Skip to content
Home » கானல் பொய்கை 2

கானல் பொய்கை 2

பி.ஜி.என் அப்பார்ட்மெண்ட்ஸ், வாலஸ் கார்டன், நுங்கம்பாக்கம்…

உயர்நடுத்தரவர்க்கத்தினர் ‘கேட்டட் கம்யூனிட்டி’ வகையறா குடியிருப்பு அது. அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மனைவியோடு தனது வீடு இருக்கும் ஐந்தாவது தளத்தை அடைய மின்தூக்கியின் முன்னே நின்றான் பாலா.

அவனது விரல்களுக்குள் பின்னி பிணைந்து கிடந்த பாரதியின் விரல்கள் ஒருவித குறுகுறுப்பை அவனுக்குள் விதைத்து கிளர்ச்சியை உண்டாக்கின.

ஃப்ளாட்டைத் திறந்து கூடடைந்த உணர்வோடு தன் இணையைத் தழுவியவனுக்கு மருந்துவர் பிரியம்வதாவின் அறிவுரை நினைவுக்கு வந்தது.

அணைப்பை விடாமல் இறுக்கியபடியே சோபாவில் தன்னோடு சேர்த்து அவளை அமர வைத்துக்கொண்டவன் வெண்டை பிஞ்சுவிரல்களை சொடுக்கிட்டவாறே பேச ஆரம்பித்தான்.

“குட்டிமா”

“ம்ம்”

“உன்னைப் பத்தி நிறைய விசயத்தை நீ என் கிட்ட மறைச்சிருக்க… ஏன்டி?”

மெல்லிய கிசுகிசுப்பான குரலில் பாலா கேட்கவும் பாரதியின் உடல் தூக்கி வாரிப்போட்டது.

“என்னங்க சொல்லுறிங்க? நா… நான் எதை மறைச்சேன்?” திகிலுடன் கேட்டாள் அவள்.

பாலா அவளை விசித்திரமாகப் பார்த்தபடி விரல் நுனிகளில் மீசை முடிகள் உரச முத்தமிட்டான்.

“இதுக்கு ஏன் இவ்ளோ டென்சன் ஆகுற? டாக்டர் கிட்ட உன்னைப் பத்தின விவரம் எல்லாம் ஃபில்-அப் பண்ணிக் குடுத்தல்ல… அதை அவங்க என் கிட்ட காட்டுனாங்க… நீ நல்லா கதை எழுதுவியாமே? ஏன் என் கிட்ட சொல்லல?”

மீண்டும் கிசுகிசுப்பாக ஒலித்த அவனது குரல் அவளை பெரும் அவஸ்தைக்குள் தள்ளியது. இனம்புரியாத மயிர்க்கூச்செரிதல் அவளது மேனியில் நடந்தேற பாரதி தனது காலின் பெருவிரலை அமர்ந்திருந்த சோபாவின் காலில் வேகமாக இடித்துக்கொண்டாள்.

“அவ்ஸ்… அம்மாஆ”

பெருவிரல் இடித்ததில் உண்டான வேதனையில் மயிர்க்கூச்செரிதல் அடங்கி சமனிலைக்குப் பாரதி வந்துவிட்டாலும் “என்னாச்சு குட்டிமா? ஏன்டி கத்துன?” என பதறிவிட்டான் பாரதி.

“க்க்கால்”

வேதனையில் துளிர்த்த கண்ணீரோடு அழுகையாய் பாரதியின் குரல்.

பாலா குனிந்து அவளது கால் பெருவிரலை ஆராய்ந்தவன் அது கன்றி சிவந்து போயிருக்கவும் கோபத்தோடு நிமிர்ந்தான்.

“ஏன்டி உன்னையே நீ காயப்படுத்திக்கிற? இப்ப என்ன கேட்டுட்டேன்? எழுதப் பிடிக்குமானு கேட்டேன்… அதுவும் நானா கேக்கல… உன் கைப்பட நீயே எழுதிக் குடுத்ததை டாக்டர் சொன்னதால கேட்டேன்… அதுக்காக இப்பிடி செய்வியா? இன்னும் எத்தனை நாளுக்கு இப்பிடி புரியாத புதிரா இருக்கப் போற பாரதி?”

கோபத்தில் ‘குட்டிமா’ பாரதியாகப் போய்விட உஷ்ணமாக அவன் கேட்கவும் பாரதியின் கண்கள் கண்ணீரின் வசிப்பிடம் ஆகிவிட அவளது கன்னங்களோ கண்ணீர் உருண்டோடும் ஓடுதளங்களாகின.

அவள் விசித்து அழுவதைக் காணப்பொறுக்காதவன் தன் மார்போடு சேர்த்துப் புதைத்துக்கொண்டான்.

அணிந்திருந்த ஹென்லே டீசர்ட்டையும் தாண்டி கண்ணீரின் சூடு அவன் தேகத்தைத் தொட்டதும் தவித்துப்போனான் பாலா.

பாரதியின் பெரிய கருவிழிகள் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். இவளைத் தான் பெண் பார்க்கச் செல்கிறோமென அன்னையின் வாட்சப் தகவலோடு ஒட்டி வந்த புகைப்படத்தில் அவனை முதன்முதலில் கவர்ந்தவை அந்தப் பெரிய கயல்விழிகளே!

“பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசலாமா?” என அவன் கேட்டபோது மிரட்சியின் ரேகைகள் படர்ந்த அவளது விழிகளில் விழுந்தவன் தான், இதோ இப்போது வரை அதிலிருந்து எழும் எண்ணமே வரவில்லை.

பாரதியின் அழுகை மெதுவாக அடங்கியதும் கன்னங்களைப் பற்றி அந்தக் கருவிழிகளை ஆழ்ந்து நோக்கினான்.

ஏதோ ஒரு தவிப்பு அவளை வேதனையில் ஆழ்த்துகிறது! கருவிழிகள் மனதைக் காட்டும் கருவியாக அவள் அனுபவிக்கும் வேதனையை அவனுக்குச் சொல்லிவிட பாரதியின் நெற்றியோடு நெற்றியை ஒட்டிக்கொண்டவன் கண் மூடி சிறிது நேரம் அப்படியே இருந்தான்.

சொல்லப்போனால் அவளுக்குமே இந்த நெற்றி முட்டல் அவசியமாக இருந்தது. என்னவோ தனக்குள் இருக்கும் வேதனையை பாலாவின் ஸ்பரிசம் மட்டுப்படுத்துவதாக பிரமை அவளுக்கு.

வினாடிகள் நிமிடங்களாகி ஓடிவிட பாரதியை விடுவித்தவன் அழுத்தமாக அவளது கன்னங்களைப் பற்றிக்கொண்டான்.

“உன்னை நீயே காயப்படுத்திக்குறதுக்கான காரணம் என்னனு உன் கிட்ட துருவி துருவி கேக்கப்போறதில்ல… எதுக்காக நீ தற்கொலை பண்ண நினைச்சனு கூட நான் கேக்கமாட்டேன்… உன் கிட்ட ஒரே ஒரு ரெக்வஸ்ட் வைக்குறேன்… எனக்காகக் கேப்பியா?”

ஆமோதிப்பாய் அவளது சிரம் அசைந்தது.

“டோண்ட் ஹார்ம் யுவர்செல்ஃப் அட் எனி சிச்சுவேசன்… அப்பிடி உன்னையே நீ காயப்படுத்திக்கிட்டா தான் திருப்தினு தோணுச்சுனா என்னை நினைச்சுக்க… நான் உன் பக்கத்துல இருந்தா என்னை கட்டி அணைச்சுக்க… உன் மனசை டிஸ்ட்ராக்ட் பண்ணுறதுக்காக என்ன வேணும்னாலும் செய்… பட் இந்த மாதிரி காயப்படுத்திக்காத… எனக்காக இதை செய்வியா பாரதி?”

சத்தியம் கேட்பவனைப் போல வலது கரத்தை நீட்டினான் பாலா.

பாரதிக்கோ ‘என்னை அணைத்துக்கொள்’ என்றவனிடம் ‘உன் அருகாமை தான் என்னை நான் காயப்படுத்திக்கொள்ளும் சூழலுக்குத் தள்ளுகிறது’ என்பதை எப்படி சொல்வதென புரியாத நிலை.

இருப்பினும் மனங்கவர்ந்த கணவன் திருமணமானதிலிருந்து முதல் முறையாக அவளிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது மாபெரும் பாவமாகத் தோன்றியது.

“சத்தியமா இனிமே நான் என்னைக் காயப்படுத்திக்கமாட்டேன்ங்க… என்னை நீங்க நம்பலாம்” என்றாள் மனதிலுள்ள கலக்கத்தை மறைத்தபடி.

பாலா மனைவியின் மனதிலோடும் எண்ணங்களை அறியாதவனாக நிம்மதியோடு புன்னகைத்தான்.

“குட் கேர்ள்” என்று பாராட்டி நெற்றியில் முத்தமிட்டவன் அவளை இலகுவாக உணரவைக்க சிரிக்க சிரிக்க பேசினாலும் உள்ளுக்குள் அவனுமே கலங்கித் தான் போயிருந்தான்.

மனதுக்குள் ஆழிப்பேரலையாய் எண்ணங்களும் சந்தேகங்களும் அடுத்தடுத்து எழுந்து கொண்டிருக்கின்றன. அவற்றை அடக்க அரும்பாடுபட்டவன் மனைவியிடம் நகைச்சுவையாய்ப் பேசி அவளைச் சிரிக்க வைத்து நிலமையின் தீவிரத்தை நீர்த்துப் போக வைத்தான்.

பேச்சிலும், சிரிப்பிலும் நேரம் பறந்தோட இருவரும் சேர்ந்து இரவுணவைச் சமைக்க ஆயத்தமானார்கள்.

காய்கறி நறுக்கும் இலாகா பாரதியுடையது. பாலா உப்புமாவுக்காக ரவையை எடுத்தபடி மனைவியிடம் அரட்டையடித்துக் கொண்டிருந்தான்.

“என் ஃப்ரெண்ட்ஸ் யாருக்குமே உப்புமா பிடிக்காது… நாங்க பேச்சிலர் ரூம்ல தங்கியிருந்தப்ப கொரானா லாக்டவுன் டைம்… அப்ப இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் வச்சே சமாளிப்பானுங்க… என்னால அதைச் சாப்பிடமுடியாது… மொத்த வீடும் அலறுனாலும் நான் ரவா உப்புமா, சேமியா உப்புமா, சம்பா ரவா உப்புமா, அரிசி உப்புமானு செஞ்சு சாப்பிடுவேன்… இன்னைக்கு என் கைமணத்தை நீ பாக்கப் போற குட்டிமா… ஆனா எனக்கு ஒரு சத்தியம் பண்ணிக் குடு”

இப்போது என்ன சத்தியம்? விசித்திரமாகப் பார்த்தாள் பாரதி.

“என் உப்புமாவ சாப்பிட்டதும் அதோட டேஸ்டுல மயங்கி விழுறது, ஐயோ உங்களைப் போல யாருக்கும் உப்புமா செய்யவராதுனு புகழ்மாலை பாடுறது, என் உப்புமா சுவைக்காக எனக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கிறது இதெல்லாம் செய்யமாட்டேன்னு சத்தியம் பண்ணு”

ஒரு கரத்தால் மர ஸ்பாசுலாவை தோளில் வைத்துக்கொண்டு மற்றொரு கரத்தை சத்தியம் வாங்குபவனைப் போல நீட்டி படு தீவிரக்குரலில் அவன் சொல்லவும் பாரதியால் பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அவள். சிரிப்பின் முடிவில் கண்ணீர் துளிர்த்த விழிகளோடு அவள் அவனை ஏறிடவும் பாலாவிற்கு பெருமை பிடிபடவில்லை.

இத்தனை நாட்கள் வேதனையில் கண்ணீர் விட்டவளை இன்று சந்தோசமாகச் சிரித்து கண்ணீர் விடவைத்த கர்வம் அவனுக்கு.

 மனம் இதமாக உணர்ந்தது. தனது விருப்ப உணவை தன் மனதை ஆள்பவளுக்கு ஆசையாகச் சமைத்துக்கொடுத்து பரிமாறி அவள் சாப்பிடுவதை சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

பாரதி உப்புமா சாப்பிட ஸ்பூனை எடுக்கவும் “அட உப்புமாக்கு எதுக்கு ஸ்பூன்?” என பிடுங்கியவன் சர்க்கரை பாட்டிலை எடுத்து தட்டின் ஒரு ஓரமாகச் சர்க்கையை அள்ளி வைத்தான்.

“கொஞ்சூண்டு உப்புமா, நிறைய சீனி, இதுக்கு இடையில கடிபடுற வெங்காயம், கடுகு, கருவேப்பிலை – இந்த காம்பினேசனை அடிச்சிக்க உலகத்துல யாரும் இல்ல குட்டிமா… சாப்பிட்டுப் பாரு” என்று சொல்லிவிட்டு தட்டை அவள் பக்கம் நகர்த்தினான்.

பாரதி அவன் சொன்னது போல சாப்பிட்டுப் பார்த்தவள் “சூப்பரா இருக்குங்க” என்று கண்கள் மலரச் சொன்னபடி அடுத்த வாய் சாப்பிடப்போக அவசரமாக அவள் கரத்தைப் பற்றித் தன் வாய்க்குள் உப்புமாவோடு திணித்துக்கொண்டான் அவன்.

“என்ன பண்ணுறிங்க?” சிணுங்கினாலும் கணவனின் செயலில் பூத்த வெட்கத்தையும் சிலிர்ப்பையும் மறைக்காமல் அடுத்த வாய் ஊட்டிவிட்டாள் பாரதி.

சாப்பிடும்போதே விரல்கள் அவனுடைய பற்களிடம் மாட்டி செல்லக்கடிகள் வாங்கிக்கொள்ள செல்லச்சிணுங்கலும், கேலிச்சிரிப்புமாக இரவுணவு இனிதே முடிவடைந்தது.

உடலை உறுத்தாத காட்டன் புடவையை மாற்றிவிட்டு இரவுடையை அணியப்போனவளை அவளது கணவன் விட்டால் தானே!

“ப்ச்! ஷேரிய மாத்தணும்ங்க”

“அதுக்கு ஹெல்ப் பண்ண தான் நான் இருக்கேன் குட்டிமா”

அவனது பெரிய கரங்களில் ஒன்று புடவை கொசுவத்திலும் மற்றொன்று வெற்றிடையிலும் அழுத்தமாகப் பதிந்ததும் திக்குமுக்காடிப் போனாள் பாரதி.

“நைட்டி மாத்திக்கிறேன்ங்க” கிசுகிசுப்பாய் ஒலித்தது அவளது குரல்

“அதுக்கு அவசியமே இல்லடி”

சொன்ன சொல்லைக் காப்பாற்றி இரவுடையை மாற்றுவதற்கு அவசியமே இல்லாத சூழலை உருவாக்கிப் பாரதியைத் தனக்குள் பொதிந்துகொண்டான் பாலா.

பிரியாவிடை கொடுக்கப்பட்டு ஓரமாய் கிடந்த புடவை தளிர்மேனியை விட்டு ஏனடா என்னை அகற்றினாய் என அவனைச் சபித்தது.

அதெல்லாம் பாலாவின் காதுகளில் விழுமா என்ன? அவன் தான் காதல் மயக்கத்தில் மனைவியிடம் சரணடைந்திருந்தானே.

அமைதியான நீரோடையாய் இருந்த பெண்ணவள் சமுத்திரராஜனாக இருகரம் கொண்டு தன்னை அடக்கிக்கொண்ட கணவனிடம் இரண்டறக் கலந்தாள்.

அழகான கூடலில் தனது தேடலைக் கலந்து காமத்தையும் காதலையும் மனைவிக்குப் பள்ளியறை பாடமாகச் சொல்லிக்கொடுத்தவன் கூடலின் முடிவில் முத்தாய்ப்பாக அவள் நெற்றியில் முத்தமிட்டு “ஐ லவ் யூ குட்டிமா” என்று ஹஸ்கி குரலில் முணுமுணுத்தான்.

பாரதிக்கோ திக்குத் தெரியாத காட்டின் நடுவில் தனியே நிற்பது போன்ற பிரமை. கரம் கொடுத்து அழைத்து வரவேண்டிய கணவனின் தேடல் நெற்றி முத்தத்தோடு முடிவடைந்துவிட பெண்ணவளோ இங்கே நட்டாற்றில் நிற்பவளைப் போலானாள்.

பாலாவின் கரம் அப்போது மென்மையாய் அவளது கன்னத்தை வருடவும் ஆயிரமாய், லட்சமாய், கோடியாய் அவளுக்குள் பெருவெடிப்புகள் நிகழ்ந்தேறின.

கட்டுக்குள் அடங்காத சிலிர்ப்பு! அடங்கியே தீரவேண்டுமென்ற தவிப்பு! சோபாவில் அமர்ந்திருந்த போது உண்டானதே அந்த மயிர்க்கூச்செறிதல் மீண்டும் ஆரம்பித்தது.

அவ்வளவு தான்! பாரதியின் இதயம் தடதடத்தது. என்ன செய்து இந்த உணர்வை நிறுத்துவேன் நான்? பித்துப் பிடித்தவளைப் போல யோசித்த பெண்ணுக்கு அருகே கிடந்த கணவனிடம் மாலையில் செய்து கொடுத்த சத்தியம் நினைவுக்கு வந்தது.

இல்லை! நான் என்னைக் காயப்படுத்திக்கொள்ளக்கூடாது! அதே நேரம் இவ்வுணர்வைக் கட்டுக்குள் கொண்டு வந்தேயாக வேண்டும்! என்ன செய்வேன் நான்?

தாயிழந்த பிள்ளையாய் தவித்துப்போனவள் விருட்டென புடவையை அள்ளிச் சுருட்டிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தாள்.

சட்டென கணவனின் இரும்புப்பிடியைக் கரத்தில் உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள்.

“நீ எனக்குச் சத்தியம் பண்ணிருக்க”

“மறக்கமாட்டேன்ங்க… குளிச்சிட்டு வந்துடுறேன்”

பாலா அவளது கரத்தை விடுவிக்கவும் வேகமாக குளியலறைக்குள் ஓடிப்போனவளுக்குள் இன்னுமே உணர்வுகளின் அடங்காத ஊழித்தாண்டவம் முடிவுக்கு வரவில்லை.

அங்கே இருந்த நீர்க்குழாய்களைப் பார்த்தாள். ஒன்றைத் முடுக்கிவிட்டா;ல் ஷவரில் சுடுநீர் வரும் குழாய். மற்றொன்று குளிர்ந்த நீருக்கானது.

உணர்வுகளின் கொந்தளிப்பைச் சமாளிக்க முடியாமல் ஏதோ யோசித்தவள் சுடுநீர் குழாயை முடுக்கிவிட ஷவரிலிருந்து கொதிநீர் அவள் மேல் விழுந்தது.

முதலில் இதமாக, பின்னர் சற்றே சூட்டுடன், அதன் பின்னரோ உடலே எரியும்படியான அதீதச் சூட்டோடு!

உடலில் கொதிநீரின் எரிச்சல் வேதனையை உண்டாக்கியதும் அவ்வளவு நேரம் இருந்த உணர்வுகளின் கொந்தளிப்பும், மயிர்க்கூச்செறிதலும் மெல்ல மெல்ல அடங்கி பாரதி நிதானத்துக்கு வந்தாள். சுடுநீர் எரிமலை லாவாவைப் போல அவள் மேனியைத் தீண்டிக்கொண்டிருக்க அதை நிறுத்திவிட்டுக் குளிர்நீர் விசையை முடுக்கினாள்.

இப்போது சூடு கொஞ்சமாகத் தணிந்து குளிர்ந்த நீர் குற்றாலச்சாரலாய் அவள் மீது தூவ ஆரம்பித்தது.

மனமும் உடலும் அவள் சொல்ப்பேச்சு கேட்கும் பிள்ளைகள் ஆன பிறகு ஈர உடலில் புடவையைச் சுற்றியபடி வெளியே வந்தவள் படுக்கையில் பாலா உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டுச் சத்தம் எழுப்பாமல் வார்ட்ரோபிலிருந்து காட்டன் நைட்டியொன்றை அணிந்துகொண்டாள்.

கொதிநீரின் சூடு பட்ட மேனி புண்ணாகவில்லை என்றாலும் கொஞ்சம் எரிச்சல் எடுத்தது. இந்த எரிச்சல் எல்லாம் அவள் சற்று முன்னர் அனுபவித்த உணர்வுகளின் கொந்தளிப்புக்கு முன்னே ஒன்றுமேயில்லை.

என்ன செய்வது? வேதனையின் உச்சத்தில் தானே மனமும் உடலும் அந்த உணர்வுக்கொந்தளிப்புகளை மறக்கின்றன. கணவனுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தின்படி அவளை அவள் காயப்படுத்தவில்லை. இந்த வேதனை இன்னும் சிறிது நேரத்தில் அடங்கிவிடும். ஆனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படியே தொடர்வது? இதற்குத் தீர்வு தான் என்ன? யோசித்து யோசித்துத் தலைவலி கண்டு அதோடே உறங்கிப்போனாள் பாரதி.

9 thoughts on “கானல் பொய்கை 2”

  1. Kalidevi

    Etho nadanthu iruku barathi ku atha apadi panra avan kuda Co operate panathuku apram ethukaga antha unarvugal avala ivlo imsai panuthu papom ena nu

    1. நன்றி சிஸ். காரணம் கொஞ்சம் சென்சிடிவ் ஆனது. அடுத்தடுத்த எபிகள்ல அது தெரியவரும்.

  2. Fellik

    ஓரளவு என்ன பிரச்சினைனு கெஸ் பண்ண முடியுது. இதுக்கு ஒரு வகையில் அவள் எழுதிய கதைகள் காரணமோ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *