Skip to content
Home » அகலாதே ஆருயிரே-61-65

அகலாதே ஆருயிரே-61-65

��அகலாதே ஆருயிரே��
��61��

காலை விடியலை ஆருஷி ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்க, கதிரவன் சோம்பல்
முறித்துக்கொண்டு மெல்ல கடலன்னை மடியில் இருந்து துயில் எழ, ஒரு பெரிய பையோடு
காத்திருந்த அவள், ஹர்ஷாவை உருட்டி மிரட்டி எழுப்பி குளியலறைக்குள் தள்ளியவள், போனில்
ரிதுவை அழைத்தாள்.

“சொல்லு செல்லம். நான் எழுந்துட்டேன். எக்சர்சைஸ் பண்ணிட்டு இருக்கேன். எப்போ
வரணும்னு சொல்லு, வந்திடுவோம்.”, என்று அவள் கேள்விக்கு முன்னாலேயே பதிலை தர,

“ஜே.பி சோ ஸ்வீட் டி. இவனை எழுப்பறதுக்குள்ள ஹையோ.. முடியல”, என்றதும்,

ரிது பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி, “வந்திடுவோம் டி. பை.”, என்று போனை
வைத்துவிட்டு, பூந்துவலை கொண்டு வியர்வையை துடைத்தவள், தலை எது கால் எது என்று
கண்டறிய முடியாதபடி மரவட்டை போல சுருண்டு படுத்து தூங்கிக்கொண்டிருந்த அபியை கண்டு,

“ஓய் ஹஸ்பண்ட்.. எழுந்துக்கறது.. மணி தெரியுமா? வாலில்லாத வானரம் போன்
பண்ணியாச்சு.”,என்று போர்வையை விலக்க,

“டாலு இன்னும் அஞ்சு நிமிஷம்.. பிளீஸ்..”, என்று சொல்லி கண்ணை மூடியவனை, கிச்சு கிச்சு
மூட்டி முழிக்க வைத்து, ஷவரில் அடியில் அவள் தள்ள, அவனோ கிடைத்த சந்தர்ப்பத்தை
விடுவேனா என்று அவளையும் இழுத்துக்கொண்டு நின்றான்.

பலமுறை ரிதுவுக்கு போன் செய்தும் எடுக்காமல் போனதால் கடுப்பான ஆருஷி அவர்களின்
அறைக் கதவைத் தட்டினாள்.

“இதோ  டூ மினிட்ஸ்”,என்று குரல் வர,

ஹர்ஷா அவளை கேலி செய்து சிரிக்க ஆரம்பித்தான்.

“எப்படி டி? ஆன் டயம்ல இவங்க கிளம்பிட்டாங்க. ஆனா என்னால தான் லேட்டு. அப்படி தானே
இவ்ளோ நேரம் என்னை திட்டின? ஹாஹாஹா.. எவ்ளோ கரெக்ட்டா கிளம்பி நிக்கிறாங்க பாரு”,
என்று மேலும் அவளை கலாய்க்க,

ரிதுவும் அபியும் கதவை திறந்ததும் அவர்களை வசை மாரி பொழிந்த ஆருஷி,
“பக்கிங்களா, உங்களுக்காக லூசு மாதிரி அலஞ்சு ஒவ்வொன்னா ஏற்பாடு பண்ணி வச்சேன்ல
என்னை சொல்லணும். இவன்லாம் என்னை ஓட்டுறான்.”, என்று தான் கணவனை காட்ட,

ரிது சற்றே கடினமான குரலில், “ஆரூ, இனஃப். அவர் உன்னோட கணவர். நீ காதலிச்சு
கல்யாணம் பண்ணினா அவரை மரியாதை குறைவா பேசணும்ன்னோ, நடத்தலாம்ன்னோ
அர்த்தம் இல்ல. அவர் பொறுமையா போறாருன்னா,அது அவர் பெருந்தன்மை ஆனா நான்
பொறுமையா இருக்க மாட்டேன். ரெஸ்பெக்ட் ஹிம். ஹி இஸ் யுவர் லைஃப். வார்த்தை
உபயோகிக்கும் முன்னாடி யோசி டி. நாங்க ஆயிரம் தான் உன் நண்பர்களா இருந்தாலும் எங்க
முன்னாடி நீ அவரை இப்படி பேசுறது எனக்கு பிடிக்கல.”, என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று
வாசலை நோக்கி நடந்துவிட்டாள் ரிது.

காரிடாரில் சாய்ந்து நின்ற ஹர்ஷா, தன் முன்னே கண் கலங்க நிற்கும் மனைவியை பார்த்து,” சாரி
நான் உன்னை கலாய்ச்சு பேசுனது தப்பு தான்”, என்றான்.

அவனை சட்டென்று நிமிர்ந்து பார்த்த ஆருஷி ஒரே எட்டில் அவனை அடைந்து இறுக்கி
அணைத்தவள், “சாரி நான் சொல்லணும் லாலிபாப். நீ எனக்கு ரொம்ப இடம் கொடுத்துட்ட,
அதான் நான் ஓவரா வாய் பேசுறேன். சாரி டா. சட்டுனு என்னை அறியாம மரியாதை இல்லாம
பேசிட்டேன்.”,என்றவளை பார்த்து நகைத்தவன்,

“சாரி டா சொல்லிட்டு இனிமே நீ மரியாதையா வேற பேசுவியா ஐஸ்கிரீம்”, என்று சத்தமாக
சிரிக்க,

“டேய் காதலா சொன்னது டா.ஆனா அப்போ பேசுனது தப்பு தான். சாரி லாலிபாப்.”, என்று
அவன் மேல் சாய்ந்து சொன்னவளை அணைத்துக்கொண்டு, “விடு டி பரவால்ல” என்று
அழைத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தான்.

ரிது இன்னுமே கோபமாக இருப்பதை அவள் முகம் காட்டிக்கொடுக்க,அவள் முன்பு சென்று நின்ற
ஆருஷி, “சாரி டி. நான் விளையாட்டா அப்படி பேசிட்டேன்.” என்று தன் உயிர்த்தோழியிடம்
மன்னிப்பு வேண்ட,

“நீ அவரை மரியாதையா நடத்தினா தான் அவருக்கும் எல்லாரும் மரியாதை கொடுக்க தயங்க
மாட்டாங்க. ஒரு வார்த்தை தப்பா பேச யோசிப்பாங்க. நம்ம கணவரோட மரியாதை நம்ம
நடந்துக்கறதுல இருக்கு ஆரு.”,என்று சொல்லிவிட்டு மீண்டும் அவள் நகர,

“ஏய்.. நான் விளையாட்டா பண்ணிட்டேன் டி. இனி அப்படி பண்ண மாட்டேன் பிளீஸ் பேசு.”,
என்று ரிதுவிடம் கண் கலங்க நின்றாள் ஆருஷி.

“ஆரூ.”, என்று அணைத்துக்கொண்ட ரிது,அவளை நெற்றியில் முட்டி கைகளை
கோர்த்துக்கொண்டாள். இருவரும் முன்னால் நடக்க,

“சேட்டையை பார்த்தியா பங்கு. ரெண்டும் சேர்ந்து நம்மளை கழட்டி விட்டுட்டு போகுது.”, என்று
நக்கலடித்தான் ஹர்ஷா.

“உனக்குப்போய் மரியாதை தரணும்ன்னு சொன்னா பாரு அந்த போலீஸ்காரி, அவளை
உதைக்கணும் டா”, என்று அபி அவனை துரத்த, தோழிகள் இருவரையும் கடந்து ஓடிக்கொண்டு
இருந்தனர்.

கடற்கரைக்கு சென்ற நால்வரும் அங்கே அவர்களுக்காக காத்திருந்த ஒருங்கிணைப்பாளர்
ஒருவரோடு செல்ல இவர்களுக்காக நாலைந்து பேர் காத்திருந்தனர். அவர்களுக்கு பின்னால்
ட்ராக்டர்கள் இரண்டு நிறுத்தப்பட்டு இருந்தது.

“என்ன ஆரூ இது?”, என்று மூவரும் ஒரே நேரத்தில் கேட்க,

வாயில் வாத்தியங்கள் இல்லாமல், “டட்டடங்..”, என்று அவள் அவர்களை ட்ராக்டர் பின் புறம்
இருந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல, அங்கே இருந்தது ஜெட் ஸ்கீ என்று அழைக்கப்படும் நீரில்
ஓட்டும் வாகனம்.

ரிது, “ஹே..”,என்று கத்தியபடி ஓடிவந்து ஆருவை அணைத்தவள், “செம்ம சூப்பர் டி”, என்று
அங்கிருந்த பயிற்சியாளரிடம் செல்ல,அவர் அவர்களுக்கு ஜெட்ஸ்கீ இயக்கும் முறையை
கற்றுக்கொடுத்தார். முதலில் ஒரு ஜோடி இரண்டு ஜெட் ஸ்கீக்களில் பாயிற்சியாளருடன்
கடலுக்குள் செல்ல,

மற்றவர் கரையில் நின்று உற்சாகம் அளித்தனர். பயிற்சியாளர் இன்றி அதனை தனியே
வாடிக்கையாளரிடம் நிறுவனம் ஒப்படைக்காது. அலைகளை கடந்து அந்த வாகனம் நிலைப்பட்ட

கடல்நீரில் வளைந்து நெளிந்து ஓட்டும் லாவகங்களை அவர் பயிற்றுவிக்க, மகிழ்வாய்
கற்றுக்கொண்ட அபியும் ரிதுவும், சற்று நேரத்துக்கு பின் பயிற்சியாளர்களை பின் இருக்கைக்கு
மாற்றி, தாங்கள் அதனை இயக்க ஆரம்பித்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் மோதுவது போல பயம் காட்டி, கிளுக்கி சிரித்து சேட்டைகள் பல
செய்வதை அந்த பயிற்சியாளர்கள் கவனித்து சிரித்துக்கொண்டனர்.

ரிது எழுந்து நின்று ஜெட்ஸ்கீயை வளைக்க, அவள் முதுகுப்புறம் அவள் மறைத்து வைத்திருந்த
துப்பாக்கியின் வடிவம் அப்பட்டமாக அவள் சட்டைக்கு மேல் வரிவடிவமாய் தெரிய,
பயிற்சியாளரோ பயந்து விட்டார்.

கரையை நோக்கி வண்டியை செலுத்தும்போதே அவர் வியர்வையால் குளித்திருக்க, முதலில்
அவரின் மாற்றத்தை கவனித்த அபி, “அண்ணா என்ன ஆச்சு?”, என்றதும்,

அவர் சற்றே நடுக்கத்துடன், “அவங்க.. அவங்க.. யார் சார் ?”, என்று தந்தியடித்தபடி ரிதுவை
காட்டினார்.

அதற்குள் ஆருவும், ஹர்ஷாவும் ஜெட்ஸ்கீயில் பயணமாயினர். அபி அவரை மட்டும் தனியே
அழைத்துப்போக, அவருக்கு பதிலாக வேறொரு பயிற்சியாளர்  ஆருவுடன் சென்றார்.

“அவங்க போலீஸ் அண்ணா. உயிருக்கு ஆபத்துன்னு துப்பாக்கி வச்சிருக்காங்க. அவ்ளோ தான்.
பயப்பட வேண்டாம்.”,என்று அபி அவரை தேற்றி விட்டு ரிதுவிடம் வந்தான்.

அவளோ போனில் பிசியாக இருக்க, கடற்கரையில் ஆரூ வைத்துவிட்டு போன பையை
திறந்தவன் திகைத்துப் போய், “அபர்ணா அபர்ணா”, என்று கூப்பிட்டான்.

போனை அணைத்தவள், “சொல்லுங்க அபி, வாட் ஹப்பெண்ட் ?”, என்று நிதானமாக கேட்டதும்,
அவளைக் கூர்மையாகக் கண்டவன்,

“இந்த குரங்கு குட்டி என்னவோ பிளான் பண்ணி இருக்கு. இங்க பாரு, நம்ம எல்லாருக்கும் மாற்று
உடை”, என்று காட்ட,

“இதென்ன பெரிய விஷயம், இங்க ட்ரெஸ் ஈரமா ஆகிடுச்சுன்னா  மாத்தணும்ல அதான் கொண்டு
வந்திருப்பா”, என்று தான் தோழிக்காக பரிந்து பேசினாள் ரிது.

ஆனால் அபி, ஆரூ கரையை அடைந்ததும் கேள்வியாய் கேட்கத்.துவங்கினான்.

“எவ்ளோ கேள்வி??”, என்று மலைத்தவள்,

“ஜே.பி இன்னிக்கும் இன்னும் கொஞ்சம் ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டீஸ் இருக்கு”,என்று
சொல்லிவிட்டு அந்த நிறுவன மேலாளரை பார்க்க, அவரோ மீண்டும் அவர்களோடு ஒரு சிலரை
அனுப்பினார்.

ஒன்றும் புரியாவிட்டாலும், ஆரூ சொன்ன வார்தைக்காக அனைவரும்  அவர்களோடு சென்றனர்.

அவர்கள் சென்று நின்றது, கடற்கரையோரம் நின்ற ஓர் படகிடம். அவர்கள் அனைவரும் அதில்
ஏற படகு சவாரி ஆரம்பமானது.

அபி, “ஹே மறுபடி கடலுக்குள்ள போறமா டி?”, என்று ஆருவை பார்த்து கேட்டதும், நிறுவன
ஊழியர் ஒருவர்,

“சார் இந்த படகு சாவரிக்கு பெயர் கட்டுமறான்  அதாவது தமிழில் கட்டுமரம் என்பது மருவி
இப்படி ஆனது”, என்று விளங்கியவர், “பழைய காலத்துல படகு கட்ட முடியாத ஆட்கள் தான்
நல்ல மரத்தை இணைச்சு கட்டி கட்டுமரம் செய்தாங்க. இதுல கடல் நீர்பரப்புல ஓரளவு பயம்
இல்லாம பயணிக்க முடியும்.”

பேசியபடி அவர்களை அந்த படகில் ஏற்றிக்கொண்டு அலையோடு அசைந்தாடி அழகாய் நகர்ந்து
சென்றது அப்படகு.

அபியின் தோளில் தலை சாய்த்து ரிது, “இதெல்லாம் ரொம்ப அழகா, புதுசா இருக்குல்ல”, என்று
கேட்டதும்,

“ம்ம் ஆமா. எனக்கு எல்லாமே புதுசு தான்”, என்று ஆழ்ந்து பதில் தந்தவன் பார்வை சென்ற
இடங்களை கவனித்து அவனை முறைத்தவள், “தண்ணிக்குள்ள தள்ளி விட்டுடுவேன்
அபிம்மா.”,என்று சிணுங்கினாள்.

அவனுடைய உயிர்காக்கும் கவசத்தை(life jacket) காட்டிய அபி, “தாராளமா தள்ளு”, என்றான்.

அலைகள் ஓய்ந்து ஆட்டமில்லாமல் இருந்த கடல் பரப்பில் ஒவ்வொருவராக கடல் நீரில் இறக்கி
விடப்பட்டனர். அவர்கள் அனைவருமே உயிர்காக்கும் கவசம் அணிந்து,படகோடு இணைந்த
கயிறு ஒன்றையும் பிடித்தபடி அவர்கள் கடல் நீரில் நீந்த, ரிது குழந்தை போல குதுகலித்தாள்.

நால்வரும் மனம் போல மீனாக மாறி கடல்நீரில் எங்கு நோக்கினும் நீரின் பரப்பை மட்டுமே
பார்க்க முடிந்த இடத்தில் அதை முழுவதுமாக அனுபவித்தனர்.

சற்று நேரத்துக்கு பின் மீண்டும் கரைக்கு திரும்பி வந்து உணவு உண்டு ஓய்வு எடுத்தனர்.

ஆருஷிக்கு பவளப்பாறைகளை காண செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்க, ஆனால்
ரிதுவோ, “போதும் கிளம்புவோம்”, என்றாள்.

ஆரூ முகம் வாடிப்போனாள்.

“செல்லம் எனக்கு புரியுது டா உன் ஆசை. ஆனா அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு. அதனால
இப்போ இது போதும். அடுத்த லீவ்ல நாம கண்டிப்பா வருவோம். அப்போ மலையேற்றம்,
ஸ்கூபா டைவிங் எல்லாமே போகலாம் டா.”, என்று அவள் தாடையை பிடித்து கெஞ்சி
கொஞ்சினாள்.இரண்டு நாட்களில் எவ்வளவு மகிழ்ச்சி கிடைத்ததோ அதே அளவு அலைச்சலும்
உடல் அலுப்பும் இருந்தது உண்மை. இரண்டு நாள் ஓய்வு எடுத்து செல்லலாம் என்று நினைத்தது
மாறி ரிது வேலையில் சேர வேண்டும் என்று இரண்டு நாட்களில் சென்னை திருப்ப
திட்டமிட்டனர்.

நெடிய பெருமூச்சை வெளியிட்டவள், “சரி ரிது. ஆனா சீக்கிரம் வரணும். சரியா?”, என்று
குழந்தையாய் தலை சாய்த்து கேட்ட அழகில் ரிது அவளை அணைத்துக்கொள்ள,

“நீ இன்னும் வளரவே இல்ல டி குரங்கே”, என்று அபி அவள் தலையில் குட்டினான்.

நால்வரும் மாலை கடற்கரையில் காற்று வாங்கிவிட்டு இரவு உணவுக்கு வீட்டிற்கு கிளம்பினர்.

ரிது ஆருவின் கையை பிடித்தபடியே, “உண்மையிலேயே குழந்தையா மாறி ரெண்டு நாளும்
சந்தோசமா இருந்தேன் ஆருஷி. “,என்று கையில் ஓர் அழுத்தம் கொடுக்க, அபி ஹர்ஷாவை
பார்த்து உதட்டை சுழித்தான்.

“இவங்க தான் டா நட்பின் கீதம், நமக்கு வாச்ச பூதம்”,என்று ரைமிங்கில் பேசுகிறேன் என்று
ஹர்ஷா உளற நன்றாக இரண்டு அடிகளை பரிசாகப் பெற்றான் ஆருஷியிடம்.

நால்வரின் சிரிப்பொலியும் அந்த மகிழுந்தைத் தாண்டி வெளியே கேட்டது.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��62��

வீட்டிற்கு வந்த அபியையும் ரிதுவையும் பெரிய பூட்டு வரவேற்க, அபி திரும்பி ரிதுவை
முறைத்தான். ரிது பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு. “இன்னும் அத்தையும் மாமாவும்
வரல போல. அங்கேயே போயிருக்கலாம்ல.”, என்று கேட்டதும்,

“டாலு.. நான் பாவம். ஏற்கனவே ரொம்ப டயர்டா இருக்கேன். நாளைக்கு அசோசியேட் ஆபிஸ்
போய்ட்டு அப்படியே டெல்லி கிளம்பணும்.”, என்று சிணுங்க.

“சரி இருங்க”, என்று மாமியாருக்கு போன் செய்தவள், ‘உடனே வர முடியுமா?” என்றாள்.

“நீங்க இங்க வந்திடுங்க டா. எப்படியும் நாளைக்கு அவன் ஊருக்கு போய்டுவான். நீ வேலையில்
சேரணும். அவன் வர்ற வரைக்கும் நாம மூணு பேரும் இங்கேயே இருப்போமே”, என்றார்
ராகவேந்தர் மனைவியின் போனை வாங்கிப் பேசினார்.

“எல்லாம் சரி மாமா. என் யூனிபார்ம், அவரோட பைல் எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கே. சரி
ஒன்னு பண்ணுங்க. ரிஷி கிட்ட வீட்டு சாவி குடுத்துவிடுங்க. நாங்க எல்லாம் எடுத்திட்டு அப்பறமா
வர்றோம்.”,என்றாள்.

“சரிம்மா”, என்றார்.

போனை வைத்துவிட்டு திரும்பிய மனைவியை முறைத்த அபி, “ரிஷி எப்போ வர்றது?
அதுவரைக்கும் வாசல்ல நிக்கிறதா டாலு?”, என்றதும்,

“வீட்டோட ஒரு ஸ்பேர் கீ கூட கையில இல்லாம நீங்கல்லாம் பேசவே கூடாது அபி.”, என்று
சிரிப்பை வெளியில் காட்டாமல் கோபமாக பேச ரிது முயல,

“ஆளைப்பாரு. எவனாச்சும் ஹனிமூன் போகும்போது, ஆள் இருக்கற வீட்டு சாவியை ஞாபகமா
எடுத்துட்டு போவானா? நான் என்ன மூட்ல வந்தேன்..”, என்று சொல்லும்போதே அபியின் குரல்
மாற,

“ஐயா ரொமான்ஸ் மன்னரே, இது ரோடு. கொஞ்சம் வாலை சுருட்டி வச்சுக்கிட்டா நல்லா
இருக்கும்.”, என்று ரிது அவனை கிண்டலடிக்க,

“ஆனாலும் அநியாயம்”, என்று புலம்பிக்கொண்டு அவன் இருக்கும்போதே தொலைவில் ரிஷியின்
வண்டி கண்களில் தென்பட்டது. தன் கைகடிகாரத்தை திருப்பி மணி பார்த்த அபிக்கு கோபம்
கனன்றது.

அவன் ரிஷி வண்டியை நிறுத்த காத்திருக்க, கையில் இருந்த பையை வைத்து, ரிஷியை நன்றாக
மொத்த ஆரம்பித்தாள் ரிது, “ஏன் இப்படி செய்யற? நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.
இவ்வளவு வேகமா வண்டி ஓட்டாத டான்னு சொன்ன கேக்க மாட்டியா ரிஷி?”,என்று கோபம்
காட்டிய அக்காவிடம், “ஐயோ அக்கா.. அடிக்காதே. நான் ஒன்னும் வீட்டில இருந்து வரல. நீங்க
இப்படி வாசல்ல வந்து நிற்க கூடாதுன்னு அத்தை அப்போவே என்கிட்ட சாவியை கொடுத்து
நீங்க வந்தா தர சொன்னாங்க. நான் பக்கத்துல இருக்கிற பார்க்ல தான் இருந்தேன். நீங்க

வந்துடீங்கன்னு அத்தை போன் செஞ்சதும் பக்கத்து தெருல இருந்து வரவே எனக்கு அஞ்சு
நிமிஷம் ஆகி இருக்கு. இதுக்கு மேல மெதுவா வண்டி ஓட்டினா என்னை நடந்து போற தாத்தா
கூட ஓவர் டேக் பண்ணிடுவாரு.” என்று சிரிக்க, இரு காதுகளையும் பற்றிக்கொண்ட ரிது, சாரி
என்று சொல்ல,

“அட ரிதுக்கா. நீ என் மேல உள்ள அக்கறையில் தானே சொன்ன?? பரவாயில்ல விடு”, என்று
சொல்லிவிட்டு. நீங்க மெதுவா வாங்க. நான் வீட்டுக்கு போறேன். என்று கிளப்பினான்.

“நான் கூட அவனை தப்பா நினைச்சிட்டேன். நல்லவேளை நான் அவனை அடிக்கல. கோபமா
திட்ட தான் நினைத்தேன். அதுக்குள்ள உனக்கென்ன அபர்ணா இவ்ளோ கோபம்.”, என்று
கேட்டபடி கதவை திறந்தான் அபி.

“எனக்கு ராஷ் டிரைவிங் பிடிக்காது அபிம்மா. கஷ்டப்பட்டு வீட்டுல வளர்த்து படிக்க வச்சா, இந்த
பசங்க மாடல் மாடலா வண்டி வாங்கி, அதுல வேகமா போய், வாழ்க்கையையும் வேகமா
முடிச்சிக்கிறாங்க. எனக்கு அது ரொம்ப கஷ்டமா இருக்கும். நான் ரிஷிக்கு பதினெட்டு வயசு
அப்பறம் தான் வண்டி வாங்கி தரணும். அதுவும் நம்ம ஊரு ரோடுல நல்லபடியா போகற வண்டி
தான் வாங்கணும்ன்னு சொல்லி அப்பப்பா.. “,என்று ரிது சொல்லிக்கொண்டே அம்மா வீட்டுக்கு
கிளப்ப அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.

அவளைப்பார்த்து சிரித்த அபி, “அது என்னவோ அம்மா வீட்டுக்கு போறதுன்னா பொண்ணுங்க
ரொம்ப ஃபாஸ்ட் போல. நான் நாளைக்கு காலைல போகலாம்ன்னு நினைச்சேன்.”, என்று
அவளை வம்பு செய்ய, இப்போது முறைப்பது ரிதுவின் முறையானது.

இருவரும் ஒருவரை ஒருவர் வம்பு செய்துவிட்டு சசியின் இல்லத்தை நோக்கி பயணித்தனர். இருந்த
பயணக்களைப்பில் யாரிடமும் சரியாக பேச முடியாமல் தூக்கம் இருவரையும் ஆட்கொள்ள,
முயன்று இரவுணவின் போது, அங்கே நிகழ்ந்த ஸ்வாரஸ்யமான நிகழ்வுகளைப்
பகிர்ந்துக்கொண்டு, படுக்கையறைக்கு சென்றனர்.

மறுநாள் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியாக விடிந்தது. ரிது காலை முதலே போனில்
பரபரப்பாய் ஏதோ பேசிக்கொண்டு அங்கும் இங்கும் நடந்துகொண்டு இருந்தாள். அபி அவன்
அசோசியேட்டுக்கு செல்ல வெள்ளை சட்டை மற்றும் பேன்ட்ஸ் அணிந்து தயாராகி வெளியே
வரவும், சசி அவனுக்கு திருஷ்டி எடுத்தார்.

“அழகா இருக்கப்பா நீ என்று சொன்னதும், என்ன அத்தை இப்படி சொல்லீட்டீங்க? உங்க
பொண்ணுக்கு தெரிஞ்சா கோவிச்சுக்க போறா”, என்று சிரித்தவனிடம்,

“நல்லா தானே சொன்னேன். அதுக்கு ஏன் கோபிக்கணும்?”, என்று சசி முழிக்க,

“அதுவாம்மா? என் புருஷனை வெறும் அழகுன்னு மட்டும் எப்படி நீங்க சொல்லலாம். அழகே
பொறாமைப்படும் பேரழகன் இல்லையா அவரு.”, என்று கிண்டல் செய்தபடி அவளின் காக்கி
உடையில் வர, எப்போதும் அவ்வுடையில் அவளை பார்த்து பெருமிதம் கொள்ளும் குடும்பம்,
இன்றும் அதையே தொடர, முதல் முறை மனைவியை அவளின் யூனிஃபார்மில் பார்த்த அபிக்கு
கண்களில் கண்ணீர் தேங்கியது.

“அபர்ணா”, என்று ஒரே அடியில் அவளை அடைத்தவன், ஹால் என்றும் பாராமல் அவளை தூக்கி
ஒரு சுற்று சுற்றி இறக்கினான். “அபர்ணா அழகு டா நீ. இந்த ட்ரெஸ் உனக்கு எவ்ளோ
பொருத்தமா இருக்கு தெரியுமா?”, என்று அவன் அவள் இரு தோள்களிலும் கை வைத்தபடி
கேட்டதும்,

“ஆனா உங்க செய்கை தான் கொஞ்சமும் பொருத்தம் இல்லாம இருக்கு அபிம்மா. அப்பா அம்மா
அத்தை மாமா ரிஷின்னு அத்தனை பேரும் நம்மளையே பாக்கறாங்க”, என்று கூறியவளிடம்,
“அப்படியா?”, என்று கேட்டபடி திருட்டு முழியோடு சுற்றி பார்க்க, அங்கே ஒருவரும் இல்லை.

“அபர்ணா”, என்று அவன் அவளை தேட அவளோ ஓடியே விட்டாள்.

அவரவர் பணிக்கு கிளம்பிச் சென்றனர். அபி மாலை போன் செய்தவன், ஏழு மணிக்கு அவனுக்கு
டெல்லி பிளைட் என்றும் இரண்டு நாட்களில் திரும்பி விடுவேன் என்றும் அம்மாவிடமும்
மனைவியிடமும் சொல்லிக்கொண்டு ஏர்போர்ட் விரைந்தான்.

மறுநாள் காலை அவனுக்கு மனதில் பல குழப்பங்கள் இருந்தாலும், அதை வெளிக்காட்டாது
அவன் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய, போனில் நிதீஷ் அவனை அழைத்தான்.

“சொல்லு நண்பா.”, என்று சொன்ன அபியின் குரல் அதிக இறுக்கத்தில் இருப்பதை நிதீஷுக்கு
சொல்ல,

“ஏன் அபி அன்னைக்கு சிஸ்டர் ஏதோ சாட்சி இருக்குன்னு சொன்னாங்களே. கேட்டியா? நீ
மட்டும் கிளம்பி போயிட்டா ஆச்சா? சாட்சி வேண்டாமா?”, என்றான்.

“வேணும் தான் ஆனா உடனே அவ கிட்ட கேக்க ஒரு மாதிரி இருக்கு. இன்னும் ட்ரையலுக்கு
நேரம் இருக்கு. “,என்று சொல்லிக்கொண்டு அவன் உள்ளே செல்ல, அவனின் பின்னால் இருந்து
யாரோ அவன் தோள் தொட்டு அழைக்க, திரும்பிய அபி இன்பமாய் அதிர்ந்தான்.

அங்கே ரிது அழகிய வெள்ளை கேசுவல் சட்டை மற்றும் லீவய்ஸ் ஜீன்சில் கண்களில்
குளிர்க்கண்ணாடியோடு நின்றாள்.

“அபர்ணா”, என்று அருகே வந்தவனிடம், “அபிம்மா இது கோர்ட். அப்படியே இருங்க. கேஸ்
ட்ரையல் எப்போ சொல்லுங்க.”, என்றாள் மென்னகையோடு.

“இன்னும் கொஞ்ச நேரம் தான் அபர்ணா”, என்றான். “சரி வாங்க”, என்று உள்ளே சென்றதும்,
அபியின் ஜூனியர் ஒருவன் வேகமாக வந்து அவன் காதில் ஏதோ சொல்லிவிட்டு கையில் ஒரு
பெண் ட்ரைவை கொடுத்துவிட்டுச் சென்றான்.

அதை கவனித்த ரிதுபர்ணா அமைதியாக ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தாள். சற்று
நேரத்திருக்கெல்லாம் கொஞ்சம் பயந்த பாவத்தோடு ஒருவன் அவளருகில் வந்து அமர்ந்ததும்,
அபிக்கு அவன் ஏதோ ஒருவகையில் இந்த கேஸில் சம்மந்தப்பட்டவன் என்று புரியத்துவங்கியது.

கிளார்க் இவர்கள் கேஸ் எண்ணை சொல்லி கூப்பிட்டதும், அபி முன்னால் வந்து நின்றான். கிவன்
கையில் இருந்த பேப்பரை  கிளார்க்கிடன் நீட்டினான்.

வாங்கிய அவர் நீதிபதியிடம் கொடுக்க,  அதை பார்த்த அவரின் முகம் மாறியது.

“என்ன இது?”, என்றார் புரியாத முக பாவத்தில்,

“நான் இந்த முறை உங்கள் முன்னால் ஆஜர் செய்கிறேன்னு சொன்ன சாட்சியின் இறப்புச்
சான்றிதழ் .” என்றான் இறுக்கமாக.

“அதாவது உங்க சாட்சி இப்போ உயிரோடு இல்ல. இதை இங்க தாக்கல் பண்ணி எதை சொல்ல
வர்றீங்க?”, என்றார்

“அதாவது போனமுறை இந்த மனிதரை சாட்சின்னு நான் தாக்கல் பண்ணினேன். அவரை
கோர்ட்ல ப்ரோடியூஸ் பண்றதுக்குள்ள அவர் உயிரையே எடுத்துட்டாங்க.”, என்று அபி
சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“அப்ஜெக்ஷன் யுவர் ஹானர், சம்மந்தப்பட்ட சாட்சி ஒரு வயதானவர், அவர் சாலையை
கடக்கும்போது கவனக்குறைவா இறந்திருக்கலாம். அதுக்காக எங்க தரப்பு மேல பழி போடுறது
நியாயமே இல்ல.”,என்று எதிர்த்தரப்பு வக்கீல் சொன்னதும்,

“அப்ஜெக்ஷன் ஓவர் ரூல்”, என்று அவரை அமரவைத்து நீதிபதி,

“ஓகே மிஸ்டர் அபினவ், கேஸ்க்கு வாங்க, உங்க சாட்சி இறந்ததால இப்போ உங்களுக்கு
சாட்சியை மீண்டும் தேட நேரம் வேண்டுமா?”,

“இல்ல யுவர் ஹானர். சாட்சி இறந்துபோனத்துக்கு காரணம் எதிர்த்தரப்பு தான். ஆனால் அதை
நான் அப்பறமா நிரூபிக்கிறேன். இப்போ இதை பாருங்க.”, என்று ஒரு பென் ட்ரைவை
கிளார்க்கிடன் ஒப்படைத்தான். அது ஒளித்திரையில் வர, அத்தனை பேரும் ஆச்சர்யப்பட்டனர்
என்றால் எதிர்த்தரப்பு கலங்கிப்போனது.

அந்த முதியவர் வீட்டுக்குள் அபி கேஸ் விஷயமாக பேச செல்வது முதல், அவர் முடியாது என்று
சொன்னதும், பெண்ணின் நிலை சொன்ன பின் ஒத்துக்கொண்டது வரை அனைத்தும் பதிவாகி
இருந்தது.

எதிர் அணி வக்கீல் சட்டென்று எழுந்து, “அவ்வளவும் நாடகம், இவரே ஒருவரிடம் பேசி,
சாட்சியாக்கி, கடைசியில் அவரை கொன்றும் இருக்கிறார். அவர் அந்த விடியோவில் எந்த
இடத்திலும் என் கட்சிக்காரர் இதை செய்ததாக கூறவில்லை.”, என்று தன் வாதத்தை வைக்க,
அபியின் கண்களில் செங்கணல் தோன்றியது.

அபி அதற்கு பதில் சொல்லும் முன்பாக, எழுந்த ரிது,கிளார்க்கிடன் சில கோப்புக்களை
வழங்கினாள்.

அவளை ஏறிட்ட நீதிபதி, “நீங்க?”, என்று கேட்டதும்,

“நான் ரிதுபர்ணா, ஐ.பி.எஸ்., முன்னாடி டெல்லில வேலை பார்க்கும்போது, இந்த கேஸ் என்
சீனியர் கிட்ட இருந்தது. நான் இப்போ சென்னைக்கு மாற்றல் ஆகிட்டேன். இந்த கேஸ்
சம்மந்தமான ஒரு சாட்சி எனக்கு கிடைத்தது. அதை கோர்டில் சமர்பிக்க வந்தேன்.”

உடனே எழுந்த எதிர்த்தரப்பு வக்கீல்,” இப்படி யாரும் செய்ய முடியாது”, என்று சொன்னதும்,

“மிஸ்டர். மல்கோத்ரா ப்ளீஸ் சிட் டவுன். நீங்க சொல்லுங்க மா.”, என்று அவளை ஊக்கினார்.

“உங்களுக்கு ஒரு புகைப்படத்தை சாட்சியா சமர்ப்பிச்சு இருக்கேன்” என்று அவள் சொன்னதும்,
அந்த புகைப்படம் ஒளித்திரையில் வந்தது. ஒரு இளம் வயது ஆடவனின்
சுயபுகைப்படம்(செல்பி).அதை கண்டதும் சிரித்த மல்கோத்ரா, “யாரு இந்த பையன் தான் ஆசிட்
உத்தினானா”, என்று கேட்டது தான் தாமதம்,

“ஐயோ நான் ரொம்ப நல்ல பையன் சார். நான் எந்த வம்புக்கும் போக மாட்டேன்.”, என்று
இதுவரை ரிதுவின் அடுத்த நாற்காலியில் இருந்த அவன் குரல்கொடுக்க, ரிது அவனை அமரும்படி
சைகை செய்தவள்,

“இந்த புகைப்படத்தோட பேக்ரௌண்ட் பாருங்க. இவர் ஒரு கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து
செலபி எடுத்து இருக்கார். அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து எதிர் திசையில் இருக்கு. அவர்
செல்பியை உற்று நோக்கினால்”, என்று ஜூம் செய்ய அங்கே அந்த பெண் அழுவதும், அவளை
நோக்கி அந்த பணம் படைத்தவரின் வாரிசு கையில் அமிலத்துடன் நிற்பதும் தெளிவாக தெரிந்தது.

மொத்த நீதிமன்றத்திலும் நிசப்தம். மல்கோத்ராவுக்கு இதை அடுத்து கையில் எடுத்து உடைப்பது
எப்படி என்று யோசனையில் இருக்க, அவரை பேச முடியாமல் அடுத்தடுத்த சாட்சிகளை
சமர்ப்பித்தாள் ரிது.

அவர் எடுத்த புகைப்படங்களில் அடுத்தடுத்த புகைப்படங்கள் வரிசையாக வைத்து வேகமாக
அதை நகர்த்தி காட்டினாள். அது அன்று நடந்த நிகழ்வை படமாகவே காட்டியது. அந்த பெண்
பயப்படுவதும், அழுவதும், அவன் கையில் அமில புட்டியுடன் நெருங்குவதும், அடுத்த படத்தில்
அவன் கையை உயர்த்தி அவளை நோக்கி வீசுவதும், அவன் முகத்தை திருப்ப, அது சரியாக

அவள் ஒரு பக்க முகத்தை சிதைத்ததும், அவள் துடிப்பதும் என்று வரிசையாக ஆறு படங்களில்
இருந்து காட்சிகள் திரையாக மல்கோத்ரா நொந்து போனார்.

அந்த வாலிபனையும் அழைத்து விசாரித்தார் நீதிபதி. அவன், “நான் அன்னைக்கு எப்பவும் போல
தான் சார் செல்பி எடுத்தேன். இந்த மேடம் வந்து அந்த படங்கள் வேணும்ன்னு கேட்டதும்
ஒன்னுமே புரியல, அவங்க சொல்லி தான் என் போட்டோல இவ்வளவு விஷயம் இருக்கிறதே
தெரியும்.”, என்றதும்,

மல்கோத்ரா எதற்கோ எழுந்தார், அவரை நோக்கி சிரித்த ரிது, மீண்டும் ஒரு கவரை எழுத்தரிடம்
கொடுக்க, அது அந்த புகைப்படத்தின் நம்பகத்தனைமைக்கான சான்றிதழ். என்று அவர்
அறிவித்ததும், மல்கோத்ரா மொத்தமாக மங்கிப்போனார்.

அப்போது அங்கே வேகமாக வந்த அபியின் ஜூனியர், மீண்டும் ஒரு பென் ட்ரைவை தர, அதை
ஒளிர விட்டனர், அங்கே அந்த சாட்சி சொல்ல வருகிறேன் என்று ஒத்துக்கொண்ட பெரியவர், ஓர்
ஓரமாக நிற்க,அவர் மீது வந்து மோதிவிட்டு, பின்னால் சென்று மீண்டும் மோதியபடி கடந்த அந்த
வாகனத்தில் இருந்து ஒருவன் போன் பேசிக்கொண்டே கடந்து செல்வதும் பதிவாகி இருந்தது.

மல்கோத்ராவின் முகம் மொத்தமாக விழுந்துவிட்டது. “சாட்சியை தாக்கல் செய்தால் அதற்கான
பாதுகாப்பு இல்லை. அவர் உயிரையும் துச்சமாக இவர்கள் பறித்தது, அந்த பாவப்பட்ட
பெண்ணுக்கான நீதி எங்கே கிடைத்துவிடப்போகிறதோ என்ற பயத்தில், எங்கே தன் மகன் சிறை
சென்று விடுவானோ என்ற பயத்தில், இதுபோன்ற பணம் படைத்த ஒரு சிலரின் கேடான
புத்தியால் நாட்டில் மக்கள் பணம் படைத்த நல்ல மனம் கொண்ட மனிதர்களை கூட சில நேரம்
சந்தேகத்தோடு பார்க்கும் நிலை வந்துவிட்டது. பணம் இருக்கும் தைரியத்தில், குழந்தைகளை
கண்டிக்காமல் வாளர்த்துவிட்டு, அவர்கள் தவறிழைத்த பின்னால் பணத்தை கொண்டு அதை சரி
செய்ய முயல்வது சமுதாயத்திற்கு கேடு”, என்று அபி வாதிட,

ரிது மருத்துவமனையில் இருந்த அப்பெண்ணை இங்கே வரவழைத்திருந்தாள். ஒரு ஸ்கர்ட்டும்
சட்டையும் போட்டிருந்த அந்த பெண் முகத்தை முழுவதுமாக ஒரு துணியால் மூடி இருக்க,
அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர் இரு செவிலிகள்.

“இவங்களை ஏன் சிரமப்படுத்துறீங்க?”, என்று நீதிபதி கடிந்துகொண்டபோது, “நான்
பேசலாமா?”, என்று கேட்டாள் ரிது,

“எஸ்”, என்று அவள் சொன்னதும், “இந்த பொண்ணோட முகம் நிறையவே சிதைந்து போச்சு,
ஆனா இவளுக்கான நீதி சிதையாம இவளுக்கு கிடைக்கணும். இவளை வெறும் தினசரி
நாளிதழில் ஒரு புகைப்படமாகவே பார்த்துக்கொண்டிருந்த உங்களுக்கு இவளை நேரில்
பார்க்கும்போது இவன் செய்த செயலின் வீரியம் புரியும் என்று நம்பினேன். அதற்கு தான்
இவளை இங்கே வரவழைத்தேன். நீங்கள் வழங்கப்போகும் நீதி இந்த பெண் நாளை தலை
நிமிர்ந்து இந்த சமூகத்தை எதிர்கொள்ளும் தைரியத்தை வழங்க வேண்டும். இவளைப் போல
இன்னொன்று பெண்ணுக்கு நடந்திடாமல் காக்க வேண்டும்”, என்று ரிது வேண்டுகோள்
விடுத்தாள்.

“ஒரு பெண்ணின் முகத்தில் அமிலத்தை ஊற்றி, அவளின் அழகோடு, மனதைரியத்தையும்
சீர்குலைக்கும் இந்த வெறிச்செயலை செய்தவனை காக்க, கொலை கூட செய்ய தயங்காத
அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு அவனுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும்
என்று கேட்ட்டுக்கொள்கிறேன்.”, என்று அபி முடித்து விட, அந்த பெண், கை கூப்பி, நின்ற
கோலம் அங்கிருந்த அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

நீதிபதி சற்று நேரம் எழுதிக்கொண்டு இருந்தவர் அதை வாசிக்க ஆரம்பித்தார்.

“இந்த காலத்தில் வாலிபர்களுக்கான சுதந்திரமும், இவ்வுலகத்தோடு அவர்களின் தொடர்புகளும்
அதிகமாகவே இருக்கிறது. பெற்றோர் அவர்களால் இயன்றவரை தன் பிள்ளைகளின் நலனில்
ஒழுக்கத்தில் கவனம் வைக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் அதில் இருந்து
தவறிப்போனார்களே ஆனால், அவர்களுக்கான தண்டனையை வழங்க விடுங்கள். அப்போது
தான் அவன் தன் தவறை உணர அவனுக்கு வழி கிடைக்கும், அவனைப் போன்ற தவறுகளை
அடுத்தவர் செய்யாது ஒரு பாடமும் கிடைக்கும். ஒரு தவறை மறைக்க பல தவறுகளை தயவுசெய்து
செய்யாதீர்கள். ஒரு பெண்ணுக்கான நீதி என்று கேட்டார் அந்த போலீஸ் அதிகாரி. இது இந்த
ஒரு பெண்ணுக்கான நீதி மட்டும் இல்லை. எந்த பெண்ணையும் இப்படி செய்துவிடக்கூடாது
என்று ஒவ்வொருவரும் பயம் கொள்ள வேண்டும். நீதி பொதுவானது. அன்று நடந்த
நிகழ்வுகளுக்கான சாட்சிகளை இவர்கள் அழித்திருந்தாலும், உண்மை நீரில் அழுத்தி வைத்த
பந்தாக மேலே எழுந்து வந்துவிட்டது. இப்போது தீர்ப்பிற்கு வருவோம். அந்த பெண்ணின் மீது
அமிலத்தை வீசி அவள் முகம் சிதைய காரணமாக இருந்த ரிஷப் என்ற இவ்வாலிபனை ஏழு வருட
கடுங்காவல் தண்டனையும்,அதை மறைக்க செய்த முயற்சிகளும், கொலை வரை சென்றதையும்
விசாரிக்க தனி ஆணையம் ஒன்றையும் ஏற்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கிறேன். அந்த
பெண்ணின் முகத்தை சீர்த்திருத்த ஆகும் செலவை கணக்கிட்டு, ரிஷப்பின் குடும்பம் அவருக்கு
இருபது லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறேன்.”,என்று தீர்ப்பு
வழங்கிவிட்டு அவர் எழுந்து சென்றார்.

அந்த பெண்ணை மீண்டும் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ரிஷப் என்ற அந்த
பணக்காரரின் வாரிசு சிறைவாசத்துக்கு கிளம்பியது.

அபி அணைவரும் அவனை வாழ்த்திவிட்டு கலந்து செல்லும்வரை பொறுமை காத்தவன் அதற்கு
மேல் முடியாமல், ரிது என்று அவளை அணைத்துக்கொண்டான்.

“அபிம்மா நீங்க நல்லா ஆர்க்யூ பண்றீங்க”, என்று பாராட்டிய தன் மனைவியிடம், “நீ மட்டும் அந்த
போட்டோவை ஆதாரமா கொண்டு வரலன்னா இதெல்லாம் சாத்தியமே இல்லை மா.”,என்று
சொன்ன அபியிடம்,

“நீங்களும் தான் அந்த பெரியவரோடு பேசிய வீடியோ, அவர் இறந்ததற்கான சி.சி.டி.வி
பதிவுன்னு சரியா ஆதரங்களை சமர்பித்ததாலயும் தான் .”,என்று சொன்னதும், அபியின் ஜூனியர்
வந்து, “சார் கிளம்பலாமா?”, என்று கேட்டான்.

“ம்ம் போகலாம் பிரகாஷ்”, என்று ரிதுவின் கரம் பற்றியபடி அபி, “ஆமாம் அந்த பையனே
தன்னோட போட்டோல இருந்ததை கவனிக்கலைன்னு சொன்னான். நீ எப்படி கண்டுபிடிச்ச?”,
என்றதும்,

“சொல்றேன்.. சொல்றேன்..”, என்றாள்.

★★★★
��அகலாதே ஆருயிரே��
��63��

டில்லியில் இருந்து கிளம்பும்போதே முடிவு செய்துவிட்டாள் இந்த கேஸில் கண்டிப்பாக தன் பங்கு
இருந்தே ஆகவேண்டும். நம்மிடம் இருக்கும் ஆதாரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க என்ன வழிமுறை
என்பதை புரிந்துகொண்டு, ஆதாரங்கள் திரட்டும் வேலையில் இறங்கினாள் ரிது.

முதலில் சி.சி.டி.வி பதிவுகள் அழிக்கப்பட்டுவிட்டதை கண்டறிந்தவளுக்கு வேறு வழிகள்
இருக்கின்றனவா என்று யோசனை வேறு உபாயங்களைத் தேடியது. அவளும் அந்த நேரத்தில்
அங்கிருந்த மக்களிடம் சாட்சி , ஆதாரம் கிடைக்கும் என்று நினைக்க, அங்கிருந்தவர்களை 
கண்டுபிடிப்பதே மிகவும் கடினமாக இருந்தது. டெல்லியில் இருந்து சென்னை வந்தபின், அந்த
கேஸைத் தொடர்வது முற்றிலும் சிரமமானதாகவே இருந்தது.

சென்னையில் பணிச் சுமையும் மீறி அவள் அந்த கேஸுக்கு நேரம் செலவு செய்ய நினைத்தபோது
அவள் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. இன்றைய பறந்து விரிந்த இணைய உலகில் அந்த சாட்சி
கண்டிப்பாக இருக்கும் என்று நம்பியவள் தீவிரமாக இணையத்தில் தேட ஆரம்பித்தாள். அவள்
தேடுவது, ஆழ்கடலில் குண்டூசி போல என்று அவளுக்கே தெரியும். இருந்தும் ஏதோ ஒரு
ஆழமான நம்பிக்கையில் அவள் தேடலைத் தொடர்ந்தாள்.

அவள் அவளின் தேடலை முறைப்படுத்தினாள். அதில் இன்ஸ்டாக்ராமில் இன்றைய இளைஞர்கள்
தங்கள் சுயப்படங்களை வெளியிடுவதால், அவளுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு நூல் இதில்
கிட்டும் என்று தோன்ற, இன்னும் அந்த தேடல் வட்டத்தை குறுக்கினாள்.

டெல்லியில் அன்றைய நாளில் வெளியான புகைப்படங்களை அவள் வரிசைப்படுத்த, அதுவே
லட்சங்களைக் கடந்தது. அப்போது, இன்னும் அதை சுருக்கும் நோக்கில், குறிப்பிட்ட அந்த
இடத்தை அங்கே பதிவு செய்து படங்கள் வெளியானதை தேடலானாள்.

அவளின் நம்பிக்கை பொய்க்காமல்  சில படங்கள் மட்டுமே மிஞ்சி நின்றது. அதில் அவள்
எதிர்பார்த்த ஏதோ ஒன்று கிடைக்கும் என்று பரபரப்பாய் அவள் தேட, எதிர்பாராத வகையில் ஒரு
புகைப்படத்தின் பின்னணியில் அந்த சம்பவ இடம் தெரிந்தது. அதில் படம் தெளிவில்லாமல்
இருக்க, அந்த படத்தை பதிவேற்றம் செய்தவர் விபரம் எடுத்து, போலீஸ் உதவியுடன் அவள் அந்த
பையனைக் கண்டுபிடித்தாள். அவனிடம் அந்த தேதியில் எடுத்த புகைப்படங்களைக் கேட்டதும்,
அவனோ அதில் நன்றாக வராத புகைப்படங்களை அழித்து விட்டதாக சொல்ல, அவனின்
போனில் இருந்து புகைப்படங்களை ரெஸ்டோர் செய்து பார்த்தவள் இன்பமாய் அதிர்ந்தாள்.

அவள் எதிர்பாராத, ஆனால் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தேடிய அந்த சம்பவத்தின்
படங்கள். அழகாய் ஆறு படங்களில் அன்று நடந்ததை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறி
இருந்தது.

அதை அவனிடம் இருந்து பெற்றவள், கோர்ட்டில் கேஸ் ட்ரையல் வரும்போது கண்டிப்பாக
வரவேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றாள். அதற்கான உண்மைதன்மை சான்றிதழ் வாங்கி,
அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு வழக்கு வழக்காடு மன்றம் வரக் காத்திருந்தாள் ரிது.
இடையில் அபியுடனான திருமணம், அவர்கள் வாழ்க்கை என்று வந்தாலும், இந்த வழக்கை
முழுவதுமாக அவளே கையாள நினைத்தால் அவனிடம் கூட ஆதாரத்தை சொல்ல வில்லை.
அவளைப் பொருத்தவரை ஒருவருக்குத் தெரிந்திருந்தால் மட்டுமே அது ரகசியம். இரண்டாம் நபர்
அறிந்தாலே அது செய்தியாகி விடும் என்பதால் தான். அந்த சாட்சியிடம் கூட முழு விவரங்களை
அவள் தெரிவிக்கவில்லை.

நடந்தவைகளைக் கேட்ட அபி அவளின் நுண்ணறிவையும் கூர்மையையும் வியந்து மனம்
நிறைந்து பாராட்டினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்தபடி அவரவர் தங்கி இருந்த அறையைக் காலி செய்துவிட்டு,
அந்த பெண்ணை மருத்துவமனையில் சந்தித்து, ஆறுதல் சொல்லிவிட்டு, விடைபெற்றனர்.

இருவரும் ஒரே விமானத்தில் பயணச்சீட்டு எடுத்திருந்தாலும், இடம் வெவ்வேறாக இருக்க, அபி
அவளை ஏக்கமாக பார்த்தபடி தன்னிடம் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டி உதட்டைப்
பிதுக்கினான்.

ரிதுவோ முகம் கொள்ளாத புன்னகையோடு, தன் அருகில் அமர முடியாமல் ஏங்கும் கணவனை
ஒரு கண்ணிலும், தன்னிடம் அமர்ந்து கதை பேசும் ஒரு குட்டி பெண்ணை ஒரு கண்ணிலும்
கண்டபடி அவளோடு பேசிக்கொண்டு இருக்க, அபியின் முக பாவங்களில் அவளால் சிரிப்பை
அடக்க முடியாமல் போனது.

சென்னை வந்து இறங்கியவர்களை வரவேற்ற நிதீஷ் மனமார ரிதுவைப் பாராட்டினான்.
வீட்டிலும் இருவருக்கும் வரவேற்பு பலமாக இருந்தது.

நாட்கள் பெரிய மாற்றங்கள் இல்லாமல், அபியின் சிணுங்கல்களோடும், ரிதுவின் செல்ல
மிராட்டல்களோடும் சென்று கொண்டு இருக்க,  ஆருஷியோ அவளின் பணியில் சேர்ந்ததில்
இருந்து திண்டாடிப்போனாள்.

அவளின் ஒவ்வொரு செய்கையும் லதாவால் குற்றப்படுத்தப்பட்டது. வேலைக்கும் சென்று,
வீட்டிலும் லதாவின் பேச்சுக்களைக் கேட்டு , ஹர்ஷாவின் முழு ஆதரவும் இல்லாமல் சோர்ந்து
போனாள். ஹர்ஷா ‘கொஞ்சம் பொறுத்துப்போ  ஐஸ்கிரீம்’ என்று கன்னத்தைக் கிள்ளிக்
கேட்கயில் சரி என்று அவளை அறியாமல் அசைந்து விடும் தன் தலையை அவன் இல்லாமல்
யோசிக்கும் நேரங்களில் அடிக்கடி குட்டி தண்டனை கொடுப்பாள் ஆரூ. அதிக
மகிழ்ச்சியோ,உற்சாகமோ இல்லாமல் நகர்ந்த ஆருவின் வாழ்வில் இளைப்பாருதல் என்றால் அது
அவளின் வீட்டுத் தோழமைகளான பாட்டி, தாத்தா, மாமா மட்டுமே. ரிதுவும் குற்றவியல்துறைக்கு
மாற்றப்பட்டு விட்டதால் அவளாலும் ஆருஷியோடு நேரம் செலவு செய்ய முடியவில்லை.

இப்படி இருந்த அவர்களின் வாழ்வில் திருப்பமாக வந்தது அவர்களின் தலை தீபாவளி. சசியும்
நாராயணனும் வந்து அவர்களை தலை தீபாவளிக்கு அவர்கள் வீட்டிற்கு அழைக்க, தம்பதிகள்

மட்டுமின்றி மொத்த குடும்பமும் வந்தாக வேண்டும் என்று கட்டளையாகவே சொல்லிவிட்டுச்
சென்றார் சசிகலா.

விக்னேஷும், மகேஷும் சசி குடும்பத்தின் மீதும் ரிது மீதும் நிறைய மரியாதை வைத்திருக்க,
தங்கள் மனைவியரோடு, தீபாவளிக்கு சசி இல்லத்திற்கு பயணமாயினர்.

கேசவனும் வேணியும் ஆருஷியையும் ஹர்ஷாவையும் அழைக்க, லதாவோ செய்முறை என்று
பெரிய பட்டியலே தந்தார் வேணியிடம். வேணிக்கு மகளுக்குச் செய்வதில் வருத்தமில்லை.
ஆனால் லதா கேட்டுப்பெறுவது அவருக்குப் பிடிக்காமல் போக, முகத்தை தூக்கி வைத்தபிடி
ஹர்ஷாவை தீபாவளி பண்டிகைக்கு அவர்கள் வீட்டிற்குள் வரவேற்றார். ஆருஷியும் லதாவின்
செய்கையில் மனம் வாடி இருக்க, தீபாவளி சாதாரண நாளை விட மோசமாகவே இருந்தது.

நேர்மாறாக நாராயணன் வந்தவர்களை வாயார வரவேற்று, ரேகாவின் முகத்திருப்பல்களைக்
கண்டும் காணாமல் மற்றவர்களோடு கலந்து பேசி, வெடிகள் வெடிக்க ஊக்கம் செய்து அந்த
வீட்டின் ஜீவனாடியாகத் திகழ்ந்தார்.

ரிஷி, அபியை தொற்றிக்கொண்டு அலைந்தான். இருவரும் சேர்ந்து வெடி வெடிக்க, ஸ்வாதி கூட
கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

“அபி, உனக்கு ரிது பொண்டாட்டியா இல்ல இந்த ரிஷி பயலா? இவனோடவே சுத்திட்டு இருக்க.
பாரு ரிது கோச்சுக்க போறா.”, என்று கேலி பேச, அபி சிரித்த முகமாக, “உனக்கு எப்படி எல்லாம்
சந்தேகம் வருது ஸ்வாதி அக்கா. நானும் என் மச்சானும் ஒண்ணா சுத்துறோம், உனக்கென்ன?
உன் புருஷன் தான் அவரு மச்சானைக் கண்டுக்கல. நானும் அப்படியே இருக்க முடியுமா என்ன?”,
என்று மகேஷை வாரிவிட,

“ஏன் மச்சான்?”, என்று அவனிடம் வந்த மகேஷ் அதன் பின் அவனை விட்டு அகலவில்லை.
விக்னேஷும் இணைய, அங்கே ஒரே கொண்டாட்டம் தான். அணுகுண்டு முதல் ராக்கெட் வரை
பெட்டி பெட்டியாக  அவர்கள் காலி செய்ய, சளைக்காமல் வாங்கி வைத்ததை எடுத்துக் கொடுத்து
அவர்களுடன் இணைந்து கொண்டார் நாராயணன்.

ராகவேந்தர் சற்று நேரத்திற்கு பின் அவரிடம்,  “எப்படி மாப்பிள்ளை?”, என்று கேட்டதும்,
“ரெண்டு பிள்ளைகள் இருக்கும் போதே அவ்வளவு வாங்கித் தருவேன். இன்னிக்கு ஏழு பேர்
இருக்கும் போது அதுவும் ஸ்வாதியோட குட்டிஸ் இருக்கும்போது வாங்க மாட்டேனா?
அதெல்லாம் முன்னாடியே மொத்தமா சிவகாசில சொல்லி ஆர்டர் பண்ணி வாங்கிட்டேன்.”,

என்றதும் தான் என்றாவது ஒரு தீபாவளிக்கு குழந்தைகளுக்காகவோ அல்லது அவர்களுடனோ
இப்படியெல்லாம் வாழ்ந்தது உண்டா? என்று கேள்வி அவருக்குள் எழுந்தது.

நல்ல நாளிலேயே சங்கரி பலகாரம் செய்வதில் வல்லவர், தீபாவளி வேறு, மருமகளும் சமையலில்
கெட்டி என்று தெரிந்ததும், மாமியாரும் மருமகளுமாக சமையலறையை ஆக்கரமிப்பு செய்து
கொண்டனர். அதனால் சசி, ரேகா, ஸ்வாதி மூவரும் ஸ்வாதியின் குழந்தைகளோடு மத்தாப்புகள்
விட்டு மகிழ, ரேகாவின் மனதின் ஓரத்தில் தனக்கும் ஒரு குழந்தை இருந்திருந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

ரிது சுட சுட மைசூர்பாகு எடுத்து வர, அவள் வாசலில் இருந்த கூட்டத்தை அழைத்து சாப்பிட
சொல்லி பேசிக்கொண்டு இருக்க, அவளை பின்னால் விரல் வைத்து யாரும் பார்க்காத வண்ணம்
சீண்டினான் அபி.

அவனை முறைத்துப்பார்த்தவள், சுவரோடு நின்று பேச ஆரம்பிக்க, தரையில் காலை உதைத்து
சிணுங்கி காட்டினான் அபி. அவர்களின் நாடகத்தை யாரும் பார்க்கவில்லை என்று அவர்கள்
நினைத்திருக்க, அதைக்கண்ட ரேகாவின் மனதில் தன் கணவன் இப்படி தன்னை சீண்டி
விளையாடியது உண்டா என்ற எண்ணம் மேலே எழுந்து வந்தது.

என்றுமே நமக்குக் கிடைத்ததா என்று கேட்கும் முன், அது கிடைக்க நாம் என்ன முயற்சி
செய்தோம் என்று யோசிக்க வேண்டுமா அல்லவா? அதை மட்டும் சௌகரியமாக மறந்து
போனாள் ரேகா.

மாலை வாழ்த்து  சொல்ல  ஆருவை ரிது அழைக்க, அவளின் உற்சாகம் இல்லாத குரலைக்
கேட்டதும் தான் தன் தவறை உணர்ந்தாள் ரிது. தலை தீபாவளி சம்பிரதாயம் என்று தான் அவள்
ஆருவை வீட்டிற்கு அழைக்காமல் விட்டாள். ஆனால் அவள் குரலில் தெரிந்த பேதம்,
அவளைத்தேடி செல்ல வைத்தது.

அபியும்  ரிதுவும் மதிய உணவுக்குப்பின் வீட்டினரிடம் கேட்டு ஆருவின் வீட்டிற்குச் சென்றனர்.
அங்கே கட்டிலில் கவிழ்ந்து படுத்துக்கொண்டிருந்த ஆருஷியை கண்டு இருவரும் துணுக்குற்றனர்.

அபியின் விழிகள் ஹர்ஷாவைத் தேட, அவனோ மாடியில் அமர்ந்து லாப்டாப்புடன்
உறவாடிக்கொண்டு இருந்தான். அபி அவனை தலையில் தட்டி இழுத்து வர, “டேய் வேலை
இருக்கு பங்கு.”,என்று அலறியவனை, “தினமும் தான் வேலை இருக்கும். ஆனா எப்பயும் தலை
தீபாவளி வருமா டா?”, என்று அறைக்குள் தள்ள,

அங்கே ரிது ஆருவைத் திட்டி, அவள் தாய் தந்தை பற்றி விசாரிக்க, அவளோ,”அம்மா இவ்வளவு
நேரம் இங்க தான் இருந்தாங்க. திட்டி முடிச்சிட்டு இப்போ தான் ஏதோ அவங்க ஒர்க் பண்ற
படத்துல தீபாவளி செலேப்ரேஷன்னு போனாங்க. அப்பா உள்ள தூங்கறார்.”, என்று சலிப்பாக
சொல்ல,

“எதுக்கு டி அம்மா திட்டினாங்க?”, என்றதும், “எனக்கு என் புருஷனை வழிக்கு கொண்டு
வரத்தெரியலையாம். அவனை பிசினஸ் ஆரம்பிக்க சொல்லி இங்கேயே கூட்டிட்டு
வந்துடணுமாம். ஒரே அட்வைஸ்.”, என்று சொல்லும்போதே அவள் நொந்து கிடக்கிறாள் என்பது
ரிதுவுக்கு புரிய, அவளைக் கிளம்ப சொல்லிவிட்டு, கேசவனை எழுப்பி, தங்களோடு அவர்களை
அழைத்துச் செல்வதாக சொல்ல, அவரோ,

“ரிதும்மா நீ காலைலயே வந்துடுவன்னு நெனச்சேன். கூட்டிட்டு போய் எல்லாரும் சந்தோசமா
இருங்க.”, என்று அனுப்பி வைத்தார். அவரின் இயலாமை அவருக்கு.

வீடு வந்து சேரும்வரை நால்வரும் பேசிக்கொள்ளாமல் வர, வாயிலில் நின்ற சசியைக் கண்டதும்
பொங்கி வந்த கண்ணீரோடு ,”ஆன்ட்டி “, என்று அணைத்துக்கொண்டாள் ஆருஷி.

இரண்டே நிமிடத்தில் அவள் முதுகை நீவி சமாதனம் சொன்னவர், கிச்சு கிச்சு மூட்ட, அந்த
விளையாட்டில் ரிஷி இணைத்துக்கொண்டான், அவனும் சசியும் அருஷியோடு விளையாட, சற்று
நேரத்தில் ஆருஷியும் ரிஷியும் “அட்டாக்” என்றபடி நாராயணனை நெருங்க, அவரோ வீடு
முழுவதும் ஓட ஆரம்பித்தார்.

ஆருஷியும் ஹர்ஷாவும் வந்ததும் இன்னுமே வீடு மகிழ்ச்சியில் நிறைந்தது. காலை முதல்
தவறவிட்ட தருணங்களை ஹர்ஷாவும் ஆருவும் சேர்ந்து வெடி வைத்து கொண்டாட, அபி ரிதுவின்
தோளில் கை போட்டபடி ரசித்து வந்தான்.

சங்கரி ஹர்ஷாவை அழைத்து, “ஹரி உனக்கு அம்மாவை பிடிக்கும், உன் ஐஸ்கிரீமையும்
பிடிக்கும் . எனக்கு தெரியும். ஆனா சில நேரங்கள்ல யார் பக்கம் தப்புன்னு பார்த்து நீ
கண்டிக்கணும் இல்லன்னா ஒருத்தர் இன்னொருத்ரை காயப்படுத்திக்க ஆரம்பிச்சிடுவாங்க.”,
என்று அவனுக்கு அறிவுரை வழங்க,

“புரியுது ஆன்ட்டி நான் இனி கவனமா இருக்கேன்”, என்று தலையைத் தாழ்த்தினான்.

“அட, தலை தீபாவளி ஒரே தரம் தான் வரும். போ அபி, ரிது, ஆரூ, ரிஷி ன்னு எல்லாரும் எப்படி
சந்தோசமா இருக்காங்க பாரு. என் மாப்பிள்ளைகள் கூட எப்படி விளையாடுறாங்க பாரு. எல்லாம்
நாராயணன் அண்ணனால தான். இல்லனா என் குடும்பம் இப்படி இருக்கும்ன்னு யாராவது
என்கிட்ட சொல்லி இருந்தா சிரிச்சிருப்பேன். ஆனா நடந்திட்டு இருக்கு பாரு. இன்னிக்கு சண்டை
போடுற உன் அம்மாவும் மனைவியும் நாளைக்கு சேர்ந்திடுவாங்க.  ஆனா நீ தவற விடுற இந்த
தருணம் திரும்பிக் கிடைக்குமா சொல்லு?”,என்று சொல்ல,

ஆமோதிப்பாக தலையசைத்தவன் உற்சாகமாக இளையவர்களின் மகிழ்ச்சிக்கடலில் கலந்தான்.

நால்வரும் அவர்கள் தலை தீபாவளியை இனிதே கொண்டாட, பெரியவர்கள் நால்வரும்
அகமகிழ்ந்து வாழ்த்தினர்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��64��

தலை தீபாவளி முடிந்து சில நாட்கள் சென்ற நிலையில் அன்று ஆருஷி, ரிதுவை போனில்
அழைத்தாள்.

“சொல்லு செல்லக்குட்டி”, என்று போனில் மகிழ்வாய் பேசிய தோழியிடம் சொல்ல வந்ததை
சொல்லாமல் வேறு பேசிவிட்டு வைத்துவிட்டாள் ஆரூ.

இரண்டு நாட்களாக மனம் அவளைப் படாதபாடு படுத்துகிறது. தாய் ஒருபுறம் அவளை குறை
கூற, மாமியார் ஒருபுறம் குறை கூற, பாட்டியின் ஆறுதல் மொழிகள் பெரிய அளவுக்கு அவளிடம்
வேலை செய்யவில்லை. சாந்தலட்சுமி தன் மருமகளிடம் பேசிவிடும் முடிவுக்கு வந்துவிட்டார்
என்பதை அறியாத ஆரூ, மனதில் பாரம் சுமந்து திரிந்தாள்.

ஹர்ஷா அன்றே அன்னையை அழைத்து, அவளிடம் அப்படி பேச வேண்டாம் என்று
பொறுமையாக சொல்லிவிட்டு, இனி பிரச்சினை வராது என்று நினைக்க, அதன் எதிர்வினை
அவன் நினைத்ததற்கு மாறாக ஆருஷி மேல் லதாவின் கோபத்தை கிளப்பி விட்டது விதியின்
செயலா? அல்லது மகன் கைகழுவி விடுவான் என்ற சராசரி தாயான லதாவின் மதியின் செயலா?

அனைவருக்கும் இடையில் சிக்கித் தவித்தாள் ஆருஷி. ரிதுவிடம் பேசினால் நன்றாக இருக்கும்
என்று நினைக்க, அவளோ வேலையில் அதிக அழுத்தத்தில் இருந்ததால், அவளால் ஆருஷியின்
பேச்சில் தெரிந்த வேறுபாட்டை அவள் பேசிய இரண்டு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை.
சற்று நேரம் அவள் பேசி இருந்தால் கூட ரிது அதை உணர்ந்திருப்பாளோ என்னவோ!

பணியிடத்தில் இருக்கும் யாருக்கும் தொலைபேசியில் பேசும்போது கவனம் பணியிடம் தான்
இருக்குமே அன்றி பேசுபவரின் பேச்சில் முழு கவனம் செல்லாது. கடமை முன்னிலை
வகிக்கையில் மற்றவை பின்னுக்குத் தள்ளப்படுவது இயல்பே! அதற்கு ரிதுவும் விதிவிலக்கு
அல்லவே!

ஆருவின் வாழ்க்கை இப்படி சென்று கொண்டு இருக்க, ராகவேந்தர் நிறைய மாறி இருந்தார்.
அடிக்கடி நாராயணனை அழைத்து அவரோடு பேசுவது, அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று
தங்குவது என்று அவரின் கவனம் ரிதுவின் தந்தை மேலேயே இருக்க, இதைக்கண்ட ரிது மனதில்
தான் நினைத்தது நடந்து கொண்டிருக்கிறது என்ற மகிழ்வில் அவள் வேலையில் கவனம்
பதித்தாள்.

அன்று ஒரு கேஸ் விஷயமாக ரிது வெளியே கிளம்ப, இன்ஸ்பெக்டர் ரகு அவர் இருக்கையில்
இல்லாதது கண்டு தன் கைகடிகாரத்தை பார்த்தவள், சப் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தை அழைத்தாள்.

“எங்க இன்ஸ்பெக்டரைக் காணோம்? நேத்து அந்த வ.உ. சி நகர் மர்டர் கேஸ் பிராக்ரஸ்
கேட்டேன். இன்னும் என் டேபிளுக்கு வரல. அவர் வந்தா என்னை காண்டாக்ட் பண்ண
சொல்லுங்க. நான் அந்த ஏடிஎம் பிரேக்கேஜ் விஷயமா விசாரிக்க பேங்க் வரைக்கும்
போறேன்.”,என்று சொல்லிவிட்டு அவள் வெளியேற,

சற்று நேரத்தில் வந்த ரகுவிடம் தகவல் தந்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தான் ரஞ்சித். ‘இந்த
பொண்ணு வர்ற வரைக்கும் ஒழுங்கா இருந்தவன், இப்போ பாரு என்னமோ நல்லவன் மாதிரி
பைலை மட்டுமே பார்த்துட்டு இருக்கான்.’ என்று உள்ளே புகைந்தவன், அவள் சொன்ன
வேலையில் அவனுக்கு சாதகமாக ஏதாவது அமையுமா? என்று யோசிக்கத் துவங்கினான்.

தன்னலம் மட்டுமே இருக்கும் இவர்களைப் போன்றோருக்கு, பொதுநலனோ, கடமையோ எதுவும்
கிடையாது.

அபியும் வேதாசலம் சொன்ன வார்த்தையை மதித்து, அவனும் நிதீஷும் தனியாக ஆபிஸ்
ஆரம்பித்து விட்டனர், அவன் கண்களில் வேதாசலம் பேசிய காட்சிகள் வந்து போயின.

“இங்க பாரு அபி. உன்னைப் போல ஒருத்தனை நான் இதுவரை பார்க்கல. சச் அ டெடிகேடட்
பாய் யூ ஆர். உன்னை போல இன்னும் பலரை நான் ட்ரெயின் பண்ணனும். நீயும் இப்போ
ஸ்டுடெண்ட், ஜூனியர்ல இருந்து சீனியர் ஆகற நேரம் வந்தாச்சு. நீ குட்டையா தேங்கி எனக்கு
கீழேயே இருக்கணும்ன்னு நான் நினைக்கல. நீ உன் வெற்றியைத் தேடி ஓடிக்கிட்டே இருக்கணும்
அந்த நதி மாதிரி. நீ வளர்ந்து பேர் புகழ் வாங்கறதைப் பார்த்து நான் பெருமையாக
சொல்லிக்கணும். இவன் ஒரு காலத்துல என்னோட ஜூனியர் அப்படின்னு.”, என்று அவர் அவன்
தோளில் கைபோட்டு பேச, உண்மையில் அவர் அவன் மீது வைத்திருந்த அக்கறையில் அவன்
நெகிழ்ந்தான்.

ரிதுவும் அவனை எந்த வகையிலும் சோர்வடைய விடாது பார்த்துக்கொண்டாள். இருவரும்
சந்தித்துக்கொள்ளும் நேரம் குறைவாக இருந்தாலும், அவனுக்கு நேரத்திற்கு போன் செய்து,
அவனின் உணவு மற்றும் மனநிலையை உறுதிபடுத்திக் கொள்வாள் ரிது.

சங்கரியும் புது போனில் நன்றாக பேச, செய்தி அனுப்பப் பழகிவிடவே, ரிதுவால், குடும்பம்,
வேலை இரண்டையும் சரிவர கண்காணித்துக்கொள்ள முடிந்தது.

சங்கரி அன்று வேலைக்கு சென்று விட்டுத் திரும்பியவர் சற்றே ஓய்வாக அமர, உள்ளே
நுழைந்தாள் ரேகா.

“அம்மா காபி”, என்று குரல் கொடுத்துவிட்டு தந்தை அருகில் அமர்ந்தவள், தாய் எழுந்து
போகாதத்தைக் கண்டு, “என்னமா நான் கேட்டது காதுல விழுகலையா, இல்ல மருமக வந்த
மிதப்பா?”, என்று கோபமாக கேட்ட ரேகாவுக்கு பதில் தர வாய்திறந்த சங்கரி, ராகவேந்தர்
அவளுக்கு அளித்த பதிலில் அதிசயித்துப் போனார்.

“என்ன ரேகா? அம்மா கிட்ட பேசுறோம்ன்னு நினைவு இருக்கா இல்லையா? இவ்ளோ தரம்
இல்லாம பேசுற? அவளே வேலைக்கு போயிட்டு இப்போ தான் வந்திருக்கா. உனக்கு காபி
வேணும்ன்னு கேட்டது தப்பில்லை. ஆனா நீ சொன்ன உடனே அம்மா எழுந்து ஓடணும்ன்னு
நினைக்கிற பாரு, அது ரொம்ப தப்பு”,என்று சொன்னதும்,

“அப்பா, என்ன நீங்க அவங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க? நானே எப்பவோ வரேன். இதெல்லாம்
கொஞ்சமும் நல்லா இல்ல. “,என்று முகத்தை திருப்ப,

“நானும் அதே தான் மா சொல்றேன். எப்பவோ வர்ற நீ ஏன் அம்மாவை வருத்தப்படுதறது போல
பேசற? உன்னோட அம்மா தானே அவ, பாரு எப்படி சோர்வா இருக்கா! நீ வந்ததும் அவ கிட்ட
என்னம்மா ஏன் இப்படி சோர்ந்து தெரியறன்னு கேட்டியா?”, என்றார்.

“அவங்க தான அப்பா என்னோட அம்மா. அவங்க தான் என்னை கவனிக்கணும். நான் ஏன்
அவங்களை பார்க்கணும்?”, என்று எரிச்சலான அவளை விசித்திரமாக பார்த்தவர், இத்தனை நாள்
இவளின் எண்ணம் புரியாது கண் மூடி, மௌனியாக இருந்த தன் முட்டாள்தனத்தை நொந்தார்.

“இங்க பாரு ரேகா, அவளுக்கும் வயசாகுது. நீ எங்க பொண்ணு தான். நாங்க உன்னை
கவனிக்கணும் தான்.ஆனா அது எது வரேன்னு இருக்கே மா. உனக்கு கல்யாணம் ஆகி ஏழு
வருஷம் ஆச்சு. நீ இப்போ ஒரு குடும்பத்துக்கு தலைவி. ஏதோ இங்க வரும்போது நீ
மனவருத்தப்படக் கூடாதுன்னு நான் ஒன்னும் சொல்லாம இருந்தேன். ஆனா அதுவும் எவ்வளவு
நாளைக்கு மா. அவ பாவம் இல்லையா ? “,என்று முதல்முறை மனைவிக்காக அவர் பரிந்து பேச,

“அதான் வயசாகுதுன்னு நீங்களே சொல்றீங்க, அப்பறமா எதுக்கு அவங்க வேலைக்கு
போகணும்? மகனும் மருமகளும் இவங்க பணத்தை எதிர்பார்க்கறாங்க தானே. நான் வெறும் ஒரு
காபி கேட்டது குத்தமா?”, என்றாள் குத்தலாக,

மகன் மருமகளை இழுத்தும் வந்ததே சங்கரிக்கு கோபம், “இங்க பாரு ரேகா, என்னைப் பத்தி பேசு.
ஆனா என் பையனையோ மருமகளையோ இழுக்காதே. அவங்க ஒன்னும் என்னை வேலைக்கு
போக சொல்லல. போக வேண்டாம்ன்னும் சொல்லல. இது முழுக்க என்னோட விருப்பமும்,
மனத்திருப்தியும் தான். உனக்கு காபி தானே வேணும். இரு”, என்று அவர் எழுந்து போக,

“சங்கரி நில்லும்மா”, என்றார் ராகவேந்தர்.

கணவர் தன்னை வாய் நிறைய பெயர் சொல்லி அழைத்ததை கேட்ட சங்கரி மனம் குளிர்ந்து
போனார். அவர் கண்களில் பெருகிய நீரோடு கணவரைக் காண,

“ரேகா, எழுந்து போய் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படியே உனக்கும் காபி கலந்து எடுத்திட்டு
வா”, என்றார்.

ரேகாவின் முகம் அஷ்டகோணலாக மாறியது. அவளுக்கு வேலை செய்வதில் ஒன்றும் இல்லை.
ஒரு காபி தானே. ஆனால், தந்தை தனக்காக மட்டும் கேட்டிருந்தால் பரவாயில்லை. தாயயும்
சேர்த்து, போதாத குறைக்கு அவருக்கு சாதகமாக  பேசுவதை அவளால் ஏற்கவே முடியாமல்
போக, வேகமாக எழுந்தவள்,

சமையல் அறைக்குச் சென்று ஒரே ஒரு காபி, தந்தைக்கு கலக்கி எடுத்து வந்தவள், அதை அவர்
முன்னால் வைத்துவிட்டு, “வர்றேன்ப்பா”, என்று வெளியேறினாள்.

ராகவேந்தர் அவளைத் தடுக்கவில்லை. அதை வியப்பாக சங்கரி பார்த்துக்கொண்டு இருக்க,
“இந்தா சங்கரி இந்த காபியை குடி. முகம் சோர்வா இருக்கு.”, என்று அவரிடம் காபியை நகர்த்திய
கணவரின் மாற்றம் சங்கரியை  ஆனந்தக் கண்ணீரை கரை புரண்டு ஓடச் செய்தது.

அவரின் அருகில் மற்றொரு தம்ளரோடு  வந்தவர், பாதி காபியை அவருக்கு கொடுத்துவிட்டு
அவரும் எடுத்துக்கொண்டு சோபாவுக்கு அருகில் கீழே அமரப் போனார்.

“ஏன் அங்க உக்கார போற? இங்க வா”, என்று அருகில் அமர்த்தியவர்,” உன்னை கண்டுக்காமலே
இருந்துட்டேனா மா?”, என்று குற்றவுணர்வு நிறைந்த குரலில் கேட்டதும்,

“அய்யோ அப்படி எல்லாம் ஒன்னுமே இல்ல அபி அப்பா”, என்று சொல்லிவிட்டு, “என்ன திடீர்னு
என் மேல..ம்ம்..”, என்று தொடர முடியாமல் நிறுத்தினார் சங்கரி.

“முழுசா கேளும்மா, ஏன் நிறுத்தீட்ட? என்ன திடீர் கரிசனம் ன்னு கேளு. அதுல தப்பு ஒன்னுமே
இல்லையே. நான் கடிவாளம் கட்டிய குதிரையை விட மோசமா என் எண்ணங்களோடு மட்டுமே
வாழ்ந்துட்டு வந்திருக்கேன். நீயும் ஒரு மனுஷி, உனக்கும் எண்ணம் இருக்கும். ஆசை
இருக்கும்ன்னு என் மர மண்டைக்கு புரியவே இல்ல. சசி விட்டுட்டு போனப்போ அப்பா அம்மா
மேல கோபம் அதிகமா வந்தது. நானும் அவங்களை விட்டுட்டு வந்துட்டேன். அப்பறம் உன்னை
வேலை பார்த்த இடத்தில் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு பிள்ளைகள் பெற்றாலும், மனம்
எதையோ இழந்தே இருந்தது. ரேகா பேச ஆரம்பித்து அப்பான்னு கூப்பிட்டதும் ஒரு நிறைவு
வந்தது. அதுக்காகவே தான் நான் அவ என்ன கேட்டாலும் மறுக்காம செஞ்சேன். அப்பா அம்மா
என் தங்கச்சியை நம்பாம போனது போல, நான் இருந்திடக்கூடாதுன்னு தான், ரேகாக்கும்
ஸ்வாதிக்கும் எல்லாமே செஞ்சேன். அபி என்னை சார்ந்து வளரல. அவன் உன்னை பற்றியே
வளர்ந்தான். எனக்கு அதுல எந்த வித கவலையோ வருத்தமோ இல்ல. ஆனா அவனோட ஒதுக்கம்
ஒரு கட்டத்துல, நான் செய்யறது தப்புன்னு எனக்கு புரிய வச்சது. ஆனா அதை சரிபண்ண
தெரியாம, இல்ல சரி பண்ணிக்க மனசு வராம இருந்தேன் அப்படிங்கறது தான் உண்மை. ஆனா
சசி வீட்டுக்காரரை பார்த்து பழகிய பின்னாடி தான் என் தப்பெல்லாம் எனக்கு முழுசா

உறைக்கிது. கண்டிப்பா வேற எதையும் மாற்ற முடியாது. ஆனா உன்மேல இத்தனை வருஷம்
காட்டாத அன்பை காட்ட முடியும் இல்லையா? அதை கண்டிப்பா செய்வேன்.”, என்று அவர் கரம்
பற்றி சொன்னதும், சங்கரிக்கு உள்ளே சிலிர்த்தது.
★★★★
��அகலாதே ஆருயிரே��
��65��

அபினவ் புது புது வழக்குகளில் பிசியாக, அவனுக்கு நிகராக ரிதுபர்ணா வேலையில் கவனமாக,
குடும்பம் என்னும் வண்டி சங்கரியின் புரிதலான நடவடிக்கையால் செவ்வனே சென்று கொண்டு
இருந்தது.

அன்று மாலை வேளையில் அபி ஒரு பைலை பார்த்துக்கொண்டு இருக்க, அவனருகில் வந்து
அமர்ந்த சங்கரி, அபி உன்கிட்ட கொஞ்சம் பேசணும். எப்போ நேரம் கிடைக்கும் என்று
கேட்டதும்,

என்னம்மா இப்படி சொல்றீங்க? உங்களுக்கு இல்லாத நேரம் யாருக்கு? இங்க வாங்க என்று
தாயை அருகில் அழைத்து அமர்த்திக் கொண்டவன், சொல்லுங்க மா என்று அவர் மடியில்
தலைசாய்ந்து கொண்டு கேட்டான்.

அபி, நீயும் ரிதுவும் சந்தோசமா இருக்கீங்கன்னு சொல்லாமலே எனக்கு தெரியும். உங்களுக்கு
நேரமே இல்லையேன்னு தான் கவலையா இருக்கு பா.

அம்மா.. அவளும் நானும் பார்த்து பேசி சிரிச்சா தான் எங்களுக்குள்ள அன்பு காதல்ன்னு நாங்க
நினைத்ததே இல்ல. அவளுக்கு நிறைய கேஸ் மா. நானும் அதே நிலையில் தான் ஓட்டிட்டு
இருக்கேன். எப்படியும் ஞாயிறு நாம எல்லாரும் ஒண்ணா தானே இருக்கோம்? என்றதும் அவன்
தலையை ஆதுரமாக கோதியவர்,

இந்த ஞாயிறு எல்லாரும் அண்ணன் வீட்டுக்கு போவோமா? என்றார் கண்கள் மின்ன!

அடேடே, என் மாமனார் வீட்டுக்கு நான் போக எவ்வளோ ரெக்கமண்டேஷன்!! என்று ஆச்சர்யம்
போல அபி கேலி செய்ய,

போடா அரட்டை.. அண்ணன் கிட்ட என்னவோ இருக்கு. இல்லனா உங்க அப்பா இப்படி
மாறுவாரா? சொல்லு. என்று கேட்டதும்,

வாஸ்தவம் தான் அம்மா. நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்ன்னு நெனச்சேன். நேத்து
நித்திலன் சாரை பார்த்தேன். உன்னை பற்றி தான் பேசிட்டு இருந்தார். அந்த சேவரி யூனிட்டை நீ
தனியா பார்த்துட்டு, அவருக்கு லாபம் மட்டும் அனுப்பறியாம். அவருக்கு கஷ்டமா இருக்காம்.
என்றதும்,

என்ன டா சொல்ற, நான் பல வருஷமா ங்க வேலை செய்யறேன். செய்யற வேலைக்கு அவர்
சம்பளம் தர்றார். அவ்ளோ தானே. என்னமோ பெருசா பேசறீங்க ரெண்டு பேரும் என்று அவர்
விழிக்க,

போனில் நித்திலனை அழைத்தான் அபி, சார், நீங்களே அம்மா கிட்ட பேசிக்கோங்க என்று
சொல்லி ஸ்பீக்கரில் போட,

அம்மா, நீங்க இந்த சேவரி யூனிட்டை எடுத்த பின்னால தான் எனக்கு நிறைய லாபம், சேவரி
செக்க்ஷன் மட்டுமே நம்ம நாலு கிளை திறந்தாச்சு. இதெல்லாம் உங்களால தானே. அதுனால,
நீங்க நான் சொல்றதை கேட்கணும். என்றார்.

இதை நீங்க கடையையே சொல்லி இருக்கலாமே தம்பி என்று கேட்ட சங்கரியிடம்,

சொன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அதான் என்று அவர் சொல்ல,
என்ன இனிமே வராதேன்னு சொல்ல போறீங்களா என்று ஆதங்கம் மேலிட கேட்ட சங்கரியின்
பேச்சில் சிரித்தவர், நீங்க எப்பவும் போல எல்லாத்தையும் பார்த்துக்கோங்க, அதெல்லாம் நான்
ஒன்னும் சொல்லல, ஆனா இனிமே சம்பளம் கிடையாது என்று சொன்னதும்,

நிம்மதி பெருமூச்சு விட்ட சங்கரி, கடவுள் புண்ணியத்துல என் பையனும் மருமகளும் நல்லாவே
சம்பாதிக்கிறாங்க. எனக்கு இப்போ காசு பணம் பிரச்சனை இல்லை தம்பி. எங்க வர
வேண்டாம்ன்னு சொல்லிடுவீங்களோ பயந்துட்டேன். என்று சொன்னதும், அபி வாய் விட்டு
சிரித்தான்.

அம்மா.. என்ன என்னை இப்படி நினைச்சிடீங்க? நான் அப்படி இல்லை என்று நித்திலனும்
சிரித்துவிட்டு, இனிமே சம்பளமா இல்லாம உங்க பங்கு தொகையா வாங்கிக்கோங்கன்னு சொல்ல
வந்தேன். என்று சொல்ல வந்ததை சொல்லி முடித்தார்.

தம்பி இதெல்லாம் ரொம்ப அதிகம் பா. என் வேலைக்கு சம்பளம் கொடுங்க போதும். என்று சங்கரி
பதறிவிட,

இது தான் அம்மா உங்களை உயர்த்தி இருக்கு. ஒருத்தர் ஒன்னு தர்றேன்னு சொன்னா இன்னும்
கொஞ்சம் சேர்த்து கொடுன்னு கேட்டு வாங்கற இந்த உலகத்துல, தர்றதை வேண்டாம்ன்னு
சொல்றீங்க பாருங்க. அது தான் எனக்கு உங்க கிட்ட ரொம்ப பிடிச்சது.
நான் ஏற்கனவே பங்கு பத்திரம் தயார் பண்ணி அபி கிட்ட கொடுத்துட்டேன். நீங்க கையெழுத்து
மட்டும் போடுங்க. போதும்.

சொல்லிவிட்டு நித்திலன் போனை வைத்து விட, என்ன அபி அவர் இப்படி சொல்றார். என்ற தன்
அன்னையை தோள் சாய்த்துக்கொண்ட அபி, அம்மா, அவர் தர்றதை வாங்கிக்கோங்க. அப்பறம்
நேரம் பார்த்து அவருக்கே செஞ்சுக்கலாம். அவர் மனசு வருத்தப்பட வேண்டாம் அம்மா.

சரிப்பா என்று எழுந்து, இந்த ரிது இன்னும் வரல, மணி பாரு எட்டு ஆகிப்போச்சு. வந்தா
சாப்பிட்டு நாளைக்கு அண்ணா வீட்டுக்கு போக சிலதை அவளோட சேர்த்து எடுத்து
வைக்கலாம்ன்னு நினைச்சேன் என்று சொல்லிக்கொண்டே முன்னால் போக,

பாருங்க அபி, அத்தை என்னை பத்தி உங்க கிட்ட சொல்லிக்கொடுக்கறாங்க. என்று
சிணுங்கியபடி உள்ளே வந்த ரிதுவின் காதை திருக்கியவர், உனக்கு ஆறு மணிக்கே போன்
பண்ணி வர சொன்னேனா இல்லையா என்று சங்கரி கேட்டதும்,

அச்சோ.. அம்மா. மாமியார் கொடுமை. இதை கேட்க ஆளே இல்லையா என்று ரிது தன் கையில்
இருந்த லத்தியை அபியை நோக்கி வீச, அதை கேட்ச் பிடித்தவன்,

என் பொண்டாட்டி தான் மா அசிஸ்டண்ட் கமிஷனர் நான் இல்ல. அவங்க கிட்ட சொல்லவா
என்று பல்லிடுக்கில் சிரிப்பை அடக்கி வம்பு செய்ய,

அபி சும்மா இரு என்று அதட்டல் போட்ட சங்கரி, நீ சொல்லு ஏன் லேட்டு என்று கேட்டார்
மருமகளிடம்.

அச்சோ அத்தை நான் வீட்டுக்கு போகலாம்ன்னு கிளம்பும்போது தான் ஒரு பொண்ணு
கம்பலைன்ட் எடுத்துட்டு வந்தா, அதை பார்த்து முடிச்சிட்டு வர லேட் என்று சிரிக்க,

ஏம்மா நீ என்ன இன்ஸ்பெக்டர் வேலையா பாக்கற? நீ சொன்னா அவங்க செய்ய போறாங்க
என்று சங்கரி சாதாரணமாக சொல்ல,

அப்படி இல்ல அத்தை. நாம கவனிக்கலைன்னா சரியா வராது. ரன் டூட்டி நேரத்துல நான்
காம்பரமைஸ் பண்ணிக்க மாட்டேன் என்று உறுதியான குரலில் சொல்ல,

என்ன சங்கரி நீ மருமகளை இப்படி கேள்வி கேட்டுட்டு இருக்க? போய் கிளம்புங்க என்று அனுப்ப
முனைந்தார் ராகவேந்தர்.

நீங்க எப்போ மாமா வந்தீங்க? என்று கேட்ட ரிதுவிடம், அம்மாவும் மகனும் கொஞ்சும்போதே
வந்துட்டேன். அப்படியே உங்க சேட்டையெல்லாம் ரசிச்சிட்டு இருந்தேன். என்று சொல்லிவிட்டு
அவர் நகர,

எங்க அப்பா கிளப்ப சொல்றீங்க என்று கேட்ட அபியின் குரலில் நடையில் தள்ளாட்டம் கொண்டு
அவர் திரும்ப,

பார்த்து மாமா என்று ஓடி வந்து தாங்கினாள் ரிது.

என்ன மாமா கவனமா நடக்க வேண்டாமா என்று கைத்தாங்கலாக சோபாவில் அமர்த்த,

அபி வேகமாய் அவர் அருகில் அமர்ந்து, டாக்டர் கிட்ட போகலாமா அப்பா என்று அவர் நெஞ்சை
நீவ, அழுகையில் வெடித்தார் ராகவேந்தர்.

அப்பா..

மாமா..

என்னங்க.. என்று ஆளாளுக்கு அலற,

அவரோ அழுகையை நிறுத்துவதாக இல்லை. என்ன மாமா உடம்புக்கு இன்னும் எதுவும்
வந்துட்டா என்ன செய்யறது? முதல்ல அமைதியா இருங்க என்று ரிது போட்ட அதட்டல் வேலை
செய்ய,

மெது மெதுவாக அழுகையை நிறுத்தினார். அபியின் கரத்தை இறுக்க பற்றிக்கொண்டவர்,
என்னோட எப்பவும் இதே போல பேசணும் அபி நீ என்று கேட்டதும் தான் அவர் அழுகையின்
காரணம் அனைவருக்கும் புரிந்தது.

மகள்களை மட்டுமே கொண்டாடும் மனிதர் என்று நினைத்த ஒருவரின் மனதில் மகன் மீதான
பாசமும் எதிர்பார்ப்பும் இருப்பதை உணர்ந்த மற்ற அனைவருமே நெகிழ்ந்து போனார்கள்.

அபி பதில் பேசாது தந்தையை அணைத்துக்கொண்டான். அவன் கண்களிலும் கண்ணீரின் சாயல்.

அனைவரும் உணர்ச்சிகளின் பிடியில் இருக்க, என்ன ஒரே கண்ணீர் மழையா இருக்கு. நான் வேற
காலைலையே குளிச்சிட்டேனே என்றபடி உள்ளே நுழைந்தார் நாராயணன்.

வாங்க அண்ணா என்று வாய் நிறைய வரவேற்ற சங்கரி, ஒன்னும் இல்ல, உங்க மாப்பிள்ளை
உங்க மச்சானை பார்த்து இன்னிக்கு தான் ஒழுங்கா பேசி இருக்கான். அதான் ஒரே ஆனந்தத்
தூரல்.

அப்படியா என்று அமர்ந்தவர், என்ன ரிதும்மா, இப்போ தான் ஆபிஸ்ல இருந்து வந்தியா? போய்
பிரேஷ் அப் பண்ணிட்டு வா என்று மகளை அனுப்பி விட்டு, ரிஷி என்று குரல் கொடுக்க,

இருங்க நைனா, நான் எல்லாத்தையும் எடுத்துட்டு உள்ள வர வேண்டாமா? நீங்க இந்த வீட்டு
மாப்பிள்ளை ஜாலியா வந்து உக்கார்ந்தாச்சு. நானும் அப்படி முடியுமா என்று அவரை
வம்பளந்தபடி வந்தான் ரிஷி.

என்ன டா இது என்று அபி எழுந்து அவன் கையில் இருந்த பைகளை வாங்க,

அட மாமாவே.. உங்களை எல்லாம் என்ன செஞ்சா தகும். இப்படி ரொமாண்டிக்கா இல்லாத
உங்க கூட எப்படி என் அக்கா காலம் தள்ளுறா, என்று அங்கலாய,

அவன் தலையில் பலமான குட்டு ஒன்று விழ, அம்மா.. என்று அலறியவனிடம்,

அம்மா தான், உன் அம்மாவே தான். வாயை பாரு, அக்கா வீட்டுக்காரர் ன்னு கொஞ்சமாவது
பயம் இருக்கா டா உனக்கு என்று சசி கேட்டுக்கொண்டே உள்ளே நுழைய, வாங்க அண்ணி
என்று அவரை அணைத்துக்கொண்டார் சங்கரி.

வாம்மா என்று ராகவேந்தர் எழ, உக்காருங்க அண்ணா. நாளைக்கு இவங்களுக்கு கல்யாணம் ஆகி
ஆஐ மாசம் ஆகபோகுதாம். ரிஷி ஒரு வாரமா அக்கா வீட்டுக்கு போகணும், கொண்டாடணும்.
அப்படின்னு சொல்லிகிட்டே இருந்தான். அதான்  வந்தோம் என்று சொல்லிக்கொண்டு பையில்
இருந்த புத்தாடைகளை வெளியே எடுத்து வைத்தார் சசி .

இதென்ன புதுசா அரையாண்டு பரிட்சை மாதிரி என்று சங்கரி கேட்க,

அதானே என்று அபியும் தாயின் தோளில் சாய்ந்தான். தள்ளிப்போடா டேய். கல்யாணம் ஆகி
ஆறு மாசம் ஆனதை மறந்திட்டு சுத்துற நீ. நான் என் என் மருமகனுக்கு தான் சப்போர்ட்
பண்ணுவேன். என்று ரிஷியை இழுத்து அருகில் நிறுத்திக்கொண்டார் சங்கரி.

அப்படி சொல்லுங்க அத்தை. என்று ஹேப்பை கொடுத்த ரிஷியை பின்னால் இருந்து
அணைத்தாள் ரிது.

அக்கா என்று அவனும் கொஞ்ச, டேய் டேய்.. இதெல்லாம் ரொம்ப ஓவர் டா. என்று குடும்பம்
மொத்தம் கலாட்டா செய்ய, வீடே ஒரு மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

ரிதுவின் போன் அடிக்கும் வரை சிரித்து கொண்டு இருந்தவர்கள், அவள் யோசனை முகமாக
போனை காதில் வைத்ததும்,

வேலை விஷயமாக ஏதும் இருக்குமோ என்று அமைதி காக்க,

ஹூர்ர்ரே. என்று அவள் குதித்த அதே நொடி..

ஹே… சூப்பர் என்று அபியும் ஒரு புறம் போனை பார்த்து குதிக்க ஆரம்பித்தான்.

1 thought on “அகலாதே ஆருயிரே-61-65”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *