு தென்னாவெட்டுல பேசுற.. ம்ம்..”,
என்று அவன் எரிச்சலாக,

அவளோ அவன் சொன்னதை கேட்டு,” ஐயோ போச்சு.. “,என்று அழத் துவங்க,

“என்ன உன் ஆளுங்க வந்துருவங்கன்னு அழுகிறது போல நடிக்கிறியா?”,என்று கேட்டது தான்
தாமதம்,

“நீ வேற ஏன்யா.. அவ என்னை இப்படி பார்த்தா கொன்னே போட்ருவா. என்னை
விட்டுட்டேன்.”, என்று கொஞ்சம் கெஞ்சலில் இறங்கினாள் அவள்.

“உன் பேர் என்ன? இங்க என்ன எடுத்த?” அவளிடம் அவன் கேள்வி கேட்கும்போதே,அங்கே
வந்த ஸ்ரவன், “அக்கா… கா..”, என்று கொஞ்சம் கோணிய வாயில் எச்சில் ஒழுக கூப்பிட,

“என் கையை விடு குழந்தை பயப்படும். “,என்று விடுத்துக்கொண்டவள்,

“சொல்லு ஸ்ரவன்.. “,என்றதும் அவன் வானத்தை காட்டி என்னவோ சொல்ல, அதில் அவனுக்கு
என்ன புரிந்ததோ இல்லையோ எதையோ அவளிடம் பகிர நினைத்தான் என்பது புரிந்தது.

அவள் சிரித்தபடி அவனோடு பேச, “நீ யாரு?” என்று மெல்ல கேட்டான் அபி

“ஏன் நாளைக்கு கேளேன்.. ஆளைப்பாரு.. நான் ஸ்ரவன் பிரென்ட்”,என்று அவள் இல்லாத
காலரை தூக்க,

“அப்பறம் எதுக்கு மதில்ல ஏறி வந்த?”

“சும்மா “என்று கண்சிமிட்டினாள்.

,”உன் பேர் என்ன?”,என்று ஆர்வமாக விசாரித்தான்.

“ஆருஷி. சரி நான் போறேன். அப்பறம் அவள் வந்தா என்னால சமாளிக்க முடியாது.”

“யாரு.. ?”,என்று அவன் கண்களை உருட்ட,

“என் பிரென்ட்.”, என்று சொல்லும்போதே,
“ஆரூ.. எங்க இருக்க?”, என்ற ரிதுவின் குரல் அவள் செவிகளில் விழ,

“ஐயோ யாராச்சும் அவளை பிடிங்க டா..”,என்று சொல்லிக்கொண்டே,

“நான் இதோ வரேன்”,என்று கத்தியபடி ஸ்ரவனின் கன்னத்தில் தட்டிவிட்டு, “மிஸ்டர் ஜேம்ஸ்
பாண்ட்.. வரட்டா… ம்.. “,என்று சைகை காமித்து வெளியில் ஓடி விட்டாள்.

ஏனோ அவளின் சிரிப்பும் பேச்சும் அபி மனதில் ஏதோ ஒரு விதமான நட்புணர்வை ஏற்படுத்த,
அவளை இறுக்கிப் பிடித்த கைக்கு, இரண்டு அடிகள் கொடுத்தால் என்ன என்று அவன் யோசிக்க,
அங்கே வந்த அகவழகி,”ரூம் ரெடி தம்பி, நீ மட்டும் தானே.” என்று கேட்க,’ஆம்’ என்று
தலையசைத்தவன்,

பள்ளிக்கு செல்ல வேண்டிய அனைத்தும் எடுத்துவைத்துக்கொண்டு கிளம்ப, அவனுக்கு முன்
இரண்டு சைக்கிளில் இருவர் பள்ளி சீருடையில் போக, அதில் ஒரு பெண்ணின் சாயல் காலை
பார்த்த பெண் போல உள்ளதோ?  என்று அவன் யோசிக்கும்போதே,

சுரேஷ் போன் செய்ய அதில் கவனமானவன், ஆருஷியுடன் வந்த ரிதுவை கவனிக்கவே இல்லை.

��அகலாதே ஆருயிரே��
��29��

பள்ளிக்கு விரைந்த ஆருஷியை புரியாமல் பார்த்தாள் ரிதுபர்ணா.

“ஏன் ஆரூ இவ்ளோ அவசரம்?”, என்றதும்,

“அது ரெகார்ட் எழுதல, சீக்கிரமா போனா எழுதலாம்ன்னு.. “,என்று இழுக்கும்போதுதான், நேற்று
மாலை அவளோடு சேர்ந்து தான் ரெகார்ட் எழுதினோம் என்ற நினைவு வந்தது.

முகத்தில் ஒரு அசட்டு சிரிப்பை தேக்கி, “சும்மா… ஈஈ..”, என்று இளித்தாள்.

தலையில் அடித்துக்கொண்ட ரிது சாலையில் கவனம் வைத்து மிதிவண்டியை செலுத்தினாள்.

பள்ளிக்கு முன்னால் இருந்த கடையில் சைக்கிளை நிறுத்திய ஆருஷி, “பேனா வாங்கிட்டு வரேன்
ரிது”, என்றதும், “சரி”, என்று அவள் பள்ளி வளாகத்தினுள் நுழைந்தாள்.

அடுத்த கால் மணியில் உள்ளே வந்த ஆருஷியின் கண்ணில் மின்னல் வெட்டியது. முகம் மலர்ந்த
சிரிப்பு ஒளிர, அதை கவனித்தாலும் அவளே தன்னிடம் சொல்லட்டும் என்று ரிது அவள் படிப்பில்
கவனம் செலுத்தினாள்.

சிறிது நாட்களாக ரிது ஆருவை விட்டு சற்று விலகி இருந்தாள். தான் இருக்கிறோம் என்ற
எண்ணத்தில் தான் ஆருஷி கவனமின்றி சிறுப்பிள்ளையாக இருக்கிறாள். எல்லா நேரமும்
அவளுக்கு தன்னால் துணை புரிய இயலாது என்று பலமுறை நடந்த நிகழ்ச்சிகள் அவளுக்கு
உரைத்தாலும் ஏனோ இன்னும் ஆருஷியின் விளையாட்டுதனம் அவளை யோசிக்க வைத்தது.
ஆருஷி தன்னையே காத்துக்கொள்ளும் அளவுக்கு அவளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற
எண்ணம் ஒருபுறமும், ரிது அவள் வாழ்வின் பாதையை முடிவெடுத்து விட்டதால் அதை நோக்கிய
தன் பயணத்தின் முதல் படியில் இருப்பதால் ஆரூ பற்றி மேலோட்டமாக கவனம் வைத்தாள்.

பிரச்சனை என்றால் கண்டிப்பாக அவளை காக்க வந்துவிடுவாள். அதே போல அதுவரை
விடுவதும் கூடாது என்றே மனதில் ஒரு முடிவோடு, எந்த நேரமும் புத்தகமும் கையுமாக
அலைந்தாள் ரிது.

தன் மலர்ச்சியை ரிது அறியவில்லை என்று உள்ளே மகிழ்ந்தாள் ஆரூ. எப்போதும் போல
அவர்கள் பள்ளி வாழ்க்கை செல்ல,

மாலையில் அபியை காணும் வாய்ப்பு ஆருஷிக்கு அடிக்கடி அமைந்தது.

பள்ளி முடிந்த அபி நேராக ஹோட்டலுக்கு செல்ல, முதல் நாளே அகவழகி அவனை
கோபித்துக்கொண்டார்.

அகவழகி ஹோட்டல் முதலாளியான நித்திலனின் மனைவி. அவர்களுக்கு பல உணவகங்கள்,
உணவு பதார்த்த விற்பனையகங்கள் இருந்தது.

அவர் முடிந்தவரை தன்னிடம் உழைக்கும் தொழிலாளர்கள் நலம் பெற உதவுவார். அவருக்கு
அபினவின் நேர்மையும், உழைப்பும் பிடித்திட, அவனுக்கு வீட்டில் பிரச்சனை என்றதும்
சங்கரியை கூப்பிட்டு பேசினார்.

சங்கரியும் தன் கணவரின் கடந்த கால  வாழ்வில் பெற்றோர் பெண் பிள்ளையை மதிக்கவில்லை
என்ற காரணத்தால் தனக்கு பிறந்த இரண்டு பெண்களையும் அவர் கொண்டாடி வளர்க்கிறார்
என்றதும் ஏனோ நித்திலனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“அபியை நான் என் வீட்டில் தங்க வைத்துக் கொள்ளவா?”, என்ற அவரின் கேள்வியில், கண்கள்
பனிக்க ஒப்புக்கொண்ட சங்கரி, இனி தங்கள் வீட்டில் அவன் இருக்க வேண்டாம் என்று

ஸ்வாதியின் திருமண நாளே அறிவித்து அவனை நித்திலனின் வீட்டிற்கு அனுப்பியும் வைத்தார்.
நித்திலனின் வீட்டில் தங்க அபி சங்கடப்பட, அவர் தனது இல்லத்தின் அவுட் ஹவுஸில் அவனை
தங்க வைத்துக் கொண்டார்.

நித்திலன் அகவழகி தம்பதிகள் இருவரும் வைரங்கள் போல, ஆனால் அவர்கள் குழந்தையான
ஸ்ரவன் மூளை வளர்ச்சி குறைந்தவனாக பிறக்க, இருவருக்கும் வருத்தம் தான் என்றாலும் கடவுள்
தங்களுக்கு அளித்த பரிசாக நினைத்து ஸ்ரவனை வளர்த்து வந்தனர்.

முன்னால் ஸ்ரவன் அதிகம் யாரோடும் பழக மாட்டான். ஆனால் அன்று பந்து எடுக்க வந்த
ஆருஷி சுவற்றின் மீது ஏறி இருக்க,அவளின் முழியும், இறங்கிய பின் அவளின் பேச்சும் ஸ்ரவனை
வெகுவாக கவர, அவன் அக்கா.. கா.. என்று அவளிடம் ஒட்டிக்கொண்டான். அன்று முதல்
ஸ்ரவனும் ஆருஷியும் நண்பர்களாக, அவர்கள் சந்திப்பு தினமும் மாலை ஆரூ வீட்டிற்கு செல்லும்
முன் அரை மணி நேரமாக தொடர்ந்தது.

பள்ளி முடிந்து அபி கண்டிப்பாக வீட்டிற்கு வந்து ஓய்வு எடுத்து விட்டு தான் பணிக்கு செல்ல
வேண்டும் என்ற அகவழகியின் அன்புக் கட்டளையை மீற முடியாமல், தினமும் பள்ளி முடிந்து
வீடு வரும் அபிக்கு ஆருஷியும் ஸ்ரவனும், கூடவே அவளின் வாலான ரிஷியும் கண்ணில் படுவர்.

ஏனோ அபிக்கு ஆருஷியின் குறும்புகள் மிகவும் பிடித்துப்போனது. அவனால் இப்போதெல்லாம்
அடிக்கடி ஹர்ஹாவை பார்க்க முடிவது இல்லை. ஞாயிறு மட்டுமே அவனை காண இயலும்,
ஏனோ ஆருஷியை காண்கையில் ஹர்ஷாவை பார்ப்பது போன்ற மாயை அபிக்குள் உருவாகும்.

அன்றும் அவர்கள் மூவரும் ஸ்ரவனின் ஆசைக்காக ரயில் வண்டி விளையாட, ஏழு வயது சிறுவன்,
பதிமூன்று வயது சிறுவன் அவனுடன் பதினேழு வயது பெண். உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே
சைக்கிளை எடுத்தான் அபி.

அபி என்ற அகவழகியின் குரல் கேட்டு அவன் நிற்க, “இங்க வா”, என்று வீட்டினுள் அழைத்தவள்,
ஒரு சாவியை வழங்கினாள்.

“இது பழைய ஸ்ப்ளெண்டர் சாவி. அவர் புல்லட் வாங்கியதும் பின்னாடி ஷேட்டுல நிக்கிது அந்த
வண்டி. போ. இனி அதை நீ எடுத்து ஓட்டு.”, என்றாள்.

“இல்லக்கா..”, என்று அபி தயங்க,

“அபி நான் புது வண்டி வாங்கித் தரல, வேலைக்கு சீக்கிரம் போக, ஒருவேளை டெலிவரி, இல்ல
அவசர வேலைன்னா போய்ட்டு வர இந்த வண்டி உபயோகப்படும். சும்மா நிக்கிறதை எடுத்துக்க
உனக்கென்ன தயக்கம்?”, என்றதும்,

“சரிக்கா”, என்று வாங்கிக்கொண்டு,வண்டியை துடைத்து எடுத்து கிளம்பினான்.

“என்ன ஜேம்ஸ் பாண்ட்.. புது வண்டியா?”,என்று ஆரூ கிண்டல் செய்ய, “ஆமா மதில் குரங்கே..”,
என்று பதில் கிண்டல் பேசி அவன் கிளம்ப,

காலை உதைத்துக்கொண்டு சிணுங்கினாள் ஆரூ. அவளை கண்ட ரிஷி, “ஆனாலும், சும்மா
சொல்லக்கூடாது ஆருக்கா. உனக்கு அந்த பேர் பொருத்தமா இருக்கு”, என்று சொல்லிவிட்டு ஓட,

“அடேய்.. “,என்று அவனை துரத்தினாள் அவள். இவர்களின் ஓட்டத்தை கைதட்டி ரசித்து
சிரித்தான் ஸ்ரவன்.

சிரித்தபடி இவர்கள் செய்யும் சேட்டை பார்த்தாள் ரிது. அவள் இப்போது தான் வீட்டினுள்
நுழைக்கிறாள். தன் உடன்பிறப்பு எப்போதும் போல ஏதோ வித்தை காட்டி அடிவாங்க பயந்து
ஓடுகிறான் என்று நினைத்தவள், “விடாத ஆரூ அவன் முதுகுலயே ரெண்டு போடு. “,என்றதும்,

“ஏ ரிதுக்கா.. நான் என்ன செஞ்சேன். சொன்னது அந்த அண்ணா.. அடி மட்டும் எனக்கா?”,
என்றதும் ஒன்றும் புரியாமல் விழித்தாள் அவள்.

“என்ன டி ஆரூ”, என்றதும்,

“இங்க இருக்கற ஜேம்ஸ் பாண்ட் என்னை மதில் குரங்குன்னு கிண்டல் பண்ணிச்சு, இந்த பய அது
நல்லா இருக்குன்னு சொல்லறான் ரிது”, என்று பொய் அழுகை அழ,

“அடச்சி.. வாயை மூடு..இதெல்லாம் ஒரு விஷயமா? “,என்று இழுத்தவள்,” ஆனாலும் நல்லா தான்
இருக்கு.”, என்று நினைத்ததை சொல்ல,

“நீயுமா?”, என்று அவளையும் சேர்த்து ஆரூ துரத்தினாள்.

ஓடிக்கொண்டே இருந்தாலும் ரிதுவின் மனதில் ‘யார் அந்த நெடியவன்?’ என்ற கேள்வி எழத் தான்
செய்தது.

இப்படியே நான்கு மாதங்கள் கழிய, ஆருஷிக்கும் ஸ்ரவனுக்கும் இடையில் அன்பு பலப்பட,
அபியும் அவளும் அடிக்கடி கிண்டலடித்துக் கொண்டனர்.

ஏனோ ரிது வீட்டில் தாய்க்கு உதவி விட்டு நேரம் சென்று வருவதால் அபியை காணும் வாய்ப்பு
அமையவில்லை. ஞாயிறு இவர்கள் வரும் வேளை அவன் தன் இல்லத்திற்கோ, ஹர்ஷாவை
காணவோ சென்று விடுவான். ரிதுவுக்கு அபியை காணும் சந்தர்ப்பம் அமையாமலே போனது
விதியா? (இல்ல நான் செஞ்ச சதின்னு நீங்க சொல்றது கேக்குது).

லதா தன் மாமியார் மாமனார் வரவு பிடிக்காமல் போனாலும், இப்படி ஆறு மாதம் தங்களுடனே
தங்குவார்கள் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

சோமுவுக்கும் ஹர்ஷாவுக்கும் வயிறு நிறைய உணவும், தாத்தாவின் அனுபவ அறிவால் புத்திக்கு
உணவும் கிடைக்க, அவர்கள் லதா பக்கம் திரும்பவே இல்லை.

லதா பொறுத்து பொறுத்து பார்த்தார். அவருக்கு வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் மாமியார்
பார்த்துக்கொள்ள, எந்த நேரமும் வெட்டியாக பொழுதை கழிக்க முடியாது என்று மாமியார் வந்த
அடுத்த மாதமே எம்பிராய்டரி வகுப்பில் சேர்ந்து கொண்டார்.

ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக  தெரிந்தாலும் போக போக அதன் நேர்த்தியும், இதை சரியாக
செய்தால் கிடைக்கப்போகும் வருமானமும் புரிய, வீட்டின் கவலைகள் குறைந்ததால் முழு
நேரமும், பிரேமும் கையுமாக அலைந்தார்.

அங்கே அவருக்கு ஒரு நல்ல சினேகிதி கிடைக்க, அவள் இவருக்கு நேர்த்தியாக  எம்பிராய்டரி
போட உதவ, இவரும் பதிலுக்கு பண விவகாரங்களில் தனக்கு தெரிந்த சூட்சமங்களை அவருக்கு
சொல்லித்தந்தார்.

எப்போதும் தனக்கு தெரிந்த அனைத்தையும் யாரும் யாருக்கும் சொல்லித்தருவது இல்லை. ஏனோ
என்னை மிஞ்சி போய் விடுவார்களோ என்ற சுயநல எண்ணம் மற்றும் நமக்கு மட்டுமே
தெரிந்திருத்தல் ஒரு வித பெருமை என்று மனோபாவம் பரவலாக இருக்கிறது. இல்லாவிட்டால்,
அறிய பல கலைகள் கொண்ட தமிழ் பாரம்பரிய முறைகள் இவ்வளவு பின்தங்கி நிற்குமா? அந்த
கால ஓலைச்சுவடிகள் கொண்டு பயின்றவர்கள் அதனை வேறு வடிவத்துக்கு மாற்றாமலே
செல்லரிக்க விட்டிருப்பார்களா? இல்லை அவ்வளவு பெரிய பொக்கிஷமான யாழ்ப்பாண நூலகம்
தான் கொழுந்துவிட்டு எரிந்திருக்குமா? எல்லாமே சுயநலம் தான். தன் முழு திறமையையும்
யாரேனும் ஒருவருக்காவது  நாம் பயிற்றுவிக்க வேண்டும். அப்போது தான் நம் அறிவு அடுத்த
தலைமுறையை சென்று அடையும். இதற்கு தான் அந்த கால குருகுல கல்வியில் பிரதான சீடன்
அனைத்தையும் கற்று அந்த குருகுலத்தை அவன் நிர்வாகிப்பான் பின்னாளில். சரி இங்கு லதா
என்ன செய்தார்…

லதா தானறிந்த அனைத்து விஷயங்களையும் அவளுக்கு சொல்ல, அவளோ, சமையல் குறிப்பு,
குழந்தை வளர்ப்பு, மற்றும் இப்போது பயிலும் வகுப்பு மேல் என்ன பயின்றால் நல்ல பல
வாய்ப்புக்கள் கிடைக்கும் என்று வஞ்சனையின்றி சொல்லித்தர,அங்க ஒரு ஆழமான நட்பு
மலர்ந்து மனம் வீசியது.

அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் கையில் போனுடன் என்னமோ செய்து
கொண்டிருந்த மகனை பார்த்த லதா,”என்ன டா உன் பிரெண்ட்டை பார்க்க போகலையா?”,என்று
கேட்க,ஆச்சர்யம் கொண்ட ஹர்ஷா அதன் மிகுதியில் எழுந்துவிட, அவன் வீட்டில் அணியும்
ஷார்ட்ஸ் மட்டும் போட்டு மேலே பூந்துவலை போர்த்தி இருந்தவனின் வெற்று  மார்பு தெரிய,

அவனுக்கு அருகில் வந்த லதா கழுத்தை கூர்ந்து பார்த்தார்.

“டேய் எங்க உன் செயின்?”, என்றதும்,

அன்றே சங்கரி அந்த செயினை திருப்பி கொடுத்ததும், நானும் உங்கள் மகன் தான் என்று அவர்
கையில் அதை அழுத்தி வைத்து விட்டு வந்ததும், இன்று வரை வீட்டில் இதற்காகவே ரவுண்ட்
நெக் டி-ஷர்ட் போட்டு அலைந்ததும் நினைவில் ஆட,

திரு திருவென்று விழித்தான்.

“என்ன டா? முழிக்கிற? அஞ்சு சவரன் டா.” என்றாள்.

அப்போது தான் அவன் அது தெரிந்தது போல,” ஓ அது அஞ்சு சவரனா? “,என்று திகைக்க,

“அம்மா அது “,என்று இழுத்தான்.

அவன் பார்வையே அவன் என்ன பொய் சொல்லலாம் என்று அலைபாய்வதை உணர்த்த,

“ஹர்ஷா.. உண்மையை மட்டும் சொல்லு “,என்று அதட்டினாள்.

“அது அபி அக்கா கல்யாணத்துல ஒரு பிரச்சனை. அதான் குடுத்தேன். அவங்க அம்மா திருப்பி
கொடுத்தப்போ, வேண்டாம்ன்னு சொல்லிட்டேன்”,என்று தரையை பார்த்து சொன்னவன், தன்
தாய் தரப்போகும் அடிக்காக கண்களை இறுக மூடி காத்திருந்தான்.

��அகலாதே ஆருயிரே��
��30��

தன் கன்னம் கண்டிப்பாக கொவ்வை பழம் போல சிவக்கப் போகிறது என்று பயந்து கண்மூடி
காத்திருந்த ஹர்ஷா நேரம் சென்றும் ஒன்றும் நடக்காமல் இருக்க, மெல்ல ஒற்றை கண்ணை
திறந்து பார்த்து ஆச்சர்யமானான்.

லதா ஆழ்ந்த யோசனையில் இருந்தார்.

“மா…. இஸ் திஸ் யூ? ரியலி? இந்நேரம் நாலு வீடு கேக்குற படி திட்டி இருந்து ரெண்டு அடி
வச்சிருந்தா தானே அது நீ.. என்ன ஆச்சு? ஐயோ அப்பா.. அஞ்சு சவரன் போன தவிப்புல
அம்மாக்கு என்னவோ ஆயிடுச்சு. ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க.”, என்று வாயில் வந்தபடி புலம்ப,

“ச்சு.. ஹர்ஷா அமைதியா இரு. என்னை யோசிக்க விடு. “,என்றார் லதா.

“உலக அதிசயம் தான் போ.”,என்று அவருக்கு அருகில் அமர்ந்து முகவாயில் கைவைத்து
தாயையே பார்த்தான்.

“நீ செஞ்சது தப்பு இல்ல. ஆனாலும் தப்பு தான். “

“அம்மா.. குழப்பாம விஷயத்துக்கு வா.”

“நீ ஊதாரித்தனமா வீண் செலவு பண்ணல. அதுனால தப்பில்லை. ஆனா அவங்க திருப்பிக்
கொடுத்தப்ப வாங்கிட்டு வந்திருக்கணும். வாங்காம விட்டது தப்பு. நாம ஒன்னும் பெரிய ஜமீன்
குடும்பம் இல்ல ஹர்ஷா. நீ கேட்டதெல்லாம் நான் வாங்கி தந்ததால நீ வீட்டு கஷ்டம் தெரியாம
இருக்க. என் மேல தான் தப்பு கலா சொன்னது போல. உனக்கு நான் சொல்லி வளர்த்திருக்கணும்.

“என்ன ம்மா சொல்ற? யார் கலா?”

“என் பிரென்ட்.ஹர்ஷா நான் வேலைக்கு போகல, உங்க அப்பா ஒருத்தர் வருமானம் தான். ஏதோ
எனக்கு தோணின படி சீட்டு போட்டு, அங்கேயும் இங்கேயும் கடன் கொடுத்து வட்டி வாங்கி
காசை கொஞ்சம் பெருசு பண்ணினேன். அப்பயும் இழுத்துக்கோ பறிச்சுக்கோ ன்னு தான் வீட்டு
நிலைமை இருக்கும். நீ ஒரே பையன், மனசு சோர்ந்து போக கூடாதுன்னு எல்லாமே முடியுதோ
முடியலையோ செஞ்சுகிட்டே வந்தேன். உன அப்பாவுக்கு கூட வருத்தம் தான் இன்டக
விஷயத்துல. ஆனா என்னால என் மகனோட சந்தோஷமான முகம் தவிர வேறு எதுவும் பெருசா
தெரியலை. நீ அந்த கல்யாணம் நடக்க நகை கொடுத்தவரை சரி தான். ஆனா அவங்களா அதை
திருப்பி தரும் போது வாங்கிட்டு வந்திருக்கணும்
அஞ்சு சவரன் கொஞ்சம் காசு இல்ல ஹர்ஷா. அதை வாங்க நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு
எனக்கு தான் தெரியும்.
இனிமே கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ.”

நடப்பது கனவா? நிஜமா? என்று குழம்பித் தவித்தான் ஹர்ஷா. தன் தாயின் இந்த மாற்றங்கள்
அவன் கனவிலும் நினையாதது.

அவன் அந்த அதிர்ச்சியில் இருக்க, அவன் செல்போன் ஒலியில் உலகுக்கு மீண்டு வந்தவன்,அதில்
இருந்த குறுஞ்செய்தி கண்டு உடை மாற்றிக்கொண்டு கிளம்பினான்.

ஆருஷி இப்போதெல்லாம் அபியை காண்கையில் ஸ்நேக சிரிப்பை உதிர்த்து விட்டு செல்ல,

அபிக்கு அவளைக் காணும் போதெல்லாம் உள்ளே ஒரு உணர்வு. அவனும் அதற்கு பெயர்
யோசித்துப்பார்த்தான்.  சத்தியமாக காதல் இல்லை என்று மனம் சொன்னது.

சகோதர பாசமா என்று ஆராய, அதற்கும் இல்லை. ரேகா, ஸ்வாதி(இடையில 2 எபில பெயர்
மாறிப்போச்சு ���� சாரி) மீது வராத உணர்வு, அவர்கள் செய்கைகளால் யார் மீதும் அது
தோன்றும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லாமல் போக,

ஆழ்ந்து யோசித்த அபிக்கு தொக்கி நின்றதெல்லாம் குழப்பம் மட்டுமே. ஆராயாமல் நட்போடு
கடப்போம் என்று அவன் முடிவுக்கு வர,

அன்று வந்த ஆருஷி, “ஜேம்ஸ் பாண்ட்.. உன்னை பார்க்கும் போதெல்லாம் என்னமோ ஹாப்பியா
இருக்கு. என்னோட பிரெண்ட் ஆகிடு.. சரியா. முக்கியமான விஷயம் இனிமே அந்த ரிஷி பய
முன்னாடி என்னை கிண்டல் பண்ணாதே.. அவன் ஊருக்கே ஒலிபரப்பு செய்யறான்.”,என்று
சிணுங்கலாக  சொல்ல,

மென்னகை புரிந்த அபி, “எனக்கும் தெரியல உன்னை பார்த்தா ஒரு நல்ல உணர்வு வருது.
நண்பர்களா இருப்போம்.”, என்று கை குலுக்க,

“ஆரூ”, என்ற குரல் காம்பவுண்ட்டுக்கு வெளியில் கேட்க, குரலில் இனிமையில் ஒரு கணம் சொக்கி
நின்ற அபிக்கு டாட்டா காட்டி விட்டு சென்றாள் ஆரூ.

சுயநினைவுக்கு வந்த அபி தன் முன்னால் நின்றவளை காணாது தேட, அதன் பின் வந்த
நாட்களும் அபியும் ஆருவும் சந்திக்கவில்லை.

அபிக்கு பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு வந்து விட, அவன் முழு நேரமும் படிப்பில் செலவு
செய்தான்.

நித்திலன் கடைக்கு வரவேண்டாம் என்று சொல்லி அவனை படிக்க சொல்ல, சங்கடமாக
உணர்ந்தாலும், தன் கண் முன் தெரியும் லட்சியம் அவனை முடிந்த வரை முழு முயற்சியும் செய்து
தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சி பெற உழைக்க வைத்தது.

ரிதுவும் ஆருவும் ப்ராக்டிக்கல், எழுத்து தேர்வு என்று தங்கள் பதினொன்றாம் வகுப்பின் விளிம்பில்
நிற்க,

அந்த ஆண்டு விடுமுறையை விழுங்கிக்கொண்டு அடுத்த ஆண்டு பாடத்திட்டங்கள் துவங்க, ரிது
தன் குறிக்கோளில் கவனமாக இருக்க, ஆருஷி, படிப்பு பாதி , வாலிபால் மீதி என்று இருந்தவள்,
சில நாட்களாக அடிக்கடி இரண்டுக்கும் இடையில் காணாமல் காணாமல் போனாள்.

ரிது கவனித்தாலும், ஆருஷி தெரியாமல் எதுவும் செய்யவில்லை என்று உணர்ந்தாள். அவள்
விருப்பம் அதுவென்றால் தான் அதில் தலையிடக் கூடாது என்ற முடிவுடன்,அன்று மாலை
வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த சிவா விஷ்ணு ஆலயத்திற்கு அழைத்துச் சென்றவள்,

“ஆரூ.. நீ கொஞ்ச நாளா தனியா தனியா எங்கயோ போற.”, என்று
பேசிக்கொண்டிருக்கும்போதே,

“அது வந்து ரிது, அப்படி ஒன்னும் இல்ல டி”, என்று வேகமாக சொல்ல,

“இரு நான் பேசி முடிச்சுக்கிறேன். நீ என் தோழி தான். ஆனால் அதுக்காக எல்லாத்தையும்
என்கிட்ட சொல்லணும்ன்னு அவசியம் இல்லை. உனக்குன்னு தனிப்பட்ட விஷயங்கள்
இருக்கலாம். தப்பே இல்ல. ஆனா உனக்கொரு  தோழியா நான் சொல்ல வேண்டியது ஒன்னு
இருக்கு. இது படிக்கிற வயசு. இப்போ மனசை நீ சிதற விட்டா கண்டிப்பா நாளைக்கு வாழ்க்கைல
முக்கியமான நேரத்துல ஐயோ அன்னைக்கு ஒழுங்கா படிச்சிருக்கலாம்ன்னு நீ கவலைப்பட
வேண்டி வரும். அதனால, என்ன இருந்தாலும், அதுக்கான நேரத்தை சரியா வகுத்து, உன்
படிப்பையும் பாரு. போன வாரம் வச்ச டெஸ்ட் எல்லாத்துலயும் மார்க் ரொம்ப கம்மி. இது
சரியான்னு யோசி. இன்னிக்கு படிச்சா நாளைக்கே நீ பில்கேட்ஸ் ஆய்டுவன்னு நான் சொல்லல.
ஆனா அதுக்கு இது தான் அஸ்திவாரம். புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன். வா போகலாம்.”, என்று
ஆருஷியை அழைத்துக்கொண்டு கிளம்ப,

அவள் இவ்வளவு நேரம் பேசிய பேச்சை  பக்கத்து தூணில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார்
சாந்தலட்சுமி. அவர் கண்களில் அவளை கண்டதும் ஒரு சந்தேக வெளிச்சம் வர, தன் பட்டன்
கைபேசியை எடுத்து, “என்னங்க, இங்க ஒரு பொண்ணை பார்த்தேன். நான் அவள் பின்னாடி

போய் யார்ன்னு பார்த்துட்டு சொல்றேன். நீங்க இங்க சிவா விஷ்ணு கோவிலுக்கு வந்துடுங்க.”,
என்று தன் கணவருக்கு தகவல் சொல்லிவிட்டு ஒரு ஆட்டோவில் இருவரையும் பின் தொடர்ந்தார்.

மனைவியின் பேச்சில் ஒன்றும் புரியாத கோமதிநாயகமும் அந்த பக்கம் அவ்வளவு பழக்கம்
இல்லாததால், சோமுவை அழைத்தார்.

“என்னப்பா?”

“இல்ல சோமு.. அம்மா இங்க சிவா விஷ்ணு கோவிலுக்கு வர சொன்னா. அதான் வழி தெரியல. நீ
கொஞ்சம் வந்து என்னை கூட்டிட்டு போறியா?இந்த ஊர்ல எல்லா ரோடும் ஒரே மாதிரி இருக்கு.”

“அப்பா நான் ஆபிஸ்ல இருக்கேன். இப்போ வர முடியாது. நீங்க அம்மா கூடவே
போயிருக்கலாமே.”

“அப்போ நான் தூங்கிட்டேன். அவ கிளம்பி போய்ட்டா. இப்போ யாரோ பொண்ணை பார்த்தேன்
இங்க வாங்கன்னு சொல்றா. ஒரு வேளை அது என் பால்ய நண்பன் ரங்கசாமி பொண்ணா
இருக்கலாம். அவளை தேடி தான் நாங்க இங்க வந்தோம்.”, என்றதும்,

“என்னது உங்க பிரென்ட் பொண்ணை தேடி வந்திங்களா? அதான் இத்தனை நாளா இங்கேயே
இருக்கீங்களா? சரி தேடின மாதிரியே இல்லையே.”

“அவன் சொன்ன அட்ரஸ்ல விசாரிச்சோம். அக்கம் பக்கம் கேட்டோம். அப்பறம் நான் பிரபல
கோவில் எல்லாம் போய் தேடுனேன்.” என்றார்.

“ஏம்பா, இதென்ன கிராமமா? ஒரு கோவிலா ரெண்டா? ஊர்ல சந்துக்கு மூணு கோவில் இருக்கு.
என்கிட்ட சொல்லி இருக்கலாமே பா?”

“நீயே ஆபிஸ் வீடுன்னு இருக்க. அதுவும் இல்லாம அந்த பொண்ணு இருபது வருஷம் முன்னால
வீட்டை விட்டு வந்த பொண்ணு. எப்படி தேடறது? அவன் மனசுல ஒரு ஆசை அவளை
பாக்கணும்ன்னு. அதான் நானும் உன்னோட இருந்த மாதிரி இருக்கும், அவன் பொண்ணை
தேடின மாதிரியும் இருக்குமேன்னு வந்தேன்.”

“சரி நான் லதா கிட்ட சொல்றேன். அவ உங்களை கூட்டிட்டு போவா.”

“லதாவா?”, என்று தயங்கினார் கோமதிநாயகம்.

“அப்பா அவ கண்டிப்பா செய்வா பா. “,என்று சொல்லிவிட்டாலும், உள்ளே சிறிய பயம்
இருக்கவே செய்தது.

லதாவை அழைத்து விஷயத்தை சொன்னதும், சற்று யோசித்தவள், “சரி ஆட்டோ வர சொல்லி
கூட்டிட்டு போறேன். ஆனா அடிக்கடி இப்படி பண்ண கூடாது.”, என்றாள்.

சோமுவுக்கே ஆச்சர்யம் லதாவின் பேச்சில். “சரிம்மா “,என்று மகிழ்ச்சியாக அவர் ஒத்துக்கொள்ள,

அடுத்த அரைமணியில் மாமனாரும், மருமகளும் சிவா விஷ்ணு கோவில் முன்னால் இருந்தனர்.

தன் மனைவியை போனில் அழைக்கவும், சாந்தலட்சுமி, “இங்க பக்கத்துல பாரதி நகர்னு ஒரு
இடம் இருக்கு, விசாரிச்சு வாங்க.”, என்று சொல்லி வைத்து விட்டார்.

தயங்கியபடி அவர் லதாவிடம் சொல்ல, லதாவின் நெற்றியில் யோசனை ரேகைகள். “அங்கயா?”,
என்று கேட்டுவிட்டு, ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தனர் இருவரும்.

லதா, தன் தோழிக்கு அழைத்தவள், “நீ உன் வீடு எங்கன்னு சொன்ன?”, என்றதும்,

“பாரதி நகர் மூணாவது தெரு லதா “,என்றார் அவள் தோழி.

“கொஞ்ச நேரத்துல உன்னை பார்க்க வரலாமா? “,என்று தயங்கியே லதா கேட்க,

“அடி வாங்க போற, இதெல்லாம் கேக்கணுமா? சீக்கிரம் வா. நான் வாசல்ல நிக்கறேன்.”, என்று
அவள் பூரிப்புடன் சொல்ல,

“சரி “,என்ற லதா. “மாமா என் பிரென்ட் வீடு இங்க தான் உங்க வேலை எப்போ முடியும். நான்
அவளை பார்த்துட்டு வந்துடவா?”, என்றாள்.

“எனக்கே எங்க போறேன். ஏன் போறேன்னு தெரியாதே மா. உங்க அத்தையை பார்த்த தான்
தெரியும். “,என்று நிதானமாக சொன்னவர், “அதோ அங்க நிக்கிறா பாரு சாந்தி.”,என்றதும்
ஆட்டோ அவரை ஒட்டி நின்றது.

அவர் மருமகளை எதிர்பார்த்திருக்கவில்லை. “என்னங்க அந்த மூணாவது தெருவுக்குள்ள தான்
அந்த பொண்ணு போச்சு. ஆட்டோ திரும்பறதுக்குள்ள எந்த வீட்டுக்குள்ள போச்சுன்னு
தெரியல.”,என்று சோர்ந்தவராக சொன்னார்.

அடுத்து என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க, லதா, “இங்க என் பிரென்ட் வீடு இருக்கு.
அங்க போகலாம். அவ இந்த ஏரியா தானே, நீங்க பார்த்த பொண்ணோட அடையாளம் சொல்லி
கேட்டா, எந்த வீடுன்னு சொல்லப்போறா.”என்றதும்,

இருவர் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி அலை அடித்தது. மூவரும் லதாவின் தோழி வீட்டிற்கு செல்ல,

வாசலில் நின்று வரவேற்றார் லதாவின் தோழி சசிகலா.

2 thoughts on “அகலாதே ஆருயிரே-25-30”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *