Skip to content
Home » அகலாதே ஆருயிரே 5

அகலாதே ஆருயிரே 5

💗அகலாதே ஆருயிரே💗

💗5💗

“உன் பேர் என்னப்பா? “,கேட்டவர் திடகாத்திரமான உடற்கட்டுடன் கூடியவர். அவரை பார்த்தாலே மரியாதையோடு சற்று பயமும் மனதில் பரவும்.

ஆனால் அவரின் அழுத்தமான முகத்தை விட, இன்னும் அழுத்தமான மனம் கொண்ட அவன் நிமிர்ந்து அவரை நேர்கொண்டு நோக்கி, “அபி சார்”, என்றான்.

“என்னப்பா பொம்பளைப்பிள்ளை பேர் வச்சிருக்க. “என்று அவனை அவர் வித்தியாசமாக பார்க்க,

“என் முழுப்பேர் அபினவ் சார். சுருக்கி அபின்னு கூப்பிடுவாங்க.”

“வடநாட்டு பேர் போல இருக்கே. நீ தமிழ்நாடு தானா? “

மெல்ல சிரித்த அபி, “நான் பிறக்கும் போது பிரசவம் பார்த்த டாக்டர் பேர் கிரண். அவங்க ஒரு வடநாட்டுக்காரங்க. அவங்க தான் எனக்கு பேர் வச்சாங்க. அம்மா அப்போ மயக்கத்துல இருந்ததால பேர் குடுக்க வேண்டிய சூழல் அவங்க வச்சிட்டாங்க. அப்பறம் மாத்திக்கோங்கன்னு அம்மா கிட்ட சொன்னாங்களாம். அம்மா தான் அதே பேர் இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க.”

“ஒரு பேருக்கு பின்னாடி இவ்ளோ பெரிய கதையா? “,வாய்விட்டு சிரித்த அவர்,

“பேரே இவ்ளோண்டு தான் இருக்கு நாலெழுத்துல, அதையும் ஏன்பா சுருக்குற..”, என்று கேட்டவர்,

“நாளைக்கு வந்து வேலையில சேர்ந்துக்கோப்பா. கவனமா இரு. அவ்ளோ தான் சொல்லுவேன். நான் திட்டவெல்லாம் மாட்டேன். ஆனா கோவம் வந்துட்டா வெளிய போன்னு சொல்லிருவேன். அதனால பார்த்து நடந்துக்கோ.”, என்று சொல்லிவிட்டு, உள்ளே குரல் கொடுத்தார்,

“டேய் சுரேஷ். தம்பியை பாரு. நாளைக்கு வேலைக்கு வந்துருவாரு. உங்க கணக்கு புஸ்தகத்துல தம்பி பேரை சேர்த்துக்கோ, பேர் அபினவ்.”, என்று சொல்ல, சுரேஷ் தலையை உருட்டினான்.

“நன்றி சார். நான் கிளம்புறேன். நாளைக்கு சரியா சாயங்காலம் அஞ்சு மணிக்கு வந்துருவேன் சார். “,என்று சொல்லி விடைபெற்றான்.

வெளியில் வந்தவன் மனம் கொஞ்சம் நிம்மதியை தத்தெடுத்தது. அன்று அம்மாவிடம் மாடியில் பேசிய நிகழ்வை நினைத்துப்பார்த்தான்.

அம்மா வீட்டுவேலைகளை முடிக்கும் வரை புத்தகத்தோடு இருந்தவன், அம்மா கையில் ஐந்து பிளவுஸ் தைக்க ஊக்குகள் கொண்ட டப்பாவும், ஊசியுமாக வர,

“என்னம்மா இப்போ தான் வேலையை முடிச்ச, அதுக்குள்ள இதை தூக்கிட்டு வர, கொஞ்சம் உட்காறேன்.”

“இல்ல அபி, இன்னிக்குள்ள இதை முடிச்சுக் கொடுத்துட்டா ஒரு பிளவுஸ்க்கு நூற்றி இருபது ரூபா கிடைக்கும், அறுநூறு ரூபா வந்தா நான் அடுத்த வாரம் ஓட்டிடுவேன் அதான். இப்போ சின்னவ கல்யாணம் வேற வைக்கணும். அதுக்கும் பணத்துக்கு ஏற்பாடு பண்ணனும். “, என்று அம்மா தான் போக்கில் மனதில் நினைத்ததை அபியிடம் கொட்ட,

“அம்மா”, என்ற அபியின் குரலில் சுயநினைவு கொண்டவர்,” விடு டா அபி, நான் ஏதோ அப்படியே பேசிட்டேன். நீ என்னமோ பேசணும்ன்னு சொன்னியே.. என்ன அது?”, என்று சுவாரஸ்யமாக அவனைப் பார்த்தபடி கேட்க, அவனோ அன்னையிடம் சொல்லத் தயங்கினான்.

அவன் தயக்கத்தை தவறாக ஊகித்த சங்கரி, “டேய் அபிப்பயலே.. யாரு டா அந்த பொண்ணு,இன்னும் மீசையே சரியா செட்டாகல, அதுக்குள்ள பொண்ணு செட் ஆகிடுச்சா”, என்று புருவம் உயர்த்தி கேட்க,

அபி சிரித்தபடி,”ஆமாம்மா, சாயங்காலம் தான் ஐஸ்க்ரீம் பார்லர்ல வச்சு சரின்னு சொன்னா, அதான் அப்படியே குளு குளுன்னு உன்கிட்டட சொல்ல ஓடி வந்தேன்”, என்று அன்னைக்குச் சரியாக பேச,

“பொண்ணு என்ன கிளாஸ் படிக்கிறா, பத்தா, பதினொன்னா?”, ,என்று ஆர்வமாக கேட்க,

“அம்மா.. “,என்று பல்லை கடித்த அபி, “நான் வேற விஷயம் பேச வந்தேன். என் வாழ்க்கையில் காதலுக்கு இடமே இல்ல. நான் கொஞ்சம் வேற மாதிரி இருக்கணும்ன்னு நினைக்கிறேன்.”,என்று சொல்ல,

“டேய், என்ன டா இந்த வீட்டு நிலைமை பார்த்து சன்யாசியா போக முடிவு பண்ணிட்டியா?”, என்று மீண்டும் கிண்டல் செய்ய,

“அம்மா, போதும், உன் வலியை மறைச்சு எனக்காக நீ சிரிக்கிறது எனக்கு அப்பட்டமா தெரியுது. அப்பாக்கு பொண்ணுங்கன்னா உயிர். அதுக்காக உன்னை வதைக்கிறது நியாயமே இல்ல மா.”

“விடு அபி, இது இன்னைக்கு நேத்தா நடக்குது கவலைப்பட.”

“அப்படி இல்லம்மா. அக்காவுக்கு கல்யாணம் வைக்கும்போதே நீ சொன்ன, இவ்வளவு செலவு வேண்டாம், இதே போல சின்னவளுக்கும் செய்ய வேண்டி வரும்ன்னு. ஆனா அப்பா கேக்கவே இல்ல. கடன் வாங்கி, வட்டி கட்டிட்டு, கொஞ்சூண்டு காசு வீட்டுக்கு கொடுத்தா நீ எப்படி குடும்பம் நடத்துவ? சாப்பிட வேண்டாமா? வெளில போக வர பைசா வேண்டாமா?”

“அதுக்கு தானே அபி, அப்பளம்,ஊறுகாய் போடறேன்,பொடி இடிச்சு விக்கிறேன், பத்தாதுன்னு இப்படி துணி தைச்சு குடுக்கிறேன்.”

“நீ மட்டும் தான் இந்த வீட்ல சாப்படறியா அம்மா?”

இவ்வளவு நியாயம் பேசும் தன் மகனை ஆதுரத்துடன் தடவியவர்,” ஓட முடிஞ்ச வரை ஓடலாம் அபி. “,என்றார்.

“அதான் நானும் உன்னோட சேர்ந்து ஓட முடிவு பண்ணிட்டேன்.” பொறுமையாகச் சொன்னவனை புரியாமல் பார்த்த சங்கரி

“என்ன சொல்ற அபி”, என்று கேட்க,

“நான் ஒரு விளம்பரம் பார்த்தேன். அது ..”

“என்ன அபி சொல்லு..”

“அது ஒரு பெரிய ஹோட்டல்மா. அதுல சர்வீஸ் அப்பறம் கிட்சன்ல வேலை செஞ்சா, நல்ல சம்பளம். அதான்”, என்று இழுத்தான்.

“விளையாடாதே அபி. நீ பிளஸ் டூ டா. படிக்க வேண்டாமா?”

“படிச்சிட்டே தான் மா. நீ இதெல்லாம் செஞ்சு சம்பாதிக்கறதால வீட்டு வேலை செய்யாம விட்டுட்டியா என்ன? அது போல நானும் மேனேஜ் பண்ணிப்பேன்.”, என்று உறுதியாக சொன்னவனை என்ன செய்வது என்று பார்த்தவர், அவன் முகம் இந்த முடிவில் மாற்றமில்லை என்ற அழுத்ததோடு, நீ ஒத்துக்கோயேன் என்ற கெஞ்சல் இருந்தது.

சங்கரி பொடி, ஊறுகாய் அப்பளம் விற்பனை செய்ய ஒரு நாள் இளைய மகளைத் துணைக்கு தான் கூப்பிட்டார். அவளை தனியாகக் கூட போகச் சொல்லவில்லை. அன்று அவள் போட்ட ஆட்டம் கொஞ்சம் இல்லை. அவள் செய்த வேலையால் அன்று கணவனிடம் சங்கரி அடிவாங்கியதை மறக்கவே முடியாது தவித்தார்.

ஏனோ ராகவேந்தருக்கு மகள்கள் என்றால் உயிர். மனைவி மகனைப் பற்றி அதிகம் நினைக்க மாட்டார். மகள்கள் சொல் தான் வேதம். மனைவி நைந்து போவதைப்பற்றி அக்கறையே படமாட்டார். அவரும் ஆபிஸ் முடிந்து, ஒரு கடையில் கணக்கு எழுதிவிட்டு தான் வருவார். ஆனால் மகள்கள் எந்த கஷ்டமும் படக்கூடாது என்று நினைப்பார். அதுவே இந்த குடும்பத்தை இந்த நிலையில் நிறுத்தி விட்டது.

அபி சொல்லியபடி இன்று விசாரித்து வேலையில் நாளை சேரப்போகிறான். அம்மாவுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. வேறு வேலை தேட சொல்லி சொன்னார். ஆனால் அபி யோசித்து தான் இந்த முடிவை எடுத்தான்.

கடையில் வேலை செய்வதால், மாலை,இரவு உணவு அங்கேயே சாப்பிடலாம். இரவு, கடையை அடைக்கும் வேளையில் மீதம் இருப்பதை பங்கிட்டு பணியாளர்கள் கொண்டு போகலாம் என்று அந்த முதலாளி சொன்னதை யோசித்து, தன்னால் வீட்டில் சாப்பாடு செலவும் மிச்சம் செய்யலாம் என்றே இந்த முடிவை எடுத்தான்.

அபி யோசித்தபடி ஹர்ஷா வீட்டிற்கு செல்ல,வாசலில் நின்று அவனை அழைத்தான்.

வெளியில் வந்த சோமு, அபியை கண்டு,

“சொல்லுப்பா யார் வேணும்?”, என்றார். அபி ஹர்ஷா வீட்டுக்கு அதிகம் வந்தது இல்லை. வரும்போதும் லதா மட்டுமே இருப்பார். அதனால் சோமுவுக்கு அபியை தெரியவில்லை.

“அங்கிள், நான் அபினவ், ஹர்ஷா பிரென்ட்”, என்றதும்,

“என்னப்பா கிரிக்கெட்டா இல்ல புட்பாலா? அவன் ஏற்கனவே எங்கேயோ சுத்தப்போய்ட்டான். “, என்று வெறுத்துப் போய் சொன்னார்.

“இல்ல அங்கிள். நாளைல இருந்து நான் காலைல டியூஷன்க்கு மாறப்போறேன். அதை சொல்ல தான் வந்தேன். அபி வந்தான், இனிமே பார்க்க முடியாது, வர்றதுன்னா வீட்டுக்கு வரச்சொன்னான்னு சொல்லுங்க. அப்பறம் எனக்கு விளையாட நேரமில்லை அங்கிள். வீட்டில் அம்மாகூட தான் நேரம் சரியா இருக்கும்.”

அவனை வித்தியாசமாக பார்த்தவர், தன் மகனுக்கு இப்படி ஒரு நண்பனா?? என்று வியப்புடன்,

“சொல்றேன்ப்பா “,என்றார்.


ஆருஷி, அந்த செலெக்ஷன் மாட்சில் நன்றாக விளையாட, அவளுடன் ஜூனியர் பிரிவில் இன்னொரு மாணவியும் நன்றாக விளையாடினாள்.

ஆனாலும் ஆருஷியின் சீனியர் செட்டில், அவளைப்போல ஒருவரும் நன்றாக விளையாடவில்லை. ஆருஷிக்கு மகிழ்ச்சிதான். எப்படியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவோம் என்று.

ஆனால் நடந்ததோ முற்றிலும் வேறாக இருந்தது. அவளை விட நான்கு புள்ளி குறைவாக இருந்தவளை தேர்வு செய்யப்போவதாக பி.டி. சார் சுகந்தன் முணுமுணுப்பாக சொல்ல, ஆருஷி அதிர்ச்சியானாள்.

அதைப்பற்றி அந்த ஆளிடம் பேச ஆருஷிக்கு விருப்பம் இல்லை. ‘நீ என்னை எடுத்தா எடு, இல்லனா போய்யா.. ‘,என்ற பார்வையை அவள் அவரை நோக்கி வீசிச்செல்ல,

அவரோ , இதென்ன, இவளின் புள்ளியை விட குறைந்தவரை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதுன்னு சொன்னா, என்ன ஏதுன்னு தனியா வருவா கொஞ்சம் கவனிக்கலாம்னு பார்த்தா.. இப்படி ஆகிடுச்சே’ என்று அவர் ஆருஷி தன் கிட்டுடன் நடந்து போவதையே பார்த்தார். அவர் கண்கள் அவளின் மேனியை மொய்க்க, இதை உணராத ஆருஷி, அவள் போக்கில் ரிதுவை தேடிச்சென்றாள்.

ரிது லைப்ரரியில் ஏதோ புத்தகத்தை வாசித்துக்கொண்டு இருக்க, அவள் அருகில் வந்து அமர்ந்த ஆருஷி, லைப்ரரி மேடத்தை பார்த்து கண்களால் ஏதோ கேட்க, அவரும் சிரித்து விட்டு போனார்.

“ஏய் படிப்பாளி, நீ எப்பயும் கிளாஸ் நோட்டைத் தானே உருட்டுவ, இப்போ என்ன ஏதோ படிக்கிற..”

“ரொம்ப அதுக்குள்ளயே அலையக்கூடாது ஆரூ, மண்டை குழம்பிடும். அதான் சும்மா லைப்ரரி புக் படிக்க வந்தேன். வீட்டுக்கு போகலாமா?”

“ம்ம்.. போகலாம். ஆனா அம்மா அப்பா இன்னிக்கு வந்திடுவாங்களா தெரியலையே ரிது”

“போன் பண்ணி பாரு ஆரூ. நீ வெளில இரு. நான் இந்த புக்கை கார்ட் போட்டு எடுத்துட்டு வரேன்.”

ஆருஷி வெளியில் நின்று தந்தையை அழைக்க, அவரோ, “என்னமா பெரிய பொண்ணு தானே, ரெண்டு நாள் அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்க மாட்டியா? நான் வேற வேலையா ஹைதராபாத் வந்திருக்கேன். அம்மா வர நாளைக்கு காலைல ஆகிடும்.”, என்று சொல்ல,

“அதே வார்த்தை தான் அப்பா உங்களுக்கும். நான் பெரிய பொண்ணு, என்னை தனியா விடறது பாதுகாப்பில்லைன்னு உங்களுக்கு புரியாதா? சரி நான் நம்ம வீட்டில இல்ல. என் பிரென்ட் ரிது வீட்ல இருந்துக்கறேன்.எப்பயோ வாங்க. “, என்று அவரின் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்தாள்.

அவள் பேசியதை கேட்ட ரிது, அவள் தோளில் தட்டி, “விடு நண்பா.. நான் இருக்கேன்”, என்று சொல்ல.

“நண்பேன் டி.. “,என்று இருவரும் அணைத்துக்கொண்டனர். அதை பார்த்த இரு மாணவர்கள் சிரிக்க, விடு ஜூட்.. என்று ஓடிவிட்டனர் இருவரும்.

4 thoughts on “அகலாதே ஆருயிரே 5”

  1. CRVS3797

    என்ன அம்மா அப்பாவோ… இப்படி பொறுப்பேயில்லாம…?
    தும்பை விட்டு வாலை பிடிக்கிறவங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *