Skip to content
Home » அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)

��அகலாதே ஆருயிரே��
��66��

“அபிம்மா…”, என்று ரிது துள்ளி வர, “டாலு”, என்று அபி குதித்துக்கொண்டு வந்தான்.

“யாரு போன்ல ஆருவா? சொல்லிட்டாளா?”, என்று அபி மகிழ,

“ஆமாங்க.. ஹர்ஷா ப்ரோ போன் பண்ணினாரா?” என்றது ரிதுவும் தன் மகிழ்வை வெளிப்படுத்த,
“என்னன்னு சொன்னா நாங்களும் சந்தோசப்படுவோம்ல”, என்று ராகவேந்தர் இடைப்புகுந்தார்.

“வேற என்ன மச்சான் இருக்கப் போகுது. ஆருஷி மாசமா இருப்பாளா இருக்கும்”, என்று
நாராயணன் இலகுவாக சொல்லிக்கொண்டே எழ,

“கரெக்ட் பா”, என்று அவரைக் கட்டிக்கொண்டாள் ரிது. “சரி நான் போய் அவளைப் பார்த்துட்டு
அப்பறமா இங்க வர்றேன்”, என்று அவர் கிளம்ப,

“நல்லா இருக்கே நீங்க சொல்றது? நானும் தான் ஆருவை பார்க்கணும்.”, என்று அவருடன்
இணைந்தார் சசி,

“சரி வா”, என்று இருவரும் கிளம்ப எத்தனிக்க, “இது நல்ல கதையா இருக்கே? நாங்க ஆருவை
பார்க்க வேண்டாமா? நாங்களும் வர்றோம்.”, என்று சங்கரியும் ராகவேந்தரும் கிளம்ப,

“என்னோட ஆரூ அக்காவை நான் பார்க்க வேண்டாமா?”, என்று ரிஷி முன்னால் வர,

“அட ச்ச.. வாங்க எல்லாரும் போகலாம். அதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் தேவையா?”, என்று
அபி சத்தம் போட்டபடி இரண்டு கால் டேக்சி சொல்ல, அது வருவதற்குள், சங்கரியும் சசியும்
ஆருவுக்கு சில உணவுப் பண்டங்களை எடுத்து வைக்க ஆரம்பித்தனர். அதற்குள் ரிதுவுக்கு போன்
வந்துவிட, அவள் அதை காதோடு பொருத்தியபடி வாசலில் நின்றாள்.

“மாம்ஸ்..”, என்று பின்னால் வந்து அணைத்த ரிஷியை கண்டு சிரித்து, “சொல்லு டா என் குட்டி
மச்சான்.”, என்று அபி கொஞ்ச,

“ஆரூ அக்கா குட் நியூஸ் சொல்லிட்டா. நீங்க எப்போ சொல்ல போறீங்க?”, என்று
கண்ணாடித்தான்.

“உன் அக்கா போஸ்டிங் எடுத்து இன்னும் முழுசா ஒரு வருஷம் கூட ஆகல, அதே போல நான்
ஆபிஸ் போட்டும் முழுசா ஆறு மாசம் ஆகல. அதுக்குள்ள கமிட் ஆனா, எங்களுக்கான அந்த
அழகான நேரத்தை அனுபவிக்க முடியாமல் ஒரு தவிப்போடவும், அலைப்புறுதலோடவும்
இருக்கணும். வாழ்க்கை எங்க டா போகுது? மெதுவா பெத்துக்கலாம். அதான் உன் செல்ல அக்கா
ஒரு குட்டி வாண்டை கொடுக்க போறாளே?”, என்று மகிழ்ச்சியாக சொன்னதும்,

“நீங்க சொல்றதும் சரி தான் மாமா. அக்கா ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு இந்த இடத்துக்கு
வந்திருக்கா. அதுல சாதிக்க அவளுக்கு நிறைய இருக்கும். செய்யட்டும்..”, என்று சொல்லிவிட்டு,
“நீங்க ரொம்ப கிரேட் மாமா”, என்று முத்தமிட,

“அட பக்கிகளா.. என்ன டா இப்படி பண்றீங்க?”, என்று ரிது ரிஷியின் தோளில் அடிக்க,

“ஆ… பார்த்தியா உன் புருஷனை விட்டுட்டு என்னை மட்டும் அடிக்கிற.. நீ எவ்ளோ மோசம். என்
மாமா தான் பெஸ்ட்”, என்று மீண்டும் அபியை முத்தமிட, ரிது சிரித்துக்கொண்டே அவனை
துரத்தினாள்.

“சரி மச்சான் இவங்க இப்படியே அடிச்சு விளையாடிக்கிட்டு இங்கேயே இருக்கட்டும் நாம போய்
ஆருவை பார்த்துட்டு வருவோம்.”, என்று நாராயணன் எழுந்து கொள்ள, “அப்பா”, என்று ரிது
சிணுங்கிய போது, அவள் போலீஸ் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். சிறு பிள்ளை
போல இருந்த அவளை நின்று ரசித்துக் கொண்டிருந்தான் அபி.

“அப்பறமா உன் பொண்டாட்டியை சைட் அடிக்கலாம். கொஞ்சம் இதெல்லாம் எடுத்துட்டு போய்
வெளில வை. அப்போ தான் கால் டெக்ஸி வந்தா கிளம்ப சரியா இருக்கும்.”, என்று சங்கரி
அவனை இடித்து விட்டுச் செல்ல, தலையை கோதியபடி சிரித்துக் கொண்டே அவைகளை
வாசலில் வைத்தான் அபி.

இங்கே இவர்கள் அனைவரும் ஆருஷியைக் காண ஆவலாக மகிழ்ச்சியோடு செல்ல, வாயிலில்
எங்கோ வெறித்தபடி நின்றிருந்த கோமதி நாயகத்தைக் கண்டு திடுக்கிட்டனர்.

“மாமா என்னாச்சு?”, என்று சசி ஓடிச்சென்று அவர் அருகில் நிற்க, “உச்.. என்ன சொல்றதுன்னு
தெரியல மா. ஆனா இந்த வீட்டுல மட்டும் சந்தோசம் நிலையா கொஞ்ச நேரம் கூட நிற்காது
போல”, என்று வானத்தை அவர் பார்க்க,

சசி, சங்கரி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, “ஐயோ ஆருவுக்கு ஏதாவது?”, என்று
பதற, “கடவுளே.. அப்படி எல்லாம் இல்லம்மா.. எல்லாம் என் மருமக குணம் தான். ஆரும்மா
நல்லா இருக்கா. ஆனா இப்போ கவலையா இருக்கா. உள்ளே போங்க. நான் ஒருத்தன்..
வாசலிலேயே நிற்க வச்சு பேசிட்டு இருக்கேன்.”, என்று அவர்களை உள்ளே அழைத்துச் செல்ல,
பெரியவர்கள் இருக்க தாங்கள் எதுவும் பேச வேண்டாம் என்று ரிதுவும் அபியும் கண்களால்
பேசிக்கொண்டு உள்ளே நுழைந்தனர்.

ஹாலில் சோபாவில் சாந்தலட்சுமி கோபமாக அமர்ந்திருக்க, எதிர் இருக்கையில் சோமு தவிப்பாய்
வீற்றிருந்தார்.

“என்ன தான் வேணுமாம் லதாவுக்கு. எங்க அவ?”, என்று எடுத்த எடுப்பில் சசி கோபம் கொள்ள,
“வந்து உக்காருங்க”, என்று எழுந்துகொண்டார் சோமு.

“இல்ல அண்ணா நானும் பார்க்கறேன், ஆரூ அன்பான பொண்ணு. அவ கிட்ட இவளுக்கு என்ன
பிரச்சனை? ஹர்ஷா அவளை விரும்பி கல்யாணம் பண்ணிகிட்டது ஆருவோட தப்பா? அவ
பையனை பேச வேண்டியது தானே? அடுத்த வீட்டு பொண்ணுன்னா மாசமா இருக்கறது

தெரிஞ்சும் பிரச்சனை செய்வாளோ? அப்படி என்ன வெறுப்பு எங்க ஆரூ மேல?”, என்று சசி
கோபமாக கேட்கவும்,

“வா கலா. என்னமோ நீ தான் உங்க ஆருன்னு சொல்லிக்கிட்டு சுத்துற. அவ மாசமான
விஷயத்தை அவங்க அப்பா அம்மாக்கு சொல்லி முழுசா நாலு மணி நேரம் ஆச்சு. அவங்க
வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் அரை மணி நேரம் கூட ஆகாது. பொண்ணு மேல அக்கறை இருந்தா
ஓடி வந்திருப்பாங்க. உங்களுக்கு தகவல் சொன்ன ஒரு மணி நேரத்துல நீங்க எல்லாரும்
வரலையா? ஆனா பாரு இன்னும் அவங்க அப்பா அம்மா வரல. இதுல அவ அம்மாவுக்கு பெரிய
பணக்காரின்னு மிதப்பு வேற.”, என்று சசிகலாவை வரவேற்றத்தோடு ஆருஷியின் தாய்
தந்தையை லதா குற்றப்படுத்த,

“என்ன பேசுற லதா நீ? நாங்க எல்லாரும் ஒரே இடத்துல இருந்தோம். இன்னிக்கு எல்லாருமே
பிரீ. அதான் சொன்னதும் கிளம்பி வந்துட்டோம். அவங்களும் அப்படி இருப்பார்களா? ஆளுக்கு
ஒரு வேலைன்னு ஒவ்வொரு பக்கம் இருப்பாங்க. வீட்டுக்கு வந்ததும் மகளை பார்க்க
வரப்போறாங்க. இதுக்கெல்லாமா நீ ஆருவை பேசுவ? எப்போ லதா நீ இப்படி மாறின?”

“இங்க பாரு கலா, எனக்கு அவளைப் பேச அவசியம் இல்லை. நானும் சொல்லிகிட்டே
இருக்கேன். வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்கச் சொல்லி. இப்போ குழந்தையும் வந்தாச்சு.
இனியாவது என் பேச்சைக் கேட்க சொன்னேன். அதுக்கு அவ அவ்ளோ பேசுறா. இவனும் வாயை
மூடிக்கிட்டு இருக்கான்.”, என்று மகன், மருமகள் இருவரையும் குறை கூற,

“எனக்கு புரியல ஆன்ட்டி. அவ படிச்சது உங்க வீட்ல உக்கார்ந்து பாத்திரம் தேய்க்கவா?”, என்று
என்றும் இல்லாத கோபத்தோடு ரிதுபர்ணா முன்னே வர,

“அபர்ணா”, என்று அவளை பின்னுக்கு இழுத்தான் அபி.

“நீங்க இருங்க அபிம்மா. நானும் பெரியவங்க இருக்காங்க. நாம பேசக்கூடாதுன்னு தான்
இருந்தேன். இப்போ கேட்டே ஆகணும் எனக்கு. நீங்க சொல்லுங்க ஆன்ட்டி. ஆரூ எதுக்கு
வீட்டுலயே இருக்கணும்?”, என்று கேட்க,

“இவ இங்க இருந்து வேலைக்குப் போகவா கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்தோம்?
மருமகள்ன்னா வீட்டுல பொறுப்பா எல்லா வேலையும் செய்யணும். ஆனா இவ, எழுந்து, குளிச்சு,
வேலைக்கு போயிட்டு, வந்து சாப்பிட்டு தூங்கிடறா. இது எதுக்கு கல்யாணம், குடும்பம்?”, என்று
லதா கேட்க, அவரை முறைத்த சாந்தலட்சுமி ஏதோ பேச வாய் திறக்க, அவரை கைப்பற்றி

நிறுத்திய ரிது சுற்றும் முற்றும் பார்த்து, ஆரு இல்லாததைக் கண்டு, “ஆரூ”, என்று குரல்
கொடுத்தாள்.

அவர்களின் படுக்கை அறையில் இருந்து வெளிவந்த ஆருஷியின் முகம் செக்கச்செவேல் என்று
சிவந்து அழுது வீங்கி இருக்க, அவளை ஓடிச்சென்று அணைத்தவள், அவள் வயிற்றில் கை
வைத்து, “குட்டிக்கண்ணா நான் தான் உன்னோட அத்தை. என் குரலை ஞாபகம்
வச்சுக்கோங்க.”,என்று சொல்லி முத்தமிட்டு தான் முதலில் வந்தது குழந்தைக்காகத் தான் என்பதை
நினைவில் கொண்டு செயலாற்றி விட்டு, ஆருவின் தலையில் குட்டினாள்.

“இனிமே அழுத, உன்னை கொன்னுடுவேன். எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அழுகிறது தான்
அப்படின்னா எல்லாரும் கண்ணுல தண்ணியை வாட்டர் ஃபால்ஸ் மாதிரி ஊத்திக்கிட்டே அலைய
வேண்டியது தான். அதனால இனி அழாம இரு. எனக்கு சுகந்தன் சாரை டாகில் பண்ணின ஆரூ
தான் வேணும். இந்த அழுமூஞ்சி ஆரூ வேண்டாம்.”, என்று கோபமாகச் சொல்லிவிட்டு,

லதா பக்கம் திரும்பியவள், “இப்போ என்ன உங்களுக்கு? உங்க மருமக வீட்டை பொறுப்பா
பார்த்துக்கணும். அவ்ளோ தானே?” என்று கேட்டுவிட்டு, ஆருவிடம்,

“ஒரு மாசம் லீவ் அப்பிளை பண்ணு டி. நான் சொல்றதை செய். உன் அத்தைக்கு பிடிச்சது போல
நட” என்று சொல்லிக்கொண்டே கண்ணடித்தாள்,

“பிரச்சனை முடிஞ்சதா? இப்போ எல்லாரும் சந்தோசமா பேசலாமா?” என்று ரிது சிரிக்க, அவள்
சொன்னதன் பொருள் புரியாமல் இருந்தாலும், யோசிக்காமல் செல்பவள் இல்லை என்று லதா
உட்பட அனைவரும் நம்பியதால் அந்த விஷயத்தை அப்படியே விட, லதா படப்போகும் பாடு
அறியாமல் அனைவரும் மகிழ்ச்சியாக பேச ஆரம்பித்தனர்.

சங்கரியும் சசியும் அருஷிக்கு பிடித்த உணவுகளை வழங்கிட, அவளும் மகிழ்ச்சியாகப்
பெற்றுக்கொண்டு அவர்களிடம் சீராடினாள்.

ஹர்ஷா யோசனை முகமாய் நின்றவன், அபியை வரச் சொல்லி கண்காட்டிச் செல்ல, அவனோ
மனைவியையும் இழுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.

“என்ன தங்கச்சி நீங்க? அவ ரொம்ப ஒடஞ்சு போய் இருக்கா. வீக்கா வேற இருக்கா, இப்போ
போய் வீட்டு வேலையெல்லாம் லீவ் போட்டு செய்ய சொல்றது நல்லாவே இல்ல. அவ பாவம்”,
என்று தன் மனையாளுக்காக அவன் பேச,

“அவளை உங்களுக்கு முன்னாடியே எனக்கு தெரியும். இது அவளை கஷ்டப்படுத்த இல்ல. உங்க
அம்மாவை சரி பண்ண. இன்னொரு முக்கியமான விஷயம்..”, என்று அவள் அபி முகத்தை பார்க்க,

அவனோ புரிந்துகொண்டவனாக ஹர்ஷாவின் தோள் பற்றி, “பங்கு உன் பிஸ்னசை இப்போவே
நீ ஆரம்பி டா.”, என்று சொல்ல,

“டேய் நான் என்ன பேசுறேன் நீங்க என்ன சொல்றீங்க? பிசினஸ்க்கும் வீட்டு பிரச்சனைக்கும்
என்ன டா சம்மந்தம்?”

“இருக்கு பங்கு. அவ ஏதோ ஒரு ஆபிஸ்ல வேலை செய்யறதால தானே உன் அம்மா வேலையை
விட சொல்றாங்க? இதே அவ உன்னோட தொழிலுக்கு உதவி செய்ய வர்றது போல உன்கிட்ட
வேலை செய்தா, அவங்களால பேச முடியாது. அதே நேரம் வீட்டு வேலையை ஆருவும் அவளுக்கு
முடியற நேரத்துல செஞ்சுடுவா. வீட்லயும் பிரச்சனை இருக்காது.”, என்று அபி சொல்ல,

“நல்ல யோசனை தான். ஆனா உடனே பிசினஸ் ஆரம்பிக்க கைல பணம் இல்லை டா. லோன்
போட்டா கூட கைக்கு வர நாலு மாசம் ஆகும். அது மட்டும் இல்ல. ஆபிஸ் போட்டு ரிசர்ச் ஒர்க்
பண்ணி, அதை அப்பறமா மார்க்கெட் பண்ற வரைக்கும் லாபம் இருக்காது. வீட்டுக்கு பணம்
கொடுக்கணும் இல்லையா?”, என்று ஹர்ஷா கவலை கொள்ள,

“நான் இன்னும் சம்பாதிச்சிட்டு தான் ஹர்ஷா இருக்கேன். அதுனால வீட்டை பற்றி யோசிக்காம
நீ உன் பிஸ்னசை ஆரம்பி”, என்று படியில் ஏறி வந்து சொன்னார் சோமு.

“ஆரம்ப கட்ட பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் ப்ரோ. இப்போ தான் ரிஷி படிக்கிறான்.
அவனுக்கு உடனே பெரிய தொகை எதுவும் தேவை இல்லை. அதனால நான் அப்பா கிட்ட
சொல்லி வீட்டை மார்கேஜ் பண்ணி பணம் அரேஞ் பண்ணறேன். அப்பறம் கொஞ்சம் ஜ்வல்ஸ்
இருக்கு.”, என்று நெற்றியை கீறிக்கொண்டே ரிது கூற,

“படிப்புக்கு கொடுத்த வீட்டை தொழிலுக்கு தர மாட்டோமா?”, என்று அங்கே இணைந்தார்
கோமதி நாயகம்.

“தாத்தா”, என்று தழுதழுத்த அவனை அணைத்தவர், “பிரெண்ட்ஸ் இவங்களே உனக்காக அவங்க
வீட்டை அடமானம் வைக்கிறேன்னு சொல்லும்போது, நான் உன் தாத்தா டா.”, என்று பேரனை
இறுக்கிக் கொண்டார்.

அபி, “நான் கம்பெனி ரெஜிஸ்ட்டிரேஷன், லீகல் பார்மாலிட்டி எல்லாம் பார்த்துக்கறேன். நானும்
பணம் சேர்த்து வச்சிருக்கேன். அதனால நீ யோசிக்காம வேலைல இறங்கு பங்கு.”, என்று
சொல்ல, அபியை அணைத்துக் கொண்டார் சோமு.

“நீ அவனுக்கு நண்பனா கிடைக்க அவன் கொடுத்து வச்சிருக்கணும் அபி”, என்று அவர்
உணர்ச்சிவசப்பட,

“அப்பா அப்படி எல்லாம் சொல்லாதீங்க. நாங்க ரெண்டு பேருமே கொடுத்து வச்சவங்க தான். என்
பங்கு எப்பயும் கிரேட் தான்.”, என்று அபி ஒரு கரத்தில் சோமுவையும் மற்றொரு கரத்தில்
ஹர்ஷாவையும் அணைக்க, ஹர்ஷாவுடன் கோமதிநாயகமும் இணைய, ஆண்கள் நான்கு பேரின்
உணர்ச்சிகரமான பேச்சை கேட்டு உள்ளே மகிழ்ந்தாலும், லதாவை வழிக்கு கொண்டு வருவது
எப்படி என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள் ரிதுபர்ணா.
★★★★★

��அகலாதே ஆருயிரே��
��67��

ரிதுவின் மொத்த குடும்பமும் மீண்டும் வீடு நோக்கி செல்ல, வழியில் அவளிடம் சங்கரி கவலை
கொண்டவராக, “ஏன் ரிது இந்த ஆரூ பொண்ணு வேலை எதுவும் செய்ய மாட்டாளா? கொஞ்சம்
கூட மாட நின்னாக் கூட போதுமே?”, என்று சொல்ல, கொஞ்சம் இருங்க அத்தை என்று சொல்லி
தன் போனில் இருந்து சாந்தலட்சுமிக்கு அழைத்தவள், “பாட்டி ஆரூ வீட்ல வேலை செய்யறதே
இல்லையா?”, என்று கேட்டுவிட்டு போனை ஸ்பீக்கரில் போட, அவர் சொன்ன பதில் காரில்
இருந்த சங்கரி, சசி , அபி, ரிது நான்கு பேருமே கேட்டனர்.

“அவ காலைல எழுந்து கிட்சன் ஒதுங்க வைத்து, காபி போட்டு மாவு அரைச்சு வச்சிட்டு தான்
போறா. அவ டிபன் செய்யறேன்னு தான் சொன்னா. நான் தான் வேலைக்கு போற பொண்ணை
கசக்கிப் பிழிய விரும்பாம விட்டேன்.” அவளோட, ஹர்ஷாவோட எல்லா வேலையின் சரியா

செய்யறா. சனி ஞாயிறுல டேபிள், டி.வி எல்லாம் டஸ்ட் எடுத்துடறா.. வேலைக்கு போகற
பொண்ணு இன்னும் என்ன வேலை செய்யணுமாம் லதாவுக்கு. அதான் இன்னிக்கு லதாவை
பிடிச்சு நல்லா திட்டி விட்டேன். ஆனா அவ நான் இதை விட வேலை செய்வேன் அத்தைன்னு
பதில் சொல்றா. எனக்கு அப்பறம் பி.பி எகிறீடும். அதான் பேசாம விட்டுட்டேன்.”, என்று
வேகவேகமாக பாட்டி சொல்ல,

“எனக்கு ஒரு ஐடியா பாட்டி, அவளை லீவ் போட சொல்லி இருக்கேன். அப்பறம் நான் சொல்ற
படி செய்யுங்க. லதா ஆன்ட்டி சரியா வருவாங்க.”, என்று சொல்ல,

“காபில மிளகாய் தூள் போடக் கூட நான் ரெடி”, என்று பாட்டி சொல்ல,

“ஐயோ நான் சில்லி சூனியம் வைக்கிற ஆள் இல்லை பாட்டி”, என்று ரிது சிரித்தாள்.

“இல்லம்மா எனக்கே கோவம் வருது. நான் மூத்த தலைமுறை நான் விட்டுத் தர்றதுல பாதி லதா
புரிஞ்சு நடந்தா கூட வீடு நிம்மதியா இருக்கும். ஆருவும் தங்கமான பிள்ளை. அவளை
கடுப்படிச்சா தான் அவளும் பேசுறா.”, என்று பேத்திக்கு சார்பாக பேசினார் அவர்.

“விடுங்க பாட்டி. ஊர் உலகத்துல இருக்கிற மருமகள் அருமையை புரிய வச்சா சரியா வரும்.
அதுக்கு நான் கேரண்டி.”, என்று ரிது சொல்ல,

“அவ இந்த நேரத்துல சந்தோசமா இருக்கணும். அது தான் எங்க அடுத்த தலைமுறைக்கு நல்லது.”,
என்று ஒரு பெருமூச்சோடு சொல்லிவிட்டு போனை வைத்தார் சாந்தலட்சுமி.

அபியை ரிது பார்க்க, அவனோ, “நான் சொல்றேன் அபர்ணா ஹர்ஷா கிட்ட. சீக்கிரம் ப்ராஜெக்ட்
ஆரம்பிச்சிட்டா ஆருக்கு பிரச்சனை இல்லாம இருக்கும்.”, என்று சொல்லிவிட்டு தன் போனில் சில
தளங்களை பார்வையிட சென்று விட்டான் அபி.

வீட்டை நெருங்கும் வேளையில் ரிதுவுக்கு அலுவலகம் வரச் சொல்லி போன் வர, “அத்தை நான்
கமிஷனர் ஆபிஸ் வரைக்கும் போயிட்டு வந்திடறேன்.”, என்று சங்கரியிடன் தகவல் சொன்னவள்,
முதல் ஆளாக காரை விட்டு இறங்கி தன் போலீஸ் ஜீப் ட்ரைவரை போனில் அழைத்துக்
கொண்டே வீட்டிற்குள் சென்றாள்.

அவள் நடையில் பதற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அதைக் கண்ணுற்ற அபி, இரண்டு
கேப்களுக்கும் பணத்தை கொடுத்துவிட்டு வேகவேகமாக மாடியில் இருந்த அவர்கள் அறைக்குள்
நுழைய, காக்கி உடையில் தயாராக நின்றவள் தலை வாரிக்கொண்டு இருந்தாள்.

“டாலு”, என்று அவன் அவளை நெருங்க, “அபிம்மா இன்னிக்கு காலைல ஒரு டீன் ஏஜ் பொண்ணு
மிஸ்ஸிங் கேஸ் வந்தது. இப்போ அதே அபார்ட்மெண்ட்ல ஒரு குழந்தை மிஸ்ஸிங். எனக்கு
என்னவோ டவுட்டா இருக்கு. நான் கமிஷனர் ஆபிஸ் போயிட்டு ஸ்பாட்க்கு போவேன். முடிஞ்சா
நீங்க நேரா ஸ்பாட் போய் வேறு தகவல் கிடைக்குதா பாருங்க. போலீஸ் கிட்ட சொல்லாத, இல்ல
சொல்ல பயப்படுற விஷயத்தை சிலர் வெளி ஆட்கள் கிட்ட தைரியமா சொல்லுவாங்க. எனக்காக
செய்ய முடியுமா? அந்த குழந்தைக்கு ஏழு வயது தான் ஆகுது அபி.”, என்று சொல்லிக்கொண்டே
தலை பின்னி, கேப் வைக்க வசதியாக கொண்டையிட்டாள்.

“கண்டிப்பா பண்றேன் டாலு. ஆனா இங்க வாயேன்.”, என்று அவளை அருகே அழைத்தவன்,

“எவ்ளோ பெரிய கேஸா இருந்தாலும் எப்பயும் நீ நிதானமா தான் இருக்கணும். பதற்றம் நம்மை
சிதற வைக்கும். நான் சொல்லித் தெரியணுமா உனக்கு?”, என்று அணைத்துக்கொள்ள, அவளும்
அவன் அணைப்பில் கட்டுண்டவளாக,

“குழந்தை அதுவும் அதே அபார்ட்மெண்ட் என்று சொன்னதும் பதற்றம் வந்துடுச்சு. இனி இப்படி
இல்லாம பார்த்துக்கறேன்.”, என்று உடையை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, தன் லத்தியையும்
தொப்பியையும் எடுத்துக்கொண்டு கீழே இறங்க, அந்த அபார்ட்மெண்ட் வாசி போல தெரிய, ஒரு
கேசுவல் உடையில் தன்னை புகுத்திக்கொண்டு ரெக்கார்டர், ஹிடன் கேமராவோடு கிளம்பி கீழே
வந்தான் அபி.

கீழே அந்த இரவு நேரத்தில் ரேகா வந்து ஹால் சோபாவில் அமர்ந்திருக்க, ரிது ஒரு சேரை போட்டு
அமர்ந்து ஷூவுக்கு லேஸ் கட்டிக்கொண்டு இருந்தாள்.

“இந்தா ரிது. இந்த ஹார்லிக்ஸ் குடுச்சிட்டு போ. சாப்பிட தான் நேரம் இல்லன்னு சொல்லிட்ட”,
என்று சங்கரி நீட்ட, இன்முகமாக பெற்றுக்கொண்டவள்,

“கொஞ்சம் சீரியஸ் கேஸ் அத்தை. உடனே போகணும்.”, என்று சொல்லிக் கொண்டே மீண்டும்
வாகன ஓட்டியை அழைக்க, அவர் வாசலுக்கு வந்துவிட்டதாக தகவல் தந்தார்.

தன் தாய், தந்தை, தம்பியை கண்டு தலையசைத்தவள், மாமா, அத்தையிடம் வாய் விட்டு சொல்லி,
கணவனிடம் கண்களால் விடை பெற்றுக்கொள்ள, ரேகா என்னும் ஒருத்தி அங்கு இருப்பதாகவே
அவள் பாவிக்கவில்லை.

அவள் வெளியே செல்ல, அபியும் தன் வண்டி சாவியை எடுத்துக்கொண்டு அன்னையிடம்,
“அம்மா ஒரு முக்கியமான விஷயமா கிளம்புறேன். வர லேட் ஆகும். முடிஞ்சா அபர்ணாவோட
தான் வருவேன்.”, என்று சொல்லிக்கொண்டு செல்ல,

“அவளை நீ கண்டிக்க மாட்டியா அம்மா? மணி பாரு ராத்திரி பத்து. இப்போ போய் வெளில
போறா. இவனும் பின்னாடியே போறான். என்ன போலீசுக்காரிக்கு இவன் காவலா?”, என்று
எண்ணெயில் இட்ட அப்பளமாக ரேகா பொறிய, சசிக்கு கோபம் வந்தாலும் அண்ணன் மகள்
என்று பொறுமை காத்தார்.

சங்கரி அவளை ஒரு பொருட்டாக கருதாமல், “அண்ணி சாப்பிட வாங்க. நேரம் ஆகுது. நாம
வேலையை முடிச்சிட்டு மொட்டை மாடிக்கு போயிடலாம். என் மருமகன் கூட நிறைய 
பேசணும்.”, என்று ரிஷியை கைப்பற்றி உள்ளே அழைத்து செல்ல, கடுப்பான ரேகா தந்தையிடம்
புகார் அளித்தாள்.

“அப்பா பாருங்க, நான் பேசிக்கிட்டே இருக்கேன் என்னை கண்டுக்காம போறாங்க.”, என்று
சொல்ல,

“என்னம்மா செய்யறது? பதில் சொல்ல ஆசைதான். ஆனா சொன்னா நீ கோவப்படுவ.”, என்று
நாராயணன் பதில் தர,

“என்ன உங்க பொண்ணுக்கு சப்போர்ட்டா? அதெல்லாம் உங்க வீட்டுல வச்சுக்கோங்க. இது
எங்க வீடு. இப்படி கண்ட நேரத்துல வெளில போறா அவ அதைக் கேட்க வாய் இல்ல
உங்களுக்கு? பொண்ணா வளர்த்து வச்சிருக்கீங்க?”, என்று ரிது மீது உள்ள கோபத்தை
நாராயணன் மீது ரேகா காட்ட, அவரோ சிரித்த முகம் மாறாமல்,

“இதுவும் என் வீடு தான்ம்மா. அவ வேலையா தானே வெளில போறா. அவ வேலை தெரிஞ்சு
தானே கல்யாணம் பண்ணிக்கிடீங்க.”, என்று கேட்டு சிரிக்க,

“சும்மா சிரிக்காதீங்க. உங்க சிரிப்பை பார்த்தாலே எரிச்சலா வருது”, என்று முகத்தை சுளிக்க,
அடுத்த நொடி கண்கள் இருள சோபாவின் கடைசியில் இருந்தாள் ரேகா.

தன்னை அறைந்தது யார்? என்று தலையை உதறி, கண்களை சரி செய்துகொண்டு பார்த்தவள்
திடுக்கிட,

அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தார் ராகவேந்தர்.

“என்ன விட்டா பேசிக்கிட்டே போற? அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை. என்னோட தங்கச்சி
வீட்டுக்காரர். ஒரு மரியாதையே இல்லாம பேசிக்கிட்டு இருக்க. நீ கூட தான் ஒன்பது மணிக்கு
மேல இங்க வந்திருக்க. நான் உன்னை தப்பா பேசினேனா? என் மருமக வேலை அப்படி. அவ
வீட்டுக்குள்ள முடங்கிட்டா தப்பு பண்றவங்களை கண்டு பிடிக்கிறது யாரு? உன்னை இதே போல
அப்பப்போ ரெண்டு அறை விட்டு வளர்த்து இருக்கணும். அப்போ நீ இப்படி பெரியவங்களை
மரியாதை இல்லாம பேசி இருக்க மாட்ட. என்னை சொல்லணும்.”, என்று அவர் தன்னையே
அடித்துக் கொள்ள கையை உயர்த்த அதை ஊகித்தவராக நாராயணன் அவர் கரத்தை எட்டிப்
பிடித்தார்.

“என்ன பண்றீங்க மச்சான் நீங்க? நம்ம பொண்ணு தானே? பேசினா பேசிட்டு போகுது விடுங்க”,
என்று அவரை சமாதானம் செய்ய,

அவரோ, தன் செல்போனை தேடி எடுத்தவர், அறைக்குள் செல்ல அவர் பின்னோடு
நாராயணனும் உள்ளே சென்றார்.

நடந்த அனைத்தையும் பார்வையாளர்களாக கண்ட சங்கரி, சசி, ரிஷி மூவரும் ஒரு தோள்
குலுக்கலுடன் நகர்ந்து விட, அந்த பெரிய ஹாலில் தனித்து நின்ற ரேகா அவமானமாக
உணர்ந்தாள். தன்னை தன் தந்தை அடிக்க நாராயணனே காரணம் என்று அவள் அவர் மேல்
கோபத்தை வளர்க்க, அவரோ ராகவேந்தரின் கோபத்தையும் அவர் ரேகாவுக்காக ஏற்பாடு செய்த
ஒன்றை வேண்டாம் என்று சொல்லி வாதாடிக்கொண்டு இருந்தார்.

“நீங்க சும்மா இருங்க மாப்பிள்ளை. நான் விக்னேஷ் மாப்பிள்ளை கிட்ட பேசிட்டேன்.அவரும்
சரின்னு சொல்லிட்டார். நாளைக்கு அவரும் வருவாரு. நான் சொன்னா சொன்னது தான்.”, என்று
உறுதியோடு சொல்ல, நாராயணன் தன்னால் ஒரு பிரச்சனை வரவேண்டுமா? என்று நொந்து
கொண்டார்.

அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு பரபரப்பாக காட்சியாளித்தது. அதை புதிய ஆட்கள் யாரும்
நெருங்க முடியாமல் போலீஸ் ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வைத்திருந்தது. அதனால்
வெளியே இருந்த டீக்கடையில் அமர்ந்திருந்தான் அபி. அந்த கடைக்காரரிடம் அவன் பேச்சுக்
கொடுக்க, அவரோ, “காலைல காணோம்ன்னு சொன்ன பொண்ணு ரொம்ப சாந்தமான
பொண்ணு தம்பி. தலையை உசத்தி கூட பார்க்காது. அவ்ளோ அமைதி. எங்க போச்சுன்னே
தெரியல. இத்தனைக்கும் அந்த அபார்ட்மெண்ட்ல பேச்சலர் பசங்களை அவங்க தங்க
அனுமதிக்கிறதே இல்ல.”, என்று சொல்ல,

“அண்ணா இப்போ ஏதோ குழந்தையை காணோமாமே?”, என்று டீயை வாயினருகில்
வைத்துக்கொண்டு அபி கேட்க,

“அந்த குட்டிப் பொண்ணு சரியான வாலு தம்பி, ஒரு இடத்துல நிற்காது. எப்பபாரு பால் போட்டு
விளையாடிக்கிட்டே இருக்கும். இல்லனா சைக்கிள் எடுத்துட்டு பார்க்கிங் முழுக்க சுத்தும்.
என்னவோ அதை சாயங்காலம் விளையாட போனதுக்கு அப்பறம் யாருமே பார்க்கலையாம்.”,
என்று சொல்லிக்கொண்டே, “நீங்க எந்த ஏரியா தம்பி, புதுசா இருக்கீங்க?”, என்று கேட்க,
“பக்கத்து தெரு அண்ணா. அங்க கடை இல்லைன்னு இங்க வந்தேன். ஒரே கூட்டமா போலீஸ்
இருக்கவும் என்னவோன்னு ஒரு ஆர்வம்.” என்று பேசிக் கொண்டே சில தகவல்களை பெற்றான்.
அப்போது,

அந்த அபார்ட்மெண்ட் வாசலில் ரிதுவின் ஜீப் வந்து நின்றது. அவள் கம்பீரமாக இறங்கி உள்ளே
செல்ல அவளுக்கு வணக்கம் சொன்னவர்களை கண்டு தலையசைத்தவள், அங்கே குழந்தையின்
சைக்கிளை பிடித்து அழுது கொண்டிருந்த பெண்ணைக் கண்டு பரிதாபம் வந்ததால், அருகே
சென்று அவளோடு அமர்ந்தவள்,

“நான் ரிதுபர்ணா. ஏ.சி.பி. நான் கேட்கற தகவலை நீங்க சரியா யோசிச்சுக் கொடுத்தா, எவ்வளவு
சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தையை மீட்டு கொண்டு வந்துடலாம்.”, என்று
ஆறுதலும் அதே நேரம் அவர்களின் கடமையை உணர்த்தும் குரலில் ரிது கூற,

“கேளுங்க மேடம்.”, என்றாள் அந்த குழந்தையின் தாய்.

“தினமும் குழந்தை தனியா தான் விளையாடுவாளா?”

“எப்பவும் எதிர்வீட்டு சாகர் வருவான். இன்னிக்கு அவனுக்குக் காய்ச்சல். அதனால அவன் வரல.
நான் இவளை போக வேண்டாம்ன்னு சொன்னேன். ஆனா அழுது அடம் பிடிச்சு போனா..”,
என்று சொல்லியபடியே கண்ணீர் விட,

“ஓஹ். காலைல காணாம போன காலேஜ் பொண்ணுக்கும் உங்க பொண்ணுக்கும் ஏதும் பழக்கம்
இருக்கா?”, என்று கேட்க,

“இல்ல அந்த பொண்ணு ரொம்ப அமைதி. யாரோடவும் அதிகம் பேசாது. பாப்பாவை பார்த்தா
சிரிப்போடு நகர்ந்து போயிடுவா. அவ்ளோ தான்.”

“ம்ம். சரி குழந்தை காணாம போனது உங்களுக்கு எப்போ தெரியும்?”

“எப்பவும் ஏழு மணிக்கு விளையாடிட்டு வீட்டுக்கு வர்ற பொண்ணு ஏழரை ஆகியும் வரல.
பால்கனி வழியா சத்தம் கொடுத்துட்டு பத்து நிமிஷம் வெயிட் பண்ணினேன். அப்பவும் வரல.
பயம் வந்து எட்டு மணி கிட்ட கீழ வந்து தேடினேன். சைக்கிள் மட்டும் தான் இருந்தது. அப்பறம்
நான் என் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி, எல்லார்கிட்டையும் பாப்பா பற்றி கேட்டோம். ஒரு மணி
நேரமா தேடியும் ஒன்னுமே புரியல. அதான் போலீஸ்ல சொன்னோம்.”, என்று கண்ணீரோடு
பேச,

“ம்ம்..சரி கண்டிப்பா நாளைக்கு விடியல் உங்க பொண்ணு கூட தான். அழுகாம, நம்பிக்கையோட
காத்திருங்க.”, என்று சொல்லிவிட்டு, செல்போனில் அபிக்கு பேச, அவன் சொன்ன விஷயங்களை
கருத்தில் கொண்டு அபார்ட்மெண்ட் செக்ரெட்டாரியை சந்திக்க அழைக்க, எஸ்.ஐ அவளை
சி.சி.டி.வி அறைக்கு அழைத்துச் சென்றார்.
★★★★★

��அகலாதே ஆருயிரே��
��68��

துணை ஆய்வாளர் காட்டிய சி.சி.டி.வி பதிவுகளைக் கண்ட ரிதுபர்ணாவின் மனதில் போனில் அபி
பேசிய விஷயங்கள் வலம் வரத் துவங்கின.

அருகில் நின்றிருந்த செக்ரெட்டாரியை பார்த்து, “ஏன் லிப்ட்க்கு வெளில, லிப்ட்ல இருக்கிற
கேமரா புட்டேஜ் காணோம்?”, என்று கேட்க, அவரோ விழித்தார்.

“மேடம் சி.சி.டி.வி ஒன்னை வச்சத்தோட சரி, எனக்கு இந்த டெக்னாலஜி பத்தி ஒன்னுமே
தெரியாது.”, என்று அவர் பயம் கொள்ள, அங்கே குழுமி இருந்த அபார்ட்மெண்ட் வாசிகளை
பார்த்து அதே கேள்வியை கேட்டாள் ரிது.

“ஒருவர் முன்னே வந்து, மேம் இந்த சி.சி.டி.வி எல்லாமே சம்பரதாயமா வைக்கிறது தான். மத்தபடி
அதை ரெகுலரா பாக்கற வழக்கம் இல்லங்க. அது மட்டும் இல்ல. ஏதாவது பிரச்சனைன்னா தானே
சி.சி.டி.வி தேவைப்படும். இங்க இது நாள் வரை எந்த பிரச்சனையும் இல்லாதப்போ நாங்க ஏன்
அதை போய் என்னனு பார்க்க போறோம்?”,என்று கேட்க,

“நல்லா இருக்கு சார் உங்க பேச்சு. உங்களோட அவசர அவசிய தேவைக்கு தான் இந்த சி.சி.டி.வி.
இருக்கு. நீங்களே அதன் மேல கவனமா இல்லாம இப்படி ஏனோ தானோன்னு இருந்தா என்ன
அர்த்தம்?? சி.சி.டி.வி யை சும்மா ஸ்டெப்ஸ்க்கு அடில ரூம் மாதிரி கட்டிட்டு, கதவு கூட இல்லாம
திறந்து வச்சிருக்கீங்க?  இதுவரை பிரச்சனை இல்ல. இன்னிக்கு ஒரு மிஸ்ஸிங்க்கு ரெண்டு கேஸ்
ஆச்சு. எந்த ஆதாரமும் இல்லாம அபார்ட்மெண்ட் கேட்டுக்கு உள்ளையே ரெண்டு பேரை
காணோம்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு பிரச்னையோட சீரியஸ்னஸ் தெரியுதா? இதே உங்க
தங்கச்சியா இருந்தா, இல்ல உங்க குழந்தையாக இருந்தா இப்படியா பேசிக்கிட்டு இருப்பீங்க?
இந்நேரம் செக்ரட்டரியை கிழிச்சு தொங்க விட்டிருக்க மாட்டிங்க? உங்களுக்கு வந்தா தான்
தலைவலி. அடுத்த வீட்டுக்காரனுக்கு தலையே போனாலும் உங்களுக்கென்ன?
அப்படித்தானே?”, என்று நக்கலாக கேட்க,

“மேடம் எங்களை குறை சொல்ற நேரமா இது? ப்ளீஸ் எங்க பொண்ணை கண்டு பிடிச்சு
கொடுங்க. ஒரு ராத்திரி அவ வெளில இருந்தது தெரிஞ்சாலும் நாளைக்கு அவ வாழ்க்கையே
கேள்விக்குறியா மாறிடும்.”,என்று முதலில் காணாமல் போன சுமா என்ற பெண்ணின் பெற்றோர்
அழ,

“மேடம் சின்ன பொண்ணு மேடம். பசிச்சா கூட அவளுக்கு சொல்லத் தெரியாது அழுவா..”, என்று
அந்த குழந்தையின் தாய் அழ,

ஆனால் ரிதுவோ இருந்த இடத்தை விட்டு அசையாமல், சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தவள்
கடைசியாக நின்றிருந்த ஒரு பதின் வயது வாலிபனை அழைக்க, அவனோ தயங்காமல் வந்தான்.

“நீங்க யார் தம்பி?”, என்று அவன் தோளில் தட்டி ரிது கேட்க, அவனின் பெற்றோர் ஓடி வந்து,
“மேடம் அவன் சின்ன பையன். இப்போ தான் ப்ளஸ் டூ படிக்கிறான். அவனை ஏன்
கூப்பிடுறீங்க?”, என்று பதற,

“அட நான் என்ன உங்க பையன் யாரையும் கடத்தி வச்சிருக்கான்னு சொன்னேனா என்ன?”,
என்று மீண்டும் அவன் தோளில் பலமாக தட்டியவள்,

“அப்பறம் சொல்லுங்க படிப்பு எப்படி போகுது?”, என்று வெகு இயல்பாக தோளில் கைபோட்டு
பேச, அந்த குழந்தையின் தந்தை பொறுக்கமாட்டாமல், “ஐயோ மேடம் எங்க குழந்தையை
தேடுங்க”,என்று அழ,

“அதான் பண்ணிட்டு இருக்கேன் சார். உங்க பில்டிங் சி.சி.டி.வி வேலை செய்யாது அதை நீங்க
பார்க்க மாட்டிங்க. வாட்ச்மேன் மோட்டார் போட, காய் வாங்கன்னு வெளில போய்டுவான்,
கேட்டுல இருக்கவே மாட்டான், அதையும் நீங்க கேட்க மாட்டீங்க.. சரி அதுவாவது
குடியிருப்புக்கு பொதுவான விஷயம், விடுங்க. உங்க குழந்தையோட விளையாட்டை எட்டி
நின்னு கண்காணிக்கக் கூட உங்க குடும்பத்துக்கு நேரமில்லை. ஆனா நீங்க குழந்தையை
காணோம்ன்னு சொன்னதும் நாங்க ஆளாஆளுக்கு ரோடு ரோடா தேடப்போகணுமா?”,

“மேடம் கம்பலைன்ட் கொடுத்தா தேட வேண்டியது உங்க ரெஸ்பான்சிபிலிட்டி.”, என்று ஒருவர்
கத்த,

“ஆகா வாங்க சார். என் வேலையை எனக்கு கத்துக்கொடுக்க வந்த புது ட்ரைனர் நீங்க தானா?”,
என்று வம்புக்கு இழுத்தவள், கைபேசியில் ஏதோ பார்த்துக்கொண்டே பேசினாள்.

“மேடம் குழந்தை”, என்று குழந்தையின் தாய் அழ, “இருங்க மா,உங்க பொண்ணுக்கு ஒன்னும்
இல்ல.”, என்று பொறுமையும் மென்மையும் கலந்து சொன்னாள் ரிது.

மீண்டும் அந்த பையனை அருகில் இழுத்தவள், “ஆமாம் எங்க உன் பிரெண்ட்ஸ்? இதே
அபார்ட்மெண்ட் தானா இல்ல வெளில இருக்காங்களா?”,என்றதும் அதுவரை சாதாரணமாக
இருந்த அவனோ உடல் உதற ஆரம்பித்தான்.

“அட தம்பிக்கு ஜன்னி வந்திடும் போலயே.. இவ்ளோ அன்பா கேட்கும் போதே சொல்லிடு
கண்ணா… இல்லனா கண்டிப்பா முதுகு தோலை உரிச்சிடுவேன்.”, என்று கர்ஜனையாய் அவள்
மொழிய,

“ஐயோ மேடம்”, என்று அலறியவன், “எனக்கு ஒன்னும் தெரியாது மேடம், அவங்க மூணு பேரும்
பக்கத்து அபார்ட்மெண்ட். அந்த அக்காவை கிண்டல் பண்ணும்போது நானும் கூட இருந்தேன்.
ஆனா நான் ஒன்னும் பண்ண மாட்டேன். இன்னிக்கு நான் அவங்க கூட போகவே இல்ல. ஆனா
சாயங்காலம் அவங்க வந்தாங்க.”, என்று சொல்ல, அருகில் இருந்த துணை ஆய்வாளர்
ரஞ்சித்திடம் அந்த இளைஞர்களை அழைத்துவர கூறி அவனையும் சேர்த்து அனுப்பினாள் ரிது.
அந்தப் பையனின் பெற்றோர் அங்கே கூச்சலிட்டுக் கொண்டிருக்க, அவளோ அதை காதில் கூட
வாங்காதவளாக, போனில் யாரிடமோ தீவிரமாக பேச ஆரம்பித்தாள். குழந்தையின்
பெற்றோருக்கும் அந்த இளம்பெண்ணின் பெற்றோருக்கும் ரிதுவின் செயல் மர்மமாக இருந்தாலும்
தங்கள் மகள்கள் கிடைக்கவே அவர் இவ்வாறு நடந்து கொள்கிறாரோ? என்ற எண்ணம் எழ
கண்ணீர் பொழிந்து கொண்டிருந்த விழிகளின் ஊடே, வாய் திறந்து ரிது “மகள்
கிடைத்துவிட்டாள்” என்று சொல்லி விட மாட்டாளா? என்று அவளையே பார்த்திருக்க அவளோ
அரைத்தூக்கத்தில் உள்ளே நுழைந்து கொண்டிருந்த அந்த மூன்று பையன்களை பார்த்து ,”வாங்க
ஜேம்ஸ்பாண்ட்டின் உடன்பிறப்புகளே”, என்று நக்கல் அடிக்க, பயத்தில் அவர்களோ நடுங்கிக்
கொண்டிருந்தனர். அவர்கள் ஏதோ சொல்ல வாய் திறக்க அதை கைநீட்டித் தடுத்தவள், “என்ன
உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நீங்கள்லாம் அப்பாவி. மைனர் பசங்க. அதானே?”, என்று
கேட்டார் அவர்களின் பெற்றோர் இப்போது உள்ளே ஓடி வந்து கொண்டிருந்தனர். அவர்களையும்
கை அமர்த்தியவள், அந்த பையங்களிடம், “உண்மையை சொல்றியா இல்லையா?”, என்று கேட்க,
அவர்களோ எங்களுக்கு தெரியவே தெரியாது என்று சாதித்தனர்.

வாசலில் வந்த டாக் ஸ்குவார்ட்டிடம், உள்நோக்கி கை நீட்ட அந்த குழந்தையின் தாய்
அருகிலிருந்த சைக்கிளை முகர்ந்து பார்க்க வைத்தனர் அதன் டிரெய்னர்கள்.

ஓங்கி ஒரு முறை குலைத்தது அந்த உயரமான நாய் பின்னர் வேகமாக லிஃப்ட்டின் அருகில்
சென்றது. அதை இயக்கி ஒவ்வொரு தளமாக நிறுத்த நாயோ வெளியேறாமல் முகர்ந்து விட்டு
உள்ளேயே நின்றது. அடுத்தடுத்த தளங்களுக்கு சென்று கடைசியாக மொட்டை மாடியில் லிஃப்ட்
நிற்க வேகமாக மற்றவர்களை இழுத்துக்கொண்டு முன்னே சென்றது. அங்கிருந்த ஒரு
பூட்டப்பட்ட அறையை காட்டியது. அதோடு கால்களால் அந்த கதவை பிராண்ட ஆரம்பித்தது.

போலீசார் அந்த கதவை உடைக்க, உள்ளே தலையில் காயத்தோடு அந்த இளம் பெண் கை,வாய்
கட்டப்பட்ட நிலையில் மயங்கிக் கிடக்க, அவளுக்கு மிக அருகில் குழந்தை வாய் கட்டப்பட்ட
நிலையில் மயங்கி கிடந்தது.

அக்காட்சியைக் கண்ட போலீசார் அதிர்ந்து, போனில் ரிதுபர்ணாவை அழைக்க, அவள் லிப்ட்டில்
மேல் தளம் செல்ல மற்றவர்கள் படிக்கட்டு ஏறி வந்தனர். குழந்தையும் அந்த பெண்ணையும் கண்ட
ரிதுபர்ணாவிற்கு மனம் நிம்மதி அடைந்ததோடு அபிக்கு தன்னுள்ளே மனமார நன்றி கூறியது.

பெற்றோர் இருவரும்  தங்கள் பிள்ளைகளை  நோக்கி முன்னே செல்ல  அவர்களை தடுத்த ரிது,
ரஞ்சித்திடம்  கை நீட்ட  அவளும்  ஒரு கான்ஸ்டபிளும், அங்கே சில புகைப்படங்கள் எடுத்த பின்
இருவரையும் நீர் தெளித்து மயக்கத்திலிருந்து விடுவித்தனர்.

நன்றி பெருக்கால் பெண்கள் இருவரின் பெற்றோரும் ரிவுக்கு நன்றி சொல்ல அவளோ
அவர்களிடம் கோபம் காட்டினாள்.” உங்க குழந்தைங்க உங்ககிட்ட தங்களுக்கு ஏற்படுற
பிரச்சினையை கூட சொல்ல பயப்படுற அளவுக்கு வளர்த்துகிட்டு இருக்கீங்க.  உங்களுக்கே இது
சரியா படுதா? உங்க குழந்தையோட விளையாட்டு நேரத்துல கூட உங்களால இருக்க முடியாதா?
காலம் எவ்வளவு மோசமானதா மாறிட்டு வருது! பொருட்களை பத்திரமா லாக்கரில் வச்சுக்கிட்டு
வெளியில போகும் போதும் வரும்போதும் அதை கவனமா பாத்துக்கற நீங்க உங்க குழந்தைகள்
மேல அதே கவனம் செலுத்த முடியாதா?”, என்று கோபமாக கேட்டவள், அந்த பெண்ணிடம்,”
அவங்க கிட்ட சொல்ல தான் பயம் போலீஸ் கிட்ட சொல்லி இருக்கலாமே?”, என்று
மென்மையாக கேட்க, அவளோ, “எனக்கு இவங்க இப்படி பண்ணுவாங்கன்னு தெரியாது மேம்”,
என்று பயத்தால் அழத் துவங்கினாள்.

அந்த பையன்களின் பெற்றோருக்கோ மற்றவர்களுக்கோ ஒன்றும் புரியாமல் அனைவரும் ரிது
வின் முகத்தையே பார்க்க அவள் அவர்கள் பார்வைக்கான பொருள் உணர்ந்தவளாய் ,”என்ன
எப்படி எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிச்சேன் குழப்பமா இருக்கா? கூடவே இந்த பசங்க என்ன
செஞ்சாங்க அப்படின்னு தலைக்குள்ள வண்டு குடையுதோ?”, என்று நக்கலாக கேட்டுவிட்டு
விளக்க ஆரம்பிக்க அவளுடன் அந்த பெண்ணும், குழந்தையும் இணைந்து நடந்தவற்றை
காட்சிப்படுத்தினர்.

ரிது இங்கு வருவதற்கு முன்னமே அபியால் சில விபரங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. அதன்படி
சில நாட்களாக நான்கு சிறுவருமல்லாத இளைஞருமல்லாத பையன்கள் அந்த பெண்ணான
சுமாவை போகும்போது வரும்போதும் மறைமுகமாக கிண்டலடித்த படி இருக்க, தன்னைவிட
இளையவர்கள் என்று அவளும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கடந்து போய்
இருக்கிறாள்.

ஆனால் இன்று மதியம் அபார்ட்மெண்டில் அவள் வீட்டிற்கு செல்ல முற்பட்டபோது இவர்கள்
மூவரும் மட்டும் லிஸ்டில் அவளை இறங்கவிடாமல் நேராக மேல் தளத்திற்கு லிப்ட்டை
செல்லும்படியாக செய்துவிட முதலில் திடமாக இருந்த சுமா, யாருமற்ற அந்த மொட்டை மாடியை
கண்டு பயத்தினால் கூச்சல் போட முயன்றிருக்கிறாள். அவள் கத்துவாள் என்பதை எதிர்பாராத

இவர்கள் அவளை சட்டென்று தள்ளிவிட தண்ணீர் டேங்க்கிற்கு செல்ல அமைக்கப்பட்டிருந்த
இரும்பு ஏணியில் தலை மோதி காயம் ஏற்பட்டு ரத்தம் வடிய ஆரம்பித்தது.

ரத்தத்தை காணும்வரை பையன்களிடம் இருந்த தைரியம், அந்த நொடியில் விடைபெற்றுச்
சென்று விட, அருகிலிருந்த பழைய மோட்டார் ரூமில் அவளை இழுத்துப் போட்டு துப்பட்டாவில்
தலையில் ஏற்பட்ட காயத்தின் ரத்தம் வெளியேறாமல் இருக்கவும், கூடவே கையையும் கட்டிப்
போட்டனர்.

அவள் நெடுநேரம் அசைவற்று இருக்க பயம் கொண்டவர்கள், அவள் அங்கேயே இருக்கட்டும்.
அவள் எழுந்ததும் இதைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டி அனுப்பிவிடும்
நோக்கில் அந்த அறையை பூட்டிவிட்டு கீழே சென்று விட்டனர்.

மீண்டும் மாலையில் இவர்கள் குசுகுசுப்பாக ஏதோ பேசியபடி லிஃப்டில் ஏறுவதை கண்ட சிறுமி
ஆர்வத்தால் அவர்கள் சென்ற அதே தளத்திற்கு மீண்டும் லிஃப்ட் வந்ததும் சென்று இறங்கினாள்.
அப்போது அந்த ரூம் கதவை திறந்து அந்த பெண்ணை அவர்கள் சோதித்து கொண்டிருக்க அதை
கண்டுவிட்ட சிறியவள் கூச்சலிடத் துவங்க, சட்டென்று வாயை இறுக மூடி விட்டான் ஒருவன்.
குழந்தை மூச்சுத்திணறி மயக்கம் போட்டு விட இன்னும் பீதியான மூவரும் அந்த
அப்பார்ட்மெண்டில் இருக்கும் தனது நண்பனான ஒருவனை அழைத்து விஷயத்தை முழுவதுமாக
செல்லாமல், வேறு பேச, அந்த அறையை யாரும் நெருங்காமல் இருக்க என்ன செய்ய முடியும்
என்பதை கவனிக்கலாயினர். அவனுக்கு இவர்களின் கூற்று புரியாவிட்டாலும் மொட்டை
மாடிக்கு அதிகம் இரவில் யாரும் வரமாட்டார்கள் என்ற தகவல் மட்டும் தெரிவித்துவிட்டு அவன்
சென்றுவிட்டான் எப்படியும் தாங்கள் இந்த அபார்ட்மென்ட் வாசிகள் அல்ல என்பதால் பிரச்சினை
வந்தாலும் அதை சமாளித்துக் கொள்ளலாம் வீட்டிற்கு தெரிந்தால் கோபம் கொள்வார்கள் என்று
சுமாவையும் குழந்தையையும் வாயை கட்டி வைத்து அந்த அறையில் பூட்டிவிட்டு மறுநாள் காலை
மிரட்டி விடுவித்து விட்டால் தாங்கள் மாட்ட மாட்டோம் என்று என்றோ பார்த்த எப்போதோ
கேட்ட கதைகளின் தாக்கத்தால் ஏதேதோ செய்து விட்டு மறக்காமல் சிசிடிவி இருந்த அறைக்கு
சென்று லிஃப்டில் இவர்கள் சென்று வந்த பதிவுகளை அழித்து பின் வீடு திரும்பினர். போலீஸ்
இந்த அளவுக்கு உடனே கண்டுபிடிப்பார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை.
அப்பார்ட்மெண்ட் வாசிகளுக்கும் மாடியில் பழைய மோட்டார் தட்டு முட்டு சாமான் போட்டு
வைத்த அந்த அறையை பற்றிய நினைவே இல்லை. அதனால் யாரும் மொட்டை மாடிக்குச்
சென்று தேடவே இல்லை இப்படியாக அந்த பெண்ணும் அந்தப் பெண்ணின் நிலையை
அறிந்ததால் சிறுமையும் மாற்றிக்கொள்ள ரிது மற்றும் அபியின் புத்தி கூர்மையால் சில மணி
நேரங்களில் இருவரும் மீட்கப் பட்டிருந்தனர். இதில் அபிக்கு என்ன பங்கென்றால்,
டீக்கடைக்காரர் சொன்ன அந்த பெண்ணின் தன்மைக்கும் அவள் வெளியே எங்கும் காணாமல்
போகவில்லை என்ற அவள் அப்பாவின்  கூற்றுக்கும் ஏதோ இடிக்க, அருகில் இருந்த ரீசார்ஜ்
கடைக்குச் சென்று போனுக்கு ரீசார்ஜ் செய்வது போல அவன் விசாரிக்க,

அங்கிருந்த பையன் தான் இந்த மூவரும் அவளை தொடர்ந்து கிண்டல் செய்வதாக அவனிடம்
தெரிவித்தனர். அதன் பேரில் சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்ட போது, வளரிளம் சிறுவர்கள்
தானே அதனால் லிப்டின் காட்சிகளை அழித்த அவர்கள் முன் வாசல் வழியை காணவோ அதை
அழிக்கவோ முற்படாமல் போனது அவர்களின் துரத்திருஷ்டம். ஆனால் தகவல் வந்த ஒரு மணி
நேரத்தில் தங்கள் மகளைக் கண்டறிந்து தந்ததால் சிறுமியின் பெற்றோர் நன்றியோடு அவளைக்
கண்டனர்.

ரிது இங்கே இப்படி இருக்க அங்கே ரேகாவை ராகவேந்தர் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல
முடிவெடுத்து அதற்கு தன் மாப்பிள்ளையின் சம்மத்தையும் பெற்றுவிடுவார்.

★★★★★

��அகலாதே ஆருயிரே��
��69��

அபியும் ரிதுவும் வீடு திரும்ப அதிகாலை ஆனது. அவர்கள் வீட்டிற்குள் நுழைய, வீடே உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களும் சத்தம் எழுப்பாமல் அவர்கள் அறைக்கு சென்று விட்டனர்.
அவர்கள் சென்ற பின் வீட்டில் நடந்த கலகம் தெரியாததால் அவர்கள் தங்கள் அறையில்
உறங்கிட, காலை நேரம் வீட்டில் மூண்ட போரில் அவர்கள் பங்குபெறவில்லை..

“அப்பா நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல.”, என்று ரேகா அழுக,
விக்னேஷ் முன்னால் வந்து, “இது நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால் எடுத்த முடிவு. மாமா
தான் வேண்டாம்ன்னு என்னை தடுத்தார். ஆனா இன்னிக்கு அவருக்கே அது சரின்னு
பட்டிருக்கு.”, என்று திரும்ப,

“உங்களை யாரு கேட்டது? அப்பா.. என்னப்பா.. இவர் சொல்லலாம்.. நீங்க சொல்லலாமா?”,
என்று அவர் கண்ணீர் உகுக்க,

“ரேகா, குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் போகலாம்ன்னு சொன்னா வேண்டாம்ன்னு சொல்ற, இப்போ
இதுக்கும் வேண்டாம்ன்னா என்ன அர்த்தம்?”,

“நான் நல்லாத்தான் இருக்கேன்னு அர்த்தம் பா.”, என்று அவள் கத்த, அவளை அடக்கி ஓரிடத்தில்
அமர்த்துவதற்குள் விக்னேஷுக்கு போதும் போதுமென்றானது. அவன் சோர்ந்தவனாக சங்கரி

அருகில் வந்து, “அத்தை, இதுக்கு மேல என்னால முடியல அத்தை. குழந்தை இல்லன்னா கூட
பரவாயில்ல வீட்டில் வேண்டாத பிரச்சனையை இவ கிளப்பாம இருந்தாலே போதும்.”, என்று
சொல்ல,

“ஆமா, உங்க மச்சான் பொண்டாட்டி பண்றதெல்லாம் உங்க கண்ணுல படாது. எல்லாருக்கும்
நான் தான் இளிச்சவாயா போயிட்டேன்.”, என்று ரேகா பேச, உண்மையில் அவள் மனநிலை
மேல் ஆழுத்தமான சந்தேகம் வந்தது வீட்டினருக்கு.

அன்று மீண்டும் வேலை சம்மந்தமான அழைப்புகள் வர, ரிது எழுந்து கிளம்பினாள். ஆனால் அபி
உறங்கிக்கொண்டு இருந்தான்.

காக்கி உடையில் அவள் ஹாலுக்கு வர, “இதோ வந்துட்டா பாருங்க மகாராணி. எழுந்து ரெடியா
வந்தாச்சு, இனி அர்த்த ராத்திரி தான் வருவா. போ அவளையே கொஞ்சு. ஆனா உங்ககிட்ட ஓடி
வர்ற என்னை திட்டுங்க”, என்று சத்தமாக கத்தினாள்.

சங்கரி ரேகாவின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மருமகளிடம், “கிளம்பியாச்சா ரிது?
நேத்து கேஸ் என்னாச்சு? இரு டிபன் தர்றேன்”,என்று முன்னே வர,

“அதெல்லாம் ரெண்டு பிள்ளைகளையும் கண்டு பிடிச்சாச்சு அத்தை. ஏன் அத்தை அண்ணி
சொல்றது சரி தான? நீங்க வேலை செய்யாத என்னை கொஞ்சிக்கிட்டு உங்க கிட்ட அன்பா வர்ற
உங்க மகளை ஒத்துக்கப் பார்க்குறீங்க. இனிமே பெரிய அண்ணியை ஒண்ணும்
சொல்லக்கூடாது.நானும் முடியும் போது ஹெல்ப் பண்றேன்.”, என்று அவள் சொல்ல,

“அவளை நான் என்னைக்கு என்ன சொன்னேன் ரிது? அவ உன்னை பேசும்போது எனக்கு
பொறுக்கல அவ்வளவு தான். நீ வேலைக்கு போகறது மட்டும் தான் இவ கண்ணை உறுத்துது.
உன்னை ஒரு வார்த்தை உயர்த்தி பேசுனா இவளுக்கு உள்ளே கருகுது. இவளும் அப்படி இருக்க
வேண்டியது தானே? அதை விட்டுட்டு சும்மா..”, என்று பேசிக்கொண்டே உள்ளே சென்று
உணவுடன் வந்தவர், ரிது மறுத்தும் உண்ண வைத்தார்.

ரிது, “அத்தை அபி எழுந்ததும் கொஞ்சம் என் ஆபிஸ் வரைக்கும் வர சொல்லுங்க.”, என்று
சொல்லிவிட்டு கிளம்பினாள்.

“பாரு, அவ உன் பையனை வேலைக்காரன் மாதிரி வந்து பார்க்க சொல்லி உன்கிட்டயே
சொல்லிட்டு போறா. ஆனா நீ மண்டையை ஆட்டிக்கிட்டு, விட்டா அவளுக்கு ஊட்டி விடுவ
போல இருக்கு.”, என்று சங்கரி மீது ரேகா பாய,

சங்கரி அமைதியாக, “எனக்கு என் மருமக வீட்டோட இருக்கணும், பத்து பாத்திரம்
தேய்க்கணும்னு எண்ணம் இல்ல. அவ்வளவா படிக்காத நானே, ஏதாவது தொழில் பண்ணனும்,
வீட்டுக்கு உதவியா இருக்கணும்ன்னு நெனச்சேன் தானே? அவ எவ்வளவு படிச்சிருக்கா தெரியுமா
உனக்கு? அவளை வீட்டுக்குள்ள அடைக்க நினைக்குறது முட்டாள்தனம். அவ ஒரு போலீஸ்காரி.
எத்தனை பேர் இந்த இடத்துக்கு இந்த வயசுல வந்திட முடியும்? அவ வந்திருக்கான்னா, அதுக்கு
அவளோட உழைப்பு தான் காரணம். அவ என் மகனை விட எனக்கு உசந்தவ தான். ஒரு ஆணுக்கு
தன் குடும்பத்தை வேலைக்கு போய் சம்பாதிச்சு காப்பாத்தணும் அப்படிங்கறது கடமை. ஆனா ஒரு
பெண்ணுக்கு அப்படி எந்த கட்டயத்தையும் இந்த சமூகம் கொடுக்கலை. ஆனாலும் தன்னோட
திறமைகளை வீட்டோட முடக்கிடாம, ஏதோ ஒரு வழியில ஒவ்வொரு பெண்ணும் வெளில
கொண்டு வர நினைக்கிறாங்க. ஆனா குடும்பம், பொறுப்பு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு
வரணும்ன்னு அவங்க நினைக்கல. எல்லாத்தையும் சமாளிக்கிறாங்க. அதை வீட்டுல
இருக்கறவங்களும் புரிஞ்சுக்கணும். அப்படி புரிஞ்சு நடந்துக்கற சிலரையும் உன்னைப் போல
ஆட்கள் ஏத்தி விட்டுக் கெடுக்காம இருக்கணும். என் மருமகளுக்கு நான் செய்வேன். எனக்கு
முடியலன்னா அவளும் செய்வா. இது எங்களோட, என் குடும்பத்தோட புரிதல். இதுல
தலையிடவோ, கேள்வி கேட்கவோ, கிண்டல் பண்ணவோ நீ யாரு?” என்று சங்கரி கேட்க, சசி ஓடி
வந்து தன் அண்ணியை அணைத்துக் கொண்டாள்.

ராகவேந்தருக்கும் மனைவியின் கூற்று சரியென்று தோன்றவே, மகள் பக்கம் திரும்பியவர், “இங்க
பாரும்மா, நான் உன்னை ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்தேன் தான். ஆனா இப்போ
உனக்குன்னு குடும்பம் ஆன பின்னாலும் இங்க வந்து வீட்டுல இருக்கிற நிம்மதியை கெடுத்தா
நல்லாவே இல்லம்மா. ஏற்கனவே உன்னை பற்றி சொல்லி டாக்டர் கிட்ட விசாரிச்சோம். அவர்
என்னடான்னா மனச்சிதைவு அது இதுனு சொல்றார். எனக்கு உன் மேல பிரியம் இருக்கும்மா.
அது மாறாது. ஆனா அதுக்காக நீ செய்யற எல்லாத்தையும் பொறுத்துக்க முடியாது மா. முன்னை
விட நான் இப்போ தளர்ந்து போயிட்டேன். ரிது வீட்டுல இருக்கற நேரம் கலகலன்னு வீடே
உயிர்ப்பா இருக்கு. ஆனா நீ எப்போவும் குறை சொல்லிகிட்டே இருக்க. உனக்கு வீட்டுல
முக்கியத்துவம் இருக்கணும்ன்னு நீ நினைக்கிறதுல தப்பில்லை ஆனா அதே போல யாருக்குமே
முக்கியத்துவம் கொடுக்க கூடாதுன்னு நீ நினைக்கிறது ரொம்ப தப்பு மா.”,என்று அவரும்
ஆதங்கப்பட,

“எனக்கு குழந்தை இல்ல, அதான் உங்களுக்கு என்னை பிடிக்கல. இதே நீங்க ஸ்வாதியை இப்படி
பேசுவீங்களா?”, என்று பேச்சை திசை மாற்றினாள் ரேகா. அனைவரும் நொந்து போனார்கள்.
ஆனால் நாராயணன் சற்றும் தளராமல், ” எல்லாரும் பேசாம இருங்க. ரேகா இவங்க என்னவோ
சொல்லட்டும், ஆனா நான் ஒன்னு சொல்றேன் நீ கேட்பியா?”, என்றார்.

அனைவரும் தனக்கு எதிராக பேசும்போது ஒருவர் சாதகமாக பேச முனைவதை பற்றிக்கொள்ள
நினைத்த ரேகா அமைதியாக இருக்க,
“நீ கிளம்பி எங்க வீட்டுக்கு வந்திடு மா. கொஞ்ச நாள் அங்கேயே இரு. நீ அம்மா அப்பா ன்னு ஓடி
ஓடி வர்றதை இவங்க புரிஞ்சுக்கவே இல்ல போல. கொஞ்ச நாள் இவங்களை கண்டுக்காம நீ
மாமா வீட்டுல வந்து இரு. அப்போ தான் நீ இல்லாம இவங்களுக்கு உன்னோட அருமை புரியும்.”,
என்று மற்றவர்களை பார்த்து கண்சிமிட்டி அவர் சொல்ல, அனைவரும் புரிந்து கொண்டனர்.
ஆனால் ரேகா,
“நான் ஏன் அங்க வரணும்? இதான் என் அப்பா வீடு. நான் வர மாட்டேன்.”, என்று சட்டென்று
சிறுபிள்ளை போல பேசினாள். நாராயணன் தன்மையாக,

“இருக்கட்டும். ஆனா எல்லாரும் உன்னை விட்டுட்டு ரிதுவை கொண்டாடிக்கிட்டு இருக்காங்க
பார்த்தியா? நீ அங்க வந்திடு டா. நானும் சசியும் ரிஷியும் மட்டும் தான் இருப்போம். நீ சொல்றது
தான் அங்க சட்டம்.”, என்று சொன்னவர்,

“டேய் ரிஷி அண்ணியை வீட்டுக்கு வர சொல்லி கூப்பிடு டா”, என்று ஊக்கினார். அவனும்
நிலைமையை புரிந்துகொண்டு.

“அண்ணி நீங்க வாங்க. நான் கிரிக்கெட், சீட்டு எல்லாம் விளையாடுவேன், நீங்களும் நானும்
ஜாலியா விளையாடலாம்.”,என்று அவள் கைப்பற்றி அழைக்க,

ஏனோ சங்கரி, ராகவேந்தர், விக்னேஷ் என்று எல்லோரும் எப்போதும் விலகல் தன்மையோடு
தன்னிடம் நடந்துகொள்ளும் போது, ரிஷி கைப்பற்றி அன்பாய், ஆசையாய் கூப்பிட்டது அவள்
மனதை அசைத்தது. இருந்தும்,

“நான் அங்க வந்த பின்னாடி என்னை திட்ட மாட்டாயே. நான் உன் அக்காவை பேசியதை
எல்லாம் சொல்லி என்னை ஒன்னும் சொல்லாம இருப்பியா?”, என்று கேட்க,

“அண்ணி, ரிதுக்கா என்னோட விளையாடவே வரலன்னு நான் கோபமா இருக்கேன். நீங்க
வாங்க. நாம ஜாலியா வேற லெவல்ல சேட்டை பண்ணலாம். ஆமா உங்களுக்கு படம் பார்க்க
பிடிக்குமா?”, என்று பேச்சு கொடுத்து அவளை அப்படியே மாடிக்கு அழைத்துப்போனான்.

“என்ன மாப்பிள்ளை நீங்க? எதுக்கு அவளை அங்க கூட்டிட்டு போக நினைக்கிறீங்க?”, என்று
ராகவேந்தர் கேட்டதும்,

“மச்சான். நேத்து நாம பேசுன டாக்டர் என்ன சொன்னார்? அவங்க மனதளவுல தன் மேலையே
ஏதோ கோபத்துல், இல்ல இயலாமையில இருக்கலாம்ன்னு சொன்னார்களா இல்லையா?
ஆரம்பத்துல ரேகா உரிமைக்காக பேசி இருந்தாலும், அவளுக்கு எங்க தன்னை எல்லாரும் ஒதுக்கி
வைத்துடுவாங்களோ என்று பயம். எங்க குழந்தை இல்லன்னு கணவர் விட்டு போயிடுவாரோ?
அம்மா அப்பா தன்னை மதிக்காம போயிடுவாங்களோன்னு பயம். அந்த குழந்தை ஏன் வரலன்னு
அவளுக்கு யோசிக்க இப்போ மனசு இல்ல. ஏன்னா மனசு முழுக்க பயமும், பொறாமையும் தான்
இருக்கு. அவளை கொஞ்சம் நிதானமான மனநிலைக்கு கொண்டு வந்தா மட்டும் தான்
அவளுக்கும் அவளோட தவறுகள் புரியும். அதோட குழந்தை பிறக்காம போக வாய்ப்பே இல்ல.
அவ வேண்டாம்ன்னு தள்ளி போட்டிருக்கான்னு நேத்து விக்னேஷ் பேசும்போது எனக்கு
புரிஞ்சது. ஒருவேளை சில பெண்களுக்கு தன்னால பிரசவ வலியை முடியுமான்னு பயம்
இருக்கலாம், இல்ல மனரீதியான குழப்பங்கள் இருக்கலாம். நாங்க வீட்டுல எப்பவும் சிரிச்சு
ரகளை பண்ணிக்கிட்டே இருப்போம். அப்போ அவளும் மனசு விட்டு பேச வாய்ப்பு கிடைக்கும்.
அதனால ஒரு மாதம் எங்க வீட்டுல அவ இருக்கட்டும். இதுக்கு இடையில் நாங்களும் இங்க வரல.
நீங்களும் அங்க வர வேண்டாம். எல்லாமே சீக்கிரமா சரியா ஆகும்.”, என்று நாராயணன் சொல்ல,

விக்னேஷ் ஒரு பெருமூச்சு விட்டு, “சித்தப்பா, எனக்கும் நிறைய ஆசை இருக்கு இவ கிட்டா
அன்பா பேசணும், சிரிக்கணும் அப்படின்னு. ஆனா அவ எல்லாத்துக்கும் கடுகடுன்னு
பேசும்போது ஒரு கட்டத்துல அது என்னால முடியாம அதுவாவே கோபமா பேசுற மாதிரி
அகிடுது. நீங்க சொல்லும்போது தான் அவளோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கமா
போயிட்டோமேன்னு தோணுது.”, என்றான்.

“அவளுக்கு பொறாமை குணம் இருக்குன்னு தெரியும். ஆனா அது அவளுக்கு மனசிதைவை
தரும்ன்னு நாங்க யோசிக்கவே இல்ல அண்ணா.”, என்று சங்கரி சொல்லிக்கொண்டு இருக்கும்
போதே மொட்டை மாடியில் ரேகாவுக்கு ரிஷியும் சிரிக்கும் சத்தம் கேட்டது.

“பார்த்தீங்களா? அவன் அவனோட காலேஜ் கலாட்டா எல்லாம் சொன்னா கண்டிப்பா சிரிப்பா
இருக்கும். கொஞ்ச கொஞ்சமா அவளை சரி பண்ணிடலாம். அவளும் சராசரியான வாழ்க்கையை
பற்றி அப்பறம் யோசிக்க ஆரம்பிச்சிடுவா.”, என்று நாராயணன் விக்னேஷின் தோளில் தட்ட,

“சரிங்க சித்தப்பா.”, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, அபி எழுந்து கீழே வந்தவன்,

“மேல என்ன நடக்குது? நான் பார்த்தது நிஜம் தானா? ரேகாவா சிரிக்கிறது?”, என்று கேட்டதும்,

“அதெல்லாம் இருக்கட்டும், ரிது உன்னை அவளோட ஆபிசிக்கு வரச் சொன்னா அபி.”, என்று
சங்கரி சொல்ல,

“ஆமாம்மா, நேத்து கேஸ்க்கு நான் தான அவளுக்கு வெளில தகவல் திரட்டிக் கொடுத்தேன்.
இன்னிக்கு பைல் கிளோஸ் பண்ண, சாட்சி எல்லாரும் வந்து கையெழுத்து போடணும். நானும்
அந்த ரெண்டு கடைக்காரங்க கிட்ட பேசி ஸ்டேஷன் கூட்டிட்டு போகணும். அவங்களை
பயப்படாம இருக்க சொல்லி கூட்டி போகணும்.”, என்று சொல்ல,

“நீ ஏன் அதை செய்யணும் அபி?”, என்று சங்கரி புரியாமல் பேச,

“இல்லம்மா போலீஸ் கேட்டா சிலர் சொல்ல மாட்டாங்க, பயப்படுவாங்க, கேஸ் வந்திடும்,
அலையணும் அப்படின்னு அவங்களுக்கு ரொம்ப பயமா இருக்கும்.  நான் பேசி விஷயத்தை
வாங்கியது போலவே, கேஸ் வராது, வந்தாலும் நான் வக்கீல் தான் நான் பார்த்துக்கறேன்னு
அவங்களுக்கு நம்பிக்கை கொடுத்து கூட்டிட்டி போகணும்.”, என்று சொல்ல,

“எல்லாரும் இப்படி பண்ணுவாங்களா அபி?”, என்று சசி கேட்க,

“இல்ல அத்தை. ரிது இப்படி தான் சில சென்சிட்டிவ் கேஸ்க்கு செய்யணும் அப்படின்னு சொல்லி
இருக்கா. அவ கிரிமினாலஜியும் நான் மனோதத்துவம் படிச்சதும் எதுக்கு? சூழ்நிலைகளை
சமாளிக்க தானே? நமக்கு மட்டும் தான் சூழ்நிலைகள் இருக்கா என்ன? குற்றவாளிக்கு
இல்லையா? சாட்சிக்கு இல்லையா? இல்ல பாதிக்கப்பட்டவருக்கு இல்லையா? அதை நாம
புரிஞ்சு நம்ம வேலையை செஞ்சா எல்லாமே சரியா இருக்கும். இதுவும் என் வீட்டு அம்மணி
சொன்னது தான்.”, என்று அபி சிரிக்க,

“ஏன் மாப்பிள்ளை அப்போ நீங்களும் என் பொண்ணும் லவ்வா ஒன்னும் பேச மாட்டீங்களா? எப்ப
பாரு கேஸ், ரவுடி, சாட்சின்னு தான் பேசுவீங்களா என்ன?”, என்று நாராயணன் பல்லிடுக்கில்
சிரிப்பை அடக்கிக்கொண்டு பேச,

“மாமா”, என்று வெட்கச்சிரிப்பை மறைக்க முயன்றவன், “இதுவும் பேசுவோம் மாமா.”,என்று
தலையை கோத,

“போதும் போதும் நீ சீக்கிரம் கிளம்பு. ரிது தேடப் போறா”, என்று சங்கரி சொல்ல,

“இதெல்லாம் அநியாயம் அண்ணி, உங்க மருமகளை சாப்பிட வச்ச நீங்க என் மருமகனை இப்படி
விரட்டுறது நல்லாவே இல்ல.”, என்று தட்டில் காலை உணவோடு வந்த சசி,

மாலை இருவரையும் சீக்கிரம் வரச் சொல்லி நினைவு படுத்தினார். அபி கிளம்பிச் சென்றதும்,
ரேகாவும் ரிஷியும் கீழே வந்தனர்.

அண்ணி இன்னிக்கு சாயங்காலம் “வரையிலும் நீங்க என்னோட மட்டும் பேசுங்க. அப்பறம் நம்ம
வீட்டுக்கு போனதும் ஒரே ஜாலி தான்”, என்று கூற, ரேகா அமைதியாக விக்னேஷை பார்த்தாள்.

“என்ன அண்ணா விட மாட்டாங்கனு பார்க்கறீங்களா? அவரை யாரு கேட்டா? நாம போறோம்
சரியா?”, என்று மீண்டும் அவள் கையில் அழுத்தம் கொடுக்க, ரேகாவோ,

“இல்ல ரிஷி. உன்னோட பேசுனா நல்லாதான் இருக்கு. ஆனா அவர் கிட்ட கேட்டுட்டு வரேன்.”,
என்று சொல்ல,

குடும்பமே, ‘பாரு டா இவளை’, என்று பார்த்தது. விக்னேஷ் அவள் முன்னுச்சி முடியை ஒதுக்கி, “நீ
அங்க இப்படி சிரிச்சு சந்தோசமா இருப்பன்னா போய்ட்டு வாம்மா. ஆனா வந்ததும், நம்ம
வீட்டுலையும் நீ சிரிச்சுகிட்டே இருக்கணும்”,. என்று கன்னத்தில் கை பதித்து சொல்ல, வியப்பில்
கண்ணை விரித்தாள் ரேகா.

சரியென்று தலையசைத்தவள், “தூக்கம் வருது.”, என்று உள்ளே சென்று படுத்ததும் தூங்கி
விட்டாள். சங்கரி அவள் நடவடிக்கை புரியாமல் விழிக்க,

நாராயணன் பொறுமையாக விளக்கினார். “நீங்க நினைக்கிறது போல அவ மோசமான
பொண்ணு இல்ல. அவளுக்குள்ளயும் எதிர்பார்ப்புகள் இருக்கும்ல, அது ரொம்ப அதிகமா இருக்கு.
எல்லா நேரமும் எல்லாராலையும் அப்படி இருக்க முடியதுங்கற உண்மையை அவளால ஏத்துக்க
முடியல. அதை மனசுல போட்டு குழப்பி குழப்பி  அவளை அவளே ரொம்ப கஷ்டப்படுத்திக்கிட்டு
இருந்திருக்கா. அது போக மீதியை தான் உங்க மேல காட்டி இருக்கா. என் மேல, ரிது மேல
எல்லாம் அவளுக்கு ஆச்சர்யம், எப்படி இப்படி இருக்க முடியுது? நம்மளால முடியலையேன்னு
ஏக்கம். அதெல்லாம் கோபமா உருமாறி அவளை அலைக்களிச்சு இருக்கும். இதுல நீங்க
எல்லாரும் வேற அவளை திட்டிக்கிட்டே இருந்திருக்கீங்க. இப்போ ரிஷியும் நானும் அவளுக்கு
சாதகமான பேசியதும் அவ மனசுல சின்ன சலனம். அவ மனசு இதெல்லாம் உண்மையா?

தன்னாலயும் இப்படி சிரிக்க முடியுமா ன்னு கேள்வி கேட்டு அவளை அவளே சோர்வடைய
செய்துகிட்டா. அதான் அயர்ச்சியில் தூக்கம் வந்திடுச்சு. அவளை நாம கொஞ்சம் சரியா புரிஞ்சு
நடந்தா அவளும் சரியாயிடுவா.”,என்று சொல்ல,

“எங்களுக்கு மட்டும் அவளோட சண்டை போட ஆசையா அண்ணா? அவ பண்ற வேலைக்கு
கோபம் வருது. அடுத்து சண்டை வருது. எனக்கும் என் பொண்ணு, புருஷன் பிள்ளைங்கன்னு
சந்தோசமா வாழணும்னு தான் ஆசையா இருக்கு.”, என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டார்
சங்கரி.

“ஒன்னும் கவலைப்படாத தங்கச்சி, எல்லாம் சரியாகிடும்.”, என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்
நாராயணன்.

நாராயணனும் ராகவேந்தரும் மாலை நடக்கவிருக்கும் விருந்துக்கான அலங்காரங்களில் கவனம்
செலுத்த, சசியும் சங்கரியும் மாலை விருந்துக்கு ஸ்வாதியையும் போன் செய்து வர சொல்லவிட்டு,
சமையலுக்கான ஏற்பாட்டுகளில் இறங்கினர். ரிஷி சில பொருட்களை வாங்க கடைக்குக்
கிளம்பினான்.

ரிதுவிடன் பேசிவிட்டு கமிஷனர் அலுவலகம் செல்லும் முன் அந்த கடைக்காரர்களை கண்டு,
அவர்களை பேசி சரிகட்டி அழைத்துக்கொண்டு சென்றான் அபினவ்.

ரிது கமிஷனரைக் காணச் சென்றிருப்பதாக ஏட்டு ஒருவர் சொல்ல, அபியும் அந்த
கடைக்காரர்களும் காத்திருப்போருக்கான இருக்கையில் அமர்ந்திருந்தனர். அந்த பக்கம் வந்த ரகு,
அபியை அடையாளம் தெரிந்து கொண்டான். இருந்தாலும் தெரியாதவன் போல நடந்து கொண்டு
ரிதுவை பழி வாங்க நினைத்தான். ரிது பொறுப்பேற்றது முதலே அவனுக்கு யாரும் படியளப்பது
இல்லை. அவளுக்கு தெரியாமல் லஞ்சம் வாங்க நினைத்தாலும் இருமுறை அதை கண்டு கண்டித்து
விட்டாள் ரிது. அதனால் அவள் மேல் கடும் கோபத்தில் இருந்தவன் இந்த சந்தர்ப்பத்தை
பயன்படுத்திக் கொண்டான்.

“யோவ் போர் நாட் செவன் இங்க வா.”, என்று அழைத்தவன், “ஆமாம் சார் யாரு? எதுக்கு
உக்கார்ந்து இருக்கார்?”, என்று அபியை நோக்கிக் கேட்க, ரகுவின் நோக்கம் புரியாதவர், “அவரு
அட்வகேட் சார். நேத்து ரெண்டு மிஸ்ஸிங் கேஸ்க்கு லீட் கொடுத்தது அவர் தான். மேடமை
பார்க்க இப்போ வந்திருக்கார். அதுவும் இல்லாம, இவரு நம்ம மேடம்மோட வீட்டுக்காரர் சார்.”,
என்று சொல்ல,

“ஓஹ்.. சரி நீ போ”, என்று அனுப்பிவிட்டு,  “வாங்க சார் நீங்க தான் ஏ.சி மேடம் வீட்டுக்காரரா?”,
என்று கேட்டு கைக்குலுக்கியவன், “ரொம்ப அதிர்ஷ்டசாலி சார் நீங்க.”, என்று கொஞ்சம் நக்கல்
கலந்த குரலில் சொல்ல,மனிதனின் குணங்களை படிக்கத் தெரிந்த அபிக்கு அவனின் நக்கல்
நன்றாகவே புரிய, பதில் பேசாமல் அமைதியாக இருந்தான்.

“தனியா பிராக்டிஸ் பண்றீங்களா சார்?எத்தனை பேருக்கு சார் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்?
கேஸுக்கு கவலையே இல்ல. பொண்டாட்டி பிடிக்கிற எல்லா கேசுக்கும் வக்கீல் நீங்க தான்.
வாழ்றீங்க சார்.”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரிது கமிஷனர் அறையில் இருந்து
வெளியே வர,

“அப்பறமா பார்க்கலாம் சார்.”, என்று ரகு நழுவினான்.

அபியை கண்டதும் ரிதுவின் முகம் மலர்ந்தது, “அபிம்மா”, என்று அருகே வர, தன் கோபத்தால்
கறுத்த முகத்தை அவளிடம் மறைக்க போராடியவன், அதில் வெற்றியும் பெற்றான்.

அந்த கேஸ் வேலைகள் முடிந்து அவர்களை அனுப்பி வைத்த அபினவ், ரிதுவிடம் வந்து சற்று
தள்ளி நின்றிருந்த ரகுவைப் பார்த்து கை நீட்டி ஏதோ கேட்க, ரகுவிற்கு உள்ளே உதறல் எடுத்தது.

அவனுக்கு ரிதுவின் நேர்மை மட்டுமல்ல அவளின் கோபமும் நன்றாகவே தெரியும் எனும்போது
அபினவிடம் பேசும் முன் அவன் சற்று யோசித்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை கைமீறி
விட்டதை, அபி ரிதுவிடம் தன்னைப் பற்றி புகார் அளிக்கிறான் எனும் கண்ணோட்டத்தில் கண்ட
ரகு அஞ்சுவதில் தவறோன்றும் இல்லையே.

அவர்கள் பேசுவதை கண்டும் காணாதது போல கவனித்த ரகுவை அபியும் ஓரக் கண்ணால்
பார்த்துக்கொண்டு, அவன் கலங்குவதை திருப்தியாக கண்டவிட்டு, ரிதுவிடம் விடைபெற,

ரிது எழுந்து ரகு இருக்கும் இடம் நோக்கி வந்தாள். ரிதுவின் முகத்தை வைத்து அவளின்
மனநிலையை கணிக்க முடியாமல் ரகு திணறினான். அவள் அவன் முன் வந்து கை கட்டி நிற்க,
ரகுவின் இதயம் ரயில் ஓடும் வேகத்தில் துடித்தது

��அகலாதே ஆருயிரே��
��70��

ரிது ரகுவை நெருங்க நெருங்க ரகுவின் மனதில் பயம் பெருகிக் கொண்டே போனது. அவருக்கு
அருகில் வந்தவள், “என்ன மிஸ்டர் ரகு என் கணவர் என்னென்னவோ சொல்றார்?”, என்று
அவனைப் பார்த்து புருவம் உயர்த்திக் கேட்க,

ரகுவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“அது மேடம்”, என்று அவன் வாய் தந்தியடிக்க,

“என் வீட்டுக்காரர் கேஸ் இல்லன்னு உங்க கிட்ட வந்து கேட்டாரா? இந்த வெட்டி ஜம்பம் எதுக்கு
உங்களுக்கு ?”, என்று அவள் கேட்டதும் அவன் சொன்னதற்கும் இப்போது இவன் கேட்பதற்கும்
நிறைய வித்தியாசம் தெரியவே, “நான் அப்படி ஒன்னும் சொல்லலையே மேடம்”, என்று அவன்
விழிக்க,

“இல்ல ‘எங்க மேடம் வீட்டுக்காரர் நீங்க. எங்க ஸ்டேஷன் கேஸ் எல்லாம் நீங்களே பாருங்க சார்’
ன்னு அன்பா சொன்னீங்களாம்.”, என்று அவள் கேட்க நொந்து போனான்.

இவன் சொன்னதை சொல்லி இருந்தாலே இவள் ருத்திர தாண்டவம் ஆடுவாள். இதில் அபி ஏதோ
மாற்றி பற்ற வைத்துவிட்டு சென்றிருக்கிறான். பதில் சொல்ல முடியாது தவித்தான் ரகு.

“அப்படி சொல்லல மேடம்?”, என்று அவன் திக்க,

“ம்ம் அப்பறம் என்னவாம்?? ரகு.. உங்களுக்கு இன்னும் என்னப் பற்றி சரியா தெரியல.
ஆரம்பத்துல இருந்தே என்கிட்ட விளையாடிக்கிட்டு இருக்கீங்க. நீங்க ஏதோ நல்ல எண்ணத்துல
சொல்ற மாதிரி கேஸ் எடுத்துக்கோங்கன்னு அவர் கிட்ட சொன்னதனால உங்களை வார்ன்
பண்றதோட விடுறேன். இதுவே நீங்க வேற ஏதாவது வம்பு பண்றது போல பேசி இருந்தா
இந்நேரம் நடக்கறதே வேற”, என்று ரிது எச்சரித்து விட்டுச் செல்ல, வாய் இருக்காமல் அபியிடம்
சென்று வம்பு செய்த தன்னை பெரிய மனது பண்ணி காப்பாற்றி இருக்கிறான் அபி என்று
தோன்றியது. ஆனால் அதையும் தான் அவளிடம் அவன் பற்ற வைக்காமல் சென்றிருக்கலாம்
என்று உள்ளே திட்ட அவன் துவங்கும் முன்னரே, ஏட்டு அவனுக்கு முன்னே வந்து, “சார்
இதெல்லாம் போன மாசத்தோட பெண்டிங் கேஸ். மேடம் இன்னும் ரெண்டே நாள்ல இதை
முடிக்கச் சொல்லி உங்க கிட்ட சொல்லச் சொன்னாங்க”, என்று செல்லும் போது அவரிடம்
மரியாதைக்கு பதில் ஏகத்தாளம் தெரிய, கடுப்பான ரகு, “யோவ் என்ன வாய் நீளுது உனக்கு.
அவங்க சொன்னதை இங்க பவ்யமா சொல்லி பைலை வச்சிட்டு போகாம, நீ ஆர்டர் போடுற
டோன்ல பேசுற. பிச்சிடுவேன்.”, என்று எகிறினான்.

“ஓஹ் ஹோ.. அப்படியா சார்? சரிங்க சார். அப்போ நானும் பவ்யமா போய் ஏ.சி மேடத்துகிட்ட
நீங்க அவங்க வீட்டுக்காரர் கிட்ட என்ன பேசுனீங்கன்னு சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்புறேன்
சார்.”, என்று சொல்ல, ரகு திடுக்கிட்டான்.

இடம் பொருள் பார்க்காமல் வாயைக் கொடுத்து தானே சூன்யத்தில் சிக்கிக்கொண்டு விட்ட
உணர்வுடன், இதனால் தான் அபி அவனே ஒரு கதையை ரிதுவிடம் சொல்லிச் சென்றிருக்க
வேண்டும். இல்லா விட்டால் மற்றவர் சொல்வது கேட்டு ரிது தன்னை பந்தாடி விடுவாள் என்றே
தன்னைக் காத்த அபியை முதல் முறை நன்றியோடு நினைத்தவன், ‘லஞ்சம் வாங்க விடாம
பண்ணிடானுங்க. இப்போ வாயவே திறக்க முடியாம ஆக்கிட்டானுங்களே..’, என்று புலம்பியபடி
கேஸ் கட்டுகளை பிரித்து, வேலையில் இறங்கினான்.

அபிக்கு ரிதுவின் குணம் தெரியும் என்பதால் அடுத்தவர் சொல்லி ரகுவை அவள் வாட்டி
எடுப்பதற்கு பதில் அவனே அளவாய் போட்டுக்கொடுத்து, ரகுவை காப்பாற்றி விட்டுச் சென்றான்.
அவனுக்கு ரகுவை பற்றி முன்னமே ரிது சொல்லி கேட்டிருக்கிறான். அவன் பேசியதில் முழுக்க
முழுக்க கோபமும் கடுப்பும் தெரிய, அதற்கான தண்டனை தான் ரிதுவிடம் அவன் மாட்டிவிட்டு
சென்றது.

மாலை ரிது வீட்டிற்கு செல்ல, வீடே வண்ணமயமாக இருந்தது. வண்ண வண்ண பலூன்களும்
காகிதங்களுமாக ஜொலித்த வீட்டை கண்டு, “ஹேய்.. என்ன நடக்குது இங்க. யாரும் எதுவும்
சொல்லல.”, என்று கேட்டு ஹாலில் நிற்க, அவள் கையில் ஒரு கவரை திணித்து, “ரிது இந்த
சாரியை கட்டிக்கிட்டு வா.”, என்று ஸ்வாதி அவளை தோளைப் பிடித்துத் தள்ள, வாசலில் நின்ற
அபியின் வண்டியை வைத்து அவன் வந்து விட்டதை உணர்ந்தவள், “அவர் எங்க?
மாடியிலையா?”, என்று கேள்வி எழுப்ப,

“ரொம்ப தான் உனக்கு.. போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்து உன் வீட்டுக்காரன் கூட பேசேன்”,
என்று வம்பு செய்து அனுப்பி வைத்தாள்.

சில நிமிடங்களில் அழகான அந்த இளமஞ்சள் நிற பட்டு சேலையில் தேவதையாய் வந்த ரிதுவை
ஹாலில் இருந்த சோபாவில் அழகிய மெரூன் பேண்ட் மற்றும் கிரீம் நிற சட்டையில் அம்சமாய்
இருந்த அபி கண்களில்
நிறைந்த அன்போடு நோக்க,

“என்ன அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் அப்படியா?” என்று அவர்களை
கலாய்த்தான் ரிஷி. அவனைக் கண்டதும் அபி, “டேய் மச்சான் இங்க வா.”, என்று அருகே
அழைத்து அமர்த்திக்கொண்டு, “என்ன டா இதெல்லாம்?”, என்று கேட்க,

“உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு. ரெண்டு நாள் ஹனிமூன் போய்ட்டு
வந்ததோட சரி. அவ ஸ்டேஷனுக்கு கேஸ் என்று போனா, நீங்க கோர்ட்டுக்கு கேஸ்னு போறீங்க.
அதான் வீட்ல உங்க ரெண்டு பேர் மேலயும் நான் பெரியவங்க கிட்ட கேஸ் கொடுத்துட்டேன்.”,
என்று அவன் சிரித்தான்.

“என்ன டா கேஸ்?”, என்று ஆர்வமாக ரிது அமர,

“கேஸ்ன்னு சொன்னதும் எப்படி அலையறா பாரு!”, என்று சசி அவளை விளையாட்டாய்
குட்டினார்.

சங்கரி, “அரை வருட திருமண நாளை இவங்க கொண்டாடுற வழியைக் காணோம். அதனால
அதுக்கு அபராதமா இன்னிக்கு அந்த விழாவை நாங்க நடத்த ஒழுங்கா நீங்க ஒத்துழைக்கணும்.
கூடவே நாங்க சொல்ற இடத்துக்கு நீங்க இன்னொரு ஹனிமூன் போகணும்.”, என்றதும்

“ஐயோ அத்தை இன்னொரு ஹனிமூனா? என்ன விளையாடுறீங்க?”, என்று ரிது வேகமாய் எழ,

“விடு அபர்ணா. ஆசைப்பட்டு சொல்றாங்க கேட்போமே.”, என்று சொல்லிவிட்டு “ஆனா இப்போ
இல்லம்மா இன்னொரு மாசம் போகட்டும்.”, என்று தள்ளிபோட, வீடே அவனை மூக்கு முட்ட
முறைத்து.

ரிது மட்டும் கண் சிமிட்டி சிரித்தாள்.
அனைவரும் கடுகடுவென்று முகத்தை வைத்து ஏதோ பேச வர, “கண்டிப்பா அடுத்த மாசம்
போறோம். எனக்கு ஏற்கனவே சில கிளைன்ட் கூட கமிட்மெண்ட் இருக்கு. இல்லனா நான்
அப்படி சொல்லுவேனா?”, என்று அபி பாவமாக முகத்தை வைத்துக் கேட்க,

ரிது சட்டென சிரித்து விட்டாள். அவள் சிரிப்பில் குடும்பமும் சேர்ந்து கொள்ள, கடைசியில்
அபியும் இணைந்தான். மகிழ்ச்சியாய் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்து அவர்கள்

மகிழ்ச்சியாக இருக்க, ரேகா மட்டும் வாடிய முகத்துடன் இருந்தாள். ரிது அவளிடம் சென்று ஒரு
கேக் துண்டை நீட்ட, “வேண்டாம்”, என்று அமைதியாக தலை தாழ்த்தி சொன்னாள் அவள்.

ரிஷி அவள் முன்னே வந்து, “அண்ணி இது இவர்களுக்காக ஆர்டர் பண்ணின கேக் தான்
அப்படின்னாலும், நான் என்ன வாங்கி இருக்கேன்னு பாருங்க. உங்களுக்கு பிடிச்ச பட்டர்ஸ்காட்ச்
கேக்.”, என்று அவள் முகத்தின் முன் நீட்டினான்.

“எனக்காகவா ரிஷி இதை ஆர்டர் பண்ணின?”, என்று ஆசையாய் கேட்டு அதை வாங்கி வையில்
வைத்த ரேகாவின் கண்கள் பனித்தது.

“அண்ணி. நீங்க என்கிட்ட சொன்னது எனக்கு ஞாபகம் இருந்துச்சி. இவங்களுக்கு கேக்ன்னு
பேப்பர்ல எழுதித் கொடுத்தாலே பிடிக்கும். பிளேவர் பத்தின சென்ஸே இவங்களுக்கு கிடையாது.
அப்போ தான் நம்ம அண்ணிக்கு பிடிச்ச கேக்கா வாங்கலாம்ன்னு தோணுச்சு.”, என்று
சொல்லிக்கொண்டே அந்த முழு கேக் துண்டையும் அவளை விழுங்க வைத்திருந்தான் ரிஷி.

இயல்பிலேயே ரிதுவிடமும், ஆருவிடமும் பழகி சகோதர அன்பை கொடுத்துப் பழக்கமானவன்
என்பதால் அழகாய் அதை ரேகாவிடம் பயன்படுத்தினான்.

ரேகாவுக்கு இந்த பாசமெல்லாம் புதிது. அபி ஆரம்பம் முதலே வீண் செலவு செய்யாதே, வீட்டுக்கு
உதவு என்று பெரிய மனிதன் போல அக்காவை அவன் கட்டளை இட்டு பழகியதால் இயல்பான
சகோதர பாசம் இல்லாமல் வளர்ந்த ரேகாவுக்கு ரிஷியின் அன்பு கோடை கால மழையாய்
இருந்தது.

அன்று இரவே ரேகாவை அழைத்துக்கொண்டு நாராயணனும் சசியும் ரிஷியோடு கிளம்ப,
ரிதுவின் வற்புறுத்தலால் விக்னேஷும் அவர்களோடு ரிதுவின் வீட்டில் தங்க கிளம்பினான்.

ரிது அவனை தனியே அழைத்து, “எங்க வீடு எப்படி இருக்கும்ன்னு நான் சொல்லி உங்களுக்கு
தெரிய வேண்டியது இல்ல. அதனால நீங்களும் போங்க. அவங்க கூட இருங்க. உங்களுக்கே
சரியா புரியாத உங்க காதல் அங்க புரியலாம். தனிமையில் மட்டுமே  காதலை உணர முடியாது.
அழகான குடும்பத்துக்கு இடையில் இருக்கற அன்பையும் அன்னியோன்யத்தையும் பார்த்தா
அவங்களுக்கும் அப்படி வாழ ஆசை வரும். அப்போ நீங்க அவங்க பக்கத்துல இருக்கணும். இது
உங்களுக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் விக்கி அண்ணா.”, என்று சொல்ல,

தங்கை சொல்லை தட்டாமல் அவனும் கிளம்பி விட்டான்.

ஆரூ முதல்நாள் ரிது சொல்லிப்போனது போலவே அலுவலகத்தில் ஒரு மாத விடுப்பு சொல்லி
விட்டாள். லதாவே இதை எதிர்பார்க்கவில்லை.  ஆருஷிக்கு வாந்தியும் தலை சுற்றலுமாக இருக்க,
சோர்ந்து சோர்ந்து படுத்தாள். அதையும் மீறி, எழுந்து வந்து வேலை செய்தாள். லதாவுக்கு அது
சங்கடமாக தோன்ற, ‘வேண்டாம், போய் படு’ என்று அவர் தடுத்தும், “இல்ல வேண்டாம், அப்பறம்
நான் வேலை செய்யாலன்னு  சொல்லுவீங்க அத்தை”, என்று சொல்லி சொல்லி, வேலை செய்து
விட்டு பின் அவள் சோர்வாய் படுக்க, லதா தான் வீட்டினர் முன் வில்லியானார்.

அதிலும் ஹர்ஷா, வேலை செய்யும்போதே அவள் வாந்தி எடுக்க வாஷ் பேசினுக்கு ஓட, “ஐயோ
ஐஸ்கிரீம் பார்த்து டி”, என்று பின்னால் ஓடும் போது கூட தாயை முறைத்துவிட்டு செல்வதை
பார்த்த லதா நொந்து போனார்.

இரண்டு நாட்கள் அவள் வீட்டு வேலை செய்கிறேன் என்று அங்கும் இங்கும் சுத்தம் செய்ய,
சோமு, லதாவைப் பார்த்து, “உனக்கே நல்லா இருக்கா இது? மாசமான பிள்ளையை இப்படி
பண்றியே?”, என்று கேட்க,

“நான் அவளை அதெல்லாம் செய்ய சொல்லவே இல்லங்க”, என்று விட்டால் அழுதுவிடுவார்
போல லதா பேச, அதை நம்புவார் யாரும் இல்லை.

லதா மனம் வெறுத்தவராக, ஆருவை அழைத்து ‘வேலை செய்ய வேண்டாம்’ என்று கூற,
அவளோ, “எதுக்கு அத்தை? தனியா இருக்கும் போது செய்ய வேணாம்னு சொல்லுவீங்க.
அப்பறம் எல்லார் முன்னாடியும் திட்டுவீங்க. நான் வேலையே செஞ்சுக்கறேன்.”, என்று பாவம்
போல சொல்ல, லதாவால் அதற்கு மேல் முடியவில்லை. ஏற்கனவே சாந்தலட்சுமி கண்களால்
சுட்டெரிக்காத குறையாக சில நாட்களாக முறைத்து வர, மாமனார் என்னவோ அவள் மாமியார்
கொடுமை செய்வதாக, “இதெல்லாம் அடுக்குமா மா? உன்னை நாங்க இப்படி நடத்தினோமா?”,
என்று கேட்க நொந்து போனார்.

அவர் ஆருவை சீண்ட நினைத்தார், தன்னோடு அவள் சண்டையிடுவாள், அதை வைத்து
மகனிடம் புகார் வாசிக்கலாம், மகன் தனக்கு சாதகமாக பேசுவதை அவளைக் கேட்க வைத்து
வம்பு வளர்க்கவே நினைத்தார். ஆனால் இன்று ரிது செய்து விட்டுப் போன செயலால் லதா
அனைவர் முன்னாலும் கொடுமைக்கார மாமியார் போல தெரிய, அதற்கு மேல் தாங்க
முடியாதவராக அனைவரையும் அழைத்தார்.

“என்ன எதுக்கு எல்லாரையும் கூப்பிட்ட? அதான் நீ சொன்ன மாதிரி மருமகளை வீட்டுக்குள்ள
முடக்கிட்டியே? அப்பறம் என்னவாம்? அவளும் மாங்கு மாங்குன்னு வயித்து பிள்ளையோட
எல்லாம் செய்யறாளே?”, என்று சாந்தலட்சுமி கோபம் கொள்ள,

“அத்தை என்ன நீங்களும் என்னை இப்படி பேசறீங்க? எனக்கு ஒன்னும் அவளை வேலை செய்ய
வைக்கணும்ன்னு ஆசை இல்ல. என் பையனை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாளேன்னு கோபம்
மட்டும் தான் இருக்கு”, என்று கண்ணீர் விட,

“அத்தை நான் எங்க உங்க பையனை உங்க கிட்ட இருந்து பிரிச்சேன்? இங்க தானே இருக்கோம்
ரெண்டு பேரும்?”, என்று புரியாமல் கேட்டு ஆரூ திகைத்தாள்.

“முன்னாடி என் பையன் என் பேச்சை மீற மாட்டான். ஆனா உன்னைத்தான் கல்யாணம்
பண்ணுவேன்னு என்கிட்ட எவ்வளவு சண்டை போட்டான் தெரியுமா? அதெல்லாம் யாரால
உன்னால தானே?”, என்று கேட்க,

“ஹையோ.. அத்தை அவன் கிட்ட நானே அத்தையை பேசி சரி பண்ணறேன்னு சொன்னேன்.
அவன் தான் எங்கம்மா நான் சொன்னா கேட்பாங்கனு சொல்லி உங்க கிட்ட வந்தான். நீங்க
இல்லன்னு சொன்னதும் என்கிட்ட சொன்னது பொய்யாயிடுச்சுனு கோபத்துல உங்க கிட்ட
அப்படி பேசிட்டான். அதுக்கு எவ்ளோ நாள் என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டான் தெரியுமா?”

“அதெல்லாம் சும்மா, இப்போ கூட உன்னை சப்போர்ட் பண்ணி என்னை அடிக்கடி திட்றான்”,
என்று குழந்தையாய் மாறி, தான் குறை கண்ட தன் மருமகளிடமே தன் மகனை அவர் குறை
சொல்ல, சோமு, கோமதி நாயகம், சாந்தலட்சுமி மூவருக்கும் வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு
பட்டனர்.

ஆனால் ஆருவோ, “அட அத்தை நீங்க வேற..  வெளில உங்களையும் உள்ள என்னையும்
திட்டிக்கிட்டு இருக்கான் உங்க பையன். அவனைப் போய் நம்பினீங்களே?”, என்று அவர் அருகில்
வர, “நிஜமா தான் சொல்றியா ஆரூ? அவன் எப்பவும் என்னோட ஹர்ஷா தானா?”, என்று
கேட்டபோது ஆருவின் மனதில் ரிதுவின் வார்த்தைகள் வந்து போயின.

“இங்க பாரு ஆரூ, ப்ரோ வீட்டுக்கு ஒரே பையன். அம்மா செல்லம் வேற. காலேஜ் டயம்ல இருந்து
சரியாவே பேசாம இருந்திருக்கார். அதுக்கு காரணம் அபி. அதனால அபி மேல கோபம். இதுல
நீயும் ப்ரோவும் லவ் பண்ணி கல்யாணம் பண்ண அவர் ஆடம் பிடிச்சது வேற அவங்களுக்கு
கோபம். அவங்களுக்கு என்னை மருமகளாக கொண்டு வர ஆசை. ஆனா நான் கல்யாணம்

பண்ணிகிட்டது அபியை. சோ அவங்க மனசுல அபி மேலயும் உன் மேலயும் கோபம் இருக்கு.
உன்னை கல்யாணம் பண்ணினதுக்கு அப்பறமும் அவர் அம்மா கிட்ட சரியா பேசலன்னாலும்
அவங்களை எதிர்க்காம இருந்தார். ஆனா சமீபமா அதையும் செய்யறார். அப்போ ஒரே பையனை
வச்சிருக்கற அம்மா மனசுல எங்க தன் மகன் தன்னை மொத்தமா விட்டு போயிடுவானோனு பயம்
இருக்கத்தான் செய்யும் ஆரூ. நாம தான் அப்படி இல்லன்னு அவங்களுக்கு புரிய வைக்கணும்.
லதா ஆன்ட்டி கிட்ட கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் இந்த ஒரு மாசத்துல உனக்கு சான்ஸ்
கிடைக்காமயா போகும். அதே நேரம் அவங்களை கொஞ்சம் நல்ல ரகளை பண்ணு.
விளையாட்டா பண்ணு. அவங்களே உன்னை ரசிக்கணும். இல்லனா உனக்கு வேலை
வெச்சிட்டோமேனு வருத்தப்படணும். அதுக்காக பத்ரகாளி மாதிரி ஆடிடாதே செல்லமே.
கொஞ்சம் பார்த்து செய். அவங்க உன் மாமியார். முதல்ல நீ அவங்களை உன் சொந்தமா பாரு.
அப்போ தானே அவங்களும் அப்படி இருப்பாங்க?”, என்று கேட்டது இன்னும் அவள்
செவிப்பறையில் ஒலித்தது.

எழுந்து லதாவின் தோளில் சாய்ந்தவள் ஹர்ஷாவை கண்களால் அழைத்தாள். அவன் வரவும்,
“இந்தாங்க அத்தை உங்க பையன். எப்பவும் அவர் உங்க பையன் தான். நான் என்ன பண்ணிட
முடியும் சொல்லுங்க. நான் அவனுக்கு மனைவி அப்படின்னா நீங்க அவனுக்கு அம்மா.
ஸ்தானத்துல அதான் உயர்ந்தது. எனக்கு அவன் மேல காதல் இருக்கு. அவனுக்கும் என் மேல
அளவுக்கு அதிகமாவே இருக்கு. ஆனா உங்க மேல அவனுக்கு இருக்கிற உணர்வுகள் உங்களுக்கு
தெரியுமா அத்தை. அவர் உங்க மேல கோபப்பட்டார் தான். தான் தவறும் போது திருத்தலைனு
பேசாம இருந்தார் தான். ஆனா அதுவும் நீங்க அவர் மேல வச்ச அளவுக்குள்ள அடங்காத
பாசம்ன்னு எப்போ அவருக்கு புரிந்ததோ, அப்போவே உங்க கிட்ட அவர் சாதாரணமா பேச
ஆரம்பிச்சுட்டார். ஆனா ஆவர் படிப்பு அது இதுன்னு பிஸியா இருந்ததால உங்களுக்கு அது
தெரியாம போயிருக்கலாம். இன்னிக்கு வரையிலும் அவர் அம்மா பையன் தான். எனக்கும் அதுல
சந்தோஷம் தான் அத்தை. உங்களைப் போல என் அம்மா என்னை பக்கத்துல இருந்து
பார்த்துக்கவே இல்ல. எனக்கு அதெல்லாம் சசி ஆன்ட்டி கிட்ட தான் கிடைத்தது. நீங்க அவங்க
பிரென்ட்னு தெரிஞ்சப்போ நான் எவ்வளவு சந்தோசமா இருந்தேன் தெரியுமா? நீங்களும் சசி
ஆன்ட்டி மாதிரி என் கிட்ட அன்பா இருப்பீங்க. நாம ரெண்டு பேரும் சேர்ந்து இவனைக்
கலாய்க்கலாம் அப்படினு பல கனவுகளோட இந்த வீட்டுக்குள்ள வந்தேன் அத்தை. ஆனா நீங்க
என்னை ஏத்துக்கவே இல்ல. அதே நேரம் உங்க கிட்ட பொறுமையா புரிய வைக்கிற அளவுக்கு
நான் பொறுமைசாலி இல்லத்தை. எனக்கு முன்னாடி என் கோபம் வந்து நிற்கும் குணம் எனக்கு.
அதான் இப்படி எல்லாம் நடந்து போச்சு. ஆனா இனி அப்படி இல்லை.”, என்று ஆரூ சொல்லி
விட்டு மூச்சு வாங்க, ஹர்ஷா எழுந்து சென்று அவள் குடிக்க தண்ணீர் கொண்டு வந்தான்.

“தான்க்ஸ் லாலிபாப்”, என்று அவள் வாங்கிக்கொண்டு சிரிக்க, அன்று தான் அவளை கூர்ந்து
கவனித்து லதாவுக்கு அவளின் கள்ளமில்லா சிரிப்பு புரிந்தது. “இத்தனை நாளா கோபமா இருந்த நீ
எப்படி இன்னிக்கு இவ்வளவு பேசுற. எப்பவும் பட்டசாய் பொறிஞ்சு தள்ளுவ..”, என்றார் லதா.

“ரிது தான் சொன்னா, ஆன்டிக்கு பொறுமையா சொன்னா புரியும். ஆனா அதை நீ தான்
செய்யணும். நீ நல்லவன்னு நாங்க சொன்னா அதுக்கு அவங்களுக்கு கோபம் தன் வரும். நீயே
உன் மாமியாரை சரி பண்ணு அப்படின்னு சொன்னா.”, என்று சொல்லி சிரித்தாள்.

“எனக்கு என் பையன் எங்க என்னை விட்டு போயிடுவானோன்னு பயம். நீ அவனை உன அம்மா
வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுவியோன்னு உள்ளே எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா?”,
என்று தாழ்ந்த குரலில் லதா பேச,

“அத்தை நானே அந்த வீட்டுல இருக்க முடியாம தான் லாலிபாப் கிட்ட கேட்டு சீக்கிரமா
கல்யாணம் வைக்க முயற்சி செய்ததே. அப்படி இருக்கும்போது நானே எப்படி அவனையும் அங்க
கூட்டிட்டு போவேன்?”, என்று லதாவிற்கு புரியும் விதமாக கூறினாள் ஆருஷி.

“ஆனா உன் அம்மா அடிக்கடி உன் கிட்ட கண் ஜாடை காட்டுவாங்க நீயும் சரின்னு
தலையாட்டுவ. நான் பார்த்திருக்கேன்.”

“ஆமாம் என் அம்மா சொன்னா மண்டையை ஆட்ட தான் செய்வேன். இல்லனா இடம் பொருள்
இல்லாம திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. தீபாவளிக்கு போய்ட்டு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்.”,
என்று ஆரூ கூற,

“ஆமாம்மா அத்தைக்கு மனசுல பணம் சம்பாதிக்கணும் அப்படின்னு மட்டும் தான் இருக்கும்.
அவங்க அதை தாண்டி  வீட்டுக்கு நேரம் செலவு செய்ய முனையவே மாட்டாங்க. அதான் ஆரூ
ரொம்ப கஷ்டப்படுவா. ஆனா நீ எனக்காகவே எல்லாம் செய்யும் போது, நான் உன்னை விட்டு
போவேனா?”, என்று ஹர்ஷாவும் அவன் பங்குக்கு புரியவைக்க, ஒரு வழியாக லதாவின் முகம்
தெளிந்தது.

அதன் பின் வந்த நாட்கள் ஆருஷி ஹர்ஷாவின் வாழ்வில் வசந்தமான நாட்கள் எனலாம். ஹர்ஷா
முயன்று தொழில் தொடங்கிவிட, ஆபி தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்தான்.
ஆருஷியை லதா நன்றாக கவனித்துக்கொள்ள அவளின் முகம் விகசித்தது.

வேணிக்கு ஒரு கட்டத்தில் மகளின் முகத் திருப்பல்கள் தன் வாழ்க்கை ஓட்டத்தால் தான் என்று
விளங்க, கேசவனின் பேச்சை சற்று காது கொடுத்து கேட்க முயன்றார்.

ஆருஷி அவர்கள் வீட்டு மாடியை அலுவலகமாக மாறி வேலைக்கு இருவரை அமர்த்தி,
ஹர்ஹாவுக்கு தேவையான மாடல்களின் த்ரீ டி(3D) டிசைன்களை செய்து கொடுக்க, லதாவுக்கு
மருமகள் மேல் பெருமை தாங்கவில்லை. மகன் சோபிக்க மருமகள் உழைக்கிறாள் என்று தெரிந்து
அனுசரித்து நடக்க ஆரம்பித்தார் லதா.

மனம் எனும் கண்ணாடியை நாம் எப்படி கையாள்கிறோமோ அப்படியே வாழ்க்கை நமக்கு
திருப்பித் தருகிறது. சில விதிவிலக்குகள் இருந்தாலும் பெரும்பாலும் புரிந்து நடக்கும்
உறவுகளுக்குள் சிக்கல் குறைய நிறைய வாய்ப்புண்டு. இரு பக்க எண்ணங்களையும் பரிமாறிக்
கொள்ளவும், நியாயங்களை அலசவும் கண்டிப்பாக பொறுமை அவசியமாகிறது. அதை
ஆருஷியிடம் விதைத்த பெருமை ரிதுபர்ணாவையே சேரும்.

மூன்று மாதங்களுக்கு பிறகு, ஒருவழியாக அபியையும் ரிதுவையும் கழுத்தை பிடித்து தள்ளாத
குறையாக குடும்பத்தினர் ஹனிமூன் அனுப்ப, இம்முறை ரேகா முகம் நிறைந்த புன்னகையோடு,
ரிதுவிடம் வந்து, “நான் தான் கண்டதை நினைச்சு குழந்தையை தள்ளிப் போட்டு நிறைய தப்பு
பண்ணிட்டேன். காசு பணம் நிறைய இருக்கணும். எல்லாரும் நம்மை ஆச்சர்யமா பார்க்கணும்
அப்படின்னு கனவு கண்ட எனக்கு. அதை நிஜமாக மாற்ற வழி தெரியல. அது அப்படி
மாறினவங்க மேல பொறாமையை உண்டு பண்ணிச்சு. அவங்களை எதிரியா பார்க்க வச்சது. அது
தான் உன்கிட்டையும் எனக்கு நடந்தது. அதுனால பழசை மனசுல வச்சுக்காம  என்னை
மன்னிச்சிடு. சீக்கிரம் எனக்கு ஒரு மருமகளை பெற்றுக்கொடு”, என்று கேட்ட அவளிடம், “அப்போ
என் மருமகன் அங்க குடி வந்தாச்சா?”, என்று ரிது ஆசையாய் அவள் முகம் பற்றி கேட்க,
மகிழ்ச்சியை காட்ட நினைத்தும் முடியாமல் பயத்தை காட்டினாள் ரேகா.

“அண்ணி நான் நிறைய பேரை பார்க்க ஹாஸ்பிடல் போவேன். அங்க எல்லாம் வலியில் அலற
தான் செய்வாங்க. அதுக்கு நான் பயந்தா, பாஞ்சு போய் ஒரு திருடனை பிடிக்க முடியுமா
சொல்லுங்க. பிரசவம் கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். வலிக்கும் தான். ஆனா அது
பெண்களுக்கு இயல்பிலேயே தாங்கக்கூடிய சக்தியை கடவுள் கொடுத்திருப்பார். நீங்க கவலையே
பட வேண்டாம். பாருங்க என்  விக்கி அண்ணா மாதிரி சமத்தா ஒரு பையன் பிறக்க போறான்.”,
என்று ரேகாவை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள். இதுவரை தன் தாயிடம் கூட கிடைக்காத
அரவணைப்பை உணர்ந்த ரேகா தன் தவறுகளுக்காக கண்ணீர் சிந்தினாள்.

அவளை தடுத்து அணைத்த ரிது, “நீங்க என் மாமா பொண்ணு அப்பறம் தான் நாத்தனார். எப்பவும்
நாம மாமா பொண்ணு, அத்தை பொண்ணு போல ஒண்ணவே இருப்போம்.”, என்று சிரிக்க அந்த
சிரிப்பில் ஸ்வாதியும் இணைந்தாள்.

“சரி சரி கிளம்புங்க. குழந்தை எல்லாம் எப்போ பெற்றுக்கொள்ள தோணுதோ அப்போ
பெத்துக்கறது உங்க விருப்பம். ஆனா இந்த ஹனிமூன் உங்களோட தனிமைக்காக. வேலை

வேலைன்னு காணால அப்பப்போ கதை பேசினா பத்தாது. வாழ்க்கையை கொஞ்சம் ரசிக்க நேரம்
வேணும்.”, என்று சங்கரி மருமகளை திட்ட,

“மருமகளை ஹனிமூன் அனுப்ப இவ்வளவு சந்தோசப்படுற ஒரே மாமியார் நீங்க தான்.”, என்று
ஸ்வாதி அவள் பங்குக்கு தாயை கலாட்டா செய்ய, ரிஷியோ, “மாம்ஸ் எனக்கு வரும்போது நல்ல
கம்பளி ஸ்வெட்டர் வாங்கிட்டு வாங்க.”, என்று வேகமாய் கேட்க, “ஆமாம் உனக்கு ஷாப்பிங்
பண்ண தான் சிம்லா போறாங்க பாரு?”, என்று மகேஷ் அவனை கிண்டல் செய்தான். அவனைத்
பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்த ரிஷி, “உங்க பொண்ணு உங்களை பால் விளையாட தேடினாளே.
நீங்க இங்கையா இருக்கீங்க?”, என்று ஸ்வாதியின் மகளை ரிஷி தேட, “அடங்கப்பா…
போட்டுக்கொடுத்துடாதே டா. அவ விடிய விடிய பந்து அடிச்சு என்னை அழ வைக்கிறா.”, என்று
மகேஷ் பயம் காட்ட, “அந்த பயம் இருக்கணும் அண்ணா”, என்று ரிஷி காலரை தூக்கி விட,
சரண்டர் ஆனான் மகேஷ்.

பல கலட்டக்களுக்கு இடையில் அபினவ், ரிதுபர்ணா இருவரும் கிளம்பி சிம்லாவை அடைந்தனர்.
பனி பொழியும் அந்த பிரதேசத்தில், அவளுக்கு அரணாய் அபி அவளை அணைத்துக் கொண்டு
அவர்களுக்கான ஹோட்டலில் தங்கினான். வெளியே பனிப்பொழிவு அதிகமாக இருக்க, ஊர்
சுற்றும் ஆசையை தூர எறிந்தனர்.

கனப்பை அதிகம் செய்து அதற்கு முன்னே அபி அமர, அவன் தோள் சாய்ந்த ரிது அவனிடம்,

“ஏன் அபிம்மா.. நம்ம காதல் எப்படிப்பட்டது?”, என்று கேட்டாள்.

“அதுக்கு விளக்கம் எல்லாம் சொல்ல முடியாது டாலு. காத்திருந்த காதல் கண்டிப்பா கட்டித்தங்கம்
மாதிரி தான் . பாரு என் பக்கத்துல ஜொலிக்கிது.”, என்று அவன் அவள் கன்னத்தை வருட, அந்த
இளம் சூட்டில் ரிது சிலிர்த்து அவன் மீதே சரிந்தாள்.

“ஓரளவு நல்ல நிலைக்கு வேலையில் நாம வந்தாச்சு. அடுத்த கட்டத்துக்கு போகலாமா? உனக்கு
என்ன தோணுது?”, என்று அவளின் முகத்தில் கோலமிட்டபடி கேட்டவனிடம்,

“போகலாம் ஆனா உங்க காதல் எந்த இடத்திலும் குறையவே கூடாது. சரியா?”, என்று
சிறுபிள்ளையாய் வாக்கு கேட்ட அவளை அணைத்து சிரித்த அபிக்கு அவன் போனில் இருந்த
அந்த ஒன்று நினைவுக்கு வந்தது. அதை ரிதுவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவன்
சிந்திக்க,

“என்ன ஆழ்ந்த யோசனை..? கோலம் பாதியில் நிற்குது? ஒருவேளை மறந்து போச்சா? நான்
ஹெல்ப் பண்ணவா?”, என்று குறும்பு செய்ய,

“இல்ல டாலு.. உன்கிட்ட ஒன்னும் சொல்லணும்.. இல்ல இல்ல.. காட்டணும்.”,
என்று நகர்ந்தவன் செல்போனில் எதையோ தேட, அவனையே விழியகலாமல் பார்த்தாள் ரிது.
அவனின் கார்கால மேகம் போன்ற சிகை முன்னே வந்து நெற்றியில் புரள, அதை ஒதுக்கி,
விளையாடிய அவளிடம் சிணுங்குவது அபியின் முறையானது.

அவன் தொடு திரையில் எதையோ ஒளித்து வைத்து, அவளின் கண் மூடச் சொல்ல, புரியாத ரிது,
கண்ணை மூடிக்கொண்டு, “என்ன செய்யப்போறீங்க அபிம்மா.. எனக்கு என்னவோ போல
இருக்கு”, என்று சொல்ல,

அவளின் முன் செல்போனை நீட்டி, கண்ணை திறக்கச் சொல்ல அதில் தெரிந்த வரை படத்தைக்
கண்டு திகைத்தாள் ரிது.

“அபி.. அபி.. இது..”, என்று அவள் தந்தியடிக்க,

“இது நீ தான். என்னோட பதினெட்டு வயசுல இருந்து நம்மை கல்யாணம் வரை என்னோட
அபர்ணாவா நான் தினமும் பேசினது இதோ இது கூடத்தான். உன்கிட்ட இதை சொல்ல
நினைப்பேன். ஆனா பயம்மா இருக்கும்.”, என்று அபினவ் சொல்ல,

“இதில் பயப்பட என்ன இருக்கு அபி. எனக்கு நீங்க என் மேல் வச்ச காதல் தான் தெரியுது.”, என்று
அவனை அணைத்தாள்.

அந்த செல்போனை மீண்டும் மீண்டும் பார்த்தும் தெவிட்டவில்லை ரிதுவுக்கு. அதில் அவள்
பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மாணவியாக வந்ததற்கு செய்தித்தாள் பேட்டி
எடுக்கும் போது எடுத்த புகைப்படத்தை தத்ரூபமாக வரைந்திருந்தான் அபினவ்.

“எப்படி நீங்க என்னை கண்டு பிடிச்சீங்க?”, என்று கேட்க, “எனக்கு அந்த நியூஸ் பேப்பர்
பார்த்துக்கு அப்பறம் எப்போ அபர்ணானு நினைத்தாலும் அந்த ரிதுபர்ணா தான் நினைவுக்கு
வந்தா. என்னால அதை சட்டுனு ஒதுக்க முடியல. அதுனால நானே என் அபர்ணாவுக்கு ஒரு

வடிவம் கொடுக்க நினைத்து வரையலாம்னு முயற்சி செஞ்சா அங்கையும் அந்த ரிதுபர்ணாவே
வந்தா. அதுக்கு மேல நான் என்னை குழப்பிக்க விரும்பல. என் அபர்ணா இப்போதைக்கு இப்படி
தான் இருப்பானு நினைத்து வாழுவோம். நாளைக்கு அவள் வரும்போதே தானே அந்த பிம்பம்
மாறும்ன்னு நினைச்சேன். ஆனா நீ.. நீ அப்படியே வந்து நின்ன பாரு. என்னால.. அதை இந்த
நிமிஷம் கூட நம்ப முடியல. எத்தனை வருஷ தவம் தெரியுமா? எதார்த்தமா கடக்கற சிலரை மறக்க
முடியாம இருப்போம். ஆனா சிலர் நம்ம வாழ்க்கையில் முக்கியமானவர்களா இருப்பாங்க. நீ என்
வாழ்க்கையாவே இருந்த. நீ இருக்கிற இடம் தெரிஞ்சும், உன்னைப் பற்றி தெரிஞ்சுக்க நிறைய
வாய்ப்பு இருந்தும் நான் உனக்காக காத்திருந்தேன். நீயும் எனக்காக நிறைய செய்திருக்க. நம்ம
காதலை எந்த வரையறைக்குள்ளயும் கொண்டு வர நான் தயாரா இல்ல. நீயும் நானும் நாமா மாறி
ரொம்ப வருஷம் ஆச்சு. என்ன இன்னும் கூட நமக்கு பேசிக்க நேரம் அமையல.”, என்று அவளை
தலையில் முட்டினான். அவளும் இழைந்தாள். அழகிய அவர்கள் அன்பு அந்த தனிமையில் பல
வார்த்தைகளால் அங்கே விவரிக்கப்பட்டது அவர்களுக்குள். புரிதலை தாண்டிய பகிர்வுகளும்
காதலுக்கு அவசியமானது என்பதை இருவரும் உணர்ந்தனர்.

அந்த தனிமை அவர்களை ஆட்கொள்ள, அபி ரிதுவை ஆட்கொண்டான். வெளியில் இரும்பாய்
இருக்கும் அவள் அவனுக்கு மட்டும் கரும்பாய் இனித்தாள்.

ஐந்து வருடங்களுக்கு பிறகு,

“என்ன ரிது செய்யற, நேரம் ஆச்சு.”, என்று சங்கரி குரல் கொடுக்க, “இருங்க அத்தை
வந்துட்டேன்.”, என்று சமையல் அறையில் இருந்து பதில் வந்தது.

அங்கிருந்து வந்த வாசனையை நுகர்ந்தப்படி ராகவேந்தர் நாளிதழில் மூழ்கி இருக்க, “ரெண்டு
நாள்ல வீட்டுல விசேஷம். ஆச்சுன்னு கிளம்புவோம்னு இருக்காளா பாருங்க மா.”, என்று ஸ்வாதி
தன் தாயிடம் ரிதுவை செல்லமாய் போட்டுக்கொடுக்க,

“நீயும் உன் அக்கா மாதிரி அங்க கிளம்பி போயிருக்கலாம்ல, ஏன் இப்படி என் ரிதுவை படுத்துற”
என்று சங்கரி மருமகளுக்கே துணை நிற்க, “போங்கம்மா”, என்று செல்லமாய் சிணுங்கி விட்டுச்
சென்றாள் ஸ்வாதி. அவளின் மகனும் மகளும் பெரியம்மாவுடன் ஏற்கனவே சென்றிருக்க, வீட்டுல
அபி, ரிது, ராகவேந்தர், சங்கரி,  ஸ்வாதி, ஆரவ் மட்டுமே இருந்தனர்.

ரிது, “அத்தை அந்த அல்வாவை ஆறியதும் டப்பால போட்டு வச்சிடுங்க. நான் போய்
ரெடியாகிட்டு வர்றேன்”, என்று மாடிக்கு விரைந்தாள். அங்கே இன்னும் படுக்கையை புரண்ட
கணவனை இடையில் கிள்ளி விட்டு குளியலறைக்குள் அவள் ஓடி விட,

“டாலு நான் பாவம் இல்லையா? மூணு நாளா அலைச்சல். இப்போ தூங்கினா தான் உண்டு.
அடுத்த மூணு நாள் மூச்சு விடக் கூட நேரம் இருக்காது”, என்று சொல்ல,

“அதானே நல்லா தூங்குங்க.. அதானே உங்களுக்கு முக்கியம். என்னோட பேசி மூணு நாள் ஆச்சு.
நான் கூட எங்க டா நம்ம வக்கீலைய்யா நம்மளை மிஸ் பண்ணிட்டாரோன்னு கொஞ்சம்
சந்தோசப்பட்டுட்டேன். இன்னிக்கு கொஞ்சமாவது கண்டுப்பீங்க பார்த்தேன். டூ பேட்”, என்று
உள்ளிருந்து குரல் கொடுக்க,

“உள்ள இருக்கிற தைரியம் தானே உனக்கு வெளில வா உன்ன வச்சிக்கறேன்.”, என்று அபி
அவளை பிடிக்க தயாராக குளியலறை வாசலில் நிற்க,

“மம்மி வெளில வராத. டாடி வெயிட் பண்றார். இரு நான் போய் சப்போர்ட்க்கு சங்கு பாட்டியை
கூட்டிட்டு வர்றேன்”, என்று கூறிக்கொண்டே அவர்கள் செல்வ மகன் ஆரவ் அறையை விட்டு
ஓடப் பார்க்க,

“அவனை பிடிங்க அபி மானம் போயிடும்.”, என்று குளியலறை கதவை திறந்து தலையை
வெளியே நீட்டிய அவளை வளைத்து அறைக்குள் இழுத்து கதவடைத்தான்.

“ஏன் டாலு, நானே உன்னை பார்க்க, பேச கூட நேரமில்லைனு பீல் பண்ணிக்கிட்டு, கடமை
அழைக்குதேன்னு ஓடுறேன். என்னை கிண்டல் பண்றியா நீ? “, என்று அவள் கழுத்து வளைவில்
வாசம் பிடிக்க,

“ஐயோ விடுங்க அபி அத்தை வந்துடப் போறாங்க.”, என்று அவள் அவனை உதற முயன்றாள்.

“யாரு உன் மாமியார் தானே? வந்துட்டாலும்… நம்ம ஆருயிர் புத்திரன் போய் சொன்னதும்,
அப்பாவை அம்மாவே சமாளிப்பாங்க கண்ணு அம்மா போலீசாக்கும் என்று உன் பெருமை பேசி
அவனை ஆஃப் பண்ணி இருப்பாங்க. நம்மை பற்றி அம்மாவுக்கு நல்லாவே தெரியும். இப்படி
அறிதா கிடைக்கிற நம்ம தனிமையை அம்மா என்னைக்குமே டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க. குட்டி
பயலும் பண்ணக் கூடாதுன்னு தான் நான் அவனை போக விட்டேன்.”, என்று அவளிடம்
பேசிக்கொண்டே அவனுக்கு தேவையானதை அவளிடம் பெற்றுக் கொண்டான் அவளின் அன்புக்
கணவன்.

“என் வேலையும் உங்க வேலையும் நம்மை அதிக நேரம் தனிமையில் சந்திக்க முடியாம செய்யுது.
உங்களுக்கு வருத்தம் இன்னும் இல்லையே அபி”, என்று அவன் கன்னம் வருட,

“அதெல்லாம் ஒன்னும் இல்ல டாலு.”, என்று அவனும் தயாராகி இருவரும் கீழே வர, அனைவரும்
கிளம்பி காரில் ஏறியதும்,  கார் சாலையில் வேகம் பிடித்தது.

கார் போகும் திசையை கவனித்த ஸ்வாதி, “ஏய் ரிது இன்னிக்கும் ஆபிஸ் போகற ஞாபகமா? இந்த
பக்கம் போற?”, என்று கேட்க,

“அச்சோ சின்னத்தை இது அம்மா ஆபிஸ் ரோடு இல்ல, ஆரூ மம்மி வீட்டுக்கு போகற வழி.
தெரியாதா?”, என்று தன் புத்திசாலித்தனத்தைக் காட்டினான் ஆரவ்.

“டேய் அம்மா போலீஸ், அப்பா வக்கீல் உன் பேச்சுக்கு யாரும் சொல்லித்தரவே வேண்டாம்
வாய்.. வாய்..”, என்று செல்லமாக அவனை கொஞ்சியவள்,

“இப்போ எதுக்கு ரிது ஆரூ வீட்டுக்கு போகிறோம். நேரம் ஆகுது. அங்க தாத்தா பாட்டி மாமா
அத்தை எல்லாரும் காத்திருப்பாங்க. நாம  நேரத்தோட போக வேண்டாமா?”, என்று கேட்க,

“நீங்க சொன்ன மொத்த கூட்டமும் அவங்க தானா பாருங்க?”, என்று ரிது கைகாட்ட, ஆருஷி
வீட்டு வாசலில் காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர் அனைவரும்.

பெரிய பட்டாளமே திரண்டிருக்க, ஸ்வாதி தான் விழித்தாள். இறங்கி உள்ளே செல்ல, ஆரவ்
வேகமாக பெரியவர்கள் கால் சந்துகளில் புகுந்து “குல்பி அக்கா..” என்று ஓட, “வா டா பஞ்சு
மிட்டாய்” என்று அவனை அணைத்தாள் ஆருஷி, ஹர்ஷாவின் செல்ல மகள் ஆஷா.

ஆருஷி ரிதுவைக் கண்டு தாவி வர, டிபன் பாக்சில் இருந்த அல்வாவை நீட்டினாள் ரிது. “ஹாப்பி
பர்த்டே ஆரூ செல்லம்”, என்று கொஞ்ச,

ரிஷி அவர்களுக்கு இடையில் புகுந்தான்.

“என்னை ஞாபகம் இருக்கா உங்க ரெண்டு பேருக்கும். என்னோட பேசி நாலு நாள் ஆகுது”, என்று
அவன் குற்றப்பத்திரிகை வாசிக்க,

“அடேய்.. நீ ஏன் டா எங்க போனை எதிர்பாக்கற? உன் வருங்கால மனைவி கூட கடலை
போடாம ஏன் டா எங்களை படுத்துற?”, என்று ஆரூ அவன் காதை திருக, “நீ பேசாத ஆரூ அக்கா.
ரிது அக்காவாவது கேஸ் நேரத்துல போன் பண்ணினா பார்த்துட்டு அப்பறம் கால் பண்ணி
பேசுறா. ஆனா நீ அந்த கம்ப்யூட்டருக்குள்ள தலையை விட்டா வெளில எடுக்கறதே இல்ல. பாவம்
ஆஷா குட்டி”, என்று மருமகளை துணைக்கு அழைக்க, அவளோ,

“நான் ஏன் மம்மியை தேடப்போறேன். எனக்கு லதா பாட்டி, கொள்ளு பாட்டி கூடவே நேரம்
சரியா இருக்கு”, என்று பெரிய மனுஷி போல பேசிய அந்த ஐந்து வயது ஆஷா அப்படியே
ஹர்ஷாவின் சாயல்.

“மாமனை கவுத்துட்டாயே கண்ணம்மா”, என்று அவளை தூக்கி சுற்றி இறக்கினான் ரிஷி.
“என்னை என்னை”, என்று தாவி வந்த ஆரவையும் தூக்கி சுற்ற, வீடே ஒரே சந்தோஷ அலை.

லதா அனைவருக்கும் காபி கொடுக்க, சற்று நேரத்தில் ஆருஷி முதல் அனைவரும் கிளம்பி சசி
வீட்டிற்கு சென்றனர்.

மாலை மண்டபத்திற்கு செல்ல வேண்டும். நாளை மறுநாள் ரிஷியின் திருமணம். கல்யாண
வேலை முழுவதும் பொறுப்பேற்று செய்வது ரேகா தான். ரேகா ரிஷியை தன் சகோதரனுக்கும் ஒரு
படி மேலே பார்த்தாள். அவள் அவர்கள் வீட்டில் தங்கி இருந்த அந்த ஒரு மாதம் முழுவதும் ரிஷி
அவளை தனிமையை அண்ட விடாமல் பேசி, சிரித்து, விளையாடி, பல புத்தகங்கள், பல அழகிய
இடங்களை அவளுக்கு அறிமுகம் செய்தான். அவளின் பார்வையை விசாலப்படுத்திய பெருமை
நாரயணனுக்கும் ரிஷிக்குமே சேரும்.

சசி அவள் உடல் நலம் தேற அருமையாக சமைத்து, அவளுக்கு கைவேலை, கோலம் என்று
அவரும் அவளுடனே நேரம் கழிக்க, ரேகாவின் தவறுகள் யாருமே சொல்லாமல் தானே
சுயஅலசலில் அவளுக்கே புலப்பட்டது. தன்னை மாற்றிக்கொள்ள அவளும் தயாரான
மனநிலையில் இருக்க, அதன் பின் விக்னேஷ் மற்றும் அவனின் தாயாருடனான அவள் வாழ்க்கை
கட்டிக் கரும்பாய் இனித்தது. அன்று முதல் இன்று வரை ரேகாவின் வாழ்க்கையில்
முக்கியமானவன் ரிஷி. அவனின் திருமணத்தை தானே முன்னின்று செய்ய அவள் ஆசைப்பட,
நாராயணனோ, சசியோ அதை தடுக்கவே இல்லை. அவளுக்கு இப்போது மூன்று வயதில் அழகிய

மகள் ரியா இருந்தாலும் அவள் முதலில் மகனாய் நினைப்பது ரிஷியை தான். என்று அடிக்கடி
சொல்லிக்கொள்வாள் அனைவரிடமும்.

ரிஷி அந்த சுபயோக சுப தினத்தில் அவனின் அழகிய குடும்பத்தில் இன்னொரு நல்முத்தாய்
ஷிவதாவை இணைத்துக்கொண்டான்.

அவனின் திருமணத்தை கண்குளிர கண்ட ரிதுவும் ஆருவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி, “நம்ம
பின்னாடி பேட் எடுத்து துரத்திட்டு வருவானே அந்த ரிஷியாடி இது? நாள் எவ்வளவு வேகமா
போயிடுச்சு இல்ல..”, என்று
ஆரு சொல்ல,

“என்னைக்கும் நாம இப்படியே இருப்போம் ஆரூ. நாளும், வயசும் தான் மாறும், நம்ம அன்பும்
பாசமும் என்னைக்கும் மாறாது”, என்று சொல்ல, “ஆமாம் சிஸ்டர் சொல்றது சரி தான்”, என்று
ஹர்ஷா வர, அபியும் அவர்களோடு இணைந்தான்.

ரிஷி தன் தாத்தா பாட்டியை முன்னே அழைத்து அவர்கள் பாதம் பணிந்து முதல் ஆசைகளை பெற,
ரங்கசாமியும் கனகமும் நெகிழ்ந்து போனார்கள். அவனுக்கு பின் அனைத்து ஜோடிகளும்
பெரியவர்களிடம் ஆசி பெற்றது. இத்தனை ஆண்டுகள் தனிமையில் கழித்த அவர்களுக்கு, ரிதுவும்
ரிஷியும் தாயையும் மாமாவையும் பேசியே சரி கட்டி, பெரியவர்களை குடும்பத்தோடு இணைத்து
மகிழ்ந்தனர்.

மற்றொரு மேடையில் ஷ்ரவன் அவனின் இசைக்குழுவோடு பாடல் பாடி மணமக்களை வாழ்த்த,

சாந்தலட்சுமி கோமதிநாயகம், சசிகலா நாராயணன், சங்கரி ராகவேந்தர், வேணி கேசவன், ரேகா
விக்னேஷ், ஸ்வாதி மகேஷ், நித்திலன்- அகவழகி என்று பெரிய வரிசையில் நிறுத்தி ஒரே
நேரத்தில் அனைவரிடமும் ஆசி பெற்றனர் ரிஷி – ஷிவதா தம்பதி.

கல்யாண களேபரம் முடிந்து அவரவர் கிளம்ப, நாற்காலிகளில் சோர்ந்து அமர்ந்த அபினவ்,
ஹர்ஷா இருவருக்கும் ரிதுவும் ஆருஷியும் காபி கொடுக்க, “அப்பாடா.. இப்போதான் நம்ம
குடும்பமே நிறைந்து இருக்கிறது போல இருக்கு. எல்லாம் இப்படி இருக்கறதுல எவ்ளோ
சந்தோசம் இல்ல பங்கு?”, என்று அபி ஹர்ஷாவின் மேல் சாய,

“எனக்கு எப்பவும் நீ தான் டா கண்ணுக்கு தெரியற. யார் வந்தாலும் யார் போனாலும் உன்னோட
இருப்பு தான் என் வாழ்க்கையை மகிழ்ச்சியா வாழ காரணம். எனக்கு இன்னிக்கு இல்ல, எப்போ
உன்னை பார்த்தேனோ அப்பவே நிறைவா உணர ஆரம்பிச்சுட்டேன் பங்கு”, என்று உணர்ச்சி
மிகுதியில் கூறினான்.

“லாலிபாப் சொல்றது உண்மை தான் எனக்கு ரிதுவும், லாலிபாப்க்கு ஜே.பியும் எப்பவுமே
ஸ்பெஷல் தான். என்னைக்கு நாம இப்படியே இருக்கணும்..”, என்று தான் கண்களில் ஆனந்த
கண்ணீருடன் உயிர் போன்ற நட்பை அகலாமல் இருக்கக் கடவுளை ப்ரார்த்தித்தாள் ஆரூ.

ரிது அவளை ஒருபுறம் அணைக்க மறுபுறம் ஹர்ஷா அணைத்தான். மூவரையும் இணைக்கும்
சங்கிலியாய் எப்போதும் இருக்கும் அபினவ் இன்றும் அவர்கள் மூவரையும் அகலாமல் தன்
கைச்சிறைக்குள் வைத்தான்.

அன்பெனும் கூட்டில் அழகிய நட்பும் காதலும் கொண்ட இந்த நால்வரும் அகலாத ஆருயிராய்
வாழ்க்கையை தொடர வாழ்த்தி விடை பெறுவோம்..

நன்றி.

என்னை ஊக்கப்படுத்திய அன்பான வாசக நண்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 
உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் நண்பர்களே. ஆவலாக இருக்கிறேன்.

நன்றியுடன்

ஜெயலட்சுமி கார்த்திக்

3 thoughts on “அகலாதே ஆருயிரே-66-70 (முடிவுற்றது)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *