Skip to content
Home » அகலாதே ஆருயிரே-31-35

அகலாதே ஆருயிரே-31-35

��அகலாதே ஆருயிரே��
��31��

அவரை கண்ட பெரியவர்கள் இருவர் கண்ணும் மின்னி மறைய, அவர்களை மகிழ்ச்சியோடு
வரவேற்றார் சசி.

“இது என் மாமனார் மாமியார் கலா”, என்று லதா அறிமுகம் செய்ததும், கரம் குவித்து
வணங்கினாள் சசி. அவள் பின்னொடு வந்து வணக்கம் வைத்த ரிதுவை கண்டதும் சாந்தலட்சுமி
எழுந்து வந்து உச்சி முகர்ந்தார்.

லதாவும் சசியும் புரியாமல் பார்க்க, “அப்படியே கனகா அக்கா ஜாடை இல்லங்க”, என்று
கணவரை பார்த்து சாந்தலட்சுமி கேட்டதும், கண்ணீர் ததும்பும் விழிகளுடன், “அதோ அந்த
படத்துல இருக்கற சின்ன பையனை பாரு அப்படியே ரங்கசாமி என்னோட சின்ன வயசுல
விளையாட வர்றது போல இருக்கு”, என்றார் கோமதி நாயகம்.

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, தன் தாய் தந்தை பெயரை கேட்டதும் ரத்த அழுத்தம் குறைந்த சசி
மயங்கி சரிந்தார்.

அனைவரும் கலவரமாக, ரிது அனைவரையும் சாந்தப்படுத்தி, அமர வைத்து, தாயை படுக்க
வைத்தவள், அவருக்கு உப்பும் சக்கரையும் கலந்த நீரை புகட்டி, முகம் துடைத்து, தந்தைக்கு
போன் செய்து வரவைத்தாள்.

அதற்குள் லதா மாமனாரையும் மாமியாரையும் பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டாள்.

“என்ன தான் பிரச்சனை உங்க ரெண்டு  பேருக்கும். என்ன பண்ணி வச்சிங்க, மூணு மாசமா
எனக்கு அவ பிரென்ட். இதுவரை அவள் இப்படி ஆனதே இல்ல. “,என்று சொல்ல,

“அம்மா ரங்கசாமி எனக்கு பால்ய நண்பன், மகளை பிரிஞ்சு அவன் எவ்ளோ கஷ்டப்படறான்
தெரியுமா? இந்த பொண்ணை தேடி தான் நாங்க வந்தோம்.”, என்று கோமதிநாயகம் கோபம் பாதி,
வருத்தம் மீதியுமாக சொல்ல,

“வணக்கம் ஐயா”, என்று உள்ளே வந்தார் நாராயணன்.

அவரை கண்டதும், லதா எழுந்துகொள்ள, கோமதி நாயகம் சற்றே அவரை அளவிடும் பார்வை
பார்த்தார்.

“என்ன பொண்ணை கூட்டிட்டு போனதோட சரி அப்பறம் ஒரு பேச்சுக்கு கூட வரலையேன்னு
தானே பாக்கறீங்க?”, என்று அவர் மனதை சரியாக படித்து சொன்னார் நாராயணன்.

“போன வாரம் என் மாமனாருக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை. ரமணா நர்சிங் ஹோம்ல
சேர்த்து ரெண்டு நாள் கழிச்சு வீட்டுக்கு போனார். இன்னிக்கு எப்பவும் போல பிரதோஷ
பூஜைக்கு கோவிலுக்கு போய்ட்டார்.”, என்று நாராயணன் சொல்ல,

வியப்புடன் அவரை கண்டனர் கோமதி நாயகமும், சாந்தலட்சுமியும். அவரும் இன்று கோவிலுக்கு
வந்தது பிரதோஷ பூஜைக்கு தான்.

“என்ன அப்படி பார்க்கறீங்க?  நான் தள்ளி இருக்கலாம், ஆனா என் கடமையை சரியா
செஞ்சுக்கிட்டு தான் இருக்கேன். அவங்களுக்கு உதவி தேவைப்படும் போதெல்லாம் நான்
மறைமுகமா செஞ்சுட்டு தான் இருக்கேன். சசி மனசளவுல ரொம்ப உடைஞ்சு போய்ட்டா, எங்க
கல்யாணம் நடந்தது ஒரு விபத்து. அவள் தேறி வந்து நாங்க வாழ ஆரம்பிச்சதெல்லாம் பெரிய
கதை. நீங்க கண்டிப்பா என் மாமனார் விஷயமா தான் வந்திருக்கணும். என் பொண்ணு சொன்னா
நீங்க அவங்க ரெண்டு பேர் பத்தி பேசினதா.”, என்று எல்லா கேள்விகளுக்கும் விடையோடு நின்ற
நாராயணனை பெருமையோடு பார்த்தார் கோமதிநாயகம்.

“நீங்க தப்பு பண்ணிட்டீங்க தம்பி, வந்திருக்கணும் நீங்க முன்னாடியே. அப்படி இருந்திருந்தா
இந்நேரம் இவ்ளோ பிரச்சனை இல்லை.”, என்று சொல்ல,

“எல்லாருக்கும் ஒரு கோணம் இருக்கும். நீங்க உங்க நண்பர் கோணத்தில் பார்க்கிறீங்க நான் என்
மனைவி கோணத்தில் பார்க்கிறேன். அவ்வளவு தான் வித்தியாசம்.”, என்றதும் அசந்தே
போய்விட்டார் அவர்.

“சரி இருங்க ஐயா. நான் சசியை பார்த்துட்டு வரேன்”, என்று அறைக்குள் சென்றதும்,மீண்டும்
லதா மாமியாரை துளைக்க ஆரம்பித்தாள்.

அவர் சசிகலாவின் பெற்றோர் பற்றி சொல்லவும், சரி மகளை பெற்றோரோடு சேர்க்க
வந்திருக்கின்றனர் என்று கொஞ்சம் சமாதானம் ஆனாள் லதா. ஆனாலும் தன் தோழி உடல்நலம்
பாதித்த வருத்தம் அதில் அதிகம் இருந்தது.

தன் மருமகளை பெருமையாக பார்த்தார் சாந்தலட்சுமி.

சசி மெல்ல தெளிந்தவள், கோமதிநாயகத்திடம், “அப்பா எப்படி இருக்காங்க. இவர் அப்பா
அம்மாவை கவனிச்சிட்டு தான் இருக்கார். எனக்கு அவங்களை பார்க்க இஷ்டம் இல்ல. அதான் 
நான் எதுவும் கேட்டுக்கல. தப்பா நினைக்க வேண்டாம். என்னை பற்றி நீங்க சொல்ல
வேண்டாம்.”,என்று அவள் வேண்டிக்கொண்டதும் புரியாமல் பார்த்தனர் அனைவரும்.

ஆனால் நாராயணன் மட்டும், அவள் தோளை ஆறுதலாக பற்றி,”ஒரு தரம் பார்க்கலாமே.” என்று
கேட்க,

“வேண்டாம் நரேன். நான் தாங்க மாட்டேன்.”, என்றார்.

அவரின் உடல்நிலை மற்றும் மனநிலையை கருத்தில் கொண்டு இப்போதைக்கு ரங்கசாமிக்கு
எதுவும் சொல்லவதில்லை என்ற உறுதி கொடுத்தார் கோமதிநாயகம்.

ரிது அவர்கள் மூவரும் அருந்த காபி கலந்து எடுத்துவர, அவளைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்.
லதாவின் மனதில் ரிது ஆழமாக பதிந்தாள். அவளின் பொறுமையும், அழகும், தைரியமும் சசியின்
வளர்ப்பை பறைசாற்ற, தானும் ஆரம்பம் முதல் இதே போல ஹர்ஷாவை வளர்த்திருக்க
வேண்டுமோ என்று கொஞ்சம் மனவருத்தம் கொண்டார்.

ஆனால் காலம் கடந்து விட்டது. இனி ஹர்ஷாவை நல்வழிப்படுத்தும் முறையை பார்க்கலாம்
என்று தன்னை தானே தேற்றிக்கொண்டாள்.

“இப்போ லீவ் இல்லையா?”, என்ற சாந்தலட்சுமியின் கேள்விக்கு சிரித்தபடி, “இல்ல பாட்டி ப்ளஸ்
டூ வகுப்பு ஆரம்பிச்சாச்சு.”, என்றாள்.

“எங்க ஹர்ஷாக்கு பரீட்சை முடிஞ்சு போச்சு. ஐயா ஜாலியா இருக்கார். “,என்று கோமதிநாயகம்
சொன்னதும்,நாராயணன், “இப்போ தான் ஐயா மகிழ்ச்சியா இருக்க முடியும், அப்பறம் அவங்க
வாழ்க்கை ஓடுதளத்துல ஓடும் வீரன் போல, பொருளாதாரத்தை துரத்தி ஓடணும் பாருங்க.”,
என்றதும்,

“உண்மைப்பா. நாம எல்லாம் என்ன படிச்சாலும் கிடைச்ச வேலை செஞ்சோம், நிலம் நீச்சு
பார்த்தோம். இந்த கால பிள்ளைகள் அப்படி இல்லை.”, என்று வருத்தமாக பேச,

ரிது அவரின் கரம் பற்றி,” எல்லாரும் படிக்கும்போதே இப்படி ஆகணும், அப்படி ஆகணும்ன்னு
குறிக்கோளோட இருக்க ஆரம்பிச்சிடறோம் தாத்தா. ஏமாற்றத்தை தாங்க முடியல. அது
சமூகத்தின் மேல கோபமா சிலருக்கு வளருது, விட்டேற்றியா மாற்றுது, சிலர் நினைச்சதை
அடைஞ்ச மமதை வருது. எல்லாம் ஒரு புள்ளியில் சரியா போகும் தாத்தா. வாழ்க்கை அழகா
மாறும். உங்க பேரனுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும். “,என்று சொன்னதும்.

அவளை அணைத்துக் கொண்டார் லதா. மூவரும் சற்று நேரம் பேசிவிட்டு விடை பெற்று செல்ல,
அவ்வளவு நேரம் ஆரூவோடு ஸ்ரவன் வீட்டில் விளையாடி விட்டு உள்ளே நுழைந்தான் ரிஷி.

“யார் மா அது? நீ ஏன் சோர்வா இருக்க? என்ன நைனா அம்மாவை வம்பு பண்ணுனீங்களா? நான்
ஒரு கராத்தே வீரன் தெரியுமா? எங்க அம்மாவை வம்புழுத்தா அவ்ளோ தான் நைனா.. “,என்று
கராத்தே வீரன் போல, கை கால்களை ஆட்ட,

அவன் தலையில் குட்டிய ஆரு,”டேய். கொஞ்சம் இரு டா. என்னன்னே தெரியாம இவ்ளோ
பில்டப் தேவையா?”, என்றதும் இருவருக்குள்ளும் போர் மூண்டது. அதன் பின் வந்தவர்கள்
பற்றியோ சசி பற்றியோ இருவரும் கவலைப்பட வில்லை.

அபிக்கும் ஹர்ஷாவுக்கும் பரீட்சை முடிவுகள் வரும் நாள் நெருங்க, அபி எப்போதும் போல,
வேலை, அம்மா, நித்திலனின் அவுட் ஹவுஸ் என்று அமைதியாக சென்றது அவன் வாழ்க்கை.

ஆனால் ஹர்ஷா மனம் தான் ஓயாமல் அலைப்பாய்ந்தது. அவன் ஆசைப்படி பெரிய பொறியியல்
கல்லூரியில் சேர்ந்து அவனின் விருப்பப் பாடமான ரோபாட்டிக்ஸ் படிக்க அவனுக்கு அவன்
வாங்கப்போகும் மதிப்பெண் போதுமா என்று கேள்வி குடைந்தது.

ஒரு வருடம் ஊர்சுற்றி, மொபைலில் போட்டி போட்டு கேம் விளையாடிய போது வராத பயம், அபி
படிப்பின் மகத்துவம் கூறி வராத பொறுப்பு, இன்று இன்னும் ஒரு வாரத்தில் தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்படும் என்ற செய்தி கேட்டு, குருதிக்குள் சூடேறி அவள் தலை சுழன்றது.

அபி அவன் அடுத்த கட்ட வேலையில் கவனமானான். அருகில் உள்ள நல்ல கல்லூரிகள் பற்றி
விசாரித்து அறிந்தான்.அவனுக்கு பொறியியலில் ஆர்வம் இல்லை. அவன் எதிர்பார்த்த படிப்பு
வேறு. ஆனால் முடிவுகளை எதிர்பார்த்து அவன் காத்திருக்க, அந்த நாளும் இனிதே விடிந்தது.

மேல்நிலை தேர்வு எழுதிய அனைவருமே பரபரப்போடு சுற்றிச் சுழல, எந்த வித பதற்றமும் இன்றி
அபினவ், காலையில் உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்களை இன்முகமாக
கவனித்துக்கொண்டு இருந்தான்.

அவனின் நிதானமான செயல்பாடுகளை கவனித்த நித்திலனுக்கு ஒரே ஆச்சர்யம். சங்கரியும்
அன்று சாதாரணமாகவே பணிகளில் ஈடுபட, அவரை அழைத்த நித்திலன், “என்னம்மா இன்னும்
கொஞ்ச நேரத்துல ரிசல்ட். அம்மாவும் பையனும் ரொம்ப சாந்தமா இருக்கிங்களே?”, என்றதும்.

“அபியை பற்றி என்ன கவலை, அவனுக்கு தெரியும் தம்பி என்ன பண்ணனும்ன்னு அவன் மத்த
பசங்க போல இல்ல.”, என்றதும் ,’உண்மை தானே’, என்று அவரும் உள்ளுக்குள்
சொல்லிக்கொண்டார்.

பலரை கவலையில் ஆழ்த்திய அந்த முடிவுகளில், அபி மாநிலத்தில் இரண்டாம் மாணவனாக வர,
ஒரே கொண்டாட்டம் தான் உணவகத்தில். ஹர்ஷா கேள்விப்பட்டு உடனே போன் செய்து
அவனை வாழ்த்தினான்.

“என்ன பங்கு? அமுக்கமா இருந்தே ஸ்டேட் செகண்ட் வந்துட்ட..”, என்று கிண்டலடிக்க,

“அவனோ, எருமை நீ எவ்ளோ மார்க் டா. உன் ரிஜிஸ்டர் நம்பர் சொல்லு. நானே பார்க்கிறேன்.”,
என்றவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய ஹர்ஷா தன் எண்ணை அவனுக்கு
சொல்லிவிட்டு போனை வைத்தான்.

சுரேஷின் போனில் அபி பேசிவிட்டு, அவனிடம் கொடுத்ததும், “அவன் எவ்ளோ மார்க் அபி”,
என்ற கேள்விக்கு உதட்டை பிதுக்கி,” நம்பர் தந்திருக்கான் அண்ணா. இனி தான் பார்க்கணும்.”

“ஏன் அந்த துரை சொல்ல மாட்டாரா?”,என்று கேலியாக கேட்டதும்,

“அவன் நினைச்ச மார்க் வந்திருக்காது அண்ணா. அதான் கொஞ்சம் துவண்டு இருப்பான். இருங்க
அவன் எவ்ளோன்னு பார்க்கலாம். “, என்று அதே செல்லில் அவன் பதிவெண்ணை போட்டு
பதிலுக்கு காத்திருந்த அபினவுக்கு பெருத்த அதிர்ச்சி.

��அகலாதே ஆருயிரே��
��32��

ஹர்ஷாவின் பதிவெண்ணை அழுத்திவிட்டு அவன் வாங்கி இருக்கும் மதிப்பெண் பட்டியலுக்காக
காத்திருந்த அபிக்கு ஒரு நொடி யுகமாக தெரிந்தது.

அவன் அறிந்த வரையில் ஹர்ஷா கொஞ்சம் சேட்டைகாரன் தான் என்றாலும் பொறுமைசாலி.
இல்லாவிட்டால் அபினவ் படும் கோபத்திற்கு என்றோ அவனை விட்டு சென்றிருப்பான்.

அவன் எண்ணச் சுழலில் சிக்கிக்கொண்டிருந்த அபிக்கு, “அடப்பாவி”, என்ற சுரேஷின் குரல் இந்த
கணத்திருக்கு இழுத்துவர, அவனும் சுரேஷின் போனில் தெரிந்த ஹர்ஷாவின் மதிப்பெண்களை
பார்த்து பெருத்த அதிர்ச்சி அடைந்தான்.

அபிக்கு ஹர்ஷாவின் ஆசை தெரியும் ஆனால் அவன் வாங்கியிருக்கும் மதிப்பெண்ணைப்
பார்க்கையில் அவன் ஆசை கனாவாகத் தான் போகும் என்ற நிதர்சனம் தலையில் அடித்தது
போல புரிந்தது.

கணினி அறிவியலில் நூற்றித் தொண்ணுற்றி ஏழு எடுத்த அந்த கிறுக்கன், இயற்பியலில் நூற்றி
அம்பது தான் வாங்கி இருந்தான். வேதியலில் நூற்றி எழுபதும் கணிதத்தில் நூற்றி எண்பத்தி
இரண்டும் வாங்கிய அந்த ஹர்ஷா மட்டும் கையில் கிடைத்தால் அபி அவனை கன்னத்தில் நாலு
அறை விடும் முடிவுக்கே போய்விட்டான்.

அவன் ஆசைப்படும் ரோபாட்டிக்ஸ் படிக்க அவனுக்கு இயற்பியலும், கணிதமும் கூடவே கணினி
அறிவியல் மதிப்பெண்கள் தான் முக்கியமானவை இவன் வாங்கிய மதிப்பெண் கொண்டு
கண்டிப்பாக அவன் ஆசைப்பட்ட பெரிய கல்வி இயக்கத்திலோ  கவுன்சிலிங் என்னும்
கலந்தாய்வில் நல்ல கல்லூரியோ ஏன் இந்த விருப்ப பாடம் கிடைக்காமலே போகலாம் என்று
அபிக்கு தோன்றவும்,

ஹர்ஷாவுக்கு போன் செய்தான். அவன் எடுத்தும் அமைதி காக்க, “என்ன டா செஞ்சு வச்சிருக்க?
எங்க இருக்க? படிச்சு படிச்சு சொன்னேனே டா, தூக்கத்துல வர்றது இல்ல கனவு, நம்மளை
தூங்காம முன்னேறி கொண்டு போறதுன்னு, சேட்டை பண்ணிகிட்டு, கிரிக்கெட்
விளையாடிக்கிட்டு சுத்துனியே இப்ப பாரு. எப்படிடா ரோபாட்டிக்ஸ் கிடைக்கும். ஆசைப்பட்டா
போதுமா? அதுக்கேத்த உழைப்பைப் போட வேண்டாமா? உனக்கென்ன படிப்பா வராம
இருந்தது. எருமை. திமிரெடுத்து இப்படி கோட்டை விட்டுட்டு நிக்கிற? என்ன பண்ண போற?
ச்ச.. போ ஹர்ஷா. எங்க இருக்க நான் உன்னை உடனே பார்க்கணும்.”, என்று சொல்ல,

“வீட்ல. ஆனா இப்போ என்னால உன்னை பார்க்க முடியாது அபி. நாளைக்கு நானே உன்னை
பார்க்க வரேன்.”

“இல்ல. நான் இப்பவே வரேன்.”, என்று கிளம்பியவனால் வாயிலை கூட தாண்ட முடியவில்லை.
மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்தவனை சும்மா விடுவார்களா? பள்ளியில் வாகனம் அனுப்பி
அவனை அழைத்துவர சொன்னார்கள் என்று வந்து நிற்க,

வேறு வழி இல்லாமல் அவர்களோடு சென்றவன், அன்று முழுவதும் உள்ளூர் தொலைக்காட்சி
முதல் உலக தொலைக்காட்சி வரை பேட்டி கொடுத்து ஓய்ந்து போனான்.

முதல் இடம் பிடித்த பெண்ணை விட ஒரு மதிப்பெண் மட்டுமே அபினவ் வித்தியாசப்பட்டு
இருந்தான். பள்ளியில் அவனை தலையில் வைத்து கொண்டாடினர். அவனை ஸ்பான்சர் செய்து
படிக்க வைத்தது  வீண் போகவில்லை என்று பள்ளி நிர்வாகம் பெருமை கொண்டது. அவனை
வைத்து விளம்பரமும் தேடிக்கொண்டது.

அன்று பேட்டி எடுக்கும் போது ஒருவர், அவன் அடுத்து என்ன செய்ய விரும்புகிறான் என்ற
கேள்வியை தொடுக்க, நிதானமான அபி,

“ஆரம்பத்தில் என் கனவுகள் வேறாக இருந்தது. ஆனால் இப்போ அப்படி இல்லை. என் குடும்ப
சூழ்நிலை, வாழ்வியல் எல்லாம் பார்த்து தான் நான் முடிவெடுக்க முடியும். அதனால் தேர்வு
முடிவுகள் வந்த பின் செய்து கொள்ளலாம் என்று இருந்தேன்.”, என்று சொல்ல,

“அப்படி என்ன கனவுகள் வைத்திருந்தீர்கள் சொல்ல முடியுமா?”, என்று ஒரு பெண் மைக்கை
முன்னால் நீட்ட,

“ஆரம்பத்தில் ஐ.பி.எஸ். தான் என் குறிக்கோள். ஆனால் இன்று அப்படி இல்லை. என்
எண்ணத்தில் இப்போது வேறு தான் உள்ளது.”, என்று அழகாக சொல்லவும்,

“இப்போ மாநிலத்தில் இரண்டாம் மாணவன், நீங்க உங்க லட்சியத்தை சொன்னா கண்டிப்பா
உங்களுக்கு உதவி செய்ய நிறைய பேர் முன் வருவாங்க.”

“எனக்கு கட்டணம் கட்டி படிக்கிறதுல எந்த கஷ்டமும் இல்ல. நானே பகுதிநேர வேலை பார்த்து
படிச்சிப்பேன். எனக்கு இதே ஊர்ல படிக்கணும். யாரலையாவது இதுக்கு உதவ முடியுமான்னு
தெரியல. “,என்று சொல்ல,

“நீங்க உங்க ஆசையை சொல்லுங்க அதுக்கு அப்பறம் உதவ முடியுமான்னா பார்க்கலாம்.”, என்று
பள்ளி நிர்வாகம் சொல்ல,

சின்ன புன்சிரிப்போடு, “எனக்கு சட்டம் படிக்கணும். “,என்றான்.

அத்தனை பேருக்கும் ஆச்சர்யம். “எனக்கு சென்னை சட்ட கல்லூரியில் இடம் கிடைத்தால் நல்லா
இருக்கும்.”, என்றதும்,

“கண்டிப்பாக நாங்களே உதவி செய்கிறோம்.”, என்று பள்ளி தாளாளர் சொல்ல, அபி மகிழ்ச்சியின்
வெளிப்பாடாக ஒரு சிரிப்பை மட்டுமே உதிர்த்தான்.

தேவை இல்லாத நெளிவுகள் இல்லாமல், நேர்பட பேசிய அபியின் பேட்டி அத்தனை
தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அவனை கண்ட ஆருஷிக்கு ஒரே மகிழ்ச்சி.

ரிதுக்கு போன் செய்து, “என் பிரென்ட் ஸ்டேட் செகண்ட் டி”, என்று பெருமை பேச, அவளோ,

“அப்படியா சந்தோசம் ஆரூ. வாழ்த்துக்கள் சொல்லிடு. “,என்று போனை வைத்துவிட்டாள்.

சில நாட்களாக ரிதுவின் போக்கு பட்டும் படாமலும் இருக்க, ஆருஷிக்கு மிகுந்த வருத்தம் தான்.
தான் மறைத்து செய்த செய்கையால் தன்னை ஒதுக்கி விட்டாளோ என்று உள்ளே
உறுத்தினாலும், கேட்ட போது, “அப்படி ஒன்றும் இல்லை. நீ என் உயிர் டி”, என்று அணைக்கும்
ரிதுவை அவளால் வரவர புரிந்துகொள்ளவே முடியவில்லை.

இவளைவிட ரிஷி தான் ரொம்பவே நொந்து போனான். ஆருஷிக்கு அடிக்கடி போன் செய்து,
“அக்கா இங்க வரியா? ரிது விளையாட வரவே மாட்டேன்கிறா. நீயாச்சும் வாயேன்.”, என்று
புலம்புவான்.

அவனும் ஆருவும் எவ்வளவு வற்புறுத்தி அழைத்தாலும் புத்தகத்தை விட்டு கண்ணை நகர்த்தாமல்,
“எனக்கு படிக்கணும் ஆரூ. ஐ ஹேவ் ஆன் ஆம்பிஷன். அண்ட் ஐ ஹேவ் டூ அசீவ் இட்.”, என்று
அழுத்தமாக சொல்லிவிடுவாள்.

பனிரெண்டாம் வகுப்பு பாடம் ஆரம்பித்து இருந்தாலும், ரிது எப்பொழுதும் கையில்
வைத்திருப்பது, ஆப்டிடூட், என்சைக்ளோபிடியா இப்படி புத்தகங்களை தான். மேலும் அவள் பல
நூல்களை பள்ளி நூலகத்தில் இருந்தும், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்தும் எடுத்து
படித்து வந்தாள்.

அவள் பாடம் அறிவியலாக இருந்தாலும், அவள் பொருளாதாரம், சட்டம், பொதுவுடைமை,
அரசியல் என்று தான் அறிவுக் கண்களை விசாலப் படுத்திக்கொண்டு இருந்தாள்.

அவளின் இந்த செய்கைகள் எதனால் என்று தெரிந்த சசியும் நாராயணனும் அவளும் பெரும்
துணையாக நின்றனர்.

அவளுக்கு வேண்டிய புத்தகங்கள் மட்டும் இன்றி இணைய வழியில் அவளுக்கு தேவையான
செய்திகள், காட்சிகள், டாகுமென்டரி என்று நாராயணன் உதவ, சசி அவளை வீட்டு வேலை
எதிலும் நுழையாமல் அவள் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் உறுதுணையாக அருகில்
இருந்தார்.

அன்று லதா போன் செய்து சொன்ன சில விஷயங்கள் ஏனோ சசிக்கு சற்றும் பிடித்தமில்லாமல்
போக,

“லதா சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இப்போ நீ எடுத்திருக்கற முடிவு தப்பு. தப்புன்னு
சொல்றதை விட தேவை இல்லாத செயல். இதனால பின்னாளில் நீ தான் பாதிக்கப்படுவ.”, என்று
சொல்ல,

லதாவோ, “இல்ல கலா.எனக்கு இதை தவிர வேறு வழி தெரியல.”, என்று சொல்லிவிட்டு போனை
வைத்தாள்.

சசி ஒரு பெருமூச்சோடு போனை வைத்துவிட்டு, படிக்கும் தன் மகளுக்கு சூடான தேநீர் கலந்து
எடுத்துபோனார்.

அபிக்கு உள்ளம் கொதித்துக் கொண்டு இருந்தது. அவன் சற்று நேரத்திற்கு முன் ஹர்ஷாவை
சந்திக்க வரக் கேட்டு போன் செய்ய, அவன் சொன்ன பதிலையும் அவன் செய்யப்போகும்
காரியத்தையும் கேட்ட அபிக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

‘எந்த மடையனும் செய்யாத வேலையை அவனும் அவன் அன்னையும் செய்துகொண்டு
இருக்கிறார்கள்’, என்று அவனுக்கு தோன்றியது.

அவன் மனம் ஒரு நொடி தன் அன்னையை நினைத்தது. நேற்றைய பொழுதில் அப்பா
கண்ணீரோடு அவனை பார்க்க, ஆனால் சங்கரி மனம் கொள்ளா பூரிப்புடன் மகனை அணைத்து
உச்சி முகர்ந்து, அவனுக்கு பிடித்த இனிப்பை செய்து வழங்கி அவனின் கைப்பற்றியே
நின்றிருந்தார்.

ஆனால் துளி கூட பதற்றமோ, படப்படப்போ இன்றி அம்மாவின் அமர்த்தலான செய்கைகள்
என்றும் போல நேற்றும் அவனின் மனதில் ஆச்சரியமாகவும் மெச்சுதலாகவும் காணப்பட்டது.

ராகவேந்தருக்கு மகனிடம் பேச தயக்கம்,அதுவும் சில மாதங்களாக மகன் காட்டும் ஒதுக்கம்,
வீட்டில் தங்காமல் வேலையிடத்தில் தங்குவது என்று அவர் மனதில் பல கவலைகள் இருந்தாலும்,
மகன் வெற்றி பெற்றதும் அவனை அணைத்துக்கொண்டால் தன்னை போல ஒரு சுயநலவாதி
இல்லை என்று எண்ணி,அவனை வாழ்த்திவிட்டு சற்று தள்ளி நின்று கொண்டார்.

அவரும் செய்கை அபிக்கு சற்று வியப்பு தான் அவன் தந்தை தன்னை வாழ்த்துவார் என்றே
எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அளவுக்கு மனதால் தந்தையை விட்டு விலகியே நின்றான் அபி.

ரேகாவுக்கு தந்தை இப்போதும் அபியை நெருங்காதது உள்ளே மகிழ்ச்சியை கொடுக்க,
விக்னேஷும் அவன் சகலை மகேஷும் தான் தங்களுக்குள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டனர்.

“இவன் வயசுல நான் பண்ணாத சேட்டை இல்ல சகல. ஆனா எங்கப்பா என்னை தங்குவார்.
இப்போ கல்யாணத்துக்கு சீர் வாங்க வேண்டாம்ன்னு நான் சொன்னேன்
ஆனா அவர் அதையும் என்னோட வேலைக்கு தான் வாங்கினார். அப்பா சொல்லி மாமனார்
காசுல வேலைக்கு போற நான் எங்க? படிக்கும்போதே வேலைக்கு போய் சம்பாதிச்சு, அக்கா
கல்யாணத்துக்கு காசு குடுத்த இவன் எங்க? ஏன் சகல நம்ம மாமனார் இப்படி இருக்கார். எனக்கு
ஸ்வாதி மேல காதல் எல்லாம் இல்லை. நல்ல பொண்ணுன்னு ஒரு அன்பு தான் இருக்கு. நிறைய
விஷயம் அவ செய்யறது பிடிக்கல. ஆனாலும் அவளை என்னால கோவிச்சுக்க முடியல. கொஞ்ச
நாள் முன்னாடி வந்த பொண்டாட்டிக்கு நானே இவ்ளோ யோசிக்கிறேனே, இந்த மாமனார்
இவ்ளோ நல்ல பையனை எப்படி இப்படி நடத்துறார்.”, என்று மகேஷ் விக்னேஷிடம் கேட்க,

“ரேகாவை பார்க்கையில் ஸ்வாதி நல்ல பொண்ணு தான். ரேகா அப்பா செல்லத்தால தான்
இப்படி இருக்கா. நானும் அங்க அனுப்ப வேண்டாம்ன்னு பாக்கறேன். ஆனா அத்தை
முகத்துக்காக அனுப்ப வேண்டி இருக்கு. எனக்கும் இந்த அபியை பார்க்க ஆச்சர்யமாதான் இருக்கு
சகல. அவனுக்காக வாங்கின பைக்கை எனக்கு கல்யாணத்துக்காக கொடுத்திருக்கான். எங்க
வீட்ல கேட்டதே எனக்கு தெரியாது. பின்னாடி தெரிஞ்சு அவனை சத்தம் போட்டு பைக்கை
கொடுத்தப்போ அவன் சொன்னான். உங்களுக்கு தெரியாம உங்க வீட்ல ஒரு விஷயம்
நடக்குதுன்னா உங்களுக்கு அங்க என்ன மரியாதை மாமா ன்னு. அப்போ அபி பத்தாவது பரீட்சை
தான் எழுதி இருந்தான். யோசி சகல. அப்போவே அவன் அப்படி”, என்று தான் மைத்துனனின்
பெருமையை சகலையிடம் சொல்லிக்கொண்டிருந்தான் விக்னேஷ்.

அவர்கள் யாரை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்களோ அவன் ஹர்ஷா கையில் கிடைத்தால்
அவன் செய்த செயலுக்காக முகத்தில் இரண்டு குத்து விட காத்துகொண்டு இருந்தான், அவன்
வீட்டு வாசலில்,

“உள்ள வா அபி”, என்று சாந்தலட்சுமி அழைக்க,

“இருக்கட்டும் பாட்டிம்மா. நான் வரல. அவன் வரட்டும் எனக்கு தாங்க முடியல. “,என்று பொறிந்த
அவனை, கைகள் பற்றிய கோமதி நாயகம்,

“அவன் கனவுக்குன்னு சொல்லும் போது நாங்க குறுக்க நிக்க முடியுமா தம்பி. நீ அவன் நண்பன்
தானே. இதுக்கு சந்தோஷம் தானே படணும் லதா மாதிரி.”, என்று கேட்டதும்,

“நம்ம கனவை நாம அடுத்தவங்க ரத்தத்தை கொண்டு நிறைவேற்றிக்கொள்ள கூடாது தாத்தா.
நல்ல நண்பனுக்கு அழகு, அவன் வழி தவறும்போது திருத்துவது. கூட சேர்ந்து ஜால்ரா போடுவது
இல்ல. “,என்று எரிச்சல் மண்ட சொன்னான்.

“சரி கோபத்தை விடுப்பா.”, என்று சாந்தலட்சுமி மீண்டும் சமாதானத்துக்கு அழைக்க, அவனோ,

“நீங்க எப்படி ஒத்துக்கலாம். இப்போ எங்க போயிருக்காங்கன்னு சொல்லுங்க பாட்டிம்மா நான்
போய் பாக்கறேன்.”, என்று தவித்தான்.

“எல்லாம் கைமீறி போயாச்சு தம்பி. விடு”, என்று கொஞ்சம் விரக்தியாக சொன்னார்
கோமதிநாயகம்.

அவரின் விரக்தி அபியின் மனதை சுட்டது. நண்பன் மீது அளவில்லா கோபம் கொள்ள வைத்தது.

��அகலாதே ஆருயிரே��
��33��

வாசலில் காத்திருந்த அபியின் மனம் தன் நண்பனின் செயலால் வெறுப்புற்று இருந்தது.

சொன்ன போதெல்லாம் சும்மா இருந்துவிட்டு இன்று தனக்கு வேண்டும் காலம் வரும்போது
தன்னை சார்ந்தவர்களை அவன் படுத்துவது அபிக்கு நியாயமாக படவில்லை.

அதுவும் கோமதிநாயகம் கண்களில் தெரியும் விரக்தி. அவனால் அதை தாங்கிக்கொண்டு, தன்
நண்பனின் செயலை ஏற்காவே முடியவில்லை.

யாரோ ஒரு அமைச்சரிடம் சிபாரிசு கடிதம் பெற்று சுயநிதி கல்லூரி ஒன்றில் அவன் விருப்பப்
பாடமான இளங்கலை ரோபோட்டிக்ஸ் பொறியியல் படிக்கப் போவதாக அவன் சொன்னதற்கே
அபிக்கு நேற்று கோபம் வந்தது.

இன்றானால் அந்த சுயநிதி கல்லூரிக்கு தரப்போகும் நிதியும், அமைச்சர் வழியில் தர வேண்டிய
பணத்திற்கும், தாத்தா பாட்டியின் வீட்டை அடமானமாக வைத்து படிக்க போகிறான் என்றதும்
அபியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சாந்தலட்சுமி கூட ஓரளவு நிதானமாக தெரிந்தார், ஆனால் கோமதிநாயகம் கண்களில் தெரியும்
உணர்ச்சி போராட்டம் அபியின் மனதை வாட்டியது.

“நீங்க ஏன் பாட்டிம்மா ஒத்துகிட்டீங்க?”, என்று நூறாவது முறையாக கேட்ட அந்த பையனின்
அன்பை சாந்தலட்சுமியால் உணர முடிந்தது.

“இல்ல கண்ணு. எனக்கு ஒன்னும் இல்ல. இத்தனை நாள் இங்க ஒருத்தரை தேட தங்கி
இருந்தோம். இனிமே பேரனுக்காக தங்க வேண்டியது தான்.”

அவர் சொல்லிவிட்டார் எளிதாக. ஆனால் தாத்தாவால் இந்த ஊரின் ஜன நெரிசலையும்,
புகையையும் ஏற்று வாழ உள்ள சங்கடம் அவர் கண்களில் தெளிவாக தெரிந்தது. அதுவும் இனி
தங்களுக்கு இங்கே என்ன மரியாதை கிடைக்கும் என்ற எண்ணமும் அவர் மனதில் கவலைகளை
உண்டாக்க,

“விடு பா. பார்த்துக்கலாம்.”, என்று அபிக்காக சொன்னார்.

வெளியில் இருந்து அவனை பேசி பேசி உள்ளே அழைத்து வந்திருந்தனர். அவனுக்கு காபி
கொடுத்து, “நீ எத்தனை மார்க் வாங்கின? அடுத்து என்ன பண்ண போற?”, என்று பாட்டி கேட்க,

தன் மதிப்பெண்ணும், முடிவும் தெரிந்தால் பேரனை நினைத்து மனவருத்தம் கொள்வார்கள் என்று
நினைத்த அபி, “அவனை விட கொஞ்சம் கூட அவ்ளோ தான் பாட்டிம்மா. பக்கத்துல ஏதாவது
காலேஜ்ல சேரணும்.”, என்று அவன் சொல்லும்போதே, தாத்தா செய்தி சேனலில் இன்னும்
ஒளிபரப்பாகும் அவன் பேட்டியை காட்டினார்.(24 மணி நேரமும் நியூஸ் போட , போட்ட நியூஸ்
தானே திரும்பி திரும்பி போடறாங்க. அதனால லாஜிக் இடிக்காது.��)

அவனை பார்த்து ஒரு வெற்று புன்னகையை உதிர்த்தவர், “நீ ஜெயிச்சா அதுவும் எங்களுக்கு
சந்தோசம் தான். நீ மறைக்கறதால எதுவும் ஆகாது.”, என்று சொல்லிவிட்டு அவன் தலையில்
ஆசிர்வதிப்பது போல கை வைத்தவர், பின் எழுந்து உள் அறைக்கு சென்றார்.

சற்று நேரத்தில் ஹர்ஷா பெற்றோருடன் வீட்டிற்குள் நுழைந்தான். அவனும் லதாவும் சிரித்த
முகமாக வர, சோமு சோர்ந்து போய் வந்தார். அவர் மனதின் சோர்வு அப்பட்டமாக முகத்தில்
தெரிந்தது.

அபி தன் தந்தையோடு அவரை ஒத்துப் பார்த்தான். ‘மதிப்பெண் பட்டியல் வெளியாகி ஒரு நாள்
முடிந்த நிலையில், இந்த நொடிவரை அவன் கல்லூரி சேர்வது பற்றி ஒரு வார்த்தை பேசாத தன்
தந்தை எங்கே? தன் மனைவி மகன் செய்கை பிடிக்காமல் போனாலும் உறுதுணையாக அருகில்
நிற்கும் இவர் எங்கே? ‘

உள்ளே சென்று சோமுவுக்கு குடிக்க நீர் எடுத்து வந்தான், அவரிடம் நீட்டி அவரை ஆதரவாக
பார்த்தான். அதை வாங்கும்போது அவர் நன்றியாக அவனை நோக்கினார். அந்த நேரம் அவருக்கு
மிகவும் தேவையாக இருந்தது நீரும் ஒரு அனுசரணையான பார்வையுமே. அது இரண்டுமே

அபியிடம் கிடைக்க, நீரை பருக்கியவர், அவன் தோளில் தலை சாய்த்தார். அவர் உடல்
வெப்பமாக இருக்க, அபி பதறி விட்டான்.

“அங்கிள், காய்ச்சலா?  டாக்டர் கிட்ட போனீங்களா?”, என்று கேட்டதும் தான் ஹர்ஷா தந்தை
அருகில் வந்தான்.

“உனக்கு காய்ச்சலா அப்பா?”,என்று அருகில் வர, கைநீட்டி தடுத்தவர்,

“நீ போய் ஆக வேண்டிய வேலையை பாரு. உன்னோட ஆசை படிப்போட, கோட்டா போய்டாம,
சீக்கிரம் போய் அட்மிஷன் போடணும்.”, என்றார்.

“அங்கிள் நேத்து தான் ரிசல்ட். இன்னிக்கு அட்மிஷன்னு சொல்றிங்க? யார் போடுவாங்க
அப்படி?”

“அபி ஒரு சீட் வாங்கவே பன்னிரெண்டு லட்சம் டொனேஷன் அதுவும் அமைச்சர் சிபாரிசு பேர்ல்
கம்மியா வாங்கறாங்களாம். நேத்தே சீட் முடிஞ்சதுன்னு சொன்னாங்க. கெஞ்சி கூத்தாடி இந்த ஒரு
சீட் ஏற்பாடு பண்ணி இருக்கேன். அவங்க கிளம்பி போகட்டும் இனிமே என்னால முடியாது.”,
என்றார். அபியின் மேல் சாய்ந்து கொண்டார்.

அபி அவரை சோபாவில் படுக்க வைத்தான். எழுந்து ஹர்ஷா அருகில் வந்தவன், யாரும்
எதிர்பார்க்காத வண்ணம், ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்து இருந்தான்.

லதா கோபம் கொண்டு ஏதோ பேச வர, அவரை தடுத்த ஹர்ஷா, “அவன் என் பிரென்ட். என்னை
அடிப்பான். நீ சும்மா இரும்மா.”, என்று சொல்லிவிட்டு.

“நீ சொல்லு டா பங்கு”, என்றான் அபியை பார்த்து.

“அறிவு இல்லையா ஹர்ஷா உனக்கு. தாத்தா பாட்டி வாழற வீடு. அதை வச்சு நீ அந்த கோர்ஸ்
படிச்சே ஆகணுமா?”

“அபி எனக்கு ஐ.ஐ.டி ல ரோபாட்டிக்ஸ் பண்ணனும். அதுக்கு நல்ல ரெப்பூடட் காலேஜ்ல பேச்சலர்
டெக் கோர்ஸ் பண்ணனும் டா. அதான் அப்படி பண்ணினேன்.”, என்றான்.

“ஏன் சாதா காலேஜ்ல டெக் கோர்ஸ் பண்ணி நல்ல பெர்ஸண்டஜ், இல்லனா கிரேட் எடுத்தா
ஐ.ஐ.டி ல சீட் தர மாட்டாங்களா?”, என்று எரிந்து விழுந்தான்.

“புரியுது அபி. நான் கவனமா படிச்சிருந்தா இவ்ளோ கஷ்டம் இல்ல. நீ சொன்னதையும் நான்
கேக்கல. ஆனா உனக்கு இப்போ நான் வாக்கு தரேன். இன்னும் ஆறு வருஷம் படிக்கணும் அபி.
படிச்சு முடிச்ச ஒரே வருஷத்துல அந்த வீட்டை மீட்டு தாத்தா பாட்டிக்கு கொடுக்கிறேன். நம்பு டா
பங்கு.”

அவன் உருக்கமாக தான் பேசினான். ஆனால் அந்த ஏழு வருடத்தில் என்னவும் நடக்கலாம் என்ற
நிதர்சனம் புரியாமல் இன்னும் காற்றில் கோட்டை கட்டும் இவனை என்ன செய்வது என்று
அபிக்கு சத்தியமாக புரியவில்லை.

ஆனாலும் மனதை ஒருநிலைப்படுத்தி,” பங்கு. சொல்றேன்னு தப்பா நினைக்காதே. உன கனவை
வேற வழியில் நிஜமாக்க பாரு. அப்பா, தாத்தா ,பாட்டி மூணு பேரும் பாவம் டா.”, என்றான்.

“ஏய் என்ன விட்டா பேசிக்கிட்டே போற. அந்த வீட்டுக்கு எனக்கு தெரியாம செலவு செய்யும்
போதே இவர் கிட்ட சொல்லிட்டேன். அந்த வீடு தாத்தா சொத்து பேரனுக்கு தான்னு. அடமானம்
தானே வைக்கிறோம். விற்கலையே. அவங்களே சும்மா இருந்தாலும் நீ ஏத்தி விடுவ
போல.”,என்று லதா கத்த.

“ஆன்ட்டி. உங்களுக்கு நான் எப்படி சொல்லுவேன். நீங்க உங்க பையனை சரியா படிக்க சொல்லி
இருக்கணும். இல்ல இந்த வீட்டை அடமானம் வைத்திருக்கணும். உங்க வீடு வெல்லக் கட்டி
தாத்தா வீடு மட்டும் கல்லும் மண்ணுமா? அவங்களுக்கு வலிக்காதா? “

“எனக்கு என் பையன் ஆசை தான் முக்கியம்.”, என்றார் லதா முடிவாக.

அபி ஆழமான பார்வை ஹர்ஷாவை நோக்கி செலுத்தியவன், “நீ சொன்ன மாதிரி தாத்தா பாட்டி
வீட்டை மீட்டு கொடுத்திட்டு என்னோட பேசு பங்கு. எப்பயும் நான் உன் நண்பன் தான். ஆனா
உன் தப்புக்கு என்னால துணை போக முடியாது.”, என்று சொல்லிவிட்டு,

“பாட்டிம்மா. ஒரு வேளை இங்க உங்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் தயங்காம என்கிட்ட
வாங்க. நான் உங்களை பார்த்துப்பேன். என்னோட தாத்தா பாட்டியை நான் பார்த்ததே இல்ல.
எங்க அப்பா சண்டை போட்டு அவங்க கூட பேசுறது இல்ல. அதனால எனக்கு நீங்க தான் தாத்தா
பாட்டி. எந்த சூழ்நிலையிலும் நான் உங்களுக்காக இருப்பேன். கவலைப்பட வேண்டாம். நான்
இப்போ அங்கிளை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன். வரேன். “,என்று சொல்லிவிட்டு,
சோமுவை கைத்தாங்கலாக அழைத்து சென்றான் அபி.

உள் அறையில் இருந்து அவன் பேசிய வார்த்தையை கேட்ட கோமதிநாயகத்தின் கண்கள்
கலங்கின. அவன் குரலில் அவருக்கு ஏதோ பரிச்சய உணர்வும், அவன் மீது இயல்பான பாசமும்
வந்ததை அவர் உணர்ந்தார். கண்கள் மூடி கட்டிலில் சாய்ந்தார்.

ஹர்ஷா அப்படியே சோபாவில் அமர்ந்தான். அவனுக்கு என்னவோ மனம் பாரம் கொண்டது
போல இருக்க,

அவனை கண்ட லதா, “அவன் பேசாட்டி போறான். காலேஜ் போனா இவனை மாதிரி நூறு
பிரென்ட் உனக்கு கிடைப்பாங்க டா. இவனை நீ கொஞ்ச நாளில் மறந்தே போய்டுவ.”, என்று
தலை கோத,

அதை நாசுக்காக தவிர்த்தவன்,”நீ நினைக்கிற மாதிரி நூற்றில் ஒரு நண்பன் இல்லம்மா என் பங்கு.
அவன் கோடில ஒருத்தன். யாருக்கும் அவ்ளோ எளிதில் கிடைக்காத ஒருத்தன்.”, என்று
சொல்லிவிட்டு,

“இன்னும் ஏழு வருஷம் காத்திருக்கணும். என் நண்பனோட முகம் பார்க்க. கண்டிப்பா சொன்ன
வார்த்தையை காப்பாத்தியே தீருவேன்.எனக்கு என் பங்கு வேணும்.” என்று அழுத்தமாக
கூறியவன், எழுந்து உள்ளே போனான்.

ஒரு மணி நேரத்தில் அவனும் லதாவும் கோவைக்கு கிளப்பினர். அங்குள்ள ஒரு பிரபல கல்வி
நிறுவனத்தில் தான் ஹர்ஷாவின் இளங்கலை படிப்பை துவங்க இருக்கிறான். இதற்கான
நுழைவுத் தேர்வு அவன் ஏற்கனவே எழுதி விட்டான்

அதில் அவன் நல்ல புள்ளிகளை பெற்றதால் தான் இப்போது டொனேஷன் கொடுத்து சுயநிதியில்
சேர்த்துக்கொள்கிறார்கள்.

ரோபோடிக்ஸ் என்பது, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அன்ட் எம்பெட்டெட்
சிஸ்டம், கணிப்பொறி அறிவியல் மற்றும் காக்னிடிவ் அறிவியல் போன்ற பல துறைகளில்
சம்பந்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் இளங்கலை பட்டங்கள், கல்லூரிகள் இதில் மிகவும் குறைவு.
இயந்திரவியல், கணிப்பொறி அறிவியல் படித்தால் ஐ.ஐ.டி போன்ற தொழிநுட்ப கல்வி
கழகங்களில் மேற்படிப்பான முதுநிலை கல்வி படிக்க முடியும். இதை படிக்க நிறைய
பொறுமையும், நிதானமும், அறிவுக்கூர்மையும் மிகவும் அவசியம்.

இதெல்லாம் தெரிந்து தான் ஹர்ஷா ஆசைப்பட்டான். ஆனால் இடையில் செல்போன்
விளையாட்டு, நண்பர்களுடன் அரட்டை என்று சற்று விலகியதன் பலன் தான் இன்று மதிப்பெண்
குறைவு, பெரியவர்கள் மனவருத்தம், அபியின் நிராகரிப்பு எல்லாமே.

நம் சிறு அலட்சியம் வாழ்க்கை பாதையில் எவ்வளவு பெரிய தடைகளை கொண்டு வருகிறது.
அதை தாண்டி செல்லும் போது எவ்வளவு இழப்புகள்.

ஹர்ஷா மனதில் இதையெல்லாம் அசை போட்டபடி அவன் பயணத்தை  தொடர்ந்தான். அவன்
போனில் வந்த புலன செய்தியை கண்டதும் அவன் இதழில் சிறு புன்னகை வந்தது.

“ஆல் தி பெஸ்ட் லாலிபாப். ஐ அம் தேர் போர் யூ.”

இந்த செய்தி அவனுக்கு மன ஆறுதலை தர, பார்வையை கார் செல்லும் பாதையில்
வைத்து,மனதை செய்தி அனுப்பியவரிடம் செலுத்தினான்.

அபி சோமுவை மருத்துவமனை அழைத்து சென்று, வீட்டில் விட்டான். ஹர்ஷாவும் லதாவும்
கிளப்பி விட்டதாக சாந்தலட்சுமி சொல்ல, ஒரு கசந்த முறுவலை தந்தவன் அவன் தங்கி இருக்கும்
நித்திலனின் அவுட் ஹவுஸுக்கு சென்றான்.

அவனை வாசலில் வைத்து வரவேற்ற அகவழகி, நேற்று வராமல் இருந்ததற்கு கடிந்து கொண்டு,
இனிப்பு கொடுத்து வாழ்த்தினார்.

நித்திலன் ஒரு உறையை கொடுக்க, பிரித்தவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.

அவனுக்கு சென்னை சட்டக்கல்லூரியில் இடம் கிடைத்து, அவனை சேர சொல்லி வந்த கடிதம்
அது.

“எப்படி சார்?”, என்று திகைப்பாக கேட்டவனிடன்,

“இதுகூட செய்ய மாட்டோமா நாங்க? நேத்தே பேசி வச்சு,கையோடு வாங்கிட்டு வந்துட்டார். நீ
தான் தம்பி லேட்.”, என்று சொல்லி அகவழகி சிரித்தார்.

அபி கண்கள் பனிக்க, “உங்களுக்கு எப்படி கைமாறு செய்வேன் சார்.”

“இதே அன்போடு இரு. லட்சியத்தை நோக்கி போ. நிறைய பேருக்கு முன் உதாரணமா இரு.
சரியா?”,என்று அவனை தட்டிக்கொடுத்தார் நித்திலன்.

அபி தன் வாழ்க்கை பயணம் ஆரம்பமானதை உணர்ந்தான்.

��அகலாதே ஆருயிரே��
��34��

ரிது ஏதோ ஒரு புத்தகத்தில் முகம் புதைத்து வேறு உலகத்தில் இருக்க, அரை மணி நேரத்திற்கும்
மேலாக அவள் எதிரில் அமர்ந்திருந்த ஆருஷி அவளிடன் சலித்த பார்வை ஒன்றை வீசினாள்.

“ரிது. இனாஃப். நான் வந்து எவ்ளோ நேரம் ஆகுது. நீ இப்படி புக்குக்குள்ள தலையை விட்டுட்டு
இருக்க. நல்லாவே இல்ல. வா வெளில போய் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் “,என்று அழைக்க,

“இன்னும் பத்து நிமிஷம் பொறு ஆரூ வந்துடறேன். “, என்று புத்தகத்தை விட்டு கண்ணை
நகர்த்தாமல் சொன்ன ரிதுவை எதை வைத்து அடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த
ஆருவின் சிந்தனையை கலைத்தது அவள் புலனத்தில் வந்த செய்தி.

அவள் அதற்கு பதில் தருவதில் கவனமாக, தான் படிக்க வேண்டியதை படித்து முடித்துவிட்டு,
எழுந்து போய் தேநீர் கலந்து வந்து ஆரூவிடம் கொடுத்துவிட்டு தானும் பருக ஆரம்பித்தாள் ரிது.

யார் கையில் எதை கொடுத்தது என்று கூட கவனிக்காமல் வாங்கியதை வாயில் வைத்தபடி
மற்றொரு கையால் பதிலளித்து சிரித்துக்கொண்டு இருந்தாள் ஆரூ.

தேநீர் பருகிய கோப்பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்ற ரிதுவும் வந்து அமர்ந்து பத்து
நிமிடம், ‘போலாமா போலாமா’ என்று கேட்க, “ஒன் மின்ட் டி.”, என்று போனில் செய்தி
அனுப்பிக்கொண்டு இருந்தவளை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்தவளாக, எழுந்து
உள்ளே சென்று விட்டாள் ரிது.

அரைமணி நேரத்திற்கு பின் கையில் கிரிக்கெட் மட்டையுடன் வந்த ரிஷி, “நைனா.. நைனா.”,
என்று வீடே அதிரும்படி கத்திய பின் தான் போனில் இருந்து கண்ணை எடுத்தவள்,

“என்ன ரிஷி அங்கிளை எதுக்கு தேடுற?”, என்று கேட்டுக்கொண்டே போனில் மூழ்க,

“ஏ லூசு அக்கா, கேட்டியே பதில் சொல்ற வரைக்கும் கூட என்னை பார்க்க கூடாதா? அப்படி
என்ன தான் இருக்கோ அந்த போன்ல..ச்ச.. ஓடிப்போ.”, என்று சொல்லிவிட்டு,

அப்பாவின் அறைக்குள் அவன் செல்ல, அவன் பேசியது எதுவும் கவனிக்காமல் போனில்
திளைத்திருந்த ஆருஷியை அறை வாயிலில் நின்று கை கட்டி பார்த்துக்கொண்டு இருந்தாள் ரிது.

அடுத்த ஐந்து நிமிடத்தில் தந்தையும் மகனும் ஏதோ பேசிக்கொண்டு வெளியே வந்து, “ஆருமா சசி
கிட்ட பக்கத்து கடை வரைக்கும் போய்ட்டு வரோம்ன்னு சொல்லு. மாடில என்னமோ பண்ணிட்டு
இருக்கா.”,என்று சொல்லிவிட்டு வெளியேறினார் நாராயணன்.

நிதானமான நடையுடன் வந்த ரிது, ஆருஷி கையில் இருந்த செல்லை வெடுக்கென்று
பிடுங்கினாள்.

“அச்சோ.. “,என்று நிமிர்ந்த ஆரூ. “கொஞ்சம் குடு ரிது. ஒரே ஒரு மெஸெஜ் மட்டும் பண்ணிட்டு
வரேன்.”, என்று சொல்லவும்,

“எப்போ நீ வீட்டுக்கு வந்த?”, என்று ரிதுவின் கடினமான குரலில்,

“அது நாலு இருக்கும்”,என்றாள் தடுமாற்றமாக.

“இப்போ அப்பாவும் ரிஷியும் எங்கே?”, என்று கேட்க,

“அவன் அங்கிளை பார்க்க போனான். ரூம்ல இருப்பாங்க”,என்று யோசனையாக சொன்னவளை
கண்டு எரிச்சலுற்ற ரிது,

“இப்போ மணி என்ன?” என்றாள்.

சுற்றி ஒரு பார்வை பார்த்தவள், சுவர் கடிகாரத்தில் மணி ஐந்து நாற்பது என்று இருக்க, ‘அவளுக்கு
எப்படி இவ்வளவு நேரம் ஆச்சு?’ என்ற எண்ணம் தான் வந்தது.

“ஏன்டி எவ்ளோ நேரம் படிச்சிருக்க பாரு. எப்போ டி ஐஸ்கிரீம் கடைக்கு போறது?”, என்று
ரிதுவிடம் கோபம் காட்ட,

கையிலிருந்த அவள் போனை மேஜையில் வைத்தவள், “நான் அப்போவே முடிச்சிட்டேன். நீ டீ
குடிச்சியே அதுக்கு முன்னாடியே. “,என்று சொல்ல,

“டீ குடிச்சேனா?”, என்று முழித்தாள் ஆரூ.

“ஆரூ. ஆர் யூ ஓகே? என்ன நடக்குது உன்னை சுத்தின்னு கூட தெரியாத அளவுக்கு அந்த போன்ல
என்ன இருக்கு?”, என்று ரிது கத்த,

“டீ குடிச்சது மறந்து போச்சு அதுக்காக இவ்ளோ கோபப்படணுமா ரிது ?”,என்று சற்று குரலில்
சுருதி இறங்கி சொன்னவளை, அடித்து விடுபவள் போல கையை ஓங்கி விட்டு,

“ச்சீ.. நீயா ஆரூ இப்படி ஆகிட்ட?  நீ கேட்ட கேள்விக்கு ரிஷி பதில் சொல்ல வந்தான், நீ
கவனிக்கலன்னு திட்டிட்டு போனான். அப்பாவும் அவனும் வெளில போனாங்க. அப்பா
உன்கிட்ட அம்மா கிட்ட அவங்க எங்க போறாங்கன்னு சொல்ல சொல்லி சொல்லிட்டு போனார்.
நான் அரை மணி நேரமா இதோ இந்த ரூம் வாசலில் தான் நிக்கிறேன். போலாமா போலமான்னு
கேட்டு சலிச்சுப் போச்சு. ஆனா உனக்கு ஒன்னுமே தெரியல.”

தன் தவறு புரிந்தாலும், போனில் யார் என்ற கேள்வி எழுந்தால் பதில் சொல்ல முடியாது என்று
பயந்த ஆருஷி,

“நீ கூட தானே படிச்சிட்டே இருக்க, நானும் உனக்காக வெயிட் பண்ணி போர் அடிச்சு தானே
போன் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.”, என்று கலங்கிய குரலில் கூற,

“நீ கிளம்பு ஆரூ. இந்தா உன் போன்”,என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்றாள்
ரிதுபர்ணா. அவளின் திடீர் விலகல் ஆருஷிக்கு வலி கொடுக்க,

தான் பேசியது தவறு என்று உணர்ந்த ஆரூ ரிது பின்னால் ஓட, அவளோ, “வேண்டாம் ஆரூ
வராதே, உன்னோட ஒட்டிகிட்டே இருந்தா தான் உன் பிரென்ட்டா நான். எனக்கு ஆம்பிஷன்
இருக்கு. அதுக்காக நீ எந்த ஹெல்ப்பும் பண்ண தேவையில்லை. ஆனா நீ பண்ணின வேலைக்கும்,
என் படிப்புக்கும் முடிச்சு போடறது நல்லாவே இல்ல ஆரூ. உன்கிட்ட இந்த பிஹெவியர் நான்
எதிர்பார்க்கலை. அதைவிட, எனக்கு தெரிஞ்ச ஆரூ அப்படி கிடையாது.

காதல் தப்பில்லை ஆரூ. நான் காதலுக்கு எதிரியும் இல்ல. உன்னோட எல்லா ரகசியமும் எனக்கு
தெரியனும்ன்னு அவசியமும் இல்லை. நீ ஏன் உன் படிப்பை மறந்து இப்படி இருக்கன்னு எனக்கு
புரியவும் இல்ல. இங்க பாரு ஆரூ, உலகத்துல பொண்ணுங்க தங்களோட வாழ்க்கையை
அவங்களே கெடுத்துக்கறாங்க அப்படின்னா அதோட முதல் கட்டம் படிக்கிற வயசுல வர்ற காதல்
தான்.  ஏன் இந்த காதல் நீ உன் வாழ்க்கையில் நல்ல நிலைமை வந்த பின்னாடி வந்தா ஆகாதா?
இல்ல தெரியாம தான் கேக்கிறேன் ஆரூ. இப்போ என்ன அவசரம், சுற்றி இருக்கறது மறந்து,
உலகம் மறந்து செல்லே கதின்னு கிடக்குற அளவுக்கு அப்படி என்ன காதல். இதே காதலனை
இன்னும் அஞ்சு வருஷம் காத்திருக்க சொல்லிட்டு, படிச்சு முடிச்சு, கேம்பஸ்ல ஒரு வேலை
கிடைச்சதும் அதே காதலோட வர சொல்லேன் பார்க்கலாம்.”,
எரிச்சல் மண்ட பேசியவளை என்ன பதில் சொல்வது என்று புரியாமல் பார்த்த ஆருவுக்கு,

“என்ன முழிக்கிற,பேசினா தான் காதலா? அதே போல பார்த்துகிட்டா தான் நட்பா? நான்
சாதிக்கணும்ன்னு ஒரு வெறில இருக்கேன் ஆரூ. ஆனாலும் நீ ஆசையா வந்து கூப்பிடும்போது

வரத்தான் நினைத்தேன். ஆனா, ச்சு.. எனக்கு சொல்லத் தெரியல டி. போன டேர்ம் டெஸ்ட்ல நீ
வாங்கின மார்க்க பார்த்து அந்த நந்தினி கேங் அப்படி சிரிக்கிது. அந்த கூட்டத்தோட அடி
முட்டாள் கூட உன்னை விட ஒரு மார்க் அதிகம் டி. என்னோட ஆரூ இப்படி கிடையாதே. அப்படி
என்ன டி காதல், எதிர்காலத்தை தீர்மானிக்க போற பன்னண்டாவது வகுப்புல. எனக்கு புரியல.”,
என்று கண்களில் கண்ணீர் மல்க கேட்கும் தன் தோழிக்கு என்ன பதில் சொல்வது என்று
புரியாமல் விழித்தாள் ஆருஷி.

இங்கு ஆருஷியிடம் ரிது கத்திக்கொண்டு இருக்கும் அதே வேளையில், நாலு வீடு தள்ளி இருக்கும்
அந்த பங்களாவின் அவுட் ஹவுஸில் அபியை திட்டிக்கொண்டு இருந்தான் சுரேஷ்.

“அவன் அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்னு நீ அவனை பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டு
வந்திருக்க?”

“அவன் பண்ணின வேலைக்கு இது ரொம்ப கம்மி அண்ணா.”,என்று வெற்றுக்குரலில்
சொன்னான் அபி.

“அவன் உனக்கு செஞ்சதெல்லாம் உனக்கு மறந்து போச்சா அபி? இது அவனுக்கு மட்டும் இல்ல
அபி உனக்கும் தண்டனை தான்.”

“சரியா சொன்னிங்க அண்ணா. இது எனக்கும் தண்டனை தான். அவனை நான் இழுத்து படிக்க
வச்சிருக்கணும். அட்வைஸ் பண்ணிட்டு விட்டுட்டேன். என் படிப்பு, என் குறிக்கோள், என்
குடும்பம் ன்னு சுயநலமா இருந்துட்டேன். அவனை இன்னும் கொஞ்சம் கவனிச்சிருக்கணும்.
என்னோட தப்புக்கு தான் அவனை பார்க்காம, பேசாம இருக்கப்போற இந்த தண்டனை.”

“டேய் இப்போ மட்டும் அவன் நல்லா படிச்சிடுவானா டா?”

“கண்டிப்பா அண்ணா. அந்த பக்கிக்கு நான்னா அவ்ளோ இஷ்டம். என்னை பார்க்காமல்
இருக்கவே மாட்டான். இப்போ நல்ல படிச்சு நல்ல நிலைமைக்கு வந்தா தான் என்னை பார்க்க
முடியும்ன்னா கண்டிப்பா அதை செய்ய தான் முயற்சி பண்ணுவான். அவன் புத்திசாலி தான்
அண்ணா. ஆனா விளையாட்டுத்தனம் நிறைய. அதான் இப்படி ஆயிடுச்சு.”

“சரி டா. நீயும் இல்லாம அவன் கஷ்டப்பட மாட்டானா டா? பாவம் இல்லயா?”

“அதெல்லாம் கஷ்டப்படுவான் தான்.”

“அப்புறம் ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாம இருப்பானே டா.”, என்று ஹர்ஷாவுக்காக
வருத்தம் கொண்டான் சுரேஷ்.

“ஏன் இல்லாம ஐயா இப்போ கொஞ்ச நாளா காதல் வலையில் விழுந்திருக்கார். அந்த பொண்ணு
ஆறுதல் சொல்லும். “,என்று நிதானமாக சொன்னவனை வேற்றுகிரக வாசி போல கண்ட சுரேஷ்,

“அவன் லவ் பண்றானா டா? உன்கிட்ட சொன்னானா?”

“இல்ல மொச புடிக்கிற நாயி மூஞ்சிய பார்த்தா தெரியாது? எக்ஸாம்க்கு ஒரு மாசம் முன்னாடில
இருந்து நான் அவனை பார்க்க போகல, அவன் வாரம் ஒருநாள் தான் வந்தான். அப்பயும்
சீக்கிரமே போய்ட்டான். அப்பவே என்னவோ பண்றாண்ணு நெனச்சேன். ஆனா காதல்னு
தோணால, லீவுக்கு அப்பறமும் அவன் நடவடிக்கை அப்படியே இருக்கப் போய் தான்
சந்தேகப்பட்டேன். அந்த பொண்ணு அவனை சமாதானம் செய்யும்.”,என்று தான் நண்பனை
நன்கு அறிந்தவன் நான் என்று நிரூபித்தான் அபி.

“அப்ப இந்த காதல் அவன் படிப்பை கெடுக்காதா?”, சுரேஷின் கேள்வியில் சட்டென்று
திரும்பியவன்,

“என்னை பொறுத்தவரை அது அவனை பாதிக்காது. ஆனா அந்த பொண்ணை பாதிக்கலாம்.”,
என்று உணர்ந்து சொன்னான்.

இவன் யார் அவனை சமாதானம் செய்வார்கள், ஆறுதல் தருவார்கள் என்று சொன்னனோ அது
அங்கே தகர்ந்து போகப்போவது தெரியாமல் இருந்தான் அபி.

��அகலாதே ஆருயிரே��
��35��

ரிது முன்னால் தலை குனிந்து நின்றாள் ஆரூ. “என்னை பாரு ஆரூ. கண்டிப்பா நீ ஆசைப்பட்ட
வாழ்க்கை உனக்கு நல்லபடியா கிடைக்கணும்ன்னா நீயும் அதுக்காக கொஞ்சம் பாடுபடணும்.
எல்லா நேரமும் சந்தோசம் மட்டுமே நம்ம வாழ்க்கையா இருக்காது. இப்போ நீ உன்

வாழ்க்கையோட முக்கியமான கட்டத்துல இருக்க. இப்போ போய் காதல் ஊதல்னு கவனத்தை
சிதற விட்டா, உன் வாழ்நாள் முழுக்க நீ வருந்தறது போல ஆகிடும் டா. எனக்கு தெரியும் டா நீ
அதிகம் அவங்களை சந்திச்சு பேசலன்னு. ஆனாலும் கவனம் சிதையுதே. அதுக்கு தான் நான்
கவலைப்படறேன்.”

“இல்ல அவரை.. நான்.. எப்படி சொல்ல ரிது”, என்று ஆருஷி தயங்க,

“நீ கண்டிப்பா சரியா தான் தேர்ந்தெடுத்து இருப்ப டா. அதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஆனா இது நம்ம வாழ்க்கையை சரியான பாதைக்கு திருப்பும் நேரம் ஆரும்மா. புரியுதா?
இப்போதைக்கு இதை தள்ளி வச்சிட்டு படிப்பை பாரு டா.”,என்று இதமாய், பதமாய் சொல்லி
அவளை கொஞ்சம் சரிகட்டி வெளியே அழைக்க,

சரியாக அந்த நேரத்தில் ஆருவின் போன் சங்கீதத்தை இசைக்க, ரிது கை நீட்டி போனை
கேட்டாள்.

ஆரூ போனையும் அவளையும் மாறி மாறி பார்த்தவள், இறுதியில் தலையை தொங்க விட்டபடி
தோழியின் கையில் போனை ஒப்படைத்தாள்.

தொடுத்திரையில் தெரிந்த ‘மை ஸ்வீட் லாலிபாப்’ என்ற பெயரை கண்டதும் சிரிப்பு வந்துவிட்டது
ரிதுவுக்கு. கட்டுப்படுத்தி கொண்டவள், போனை ஸ்பீக்கரில் போட்டதும்,

“ஐஸ்கிரீம், எனக்கு மனசு சரி இல்ல டி. ஏன் திடீர்ன்னு மெஸெஜ் பண்றதை நிறுத்திட்ட? எனக்கு
வேலையே ஓடல.”,என்றவன் குரலில் கண்டிப்பாய் காதலோடு ஏக்கமும், அன்பும் இருந்ததை
உணர்ந்த ரிது, தொண்டையை செருமியபடி,

“இங்க பாருங்க ப்ரோ, உங்க மனசு சரி இல்ல, வேலை ஓடலன்னு படிக்கிற பொண்ணை நீங்க
தொந்தரவு பண்ணிட்டு இருக்கீங்க. உங்க காதலை பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பல. ஆனா
இது அவளோட முக்கியமான நேரம். அவ படிக்காம உங்க நினைப்புல லூசு மாதிரி பண்ணிட்டு
இருக்கா. போன டேர்ம் டெஸ்ட்ல கேவலமான மார்க். இதுதான் நீங்க விரும்பற அழகா? “

“இல்ல”, என்று அவன் தொடங்கும் முன்னரே,

“நான் இன்னும் பேசி முடிக்கல. ஒரே வருஷம் பேசாம உங்க அன்பை பத்திரமா வச்சுக்க
முடியாதா? அவளும் ப்ளஸ் டூ எழுதுவா, காலேஜ்ல ஓரளவு படிப்பு குறையும்போது பாலன்ஸ்
ஆகுமே. அவ்ளோ நாள் அவ மேல உள்ள காதல் இருக்காதா? காதலா இல்ல கற்பூரமா?”, என்று
பொறுமை பாதியும் எரிச்சல் மீதியுமாக கேட்டாள் ரிது.

“இல்லம்மா நீ சொல்றது சரி தான். நான் அவ எக்ஸாம் முடியற வரைக்கும் பேசவோ, அவளை
டிஸ்டர்ப் பண்ணவோ மாட்டேன். எனக்கு என் ஐஸ்கிரீம் நல்லா படிச்சா போதும்.”,என்று அடுத்த
வார்த்தை பேசாமல் போனை வைத்தவன்,

தான் தங்கி இருக்கும் அறையின் ஜன்னல் கம்பியில் நெற்றியை வைத்து, தரை தளத்தில்
விளையாடும் சிறுவர்களை பார்வையில் அளந்தான்.

‘வளராமல் அப்படியே சின்ன பையனா இருந்திருக்கலாம். ஹ்ம்ம்.. இனிமே நான் யார் கூட
பேசுவேன்.’,என்று போனில் தொடுத்திரையில் முகத்தில் நிறைந்த புன்னகையுடன் காட்சியளித்த
ஆருஷியை கண்டவன், ‘நீயும் என்னை மாதிரி ஆகிடக்கூடாது ஐஸ்கிரீம்.’,என்று கேலரியில்
இருந்த நண்பனின் புகைப்படத்தை பார்த்து,

‘இவகிட்ட பேசி நீ இல்லாத தனிமையை போக்கிக்க நெனச்ச என்னை , என் முட்டாள்தனைத்தை
என்ன சொல்றது பங்கு’, என்று அபினவ், அவன் அக்கா திருமணத்தில் ஏதோ வேலையாக
இருக்கும்போது எடுத்த புகைப்படத்தை பார்த்து சொன்னான் ஹர்ஷா.

‘நீ எனக்கு சொன்ன, நான் கேக்கல, இப்போ அவளுக்கு அவ பிரென்ட் சொல்றா. கண்டிப்பா அவ
கேட்டு தான் ஆகணும். இல்லனா என்னை போல கஷ்டம் தான் படுவா. எனக்கு அதுல விருப்பம்
இல்ல.குடும்பம், நட்பு காதல்ன்னு எல்லாத்தையும் ஒரே நேரத்துல விட்டுட்டு தள்ளி வர்றது
ரொம்பவே கொடுமை தெரியுமா? கண்டிப்பா என் ஆருஷிக்கு அந்த வலியை நான் தர மாட்டேன்.
அவளுக்கு அப்படி ஒரு வலி வர விடவும் மாட்டேன்.’,என்று நினைத்தவன் கோவையில் தாயின்
விருப்பத்தை நிராகரித்து, ஹாஸ்டலில் தாங்காமல் தனியாக அறை எடுத்து தங்கிக்கொண்டான்.
கல்லூரி திறக்க நாள் இருந்தாலும், தான் எந்த இடத்தில் சறுக்கினோமோ அங்கேயே காலூன்ற
வேண்டும் என்ற வெறியோடு அவன் சேர்ந்திருக்கும் பி.டெக் ரோபாட்டிக் சயின்ஸ்
பாடத்திட்டத்தின் தான் எங்கெல்லாம் தடுமாறுவோம் என்று தேடி தேடி தன்னை
மேம்படுத்திக்கொண்டு இருந்தான் ஹர்ஷா.

அறையில் இருந்த கட்டிலில் கண் மூடி படுத்தவன், ஆருஷியோடு அவன் கழித்த நிமிடங்களை
அசைபோடலானான்.

அன்று அவளை பள்ளியின் கழிவறையில் கண்டு காப்பாற்றி, உடை கொடுத்தபோது கூட
அவனுக்கு மனதில் எந்த எண்ணமும் இல்லை. அவள் உடையை திருப்பி கொடுத்து விட்டு அவன்
முகத்தை காணாது செல்ல, அவனுக்கு உள்ளே என்னவோ பிசைந்தது.

தான் காப்பாற்றிய பெண்,முகம் பார்க்க தயங்குவானேன் என்று அன்று முழுவதுமே அவள்
நினைவில் கழித்தவன், மாலை வீட்டுக்கு செல்லும் போது, ஒரு தள்ளு வண்டி ஐஸ்கிரீம் கடையில்
ஆருஷியும் அவள் தோழியும்  ஆளுக்கு ஒரு ஐஸ்கிரீமை வைத்துக்கொண்டு ஏதோ பேசி சிரிக்க,
அவர்கள் இருவரையும் அன்று ஐஸ்கிரீம் பார்லரில் பார்த்த ஞாபகம் வர, சிரித்துக்கொண்டான்.

அதன் பின் வந்த நாட்களில் அவன் நண்பனை அழைக்க மைதானத்துக்கு செல்லும்போது, அங்கே
ஆருஷி வாலிபால் விளையாடிக்கொண்டு இருப்பாள். அவளின் ஆளுமையில் பந்து எப்போதும்
வானத்தை தொடுவது போல எவ்வி பறக்கும். அது ஹர்ஷா மனதில் ஒரு வித உணர்வை
தோற்றுவிக்க,

இரண்டொரு நாளில் ஆரூ அவனை கண்டு நாணி பேசாமல் போகிறாள் என்று
புரிந்துகொண்டான். மாலை வேளையில் அவள் தோழி படித்துவிட்டு கிளம்பும் வரை இவள்
வாலிபால் விளையாடுவாள். தனியாக விளையாடும் அவளிடம் பேச அவனுக்கு சற்று தயக்கம்
தான். முயன்று பேசிய ஒரே முறையில், அவள் நாணம் கொண்ட நயனங்கள் அவனை அடித்து
வீழ்த்தி விட்டது. அதன் பின்னர் எல்லாமே செல்போன் பேச்சு தான். காலையில் பள்ளிக்கு
முன்னால் இருக்கும் ஸ்டேஷனரி கடையில் அவன் அவளுக்காக காத்திருப்பான். அவளும்
பேப்பர், பேனா, என்று ஏதோ சாக்கு வைத்து அங்கு வந்து அவனை ஓரவிழி பார்வையில் சுழல
விடுவாள்.
பரீட்சை அறிவிப்புக்கு பின்னால் அவளை போனில் மட்டுமே தொடர்பு கொண்டான். இந்த
காலகட்டத்தில் இருவருமே மனதால் நெருங்கி இருந்தனர். அவளுக்கு அவன் லாலிபாப் என்று
மாறிப்போக, இவ்ளோ அவனின் ஐஸ்கிரீமாக மாறி இருந்தாள்.

காதல் கசிந்திருக்கிய வேளையில் அவனும் பரீட்சையின் அசட்டையாக, அவனை விட இவள்
படிப்பை முற்றிலும் மறந்தே போய்விட்டாள் போல,

ஏதோ அவன் தாய்தந்தை அவனை படிக்க வைக்க முயன்றனர், கனவை பெரிதென கருதப்போய்
இன்று அவன் இப்படி இருக்கிறான். ஆரூ வீட்டில் வேறு  மாதிரி முடிவு எடுத்து படிக்கவில்லை
என்று திருமணம் செய்துவிட்டால், அவனால் இன்றைய தேதியில் என்ன செய்ய முடியும்.
அதனால் அவள் தோழி சொல்வது போல, அவள் படித்து நல்ல மதிப்பெண் பெரும் வரை அவளை
தொடர்பு கொள்வதில்லை என்றே முடிவெடுத்தான்.

முடிவெல்லாம் எடுத்துவிடலாம். ஆனால் அதை கடைபிடிப்பதற்குள் படும் வேதனைகளும்
வலிகளும் பெரும் துன்பம். அதைத்தான் இப்போது ஹர்ஷாவும் அனுபவிக்கிறான்.

தோழனின் ஒதுக்கத்தை காதலி தணித்தாள். ஆனால் இன்று காதலியை விட்டு இவன் ஒதுங்கி
இருக்க நினைக்கையில் அவனுக்கு துணையோ, பிடிமானமோ, ஆறுதலோ மருந்துக்கும் இல்லை.
மனதால் மறுகிப்போனான் அவன்.

சிறு பிழை, ஆனால் அவன் கொடுத்ததோ மிகப்பெரிய விலை. அவன் தனிமை அவனுக்கு
தைரியத்தோடு, கூடவே வெறியையும் கொடுத்தது. முடிந்தவரை படிப்பில் மட்டுமே கவனம்
வைத்தான். சிறு வகுப்புகளுக்கு சென்று வந்தான். கூடவே தாத்தாவின் ஆலோசனைப்படி யோகா
வகுப்பிலும் சேர்ந்துக்கொண்டான்.

அவனுக்கு அது ஒரு வித நிதானத்தை கொடுத்தது. இயல்பில் பொறுமையாக ஹர்ஷாவுக்கு
விளையாட்டுத்தனங்கள் குறைந்து, அமைதியும், தெளிவும் பிறந்தது.

நாம் வாழ்வில் நிறைய நேரங்களில் இழப்பது நம் நிதானத்தை தான். அது நம்முடன் இருக்கும்
வரை, நாம் தவறான முடிவுகளை எடுக்கவோ, தவறான வார்த்தைகளை ப்ரயோகிக்கவோ
மாட்டோம். ஆனால் கோபம் எனும் சத்ரு போலவே, நிதானமின்மை எனும் கொடிய அரக்கணும்
நம் வாழ்வின் திசையை மாற்றி விடும் வல்லமை பொருந்தியவன். என்றும் நாம் அதை நினைவில்
கொள்ள வேண்டும். எவ்வித கோபம் நம்மை ஆட்கொண்டாலும், நிதானம் தவறி, பதற்றமும்
எரிச்சலும் நம்மை சூழ்ந்து நின்றாலும் நம் மனதை நிலைப்படுத்தி, நிதானத்தை
கொண்டுவந்துவிட்டால், எப்பேர்ப்பட்ட சூழலிலும் அழகாக கையாள நம்மால் முடியும்.

ஏதேதோ யோசித்து அப்படியே உறங்கிவிட்டான் ஹர்ஷா.

அங்கே ஹர்ஷாவின் பேச்சை கேட்ட ஆரூ,மடங்கி அமர்ந்து அழத்துவங்கினாள். “அவன் பாவம்
ரிது”,என்று சொல்லி அவள் தேம்ப,

“இப்ப நீ கவனமா இல்லனா, அடுத்த வருஷம் இந்த நேரம் நீ பாவமா இருப்ப ஆரூ. நீ நல்லா
படிச்சா தான் ஆரூ என்னால கேசவன் அங்கிள் கிட்ட உங்க காதல் பத்தி பேச முடியும்.இதே நீ
சரியா படிக்கலன்னா நாளைக்கு அவர் எப்படி உன்னை ஒரு நல்ல கோர்ஸ்ல சேர்த்து விடுவார்.
சொல்லு. நானும் தான் எந்த முகத்தை வச்சிட்டு, அவர் கிட்ட, என் ஆரூ விருப்பத்தை

நிறைவேற்றிக் கொடுங்க அங்கிள்ன்னு கேக்குறது. அதை கூட விடு. நீ நல்லா படிச்சு நல்ல
நிலைக்கு வரலன்னா, ப்ரோ வீட்ல எப்படி கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குவ. அவர் நல்ல
நிலையில் இருந்து, நீ அப்படி இல்லனா? இதெல்லாம் யோசி ஆரூ. உனக்கே புரியும் நான்
சொல்றது உன்னோட நல்லத்துக்கு தான் அப்படின்னு. அதைவிட, இந்த ஒரு வருஷம் தானே
ஆரும்மா. கண்டிப்பா அவர் உனக்காக காத்திருப்பார் டா.”,என்று அவளை தேற்றி, தன் அறைக்கு
அழைத்து போய் கட்டிலில் அமர வைக்க,

அவளோ ரிதுவின் மடியில் தலை சாய்த்தாள். “ரிது நீ சொல்றது புரியுது . ஆனா நான் அவனை
ரொம்ப மிஸ் பண்ணுவேன் டி.”, என்று கண்ணீர் உகுக்க,

“வேணா ஒன்னு பண்ணு, தினமும் படிச்சு முடிச்சு படுக்க போகும் முன்னாடி நீ அவரோட அந்த
நாளில் பேச நினைக்கிற, ஷார் பண்ண நினைக்கிற எல்லாத்தயும் ஒரு டைரில எழுது. அடுத்த
வருஷம் இதை அவர் கிட்ட கொடுத்துடலாம். அப்போ உன்னை இந்த ஒரு வருஷமும் அவர் மிஸ்
பண்ண மாட்டார். அவர் விஷயங்களை நீ அப்பறமா காதுல ஓட்டை விழுகிற அளவுக்கு
தெரிஞ்சுக்கோ. சரியா?”, என்று கேட்க,

மகிழ்ச்சியோடு தலையசைத்தவள், அப்படியே ரிதுவின் மடியை தலையணையாக்கி
உறங்கிப்போனாள்.

இருவரின் காதலும், நால்வரின் நட்பும் ஒரே கோட்டில் என்று சந்திக்கும். காத்திருப்போம்.

2 thoughts on “அகலாதே ஆருயிரே-31-35”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *