Skip to content
Home » அகலாதே ஆருயிரே-46-50

அகலாதே ஆருயிரே-46-50

��அகலாதே ஆருயிரே��
��46��

அபியால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. அவன் மனதில் வைத்து நேசிக்கும் தேவதை,
அவனைப் போலவே ஒத்த சிந்தனை உள்ளவள் அவனைப் போலவே லட்சியம் பேசும் பெண்,
தன்னை நிராகரிக்காமல், அதே நேரம் ஏற்றுக்கொள்ளவும் இல்லாமல், அழகாக நாம் பின்னால்
இதை பற்றி பெற்றோரிடம் பேசலாம் எனும் படி சொன்னது, அவனும் அதே எண்ணத்தில் தான்
இருந்தான். ஆனால் அவன் அவளை ஒரு முறை போட்டோவிலாவது பார்த்து விட நினைத்தான்.
ஆனால் அவள் அதற்கும் தடை விதித்து விட்டாள்.

ஆனால் வைராக்யமாக தன் நண்பன் முன்னேறி வந்தபின் தான் பேசுவேன் என்று இருந்தவனின்
மனதில் அவனிடம் பேசிப்பார் என்ற விதையை தூவி விட்டு சென்றுவிட்டாள்.

அவனுக்கும் ஹர்ஷா என்றால் உயிர் தானே. அவனோடு பேச முடியாத தருணங்கள் அவனுக்கும்
சுமக்க இயலா பாரமன்றோ. அவள் சொல்வதும் சரி தானே. ஒரு வருடம் பேசாமல் இருந்தது
போதாதா? என்று நினைத்தவன், தான் எப்போதும் ஹர்ஷாவை பற்றி விசாரிக்கும் பேராசிரியரை
அழைத்து அவன் படிப்பை பற்றி கேட்டதும்,

“நல்லா படிக்கிறான் பா. நிறைய எஸ்பிரிமெண்ட் செஞ்சு பாக்கறான். ப்ரொஜெக்ட் செஞ்சு
கொஞ்சம் சம்பாதிக்கவும் செய்யறான். உன் நண்பன்னு சொல்ல சரியான ஆள் தான் அபி”,
என்றார்.

அவர் நித்திலன் மூலமாக அபிக்கு பழக்கமானவர். நித்திலன் அபியை பற்றி
பார்ப்போரிடமெல்லாம் புகழ்ந்து தள்ளுவார். அதனால் அவனை அவர் சுற்றத்தில் தெரியாத
ஆட்களே இல்லை எனலாம்.

“சரிங்க சார். ரொம்ப நன்றி”, என்றவன். ஹர்ஷாவிடம் பேசலாமா என்று யோசித்தான். நேரம்
பார்த்தான். மாலை ஏழு மணி. நாளை சனிக்கிழமை. அவனுக்கு கல்லூரி விடுமுறை. ஒரு பிரபல
வக்கீலிடம் நித்திலன் அவனை வேலையில் அமர்த்தி விட்டார் இரு நாட்களுக்கு முன்பு.

“இங்க பாரு அபி, இது தான் உன் தொழில். இப்போவே, கேஸ் எப்படி எழுதணும், பாயிண்ட்
எப்படி சேர்க்கணும்னு பக்கத்துல இருந்து, டைப் பண்ணும்போதே கத்துக்கோ. இன்னும் முழுசா
நாலு வருஷம் இருக்கு. அதுக்குள்ள நீயே எல்லாம் பழகிப்ப. அப்போ தானே தனியா நீ ஆபிஸ்
போட்டு கேஸ் பார்க்க முடியும்.”, என்று அவன் மீது இருந்த அதீத நம்பிக்கையில் கிளார்க்
போன்ற வேலையில் பகுதி நேரமாக நகரின் மிகப்பெரிய கிரிமினல் லாயராக வேதாச்சலம்
என்பவரிடம் அபியை சேர்த்து விட்டார்.

அவனும் திங்கள் முதல் மாலை அங்கு வந்து விடுவதாக சொல்லி விட்டான். இப்போது என்ன
செய்ய என்று யோசித்தவன், நேராக சங்கரியிடம் சென்றான்.

“அம்மா.. நான் ஒன்னு உன்கிட்ட சொல்லணும்.”

அபியின் முகம் கொஞ்சம் வெட்கம் பூசிக்கொண்டு, அம்மாவிடம் பேசத் தயங்கவும், சங்கரி,

“என்ன டா யார் அந்த பொண்ணு?”,என்று கேட்டார்.

“அம்மா..”, என்று அணைத்தவன். நடந்ததை முழுவதுமாக தாயிடம் சொன்னான்.

“ஏன்டா படவா, இத்தனை நாள் அந்த பொண்ணை மனசுல வச்சிருக்க, என்கிட்ட சொன்னியா?
போடா”, என்று பொய்க்கோபம் காட்டவும்,

“மா.. பிளீஸ்”, என்று நெளிந்தான்.

“சரி பொழச்சு போ. ஏதோ மருமக நல்ல பொண்ணா இருக்கறதால உன்னை சும்மா விடுறேன்.
இல்ல”, என்று மீண்டும் போலியாக அவனை மிரட்ட,

“அம்மா உனக்கே இதெல்லாம் கொஞ்சம்.. கொஞ்சமே கொஞ்சம்.. ஒவரா இல்லையா?”, என்று
கேட்டு அபி சிரிக்க,

அவன் சிரிப்பில் இணைந்தார் சங்கரி.

“சந்தோசமா இருக்கு அபி.நீ பத்தாவதுல இருந்தே உனக்குன்னு ஒன்னும் வச்சுக்காம, உனக்காக
எதுவும் செஞ்சுக்காம, எனக்காக நிறைய செஞ்சிருக்க. ஊர்ல எத்தனை பிள்ளைகள் இப்படி
இருக்கும் சொல்லு. உன்னோட ஒரே ஆசை உன் அபர்ணா.. அதை என் உயிரை கொடுத்தாவது
நான் நிறைவேற்றுவேன் அபி.”, என்றார் உணர்ச்சி வசப்பட்டவராக.

“அம்மா.. என்னை நீ என்ன நெனச்ச.. இது என் விருப்பம் அம்மா. நீ ஏன் இவ்வளவு யோசிக்கிற.
ஒன்னும் இல்ல. என் அபர்ணா எனக்கு தான். கவலையே படாதே சரியா. உனக்கு இன்னொரு
விஷயம் சொல்லவா?”

“என்ன டா?”

“நான் என் பங்கு கூட பேசப்போறேன்.”, என்றான்.

“அடப்பாவி, நானும் ஒரு வருஷமா சொல்றேன். காதுல கூட வாங்கல. இப்போ எப்படி திடீர்
ஞானோதையம்?”

“அது.. அதும்..ம்மா… அபர்ணா பேச சொன்னா.”, என்று இழுத்தான்.

“எடு அந்த முறுக்கு உலக்கை.. இவன் தலையில நாலு போடலாம். ஏன்டா டேய்.. நானும்
சுரேஷும் எவ்வளவு சொல்லி இருப்போம். காது கொடுத்து கேட்டியா டா. அந்த பொண்ணு
சொன்னதும் இப்போ மட்டும் அவன் உன் பங்கு.. அப்படி தானே..”, என்று கோபம் போல
பேசினாலும். அவர் முகத்தில் புன்னகை மட்டுமே இருந்தது.

சுரேஷுக்கும் போன் செய்து சொல்லி விட்டு அவன் இரவு பேருந்தில் கோவை புறப்பட்டான்.

அவனுக்கு ஹர்ஷாவுடன் போனில் பேசுவதை விட, நேரில் அவனை பார்ப்பதே சிறந்தது என்று
நினைத்தவன், சற்றும் தயங்காமல் தாயிடமும், நித்திலனிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பி
விட்டான்.

பத்து மணிக்கு பேருந்தில் ஏறிய அவனுக்கு எப்போதடா கோவை வரும் என்ற எண்ணம். நம்
எண்ணம் செல்லும் வேகத்துக்கு, வாழ்க்கையும் வண்டியும் நகர்ந்திடுமா என்ன?

விடியற்காலை என்றும் சொல்ல முடியாத, இரவென்றும் தள்ள முடியாத நாலு மணிக்கு அவனை
காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கியது அந்த பேருந்து.
பரவாயில்லை. அவன் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட்டுநரும் உயிரை துச்சமாக எண்ணி, ஆறு
மணி நேரத்தில் கோவையை அடைந்திருந்தார்.

வெளியில் வந்தவன், சுரேஷிடன் வாங்கி வைத்த ஹர்ஷாவின் முகவரிக்கு எப்படி செல்ல
வேண்டும் என்று அங்கிருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டுவிட்டு, ஒரு டீக்கடையில் தன்
தூக்கத்தை தழுவாத கண்களின் சிரமத்தை போக்க, ஒரு டீயை கொடுத்து உடலுக்கு விழிப்பை
ஏற்படுத்தினான்.

ஒரு ஆட்டோவில் ஏறி அவன் முகவரிக்கு செல்ல, அது ஒரு வீட்டின் மாடி அறை. நல்லவேளை
கேட் திருந்திருக்க, அவன் அறைவாசலில் கதவை தட்ட போனவன், ‘தூங்குவானே, மணி
இன்னும் ஐந்து கூட இல்லையே’, என்று மனம் நண்பனுக்காக உருக,

அவனின் அசதி அதை புறந்தள்ளி, ‘உள்ளே போய் நீயும் கொஞ்சம் தூங்கு டா ‘, என்றது.

காலிங் பெல்லை அழுத்தினான்.
உள்ளே எந்த சத்தமும் இல்லை. மீண்டும் தட்டினான்.. ஏதோ அசைவு தெரிந்தது.

‘இதோ வந்துவிட்டான் உயிர்த்தோழன்’, என்று அள்ளி அணைக்க ஆவலாக அபி காத்திருக்க,

அரை தூக்கத்தில் எழுந்து கதவை திறந்தவன், அபியை கண்டதும், “இதென்ன புதுசா
பெல்லெல்லாம் அடிக்கிற? நேரா வரவேண்டியது தானே” என்றான்.

அபிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் முழித்துக்கொண்டு நிற்க,

“ஏன்டா எப்பயும் சிரிப்ப, இப்போ முழிக்கிற, என்ன ஆச்சு?” என்றவன், மணி பார்த்துவிட்டு “பேய்
உலாவர நேரம் தாண்டி போச்சு. சரி டா. நான் எழுந்துட்டேன். படிக்க போறேன். சரியா. நீ
நேரத்துக்கு சாப்பிடணும். நல்லா படிக்கணும்.”, என்று தான் போக்கில் பேசிக்கொண்டே அறை
மூலையில் இருந்த வாஷ் பேசின் மேல் இருந்த பேஸ்ட்டை எடுத்து பிரஷில் போட்டுக் கொண்டு,

“என்ன இன்னிக்கு ஒன்னும் பேச மாட்டேன்கிற? கோபமா டா? நேத்தே அந்த ப்ராஜெக்ட்
டெலிவரி கொடுத்துட்டேன் பங்கு. எப்பயும் சொன்னா சொன்ன மாதிரி இருப்பேன். உன்னை
போல..”, என்று பல் துலக்கி முடித்தவன். இன்னும் அபி அதே கோலத்தில் அசையாமல் வாசலில்
நிற்பதை பார்த்து.

“இந்நேரத்துக்கு நீ டாட்டா சொல்லிட்டு போய்டுவியே. நான் இன்னுமா ஒழுங்கா
முழிக்கல?”,என்று அவனையே திட்டிக்கொண்டு கண்களை கசக்கி விட்டு, அபியை கண்டவன்,

அவன் நேரில் நிற்பதை அப்போது தான் உணர்ந்தவனாக, “பங்கு.. “, என்று தழுதழுத்த குரலில்
அழைத்தபடி ஓடி வந்தவனை, அபி தன் பரந்த மார்புக்குள் தஞ்சம் கொள்ள செய்து, “பங்கு.. டேய்..
சாரி டா..”, என்று அவனை இறுக அணைத்தான்.

“டேய் நிஜமாவே வந்துடியா டா.. நீ தானா? இல்ல இதுவும் கனவா? தினமும் உன்னை கட்டி
பிடிக்க வரும்போதெல்லாம் மறைஞ்சு போய்டுவ.. இன்னிக்கு.. “,என்று பேச முடியாமல் நா
தடுமாற,

“வா பங்கு. உள்ள வா. “,என்று அவனை கைப்பிடித்து  கட்டிலில் அமர்த்தியவன், தன் ஒரு வருட
பேச்சை எல்லாம் பேசத் துவங்கினான்.

காலை கடந்து மதியம் தான் சுற்றுப்புறம் உணர்ந்து, “நான் பாட்டுக்கு என்னை பத்தியே
சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ சொல்லு பங்கு”, என்று அபியை பேசச் சொல்ல, அவனோ,

“நீ பேசு பங்கு. நான் எவ்ளோ நாள் ஏங்கினேன் உன் பேச்சை கேக்க. ரொம்ப கஷ்டமா இருந்தது
டா நீ இல்லாம. “,என்று அபி உணர்ந்து சொல்ல,

“எனக்கும் தான் அபி. என்னவோ யாருமே இல்லாத தீவுல நான் மட்டும் மண்ட மண்டையா
புஸ்தகத்தோட இருக்கற மாதிரி ஒரு உணர்வு. அதுவும் அந்த மெக்கானிக்கல் இருக்கு பாரு..”,
என்று அவன் மீண்டும் கதைக்குள் புக, வாசலில் உணவு கொண்டு வரும் பாட்டி வந்து,

“என்ன கண்ணு.. உன் சிநேகிதனா? கூட ஆள் இருப்பாங்கன்னு சொல்லி இருந்தா நானும்
சாப்பாடு சேர்த்து கொண்டு வருவேணுல்ல..”, என்றார்.

“இருக்கட்டும் பாட்டி. எங்களுக்கு இதுவே போதும். பசிக்கவே இல்ல “,என்று வேகமாக ஹர்ஷா
சொல்ல,

“இன்னிக்கு தான் கண்ணு உன் முகம் பளிச்சுன்னு இருக்கு. இப்படியே இரு எப்பவும்.”, என்று
சொல்லி விட்டு போனார் அவர்.

“எனக்கென்ன என் பங்கு இருக்கான். என்னோட பேசிட்டான். இனிமே நான் பிரகாசமா
இருப்பேனே.. “,என்று அபியை இடித்துக்கொண்டு அமர்ந்தான்.

“குரங்கு.. “,என்று செல்லமாக திட்டிய அபி, உணவை பிரிக்க,

அவனும் ஹர்ஷாவும் கதைகள் பல பேசி அன்றைய நாளை கழித்தனர்.

இரவு அவன் அருகில் படுத்து அவன் மேல் காலை போட்டுகொண்டு ஹர்ஷா உறங்க, ஸ்வாதி
திருமணத்தின் போது இருவரும் செய்த சேட்டைகளை நினைத்தவனாக அபியும்
உறங்கிப்போனான்.

ஞாயிறு இருவரும் கோவையை சுற்றி திரிந்து, மதியம் வீடு திரும்பினர். அபி தன் காதலை பற்றி
ஹர்ஷாவிடம் சொல்லவில்லை. தனக்கே அவளை யார் என்று தெரியாத போது, அவனிடம்
என்னவென்று சொல்வது. பின்னால் பார்த்துக்கொள்ளலாம். என்று அவன் அதை தள்ள,

ஹர்ஹாவோ, இப்போ தான் பங்கு பேசி இருக்கான். இப்போவே ஆருஷியை பத்தி சொல்லி
வாங்கிக் கட்டிக்க வேண்டாம். மெதுவா சொல்லிக்கலாம். பங்கு புரிஞ்சுக்குவான். என்று அவனும்
அதை தள்ளி வைத்தான்.

இரவுப் பேருந்தில் ஹர்ஷா வழியனுப்ப, அபி கனத்த மனதுடன் அவனை விட்டு சென்னை
சென்றான்.

ஆருவுக்கு போன் செய்த ஹர்ஷா குலுங்கி அழுதபடி, தன் நண்பன் தன்னை காண வந்ததை
சொல்ல, “அடப்பாவி, உன் பங்கு வரவும், ரெண்டு நாளா எனக்கு பங்கு தர்ற நேரத்தை தரவே
இல்லையே டா. துரோகி.”, என்று அவள் குதிக்க,

“அடியே.. இதெல்லாம் அநியாயம்.. “,என்று கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தான்.

ஆருஷி தன் லாலிபாபின் மகிழ்ச்சியில் உண்மையில் கரைந்தே போனாள். மனதில் தன்
காதலனின் மன திருப்திக்காக அபியிடம் பேசிய ரிதுவை மனதில் நன்றியோடும் உள்ளன்போடும்
நினைத்துக்கொண்டாள்.

ஹர்ஷா ஆருஷியுடனான நேரங்களை சரியா வகுத்துக்கொண்டான்.

அதன் பின் வந்த நாட்கள் இருவருக்குமே வசந்தமாக இருந்தது.

அபி இரவு தூங்க செல்லும் முன், ஹர்ஷாவிடம் பேசி விட்டு தான் படுப்பான். கல்லூரியில்
நிதீஷின் நட்பும், வேலையில் நல்ல பிடிப்பும் ஏற்பட்டு விட, வேதாச்சலம் அவனுக்கு ஒரு வாரம்
மட்டுமே ஞாயிறு விடுமுறை தருவார். மற்றபடி, வார நாட்கள், வார இறுதியும் அதே வக்கீல்
அலுவலகம் தான்.

அபி அதையெல்லாம் பெரிதாக எண்ணவில்லை. அந்த ஒரு நாள் விடுமுறையில் அவன் கோவை
பறந்து விடுவான். இருவரும் பேசி சிரித்து என்று அந்த நாளே களை கட்டும்.

பின் வந்த நாட்கள் இவர்களுக்கு இப்படி செல்ல, அங்கே ஆருஷியும் ரிதுவும் அடிக்கடி
பேசிக்கொண்டும் வீடியோ கால் என்று தூரம் எங்களுக்கு தொலைதூரம் என்றே அருகில்
தங்களை நினைத்துக்கொண்டனர்.

அந்த ஆண்டும் அவர்கள் நால்வரின் நட்பிலும், ஹர்ஷா ஆரூ காதலிலும் வெகு சிறப்பாக
முடிந்தது.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��47��

அபி ஹர்ஷா தங்கள் மூன்றாவது வருடத்திலும், ரிது,ஆரு தங்கள் இரண்டாம் வருடத்திலும் கால்
பதிக்க, அபி வேலை படிப்பு என்று சளைக்காமல் நின்றான். சங்கரி அவனை தங்களோடு இருக்க
சொல்லி கேட்டதால் அவன் தாய் தந்தையோடு இருந்தாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம்
நித்திலனை சந்தித்து பேசுவதும், ஸ்ரவனிடம் விளையாடுவதும், அகவழகியிடம் அன்பாய் நாலு
திட்டு வாங்குவதையும் வழக்கமாக கொண்டிருந்தான்.

ஹர்ஷா படிப்பில் படு கவனமாக இருக்க, இடையில் கொஞ்சம் பெரிய அளவில் ப்ராஜெக்ட்கள்
செய்து பார்த்த வண்ணம் இருந்தான். அவனுக்கும் ஆருஷிக்குமான நேரங்கள் இருவரும் தங்கள்
இருவர் படிப்பையும் கொண்டு பின்னாளில் எப்படி தொழில் தொடங்குவது என்பது வரை நீளும்.
ஆனாலும் இடையிடையே காதல் வசனம் பேசி அவளை நாணச் செய்வான் அவளின்
இதயக்கள்வன்.

ரிது இரண்டாம் வருடம் தொடங்கியதும்  பப்ளிக்  சர்விஸ் கமிஷன் எழுத தேவையான வகுப்பில்
இணைந்தாள். அவள் சசியிடமும் நாராயணனிடமும் ரிஷியிடமும் மட்டுமே தினமும் பேசினாள்.

அதுவும் சாதாரண பேச்சுக்கள் தான். ரிஷி அவளை நினைத்து வாட, அடிக்கடி அவனுடன்
வீடியோ காலில், அவன் பாடத்தில் சந்தேகம் தீர்ப்பது, எப்போவதாவது அவனுடன் ஆன்லைன்
கேம் கால் மணி நேரம் விளையாடுவது என்று அவன் ஒருவனுடன் மட்டுமே அதிக நேரம் செலவு
செய்தாள். ஆருஷியுடன் வாரம் இருமுறை என்று அவள் வாழ்க்கை டயம் டேபிள் போட்டது
போல சுழல, அதில் அவளுக்கு சிறு சுணக்கமும் இல்லை.

சங்கரி அன்று மகிழ்ச்சியாக அபியின் வரவுக்காக காத்திருந்தார். அபி வக்கீல் அலுவலகத்தில்
இருந்து கிளம்பியவன், அவர் கொடுத்த வேலை ஒன்றை வெளியில் முடித்து விட்டு சோர்வுடன்
உள்ளே நுழைந்தான். ஆனால் தாயின் கண்ணில் மின்னிய மின்னல் அவனுக்கு கொஞ்சம்
உற்சாகம் வழங்க, சொல்லுங்கம்மா ஏதோ சந்தோஷமான விஷயம் போல, “ஸ்வீட்
இல்லயா”,என்றபடி தாயை நெருங்க, கண்களில் கண்ணீர் பெருகியது சங்கரிக்கு. தன்னை
உள்ளும் புறமும் உணர்ந்த தன் ஆசை மைந்தனை அணைத்து உச்சி முகர்ந்தவர், சமையலறையில்
இருந்து ஒரு கிண்ணம் குலோப் ஜாமூனை அவன் கையில் திணித்து, “அபி நீ மாமாவாக போற
டா. ஸ்வாதி மாசமா இருக்காளாம். மாப்பிள்ளை இப்போ தான் போன் பண்ணி சொன்னார்.
“,என்றதும் அவன் மனமும் நிறைந்தது.

அவன் மனதில் ஸ்வாதி மீது எந்த தவறான எண்ணமும் இல்லை. அவள் தந்தையின் செல்லத்தில்
கொஞ்சம் சோம்பேறியாக மாறிப்போனவள் அவ்வளவே. ரேகா அளவுக்கு தந்திரசாலி இல்லை
என்று எப்போதும் நினைப்பான். அவளின் நற்செய்தி அவனுக்கும் மகிழ்ச்சி தர, தாயை
தட்டிக்கொடுத்து விட்டு வேகமாக மாடி ஏறினான். அவன் போனில் அவன் வரைந்து வைத்திருந்த
அபர்ணாவின் உருவத்திடம், “அபர்ணா தெரியுமா நீ அத்தை ஆக போற.. நீ என் மனைவியா
இங்க வரும்போது ஒரு வாண்டு உன்னை சுத்தி சுத்தி வரும்.”, என்று சொல்லி சிரித்தான். இதுவே
அவன் தனிமையின் பொழுதுகள். என்று அபர்ணா அவனுக்கு போட்டோ கூட கிடையாது
என்றாளோ அந்த இரவே அவன் தன்னுடைய போனில் ஒரு உருவத்தை அபர்ணா என்று
வரைந்து சேமித்தான். அதனிடம் தான் அடிக்கடி பேசுவான். அப்போதெல்லாம், ‘ஏண்டா
இவனுக்கு நம்ம போட்டோவ கொடுக்காம போனோம்ன்னு காலம் பூரா பீல் பண்ண போற பாரு
அபர்ணா..’, என்று கிண்டலாக சொல்லிக்கொள்வான்.( அவன் வரைஞ்சு வச்சிருக்கற உருவம்
அப்படி. அதை அப்பறமா சொல்றேன்).

நாட்கள் யாருக்கும் காத்திருக்காமல் அழகாக , வேகமாக உருள.. அது அபியின் கடைசி வருடம்
ஐந்தாம் வருட பி.எல் படிப்பு. அதற்குள் அவன் ஒரு பி.ஏ முடித்து, எம்.ஏ தொலைதூரக் கல்வியில்
ஒரு வருடம் முடித்தும் விட்டான். இப்போதெல்லாம் வேதாசலம் ஆபிசில் எல்லாமே அபிதான்.
அவன் இப்போது அவரின் ஆஸ்தான சிஷ்யன். தன் நண்பன் நிதீக்ஷயும் அங்கே வேலைக்கு
சேர்த்து கொள்ள வைத்தான்.அபியின் அறிவுக்கூர்மையை முதலில் கண்ட அவர், மெல்ல மெல்ல
வெளி வேலைகள், சாட்சி விசாரணை என்று மேலும் அவனை கூர்தீட்டும் வேலையை செவ்வனே
செய்ய, அவனோ கற்பூரத்தின் மறுஉருவாக மாறி, அனைத்தும் கற்றுத் தேர்ந்தான்.

ஒரு கேஸ் அவர்கள் ஆபிசுக்குள் நுழைகிறது என்றாலே, அதன் அடி நுனி வரை ஆராய்ந்து
இரண்டு நாளில் அதை எடுக்கலாம் வேண்டாம் என்று வேதாசலத்துக்கே சொல்லும் இடத்தில்
அபி நின்றான். அவனின் ஒவ்வொரு முடிவும் ஆணி அடித்தார் போல இருப்பதை கண்டு அவரும்
வியந்து போவார்.

அவன் மனம் அந்த ஒரு ஆண்டும் வேகமாக கழிய வேண்டி இறைவனை தினமும் தொழும்.
அப்போது தான் தன் மனம் கவர்ந்த தேவதையின் தரிசனமும், அவள் வாழ்வில் அவனும் ஓர்
அங்கமாக முடியும் என்றும் அபி நித்தமும் அபர்ணா நாமம் ஜெபித்துக்கொண்டு இருந்தான்.

ஆருஷி தன் பி.டெக் கடைசி வருடப்படிப்பில் அடி எடுத்து வைக்க, ஒரு மிக பெரிய கம்பெனியின்
கல்லூரி நேர்முக தேர்வில் அவளை அந்த நிறுவனம் வேலைக்கு எடுத்துக்கொள்ள, இன்னும் சில
மாதங்களில், அவள் அங்கே வேலையில் சேர வேண்டும். அவளின் ஏழாவது செமஸ்டர்
முடிந்ததும், ப்ராஜெக்ட் பீரியடில் வேலைக்கு செல்லலாம் என்று கல்லூரியும் சொல்லி விட,
ஆரம்ப சம்பளமே ஆறு இலக்கத்தை காட்ட, அவளின் ஆனந்தத்தை முதலில் ரிதுவுடனே
பகிர்ந்தாள்.

“ஏ… ரிது.. நான் பிளேஸ்மெண்ட்ல செலக்ட் ஆகிட்டேன் டி. கோடிங் படி.. கோடிங் படி.. புரிஞ்சு
ப்ரோக்ராம் போடுன்னு நீ சொன்னப்ப கோவப்பட்டேன் ரிது, ஆனா நீ இல்லாதப்போ நீ
சொன்னத தான் செஞ்சேன். அதுக்கு தான் எனக்கு இந்த வேலை. எல்லாமே உன்னால தான்
செல்லமே..”, என்று அவள் கூற,

“கஷ்டப்பட்டு ப்ரோக்ராம் எழுதி வேலை வாங்கினது நீ.கிரெடிட் எனக்கா? லூசு. நான் ஆயிரம்
சொன்னாலும் நீ அதை கேட்டதால தானே டி இந்த உயர்வு.ரொம்ப சந்தோசம். அப்பறம்.. “,என்று
அவள் தயங்க,

“சொல்லு ரிது..”

“எனக்கு இன்னும் ரெண்டு நாளில் பைனல் எக்ஸாம் டி பப்ளிக் சர்வீஸ் கமிஷன்ல. செலக்ட்
ஆகிட்டா, அடுத்து இன்டெர்வியூ.அதுலயும் தேறீட்டா அடுத்த ரெண்டு வருஷம் எனக்கு
ட்ரைனிங் இருக்கும்.”, என்று சொல்ல,

“ஏற்கனவே மூணு வருஷமா பார்க்கல. இன்னும் ரெண்டு வருஷமா?என்ன விளையாடுறியா ரிது.
இடையில வந்துட்டு போ டி.”, என்று குழந்தை போல ஆருஷி அழ,

ரிதுவுக்கு என்ன சொல்லி அவளை தேற்றுவது என்று விளங்காமல் அவளும் கண்ணீர் வர
வீடியோ காலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஆரூ.. இங்க பாரு. கண்டிப்பா நான் உன்னை பார்க்க வருவேன். எப்படியாச்சும் நீ அந்த
டோரேமானை மட்டும் பிடிச்சு குடு சரியா”, என்றாள்.

“என்ன டோரேமானா?? என்ன டி உளர்ற??”

“ஆமா ஆரூ. அந்த டோரேமான் கிட்ட எனிவேர் டோர்ன்னு ஒன்னு இருக்காம். ரிஷி சொன்னான்.
அதை திறந்தா இன்னொரு பக்கம் நினைச்ச இடம் வந்திடுமாம்.”, என்று சொல்லி நமுட்டு சிரிப்பு
சிரிக்க,

“எருமை, பக்கி.. மாடே.. நானே உன்னை பார்க்கவே இல்லன்னு வருத்தப்பட்டா நீ கார்ட்டூன்
வச்சி என்னை கிண்டலா பண்ற?? பிசாசே..”, என்று வசைபாட,

அவள் ஓரளவு நிலைபெற்றுவிட்டதை உணர்ந்த ரிது வாய்விட்டு சிரித்தாள்.

கடைசியாக ரிது, ஆருவிடம்,” உன்னோட பிரென்ட் ஜே.பி. நல்லா இருக்காரா ஆரூ. என்னை
பற்றி அவர் கிட்ட எதுவும் பேசி வைக்காத டி. அவர் அவரோட வேலையை பார்க்கட்டும். “,என்று
நிதானமாக அவள் கூற,

“ஏன் ரிது உன் மனசுலயும் அபி பற்றி ஏதாவது..”, என்று இழுக்க,

“யாருக்குமே தன்னோட அழகை விட குணத்தை பார்த்து ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு சொன்னா
கண்டிப்பா சிலிர்ப்பா தான் ஆரூ இருக்கும். எனக்கும் அந்த உணர்வு தான். மற்றபடி நீ என்ன
அர்த்தத்தில கேக்குறன்னு எனக்கு புரியுது. அப்படி ஒன்னும் இல்ல மா. நிஜம்மா..”, என்று
அவளுக்கு தெளிவாக சொல்ல,

“உண்மைதான் ரிது”, என்று அபியின் குடும்ப நிலவரம் எல்லாம் ஆரூ சொல்ல,” உண்மையில்
அவங்க அம்மாவுக்கு அவர் தான் பெரிய சப்போர்ட். நல்ல குணம் டி உன் பிரென்ட்டுக்கு.”, என்று
உளமார பாரட்டினாள் ரிது.

கோமதி நாயகம் தாத்தாவும், சாந்தலட்சுமி பாட்டியும் அடிக்கடி அவர்கள் நண்பர்களான ரங்கசாமி,
கனகம் வீட்டுக்கு போனாலும், சசி பற்றி ஒன்றுமே கூறாது இருந்தனர்.  அதற்கு சசி தான்
காரணம். தான் அவர்களை காண விரும்பவில்லை என்று அவள் சொல்லிவிட, மாப்பிள்ளையான
நாராயணனும் மறைமுகமாக மாமியார் மாமனாரை கவனித்து கொள்வதால், அவர்களை பற்றி
ஒன்றும் சொல்லாமல் அவர்களுக்கு ஆறுதல் மட்டுமே தந்தனர் இருவரும்.

ஹர்ஷாவை ஒரு ஆய்வு நிறுவனம் லட்ச கணக்கில் சம்பளம் தருவதாக கல்லூரியில் இருந்தே
கொத்திக்கொண்டு போக, அவனின் ப்ராஜெக்ட்களே காரணமாக அமைந்தன. சின்ன சின்ன
ரோபோ மாடல்கள் செய்து, ஆருவின் ப்ரோக்ராம்கள் மூலம் அதை வெற்றிகரமாக அவன் பல
இடங்களில் செயல்படுத்திக் காட்ட, அவனின் அழகிய மாடல்களின் நேர்த்தி பிடித்துப்போய்
நிறுவனம் அவனை பற்றி விசாரித்து, கல்லூரிக்கு நேரில் வந்து அவனுக்கான பணி உத்தரவை
வழங்கி விட்டு சென்றது.

வேலை கிடைத்த அடுத்த நொடி அவன் கைகள் மொபைலில் அழைத்தது அபியை தான் .

“பங்கு.. நான் சாதிச்சிட்டேன் டா. கண்டிப்பா இன்னும் ஒரே வருஷத்துல தாத்தா பாட்டி வீட்டை
மீட்டுக் கொடுத்துடுவேன் பங்கு. மனசுல உள்ள பாரம் எல்லாம் இறங்கி போச்சு டா”, என்று
குதிக்க, அடுத்து வந்த ஞாயிறு இருவரும் போட்ட கும்மாளத்துக்கு அளவே இல்லை.

ரிது ஐ.பி.எஸ் பாஸ் செய்து முதலிடம் பிடித்தாள். அன்று நிருபர்களிடம் சொன்ன வார்த்தையை
இப்போது நிஜமாக்கினாள்.
ஆனால் அவள் தில்லியில் இருந்ததால் தமிழகத்தில் துண்டு செய்தியாக, தமிழக மாணவி ஐ.பி.எஸ்
தேர்வில் முதலிடம். என்று மட்டுமே பிரசுரித்தது. பிரசவமான நடிகையின் படமே பிரதானமாக
இருந்தது. இது இந்நாட்டின் சாபக்கேடு. சரி நாம ரிதுவை பார்ப்போம்.

அவள் ட்ரைய்னிங் சென்று விட, எதற்கும் அவளுக்கு நேரமில்லை. இருந்தும் தொலைதூர
கல்வியை நிறுத்தாமல் அவள் P.G.D.(child rights and child protection ) P.G.D.(social welfare
administration) என்று அப்போதும் கல்வியை கையில் ஆயுதமாக கொண்டே இருந்தாள்.

துப்பாக்கி சுடுதலில் முதல் தர வரிசையில் வர, அவளை கிரைம் டிபார்ட்மெண்ட் எடுக்க சொல்லி
சொல்லியது ட்ரைனிங் அகாடமி. அவளுக்கோ எதுவும் சரி என்ற மனநிலையில் மகிழ்ச்சியாக,
குற்றவியலில் கவனம் செலுத்தினாள்.

சரியாக ரிது டெல்லிக்கு கிளம்பி  ஐந்தாண்டு ஆன தினம், ஆரூ கண்களில் நிறைந்த நீருடன்,
சசியின் மடியில் படுத்தபடி, “பாருங்க ஆன்ட்டி அஞ்சு வருஷம் ஆச்சு. இவ வரவே இல்ல.
என்னையும் வராதேன்னு சொல்லிட்டா. எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?”, என்று
அழ,

அவரோ, “கல்யாண பொண்ணு இப்படி அழலாமா டா??”,என்றார்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��48��

“சும்மா என்னை சமாதானம் பண்ணிக்கிட்டே இருக்காதீங்க ஆன்ட்டி. அவளை கொஞ்சம்
என்னன்னு கேளுங்க. எனக்கு தான் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குல்ல.”

“அதையே தான் நானும் சொல்றேன். உன் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்கு
தானே?? அதுக்குள்ள என் அக்காவை வர சொல்லி நீ ஏன் லொள்ளு பண்ற? நான் பத்தாதா
உனக்கு?”, என்று அவளை வம்புக்கு இழுத்தான் ரிஷி. இப்போது கல்லூரி முதலாம் ஆண்டு
படிக்கும் அவன் தன் அக்காவின் வரவுக்காக ஆவலாக காத்திருந்தாலும், ஆருவை தேற்றவே
முயன்றான்.

“நீ பேசாத டா. எவ்ளோ வேலை இருந்தாலும்,என்ன ட்ரைனிங் இருந்தாலும் அந்த பிசாசு தினமும்
உன்னோட பேசுறா.. ஆனா என்னோட மட்டும் வாரத்துக்கு மூணு நாள் தான் பேசுறா..நீ போ.”,
என்று சிறுப்பிள்ளையாக அவள் கோபம் காட்ட,

“ஆரும்மா.. அவன் சின்னதுல இருந்தே சசியை விட ரிது கூடவே சுத்திக்கிட்டு இருப்பான் டா.
அவனால அவ இல்லாம இருக்க முடியாது. அதனால தான் அவன் கூட அதிகம் நேரம் செலவு
பண்றா. உன்னோட கூட வாரம் மூ..ணு.. நாள் பேசுற என் பொண்ணு.. என்னோட வெறும் ஒரே
நாள் தான் பேசுறா.. எங்க போய் சொல்லுவேன்.. “,என்று நாராயணன் பொய் அழுகை அழ..

“போங்க அங்கிள்.. உங்க பெண்ணுக்கே சப்போர்ட் பண்ணுங்க. என் கல்யாண வேலை
இருக்குல்ல.. வர வேண்டியது தானே அவ.”

“நீ பேசாத ஆருக்கா.. கல்யாணம் பேச அவங்க வீட்ல வர்ற வரைக்கும் நீ லவ் பண்ணின
விஷயத்தை சொல்லவே இல்ல.  உதைப்பதற்குள் ஓடிவிடு..”, என்று அவன் வசனம் பேச,

“டேய் ரிஷி.. நிஜமாவே பயம்மா இருந்தது டா. எப்படி சொல்லுவேன். எனக்கு ஒரு பையனை
பிடிச்சிருக்கு. நான் லவ் பண்ணறேன்னு.. வெட்கமா இருக்காதா. அதான் அவங்களையே வந்து
பொண்ணு கேட்க சொன்னேன்.” என்று இழுக்க,

“ஏதோ அந்த அளவுக்கு நல்ல பையனா பார்த்தியே.. அது சந்தோசம் தான் எனக்கு.”, என்று பெரிய
மனிதன் போல சொன்னான் ரிஷி.

“அப்பறம் உன் மாமியார் என்ன சொல்றாங்க?”, என்று சசி வம்புக்கு இழுக்க,

“அவங்களை கொஞ்சம் சரி பண்ணிக் கொடுங்க ஆன்ட்டி”, என்று சோகமாக முகம் வைத்து
கேட்டாள் .

“வேண்டாம் ஆரும்மா. மறுபடி நான் லதா கிட்ட பேச போனேன்னு வை.. அவ என்னை துணில
வச்சு எம்பிராய்டரி பண்ணிடுவா.”,என்று சசி அழுவது போல பாவனை செய்ய,

“என் மாமியார் அவ்ளோ பெரிய டெரர் பீஸா ஆன்ட்டி?”

“இல்ல டா. அவ முன்னாடியே ரிதுவை அவ பையனுக்கு கேட்டா, நாங்க தான் ரிதுக்கு இப்போ
கல்யாணம் பண்ற ஐடியா இல்லன்னு சொல்லிட்டோம். நீ ஹர்ஷாவை லவ் பண்றதா சொல்லவும்,
முதல்ல அவ முடியாதுன்னு ஒரே ரகளை.”

“அதான் தெரியுமே, நான் அவ்ளோ சொல்லியும் லாலிபாப் என் பேச்சை கேக்காம சண்டை
போட்டு, என் பேரை வேற டேமேஜ் பண்ணிட்டான். இப்போ எப்படி அவங்களை கரெக்ட்
பண்றதுன்னே தெரியலையே..”,என்று ஆருஷி புலம்ப,

“நான் ஒரு ஐடியா சொல்லவா ஆருக்கா? என்று ரொம்பவும் சீரியஸாக ரிஷி கேட்க, சொல்லு டா
தம்பி, அந்தம்மாவை சரி பண்ணிட்டா போதும். நான் நிம்மதியா இருப்பேன். எப்பபாரு உர்ன்னு
முறைகிறாங்க.”, என்று சோக கீதம் பாட,

“பேசாம பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வர்றது போல, உங்களை எப்படி கரெக்ட்
பண்றதுன்னே தெரியல அத்தைன்னு அவங்க கிட்டையே கேளு.”,என்று சொல்லும்போதே நாலு
எட்டு தள்ளி தான் நின்றான்.

அவன் சொல்லி முடிக்கும் போது அவன் தப்பிக்க பார்க்க, எட்டி அவன் தலை முடியை கொத்தாக
பற்றியவள், “டேய்.. நான் எவ்ளோ கவலையா சொல்றேன்.. நீ என்னை கிண்டல் பண்றியா??
போடா”, என்று தள்ளிவிட்டு, “என் அம்மாவுக்கு கூட நான் இவ்ளோ யோசிச்சது இல்ல.”,என்று
புலம்பியவாறே அவள் மீண்டும் சசியிடம் அமர,

“உன் அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கத்தான் கஷ்டமா இருக்கும்ன்னு நினைச்சேன் ஆரும்மா.
ஆனா பையன் வேலை, சம்பளம் சொன்னதும் உங்க அம்மா, பையனோட குணம்ன்னு
கேட்டாங்க. தெரிஞ்ச பையன்னு சொல்லவும் உடனே ஓகே சொல்லிட்டாங்க. உங்க அப்பா அந்த
வேலை கூட எனக்கு வைக்கவே இல்ல. ஆருவுக்கு பிடிச்சிருக்கா? ரிதுவுக்கு தெரியுமா? நீங்க
அந்த பையனை பார்த்தாச்சா? எனக்கு ஓகே ன்னு சொல்லிட்டார்.”

“அங்கயும் ஓரளவு அப்படி தான் நரேன். நான் சொன்னதும், சோமநாதன் சார், மாமா, அத்தை
எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க. லதாவை என்ன பேசியும் சரிக்கட்ட முடியல. கடைசில
ஹர்ஷா போட்ட சத்தம் தான் வேலை பார்த்துச்சு. எனக்கு அவதான் வேணும். என்று குரல் ஓங்க
அவன்  சொன்னப்போ. அப்பா.. எவ்ளோ வேகம்.. “,என்று சசி சிலாகிக்க,

“நம்ம ஆரூ கிட்ட ஏதாவது குறையுதுன்னு உன் பிரென்ட் வேண்டாம்ன்னு சொல்லி இருந்தா
பரவால்ல. ரிது வேணும்ன்னு அடம் பிடிச்சா?? அந்த பையனுக்கு கோபம் வராதா?”,என்று
ஹர்ஷாவுக்காக அவர் பேச

“இன்னும் என்ன அங்கிள் அந்த பையன், பேர் சொல்லி சொல்லுங்க உரிமையா.”,என்று அவள்
உரிமையாக நாராயணனிடம் கோபம் கொண்டாள்.

“அடடா.. ஆருக்கா.. நீ எங்கே ஆரம்பிச்ச.. இப்போ எங்க வந்து நிக்கிற.. ரெடி ஸ்டார்ட்..”, என்று
மீண்டும் ரிஷி உள்ளே வந்து சொல்ல,

“ஆமால்ல.. மறந்துட்டேன். ஆன்ட்டி.. இந்த ரிது எப்போ தான் வருவா??”,என்று முதல் அடியில்
இருந்து அவள் ஆரம்பிக்க, சசியும் நாராயணனும் ரிஷியை மூக்கு முட்ட முறைத்து விட்டு, “அவ

ட்ரைனிங் முடிஞ்சு போச்சு டா. ஏதோ ஒரு கேஸ் குடுத்து இருக்காங்க. அவ இன்னும் ஒரே
வாரத்துல சென்னை வந்திடுவா டா.”,என்று சமாதானம் செய்ய,

“போன மாசமும் இதே தான சொன்னிங்க?”, என்று கண்களில் தேங்கிய நீருடன் கேட்ட
அவளுக்கு என்னவென்று எடுத்துரைப்பது, ரிது இப்போது பள்ளி போகும் பிள்ளை இல்லை.
அவள் ஒரு உயர் காவல்துறை அதிகாரி. டெல்லியில் ஏதோ ஒரு கேஸை அவளுக்கு கொடுத்து
முடிக்க சொல்லி இருக்கிறார்கள். அவளும் இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும்
என்று வீட்டாரிடம் கூறிக்கொண்டு இருக்கிறாள்.

உண்மையில் அவளுக்கு டெல்லியில் போஸ்டிங் போட்டு விட்டார்கள் நான்கு மாதத்திற்கு
முன்பே, போஸ்டிங் ஆர்டர் வாங்கியவுடன், அவள் செய்த முதல் காரியமே ட்ராஸ்பர் எழுதி
வைத்தது தான்.

அங்கே இருக்க அவளுக்கும் விருப்பம் இல்லை. அவள் தமிழ்நாட்டில் தன் பணியை தொடரவே
விரும்பினாள். அதனால் தமிழ்நாட்டில் எங்கு மாற்றல் தந்தாலும் சரி என்று அவள் கேட்டிட, ஆறு
மாதங்களில் மாற்றல் தருவதாக சொன்னார்கள். அவளும் நான்கு மாதங்கள் அங்குள்ள
குற்றவாளிகளுடன் தன் லத்தியோடு பேசிக்கொண்டு இருக்க,

அவளை ஆவலாக எதிர்பார்த்த ஜீவங்களில் மிக முக்கியமானவன் அபினவ். அவள் இன்னும்
தமிழகம் வரவில்லை. வெளியூரில் படிக்கிறாள் என்பது மட்டுமே ஆருஷி மூலம் அவன் அறிந்த
செய்தி. அவன் நினைத்திருந்தால் நித்திலன் மூலமாகவே ரிது வீட்டிற்கு சென்று அவனால்
அவளை பற்றி தெரிந்து கொண்டு, ஏன் திருமணத்திற்கு கூட பேசி இருக்க முடியும். ஆனால்
எப்போது அவனுடைய அபர்ணா, நான் வந்ததும், இதே மனநிலை தொடர்ந்தால் பெற்றோரிடம்
அறிமுகம் செய்கிறேன் என்று சொன்னாளோ, அவளின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அவள்
வீட்டிற்கு செல்லவோ, அவளை பற்றி அறிந்து கொள்ளவோ அவன் முயலவில்லை. ஆனால்
ரிஷியை மட்டும் அடிக்கடி பார்ப்பான். அவனும் ரிஷியும் நல்ல நண்பர்கள் போல பேசவும்
செய்வார்கள். ஆனால் மறந்தும் அபர்ணாவை பற்றி பேச மாட்டான் அபி. அதே போல,
அக்காவை பற்றி யாருடனும் கலந்துகொள்ளும் பழக்கம் ரிஷிக்கும் இல்லை. அதனால் இவர்கள்
நட்பு அது பாட்டுக்கு சென்றது. அனைவரும் ஒரே பின்னலில் இருக்கிறார்கள் ஒருவரை ஒருவர்
அறியாமல்.

ஆருஷி ஜே. பி யை போனில் அழைத்து பேச, “சொல்லு டி. என்ன கொஞ்ச நாளா போனே வரல.
என்னை மறந்துட்டியோ..”,என்று வம்பு செய்தான் அபி.

“அபி”, என்று அவள் அழைக்க, “ஏன்டி எப்பயும் போல, ஜே.பி ன்னே கூப்பிடு. இப்போ
விஷயத்துக்கு வா.”,என்றான் அவள் குரலை வைத்தே அவள் பெரியதாக ஏதோ சொல்ல
போகிறாள். அதுவும் தான் கோபம் கொள்வோமோ என்று தயங்குகிறாள் என்று புரிந்தவனாக,

“இல்ல உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். திட்ட மாட்டியே.. “,என்று தயங்க,

“அது நீ சொல்றதை பொறுத்து டி குரங்கே.”, என்று சாவகாசமாக தன் வண்டியில் ஏறி அமர்ந்து
கொண்டு கேட்டான்.

“அது எனக்கு கல்யாணம்.. “,என்று அவள் இழுக்க,

“அட.. பாருடா.. யாரு அந்த அன்லக்கி பெல்லோ.. உன்னோட சேர்ந்து காம்பௌண்ட் வால் ஏற
தெரிஞ்சவனான்னு பார்த்தியா இல்லையா?”,என்று கிண்டல் செய்ய,

“ஏய்.. ஜே.பி.. நான் சீரியஸா சொல்றேன் பா.”

“நானும் அதே சீரியசா தான் சொல்றேன் டி.”, என்று அவன் கலாட்டா செய்ய,

“அபி.. நான் ஒருத்தரை லவ் பண்ணறேன்”,
என்றாள்.

அவ்வளவு தான்.. அபியின் முகத்தில் இருந்த சிரிப்பு துணி கொண்டு துடைத்தார் போல மறைய,

“என்ன டி, கல்யாணம் நிச்சயம் ஆகி இருக்குன்னு இப்போ சொல்ற. காதலிக்கிறன்னு வீட்ல
சொன்னியா? அந்த பையன் எப்படி? இப்போ பார்த்திருக்கற மாப்பிள்ளை யாரு? உனக்கு
எல்லாமே விளையாட்டா ஆருஷி? நீ இவ்ளோ செய்யும் போது இந்த அபர்ணா என்ன பண்றா.. “,
என்று அபி படபடக்க,

“அபி அபி.. “, என்று அவன் தோளை பிடித்து உலுக்கினான் ஹர்ஷா.

“இரு பங்கு.”, என்று அவனை நிறுத்திவிட்டு, போனில் ,”என்ன டி பண்ணப் போற, இப்போ நான்
என்ன பண்ணனும்?”, என்று அபி பரபரப்பாக கேட்க,

“ஒரே ஒரு உதவி தான் ஜே.பி. நான் அந்த மாப்பிள்ளையை உன்னை பார்க்க வர சொல்றேன்.
வருவாரு. பார்த்து, நான் ஒருத்தரை காதலிக்கிறேன்னு மட்டும் சொல்லிடு”, என்றதும்,

“ஏ எருமை. யாரை காதலிக்கிறன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது??எனக்கு தான்
அவனை தெரியாதே. சொல்லி தோலை. முதல்ல அவன் நல்லவனான்னு பார்த்துட்டு இவன் கிட்ட
பேசுறேன். வந்து சேருது பாரு, எனக்குன்னு.. பிசாசு.. அபர்ணா வரட்டும் டி. உன்னை என்ன
பண்ணறேன்னு பாரு.”, என்று அவன் தன் போக்கில் திட்ட,

“ஜே.பி. அந்த மாப்பிள்ளை உன்னை பார்க்க வந்தாச்சு. பேசிட்டு எனக்கு கூப்பிடு.”, என்று
போனை வைத்துவிட்டாள்.

“அடியேய்.. இந்தா…”, என்று இவன் இங்கே கத்த, அவளோ போனை வைத்துவிட்டு வயிற்றை
பிடித்துக்கொண்டு சிரித்து கொண்டே இருந்தாள்.

அபி தலையில் கை வைத்து அமர, “என்ன பங்கு”, என்று அவனை இடித்துக்கொண்டு அமர்ந்தான்
ஹர்ஷா..

“அது என் பிரென்ட் ஒரு பொண்ணு டா. யாரையோ லவ் பண்ணுதாம். வீட்ல மாப்பிள்ளை
பார்த்தாச்சு போல, அந்த பையன் கிட்ட போய் என்னை பேச சொல்லுறா..”, என்று அபி
கடுப்புடன் சொல்ல,

“இதுல என்ன அபி பேசிடு. “,என்றான் ஹர்ஷா..

“அடேய் மாடே.  அவ யாரை லவ் பண்ணறேன்னும் சொல்லல, யார் மாப்பிள்ளைன்னும்
சொல்லல.. யார் கிட்ட போய் யாரை பத்தி என்ன பேச? எனக்கு வர கடுப்புக்கு.. “

“என்ன பண்ண போற பங்கு”,என்று ஆவலாக ஹர்ஷா கேட்க,

“ஆமாம்.. நீ என்ன திடீர்ன்னு வந்து நிக்கிற? உனக்கு இன்னிக்கு ரிசர்ச் சென்டர்ல வேலை
இல்லயா?”, என்றதும்,

“இல்ல பங்கு. வீட்ல பொண்ணு பார்த்துட்டாங்க. அதான் உன்கிட்ட சொல்லிட்டு போலாம்ன்னு
வந்தேன்.”,என்றான்.

“பங்கு..”, என்று தாவி அணைத்த அபி, “யாரு டா பொண்ணு?”,என்றதும்,

அவன் ஆருஷி போட்டோவை மொபைலில் காட்டினான். அபி முகம் விளக்கெண்ணெயை
குடித்தது போல் மாற, “பங்கு நாம அந்த பார்க்ல போய் பேசலாம் வா”, என்று ஹர்ஷாவை
அழைத்துக்கொண்டு செல்ல, ஹர்ஷாவுக்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

அபி அங்கே ஒரு கல் பெஞ்சில் அமர்ந்ததும், “இங்க பாரு பங்கு. அந்த பொண்ணு..”, என்று
ஆரம்பிக்க,

“எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு பங்கு. கட்டுனா அவளை தான் கட்டுவேன்.”,என்று
உறுதியாக ஹர்ஷா சொல்ல, அபிக்கு மண்டையை எங்கே முட்டிக்கொள்ளலாம் என்ற
யோசனைக்கு கருத்து சொல்ல ஆள் தேவைப்பட்டது..

நீங்க அதுக்கு இப்ப ஆலோசனை சொல்லுங்க. நான் அடுத்த எபியோட சீக்கிரமா வரேன்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��49��

தன் முன்னால் பிடிவாதமாக அமர்ந்திருந்த ஹர்ஷாவை பாவமாக பார்த்த அபி, ‘ஆருஷியின்
மனதில் லாலிபாப் இருப்பது பல வருடமாக தனக்கே தெரியும். வீட்டில் கல்யாணம் என்றதும்
பதறிப்போய்.. பதறிப்போய்.. இல்லயே.. அந்த குரங்கின் குரலில் பதற்றம் இல்லையே.. நான்
தானே பதறினேன்.

பதறிய காரியம் சிதறும் என்பது எவ்வளவு உண்மை. அந்த வாலில்லாத வானரம் தயங்கி தயங்கி
தானே பேசியது??’,என்று அவனின் வக்கீல் மூளை அவனை தட்டி எழுப்ப,

மெதுவாக அவள் பேச்சு, குரல், அவள் சொன்ன விஷயங்கள் என்று மனம் மீண்டும் அசைபோட,
அபியின் எண்ணவோட்டம் புரியாத ஹர்ஷாவோ,” பங்கு, எனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கு
பங்கு. அவ யாரை லவ் பண்ணினா என்ன? எனக்கு அவ தான் வேணும்”, என்று அபியை வம்பு
செய்ய அவன் டயலாக் அடித்துக்கொண்டு இருக்க,

ஓர் செவியில் அவன் சொன்ன விஷயங்களை கிரகித்தவன், ஆக, அவள் சொன்னதும், இவன்
வந்ததும், இப்போது அவள் வேண்டும் என்று இவன் செய்யும் பிடிவாதமும் அவனுக்கு ஓரளவு
இதுதான், என்று புரிந்து போக,

“சரியா சொன்ன பங்கு. ஆனா பாரு, யாரையோ காதலிச்ச பொண்ணு உனக்கெதுக்கு? அவளோ
அந்த பையன் பேரைக் கூட என்னை நம்பி சொல்ல மாட்டேன்கிறா. என்னால அவங்க வீட்லயும்
பேச முடியாது. கல்யாண வேலையை ஆரம்பிக்கிறதுக்குள்ள நான் உங்க வீட்ல சொல்லி
எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் டா. கவலையே படாத. சூப்பர் பொண்ணு பார்க்கலாம்.
நான் சொன்னா அங்கிள் புரிஞ்சுப்பாரு.  வா “,என்று அவனை வீட்டுக்கு அழைக்க,

அபியின் இந்த வித பேச்சை எதிர்பார்க்காத ஹர்ஷா திரு திருவென்று விழிக்க,

“என்ன? கிளம்பு”, என்று அவனை கிளப்பி வெளியே அழைத்து வந்தவன், “நீ வண்டி கொண்டு
வரலையா? எப்படி வந்த??”, என்றவாறே, இயல்பு போல திரும்பி ஹர்ஷாவை நோக்க,
விளக்கெண்ணெய் குடித்தது போல அவன் விழித்ததில் சிரிப்பு வர, அதற்கு மேல் தாக்கு பிடிக்க
முடியாத அபியோ, அவன் கைகளை வளைத்து பிடித்து, “ஏன்டா மாடே.. ஒழுங்கா உண்மையை
சொல்லு இல்ல.. அவ்ளோ தான்”, என்று மிரட்டல் விட,

“பங்கு”, என்று ஹர்ஷா முனகினான்.

போனை எடுத்த அபி, ஆருஷிக்கு அழைத்து, “எங்க டி இருக்க? ஒழுங்கா கிளம்பி வா டி. இல்ல
உன் லாலிபாப் ஒழுங்கா இருக்க மாட்டான். சப்பி போட்ட லாலிபாப் குச்சி மாதிரி ஆக்கிடுவேன்.
வா டி.”, என்று விரட்ட, பயந்த ஆருஷி, ஐந்து நிமிடத்தில் அவன் முன் ஆஜரானாள்.

“ஏன் டி குரங்கு, பக்கத்துலயே எங்கயோ இருந்திருக்க? எவ்ளோ சேட்டை இருந்தா என் பங்கை
லவ் பண்ணிட்டு எங்கிட்ட சொல்லாம இருந்ததும் இல்லாம, கல்யாணம் முடிவான அப்பறம் கூட
என்னை வம்பு பண்ணி விளையாடுற? இதுக்கு இந்த எருமை வேற கூட்டு”, என்று ஹர்ஷாவை
விடுவித்து, ஆருஷியின் காதை திருக,

“ஜே.பி. எப்படி கண்டு பிடிச்ச? நான்.. சும்மா.. ஆ.. வலிக்கிது டா.. விளையாடினேன்.. “, என்று
சொல்ல

அபி சாதாரணமாக, “சந்தோசமா இருக்கு டி. என் பங்கு எவ்ளோ நல்லவன் தெரியுமா? நீ
சொன்னது இவனைத் தானா டி? ரொம்ப சந்தோசம்.”, என்று மனம் நிறைந்து அபி பேச,

ஹர்ஷா அவனை அணைத்துக்கொண்டான். ஆரூ மனதில் ரிது பற்றி கேட்கலாமா என்று
நினைக்க, ஏனோ வேண்டாம் என்று முடிவு செய்தவளாக மௌனம் காத்தாள்.

இருவரையும் மனம் நிறைய வாழ்த்தியவன், போனில் நிதீஷை அழைத்து தான் இன்று விடுமுறை
என்று வேதாசலத்திடம் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு, மூவரும் அன்று மகிழ்ச்சியாக வெளியே
சுற்றினர்.

திருமணம் நிச்சயம் ஆன விதம் கேட்டு மகிழ்ந்தான் அபி. எப்படியும் இவர்கள் திருமணத்தில்
அபர்ணாவை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கையில் அபி இருக்க, காலம் அபியை பார்த்து
கைக்கொட்டி சிரித்தது.


தன் முன்னே விறைப்பாக நின்ற அந்த அதிகாரியை கண்டு ஏனோ அந்த சர்தார் ஜி அதிகாரிக்கு
கடுப்பு தான் வந்தது.

“அப் கியா கெஹனா சாதே ஹோ| “,என்று கடுப்பிடன் அவன் மொழிய,( இவர்கள் மொழி நமக்கு
பரிச்சயம் அதிகம் இல்லாததால், நம்ம தமிழுக்கு மாறிடுவோம்)

“இப்போ என்ன தான் சொல்ல வரீங்க? “(இதை தான் அவர் கேட்டார்.)

“முடியாதுன்னு சொல்றேன் சார்.”, தெளிவான வந்த பேச்சில் மேலும் கடுப்பானவர்,

“ஏன்?”

“அவனுங்க ஒன்னா நம்பர் பொறுக்கி பசங்க சார். அதுலயும் அவன், ஒரு பெரிய தொழிலதிபர்
பையன்னா? என்ன கொம்பா? என்னால அவனுக்கு ப்ரோடெக்ஷன் கொடுக்க முடியாது.”

“இது என் ஆர்டர்.”

“சாரி சார். அவ்ளோ அவசியம்ன்னா என் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் ஒருத்தரை அனுப்பறேன்.
அவ்ளோ தான் முடியும். அந்த இடியட் கூட என்னால பாதுகாப்புக்குப் போக முடியாது.”

“ஹாவ் டேர்?நான் யார் தெரியும்ல்ல? என் ஆர்டர் ஒபே பண்ணலன்னா நான் உங்க மேல
ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்.”

“தாராளமா?? கமிஷன் வைப்பாங்க.ஐ கேன் எக்ஸ்பிளேய்ன்.”, என்று நிமிர்வாக சொன்ன அந்த
பெண்ணை அவரால் மனதிற்குள் மட்டுமே மெச்ச முடிந்தது.

“மிஸ். ரிதுபர்ணா, ஏன் இப்படி பண்றீங்க? எல்லா விஷயத்துலயும் யு ஆர் பர்ஃபெக்ட். ஆனா இது
போல ..”, என்று நிறுத்த,

“சார். அவன் ரோட்ல வச்சு ஒரு பொண்ணு மேல ஆசிட் வீசி இருக்கான். அதை அவ்ளோ பேர்
பார்த்தும் அவன் பெரிய இடத்து பையன்னு ஒருத்தர் கூட சாட்சி சொல்ல வரல, அந்த பொண்ணு
இப்போ உயிருக்கே போராடுது. அவங்க அண்ணன் ‘உன்னை விட மாட்டேன்டா’ன்னு கோர்ட்ல
வச்சு கத்தினத்துக்காக நீங்க என்னை அந்த **** கூட பாதுகாப்புக்கு போக சொல்றீங்க. அவன்
கிட்ட இருந்து தான் சார் சொசைட்டியை பாதுகாக்கணும். ஹி இஸ் அ கிரிமினல் சார்.”, என்று
எரிச்சல் மண்ட சொன்னாள் ரிதுபர்ணா.

அவள் சொல்வது புரிந்தாலும், அவர் பேச்சை அவள் மதிக்கவில்லை என்பதே பெரிதாக தோன்ற,

“நீங்க என் ஆர்டரை ஒபே பண்ணல. சோ. நான் உங்கே மேல ஆக்ஷன் எடுக்க தான் செய்வேன்.
ஆனா உங்க திடமான மனசு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த மனோபாவம் இருந்தா இந்த
துறையில் ரொம்பவே கஷ்டம். வளைந்து போக தெரியணும்.”, என்று அவர் அறிவுரை சொல்ல,
அவளோ,

“என்ன ஆனாலும் சரி, நான் என் மனசுக்கு எதிரா ஒரு வேலையும் செய்ய மாட்டேன். என்ன
விளைவு வந்தாலும் சந்திக்க தயார்.”, என்று விறைப்பாக சொன்னவள், அதே விறைப்போடு ஒரு
சல்யூட் அடித்து விட்டு கிளம்பினாள்.

அவளே எதிர்பாரா வண்ணம் அவள் எதிர்பார்த்த டிரான்ஸ்பர், அவளுக்கு தண்டனை என்ற
பெயரில் கிடைக்க,

மகளாக, அக்காவாக, தோழியாக, சென்னை செல்வது மகிழ்ச்சி என்றாலும், ஒரு காவலராக அவள்
மனம் மிகவும் வருந்தியது. இது அவளின் நேரடி வழக்கில்லை தான். ஆனால் அந்த கேஸின் அடி
நுனி வரை தெரிந்து வைத்திருந்தவளால் வருத்தாமல் இருக்க முடியவில்லை.’ஒருவர் கூட அந்த
கயவனுக்கு எதிராக சாட்சிக்கு வரவில்லையே. அந்த தெருவில் இருந்த ஒரு சி.சி.டி.வி புட்டேஜ்
கூட கிடைக்கவில்லையே. இவர்கள் சென்று விசாரிக்கும் முன், அனைத்து ஆதாரங்களையும்
பணம் என்னும் மூடி போட்டு அடைத்து விட்டனர் அந்த பெரிய மனிதர்கள். அத்தனை பேர்
வீடியோ எடுத்தார்கள் அன்று. ஒருவர் கூட ஷார் செய்யவில்லை. அப்படி செய்தால் ஐ.பி அட்ரஸ்
வைத்து அவர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடும் அந்த பணம் பொருந்திய கூட்டம்.
அவளுக்கு நெஞ்சு முட்டும் கோபம் இருந்தது. அந்த பெண்ணுக்கோ இன்னும் நிலை மோசம்
தான். அவளாக எழுந்து வந்து சொன்னாலும், அவளுக்கு கண் பார்வை நன்றாக இருந்து, அது
அவன் தான் என்று அடையாளம் காட்ட வேண்டும். இதை வைத்தே வக்கீல்கள் அவனை
காப்பாற்றி விடுவார்கள்.’நொடியில் வக்கீல்கள் மேல் எழுந்த கோபத்தை ரிதுவால் தடுக்க
முடியவில்லை.

ஆனால் ஒரு வக்கீல் அந்த பெண்ணுக்காக ஆஜாராகிறார் என்று கேள்விப்பட்டாள். எதிரணியின்
பணபலம் தெரிந்தும், தன்னார்வமாக உதவ ஒரு மனிதர் வருகிறார் என்று அறிந்து அவள் மனம்
அந்த வக்கீலுக்காக நன்றிகள் பல மானசீகமாக உரைத்தது.

அவள் சிந்தனை வலையை செல்பேசி மணியோசை அறுத்து எரிய, திரையில் மின்னிய ரிஷி என்ற
பெயரை கண்டதும் முகம் கடுமை மறைந்து மென்னகை பூசிக்கொண்டது. ஐந்து வருடமாக,
அவனே அவளை வந்து பார்த்து விட்டு செல்கிறான். அவளின் ஒவ்வொறு செயலுக்கும் பாராட்டி
மின்னஞ்சல் அனுப்புவான். தினமும் அவளுடன் பேசாமல் அவனுக்கு நாள் செல்லாது. அக்கா
அக்கா என்று உயிர்விடும் அவனின் அன்பு, நிறைய சேட்டைகள் குறும்புகள் நிறைந்ததாகவே
இருக்கும்.

தெளிந்த முகத்தில் புன்னகையுடன்,” சொல்லு டா “,என்றதும்,

“அக்கா இடையில் முடிஞ்சா வந்துட்டு போயேன்.”, என்று உள்ளே போன் குரலில் அவன் பேச,

“என்ன டா. நீ இப்படி சொல்ல மாட்டியே?”, சந்தேகமாக அவள் கேட்க,

“இல்ல ஆருக்கா கல்யாணம் வருது. தெரியும் தானே உனக்கு. அவ உன்னை ரொம்ப மிஸ் பண்றா
அக்கா. பாவம் அவ.”, என்று அவளுக்கு பரிந்து வந்த தம்பியை நினைக்கையில் ஒரு புறம்
பெருமிதமும்,  மற்றொரு புறம் சிரிப்பும் வர,

“இப்போ வந்தா கல்யாணத்துக்கு வர வேண்டாமா?”, என்று ரிது விளையாட,

“அக்கா பாவம் அக்கா.”, என்று இழைந்தான் தமையன்.

“சரி விடு. நான் ஞாயிறு இதை பற்றி பேசுறேன். இப்போ முக்கியமான வேலை இருக்கு.”,என்று
சொல்லி அழைப்பை துண்டித்தவள், வெள்ளியே ஊருக்கு போக டிக்கெட் எடுத்து விட்டதால்,
இருக்கும் ஒரு நாளுக்குள் வேகமாக ஷாப்பிங் கிளம்பினாள்.

ஆருவுக்கு, ரிஷிக்கு, அம்மாவுக்கு என்று துணி எடுத்தவள், அப்பாவுக்கும் ஒரு சட்டை எடுத்தாள்.
அப்படியே கிளம்பி வருகையில் ஒரு கடிகார கடையில், அப்பா, ரிஷி, ஹர்ஷா மூவருக்கும் ஒரே
மாதிரி கைக்கடிகாரம் வாங்கியவள், ஏதோ தோன்ற, நான்காக வாங்கினாள்.

யாருக்கும் சொல்லாமல் அவள் சென்னை வர இரு காரணம். ஒன்று குடும்பத்துக்கு சர்ப்ரைஸ்.
இன்னொன்று இது அவள் பதிவு செய்ததற்கான மாற்றல் இல்லை. அவள் மீதான துறை ரீதியான
நடவடிக்கை. இதில் அவளுக்கு 15 நாள் சஸ்பென்ஷனும் அடக்கம்.

மனம் கசந்தவள், அதை ஒதுக்கி கிளம்ப ஆயத்தமானாள்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��50��

சென்னை விமான நிலையம் ரிதுவை அன்புடன் வரவேற்றது. ஆம். ரிது சென்னையில் கால்
பதித்து விட்டாள். கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகள்.  சென்னை நிறைய மாறி இருந்தது.
சாவகாசமாக இறங்கி, லகேஜ் எடுத்துக்கொண்டு ஓலா டாக்ஸி வைத்து வீட்டு செல்ல
ஆயத்தமாக, டிரைவர் அவளை மேலும் கீழும் பார்த்தார்.

இத்தனை ஆண்டுகள் டெல்லியில் இருந்த அவளின் தோற்றம் கோதுமை மாவில் செய்த சிற்பம்
போல தங்க நிறத்தில் இருந்தது. அவள் விழிகளின் தீட்சண்யம் அவருக்கு அவளின் அறிவை
பறைசாற்ற, க்ரே நிற ஃபோர்மல் பேண்ட், வெள்ளை முழுக்கை சட்டை அதை கை முட்டி வரை
அழகாக நேர்த்தியாக மடித்து விடப்பட்டு இருந்தது.

சட்டையில் தொங்கிய கூலர்ஸ், சென்னை வெயிலை பற்றி முன் யோசனையாக அவள் தன்னை
வைத்திருப்பதில் பெருமிதம் கொண்டு அவள் சட்டையின் பையில் கம்பீரமாக வீற்றிருந்தது.
பாலிஷ் செய்யப்பட்ட கருப்பு நிற ஷு அவளின் நாசுக்கான நடை, என்று அவளை அவர் எடை
போட்டுகொண்டு இருக்க, அவளோ,

டெல்லி நினைவில், “காடி.. “,என்று ஆரம்பித்து, “அண்ணா வண்டி எடுங்க.”, என்று முடிக்க,

“மேடம், வண்டி நம்பர், கேப் புக்கிங் டீடைல்ஸ் எல்லாத்தையும் உங்க வீட்டு ஆட்களுக்கு மெசேஜ்
அனுப்பிடுங்க மேடம்.”, என்றார்.

அவள் ஒரு நொடி புரியாது நோக்கிவிட்டு, “ஏன்?”, என்றாள்.

“மணி 8 மேடம். ஒரு பொண்ணா வரீங்க பாதுகாப்பு முக்கியம் மேடம்”, என்றார்.

“எல்லார்கிட்டையும் இப்படி தான் சொல்லுவீங்களா?”, என்று ஆச்சர்யமாக அவள் கேட்க,

“கண்டிப்பா மேடம். கொஞ்சம் விவரம் இல்லாத மாதிரி தெரிஞ்சா”, என்று சொல்லிக்கொண்டே
வண்டியில் ஏறியவர், “இதோ அந்த டெபை அழுத்துங்க மேடம்.” என்றதும், அவள் டேபில் இருந்த
தொடுத்திரையை உயிர்பித்தாள்.

அதில் பெண்கள் என்னென்ன ஆப் பயன்படுத்த வேண்டும். காவலன் sos ஆப்பின் பயன்பாடு.
வெளி இடங்களுக்கு செல்லும்போது தற்காத்துக்கொள்ளும் முறைகள் என்று பல வீடியோக்கள்
வரிசைகட்ட, மனதிற்குள் மகிழ்ந்தவள், அவருடன் பேசியபடி சென்னையின் தற்போதைய
நிலவரத்தை அறிந்தாள்.

வீடும் வந்து விட, “உள்ளே வாங்க அண்ணா”, என்று அழைத்தாள்.

“இல்ல மேடம்”, என்று அவர் தயங்க, “சும்மா வாங்க”, என்று உள்ளே அழைத்து சென்றாள்.

வாயிலில் அவளின் குரல் கேட்டு ஓடி வந்த ரிஷி அவளை அணைத்துக்கொண்டு சிரிக்க,

“என்ன டா எப்படி என் சர்ப்ரைஸ்??”, என்று அவள் கேட்டதும் கண்கலங்கி விட்டான்.

அந்த ஓட்டுனரும் உள்ளே வர, அவன் அவரை வரவேற்பாய் புன்னகை சிந்தி விட்டு, மாடியை
பார்த்து,” அம்மா,நைனா.. அக்கா வந்தாச்சு”, என்று குரல் கொடுக்க,
அப்போது தான் வீட்டை நிமிர்ந்து நன்றாக பார்த்தார் ஓட்டுநர்.

காவல் உடையில் பல மெடல்கள் தாங்கி நின்ற ரிதுவின் புகைப்படம் ஹாலில் நடுநாயகமாக
காட்சியளிக்க, அவரோ வியப்பின் உச்சிக்கே சென்றவராக,

“மேடம் நீங்க?”, என்றதும்,

“நான் ரிதுபர்ணா”, என்று எளிமையாக சொன்னாள் அவள்.

“இல்ல நீங்க??”,என்று அவர் மீண்டும் இழுக்க,

“அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் சென்னை சிட்டி”, என்று சிரித்துக்கொண்டு சொன்னவள்.
“நெஸ்ட் மந்த் முதல் வாரம் வந்து என்னை அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷன்ல பாருங்க.”,
என்றாள். அவருக்கு ஏன் என்று புரியாவிட்டாலும் சரி என்று தலையசைத்துக் கிளம்பினார்.

சசியும் நாராயணனும் மாடியில் இருக்க, ரிதுவும் ரிஷியும் பதுங்கிப் பதுங்கி மாடி ஏறினர். அங்கே
நிலவொளியில் நாராயணன் சசி மடியில் படுத்தபடி ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.

சசி அவர் தலையை கொதியவாறு பதில் சொல்லிக்கொண்டு இருக்க, “ஆகா ஆகா என்ன ஒரு
அருமையான காதல் காட்சி.. “,என்று ரிது கிண்டல் செய்ய, “ஆமா அக்கா இவங்களுக்கு இருக்கற
சேட்டையை பாரேன். நான் கீழ போய் கால் மணி நேரத்துல ரொமென்ஸ் பண்ண
ஆரம்பிச்சுட்டாங்க.”, என்று அவனும் கிண்டலடிக்க துவங்கினான்.

ரிதுவை பார்த்து நாராயணன் மகிழ்ச்சி பொங்க அணைத்துக்கொள்ள, சசி கண்ணீரை மாலை
மாலையை சொரிய, “ஐயோ அம்மா.. என்ன இது? தி கிரேட் ரிது , ஏ.சி.பி யோட அம்மா
அழலாமா?”, என்று ரிஷி கேலி செய்ய,

“போடா அவ என்னைக்கும் என்னோட குட்டி ரிது தான்.”,என்று அவளை தோளோடு
சேர்த்தணைத்தார்.

அவளின் தோற்றத்தில் இருந்த கம்பீரத்தில் நாராயணன் கொஞ்சம் பிரமித்து தான் போனார்.

முடியும்போதெல்லாம் அவளை சந்தித்து வந்தாலும், இன்று அவள் தோற்றத்தில் இருக்கும்
ஆளுமை கண்டு அவளின் தந்தையாக பூரித்துப்போனாரென்று சொன்னால் அது மிகையல்ல.

“எனக்கு ஒரு பதினைந்து நாள் லீவு, அப்பறம் அசோக் நகர் ஸ்டேஷன்ல ஏ.சி போஸ்ட்.இனி
இங்க தான்.”, என்று ரிது சிரிக்க, அவள் சிரிப்பில் இருந்த சிறு வலியை கண்டுகொண்டது
நாராயணன் மட்டுமே. பேசிப் பேசி அனைவரும் கீழ இறங்கும் சமயம்,

“ஏம்மா யாரை போட்டு மிதிச்ச, எதுக்கு சஸ்பென்ஷன்?”, என்றார்.

அப்பாவை ஆச்சர்யமாக பார்த்த ரிது, “நான் சஸ்பெண்ட்ன்னு சொல்லவே இல்லயே.”, என்றாள்
சந்தேகமாக,

“ஏம்மா எதுக்கு பதினைந்து நாள் லீவு. அதுக்கு வாய்ப்பே இல்லை. நீயே எடுக்கறதா இருந்தா
அதை ஆரூ கல்யாணத்துக்கு தான் எடுப்பியே தவிர இப்போ போய் எடுக்க மாட்ட”, என்றதும் தன்
தந்தையின் புத்திசாலித்தனத்தை ரிதுவால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவள் நடந்ததை சொல்ல, “நீ செஞ்சது தான் சரி. ஆனாலும் அவனை என்கவுண்டர் பண்ணி
இருக்கலாம். அது முடியாது இல்லையா. எப்படியாவது தண்டனை வாங்கி தர முடியுமா பாரு”,
என்றார் நாராயணன்.

அதே வார்த்தையை வேதாசலம் அபியிடம் சொல்ல,

“கண்டிப்பா சார். என்னால இந்த கேஸை கண்டிப்பா நடத்த முடியும். நான் இப்போதைக்கு
டெல்லி கோர்ட்ல வாதாட என்னோட நேம் பதிவு பண்ணிட்டு, கேஸ் டீடெயில்ஸ் கலக்ட்
பண்ணிட்டு டென் டேஸ்ல வந்துடறேன். அப்பறம் ஹியரிங் போது போய்க்கலாம்.”, என்றான்.

“ரைட் அபி. நீயே இதை தனியா ஹேண்டில் பண்ணு. சென்னை கேஸ் இப்போதைக்கு நிதீஷ்
அண்ட் ராணா பார்க்கட்டும். நீ டெல்லி கேஸ் மட்டும் கவனம் வை.”, என்றார்.

“சரி சார்.” என்று வெளியில் வந்த போது ஏனோ அன்றைய நாள் அவனுக்கு அழகாக இருப்பது
போல தோன்ற,

வண்டியில் ஏறி அமர்ந்தவன் விழிகள் ஒரு வித மயக்கத்தில் செல்ல, மனமோ அபர்ணா ராகம்
வாசித்தது.

பின்னால் வந்த நிதீஷ், “டேய்.. டேய். மச்சி…”, என்று அழைக்க, அது காதில் விழாமல் கிளம்பி
சென்ற நண்பனை பார்த்து, “அப்பப்போ இவனுக்கு என்ன மோகினி பிசாசு பிடிக்குமோ..
தெரியல. கேஸ் பைலை விட்டுட்டு போறான் பக்கி.”,என்று வைதவன்,

வாட்சப் செய்தியில் நாளை காலை பைலைப் பெற்றுக்கொண்டு விமானம் ஏறுமாறு தகவல்
அனுப்பிவிட்டு வீட்டுக்கு விரைந்தான்.

வீட்டை அடையும் வரை ஓர் ஏகாந்த மனநிலையில் இருந்தான் அபி. எப்படியும் ஆருஷியின்
திருமணத்தில் அபர்ணாவை பார்த்து தன் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும்
என்று பல வண்ண கனவுகளோடு அவன் வீட்டிற்குள் நுழைய,

அங்கே முகத்தை தூக்கி வைத்தபடி அமர்ந்திருந்தாள் ரேகா, அவளை ஒரு பொருட்டாக கூட
மதிக்காமல் அவளை கடந்து உள்ளறைக்கு செல்ல,

“அபி, நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு.”, என்றாள் கோபமாக,

“என்ன என்ன விஷயம்?”, என்று பொறுமையாக கேட்ட அவனை வெட்டவா குத்தவா என்று
அவள் முறைக்க, அதை லட்சியம் செய்யாமல் நின்றான் அபினவ்.

“என்னோட ஒன்னு விட்ட நாத்தனார்க்கு உன்னை கேட்கிறாங்க அபி”, என்று அவள் அழுத்தி
சொல்ல,

அவனும் அதே அழுத்ததோடு,”எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்லு”, என்றான்.

“நான் கல்யாணம் செஞ்சி போன வீட்ல எனக்கு மரியாதை வேண்டாமா? நான் அப்படி சொல்ல
முடியுமா?”, என்று அவள் சீற,

“ச்ச.. என்ன இம்சை உன்னோட. இங்க பார். என் கல்யாணம் என்னோட இஷ்டம். அதுல நீ
தலையிட வேண்டாம். உன் வாழ்க்கையை காட்டி என்னை பயமுறுத்த நினைக்காத. நான் அப்பா
கிடையாது. நீ சொல்ற எல்லாத்தயும் நம்ப, நான் விக்னேஷ் மாமா கிட்ட பேசிக்கிறேன். நீ
கிளம்பு.”,என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

அபியின் பதிலில் சங்கரிக்கு ஒரே மகிழ்ச்சி. அவருக்கு மகனின் மனம் தெரியும். எங்கே பாசம் அது
இது என்று மகன் சலனம் கொள்வானோ என்று பயந்த சங்கரிக்கு மனம் குளிர்ந்து போனது தான்
உண்மை.

அவருக்கும் ஆருஷியின் தோழி அபர்ணா என்பது வரை மட்டுமே தெரியும். எப்படியும் அவளின்
திருமணத்தில் அபியின் திருமணத்தை குறித்து விடும் எண்ணத்தில் இருந்தவரை ஒரு மாதமாக
தொல்லை கொடுத்து வருகிறாள் ரேகா.

அவளுக்கு இன்னும் புத்திர செல்வம் இல்லை. ஸ்வாதிக்கு முதலில் ஒரு பெண் குழந்தையும்
இப்போது ஒரு ஆண் குழந்தையும் இருக்க, ரேகாவோ குழந்தை பற்றிய எண்ணமே இல்லாமல்
இன்னும் பணம், மதிப்பு, பங்களா என்ற கனவில் மிதக்க, விக்னேஷ் தான் கொஞ்சம் நொந்து
போனான்.

ஸ்வாதியை அவ்வப்போது கண்டித்து சரியாக வாழ்க்கையை வண்டியை ஓட்டிக்கொண்டு
இருக்கிறான் மகேஷ்.

ஆருஷி திருமண பத்திரிகை விநியோகிக்க ஆரம்பித்து இருந்தாள். அவளுக்கு இன்னும் ரிது
சென்னை வந்தது தெரியாமல் இருக்க, அன்று ரிது வீட்டிற்கு செல்லும் முன்னால் அகவழகி
வீட்டிற்கு சென்றாள் ஆரூ.

வாசலில் அழகிய வெள்ளை சட்டையில் நின்ற பதிமூன்று வயது சிறுவன் ஸ்ரவன் அவளைக்
கண்டதும் ,”அக்கா…கா.. “,என்று அழைக்க, அவளோ அவனை தாவி அணைத்தாள்.

திருமணத்திற்கு அழைத்துவிட்டு, அவள் சொன்ன விஷயத்தில் அகவழகி பயப்பட, ஆருஷியோ,
அவள் சொல்வது தான் இறுதி முடிவு என்று அவரை மிரட்டிப் பணிய வைத்தாள். அவள்
திட்டத்திற்கு தேவையான அனைத்தையும் அகவழகிக்கு எடுத்துக் கூறி, கிளம்பினாள்.

ஆரூ ரிது வீட்டை அடைய, அங்கே ரிஷியின் சிரிப்பொலி தான் வாயில் வரை கேட்டது.

“ரிஷி..”,என்று குதித்துக்கொண்டு ஆரூ வீட்டிற்குள் நுழைய, அவளை பின்னிருந்து அணைத்து
ஒரு சுற்று சுற்றி இறக்கினாள் ரிது.

“ரிது”,என்ற ஆருவின் அழைப்பு அவளுக்கே கேட்டதா என்பது சந்தேகமே.

ரிதுவை கண்ட ஆருவின் கண்கள் மடை திறந்த வெள்ளம் போல பொங்கி வர, இருவரும்
அணைத்துக்கொண்டு பேசி, சிரித்து தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொள்ள, ரிஷியோ என்

பிரென்ட்ட போல யாரு மச்சான்.. என்று பாடி இருவரையும் கலாய்த்துக்கொண்டு இருந்தான்.
அன்று முதல் அடுத்து பத்து நாட்கள் ஆருவும் ரிதுவும் திருமணத்துக்கு தேவையான ஷாப்பிங், சில
திருமண வேலைகள், அலங்காரப்பொருட்கள் என்று பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டு இருக்க,
ஆரு மகிழ்ச்சியாக சுற்றினாலும், ரிது ஊரின் தன்மை, மனிதர்களின் நடமாட்டம், என்ன
நிகழ்வுகள் நடக்கிறது என்று ஒவ்வொன்றையும் உற்று நோக்கியபடியே தன் வேலைக்கான
உத்தரவுக்காக காத்திருந்தாள்.

அவள் சென்னையின் கடைகளை ஆருவோடு அலச, அபியோ, டெல்லியில் அந்த பெண்ணின்
கேஸில் ஏதாவது துப்பு கிடைக்குமா ? அந்த பணக்கார முதலை எங்காவது சறுக்கி இருக்குமா?
என்று ஆதாரம் தேடி அலைந்தான்.

★★★★★

1 thought on “அகலாதே ஆருயிரே-46-50”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *