Skip to content
Home » அகலாதே ஆருயிரே-41-45

அகலாதே ஆருயிரே-41-45

��அகலாதே ஆருயிரே��
��41��

“என்ன டா எல்லாம் ரெடியா கிளம்பலாமா?” என்று கேட்ட தந்தையை கண்களில் நீருடன் ஏறிட்ட
ரிது,

“இன்னும் ஆரூ வரலப்பா.. சொல்லிட்டு கிளம்பலாம்னு பார்த்தேன்.”,என்றாள் அழுகையை
அடக்கியபடி.

“அவ இங்க வரலன்னா என்ன.. நீ போய் பார்த்துட்டு அப்படியே கிளம்பு.”, என்றான் ரிஷி

“ஆமாண்டா நாங்க அவளை பார்த்துக்கிறோம். நீ உன் படிப்பில கவனம் வை. இப்போ நாம அவ
வீட்டுக்கு போய் சொல்லிட்டு ஊருக்கு கிளம்பலாம். அவளுக்கு உன்னை ஊருக்கு
அனுப்பும்போது பார்க்க வருத்தமாய் இருக்கலாம். அதுக்கு பயந்துட்டு எங்க அழுதிடுவோமோ
அப்படின்னு நெனச்சு உன் மனச சங்கட படுத்தக் கூடாதுன்னு அவ வராம விட்டிருக்கலாம்.
ஆனா இப்போ நீ அவளை பார்க்கலனா, மறுபடியும் அவளைப் பார்க்க மூணு மாசமோ இல்ல
நாலு மாசமோ ஆகலாம். அதனால போகும்போது பார்த்துட்டு போலாம்  இன்னும் ட்ரெயின்
கிளம்ப நிறைய நேரம் இருக்கு சரியா?”, என்று நாராயணன் மகளை ஆறுதலாக
அணைத்துக்கொண்டார்.

சசி பரபரப்பாக சமையலறையிலிருந்து ஒன்றரை நாள் பயணத்திற்கு தேவையான உணவு
வகைகளை பாக்ஸில் அடைத்து ஒரு பை நிறைய வைத்துக் கொண்டிருந்தார் அதைப்பார்த்த ரிஷி,
“அம்மா அவங்க ட்ரெயின்ல சாப்பாடு விக்கவா போறாங்க?”,
என்று தன் அதிமுக்கியமான சந்தேகத்தை கேட்டதும்,

“போடா அரட்டை”, என்று மகனை தலையில் தட்டியவர் ரிதுவிடம்,” சப்பாத்தி வச்சிருக்கேன்
இட்லி வச்சிருக்கேன் புளிசாதம் கட்டியிருக்கேன் தயிர்சாதமும் வெச்சிருக்கேன் முதலில் இட்லியை
காலி பண்ணிடு. அப்பா சாப்பிட மாட்டேன்னுதான் சொல்லுவாரு எப்படியாச்சும்
சாப்பிடவைச்சிரு. மனசை போட்டு குழப்பிக்காத. எந்த ஒரு சூழ்நிலையிலும் உன் தைரியத்தை
விட்டுடாத. அங்க உனக்கு என்ன பிரச்சனைனாலும் உடனே எங்களுக்கு தகவல் சொல்லு
முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா வந்துவிடுவோம். பணம் வேணும்னா தயங்காம கேளு. நீயா அங்க
எதையும் செய்யாத. படிப்பை மட்டும் பாரு. எனக்கு உன்னோட லட்சியம் என்னன்னு புரியுது.
அதுக்கு நீ கடுமையா உழைக்கணும்.இப்போ நான் எம்ராய்டரி எல்லாம் பண்றதால நல்லாவே
சம்பாதிக்கிறேன். அதனால நீ பணத்தைப் பற்றி கவலைப்படாதே.ஏதாவது எக்ஸ்ட்ரா கோர்ஸ்
சேர்றதுன்னாலும் சேர்ந்துக்கோ. முடியும்போது போன் பண்ணி பேசு. படிப்பு படிப்புன்னு சாப்பிட
மறந்துடாத.” என்று தாயாய் கரிசனையும் மந்திரியாய் ஆலோசனைகளையும் வழங்கினார் சசி.

“அம்மா போதும் உங்க சொற்பொழிவு. எவ்வளவு நேரம்..இன்னும் அக்காவும் நைனாவும் ஆரு
அக்கா வீட்டுக்கு வேற போயிட்டு ட்ரெயினை பிடிக்க போகணும். விடுங்க..”, என்று பெரிய
மனிதனாக சொன்னான் பத்தாவது படிக்கும் ரிஷி.

தன் தம்பியை அன்புடன் அணைத்துக் கொண்ட ரிது, “அப்பா, அம்மா, ஆரு எல்லாரையும் நீ
தான்டா நல்லா பாத்துக்கணும். அது மட்டும் இல்ல இந்த வருஷம் உனக்கு பப்ளிக் எக்ஸாம்
இருக்கு அதனால கவனமா படி. ஏதாச்சும் தெரியலனா வாட்ஸப்ல மெசேஜ் அனுப்பு, நான்
ஃப்ரீயா இருக்கும்போது வாய்ஸ் நோட் அனுப்பி சொல்லிக் கொடுக்கிறேன். திருப்பி திருப்பி
கேட்டு நல்லா படிக்கணும். எப்ப பாரு பேட்டை தூக்கிட்டு தெருவில விளையாடப்
போகக்கூடாது. அம்மாவை தனியா விடக்கூடாது. சரியா? “, என்று தம்பியிடம் கேட்டவளிடம்,

“அம்மாவுக்கு பொண்ணுன்னு நிரூபிக்கிறியா ரிதுக்கா. போதும் அக்கா. நான்
சமாளிச்சுக்கறேன்.நல்லபடியா படிக்கவும் செய்வேன். உன் அளவுக்கு ஸ்டேட் ரேங்க்
எடுக்கலன்னாலும் நல்ல மார்க் வாங்குவேன்.கவலைப்படாம போயிட்டு வா அக்கா. நான் ஆரூ
அக்காவை பார்த்துப்பேன். உனக்கு எப்படி தம்பியோ அப்படி தான் நான் அவளுக்கும். நீ அவளை
பற்றி கவலைப்படாம இரு.”, என்று வீட்டின் மகனாக தன் தமக்கைக்கு தைரியம் சொன்னான்
ரிஷி.

தாயிடமும் தம்பியிடமும் பிரியா விடை பெற்று ஆரூ வீட்டை நோக்கி சென்றாள் ரிது.

அங்கே அழுது வீங்கிய முகமும், தாயின் சொல்லடி வாங்கிய ரணமுமாய் அமர்ந்திருந்தாள் ஆருஷி.

ரிது படிக்க டெல்லி செல்வதாக சொல்லவும், தலைநகருக்கு தானும் படையெடுக்க ஏதுவாய் ரிது
சொன்ன பல்கலைக்கழகத்திலேயே அவளும் அப்ளிக்கேஷன் வாங்கி வைத்து விட்ட ஆருஷி,
தந்தையிடம் கையொப்பம் வேண்டி நிற்க, அவருக்கோ ரிது துணை இருக்கிறாள் என்றதும்
நம்பிக்கையும் நிம்மதியும் கொண்டவராக கையொப்பம் இட்டு அவளிடம் நீட்டினார்.

ஆனால் அது ஆருஷியின் கைகளில் வந்து சேர்வதற்குள் வேணி அதை வாங்கி சுக்கல் சுக்கலாக
கிழித்து எரிந்துவிட்டார்.

“இங்க இருந்து படிக்கிறதுன்னா உனக்கு விருப்பமான கோர்ஸ் சேர்த்து விடுவேன். இல்ல. நான்
டெல்லிக்கு தான் போவேன்னா நான் சொல்ற கோர்ஸ், நான் சொல்ற காலேஜ்ல தான்
படிக்கணும். நான் விட்ற ஹாஸ்டல்ல தான் தங்கணும். எப்படி வசதி?”, என்றார்.

நொந்து போன ஆரூ, தாயிடம் தன்னால் இயன்றவரை கெஞ்சி பார்த்தாள். ரிதுவுக்கு, தான்
அவளுடன் வருவது இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று அவளிடம் சொல்லாமல்
இருந்தவள், இப்போது சொல்ல முடியாமல் தவித்தாள். கேசவனும் வேணியிடம் மகளுக்காக
பேசிப் பார்த்தார். பலன் என்னவோ பூஜியம் தான். அவருக்கு தெரியும் மகள் ரிதுவின் மீது
கொண்ட பாசமும், அவளின் கட்டுப்பாட்டில் மகள் அழகாக வலம் வரும் விதமும். இனி அவள்
இல்லாமல் மகள் துவண்டு போவாளே என்று அவர் மகளுக்காக வருந்தினார்.

வேணியிடம்,” நீ இனிமே அவ கூட தினமும் நேரம் செலவு பண்ணு வேணி. அவளுக்கு தனிமை
எவ்ளோ கொடுமை தெரியுமா?”, என்று அவர் குரல் உயர்த்தி பேச, வேணி கொஞ்சமும்
சளைக்காமல்,

“அப்படி உங்க பொண்ணு கூடவே இருந்தா இவ்ளோ சம்பாதிக்க முடியுமா கேசவ். ஏன் புரியாம
பேசறீங்க. நான் போன வருஷமே ஒரு இடம் பார்த்து அங்க ஜிம் ஆரம்பிக்க சொன்னேன். ஆனா
இன்னொன்னு மெய்ண்டைன் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டிங்க. உங்களுக்கு என்ன அதிக
வயசா. நாலு இடம் அலைய முடியாதா? என்னடான்னு பார்த்தா நீங்க இவ கூட நேரம் செலவு
பண்ணிட்டு இருக்கீங்க. “

“சரி நீ சொல்ற இடத்துல ஜிம் ஆரம்பிக்கிறேன். இப்போ அவளை டெல்லி அனுப்பு “,என்று
மகளுக்காக அவர் இறங்கி வர,

“இப்போ அந்த இடம் இல்ல கேசவ், பிசினஸ்ல நாம நெனச்ச நேரம் எல்லாம் செய்ய முடியாது,
வாய்ப்பு வரும்போது செய்யணும். இப்போ வாய்ப்பு இல்ல. அதனால.. நீங்க அவ கூட வீட்ல
நேரம் செலவு பண்ணுங்க. நான் வர்மா சார் படத்துக்கு எல்லா முக்கிய கதாபாத்திரத்துக்கும்
டையடீசியனா புக் ஆகி இருக்கேன். எனக்கு இப்போ மீட்டிங் இருக்கு. நான் வரேன். இவளை
இங்க உள்ள ஏதோ ஒரு காலேஜ்ல அவ இஷ்டப்பட்ட கோர்ஸ் சேர்த்து விடுங்க.”, என்று
சொல்லிவிட்டு அவள் வெளியேற,

“நான் ரிது கூட போவேன் பா. இவங்க பேச்சை என்னால கேட்க முடியாது.”, என்று கோபத்தில்
பேசிய ஆருவை சமாதானம் செய்தவர்,

“ஒரு மூணு வருஷம் அட்ஜஸ்ட் பண்ண மாட்டியா டா. இல்லன்னா இந்த ஒரே ஒரு வருஷம்
பொறு. அவ மனசை எப்படியாச்சும் மாத்தி உன்னை அனுப்பி வைக்கிறேன் ஆரும்மா. பிளீஸ் டா.
அவளை பகைச்சுக்கிட்டு போறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. ஆனா அவ சம்பாதிக்கிறது
உனக்காக தான் ஆரூ. இன்னிக்கு வரைக்கும் அவளுக்குன்னு அவ எதையும் வாங்கி வைக்கல.
வச்ச எல்லாமே உனக்கு வாங்கினது தான். அவளுக்கு பாசத்தை காட்ட தெரியல டா.”, என்று
மகளிடம் மனைவிக்காக அவர் பேச, மனைவி அவரிடம் செய்யத் தவறியதை மகள் செய்தாள்.

அவர் சொல்வதை காது கொடுத்துக் கேட்டாள்.

“சரிப்பா எப்படியாச்சும் பேசி என்னை ரிது கூட அனுப்புங்க. நான் அவ இல்லாம..”, என்று முடிக்க
முடியாமல் திணற,

அவளை அணைத்து ஆறுதல் சொன்னார் கேசவன்.

அவரும் வேலையாக வெளியே செல்ல, இனி எப்படி ரிதுவை பார்ப்பது, அவள் பிரிந்து
செல்லப்போகும் நொடியை எப்படி தாங்குவது, என்று புரியாமல், அவள் ஜே.பிக்கு அழைத்து
பார்த்தாள்.

அபி அங்கே தந்தையை கவனித்துக்கொண்டு இருக்க, அவன் அவள் போனை எடுக்கவில்லை.

கண்ணீருடன் ஹர்ஷாவுக்கு அழைத்தவள் தேம்பி தேம்பி அழவும், அவனுக்கு என்ன சொல்வது
என்றே புரியவில்லை.

“இங்க பாரு டி ஐஸ்க்ரீம்.. எனக்கு உன் நிலைமை புரியுது. நானும் என் உயிர் நண்பனை விட்டு
தான் வந்திருக்கேன். என்னால உன் வலியை உணர முடியுது. ஆனா இப்போ நீ தைரியமா
இருக்கணும் டி. அவ ஊருக்கு போகும்போது, சிரிச்ச முகமா அனுப்பு. உன்னால டெல்லிக்கு போக
முடியுதோ இல்லையோ, ஆனா அவ கிட்ட நடுல வந்து பாக்கறேன்னு சொல்லு. தினமும் போன்
பண்ணி பேசு டி. அழக்கூடாது சரியா? எனக்கு பெல் அடிச்சாச்சு. இன்னிக்கு லேப் இருக்கு டி.
இல்லனா கண்டிப்பா உன்னோட பேசிட்டு இருப்பேன்.”,என்று அவன் தயங்க,

“எனக்கு புரியுது லாலிபாப். நான் வச்சிடறேன். தைரியமா இருப்பேன். இப்போவே அவ வீட்டுக்கு
போறேன்.”, என்று கண்ணை துடைத்துக்கொண்டு அவள் சொல்ல,

ஹர்ஷா மனதில் பரவிய நிம்மதியுடன், போனை வைத்துவிட்டு லேபிற்கு சென்றான்.

ரிதுவும் நாராயணனும் ஆருஷி வீட்டிற்குள் நுழையவும், அவள் உடை மாற்றி ரிது வீட்டிற்கு
கிளம்ப தயாராகவும் சரியாக இருக்க,

ரிதுவை கண்டதும் இவ்வளவு நேரம் பிரயத்தனப்பட்டு அடக்கி வைத்த கண்ணீர் மடை திறந்த
வெள்ளம் போல அவள் கன்னங்களில் பாய,

ரிது ஆருவை அணைத்தவளாக, “இங்க பாரு ஆரூ. கவனா படிக்கணும்.”,என்று சத்தமாக
சொன்னவள், அவள் காதுக்கு அருகில் வந்து, “உன் லாலிபாப் கிட்ட பேசி முடிச்சிட்டு தினமும்
என்னோடயும் கொஞ்ச நேரம் பேசணும். “, என்றாள் மெதுவாக.

“போ டி.. “,என்று ஆருஷி கண்ணீரை துடைக்க,

“அழாத டா செல்லம். உன்னோட லாலிபாப் விட்டுட்டு இப்போ நீ இருக்க தானே. அதே போல
என்னை விட்டு இருக்கவும் பழகிப்ப.”, என்றதும் அவளை முறைத்த ஆருஷி,

“அவனும் நீயும் ஒண்ணா டி. அவன் என் வாழ்க்கையில் முக்கியம் தான். ஆனா நீ என் வாழக்கை
டி.”, என்று அழுத அவளை தேற்ற தோன்றாமல் ரிதுவும் அழ,

நாராயணன் இருவரையும் சமாதானம் செய்தவர், ஆருஷி தன் பொறுப்பு என்று சொன்ன
பின்னால் தான் ரிதுவின் கண்ணீர் அணை கட்டியது.

ஆரூ அவளுக்கு ஒரு தலகாணிக்கு சமமான அளவு பொது அறிவு புத்தகம் ஒன்றை பரிசாக
கொடுத்தவள், அவளை பிரிய மனம் இன்றி கண்கலங்கி அவளை அணைத்துக்கொண்டு நிற்க,

நாராயணம் நேரமாவதை உணர்த்தி ரிதுவுடன் கிளம்பினார்.

ரிது அந்த தெருவை தாண்டும் வரை வாசலில் நின்றவள், வீட்டிற்குள் செல்லும் போது கண்கள்
நீர்வீழ்ச்சியாக பொழிய,

அவள் கனவு நனவாக வேண்டும் என்று உற்ற தோழியாக அவளின் நலனுக்காக கடவுளை
பிரார்த்தித்தார்.

★★★★

��அகலாதே ஆருயிரே��
��42��

ஒரு வழியாக அபியின் தந்தை உடல் தேறி வரவும், அவன், அம்மாவுக்கு துணையாக அவர்கள்
வீட்டிலேயே தங்கினான்.

ராகவேந்தர் மிகவும் மனம் துவண்டு இருந்தார். அவர் அபியிடம் மட்டுமின்றி யாரிடமும் பேசவே
இல்லை. அது சங்கரியின் மனதில் பெரும் பயத்தை கிளப்பியது. கிட்டத்தட்ட பத்து நாட்களாக,
ஒற்றை ஆளாய் அம்மாவையும் அப்பாவையும் தாங்கி நின்ற அபிக்கு வெளியுலகம் முற்றிலும்
மறந்தே இருந்தது.

சமையல் முதல் வெளி வேலை வரை ஒற்றை ஆளாய் சுற்றித் திரிந்தவன் கல்லூரிக்கும்
செல்லவில்லை. அன்று எல்லாம் ஓரளவுக்கு சரியாக இருக்க, கல்லூரிக்கு கிளம்பிய அவன், தன்
மொபைலில் இருந்த ஆருவின் பல தவறிய அழைப்புகளை கண்டு தன்னையே நொந்தவனாக

தலையிலடித்துக் கொண்டான்.உடனே ஆருவுக்கு போன் செய்ய ,அவளோ கல்லூரி விஷயமாக
தன் தந்தையுடன் வெளியே சென்றிருக்க, மறந்து போனை வீட்டிலேயே விட்டுச் சென்றிருந்தாள்.

கல்லூரிக்கு கிளம்பிய அபி கல்லூரி வாசலில் பல மாணவர்கள் போராட்டத்தில் இருப்பதை கண்டு
துணுக்குற்றான்.
என்ன விஷயம் என்று பக்கத்திலிருந்த ஒருவனை கேட்க, அவனோ,  இரு மாணவர்களுக்குள்
நடந்த சண்டை கலவரமாகி ஒருவனை கல்லூரியை விட்டு நீக்கச்சொல்லி மற்றவன் சொல்ல,
அவன் ஆதரவாளர்களோடு வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றான். அது
மட்டும் இல்லாமல் மற்ற மாணவர்களையும் கல்லூரியின் உள்ளே அனுமதிக்க மாட்டேன்
என்கிறான் என்று எரிச்சலுடன் சொன்னான்.

அபிக்கு கோபம் கனன்றது. ‘இவர்களுக்குள் சண்டை என்றால் இவர்களே பேசித் தீர்த்துக்
கொள்ளாமல் எதற்கு அடுத்தவர்கள் படிப்பை கெடுக்க வேண்டும்’ , என்று கடுப்பானான்
முன்னேறி கல்லூரி வாயிலை அடைந்தான். அவன் உள்ளே செல்ல எத்தனிக்கையில், நல்ல
ஆகிருதியான உடல்வாகோடு ஒருவன் அபியை வழிமறித்தான்.

“என்ன?”, என்று அபி அலட்சியான குரலில் கேட்க,

“இங்க நாங்க இவ்ளோ பேர் வெளில நிக்கறோம் உன் கண்ணுக்கு தெரியலையா?? பெரிய பருப்பு
மாதிரி நேரா உள்ள போற.”, என்று அவனை கேட்டுக்கொண்டே அவன் மார்பில் கை வைத்து
பின்னால் தள்ள,

“உங்களுக்கு பிரச்சனைன்னா அதுக்கு நான் என்ன டா பண்றது. எனக்கு காலேஜ்க்கு போகணும்.
ஏற்கனவே பத்து நாள் கிளாஸ் போச்சுன்னு கடுப்புல இருக்கேன். வழி விடு “, என்று பதிலுக்கு
அபியும் குரலை உயர்த்தி பேச,

இவர்கள் தொல்லையால் ஏற்கனவே கோபத்தில் இருந்த நிர்வாகமும் பேராசிரியர்களும்
வெளியில் வர,

அபி சற்றும் யோசிக்காமல் பேராசிரியர்கள் பக்கம் திரும்பி, “எனக்கு கிளாஸ் அட்டெண்ட்
பண்ணனும் சார். இவங்க என்னை உள்ள வர விட மாட்டேங்கறாங்க. என்னை போல இங்க
எத்தனை பேர் இவங்களால உள்ள வர முடியாம நிக்கறாங்கன்னு தெரியல சார். “,என்றதும்,

அபியை தடுத்தவன், அவனை முரட்டுத்தனமாக கீழ தள்ள, எழுந்து வந்த அபி அவன் மூக்கோடு
சேர்த்து ஒரு குத்து விட்டான்.

நிலை தடுமாறி மூக்கில் ரத்தம் வழிய கீழ அமர்ந்த அவன், தன் நண்பர்களை நோக்கி, “என்னடா
அடிக்கிறான் பார்த்துகிட்டு இருக்கீங்க? பொளந்து கட்டுங்கடா”, அவனை என்று குரல் கொடுக்க,
அவனவன் சட்டையை ஏற்றி விட்டப்படி சண்டையில் இறங்க, அபியும் அவர்களோடு
சண்டைக்கு தயாரானான்.

சில பேராசிரியர்களுக்கு அபியின் இந்த ஒரு வருட படிப்பின் தன்மையும் அவன் நிதானமும்
தெரியும் என்றாலும், அவனின் கோபத்தை எதிர்பார்க்காதவர்கள், அவனை அமைதியாக
இருக்கச்சொல்லி
சத்தம் போட, திடீரென்று அபிக்கு பின்னால் ஒரு மாணவர் படையே நின்றது.

“என்னடா நாங்களும் மூணு நாளா பாக்கறோம், உங்க சண்டைக்கு எங்க படிப்பு ஊறுகாவா? சார்,
மேடம் எல்லாரும் இதுல தலையிட்டு சரி பண்ணுவாங்கன்னு அமைதியா இருந்தா, இவன் பெரிய
இடத்து பையன்னு ஒருத்தரும் ஆக்ஷன் எடுக்க மாட்டேங்கறாங்க. எவ்ளோ நாள் தான் நாங்களும்
சும்மாவே உக்காந்து இருக்கறது? நீங்க என்ன ஈர வெங்காயத்துக்கு காலேஜ் வரீங்களோ
தெரியாது டா. நானெல்லாம் படிச்சாதான் எங்க குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர முடியும்.
உன் பின்னாடி இருக்கற பலருக்கும் இதே நிலைமை தான். ஆனா புரியாம இன்னிக்கு உன்னோட
சுத்துதுங்க. இன்னிக்கு காலேஜ் கட்டடிச்சிட்டு வெளில உக்கார நல்லா தான் இருக்கும். ஆனா
நாளைக்கு கேஸ் இல்லாம வீட்ல வண்டி பெட்ரோலுக்கு பணம் கேக்கும் போது நாக்கை
பிடுங்கிக்கலாம் போல இருக்கும். போய் தொலைங்க டா. உங்களுக்கு பிடிக்கலன்னா நீ கத்து,
போராட்டம் பண்ணு இல்ல என்னமும் செய். எங்களை ஏண்டா வதைக்கிறீங்க.”, என்று அவன்
அபி இருக்கும் தைரியத்தில் பேச,

அபி அவன் தோளில் தட்டிக்கொடுத்து அங்கே அவனை நண்பனாக ஏற்றான்.

“இவனுங்க இங்கேயே கிடக்கட்டும். நம்ம போவோம் வா நண்பா..”, என்று காலேஜ் கதவை
கடந்து உள்ளே இருவரும் நுழைய, கிட்டத்தட்ட வாசலில் நின்றிருந்த முக்காலுக்கும் மேலான
மாணவர் கூட்டம் உள்ளே சென்றிருந்தது.

யார் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணகர்தாவோ அவன் அசையாமல் அபியை வெறித்து
பார்த்துக்கொண்டிருந்தான்.

“டேய்.. அவன் நம்ம சகாவை அடிச்சிட்டு நம்மளை மீறி எல்லாரையும் உள்ள கூட்டிட்டு
போய்ட்டான் டா. நீ என்னமோ அவனை வச்ச கண்ணு வாங்காம பாக்கற?”, என்று ஒருவன்
அவனை பார்த்து கேட்டதும், ஓங்கி அவனை ஒரு அறை அறைந்தான்.

“எனக்கு அது தெரியாதா?? இப்போ நமக்கு தேவை அன்னைக்கு என்னை வம்பிழுத்தானே
ஜான்சன், அவனோட டி.சி. அவன் பிரச்சனை முடிஞ்சதும் இவனை வச்சி செய்யலாம். இப்போ
ப்ரின்ஸி கிட்ட பேசு போ. அவன் சீட்டை கிழிப்பாரா மாட்டாரான்னு.”, என்று கோபம்
கொப்பளிக்க சொன்னான் வைரவன்.

அவன் ஒரு பெரும்புள்ளியின் மகன். படிப்பு அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு. மதிப்பெண் பற்றி
அவன் எண்ணியது கூட இல்லை. கூடவே சுற்ற பல தறுதலைகள் இருக்க, அவன் தன்னை ஏதோ
சினிமா ஸ்டார் போல எண்ணி இருந்தான். அவன் பேச்சுக்கு அனைவரும் கட்டுப்படக் கட்டுப்பட
அந்த சூழலில் அவன் மிதந்தான்.

இவனை போன்ற வேறு ஒரு பணக்கார வாரிசு தான் ஜான்சன். அவனும் கிட்டத்தட்ட
இவனைப்போல தான். ஆனால் கொஞ்சம் படிப்பான். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில்
கல்லூரி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட, இன்று அபினவ் தைரியமாக வைரவனின் தடையை
தகர்த்து உள்ளே நுழைய, அதை பற்றிக்கொண்டு அனைவரும் உள்ளே சென்றுவிட்டனர்.

அபி வகுப்பிற்குள் நுழைய, பின்னாலேயே வந்த பேராசிரியர், “நல்ல தைரியம் தான். பார்க்க
போற தொழிலுக்கு வேண்டிய ஒன்னு தான். ஆனா அவன் பணக்காரன். பகை வச்சுக்காதே.
இன்னிக்கு இல்லனாலும் நாளைக்கு தொழில் பண்ணும்போது கூட இடைஞ்சல் பண்ணுவாங்க.”,
என்றார் அக்கறையாக.

“பார்த்து நடந்துக்கறேன் சார். நான் பத்து நாள் வரல. கொஞ்சம் எல்லாத்தையும் ரேபர்
பண்ணிட்டு டவுட்டுன்னா கேக்குறேன்.” என்றதும்,

“என்னோட லெக்ச்சர் என்னோட பிலாக்ல வீடியோவா இருக்கு. பார்த்துக்கோ”, என்றார்.

“சரி சார்”, என்று வகுப்பில் ஐக்கியமானான்.

அன்று மாலை வண்டியை எடுக்க செல்லும்போது, “ஹலோ பாஸ். நீங்க தான் அந்த தண்டங்களை
தள்ளிவிட்டு உள்ள வந்ததா?”, என்று ஒருவன் கேட்டதும்,

அவனை நெற்றி சுருங்க கண்டவன், “நீங்க?”, என்றான்.

“நான் ஜான்சன். தார்ட் இயர் படிக்கிறேன். எனக்கும் அந்த வைரவனுக்கும் தான் சண்டை.”,
என்றதும்,

“ஓ.”, என்று யோசித்த அபி. “நான் உங்களுக்காக அவனோட சண்டை போடல. எனக்கு காலேஜ்
அட்டெண்ட் பண்ணனும். அவன் டிஸ்டர்ப் பண்ணினான். அதான். மத்தபடி என்கிட்ட நீங்க வேற
எதையும் எதிர்பார்க்காதீங்க. “, என்று நிதானமாக சொன்னான்.

“புரியுது தம்பி. நான் வரவே இல்ல. பசங்க போன் அடிச்சு எல்லாரும் உள்ள வந்தாச்சுன்னு
சொல்லவும் யார் டா அந்த ஹீரோன்னு பார்க்க வந்தேன். மத்தபடி ஒண்ணும் இல்ல. நீ படி. நான்
தொந்தரவு செய்ய மாட்டேன்.”, என்றான்.

“நான் ஹீரோ எல்லாம் இல்ல ப்ரோ.”, என்று சிரித்தவன், நட்பாக கரம் குலுக்கி விலகினான்.
அதுவரை இவர்கள் பேச்சை எட்டா தொலைவில் நின்று ஊமை படம் பார்த்த ஒரு ஜந்து வேகமாக
வைரவனிடம் பற்ற வைக்கச் சென்றது.

அபி வண்டியில் அமர்ந்ததும், போன் அடிக்க, வேகமாக அதை காதில் வைத்தான். அதில் அவன்
மனம் விரும்பும் நட்புடையாள் அழைக்க அதில் அவளை சமாதானம் செய்ய வந்த அவசரம்
அவனுக்கு.

“சாரி.. சாரி.. சாரி.. என்னை மன்னிச்சிடு குட்டி குரங்கே.. நான் பத்து நாளா நாயா பேயா
அலஞ்சதுல உன்னோட ரிசல்ட் விஷயம் கூட மறந்து போச்சு. என்னை மன்னிச்சூ..”, என்று
அவளுக்காக அவன் இறங்கி பேச,

“போ ஜே.பி. எவ்ளோ ஆசையா எத்தனை தரம் கூப்பிட்டேன் தெரியுமா..”, என்றாள்
குழந்தைத்தனமாக.

“ஏய்.. காலேஜ் போகப்போற.. கொஞ்சம் போல வளரும்மா.. இன்னும் பால்வாடி பாப்பா போல
ஒரு குரல். இதில டன் டன்னா சிணுங்கல் வேற.”, என்று வம்பிழுக்க,

“ஜே.பி. இப்போ ஒழுங்கா நான் சொல்லபோறதை கேக்க போறியா? இல்ல நீ இப்படியே
பேசிட்டு இருக்க வேண்டியது தான். நான் போனை வச்சிட்டு போயிடுவேன் ஆமா. “, என்று
அவள் முறுக்கிக்கொள்ள,

“தாயே.. மலையிறங்கு.. சொல்லு.. எவ்ளோ மார்க் வாங்கின? உன்னோட லாலிபாப் கிட்ட
பேசிட்டியா? உன்னோட அந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் எவ்ளோ மார்க்?”, என்று வரிசையாக
கேள்வியை அடுக்க,

“நான் ஆயிரத்து நூற்றி நாற்பத்தி மூணு மார்க் வாங்கி இருக்கேன். என் லாலிபாப் கூட
டயம்டேபிள் போட்டு பேச ஆரம்பிச்சாச்சு. அப்பறம்… “,என்று அவள் இழுக்க,

ஆர்வம் தாங்காத அபி, அவன் மனத்திற்கினியவளின் மதிப்பெண் தெரிய வேண்டி ஆவலில்,
“சொல்லித்தொல டி.” என்று கடுப்பாக,

“ஆமா… நீ ஏன் எப்பயும் அவளை பத்தியே கேக்குற.. என்ன லவ்வா?”, என்று போட்டு வாங்க
முயல,

‘உனக்கு நானா மாட்டுவேன்?’ என்று அபியும், “சொன்னா சொல்லு இல்லனா போ டி “, என்று
அலட்சியம் காட்ட,

“அடடா.. தப்பு பண்ணிட்டியே ஜே.பி. இன்னிக்கு அவளோட போட்டோ உனக்கு
காட்டலாம்ன்னு நெனச்சேன். ஆனா உனக்கு வாய் ஜாஸ்தி. அதுனால இல்ல போ.”, என்றாள்.

அபி தன்னையே நொந்தவனாக, “பட்டு, செல்லம்.. அம்முக்குட்டி.. நல்ல பிள்ளை தானே.. எனக்கு
அவளை கொஞ்சம் காட்டு மா.”, என்று இறங்கி வந்து கேட்டான்.

‘அது. அப்படி வா வழிக்கு’ என்று நினைத்த ஆரூ,”இப்போ சொல்லு அவ மேல லவ்வா?”,
என்றதும்,

“இல்ல.. ஆனா அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.”

“நீ தான் அவளை பார்த்ததே இல்லையே?”, என்றதும்,

“நல்ல அபிப்பிராயம் வைக்க பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்ல டா. அன்னைக்கு
உனக்காக எனக்கு நன்றி சொன்னாளே.? எத்தனை நட்பு இப்படி அன்பா, புனிதமா இருக்கும்.
நட்பே இப்படின்னா.. அவளை வாழ்நாள்  பூரா என்னோட இருக்க வைக்க வாய்ப்பு கிடைச்சா
நல்லா இருக்கும்ல..”, என்றான்.

ஆரூ யோசனையில் ஆழ்ந்தாள். இப்போது ரிதுவை பற்றி சொல்லலாமா வேண்டாமா என்ற
குழப்பம் அவள் மனதில் வந்தது..

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��43��

ஆருஷி யோசனையாக இருக்க, “ஏய் பிளீஸ் ஆரூ. உண்மையிலேயே நான் அவளை
விரும்புறேன். அவளோட என் வாழ்க்கையை பகிர்ந்துக்க நினைக்கிறேன். அவளை பத்தி
சொல்லு.”, என்று உருக்கமாக அபி கேட்டதும்,

உள்ளே ஆருவுக்கு உருக்கினாலும், “இல்ல ஜே.பி. அவ ரொம்ப பெரிய லட்சியத்தோட இருக்கா.
அவளை எதுவுமே டிஸ்டர்ப் பண்ண அவ ஆலோவ் பண்ண மாட்டா.”

“ஏன்டி லூசு. நான் என்ன நாளைக்கே அவ முன்னாடி போய் நான் உன்னை விரும்புறேன். நீயும்
என்னை லவ் பண்ணனும் இல்லனா சும்மா விடமாட்டேன்னு டையலாக்  பேசுற ரோட் சைட்
ரோமியோவா? எனக்கும் லட்சியம் இருக்கு டி. நான் அதுக்காக எவ்ளோ மெனக்கெடுறேன்
தெரியுமா? என்னவோ அவளை பத்தி நீ செல்லும்போதெல்லாம் உள்ள ஒரே கொண்டாட்டமா
இருக்கு. அதை அனுபவிக்கும்போது அப்படியே எப்படி இருக்கு தெரியுமா? நான் அவளை
தொந்தரவு பண்ண மாட்டேன். ஒருவேளை நான் ஆசைப்பட்டது நடக்கலன்னாலும் அவளை நான்
.. “,என்று சொல்ல முடியாமல் அவன் நிறுத்த,

“ஜே. பி. எனக்கு உன் மனசு புரியுது. நான் தான் அவளை பத்தி பேசி பேசி உன்னை இப்படி
ஆக்கிட்டேனோ.. ரொம்ப குற்றவுணர்வா இருக்கு.”

“அதெல்லாம் இல்ல டா. அவ குணம்.. அதான் என்னை அவ பக்கம் ஈர்த்துச்சு. உன் பேச்சை விட,
அவ அன்னைக்கு ஒரு பத்து செகண்ட் பேசினா பாரு. அங்க விழுந்துட்டேன்.”,என்று அவன்
உல்லாசமாக சொல்ல,

“ஜே.பி நீயா இது. எப்பயும் கருத்து சொல்லி, இதை செய், இதை செய்யாதன்னு சொல்ற பழம்
நீயா இப்படி பேசுற.. உன் குரலில் தெரியறத்துக்கு பேர் தான் காதல்.. வாவ்.. செம்ம. “,என்று
அவள் சிலாகிக்க,

“ஏன்டி குட்டச்சி.. நான் என்ன ரோபோவா? நானும் வயசுப் பையன் தான். நானும் சேட்டை
எல்லாம் செய்வேன். என் பங்கு இருந்திருக்கணும். நானும் அவனும் அதகளம் பண்ணி
இருப்போம். அவன் இல்லாததால தான் நானே ஒரு மார்க்கமா சுத்துறேன். “,என்று
குறைப்பட்டான்.

“சரி சரி.. ஒத்துக்குறேன். நீயும் ஒரு ரொமாண்டிக் ஹீரோன்னு நான் ஒத்துக்குறேன்.”, என்று
அவள் சினிமா வசனம் போல சொல்ல,

“ஏய்.. உதைக்கணும் டி உன்னை. பிளீஸ் அவ பேராவது சொல்லேன்.”, என்று அபி கெஞ்ச,

ஆருஷி யோசித்தவளாக, “அபர்ணா”, என்றாள்.

அபிக்கு உள்ளே பூமாரி பொழிய,  ‘அபிநவ், அபர்ணா’ என்று உள்ளே சொல்லி சொல்லி
மகிழ்ந்தான்.

“ஜே.பி.”, என்று இங்கே போனில் ஆருஷி கத்திக்கொண்டு இருக்க, அபி கனவுலகத்தில்
மிதந்தான். கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்தவள்,

“நான் அவ போட்டோ உனக்கு காட்டமாட்டேன் போடா.. “,என்று கத்திவிட்டு போனை வைக்க,
அது மட்டும் தெள்ளத்தெளிவாக அபி காதில் விழ,

“அய்யயோ.. “, என்று அலறியவன், “ஆரூ.. ஆரூ.. “,என்று கத்த.. அவள் தான் வைத்துவிட்டு
போய்விட்டாளே..

போனை பார்த்து தான் தலையில் தானே அடித்துக்கொண்டவன், என்ன செய்ய என்று
யோசிக்கும்போது,

“என்ன நண்பா காதலியா?”, என்ற கேள்வி அவன் முதுகுப்புறம் இருந்து கேட்க,வண்டியில்
இருந்து இறங்கி நின்றான்.

காலையில் அபி இருக்கும் தைரியத்தில் அந்த கூட்டத்திடம் பேசிய அந்த நெடியவன் தான் அங்கே
நின்றுகொண்டு இருந்தான்.

“வாங்க நண்பா. சொல்லுங்க.. இன்னிக்கு லெக்சர் எல்லாம் அட்டெண்ட் பண்ணியச்சா? “

“ஆமாம் பா. மூணு நாளா காய விட்டுட்டாங்க.”

“நீங்க எந்த இயர்?”

“இப்போ செகண்ட் இயர் நண்பா. பி.எல் ல என்ன எடுத்திருக்கீங்க?”

“கிரிமினல் லா நண்பா. “

“நான் சிவில்”, என்றான். “ஆனா கொஞ்சம் போரிங்கா இருக்கு. மாற முடியுமான்னு பாக்கறேன்.
கேட்டுட்டேன். இன்னும் ஒரு வாரத்துல சொல்லிடுவாங்க.”

“ஏன் நண்பா?”

“என்னமோ அப்பா சொன்னாரேன்னு இதை எடுத்துட்டேன். மனசு அதுல ஒன்றல. அப்போ தான்
லைப்ரரில கிரிமினல் லா புக்ஸ் படிச்சேன். இன்டெர்ஸ்ட் வந்தது. போராடி மாத்தக்
கேட்ருக்கேன்.”

“சரி நண்பா. மாறிட்டு சொல்லுங்க. நான் ஸ்டடீஸ்க்கு ஹெல்ப் பண்றேன்.”

“கண்டிப்பா நண்பா. ஆமா.. நண்பா நண்பா ன்னு கூப்பிட்டுட்டு இருக்கோம். உங்க பேர் என்ன?”

“இன்னும் என்ன நீங்க வாங்க ன்னு அபின்னு உரிமையா கூப்பிடு நண்பா.”

“அபியா? யோவ் முழு பேர் சொல்லுய்யா..”, என்று சிரிக்க,

“நண்பன்னு சொன்னாலே இந்த குசும்பு வந்து ஒட்டிக்கும் போல, என் பேர் அபினவ்.”, என்றான்
சிரித்துக்கொண்டே.

“அபி.. நான் நிதீஷ்”, (யார்ன்னு தெரியுதா மக்களே)

இருவரும் சற்று நேரம் அளவளாவி விட்டு, வண்டியில் சென்ற அபிக்கு மனம் இறக்கை இல்லாமல்
பறந்தது.

தன் மனதின் ஆழத்தில் பதிந்தவளின் பெயரும். புதிதாய் ஒரு நட்பும் ஏற்பட்டுவிட, அபி முகம்
கொள்ளா புன்னகையோடு வீட்டின் வாசலில் பைக்கை நிறுத்தினான்.

அவன் புன்னகை எல்லாம் வாசல்படியோடு துடைத்து எடுத்தது போல காணாமல் போனது.

அங்கே விக்னேஷ் இறுகிய முகத்தோடு அமர்ந்திருக்க, ரேகா அலட்சியமாக அமர்ந்து
தந்தையோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

அபி சங்கரியை தேட, அவர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

“வாங்க மாமா.”, என்று விக்னேஷிடம் பேசியதும்,

“என்ன மச்சான் நீ ஒரு தகவல் கூடவா தர மாட்ட, ரேகா எவ்ளோ துடிச்சு போய்ட்டா
தெரியுமா?”,என்றதும் அபி தன் முஷ்டி இறுக,

“கொஞ்சம் வெளில போய் பேசலாம்”, என்று அமைதியாக சொன்னாலும், அவன் குரலில் கடுமை
இருந்ததை விக்னேஷ் உணர்ந்து, யோசனையோடு பின் தொடர்ந்தான்.

“என்ன  மச்சான். நான் என்னமோ நீ தனியா சமாளிச்சிருக்க, சொல்லாம இருந்திருக்கன்னு
கோவமா பேசுனா, நீ வெளிய கூப்பிடுறதை பார்த்தா என் பொண்டாட்டி திருவிளையாடல்
இருக்கும் போலயே.”, என்று அவனே ஆரம்பிக்க,

நடந்தவைகளை பொறுமையாக விவரித்த அபி, “அவளுக்கு அப்பா முடியாம போன அடுத்த
அரைமணி நேரத்துல தகவல் வந்திருக்கும். ஏன்னா அப்போ ஸ்வாதியும் மகேஷ் மாமாவும் இங்க
தான் இருந்தாங்க.”

“அப்பறம் மகேஷ் ஏன் என்கிட்ட சொல்லல?”, என்று யோசனையாக கேட்ட விக்னேஷிடம்,

“அன்னைக்கு அப்பாக்கு அப்படி ஆனதும் ஸ்வாதி அக்கா பயந்துட்டா, நான் தான் மகேஷ் மாமா
கிட்ட, அவ குழப்பமா இருக்கற நேரம் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. போனை வாங்கி
வச்சிக்கோங்க. அவளை யோசிக்க விடுங்க. ஏதும் கோவமா பேசுனா, அப்பாவை படுக்க வச்சது
பத்தாதான்னு கேட்டு அவளை ஆஃப் பண்ணுங்க. கொஞ்ச நாளில் அவளே மாறிடுவா.
அதுக்குள்ள நான் விக்னேஷ் மாமா கிட்ட பேசுறேன்னு சொன்னேன்.”

“ஓஹ். அதான் சகல என்கிட்ட ஒன்னுமே சொல்லலயா? இன்னிக்கு காலைல இவ ஒரே அழுகை
மச்சான். எங்க அப்பா முடியாம இருக்காரு. நான் போகணும்ன்னு.
முன்னாடி மாதிரி நான் இவளை இங்க அனுப்பறது இல்லையா. அதான் சரி வா நானும் வரேன்னு
கிளம்பி வந்தேன். உங்க அப்பா. பத்து நாள் ஆச்சுன்னு சொன்னதும், மூத்த மாப்பிள்ளை நான்,
என்கிட்ட கூட சொல்லலையேன்னு கேட்டேன். அவர் தான் அபி தான் எல்லாம்
பார்த்துகிட்டான்னு சொன்னாரு. அதான் கொஞ்சம் கோவமா பேசிட்டேன்  மச்சான்.”

“பரவால்ல மாமா. அப்பா யார் கிட்டயும் பத்து நாளா பேசவே இல்ல. உங்க கிட்ட
பேசிருக்காருன்னா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு.”

“ஆமா.. பத்து நாளா கம்முன்னு இருந்துட்டு இன்னிக்கு ஏன் மச்சான் இவ கிளம்பி வந்தா? இவ
ஐடியாவே எனக்கு புரியல.”

“உங்க பொண்டாட்டியை பத்தி என்கிட்ட கேக்குறீங்க மாமா. “,என்று அபி சிரிக்க,

“அட ஏம்பா.. முன்னாடி இவ இப்படி இல்ல. இப்போதான் கொஞ்ச நாளா என்னென்னவோ
வேலையெல்லாம் பண்றா. எனக்கு சத்தியமா ஒன்னுமே புரியல.”

“அவ தனியா இருக்கா மாமா. அது மட்டும் இல்ல சோம்பேறியாவும் இருக்கா. சோம்பேறியின்
மனம் சாத்தானின் உறைவிடம். அவளை எங்கேஜ் பண்ணுங்க மாமா நீங்க. இன்னும் குழந்தை
பற்றி யோசிக்கலையா இல்ல டாக்டர் கிட்ட போக தயக்கமா? “,என்று நேரடியாக அபி
கேட்டதும்,

“அதெல்லாம் டாக்டரை பார்த்தாச்சு. ஒரு பிரச்சனையும் இல்ல. பிறக்கும் போது பிறக்கும்ன்னு
சொல்லிட்டாங்க. எங்க அம்மாவும் இதை பத்தி பேசறதே இல்ல. அப்பறம் இவளுக்கு என்ன
மச்சான் பிரச்சனை.”

“வேற என்ன இருக்கப்போகுது. தன் மேல எல்லார் கவனமும் திரும்பணுன்னு நினைக்கிறா. அது
பரிதாபமா, கோபமா, எப்படி இருந்தாலும் அவளுக்கு பரவால்ல. அதை பாசமா திருப்பறதுக்கு
அவளுக்கு தெரியல. பேசாம அவளை கூட்டிட்டு ஒரு டூர் போய்ட்டு வாங்க. இடமாற்றம்
மனமாற்றம் தரும் இல்லையா?”, என்றதும்,

“மச்சான் வர வர நீ செம்மையா பேசுற தெரியுமா?”, என்று விக்னேஷ் கட்டிக்கொள்ள,

“மாமா”, என்று கூச்சமாக நெளிந்தவன், “என் ப்ரோபஷனுக்கு பேச தெரியணும், கவுன்சிலிங்
பண்ண தெரியணும். சோ அது சம்மந்தமான புக்ஸ், வீடியோஸ் எல்லாமே பாக்கறேன் மாமா.
“,என்று சொன்னான்.

“உண்மையிலையே நீ ஒரு அதிசயம் டா. உனக்கு வரப்போற மனைவி மட்டும் சரியா
அமைஞ்சிட்டா நீ தான் டா ராஜா.”, என்றான் விக்னேஷ்.

“போங்க மாமா.”, என்று அபி சொல்லும்போது அவன் முகத்தில் கம்பீரம் கலைந்து, கனவு
மிதந்தது விழிகளில், அதை கண்டு கொண்ட விக்னேஷ், ‘மச்சான்  எங்கயோ சிக்கீட்டான். அவன்
செஞ்சா சரியா தான் இருக்கும்’, என்று மனதில் நினைத்தவனாக, கிளம்பி உள்ளே வர, சங்கரி
எரிச்சலாக பார்வை ஒன்றை ரேகாவின் மேல் வீசியபடி நின்றிருந்தார்.

ரேகா என்ன சொன்னாளோ, ராகவேந்தர் முகம் கொஞ்சம் தெளிவாக இருந்தது. அபி நெற்றி
சுருக்கி யோசனையோடு ரேகாவை ஏறிட, அவளோ அவன் விழிகளை சந்திக்காமல்
சொல்லிக்கொண்டு விக்னேஷோடு கிளம்பினாள்.

சங்கரி, கணவன் ஏதாவது சொல்வார் என்ற எதிர்பார்ப்போடு அவர் முன்னால் நிற்க, அவரோ
கண்களை மூடி படுத்துக்கொண்டார்.

அபிக்கு எரிச்சல் வந்தாலும், இப்போது அம்மாவை தனியாக விட்டு செல்வது சரியாக இருக்காது
என்று பொறுமை காத்தான்.

சங்கரி அபியிடன் வந்து விக்னேஷ் பற்றி கேட்டதும், அவர்களுக்குள் நிகழ்ந்த பேச்சை அபி
சொல்ல,

“நீ சொல்றதும் சரி தான்.”,என்று பெருமூச்சோடு நகர இருந்தவரை அமர்த்தி மடியில் படுத்தவன்,

“ஏம்மா ரேகா அக்கா இப்படி இருக்கா?”

“அவ அப்படியே உங்க தாத்தா மாதிரி அபி. தான் பிடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிற்பார். அது
சரியா தப்பான்னு எதிராளி இடத்துல இருந்தெல்லாம் யோசிக்கவே மாட்டார். இவ உரிச்சு வச்சது
போல அவராட்டம் வந்து பிறந்திருக்கா.”

“அப்போ ஸ்வாதி?”

“அது அப்படியே உங்க பாட்டி தான். தாத்தா என்ன சொன்னாலும் அப்படியே கேட்டு நடப்பாங்க.
அதான் அவளும் அப்படியே ரேகா பேச்சை கேக்குறா.”

“நான் மா?”

சங்கரியிடம் ஒரு நீண்ட மௌனம்.

“என்னம்மா அவங்க தான் அப்பாவோட அப்பா அம்மா மாதிரி. நான் உங்க அப்பா அம்மா மாதிரி
இருக்கேனா? என்ன சொல்லு?”, என்று எழுந்து அமர்ந்து அவன் ஊக்க,

“மாவு அரைக்கணும் அபி. நேரம் ஆச்சு.” என்று அவனை விட்டு எழுந்து சென்றார்.

‘இதென்ன டா அம்மா ஒரு விஷயத்தை பாதில விட்டு போறாங்க.’, என்று அவன் யோசிக்க,

அவன் சிந்தனையை கலைத்து அவள் செல்பேசி அழைப்பு.

நித்திலன் தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க சார்.”, என்று அபி அதில் கவனமாக, இரண்டாம் அழைப்பாக வந்த ஆருவின்
அழைப்பை அவன் கவனிக்கவில்லை.

நான்கு முறை அழைத்தும் அவன் எடுக்காத கடுப்பில், வாட்ஸாப்பில் அவனுக்கு ரித்துபர்ணாவின்
செய்தித்தாளில் வந்த செய்தியை போட்டோ எடுத்து அனுப்பி இருந்தவள், அவன் பார்க்கும்
முன்பே அதை அழித்தாள்.

“கடந்து காஞ்சு போ டா மவனே. எத்தனை தரம் உன்னை கூப்பிடுறது. அவ்ளோ வேலையோ.
எப்படி ரிது போட்டோவை என்கிட்ட நீ வாங்கறன்னு நானும் பாக்கறேன். “, என்று செல்ல
கோபம் கொண்டாள்.

★★★★

��அகலாதே ஆருயிரே��
��44��

நித்திலன் அபியை இப்போதெல்லாம் கடை வேலை பார்ப்பதை அனுமதிப்பதில்லை. முழுக்க
முழுக்க கேட்டரிங் ஆர்டர் பற்றிய வேலைகளுக்கே அவனை அனுப்பினார். அவன் படிப்புக்கும்,
நாளைய தொழிலுக்கும் எந்த பங்கமும் வரக்கூடாது என்று அவர் நினைத்தார்.

ஒரு கேட்டரிங் ஆர்டர் பற்றி அவருடன் பேசிவிட்டு தவறிய அழைப்புகளில் இருந்த ஆருவின்
எண்ணை பார்த்ததும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான். கண்டிப்பாக அந்த மங்கம்மாள்
மலையிறங்க மாட்டாள் என்று அவனுக்கே நன்றாக தெரியும்.

அபி ஏதோ யோசித்தவனாக, ஹாலின் டேபிள் கலைந்து கிடந்த தினசரிகளை ஒதுக்க, அதில்
மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி என்று இருக்கவும், “என்னையும் ஒரு பொண்ணு
தான் ஒரு மார்க் ல முந்திச்சு. அது எப்படி தான் பொண்ணுங்க முட்டி முட்டி அப்படி
படிக்கிறாங்களோ போ.” என்று நகர போனவன் கண்கள் நிலைகுத்தின. அங்கே ‘ரிதுபர்ணா’
என்ற பெயர் தெரிய, அதை கைகளால் வருடியவன், “என் டார்லிங் பேர் கூட அபர்ணா தான்.
என்ன ஒரு ஒற்றுமை”, என்று சிரித்துக்கொண்டான்.

“அவளும் அதிக மதிப்பெண் பெற்றிருப்பாள் தான். எங்கே இந்த வாலில்லாத வானரம் தான்
அவளை பற்றி வாயே திறக்க மாட்டேன்கிறா. “, என்று புலம்பியவன்,

வாட்ஸாப்பில் அவள் போட்டு அழித்த செய்தியை கண்டு, ஐயோ என்று நொந்தான். ‘என்னத்தை 
அனுப்பினாளோ, என்னத்தை அழிச்சாளோ தெரியலையே’, என்று புலம்பியபடி அங்கிருந்து
எழுந்தான்.

கை தவறி தினசரி கீழே விழ, ரிது பேட்டி கொடுக்கும் புகைப்படம் அதில் இருந்தது. மெல்ல
எடுத்தான். அந்த முகத்தில் தெரிந்த தெளிவில், ஆளுமையில் கரைந்தே போனான்.

என்னோட அபர்ணாவும் இப்படி தான் இருப்பா என்று உள்ளே சொல்லிக்கொண்டான். ரிதுவை
பார்க்கவில்லையே தவிர,அவள் ஆருவுக்கு கொடுத்த அறிவுரை, அவள் படிக்க எடுத்த முயற்சி,
கடுமையான நேரம் கடைபிடித்தல், அதோடு அவளின் அற்புதமான சமையல். என்று அவளை
பற்றி சகலமும் அறிந்தவன், ஏனோ அவளை மட்டும் அறியவில்லை.

ரிதுவின் முகத்தை ஆழ்ந்து நோக்கியவன், புன்னகை சிந்தி, அவன் வேலையை தொடர்ந்தான்.

ஒரு வருடம் தாக்குப்பிடித்த கோமதிநாயகம் ஏனோ அவர் ஊருக்கு ஒருமுறை சென்று வந்தால்
நலமாக இருக்கும் என்று எண்ணினார்.

சாந்தலட்சுமியிடம் இதை சொல்ல, அவருக்குமே தன் தோழிகளை ஒருமுறை பார்த்துவிட்டு தன்
மனம் கவர்ந்த சமையபுரத்தாளை தரிசித்து வந்தால் என்ன என்று தோன்ற, கணவனின் எண்ணம்
சொல்லாமல் மெதுவாக மகனிடம் கோரிக்கை வைத்தார்.

சோமுவுக்கு அவர்கள் மனநிலை நன்றாகவே புரிந்தது. ‘தானும் காலை போய் இரவு வீடு திரும்ப,
லதா சமைத்துவிட்டு அவள் தோழி வீட்டுக்கு எம்பிராய்டரி போட போய்விட்டு மாலை தான்
வருகிறாள். அவர்கள் இருவரும் அதை தொழிலாக ஏற்ற பின், லதா அதிகம் பெரியவர்களை
பேசுவதில்லை. அவளும் அமைதியாக போய்விடுகிறாள். ஆக வீட்டில் இருவரும் தனியாக
இருப்பது மிகவும் கடினம் தான். சரி ஊருக்கு போய்விட்டு சில கோவில்களுக்கும் சென்று
வரட்டும்’, என்று எண்ணியவர்,

“பார்த்து போய்ட்டு வாங்க. ஆனா சீக்கிரமா வந்துருங்க. உங்க பிரெண்ட்ஸ் கூடவே இருந்திட
வேண்டாம். இப்போ தான் நான் கொஞ்ச நாளா நிம்மதியா இருக்கேன்.” என்றதும்,

“எங்களுக்கும் இந்த வயசுல என்ன வேணும் சோமு. பேரனும் கூட இருந்திருந்தா
தெரிஞ்சிருக்காது. அவனும் வெளியூர் போகவும் தான் கஷ்டமா இருக்கு. வேற ஒன்னும் இல்ல.
“,என்று பயண ஏற்பாட்டை கவனிக்கலானார்.

கோமதி நாயகம் தன் நண்பன் ரங்கசாமிக்கு அழைத்து வரப்போகும் விஷயத்தை சொல்ல, அவரும்
அவர் மனைவியும் மகிழ்ந்து போனார்கள். ‘எப்படியும் மகள் பற்றி ஏதேனும் அறிந்து வருவார்கள்’
என்ற ஆவல் பெருக,

“வா நாயகம், நான் ஆவலா இருக்கேன். அது பாப்பாவை பத்தி எதுவும் தெரிஞ்சதா?”, என்றார்.

தர்மசங்கடமாக உணர்ந்த அவர்,”நேர்ல சொல்றேன் ரங்கம் “, என்று போனை வைத்துவிட்டு
மனைவிக்கு உதவினார்.

ஹர்ஷா கவனம் படிப்பில் இருந்தாலும் ஏனோ மனம் அபியை அதிகம் தேடியது. ஒரு வருடம்
கடந்த நிலையில், அவனோடு பேசினால் என்ன? என்று தோன்ற,

போனில் அவன் எண்ணை அழுத்திவிட்டு காத்திருந்தான்.

போன் எடுக்கப்படாமலே போனது. மனம் வாடிய ஹர்ஷா, முதல் முறையாக அழுதான்.
வாய்விட்டு, கத்தி, கதறி, உடல்குலுங்க அழுதான். ஏனோ அவனுக்கு அபியை பார்க்கவேண்டும்,
பேச வேண்டும் என்று தோன்றிக்கொண்டே இருக்க,

அபி போனும் எடுக்காமல் போக, ஹர்ஷா வருத்தமும் இயலாமையும் பொங்க, அழுது தீர்த்தான்.

அவன் தங்கி இருக்கும் வீடு, அவன் மட்டுமே இருக்கும் ஒற்றை அறை கொண்டது ஆகும். லதா
எவ்வளவோ சொல்லியும் கல்லூரி ஹாஸ்டலை விட செலவு குறைவு என்று சொல்லி இங்கேயே
தங்கி விட்டான். அவன் அறைக்கதவு தட்டப்பட,

ஏதோ ஒரு உந்துதல், ‘அபி வந்திருப்பானோ?’ என்று எழுந்து ஓடி வர, அங்கே உணவு கொண்டு
வரும் பாட்டி நின்றிருந்தார்.

“என்ன கண்ணு, கண்ணு கலங்கி இருக்குதே, உன்ற கூட ஆறுமே இல்லையா? மனசுக்கு ஒரு
மாதிரி இருக்கா? பக்கத்துல தான கண்ணு பார்க் இருக்கு. கொஞ்ச நேரம் போய் உக்கார
வேண்டியது தானே. நாலு மனுஷங்களை பார்க்கலாம்ல ?”,என்று சொல்லிவிட்டு,

“நல்லா சாப்பிடு கண்ணு. மீதம் வைக்காத. நீ குடுக்கற காசுக்கு நான் பொங்கி போடறேன்.
ஆனாலும் நீ ஆள் நல்லாவே சாப்பிட மாட்டேன்கிற. உங்க அம்மாளுக்கு போனை போட்டு
சொல்லட்டா?”, என்றதும்,

“இல்ல பாட்டி நான் சாப்பிடுறேன்.”, என்று கேரியரை வாங்கிக்கொண்டு அவரை அனுப்பி
வைத்தான்.

கதவை சாற்றி விட்டு, ஆருவுக்கு போன் செய்து சொல்ல,

“ஏண்டா இதென்ன சினிமாவா நீ நினைச்சதும் உன் எண்ணத்தின் நாயகனே கண் முன்னே
தோன்றினான் அப்படின்னு , அவன் உன் முன்னாடி நிக்க? ஒரு தரம் தானே போன் பண்ணின?
ஏதாச்சும் வேலையில் இருந்திருக்கலாம். அப்பறமா மறுபடியும் கூப்பிட்டு பாரு. என் செல்ல
லாலிபாப் அழலாமா? நான் ரிதுவுக்காக அழுதப்ப எவ்ளோ ஆறுதல் சொன்ன? விடு டா. ஆமாம்

அவங்க முழு பேர் என்ன டா. அபின்னா பொண்ணு பேர் போல இருக்கு.”,என்று கிண்டல் குரலில்
கூறி அவனை கொஞ்சம் சரியாக்க முயன்றாள்.

“ஏய்.. அவன் பேர் அபினவ் டி ஐஸ்க்ரீம். நான் செல்லமா அபின்னு கூப்பிடுவேன்.”, என்றதும்,
ஆருவுக்கு எங்கோ பொறிதட்டியது.

“ஏய் நீயும் அவரும் சேர்ந்து செஞ்சதெல்லாம் சொல்லு.”, என்று  வேகமாக கேட்டாள்.

“உனக்கு எதுக்கு ஐஸ்க்ரீம்??”

“சொல்லுவியா மாட்டியா? நீ அவரை எப்படி டா கூப்பிடுவ? அவர் எந்த ஸ்கூலில் படிச்சாரு?
இப்போ என்ன பண்றாரு?”, என்று கேள்விகளால் அடுக்க,

“ஏய் என்ன டி இவ்ளோ கேள்வி கேக்குற? பொண்டாட்டி ஆகும் முன்னாடியே இவ்ளோ கேட்டா,
நாளைக்கு கல்யாணம் ஆனா என்ன செய்வ?”

“அடேய்.. அதை அப்பறம் பார்க்கலாம். இப்போ பதிலை சொல்லு டா மட சாம்பிராணி.”,
என்றதும்,

“இதெல்லாம் ரொம்ப ஓவர் டி.”

“சொல்லப்போறியா இல்ல நானும் உன்னோட பேசாம போகவா?”, என்று அவள் மிராட்டவும்,

“இதெல்லாம் ரொம்ப தப்பு ஆரூ. நான் பாவம். சரி சொல்றேன் கேளு.அவன் பேர் அபினவ். நான்
அவனை பங்குன்னு கூப்பிடுவேன்.RRR ஸ்கூல்ல படிச்சான். இப்போ லா படிச்சிட்டு இருக்கான்.”,
என்றதும்,

போனை வைத்துவிட்டாள் ஆரூ.

“ஏய்.. ஐஸ்க்ரீம்..”, என்று இங்கே ஹர்ஷா கத்த,

அவளோ தன் நண்பன் தான் லாலிபாப்பின் நண்பன். ஹர்ஷா தான் ஜே.பி யின் பங்கு. ஆருவுக்கு
என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதற்கு சந்தோஷப்பட வேண்டுமா? வருத்தம் கொள்ள
வேண்டுமா? என்றே புரியாமல் சில நிமிடங்கள் கழித்தாள்.

நாளை அவள் கல்லூரியின் முதல் நாள் என்பதால் மாலை ஜே.பி யோடு பேசிக்கொள்ளலாம்
என்ற முடிவுடன் உறங்கச்சென்றாள்.

அபி அவன் வீட்டு மொட்டை மாடியில் படுத்திருந்தான். மனம் ‘அபர்ணா’ என்று அவள் பெயரை
உச்சரித்துக்கொண்டு இருக்க,

‘மவனே அவளை நெனச்சு படிப்புல கோட்டை விட்டுடாத டா’, என்ற மனசாட்சியை மண்டையில்
தட்டி, ‘எனக்கே எனக்குன்னு ஒரு விஷயம் ஆசைப்பட்டேன். உனக்கு அது பொறுக்கலையா.
ஓடிப்போ..’, என்று துரத்திவிட்டு வானில் மின்னிய நட்சத்திரங்களை ரசித்தான்.

‘எத்தனை ஆண்டுகள் இங்கே படுத்துறங்கி இருக்கிறான். என்றேனும் இந்த நட்சத்திரங்களை
அவன் ரசித்ததுண்டா?’, என்று அவன் மனம் அவனை கேலி செய்ய,

‘எல்லாம் காதல் படுத்தும் பாடு.’ என்று மீண்டும் மனசாட்சி குரல் கொடுக்க,

‘இன்னும் போகலையா நீ?’, என்று அதை விரட்டி விட்டான்.

நட்சத்திரங்களுக்கு இடையில் அவன் மனம் அபர்ணாவின் பூமுகம் எப்படி இருக்கும் என்று
யோசிக்க, ரிஷியின் முகத்தை ஒத்த முகமோ? என்று யோசனை எழுந்தது.

‘இல்ல நானும் அக்காக்களும் ஒன்னு போலவா இருக்கோம். இல்லையே.. அது போல அவள் ரிஷி
போல இருக்க வாய்ப்பில்லை.’, என்று அந்த எண்ணத்தை தள்ளினான்.

ஏனோ மனம் அந்த வான்வெளியில் வெள்ளிகளுக்கு இடையில் பிறை போல ரிதுபர்ணாவின்
முகம் தோன்ற விதிர்த்து போனான்.

‘அவள் பெயர் போல இருக்கலாம். அவள் பேச்சு போல் இருக்கலாம். அதற்காக அவளின் முகம்
போல இருக்குமா? என் அபர்ணாவை அப்படியா சிந்திக்கிறேன்.’ என்று அவனையே
திட்டிக்கொண்டவன், மீண்டும் கற்பனையில் அபர்ணாவின் முகம் காண கண்ணை மூட, அங்கும்
ரிதுவின் முகமே தெரிந்தது.

‘தான் குழம்பிவிட்டோம். தன் மனதை தினசரியில் வந்த செய்தியோடு குழப்பி விட்டோம்’, என்று
புரிந்தவன் வேங்கடவனை நினைத்து பிரார்த்தித்து, ‘உறக்கம் வந்தால் போதும், அபர்ணாவை
பார்க்கும் போது பார்த்துக்கொள்கிறேன். இனி கற்பனை சரிவராது.’ என்று நினைத்து
கண்ணயர்ந்தான்.

அவனுக்கு மனதில் பெயராய் அபர்ணாவும், முகமாய் ரிதுவும் வீற்றிருக்க, கலவையான
எண்ணங்களை ஒதுக்கி நித்திரையில் ஆழ்ந்தான்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��45��

ஆருஷி தன் முதல் நாள் கல்லூரியில், தனிமையை அதிகம் உணர்கிறாள். பள்ளி முழுவதும்
கூடவே இருந்த ரிதுவின் பிரிவு அவளை இத்தனை நாட்களை விட, கல்லூரி முதல் நாள்
அதிகமாக தாக்கியது.

தன் கையோடு கை கோர்த்து எப்போதும் முகத்தில் வாடாத சிரிப்புடன், எதற்கும் கலங்காமல்
நிற்கும் தோழியை வெகுவாக அவள் மனம் தேட,

மனதை வகுப்பில் முயன்று ஒருநிலை படுத்தினாள். ரிது சொல்லும் வார்த்தை அவள் காதுக்குள்
ரீங்காரம் இட்டது.

“உன்னோட எல்லா சோகமும், துயரமும், இயலாமையையும் நீ கோபமா வெளிப்படுத்தாம, அதை
உனக்கான ஆற்றலா மாற்றிக்கணும். அப்போ தான் உன்னை பார்த்து சிரிச்சவங்க, உன்னை
ரொம்ப சாதாரணமா நினைச்சவங்க முன்னாடி நிமிர்ந்து நின்னு அவங்களை அன்னார்ந்து பார்க்க
வைக்க முடியும். அழுகையை குறைச்சிட்டு என்ன வழின்னு யோசி. உன்னோட பாதை உன்

மனசுல விரியும். அதன் வழி போ. கண்டிப்பா நீ அடையவேண்டிய இலக்கை சோர்வில்லாம,
வருத்தமில்லாம சீக்கிரமா அடைய முடியும். உன் லாலிபாப் இல்லன்னு வருத்தப்படுறத விட,
எப்படி அவனை உன் வாழ்க்கையில் இணைக்கலாம்ன்னு யோசி. அதுக்கு உன் படிப்பும், உன்
நிலையும் உயரணும். அதுக்கு பாடுபடு. அதான் புத்திசாலித்தனம்.”

அவள் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அன்று ஹர்ஷாவின் பிரிவில் அவள் வாடிய போது
சொன்னது. இன்று அதே தான் அவளுக்கும். அவளை மீண்டும் என் வாழ்வுக்குள் கொண்டுவர,
நான் படித்து அவள் வேலை செய்யும், அல்லது படிக்கும் அதே ஊருக்கு போக வேண்டும்.
அவ்ளோ தான். அதுக்கு நாலு வருஷம் ஆகும்.தினமும் விடியோகாலில் பேசலாம் என்று மனதை
சமாதானப்படுத்தி, கல்லூரி படத்தில் ஐக்கியமானாள். அங்கே இரண்டு பெண்கள் நட்பாக பழக,
அவளும் நட்புகரம் நீட்டி அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.

எத்தனை பேர் நட்பென்று வந்தாலும் தன் உயிர் தீண்டும் நட்பு ரிது மட்டுமே என்று நினைத்தவள்.
மாலை கல்லூரி வளாகத்தில் இருந்த பெரிய மரத்தடியில் அமர்ந்து ரிதுவுக்கு வீடியோ கால்
செய்தாள்.

“சொல்லு செல்லமே..”, என்ற ரிதுவின் குரலில் ஏக குதூகலம்.

“என்ன டி என்னை விட்டுட்டு ரொம்ப சந்தோஷமா இருக்க போல?”,என்று எடுத்ததும் ஆரூ
கோபம் காட்ட,

“அட மக்கே, நானும் ஒரு வயலின் எடுத்து சோக கீதம் வாசிக்கவா? அப்போ தான் நம்புவியா?
தூரம் வெறும் மையில் அளவு டி. நீ என்னைக்கும் என் மனசளவு டி.”,என்று கண்ணீரை மறைத்து
ரிது சொன்னதும், தன் தவறை உணர்ந்தவள்,

“இது தான் ரிது என் காலேஜ். பாரு.”, என்று ஒரு வட்டம் போட்டு கல்லூரியை காட்ட,

“இப்போ தான் நான் ரூமுக்கு வந்தேன் ஆருஷி. நாளைக்கு நானும் யூனிவர்சிட்டில இருந்து கால்
பண்ணறேன்.”

“எப்படி டி இருக்கு டெல்லி..?”

“சூப்பர் ஆரு. பன்மொழி மக்கள், குளிரான வானிலை, நிறைய மனிதர்கள்.. எனக்கு பிடிச்ச
படிப்பு.”

“ஏய்.. நிறுத்து டி. கிரிமினாலஜிக்கு அவ்ளோ சீன் இல்ல போ.”, என்று கிண்டல் பண்ணனவும்,

“எனக்கு இது பெருசு ஆரூ.”,என்று சிரித்தாள்.

மேலும் சிறிது நேரம் பேசியபின், “ஆரூ என்கிட்ட என்னவோ சொல்ல தயங்கற.. என்ன அது.
என்கிட்ட உனக்கென்ன தயக்கம்?”

“இல்ல நான் ஒரு விஷயம் சொன்னா.. நீ என்ன நினைப்பன்னு தெரியல ரிது.”

“முதல்ல விஷயத்தை சொல்லு.”

“அது ஆரூ. நான் யாரை விரும்புறேன் தெரியுமா?”

“நீ தான் சொல்லலயே செல்லம்.”,என்று ரிது சிரிக்க,

“அது ஹர்ஷாவை”,என்றாள் தயக்கமாக,

ரிது,”யார் ஹர்ஷா?”, என்றாளே பார்க்கலாம், அவ்வளவு தான், ஆரூ முருங்கை மர பிசாசாக மாறி
அவளை தாளித்து எடுக்க,

“சத்தியமா நினைவு இல்ல டி.”, என்று கண்ணீர் விடாத குறையாக மன்னிப்பை வேண்டிய பின்
தான் ரிதுவை அவள் விட்டாள்.

“சொல்லு இப்போ அதுக்கு என்ன?”, என்றதும், அவள் ஹர்ஷா- அபி நட்பை சொல்லி,
தற்போதைய ஹர்ஷாவின் நிலையை சொன்னாள்.

“அந்த பையன் கிட்ட பேசி பார்க்க சொல்லு ஆரு.”,என்றாள் நிதானமாக.

“அதான் நானும் நினைச்சேன். ஆனா நான் பேசலாம்ன்னு நினைச்சேன்..”,என்று அவள் இழுக்க,

“உனக்கு அவங்களை தெரியுமா டி.”, என்றாள் சந்தேகமாக,

“அது வேற யாரும் இல்ல. என் பிரெண்ட் ஜே.பி தான்.”

“ஓ.. நல்லதா போச்சு. நீயே அவர் கிட்ட பேசி அவங்களை ஒண்ணு சேர்த்து வை.”, என்று
அவ்வளவு தானே என்பது போல ரிது கூற,

அதில் கடுப்பான ஆரு, “ரிது அந்த ஜே.பி உன்னை லவ் பண்ணுது. உன் பேர், போட்டோ
கேட்டுட்டே இருக்கு. இப்போ போய் நான் என் லாலிபாப் கிட்ட பேசுன்னு சொன்னா, அது
உன்னை பத்தி கேட்கும். நான் என்ன பண்ணுவேன்.”, என்று மிகப்பெரிய விஷயத்தை
சிணுங்கியபடி ரிது தலையில் ஆரு போட,

“ஏய்.. என்ன டி உளர்ற.. அவர் என்னை பார்த்ததே இல்ல. அப்பறம் எப்படி காதல்??
விளையாடுறீங்களா? “,என்று ரிது கோபம் கொள்ள,

“ஐயோ.. இல்ல ரிது.”, என்று அவளுக்கும் ஜே.பிக்கும் நடந்த உரையாடலையும், அவள் ஆடிய
கண்ணாமூச்சியையும் சொல்ல,

“அறிவு இல்லயா ஆரு உனக்கு. அவர் குடும்ப சூழ்நிலை தெரிஞ்சு படிக்கிறாருன்னு சொல்ற.
ஆனா என்னை மனசுல நெனச்சு அந்த படிப்பு கெட்டுப் போச்சுன்னா என்ன பண்றது.”

“இப்போ நான் என்ன செய்ய?”

“நீ நார்மல் கால் பண்ணு. அப்படியே அவரை கான்பிரன்ஸ்ல போடு. நான் பேசிக்கிறேன்.”

“நீ திட்ட மாட்டியே அவங்கள..”

“ரொம்ப தான் அக்கறை.. கூப்பிடு டி பிசாசே.”, என்று திட்டி வீடியோ காலின் இணைப்பில்
இருந்து விலகினாள்.

ஊரில் சந்து பொந்துகளில் இருக்கும் சாமியை கூட விட்டு வைக்காமல் துணைக்கு அழைத்த ஆரூ.
முதலில் அபிக்கு போன் செய்து லைனில் இருக்க பணித்தாள்.

நான்கு நாட்களாக பேசாதவள், இன்று அவளே போன் செய்து, காத்திருக்க சொல்லி இணைப்பில்
வைத்தது, அவன் மனதில் நிறைய கேள்விகளை எழுப்பினாலும்,’ சரி பார்ப்போம்’, என்றே
காத்திருந்தான்.

அடுத்த இரண்டாவது நிமிடம் “ஹலோ” என்ற அவன் தேவதையின் தேன் குரலில், கரைந்தே
போனவன், “அபர்ணா”, என்றான் அவன் மனதின் ஆழத்தில் இருந்து.

அந்த ஒரு வார்த்தை அவன் மனதில் தான் எங்கு இருக்கிறோம் என்பதை அழகாக விளக்கி
விட்டது ரிதுவுக்கு.

“நான் தான். என்னை நீங்க விரும்பறதா ஆருஷி சொன்னா. எனக்கு என்ன சொல்றதுன்னு
தெரியல. ஆனா நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நம்புறேன். உங்களுக்கும் பெரிய
லட்சியம் இருக்கறதா ஆரூ சொன்னா. எனக்கும் தான். என் லட்சியதுல நான் முதல் படியை கூட
நெருங்கல. என்னால எப்போ என் அப்பா, அம்மா , தம்பி கிட்ட கூட அதிகம் பேச முடியல. நான்
உங்களுக்கு ஹோப் குடுத்து நாளைக்கு வருத்தப்படுத்துறத விட, நாம நம்ம பாதையில் திடமா
பயணிக்கலாம். எனக்கு எப்படியும் அஞ்சு வருஷம் ஆகும். என் லட்சியத்தை அடைய.
உங்களுக்கும் அந்த கால அவகாசம் தேவைப்படலாம். அதனால அஞ்சு வருஷத்துக்கு அப்பறம்
நாம சந்திக்கலாம். உங்களுக்குள்ள அப்பயும் இதே உணர்வு இருந்தா, நான் உங்களை என்
அப்பா, அம்மாவுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன். அவங்க முடிவு பண்ணட்டும். என்னை
தப்பா..”, என்று அவள் இழுக்க,

“இல்ல அபர்ணா. நீ சொல்றது ரொம்ப சரி. எனக்கு உன் ஆளுமை ரொம்பவே பிடிச்சிருக்கு. என்
நல்லதையும் யோசிச்சு வந்து பேசின பாரு.. உன்னை எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. நான்
கவலையே படாம என்னோட படிப்புல கவனம் வைப்பேன் அபர்ணா. நீ சாதிக்க என்
வாழ்த்துக்கள். நான் போனை வைக்கிறேன். அடுத்து நாம நேர்ல சந்திக்கலாம். “, என்றான்
மனநிறைவுடன்.

ஒருவனின் படிப்பை கெடுக்காமல் தன் லட்சியத்தையும் அடைய வேண்டிய சந்தர்ப்பத்தில் அதை
அழகாக கையாண்டாள் ரிது.

“ஒரு நிமிஷம். நீங்க.. உங்க நண்பன்..”, என்று மீண்டும் அவள் தயங்க..

“சொல்லு அபர்ணா”, என்றான் யோசனையாக,

“அது ஹர்ஷா பாவம். தெரியாம பண்ணி இருக்கலாம். ஒரு வருஷம் பேசாம விட்டாச்சில்ல.. இப்ப
பேசலாமே. அவர் உங்களை நினைச்சு.. “,என்று மீண்டும் தயங்கினாள்.

“உனக்கு அவனை எப்படி தெரியும்ன்னு எனக்கு தெரியாது. ஆனா நீ சொல்லிட்ட தானே.
கண்டிப்பா என் பங்கு கூட பேசுவேன். கவலைப்படாம படி மா.”, என்றான்.

அவள் அகமகிழ்ந்து ,”ரொம்ப தான்க்ஸ் அபி. “, என்றாள்.

அவளுக்கு ஹர்ஷாவும், ஆருவும் எந்த குழப்பமும் இன்றி படிப்பை முடித்திட வேண்டும் என்ற
எண்ணம் மேலோங்கி இருக்க, ஹர்ஷா ஆருவை அவள் படித்த போது தொந்தரவு செய்யாமல்
இருந்ததால் அவன் மீது நல்ல அபிப்பிராயம் இருந்தது. இப்போது அபியும் தான் நினைத்ததை,
சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டதால், அபியின் மீது பெரும் மரியாதை வந்தது.
அதைத்தாண்டி அவர்கள் உறவு நிலை பற்றி ரிது சிந்திக்கவே இல்லை.

“ரொம்ப தான்க்ஸ் அபி” என்ற அவள் குரலில் அபி மனம் தள்ளாட்டம் அடைந்தது. இவள் குரல்
வெறும் குரலா இல்லை தேனில் குழைத்த இனிமையா என்று மனம் அதன் போக்கில் செல்ல,
கடினப்பட்டு மனதை அடக்கி, “அஞ்சு வருஷம் உன்னை பார்க்கவோ, உன்னை தொந்தரவு
செய்யவோ மாட்டேன். ஆனா .. “,என்று இழுக்கவும்,

“சொல்லுங்க “,என்றாள் குழப்பமாக,

“உன் போட்டோ “, என்றதும்,

“அதை பார்த்துக்கிட்டே, இ.பி.கோ வ விடுறதுக்கா?? அதெல்லாம் என்னை எந்த காக்காவும்
தூக்கிட்டு போகாது. அதனால நீங்க படிப்பை மட்டும் பாருங்க. என்னை வேண்டாம். என்னை
யாருனே தெரியாம தானே உங்களுக்குள்ள ஒரு உணர்வு வந்தது. அது அஞ்சு வருஷத்துக்கு
அப்பறமும் அப்படியே இருந்தா கண்டிப்பா பார்க்கலாம்.”, என்றாள்.

“உத்தரவு மகாராணி”, என்று அபி சிரிக்க ரிதுவும் ஆருவும் சேர்ந்தே சிரித்தனர்.

“சரி பை.” என்றாள் ரிது.

“இல்ல.. வேற ஏதாவது சொல்லிட்டு போனை வை. இந்த பை யை கடைசி வார்த்தையா
வைக்காதே. நான் இந்த நிமிஷத்தை கணக்குல வச்சி தான் அஞ்சு வருஷத்தை ஓட்டணும். “, என்று
சொல்ல,

சிரித்தபடி,” ஊர்லயே பெரிய கிரிமினல் லாயரா வாங்க அபி. உங்க தோழியா கண்டிப்பா நான்
உங்களுக்கு உறுதுணையா இருப்பேன்.”, என்றாள்.

போதும். இது போதும் அபிக்கு.. மனம் சிறகுகள் விரித்து வானில் பறக்க,

“உன்னோட லட்சியம் என்னன்னு கூட எனக்கு தெரியாது அபர்ணா. ஆனா நீ பெரிய
சாதனையாளரா வரணும்.”, என்றான்.

சிரித்தபடி இருவரும் ஒரே நேரத்தில் இணைப்பை துண்டிக்க,

“அடப்பக்கிகளா.. நான் ஒருத்தி லைன்ல இருக்கறதையே மறந்துட்டு இதுங்க பாட்டுக்கு ஆளுக்கு
ஒரு பக்கம் போனை வச்சிட்டு போய்டுச்சுங்க. என்ன கொடுமை சரவணன் இது..”, என்று அவள்
தனிமையில் வசனம் பேசிக்கொண்டு இருந்தாள் ஆருஷி.

ஆரூஷி தன் போக்கில் ஹர்ஷாவுக்கு போன் செய்து, “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு. அந்த
சர்ப்ரைஸ் உனக்கு கிடைச்சதும் எனக்கு போன் பண்ணு.” என்று சொல்லிவிட்டு போனை
வைத்தாள். அவன் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்தான்.

அபி மனம் இன்னது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்தது. இரண்டு நொடி
பேசியபோதே அவள் வசம் வீழ்ந்தவன், இன்று அரை மணி நேர பேச்சில் கிறங்கி போய்
இருந்தான்.

அவன் மனம் அபர்ணா ராகம் பாட,அவன் மனசாட்சி, ‘அந்த பொண்ணு உனக்காக யோசிச்சு, நீ
படிக்கணுமேன்னு வேலை மெனக்கெட்டு உனக்கு போன் பண்ணி பேசுனா நீ கனவா
கண்டுகிட்டு இருக்க?? இதெல்லாம் சரியில்ல மகனே.. ஓடு. லைப்ரரில எடுத்த அந்த தலைகாணி
புக் கேட்பார் இல்லாம உன் மேஜையில இருக்கு. போய் படி.’,என்றதும்,

‘ஏண்டா..ஏன்… அவ அரை மணி நேரம் என்னோட பேசினா டா.. அதை அரை நிமிஷம் கூட
அனுபவிக்க விட மாட்டியா?? பாவி மனசாட்சியே’, என்றதும்,

‘ஏண்டா சொல்ல மாட்ட? நான் வேலை செய்யலன்னா, நீ பண்ற தப்புக்கு எவனும் உன்னை
திட்ட மாட்டான். இவனுக்கெல்லாம் மனசாட்சி இல்லையான்னு என்னை தான் திட்டுவாங்க.
உங்க கிட்டயும் திட்டு வாங்கி உலகத்து கிட்டயும் திட்டு வாங்கி.. என்ன பிழைப்போ..’, என்று
அது தான் நிலை சொல்லி புலம்ப, அதையெல்லாம் அபி கேட்டால் தானே.. அவனோ மனதில்
அபர்ணாவை சந்திக்கப்போகும் நாளை எண்ண ஆரம்பித்து இருந்தான்.

ஜெயலக்ஷ்மி karthik

1 thought on “அகலாதே ஆருயிரே-41-45”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *