17
கேவி கேவி அழுது கொண்டிருந்தாள் ரோகிணி உடையை கூட மாற்றி கொள்ளாமல் மஞ்சத்தில்
படுத்து கொண்டு விசும்பி கொண்டிருந்வளை யே பார்த்து கொண்டு மஞ்சத்தில் அமர்ந்திருந்தான்
விஜயன்.
“ரோகிணி. என்னை பாரேன்’”
“உஹும்…………..!
“ரோகிணி என்னை பாரேன் இப்படி விடாமல் அழுது கொண்டிருந்தால் நான் என்ன செய்வது.”
அழுகையை நிறுத்தவில்லை அவள். ஆனால் எழுந்து உட்கார்ந்து கொண்டாள்.
“என்னம்மா “
நிமிர்ந்து அவன் முகத்தை பார்ப்பதும் தலையை குனிந்து கொண்டு கண்ணீரை சிந்துவதுமாக
இருந்தாள். பிறகு மெல்ல சொன்னாள். “நான் நினைத்தேன் இப்படி ஏதேனும் நடக்கும் என்று”?”
“ஏன் அப்படி நினைத்தாய்?”
“அப்படி தான்.”
“அது தான் கேட்கிறேன் ஏன் அப்படி நினைத்தாய் உனக்கு ஆபத்து வரும் என்று ?”
“எனக்கு ஆபத்து இல்லை. அந்த அம்பு என்னை குறி பார்க்கவில
……………….பின் .?
உங்களை தான்" அந்த அம்பு குறி பார்த்தது.”
"எனக்கு காதில் அடிபட்டதாலா சொல்கிறாய்”
“இல்லை . இப்படி நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும்”
"தெரியுமா?”
“சாமியார் சொன்னார்”
அவனுக்கு எரிச்சலாக இருந்தது. எந்த விவரத்தையும் விவரமாக சொல்ல மாட்டேன் என்கிறாளே
என்று. ஆனால் அவளை பார்த்தால் எங்கோ தொலை தூரத்தில் சூனியத்தை பார்த்த விழி பார்த்த
மாதிரி தன்னிடம் பேசாமல் யாரோ அமானுஷ்யதுடன் பேசி கொண்டிருப்பது போல இருந்தது.
எரிச்சல் மறைந்தது. நிதானமாக அவளிடம் நெருங்கி அமர்ந்து அவள் தலையை தன் தோளில்
சாய்த்து கொண்டு மெல்ல கேட்டான்.
“எந்த சாமியார் ரோகிணி?
அவள் பெயரை சொல்லி அவன் அழைக்கவும் சற்றே தலையை நிமிர்த்தி அவனை பார்த்து
சொன்னாள்.
“காளாமுக சாமியார்”
“காளாமுகனா?”
“ஆம். அப்படி தான் அவர் சொன்னார்.”
“அவன் எப்படி இருந்தான்?”
“நல்ல திடகாத்திரமாக உயரமாக மேலெல்லாம் திருநீறு பூசி சடை விழுந்த ஜடாமுடியுடன்
கண்கள் இரண்டும் கோவை பழம் போல சிவப்பாக கையில் கூரிய வேலாயுதம் வைத்து கொண்டு
இடையில் மட்டும் கச்சை கட்டி கொண்டு பார்க்கவே பயங்கரமாக இருந்தான்.” அன்றைய அந்த
நினைவில் அந்த சாமியாரை நினைத்து கொண்டு பயந்து அவனை ஒட்டி கொண்டாள்.
“அப்படியா. அவ்வளவு பயங்கரமானவனாகவா இருந்தான்?’
“ஆமாம்”
“கனவில் வந்தானா?”
“கனவிலா?” குழம்பிப் போனாள்.
“கனவா நினைவா என்று தெரியவில்லையா?” தன்மையாக கெட்டவனை நிமிர்ந்து பார்த்தவள்
தலையை நன்றாக உலுப்பி விட்டுக் கொண்டாள். “இல்லையே. நேரில் தானே வந்தான்”
“சரி எப்போது சொன்னார்?”
யோசித்தாள்.“இரு வருடங்களுக்கு முன்னால்”
“ரோகிணி கொஞ்சம் விவரமாக தான் சொல்லேன்” பொறுமை இலக்கத் தொடங்கியிருந்த குரலை
கஷ்டப்பட்டு நிதானத்தில் கொண்டு வந்து மீண்டும் தன்மையாகவே கேட்டான்.
அவள் தலையை தன் தோளிலிருந்து நகர்த்தி அவளிடம் இருந்து எழுந்து நின்று தன்
கால்சாராயின் பக்கவாட்டு பைகளில் கையை நுழைத்து கொண்டு நிமிர்ந்து நின்று கேட்டான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்த்த பார்வையில் இப்போது ஒரு தெளிவு இருந்தது. கொஞ்சம் நேரம்
யோசித்தாள். அவன் அமைதியாக அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவள் மெல்ல சொல்ல
ஆரம்பித்தாள்.
“இரண்டு வருடங்களுக்கு முன்னால் எனக்கு கலியாணத்திற்கு பார்க்க ஆரம்பித்த புதிதில் ஒரு
நாள் சாயரட்சையில் இந்த சாமியார் வந்தான். வந்தவன் சுற்று முற்றும் பார்த்து விட்டு யாரும்
இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொண்டு என் தலையில் திருநீறை கை நிறைய அள்ளி
வீசினான். என் முகம் தலை உடலெங்கும் திருநீறு பட்டு கண்களில் நீர் சொரிய ஆரம்பித்தது.
தலையை குனிந்து கண்களை கசக்கி கொண்டிருந்தேன். அவனை பார்க்க முடியவில்லை ஆனால்
அவன் குரல் மட்டும் என் செவிகளில் ஒலித்தது.”
தயங்கி தடுமாறியவளை “சொல்லு ரோகிணி என்ன சொன்னான் அந்த காளாமுகன்?” என்று
கேட்டு அவள் தடுமாறாமல் சொல்வதற்கு ஊக்கப்படுத்தினான். ரோகிணியும் கண்களை நன்றாகத்
திறந்து பார்த்து தன்னிலைமை புரிந்து சற்றே தெளிவு பெற்றவளாக சொன்னாள். அவள் கண்கள்
பின்நோக்கி பார்த்தது அன்றைய நாளின் உரையாடலை.
“ரோகிணி, உனக்கு கலியாணத்திற்கு பார்க்க ஆரம்பித்து விட்டான் சுந்தர உடையார். அவனுக்கு
இன்றைய உன் நிலை வேண்டுமானால் தெரியலாம். ஆனால் உன் எதிர்காலம் என்னவென்று
தெரியாது. அது எனக்கு தெரியும்.”
அவள் கேட்டு கொண்டு இருக்கிறாளா என்பதை அறிய கொஞ்ச நேரம் நிறுத்தினான் அந்த
காளாமுகன். அவள் ஒரு கண்ணை திறந்து மற்றொரு கண்ணில் விழுந்திருந்த திருநீறை கைகளால்
வெளியே தள்ள முயற்சித்து கொண்டிருந்தாள். அவன் பேசுவதை நிறுத்தவும் ஒரு கையால்
கண்ணை கசக்கி கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நான் சொல்வதை கவனமாக கேள் ரோகிணி, உனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கட்டும். ஏன்
திருமணம் தான் நடக்கட்டுமே. உன் கலியாணம் முடிந்ததும் உடனே உன் கணவன் இறந்து
விடுவான்.”
நான் இந்த திடீர் செய்தியில் நிலை குலைந்து போனேன். ஆக்ரோஷத்தோடு கேட்டேன்.
“ஏன், என்னை திருமணம் செய்பவர் என்ன பாவம் செய்தார்?”
“அவர் ஒரு பாவமும் செய்யவில்லை. ஆனால் உன் தந்தையும் உன் தாய்………! ஒரு நீண்ட
பெருமூச்சு விட்டவன் தொடர்ந்தான். “உன் தாயும் தகப்பனும் செய்தவைகளுக்காக உன் கணவன்
பழி வாங்கபடுவான்”
“இது என்ன அநீதியாக இருக்கிறதே. என் பெற்றோர் செய்த பாவத்திற்கு எனக்கல்லவா
தண்டனை கிடைக்க வேண்டும். என்னை அல்லவா பழி வாங்க வேண்டும்.”
“நீ சிறியவள். உனக்கு இதெல்லாம் புரியாது. ஆனால் நினைவில் வை. உன்னை திருமணம்
செய்பவன் உன் திருமணம் முடிந்ததும் உடனே இறந்து விடுவான். இது விதி. அப்படி தான்
அவனுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது.”
அன்றைய நினைவில் சொல்லி முடித்தவள் மேற்கொண்டு விஜயனிடம் சொன்னாள்.
“மேல்கொண்டு அவனை கேட்கவேண்டும். கேட்டு தெளிவு பெற வேண்டும் என்று நினைக்கும்
போதே அவன் சடுதியில் மறைந்து விட்டான்.”
“ஏன் ரோகிணி, இத்தனை கட்டுக்காவலை மீறி அவன் எப்படி உன்னிடம் வந்தான்?”
“அது எனக்கு தெரியாது. ஆனால் அவன் இந்த சாளரத்தின் வழியாக தான் எப்போதும் வருவான்.”
“எப்போதும் என்றால்? எத்தனை தடவை அதுபோல் வந்திருப்பான்?
“மூன்று முறை வந்திருப்பான்.”
“ஒவ்வொரு முறையும் சாளரத்தின் வழியாகத் தான் வருவானா?”
“ஆம். அதனால் தான் நான் எப்போதும் அந்த சாளரத்தை மூடியே வைத்திருப்பது.”
முதன் முதலில் ரோகிணியை அவள் அறையில் பார்க்க போன போது அவள் அறையின் சாளரம்
மூடி இருந்தது அவனுக்கு நினைவு வந்தது.
இவனுக்கு பயந்து தானா?
“வரும் போதெல்லாம் இதையே தான் சொல்வானா?”
“ஆம். சில சமயங்களில் என்னை பார்த்து அழுவான்.எனக்கு வேறு வழியில்லையே என்று
புலம்புவான்.”
விஜயனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை. எதுக்காக புலம்புவான்?
“புலம்புவானா?”
ஆம் என்பது போல தலையை ஆட்டினாள் அவள்.
“உன்னை ஏதேனும் தொந்திரவு செய்வானா?”
உடனே யோசிக்காமல் பதில் சொன்னாள்.
“முதன்முறை பார்த்த போது தான் நான் அவனை பார்த்து பயந்தேன். ஆனால் அடுத்தடுத்த முறை
வரும் போதெல்லாம் அவனை கண்டு எனக்கு பயம் ஏற்படவில்லை. அவன் என்னை எந்த
வகையிலும் தொந்திரவு செய்வதில்லை.”
விஜயனால் எதையும் குறிப்பிட்டு கண்டு கொள்ள இயலவில்லை.“சரி. ரோகிணி. நீ பயப்படாதே.
அவன் இனி இங்கே வராத வகையில் நம் அரண்மனையில் காவலை நன்றாக பலப்படுத்துவோம்.”
அப்போதும் தெளிவில்லாமல் அவள் பார்த்து கொண்டு இருக்கவும் அவன் உறுதியான ஆனால்
மிகவும் மென்மையான குரலில் அவளிடம் சொன்னான். “ரோகிணி, எனக்கு ஒன்றும் ஆகாது.
எனக்கு ஆயுள் மிகவும் கெட்டி ரோகிணி.ஆதலால் கவலை படாதே. எழுந்திரு.”
அவள் அவனை நிமிந்து பார்த்தாள்.
“உண்மை தான் ரோகிணி. சிறுவயதில் எனக்கு ஜாதகம் பார்த்திருக்கிறார்கள். அதில் நான் நீண்ட
ஆயுளோடு இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இல்லாவிடில் என்னை இங்கே
அனுப்பி இருப்பார்களா?” அவனுடைய கேள்வியில் இருந்த நியாயம் அவளை யோசிக்க
வைத்தது. அவனுடைய வார்த்தைகள் மெல்ல அவளுக்குள் பரவி நம்பிக்கையை மனதில் படர
விட்டு சென்றது. அவள் கையை பற்றி எழுப்பினான்.
“நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”
அரனமனையின் தங்கள் பகுதியில் மதுவகையில் மூழ்கிக் கிடந்தான் மணிபல்லவன். எதிரே
கைகளை பின்னால் கட்டிக் கொண்டு ஏதோ உரத்த சிந்தனையுடன் நடை பயின்று
கொண்டிருந்தார் திவான். இருக்கையில் நன்றாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்த மகனைப்
பார்த்து எரிச்சல் உண்டாயிற்று அவருக்கு. “துக்கிரி. அதிர்ஷ்டம் கெட்ட எருமை மாடு. நன்றாக
குடி. அதற்குத் தான் லாயக்கு நீ”
“ஏன் அப்பா என்னை திட்டுகிறீர்கள்?”
“உன் பொறுப்பில் ஒரு வேலையை விட்டு சென்றால் அதை சரி வர செய்ய மாட்டாயா?”
“என்ன வேலை? எதை நான் செய்யவில்லை?”
“அடப்பாவி. எத்தனை முக்கியமான காரியம்.! அந்த விஜயன் எந்நேரமும் என்னைக்
கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அதனால் என்னால் நேரிடையாக செய்ய முடியாது. என்
ஆட்களையும் அவன் வீரர்கள் நோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உன் மேல் தான்
இப்போதைக்கு யார் பார்வையும் இல்லை. அதனால் தானே கையாலாகாத எருமை மாடு என்று
தெரிந்தும் வேறு வழியில்லாமல் உன்னிடம் சொன்னால் ரொம்பவுமே அசிரத்தையாக
கேட்கிறாய்.”
“விஜயனை கொல்வதற்கு வில்வித்தைக்காரனை ஏற்பாடு செய்ய சொல்லியிருந்ததைத் தானே
சொல்கிறீர்கள்?”
“ஆமாம். செய்தாயே. சரியான ஆளை செய்ய சொல்ல மாட்டாயா? பார். தலையை எடுக்க
சொன்னால் அந்த முட்டாள் விஜயனின் காதை எடுத்திருக்கிறான்”
“இல்லை அவன் என்னுடைய ஆள் இல்லை அப்பா”
“என்னது உன்னுடைய ஆள் இல்லையா?”
“ஊஹூம். எனக்கு மிகவும் நம்பிக்கையானவன் என்று ஒருவன் தான் இருக்கிறான். அவனும்
மனைவியின் பிரசவம் என்று சென்று விட்டான். அவன் வந்ததும் வேறு ஒரு சந்தர்ப்பத்தில்
பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அவசரத்திற்கு என்று வேறு யாரையும் ஏற்பாடு
செய்து அவன் நமக்கே துரோகம் செய்து விஜயனுடன் சேர்ந்து கொண்டு நம்மை காட்டிக்
கொடுத்து விட்டால் என்ன செய்வது?”
“என் அறிவுக்கொழுந்து. அந்த வகையில் சரியாகத் தான் யோசித்தாய். ஆனால் நம் திட்டப்படி
விஜயன் அரண்மனையின் படிக்கட்டில் ஏறும் போது மிக சரியாக ஒரு அம்பு அவனைப் பார்த்து
வந்ததே அது எப்படி?”
“என்னுடைய ஆள் இல்லை அப்பா”
“அப்படியானால் வேறு யாருடைய ஆளாக இருக்க முடியும்?”
“தெரியவில்லையே அப்பா. ஆனால் நம்மைத் தவிர விஜயனைக் கொல்வதற்கு தேவை உள்ளவன்
வேறு யார் இங்கே இருக்க முடியும்?”
“அது தானே. வேறு யாருக்குத் தேவையிருக்கிறது?” உரக்கவே சிந்தித்தார் திவான்.
அன்று ரோகிணிக்கும் விஜயனுக்கும் பட்டாபிஷேகம். வேட்டுவமங்கலம் நாடே விழாக்கோலம்
பூண்டிருந்தது. விழாவிற்கு அழைக்கப்பட்டவர்கள் நல்ல வஸ்திரங்கள் தரித்து அவரவர் தகுதிக்கும்
அவரவர் வகிக்கும் பதவிக்கும் ஏற்றார் போல அலங்கரித்து கொண்டு குடும்ப சகிதமாக வந்து
கொண்டிருந்தார்கள். அனேக ஆங்கிலேயர்கள் அவர்கள் குடும்ப சகிதம் குதிரைகள் பூட்டிய சாரட்
வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள். இந்த நாட்டிற்கு உட்பட்ட குறுநில மன்னர்கள் படை
பரிவாரம் சூழ வந்திருந்தார்கள். அவர்கள் வீட்டு பெண்கள் ஒரு வகையில் ரோகிணிக்கும்
உறவினர்கள் ஆதலால் ரோகிணியுடன் நெருங்கி பழக சமயம் தேடி அவளை சுற்றி வந்தார்கள்.
ரோகிணிக்கு மிகவும் பெருமையாகவும் அதே சமயம் உறவினர்களிடம் மிகவும் அன்பாகவும்
இருந்தது. எல்லோரிடமும் மிகவும் தன்மையுடன் நடந்து கொண்டாள். இன்முகம் காட்டினாள்.
அவளுக்கு அவளுக்கே என்று நிறைய தாதி பெண்கள் நியமிக்கபட்டிருந்த்தால் அவளுக்கு
பாட்டாபிஷேகத்திற்க்கு உரிய முறையில் அவளை அலங்கரித்து இருந்தார்கள்.
முன்பே வந்திருந்த ரோகிணியின் மாமியாரும் வீரையன் கோட்டை ராணியுமான லட்சுமிதேவி
அவள் மற்ற இரு மருமகளுடன் ரோகிணியை கண்ணின் இமை காப்பது போல கூடவே
இருந்தாள். ரங்கநாயகியும் அவள் பங்குக்கு ரோகிணியின் மேல் அன்பை வாரி சொரிந்து
கொண்டிருந்தாள். திலகவதியும் அமுதாவும் ரோகிணியின் அலங்காரத்தில் கூடவே உதவி செய்து
வந்தார்கள்.
நல்லது நடக்க வேண்டும் என்று கடவுள் நினைத்து விட்டால் அதை யாரால் தடுக்க முடியும்.
தன்னை சுற்றி நல்லதே நடந்து கொண்டிருப்பதாக ரோகிணி நம்பியதால் காளாமுக சாமியார் சொல்லி சென்ற தீய குறி அவளுக்கு மறந்தே போயிற்று.
அவள் அறையின் வாசலில் வந்து நின்ற விஜயனை ரோகிணி ஏறிட்டு பார்த்தாள். தங்க
வர்ணத்தில் நீண்ட அங்கியும் வெண்மையான கால்சராயும் அணிந்து அதற்கு பொருத்தமான
ஆபரணங்கள் சூடி மிகவும் தோரணையாக இருந்தான். இடுப்பில் ஒரு நீண்ட வாள் இருந்தது.
அதன் கைப்பிடி தங்கத்தால் ஆகியிருந்தது. அதில் வைரத்தாலும் நவரத்தினங்களாலும் ஆன
வேலைப்பாடு இருந்தது. அதை உற்று பார்த்த ரோகிணிக்கு உடனே புரிந்து போயிற்று அது
அவளுடைய தகப்பனுடையது என்று. அது அவனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அந்த
சின்ன செய்கையின் மூலம் விஜயன் ரோகிணியின் பெற்றோரை மிகவும் மதிப்பதாக ரோகிணிக்கு
உணர்த்தினான்.
ரோகிணிக்குமே அவளுடைய பெற்றோரின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அவர்களுடைய
மருமகனான விஜயனுடன் என்றும் இருக்கும். இந்த நன்னாளில் அவளுக்கு அவளுடைய
பெற்றோரின் நினைவை அந்த வாள் தூண்டி விட்டு விட்டது. அவர்கள் நினைவில் கண்ணோரம்
கசிந்தது.
விஜயன் ரோகிணியின் கரம் பற்றி அழைத்து கொண்டு தர்பார் மண்டபம் வந்தான். தங்க
சிம்மாசனம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருவர் மட்டும் அமர கூடியதாக
இருந்தது அது. சுந்தர உடையார் ரெகுநாதர் மற்றும் மற்றைய அரசர்களுக்கும் முதலில் ஒன்றும்
புரியவில்லை. ரோகிணியும் விஜயனும் சேர்ந்து தானே இன்று பட்டம் கட்டி கொள்ள
போகிறார்கள். பிறகு எதற்கு ஒரே ஒரு ஆசனம் போடப்பட்டுள்ளது. விஜயனை பார்த்த சுந்தரரை
விஜயன் சைகையால் ஆக வேண்டிய சடங்குகளை மேற் கொண்டு நடத்துங்கள் என்றான்.
சுந்தரர் அவனை தீர்க்கமாக பார்த்தார். நேற்று வரை ஒரு சிறு நிலபகுதிக்கு சொந்தக்காரர் ஆன
ரெகுநாதரின் பட்டத்து இளவரசன் கூட இல்லாத சிறுவன் இன்று இந்த மிக பெரிய நாட்டின்
அரசனானவுடன் என்ன ஒரு நிமிர்வோடு பேசுகிறான் என்று நினைத்தார். பாஸ்கர்
இருந்திருந்தாலும் கூட இவன் இதே நிமிர்வோடு தான் இருந்திருப்பான். ஏன் என்றால் அவன்
இப்போது பாஸ்கருக்கு மட்டுமல்ல சுந்தரருக்கும் ரோகிணி மகளானதால் மருமகன் ஆயிற்றே.
சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். மாப்பிள்ளை என்று ஒரு துரும்பை கிள்ளி போட்டால்
கூட அது இரண்டு துள்ளு துள்ளி விட்டு தான் அடங்கும் என்று. அமைதியாகி விட்டார் சுந்தரர்.
அரண்மனையின் வெளியே பேரரவம் கேட்டது. மக்களின் வாழ்த்தொலி பெரிய ஆரவாரமாக
கேட்டது. சுந்தரரும் மற்றோரும் வெளியே வந்து நின்றார்கள்.
மங்கள வாத்தியம் முழங்க பட்டத்து யானையின் மேல் தங்க கலசத்தில் வேட்டீஸ்வரன் கோயிலில்
இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னே நகரத்து மாந்தர்கள் வான
வேடிக்கையுடனும் ஆட்டம் பாட்டதுடனும் வந்து கொண்டிருந்தார்கள்.
அரண்மனை முகப்பில் நின்று கொண்டிருந்த ராஜ கேசரி சுந்தர உடையார் பட்டத்து யானையின்
மேல் வந்த தங்க கலசத்தின் புனித நீரை மிகவும் பயபக்தியுடன் பெற்று கொண்டு மிகவும்
பவ்யமாக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வந்தார். பின்னே உள்ளே நுழைந்த வேத பண்டிதர்கள் அவர் பின்னாலே வந்து சபையின் வலது ஓரத்தில் நின்று உரத்த சத்தமாக வேத
மந்திரங்கள் ஓதி நின்றார்கள். அதுவரை எல்லோரும் பயபக்தியுடன் நின்று கொண்டே
இருந்தார்கள். மந்திரமுழக்கம் முடிந்து சுந்தரர் பேசினார்.
“அவையோர்களே, இந்த நாள் ஒரு நல்ல நாள். பாஸ்கரரின் காலத்திற்கு பிறகு நான் இதே
அவையில் உங்கள் மத்தியில் பேசியதை நினைவு கூறுகிறேன். நான் உங்களுக்கும் பாஸ்கருக்கும்
கொடுத்த வாக்கின் படி உங்கள் இளவரசி ரோகிணி தேவியாரை வீரையன் கோட்டை இளவரசர்
வீர விஜய பூபதிக்கு திருமணம் முடித்து விட்டேன். என் கடமையை நான் சரிவர செய்து விட்டேன்
என்று சந்தோஷபடுகிறேன்.
இனி, கும்பினியார் பாஸ்கரின் சாசனப்படி இந்த நாட்டை வீர விஜய பூபதி ரோகிணி தேவியார்
தம்பதிகளிடம் முறைப்படி வழங்குவார்கள்.”
சொல்லி விட்டு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். மக்கள்
தங்கள் அன்பின் வெளிப்பாடாக அவருடைய பட்டங்களை சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.
சுந்தரரும் தன் இருக்கையினின்றும் எழுந்து நின்று கரம் கூப்பி மக்களின் பேரன்பை ஏற்று
கொண்டார்.
கும்பினியார் பிரதிநிதியாக வந்திருந்த மதராசபட்டினத்தின் மாகான கவர்னர் டேவிட்சன் துரை
எழுந்து “மகாஜனங்களே, வேட்டுவமங்கலம் நாட்டின் மன்னர் மறைந்த பாஸ்கர மார்த்தாண்டன்
வேண்டுகோளுக்கு இணங்கி இத்தனை வருடங்கள் இந்த நாட்டை நாங்கள் பரிபாலனம் செய்து
வந்தோம். இதோ இன்று உங்கள் இளவரசி ரோகிணி தேவியார் திருமணம் முடிந்து தன் கணவர்
வீர விஜய பூபதியுடன் இந்த சிம்மாசனத்தில் அமர எங்கள் சாசனத்தை முறைப்படி தருகிறோம்.”
அதை எல்லோருக்கும் துபாஷி மொழி பெயர்த்து கூறினான்.
பின் டேவிட்சன் துரை விஜயனை நோக்கி,
“மன்னரே, இதோ உங்கள் வேட்டுவமங்கலம் நாட்டை நீங்களே ஆள கும்பினியாரின் சாசனம்.
பெற்று கொள்ளுங்கள். இதோ இந்த சிம்மாசனத்தில் உங்கள் ராணியாருடன் எழுந்தருளுங்கள்.” என்றான்.
அது வரை கீழே இரண்டு ஆசனத்தில் அமர்ந்திருந்த விஜயனும் ரோகிணியும் எழுந்து டேவிட்சன்
துரையை அணுகினர். விஜயன் ஒரு அடி முன்னே சென்று டேவிட்சன் துரையின் வலது கரத்தை தன் வலது கரத்தால் பற்றி பிடித்து குலுக்கினான். அவர் கரங்களில் இருந்த சாசனத்தை பெற்று
கொண்டான். அதை ரோகிணியிடம் தந்தான். அவள் அதை பயபக்தியுடன் பெற்று கொண்டாள்.
பின்…………….
ரோகிணியிடம் திரும்பி அவள் வலது கரத்தை பிடித்து கொண்டு போய் ஒற்றையாக
போடபட்டிருந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் கொண்டு அமர்த்தினான்.
ரோகிணி மட்டுமல்லாமல் அனைவரும் திகைத்து போயினர். ரெகுநாதருக்கு இவன் என்ன
செய்கிறான் என்று புதிராக இருந்தது. ஆனால் சுந்தரர்மட்டும் இது போன்று எதையோ விஜயன்
செய்வான் என்று நம்பியது போல மிகவும் அமைதியாக இருந்தார். எதையோ ஆட்சேபிக்க எழுந்த
ரோகிணியை தன் வலது கரத்தால் அப்படியே உட்கார் என்பது போன்று ஜாடை காண்பித்து
அவையை நோக்கி பேச ஆரம்பித்தான் விஜயன்.
அதுவரை சலபுலவென்று ஏக சத்தமாக என்ன என்னமோ தங்களுக்குள் பேசி கொண்டும்
வாதிட்டு கொண்டும் இருந்த அவையின் பொதுமக்களும் அரசர்களும் அரச பிரதானிகளும் ஏன்
டேவிட்சன் துரையும் விஜயன் தன் வலது கரத்தை தூக்கி பேச தொடங்கவும் சட்டென்று
அமைதியானார்கள்.
“எங்கள் மேல் அதிலும் குறிப்பாக ரோகிணி தேவியார் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ள மன்னர்
ராஜ கேசரி சுந்தர உடையார் அவர்களே, இந்நாட்டின் கௌரவமிக்க சிற்றரசர்களே மந்திரி
பிரதானிகளே,என் தந்தை வீர ரெகுநாத பூபதி அவர்களே, மிஸ்டர் டேவிட்சன் துரை அவர்களே
எல்லாவற்றுக்கும் மேலாக இந்நாட்டின் உயிர்நாடியான பொதுமக்களே இன்று நான் சொல்வதை
கொஞ்சம் அமைதியுடன் கேட்கும்படி தாழ்மையுடன் உங்களை வேண்டி கொள்கிறேன்.
இந்நாட்டின் மறைந்த மன்னர் பாஸ்கர மார்த்தாண்டரின் ஏக புதல்வி ரோகிணி தேவியாரை நான்
திருமணம் செய்ததினால் இன்று நான் இந்நாட்டின் மன்னர் என்று பிரகடனபடுத்த பட்டுள்ளேன்.
உங்கள் மன்னரின் சாசனப்படி அது மிகவும் சரியானதே.”
அவையோரை சுற்றி ஒருமுறை பார்த்தான். ரோகிணி இருக்கையின் விளிம்பில் அமர்ந்திருந்தாள்.
கண்கள் இரண்டும் தெறித்து விழுந்து விடுவதைப் போல விஜயனை விழித்து நோக்கிக்
கொண்டிருந்தாள். என்ன சொல்கிறான் இவன்?
“ஆனால்…………………..!” தொடர்ந்தான் விஜயன்.
“ஆனால் பிறப்பால் நான் இந்த நாட்டுக்கு உரியவன் இல்லை. இந்த நாடு என் மனைவியின்
சீதனமாக நான் ஏற்று கொள்வதில் எனக்கு எந்தவிதமான தர்ம சங்கடமும் இல்லை. ஆனால்
உங்கள் இளவரசி உங்கள் நாட்டு பெண் உங்கள் அரசரின் மகள் உங்களை ஆளுவது தான்
சிறந்தது. நான் அல்ல. நான் மட்டும் என்றில்லை. இனி வரும் காலங்களிலும் உங்கள் வாரிசு தான்
இந்த நாட்டை ஆள வேண்டும்.”
“ஆகையினால் இனி இந்த நாட்டுக்கு ராஜா கிடையாது. ராணி மட்டும் தான். இந்த ராணிக்கு
நாளை ஒருமகன் பிறந்தால் அவன் ராஜாவாக இருந்து உங்களை ஆளுவான். அல்லது
ரோகிணியை போலவே மகளாக பிறந்து விட்டால் அந்த பெண்ணே ராணியாக இருந்து
ஆளுவாள்.”
“இதன் மூலம் நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் இனி இந்த நாட்டை பாஸ்கர
மார்த்தாண்டரின் நேரடி வாரிசுகளே அரசாள்வார்கள். எந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ
திருமணத்தின் மூலம் இந்த நாட்டை ஆள முடியாது என்பது தான். நான் இதை சாசனமாகவும் செய்து விட்டேன். இனி இந்நாட்டின் அரசியாக ரோகிணி தேவியார் அரசாள்வார்கள்.”
அவை நிசப்தமாக இருந்தது. முதலில் சுதாரித்து கொண்ட சுந்தரர் விஜயனை பார்த்து கேட்டார்.
“அப்போது தாங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?” இந்த கேள்வி எல்லோர் முகத்திலும்
இருந்தது. ரெகுநாதர் சொல்லவொண்ணா உணர்ச்சி குவியலாக இருந்தார்.
“நான்…….நான் இந்த நாட்டின் தளபதியாக இருந்து இந்த நாட்டை எதிரிகளிடமிருந்து எந்நாளும்
காக்கும் பொறுப்பை ஏற்று கொள்கிறேன்.”
“மேலும் கருணாகரன் உபதளபதியாக இன்று என்னுடன் பொறுப்பேற்று கொள்வார்”
கருணாகரனுக்கு சந்தோசம் ஒருபுறம். பாஸ்கர் தனக்கு தர மறுத்த உரிய அங்கீகாரத்தை நம்
கதையை கேட்ட இந்த விஜயன் தந்து விட்டானே என்று மனது நெகிழ்ந்து நன்றியால் உருகி
விட்டது. எல்லோரும் சற்றே நிம்மதி அடைந்தார்கள்.
கட்டியக்காரனை பார்த்து விஜயன் கையை ஆட்டவும் அவன் உரத்த சத்தமாய் “ராணி ரோகிணி
தேவியார் வாழ்க. மன்னர் பாஸ்கர மார்த்தாண்டரின் ஏக புதல்வி வாழ்க. தளபதியார் வீர விஜய
பூபதியின் தேவியார் வாழ்க. வீர தளபதி வீர விஜய பூபதி வாழ்க “ என்று வாழ்க கோஷம்
இட்டார்கள். மக்களும் அதையே பிரதிபலித்தார்கள்.
இந்த காலத்திலும் இப்படி ஒருவனா என்று சுந்தரர் விஜயனை மனதிற்குள் மெச்சி கொண்டார்.
விஜயன் தன இருக்கையில் இருந்து எழுந்து நடு அவையில் வந்து நின்று தன் இடுப்பில் இருந்த
வாளை உருவி “வேட்டுவமங்கலம் வாழ்க. ராணி ரோகிணி தேவியார் வாழ்க” என்று வீர
முழக்கமிட்டான்.
அப்போது தான் யாரும் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது. இன்னும் எத்தனை புதிர்கள் என்று விஜயன் மலைத்துப் போனான். ஏனெனில் அத்தகையதொரு சம்பவம் தான் இப்போதும் நடந்தது.
விஜயன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அவன் தலைக்கு மேலே இருந்த அலங்கார விளக்கு அறுந்து அவன் தலையை நோக்கி வந்து கொண்டிருந்ததை பார்த்து விட்ட ரோகிணி கணப்பொழுதில் சிம்மாசனத்தில் இருந்து எழுந்து பாய்ந்தோடி வந்து அவனை பிடித்து அப்புறமாய் தள்ளி விட்டாள்.
மேற்கொண்டு விஜயனின் நெஞ்சுக்குள் ஆழ புதைந்து கொண்டு சாளரத்தை காட்டி அதோ அதோ
அங்கே அந்த காளமுக சாமியார் என்று சொன்னாள். அவளை புறத்தே நகற்றி விட்டு வீரர்களை
ஏவினான் விஜயன்.
விஜயன் திவானை திரும்பி பார்த்தான். அந்த பார்வையில் என்ன புரிந்து கொண்டானோ திவான்.
மெல்ல அங்கே இருந்து நகர முயன்றான் திவான் வில்வநாதன். அதற்குள் அவன் பின்னால்
நின்றிருந்த கருணாகரன் சட்டென்று நகர்ந்து திவானை கைகளை பிடித்து பின்னால் கட்டி
இழுத்து சென்றான். கருணாகரன் திவானை கண்காணிக்க விஜயனின் ஏற்பாடு போலும்.
அதற்குள் இங்கே நடந்த காரியங்களை மேல்மாடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த ராணி
லட்சுமி தேவி விறுவிறு என்று வேகமாக மேலே இருந்து இறங்கி வந்து விஜயனை ஆர தழுவி
கதறி அழ தொடங்கி விட்டாள்.
அதற்குள் காளமுக சாமியாரை பின் தொடர்ந்து சென்ற வீரர்கள் அவனை பிடித்து விட்டார்கள்.
ஏற்கனவே திருமணம் முடிந்து அரச தம்பதியர் அரண்மனைக்கு வந்த முதல் நாள் அவர்கள் மேல்
விழுந்த அம்பை வீசியவனை பிடிக்க முடியாமல் போனதிலிருந்து காவலை பலப்படுத்தி
இருந்தார்கள். அதையும் மீறி இவன் எப்படி உள்ளே வந்தான்? அதனால் கூடுதல் வீரர்கள்
காளாமுகனை தேடி ஓடி பிடித்து கொண்டு வந்து விட்டார்கள். அவனை பிடித்து இழுத்த
வேகத்தில் அவன் தலையில் இருந்த ஜடாமுடி கையோடு வந்து விட்டது. அவன் நல்ல உயரமாக
மேனி எல்லாம் திருநீறு பூசியவனாக கையில் சூலாயுதம் ஏந்தியவனாக இருந்தான். வயது
முப்பதுக்குள் இருக்கும்.
அரசவைக்கு இழுத்து வரப்பட்ட அந்த காளாமுகன் ராணி ரோகிணி தேவியின் சிம்மாசனத்தின்
முன் நிறுத்தப்பட்டான். அவன் சிம்மாசனத்தில் ரோகிணி மட்டும் அமர்ந்திருப்பதை பார்த்து விட்டு
விஜயனை கண்களால் தேடினான். விஜயன் ரோகிணிக்கு சற்று கீழே வலது பக்கம் தனி
இருக்கையில் அது தளபதியுடையது ஆயிற்றே அங்கே உட்கார்ந்திருந்தான்
அவனை கண்டதும் ரோகிணிக்கு அன்றைய தினம் அவள் மறந்திருந்தவை எல்லாம் நினைவுக்கு
வந்து விட்டது. “இவன் தான்….! இவன் தான்…..! இத்தனை வருடங்களாக என்னை தொந்திரவு
செய்தவன். என்னை திருமணம் முடிக்கும் கணவர் உடனே மரணப்படுவார் என்று குறி சொல்லி
கொண்டிருந்தவன். குறி சொல்லி என்னை பயமுறுத்தி கொண்டிருந்தவன். நான் அன்றே சொன்னேன் அல்லவா? காளாமுக சாமியார் ஒருவன் வந்தான். என்னை மணப்பவன் இறப்பான்
என்று சொன்னான். நீங்கள் நம்பினீர்களா? நான் ஏதோ மனப்ராந்தியில் சொல்வதாக தானே நினைத்திருப்பீர்கள்.”
ஏதேதோ சொல்லி புலம்பி கொண்டிருந்தாள் ரோகிணி. அவளுக்கு இன்று அதிர்ச்சிக்கு மேல்
அதிர்ச்சி. விஜயன் தன்னுடன் அரியாசனத்தில் அமருவான் என்றெல்லாம் கற்பனை செய்து
கொண்டிருந்தவளுக்கு விஜயன் அவளுடன் அரியாசனத்தில் அமராமல் தளபதியாக
பொறுப்பெடுத்து கொண்டது ஒரு அதிர்ச்சி என்றால் இப்போது அவன் உயிருக்கு இந்த
காளாமுகனால் ஆபத்து வந்தது மேலும் அதிர்ச்சி. பாவம் அவள். ராணியாக இருந்தாலும் அவளும்
ஒரு பெண் தானே. அதிலும் சிறு பெண்.
விஜயன் அவளை கழிவிரக்கத்தோடு பார்த்தான். ஆனாலும் தொடர்ந்து அவையை நடத்தியாக
வேண்டுமே.
“நீ யார்?’ கேட்டான் விஜயன். பதிலே சொல்லவில்லை அவன்.
“எனக்கு நன்றாக தெரியும். நீ உண்மையில் காளாமுக சாமியார் இல்லை. அப்படி வேஷம்
தரித்திருக்கிறாய் என்று. உண்மையை சொல். நீ யார்?’
அப்போதும் அவன் மௌனமாகவே இருந்தான்.
“அவையோரே, இவனை நன்றாக பாருங்கள். உங்களில் யாருக்காவது இவனை அடையாளம்
தெரிகிறதா?”
அவை அமைதியாக இருந்தது. அவர்களுக்குள் இவன் யாராக இருக்கும். இவனுக்கு விஜயனை
கொல்ல வேண்டிய அவசியம் என்ன? கொன்று விட்டு இவனே அரசாள பார்க்கிறானா? ஏன்
இப்படி செய்தான்? என்று மொண மொண என்று பேசி கொண்டார்கள். ஆனாலும் யாருக்கும்
அவனை அடையாளம் தெரியவில்லை.
திவான் வில்வநாதனை கைகளை பிணைத்து சிறைசாலைக்கு கொண்டு சென்ற கருணாகரன்
அவனை அங்கே இருந்த வீரர்கள் வசம் ஒப்படைத்து விட்டு “இவனை ஜாக்கிரதையாக காவல்
பண்ணுங்கள். பிறகு இவனை விசாரித்து ஏற்ற தண்டனை கொடுப்பார்கள். அது வரை
ஜாக்கிரதை.” இப்போது அவன் உபதளபதியானதால் அவன் கட்டளையை வீரர்கள் உடனே நிறைவேற்றினார்கள்.
அவைக்கு திரும்பிய கருணாகரன் அசாதரணமான மௌனத்தின் காரணம் புரியாமல் மெதுவாக
உள்ளே வந்தான். அவையில் நின்று கொண்டிருந்த காளாமுகனை பார்த்து விட்டான். முதலில்
குழப்பம் ஏற்பட்டது. இவன் எங்கே இங்கே வந்தான்?. இவனா காளாமுக சாமியார் வேஷம்
தரித்து விஜயனை கொல்ல வந்தவன்?. சே……… இருக்காது. இவனுக்கு விஜயனை கொல்ல
என்ன அவசியம் இருக்கிறது?. புரியவில்லை கருணாகரனுக்கு. அவனாகவே அவன் காரணத்தை
சொல்லா விட்டால் யாராலும் அதை புரிந்து கொள்ள முடியாது.
அவனை பார்த்து கூவினான். “அடப்பாவி, ஏண்டா இப்படி ஒரு காரியத்தை செய்தாய்?” என்று.
யார் அவன்?.
அவையே மொத்தமாக கருணாகரை திரும்பிப் பார்த்தது. ரோகிணியின் கண்களில் அதிர்ச்சி
இருந்தது. இவருக்கு தெரிந்தவனா? அப்படி என்றால்…….? மனது படபடத்தது ரோகிணிக்கு.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கருணாகரனுக்குத் தெரிந்தவன் என்றால் ஒருவேளை தன்
தாய்க்கு உறவினனாக இருக்குமோ?
தொடரும்
ஷியாமளா கோபு