Skip to content
Home » அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

அந்தபுரத்தில் ஒரு நந்தவனம்-15

15

“அப்படியானால் மரம் விழுந்து பாஸ்கரரும் ராணியாரும் இறக்கவில்லை என்கிறீர்களா

மந்திரியாரே?” எதிரே அமர்ந்திருந்த மன்னர் சுந்தர உடையாரை பார்த்து கொண்டே மந்திரி

குணநாதனை கேட்டார் வீர ரெகுநாத பூபதி.

மந்திரி குணநாதனும் சுந்தரரை பார்த்து கொண்டே ரெகுநாதரிடம் மேலும் தொடர்ந்தார்.

“ஏனெனில் அப்போது அம்மிக்கல்லே தூக்கி அடிக்குமாறு காற்றடிக்கும் ஆடிமாதமும் இல்லை.

பெருமழை அடிக்கும் ஐப்பசி மாதமும் இல்லை. அதுவும் அன்று எப்போதும் இருக்கும் காற்று கூட

இல்லை. இன்னும் சொல்லப்போனால் பூமித்தாயே சற்று சிரமபரிகாரம் செய்து கொள்ளும்

ஆவணி மாதம். பூமியே உற்சாகத்தில் இருக்கும் வசந்த காலம்.”

ரகுநாதருக்கும் பாஸ்கரரின் கதையைக் கேட்கும் போதெல்லாம் மனதில் எழும் சந்தேகம் தான்

இது. ஆனால் இதுவரை யாரிடமும் இதைப் பற்றி பிரஸ்தாபதித்தது இல்லை. இன்று

இவர்களாகவே இதைப் பற்றி பேசவும் இத்தனை வருடங்கள் தன் மனதின் ஆழத்தில் இருந்த

கேள்வி வாயில் வந்து விட்டது.

நீண்ட யோசனையில் இருந்த மன்னர் சுந்தர உடையார் தன் நினைவிலிருந்து தன்னையே மீட்டு

கொண்டவராய் இருக்கையில் சரிந்து உட்கார்ந்திருந்தவர் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து

கொண்டார். “எனக்கும் இந்த சந்தேகம் ஏற்பட்டதில்லை என்றா நினைக்கிறீர்கள் ரகுநாதரே?”

ராணி பாக்கியலட்சுமியின் மறைவுக்கு வந்து விட்டு பாஸ்கரின் உடல்நிலையை கருத்தில்

கொண்டு அவர் அங்கே தங்க நேர்ந்த போது அவருக்கும் பாஸ்கருக்கும் இடையே ஏற்பட்ட

அந்தரங்க ஆலோசனைகள் இப்போதும் அவர் கண்களுக்குள் அப்படியே இருக்கிறதே. மறக்க

முடியுமா என்ன?

“ஓருவேளை பாஸ்கருக்கு பெண் கொடுக்கும் முறை உடைய வேட்டுவமங்கலத்தின்

சம்பந்தகாரர்கள் தான் தங்கள் அரச குடும்பத்தின் பெண்கள் அரசாள வேண்டிய இடத்தில்

பாக்கியலட்சுமி வந்து விட்டார் என்று அவரை தீர்த்து கட்ட சதி திட்டம் தீட்டி இருப்பார்கள்

என்று நினைத்தோம். அதிலும் குறிப்பாக பாஸ்கரின் தாய்மாமன் அல்லிக்குளம் அரசர்

தண்டாயுதபாணியை தான் அதிகம் கண்காணித்தேன். ஏனெனில் தண்டாயுதபாணியின் மகள்

விசாலாட்சி தான் சிறுவயது முதல் பாஸ்கரிடம் உரிமை கொண்டாடுவது. எனவே நானும்

பாஸ்கர் அவளைத் தான் திருமணம் முடிப்பார் என்று நம்பியிருந்தேன். அப்படித் தான்

அவர்களுக்குள்ளும் ஏற்பாடாகியிருந்தது.

பாஸ்கரின் திருமணம் முடிந்த பின்பும் கூட தண்டாயுதபாணியும் பாஸ்கரின் பெற்றோரும்

அதிலும் குறிப்பாக பாஸ்கரின் தாயாரும் விசாலாட்சியையும் திருமணம் செய்து கொள்ள

பாஸ்கரை வற்புறுத்தினார். பாஸ்கரோ திட்டவட்டமாக பாக்கியலட்சுமியை தவிர வேறு

யாரையும் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்..

விசாலட்சியோ சிறுவயதிலிருந்து பாஸ்கரையே தன் கணவனாக மனத்தால் வரித்து கொண்டு

விட்டதால் அவரை தவிர தனக்கு வேறு வாழ்க்கை இல்லை என்று ஒரே பிடிவாதம் பிடித்தாள்.

பெரியவர்கள் எத்தனையோ சமாதனம் செய்தும் கேளாமல் ஒருநாள் தற்கொலை செய்து கொண்டு

விட்டாள் அந்த பெண்.

அதில் தண்டாயுதபாணிக்கு பாஸ்கரிடம் தீராத பகை ஏற்பட்டு போய்விட்டது. “நீ தன்னை

திருமணம் செய்து கொள்ளவில்லை என்று என் ஒரே மகள் இறந்து போனாள். இருக்கட்டும். நீ

எப்படி இந்த பெண்ணுடன் வாழ்ந்து விடுகிறாய் என்று பார்க்கிறேன்?” என்று சூளுரைத்து

சென்றார் தண்டாயுதபாணி.

ரெகுநாதர் யோசனையுடன் சுந்தரரை கேட்டார்.”தண்டாயுதபாணிக்கு பாக்கியத்தைக்

கொல்வதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அவர்கள் ஏன் அவசியம் இல்லாமல் பாஸ்கருக்கு

ஊறு விளைவிக்க வேண்டும்?”

“ஒருவேளை பாஸ்கரரின் தாயாதிகள் தான் நாட்டை அபகரித்துக் கொள்வதற்காக

செய்திருப்பார்களோ?”

“இப்போதும் அதே கேள்வி தான். உங்கள் கூற்றுப்படி பாச்கரரைக் கொல்வதற்கு அவர்களிடம்

காரணம் இருக்கிறது. ஆனால் ஏன் பாக்கியத்தைக் கொல்ல வேண்டும்?”

“ஒருவேளை திவான் வில்வநாதனின் வேலையாக இருக்குமோ?”

“இருப்பதற்கு வாய்ப்பில்லை?”

“எப்படி இத்தனை திட்டமாக சொல்லுகிறீர்கள்?”

“அப்படித் தான். ஏனெனில் பாஸ்கரருக்கு திவானிடம் நல்ல அபிப்பிராயமும் பிரியமும்

இருந்திருக்கிறது. என்ன இருந்தாலும் இருவரும் ஒன்றாகவே வளர்ந்தவர்கள் அல்லவா! மேலும்

பாக்கியத்தை மனம் முடிக்க பாஸ்கருடன் உடன் இருந்தவர் திவான் தான் என்ற நன்றி

உணர்ச்சியும் கூடவே இருந்தது. அதனால் தான் தங்கள் காலத்திற்குப் பிறகு ரோகிணியை

வளர்த்தெடுக்கும் பொறுப்பை அவரிடம் கொடுத்தது.”

“தங்கள் நாட்டை பரிபாலனம் செய்த அளவிற்கு இந்த விஷயத்திலும் நீங்கள் மிகவும்

மெனக்கெட்டு இருக்கிறீர்கள் அரசே”

“வேட்டுவமங்கல்த்தின் எதிரிகள் என்று நான் சந்தேகப்பட்ட அனைவரையும் இத்தனை

வருடங்களாக கண்காணித்து வந்தும் என்ன பிரயோசனம்? ஆனால் பாஸ்கர் கொலை செய்ய

பட்டதாக அறுதியிட்டு உறுதியாக கூறுவதற்கு தகுந்த ருசு எதுவும் நம்மிடம் இல்லை.”

“அப்படி என்றால் இதை இயற்கை மரணம் என்று சொல்லி விடலாம் தானே”

“தெரியவில்லை. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்” அத்தோடு இந்த பேச்சுக்கு

முற்றுபுள்ளி வைத்தார் சுந்தரர் .

சற்று நேரம் அமைதி நிலவியது. சுந்தரரின் மௌனத்தைக் கலைக்க விரும்பாமல் மந்திரியும்

ரகுநாதரும் அமைதியாகவே இருந்தார்கள். நீண்ட வருடங்களாக தன் மனதில் வைத்திருந்த காரண

காரியங்களை இன்று வெளிப்படையாக விவாதித்ததன் பேரில் தன் மனதில் ஓங்கி உயர்ந்து

அலை எழுப்பிக் கொண்டிருந்த உணர்சிகள் அடங்கும் வரை மன்னருமே அமைதியாக இருந்தார்.

ஒருவாறாக நினைவுகளின் கோரப்பிடியில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டவராக சுந்தரர்

கேட்டார்.” ரகுநாதரே தங்கள் மகனிடமிருந்து என்ன செய்தி வந்துள்ளது?” என்று.

“எல்லாம் நல்ல செய்தி” குரலில் தெம்பு கூடியிருந்தது.

”ஓ அப்படியா.! முதலில் அதை சொல்லும்”

“இருவரும் திருமணம் செய்ய ஒப்புக் கொள்வதாக செய்தி கொண்டு வந்திருக்கிறான் சேவகன்.”

“அவனை இங்கே வர சொல்லுங்கள்”

“நல்லது”

உள்ளே வந்த கருணாகரன் மன்னர் சுந்தரரை கண்டு மிகவும் பவ்யமாக முன்னால் வளைந்து

கும்பிடு போட்டான்.

“வீரையன் கோட்டை இளவரசரும் வேட்டுவமங்கல்த்தின் இளவரசியும் திருமணம் செய்து

கொள்ள முடிவெடுத்திருக்கிறார்கள். உங்களிடம் தெரியப்படுத்தி தாங்கள் மேற்கொண்டு என்ன

செய்ய வேண்டும் என்ற உத்திரவைப் பெற்று வரப் பணித்தார்கள் மன்னா”

“ரோகிணியே உன்னிடம் நேரிடையாக சொன்னாளா?”குரலில் சிறு நிம்மதி இருந்தது சுந்தரருக்கு.

“ஆம் அரசே”

“நல்லது.” கையை அசைக்கவும் கருணாகரன் வெளியேறி விட்டான்.

அப்போது ராணி ரங்கநாயகியும் வீரையன் கோட்டை ராணி லட்சுமி தேவியும் உள்ளே

வந்தார்கள். அமர்ந்திருந்த ரெகுநாதரும் குணநாதரும் எழுந்து அவர்கள் இருவரையும் பார்த்து

முகமன் கூறி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டார்கள்.. மந்திரி குணநாதர் எழுந்து

மன்னரை வணங்கி விட்டு ரெகுநாதரை பார்த்து தலையசைத்து விட்டு கிளம்பினார். .”

“ரகுநாதரே நீர் இன்னும் முறைப்படி என்னிடம் பெண் கேட்கவில்லை இன்னும்” அவர் குரலில்

உற்சாக துள்ளல் இருந்தது. ரகுநாதர் ஏதும் சொல்லும் முன்பே லக்ஷ்மி தான் கேட்டாள்.

“எங்கள் விஜயனுக்கு ரோகிணியை மட்டுமன்றி எங்கள் சேகரனுக்கு தங்கள் குமாரத்தி

அமுதாவையும் தருமாறு கேட்கிறோம் அரசே” லட்சுமி தேவியின் குரல் மிகவும் அமைதியாக

ஆனால் உறுதியாக இருந்தது.

ரங்கநாயகியின் பக்கம் திரும்பி பார்த்தார் சுந்தரர்.

“அண்ணியார் என்னிடமும் கேட்டார்கள்” அண்ணியார் என்று லட்சுமியை ரங்கநாயகி

குறிப்பிட்டதன் மூலம் இந்த சம்பந்தத்தில் தனக்கும் சம்மதம் தான் என்று குறிப்பால்

உணர்த்தினாள்.

அதற்குள் ரெகுநாதர் அவர் மனைவியின் பக்கம் திரும்பி கொஞ்சம் முறைத்தார் போல ஒரு

பார்வை பார்த்தார்.

“அண்ணன் அவர்களே, அண்ணியாரிடம் கோபித்து கொள்ள வேண்டாம்”

“கோபித்துக் கொள்ளவில்லை மகாராணி. ஆனால் இளவரசி அமுதாவை சேகரனுக்கு கேட்கும்

தகுதி நமக்கு வேண்டும் அல்லவா?”

“ஏன் தகுதியில்லாமல்? அதற்கும் மேல் உரிமை இருக்கிறது ரகுநாதரே” சுந்தரரின் குரலில்

தென்பட்ட மகிழ்ச்சியை பார்த்து ரெகுநாதருக்கு தெம்பு வந்தது.

குச்சியை விட்டு குளத்தின் ஆழம் பார்ப்பதைப் போல உண்மையில் லக்ஷ்மியை விட்டு

சேகரனுக்கு அமுதாவைக் கேட்க சொன்னதே அவர் தானே. சுந்தரர் கொடுத்தால் சந்தோஷம்.

மறுத்தால் லக்ஷ்மி ஆர்வக் கோளாறில் கேட்டு விட்டாள் என்று மன்னிப்பு கேட்டு விடலாம். நம்

தலை தப்பும் என்று கணக்கிட்டு அதை லக்ஷ்மியுடன் சேர்ந்து திட்டமிட்டு ஒத்திகைப் பார்த்துக்

கொண்டதும் ரகுநாதரே தான்.

“ரெண்டு சம்பந்தத்தை முடித்து விட்டீர்கள். மூத்தவனாக குமரன் இருக்கிறானே. அவனுக்கு என்ன

ஏற்பாடு செய்திருக்கிறீர்கள் ரகுநாதரே?”

“ஆம். உம்முடைய மைத்துனர் மகள் இருக்கிறாள் அல்லவா. நல்லது. அப்படியானால் மூன்று

திருமணத்தையும் ஒரு சேர நடத்தி விடலாம். சம்மதம் தானே.”

“சம்மதம் தான் அரசே”

“சரி. நான் ஒருமுறை வேட்டுவமங்கலத்திற்கு போய் வருகிறேன். ரோகிணியைப் பார்த்து நீண்ட

நாட்களாகிறது. அப்படியே விஷயத்தை திவானிடம் சொல்லி ரோகணியைத் தயார் செய்து

கொள்ள சொல்ல வேண்டும்”

“நானும் உங்களுடன் வருகிறேன்” ராணியார் சொல்லவும் அதுவும் சரி தான்” என்றார் சுந்தரர்.

“அரசே..” தயங்கிய ரகுநாதரைப் பார்த்து “இன்னும் என்ன தயக்கம் ரகுநாதரே. எதுவாக

இருந்தாலும் சொல்லும்” என்று உற்சாக மனநிலையில் இருந்து மாறாமல் சொன்னார் சுந்தரர்.

“இப்போது தாங்கள் வேட்டுவமங்கலத்திற்கு வர வேண்டாம் என்று ரோகிணியே சொல்லி

அனுப்பியிருக்கிறார்கள்”

“ரோகிணியா ..?”என்று திகைப்புடன் கேட்டவர் புன்னகைத்தார்.

“விஜயனும் தான். எங்களையும் வர வேண்டாம் என்று சொல்லியனுப்பியிருக்கிறான்” என்றார்

ரகுநாதன்.

“காரணம் இல்லாமல் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்”

சக்கரவர்த்தியான தன்னை தான் வளர்த்த சிறு பெண்ணும் அவள் திருமணம் செய்து கொள்ளப்

போகும் மணவாளனும் தன்னை அவர்கள் இடத்திற்கு வர வேண்டாம் என்று சொன்ன பொது

இயல்பாக வர வேண்டிய கோபம் துளிர்க்காமல் அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று

யோசித்த சுந்தரரை அவர் பெருந்தன்மையை மனதிற்குள் வாழ்த்திக் கொண்டு பின் பேச

ஆரம்பித்த ரெகுநாதன் தயங்கி தயங்கி விஜயன் கருணாகரன் வாய்வழி செய்தியாக சொல்லி

அனுப்பியதை சொல்ல தொடங்கினார்..

பாஸ்கரரின் சாசனப்படி ரோகிணி திவானின் பொறுப்பில் விடப்பட்டதும் அவளை வெளியுலக

தொடர்பில்லாமல் செய்து விட்டதும்,சுந்தரர் வரும் போது ரோகிணியை தலைவிரி கோலமாக

அவர் முன் நிற்க வைத்ததையும் கல்வி கற்பிக்க வந்த ஆசிரியரை அடிக்கிறாள் கடிக்கிறாள்

பிராண்டுகிறாள் என்று புரளி கிளப்பி விட்டதையும் அடிக்கடி காட்டுக்கு ஓடிப் போகிறாள் என்ற

காரணம் சொன்னதையும் எல்லாவற்றுக்கும் மேலாக ரோகிணியை சித்திரவதை செய்ததையும்

சொல்லி முடித்த போது திவானை நம்பிய குற்றத்திற்காக தான் அவரை கிஞ்சித்தும்

சந்தேகப்படாமல் முழுமையாக நம்பியதையும் நினைத்து தன்னையே நொந்து கொண்டார்.

மகாராணியோ கண்களில் தாரை தாரையாக கண்ணீர் சிந்தியவாறு இருந்தாள்.

பாஸ்கரையும் லட்சுமியையும் திவான் கொன்றிருப்பாரோ என்று தான் சந்தேகப்பட்டு அவரை

கண்காணிக்க செய்தோமே, அவர் ரோகிணியை சரியாக பராமரிக்கிறாரா என்று

கண்காணிக்காமல் விட்டு விட்டோமே என்று தன்னை தானே குற்றபடுத்தி கொண்டார்.

சிறுவயதிலிருந்தே பாதாள சிறையில் எப்படி எல்லாம் ரோகிணியை சோறு தண்ணீர் இல்லாமல்

இருட்டறையில் போட்டு சித்திரவதை செய்தார் என்பதை சொல்லி வந்த போது ரங்கநாயகி

கண்ணீர் விட்டு கதறி அழவே தொடங்கி விட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக பத்து தடியன்களை ரோகிணியிடம் அனுப்பி அவளை பலாத்காரமாக

பயமுறுத்தியதாக சொன்ன போது சுந்தரர் கொதிப்பின் உச்சகட்டத்தில் இருக்கையை விட்டு எழுந்து விட்டார்.

“இப்போதே அந்த வில்வநாதனின் தலையை பனங்காயை சீவுவதைப் போல சீவி விடுகிறேன்”

“சற்று அமைதியாக இருங்கள்” மன்னா”

“அமைதியாக இருப்பதா? எப்படி இருக்க முடியும் ரகுநாதரே? ரத்தம் கொதிக்கிறதே. கற்பனையில்

கூட காண அஞ்சும் செயலை செய்தவனை எப்படி விட முடியும்?”

“தண்டிக்க வேண்டாம் என்று சொல்வேனா? எதிரியிடம் நம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தேச

துரோகிகளை விட அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவன் அல்லவா வில்வநாதன்”

“நீங்களே சொல்லி விட்டீர்கள்” உறுமினார் தன்னிலை மறந்த சுந்தரர்.

“அரசே விஜயன் சொன்னதை சொல்கிறேன். கொஞ்சம் நிதானமாக இருங்கள்”

விஜயன் என்ற பெயரைக் கேட்டதும் சற்று அமைதியானார் சுந்தரர். ரோகிணியின் துயர்

அறிந்தவன். அதிலிருந்து அவளை மீட்டெடுக்க கூடிய ஒரே ஒரு ஆள். அவளை மணக்கப்

போகிறவனும் கூட. அவன் அவளிடத்தில் அக்கரையில்லாமாலா இருப்பான். மேலும்

வேட்டுவமங்கலத்தின் உட்சூட்சுமம் அறிந்தவன். அதனால் அவன் சொல்வதில் ஏதேனும் காரணம்

இருக்கும். சற்றே நிதானப்பட்டவராக இருக்கையில் மீண்டும் அமர்ந்தார். எனவே ரகுநாதரே

மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

“வேட்டுவமங்கலம் இன்றைய தேதிக்கு கும்பினியாரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. எனவே

திவானை கும்பினியாரின் சட்டப்படி தான் தண்டிக்க முடியும். அவர்களோ ஒரு நாயை

தண்டிப்பதாக இருந்தாலும் சாட்சிகளின் படித் தான் தண்டிப்பார்கள். நமக்கோ திவானுக்கு

எதிரான சாட்சிகள் ஏதும் இல்லை. பிராது கொடுக்கும் ரோகிணியின் சாட்சியை ஏற்க

மாட்டார்கள்”

“ஆமாம்.”

“ரோகிணியின் திருமணம் முடிந்து ஆட்சி பொறுப்பு விஜயன் கையில் வரும் போது திவானை

சரியாக தண்டிப்போம்.”

“வேறு வழி? திருமணம் முடியும் வரை பொறுத்திருப்போம்”

“அது தான் நல்லது. மேலும் விஜயனின் அபிப்பிராயம் என்னவென்றால் திவானின் குற்றங்களை

நாம் இனம் கண்டு கொண்டோம் என்று காட்டிக் கொள்ளாமல் இருப்போம். அவன் எதையாவது

கண்டு கொண்டால் நமக்கு எதிராக எதிராளியுடன் சேர்ந்து கொண்டு சதித்திட்டம் தீட்டுவான்”

ராணி ரங்கநாயகியின் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது. அவளை

சமாதானப்படுத்தும் விதமாக சுந்தரர் சொன்னார். ”இப்போது தான் எல்லாம் நல்லபடியா முடிந்து

விட்டதே. ரோகிணிக்கு நல்லபடியாக திருமணம் முடிந்து விட்டால் எல்லா வேதனைகளும் தீர்ந்து

விடும். விஜயன் சாமர்த்தியசாலியாக இருக்கிறான் தேவி. அவன் நல்லபடியாக ரோகிணியையும்

வேட்டுவமங்கலத்தையும் காப்பாற்றிக் கொள்வான். அழாதே.”

தன்னிடம் விவரங்களை கேட்டறிந்தவர் எப்படி விஜயனை சாமர்த்தியக்காரன் என்று சொல்கிறார்

என்று ஆச்சரியப்பட்டார் ரகுநாதர். அவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தார் சுந்தரர். அதன் பொருள் புரிந்து ரகுநாதரும் புன்னகை புரிந்தார்.

ரகுநாதர் திவானின் லீலைகளை சொல்லிக் கொண்டிருந்த போது சுந்தரர் அனுப்பிய

மணமகன்களை ரோகிணியைக் கொண்டே எப்படி விரட்டி அனுப்பினார் என்று விளக்கிய போது

இளைஞனாக இருந்தாலும் விஜயன் சாமர்த்தியமாக அதை முறியடித்து திருமணத்திற்கு

ரோகிணியின் சம்மதத்தையும் பெற்ற விதத்தைக் கேட்டு சுந்தரர் சிலாகித்துக் கொண்டார்.

விஜயனை நினைத்து ரெகுநாதரும் மனதிற்குள் மகிழ்ச்சி அடைந்து கொண்டார். இத்தனை

கதையையும் மெளனமாக கேட்டு கொண்டிருந்த லட்சுமி தேவி

தன் மூத்த மகன் குமரன் பல போர்களங்களை கண்ட பெரிய வீரனாக இருந்தும் ரோகிணியை

வெற்றி கொள்ள முடியாமல் அவளிடம் உதை வாங்கி வந்த கதையை கேட்டு மனதிற்குள்

வேதனை பட்டாள். குமரன் ரோகிணியை வெற்றிக் கொண்டிருந்தால் தன் எண்ணப்படி தன்

அண்ணன் மகளை குமரன் மனம் முடித்ஹ்டிருக்க முடியாதே என்று நிம்மதியும் அடைந்தாள்.

தன் இளைய மகன் அறிவின் வழி நின்று இந்த காரியத்தில் வெற்றி அடைவான் என்று முதல்

நாளிலேயே அவனை தான் வாழ்த்தியது நடந்தேறியது அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.

இதோ இப்போது தன் கணவர் எண்ணப்படி இளவரசி அமுதவல்லியை தன் கடைக்குட்டி

மகனுக்கு திருமணம் செய்து விடலாம் என்று அந்த தாய் மனதிற்குள் நிம்மதியானாள். “

தொடரும்

ஷியாமளா கோபு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *