16
வீரையன் கோட்டை நாடே விழா கோலம் பூண்டிருந்தது. சும்மாவா……………….!
ஒன்றல்ல மூன்று கல்யாணங்கள். அதுவும் ராஜ குடும்பத்தின் மூன்று இளவரசர்களுக்கும் ஒரு சேர
நடக்கும் திருமணங்கள். சமீப காலங்களில் போர் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்த
பிராந்தியத்தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைப்புரண்டோடிக் கொண்டிருந்தது.
என்னவோ ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு கலியாணம் போல உற்சாகத்தில் இருந்தார்கள்.
ஒவ்வொரு வீடும் மாவிலை தோரணம் குருத்தோலை தோரணம் கட்டி வீட்டு வாசலில்
பசுஞ்சாணம் மொழுகி வர்ண கோலம் இட்டு அலங்கரித்தார்கள். அதே போல ஊர் சாவடிகளும்
கோயில்களும் புது பொலிவு பெற்றது. கோடையின் உக்கிரம் குறைந்து நீண்ட பகல் பொழுதின்
சாயங்கால வேளைகளில் வெப்பத்தின் தாக்கம் தணிந்த அந்த மாலை பொழுதுகளில் ஒவ்வொரு
கிராமத்திலும் சிறு நகரங்களிலும் மக்கள் கூடி நின்று தங்கள் நாட்டுக்கு வரபோகும்
மணமகள்களை பற்றி பேசி கொண்டிருந்தார்கள்.
கலியாண ஏற்பாடு செய்து கொண்டிருந்த அரசாங்க அதிகாரிகளும் வீரர்களும் குதிரையில்
அங்கும் இங்கும் போவதும் வருவதுமாக ஒரே பரபரப்பாக இருந்தது தலைநகரம்.
ஒவ்வொரு நாட்டு முக்கியஸ்தர்களாக அவரவர் தம் படை பரிவாரங்களோடும் ஆரவாரத்தோடும்
ஒவ்வொருவராக வர தொடங்கி இருந்தார்கள். அவர்களை உரிய முறையில் வரவேற்று
அவர்களுக்கென்று ஏற்பாடாகி இருந்த ஜாகையில் தங்க வைத்து உபசரிப்பு நடந்தது.
திருமணம் சார்ந்த சடங்குகளும் சம்பிரதாயங்களும் தொடங்கி நடந்து கொண்டிருந்தது. இரவு
வேளைகளில் அரண்மணையை சுற்றி பறவை கூத்தும் தேவராட்டங்களும் இராமாயண காதையும்
மற்றொரு நாள் மயிலாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை தப்பாட்டம் இசைக்கச்சேரி என்று
ஊரே திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது.
அவரவர் சொந்த வீட்டு திருமணம் என்ற நினைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தலையில்
வாசனை தைலம் தடவி சீவி சிங்காரித்து பூ வைத்து பொட்டிட்டு பட்டாடை உடுத்தி
ஆபரணங்கள் பூட்டி கணவனோடோ அல்லது உறவினர்களோடோ கூட்டம் கூட்டமாக வந்த
வண்ணம் இருந்தார்கள்.
ஆண்கள் தும்பை பூ போல வெண்மையான வேட்டி சட்டை உடுத்தி வாயில் வெத்திலை போட்டு
வாயை சிவப்பாக்கி கொண்டு ஆண்மையின் சிகரமாய் பீடு நடை நடந்து குடும்பத்துடனோ
நண்பர்கள் புடை சூழவோ ஆரவாரமாக வந்து கொண்டிருந்தார்கள்.
சிறுவர்கள் படாரன் படாரச்சி பெரிய பெரிய பொம்மைகளை கிட்டே நெருங்கி வந்து தொடுவதும்
சீந்துவதும் சிரிப்பதுமாக விளையாடி கொண்டிருந்தார்கள். சிறுவர்களின் சிரிப்பு அந்த
இடத்தையே தொற்றி கொண்டு ஒரே அமர்க்களமாக இருந்தது.
முக்கிய விருந்தினருக்கு என்று ஒரு பந்தியும் விருந்தினருக்கு என்று தனி பந்தியும் பொதுமக்கள்
அனைவருக்கும் ஒரு பொது பந்தியும் உணவு கூடம் அமைத்து ஒரு வார காலமாக சாப்பாடு
அளிக்கப்பட்டு கொண்டிருந்தது. யார் வீட்டிலும் அடுப்பு பற்ற வைக்கப்படவில்லை. ஊரே ஒரு
இடத்தில் கூடி சமைத்து விருந்து பரிமாறிக் கொண்டிருந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பல
குடும்பங்களுக்கிடையே நிலவி வந்த பல வருட பகை மறைந்து அவரவர் வீட்டு
காளையர்களுக்கும் கன்னியர்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்து அடுத்து முகூர்த்தம்
குறிக்கப்பட்டு கொண்டாட்டத்தின் உச்சத்தில் திளைத்துக் கொண்டிருந்தது வீரையன் கோட்டை
நாடு.
அநேகம் கும்பினியார்கள் திருமணத்திற்கு அழைக்க பட்டிருந்தார்கள். அழைப்பு பெற்ற
கும்பினாயார்களும் அவர்கள் பரிவாரங்களும் நன்கு அலங்கரிக்கப்பட்ட குதிரைகளிலும்
துரைசானிகள் குதிரைகள் பூட்டப்பெற்ற சாரட் வண்டிகளும் வந்தவண்ணம் இருந்தார்கள்
மக்களுக்கோ அவர்களின் வெள்ளை நிறமும் அவர்கள் உருவ அமைப்பும் ஒரே ஆச்சர்யமாக
இருந்தது. திறந்த வாய் மூடாமல் கண்ணிமைக்காமல் பார்த்த வண்ணம் இருந்தார்கள். அவர்கள்
தங்களுக்குள் பேசிக் கொண்ட மொழியோ புதுமையாக இருந்தது. துபாஷிக்கு மட்டும் எப்படி
அவர்கள் மொழி புரிகிறது என்ற வியப்பு இருந்தது. இவர்களை தன் திருமணத்திற்கு
அழைத்திருந்த விஜயனும் பட்டினத்தில் இவர்களோடு தான் படித்து வந்தான் என்பதும்
அவர்களுக்கு விவாதிக்க வேண்டிய விஷயமாக இருந்தது.
திடீரென்று கோட்டை வாயில் பரபரப்பாயிற்று. சுந்தரர் தன் பரிவாரங்கள் புடை சூழ சொந்த
பந்தங்களுடன் வந்து கொண்டிருந்தார்.
வீர ரெகுநாதரும் ராணி லட்சுமி தேவியாரும் மந்திரி பிரதானிகள் சூழ கோட்டையின் வாயிலுக்கே
வந்து அவர்களை முகமன் கூறி வரவேற்று அழைத்து சென்றார்கள்.மக்கள் கூட்டம் சாலையின்
இருமருங்கும் குழுமி நின்று சுந்தரரை அவருடைய சகல பட்டபெயர்களையும் சொல்லி
வாழ்த்தொலி எழுப்பியது. மன்னரும் அவர் குடும்பத்தாரும் மக்களின் அபரிமிதமான அன்பை இரு
கரம் கூப்பி தலை சாய்த்து வணங்கி ஏற்று கொண்டார்கள்.
மேல் திசையிலிருந்து இளவரசி ரோகிணி தேவியார் வந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து
மன்னர் சுந்தரரும் ரங்கநாயகியும் அவளை எதிர் கொண்டு சென்று அழைத்து கொண்டு
வந்தார்கள்.
அவர்களே அவளுக்கு பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து இந்த திருமணத்தை நடத்தி முடிக்க
இருக்கிறார்கள் என்றும் இளவரசி ரோகிணி தேவிக்கு யாரும் இல்லை என்று மக்கள் நினைத்து
விடக் கூடாது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்றும் இதன் மூலம்
நாட்டோருக்கும் குமரனுக்கு பெண் கொடுக்கும் மற்றொரு சம்பந்திக்கும் மறைமுகமாக தெரிய
படுத்தினார்கள். என்ன இருந்தாலும் அமுதாவும் ரோகிணியும் அவர்களுடைய ஓரகத்தி
திலகவதியுடன் சேர்ந்து வாழ வேண்டியவர்கள் ஆயிற்றே.
மணமேடை மிகவும் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நடுநாயகமாக வெள்ளையாடை
உடுத்தி வெள்ளத் தலைப்பாகை அணிந்து நெஞ்சில் முத்துமணி மாலைகள் அணிந்து மூத்தவன்
குமரனும் இடது புறத்தில் அடர்சிவப்பு நிறத்தில் ஆடையணிந்து தலைப்பாகையில்
ரத்தினக்கற்கள் பதித்து நெஞ்சில் இரத்தின மாலை அணிந்து விஜயனும் வலதுபுரத்தில் பச்சை
உடையில் பச்சை தலைப்பாகையில் மரகத கற்கள் பதிக்கப்பட்டு நெஞ்சில் மரகத மாலையும்
அணிந்து சேகரனும் ஆண்மையின் பொலிவுடன் அமர்ந்திருந்தார்கள்.
மூன்று இளவரசிகளும் அழைத்து வரப்பட்டார்கள். தாழம்பூவில் செவ்வரியோடிய வர்ணத்தில்
ஆடையணிந்து கழுத்தில் ஆபரங்களுடன் முத்துமாலை அணிந்து திலகவதியும் அடர்வண்ண
நிறத்தில் ஆடையன்டிந்து ஆபரங்களுடன் ரத்தினமாளையும் அணிந்து குத்துவிளக்கின் சுடரைப்
போன்று ரோகிணியும் குவளைமலரைப் போன்று அமுதாவும் தலைமுடியை ஒன்றுபோல தூக்கி
கொண்டையிட்டு அடர்க்க தொடுத்திருந்த ஜாதி மல்லியால் சுற்றி நெத்தி சூடியும் பிறைநுதலும்
வைத்து அலங்கரித்து கழுத்தில் ரோஜா மாலையும் அதன் உள்ளே வாசமுள்ள மல்லி மாலையும்
அணிந்து அழகே உருவாக தேரைப் போல ஆடி அசைந்து வந்து அமர்ந்தார்கள். .
நாதஸ்வரம் மங்கள இசை இசைக்க மணமகன்கள் மணமகள்கள் கழுத்தில் மங்கள நாண்
பூட்டினார்கள்.
வாழ்த்தொழி விண்ணை பிளந்தது. அது எட்டு திக்கும் ஓங்கி ஒலித்தது. தங்கள் இளவரசர்களுக்கு
பெரிய பெரிய சாமாராஜியத்ஹ்டின் இளவரசிகளே ராணிகளாக அமைந்தது வீரையன்கோட்டை
குடிமக்களை பெருமிதம் கொள்ள வைத்தது.
திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் மனநிறைவுடன் ஒவ்வொருவராக கிளம்பி சென்று
கொண்டிருந்தார்கள். சுந்தரர் ரோகிணியிடம் விடை பெற்று கொள்ள வந்தார். தன்னை வணங்கி
எழுந்தவளை நெஞ்சார தழுவிக் கொண்டு கண்ணீரோடு அறிவுரை சொன்னாள் ரங்கநாயகி.
சுந்தரர் ரோகிணியை தன் மார்பில் சாற்றி தலையை தடவி கண்கள் கலங்க வாழ்த்து சொன்னார்.
“அம்மா ரோகிணி, திவானை நம்பி உன்னை ஒப்படைத்து உன்னை சித்திரவதைக்கு ஆளாக்கி
விட்டேன். என்னை பொறுத்தக் கொள்ள வேண்டும் மகளே”
“பெரியப்பா” கண்கள் கலங்கியது ரோகிணிக்கு.
“உன் தந்தைக்கு வாக்கு கொடுத்திருந்தேன் உன்னை ஒரு நல்ல மணவாளன் கையில் பிடித்துக்
கொடுப்பேன் என்று. அதை இன்று உனக்கு பிடித்த மணமகனுக்கே கொடுத்து நிறைவேற்றி
விட்டேன். பாஸ்கரரின் ஆன்மா என்னை மன்னிக்கும் என்று நம்புகிறேன்”
“பெரிய வார்த்தைகள் சொல்லி என்னை துன்பப்படுத்திட வேண்டாம் பெரியப்பா”
“ஆம். போகட்டும். பழையதை எல்லாம் மறந்து இனி புது வாழ்க்கையைத் தொடங்கு.
அமுதாவைப் போல உன்னையும் என் மகளாகவே நினைத்தேன். இன்று இருவரையும் ஒரே
இடத்தில் திருமணம் செய்து வைத்து விட்டேன்”
“ஆமாம் பெரியப்பா. நானும் அமுதாவும் சிறுவயதில் ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இனி ஒன்றாக
வாழப் போகிறவர்கள். எப்போது நீங்கள் வேட்டுவமங்கலம் வருகிறீர்கள் பெரியப்பா?”
“உங்கள் பட்டாபிஷேகத்திற்கு வருகிறேன் அம்மா”
“தாங்கள் தானே அதற்கு நாள் குறிக்க வேண்டும்”
“கும்பினியாருக்கு உன் திருமணத்தை முறைப்படி அறிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் ரிசீவரை
திரும்ப பெறுவதற்கான ஆயத்தங்கள் செய்ய வேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்து
விட்டு உனக்குத் தகவல் தருகிறேன்”
“உங்கள் வரவிற்காக காத்திருப்போம் பெரியப்பா” ரங்கநாயகியை ஆரத் தழுவி விடைப் பெற்றுக்
கொண்டாள் ரோகணி. ரங்கநாயகியின் கண்ணீரில் திவானிடம் இத்தனை வருடங்களாக
ரோகிணியை கஷ்டப்பட விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வு கரைந்து வழிந்து
கொண்டிருந்தது. அதை உணர்ந்த ரோகிணியின் அணைப்பு ரங்கநாயகியை ஆறுதல்படுத்திக்
கொண்டிருந்தது. அமுதாவுமே ரோகிணியின் தோள்களைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
சுந்தரர் அவர் மனைவி மற்றும் மகள் இவர்களுக்கும் ரோகிணிக்கும் இடையே இருந்த அந்த
பாசப்பினைப்பைக் கண்ட விஜயனுமே மனம் நெகிழ்ந்து கிடந்தான்.
தன்னை சுதாரித்துக் கொண்ட சுந்தரர் அங்கே நிரம்பிக் கிடந்த மௌனத்தைக் கலைத்தார்.
விஜயனின் தோளில் கரம் வைத்து அன்பொழுக சொன்னார். “இனி ரோகிணி
வேட்டுவமங்கலத்தின் இளவரசி அல்ல. மகாராணி. அதுப்போல நீங்களும் வீரையன்கோட்டை
இளவரசர் அல்ல. வேட்டுவமங்கலத்தின் மகாராஜா. பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை
முடித்து விட்டு சொல்கிறேன்”
“தாங்கள் வர வேண்டும் அரசே” விஜயனின் பார்வை ரங்கநாயகிக்கும் பொதுவானதாக இருந்தது.
“நாங்கள் இல்லாமலா? வேட்டுவமங்கலத்தின் மக்களுக்கும் மறைந்த என் நண்பர் பாஸ்கருக்கும்
என் பொறுப்பை ஒப்படைக்க வேண்டுமே. அவசியம் வருகிறேன்”
ரோகிணியும் விஜயனும் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி அவர்கள் வாழ்த்தை ஏற்று கொண்டார்கள்
பயணத்தை தொடர்ந்தார்கள் வேட்டுவமங்கலத்தை நோக்கி மட்டுமன்றி தங்கள் காதல்
வாழ்க்கையையும் அதன் இனிமையையும் நோக்கி..
அதே ராஜபாட்டையில் விஜயனும் ரோகிணியும் தங்கள் பயணத்தை மட்டுமல்லாமல் வாழ்க்கை
பயணத்தையும் தொடங்கினார்கள். கோடை வெய்யிலின் உக்கிரம் குறைந்து வைகாசி
ஆரம்பித்திருந்தது. குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பயணம் செய்து கொண்டு வந்தவர்கள்
வேட்டுவமங்கலத்திற்கு போகும் ராஜபாட்டையில் திரும்பிய போது திரையை தூக்கி சாலையின்
இருபுறமும் கூடி நின்று வாழ்த்தொலி எழுப்பிக் கொண்டிருந்த வீரையன் கோட்டையின்
மருமகளை பார்க்கும் ஆவலில் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கிய
போது ரோகிணி இயல்பாக அவர்களைப் பார்த்து புன்னகை சிந்தும் சந்திர பிம்பமாக வணக்கம்
சொல்லவும் அவளுடைய பண்பைக் கண்டு தங்களுக்கு சிலாகித்துக் கொண்டார்கள்.
ரோகிணி கொஞ்ச நாட்களுக்கு முன்பு வேட்டுவமங்கலம் அங்காடி வீதிகளில் கண்டு வியப்புற்ற
ஆடை ஆபரணங்கள் இன்று அவள் மேனியை சிறப்புற அலங்கரித்து இருந்தது.
அதே அம்மாவன் விடுதியில் இரவு தங்கினார்கள். அதே அறை. சாளரத்தை திறந்து வைத்து கதவு
நிலைப்படியில் சாய்ந்து நின்று எதிரே இருந்த ஏரியை பார்த்து கொண்டிருந்தான் விஜயன். அன்று
யாருக்காக அந்த பயணத்தை மேற்கொண்டானோ அவள் இன்று அவன் கரங்களில் இருக்கும்
விதியை நினைத்து பார்த்து கொண்டான். அன்று புதிர்கள் நிரம்பி இருந்த அவன் எதிர்காலம்
இன்று எல்லா புதிர்களையும் களைந்து அவனுக்கு வளமான காதலால் நிறைந்திருந்தது.
அவளை தன் கரங்களில் இருந்து விடுவித்து தன் முன்னே நிறுத்தி அவள் தோள்களின் இருபுறமும்
கரங்களை ஊன்றி அவள் கண்களுக்குள் பார்த்து கொண்டு நின்றான். அவளுக்கு வெட்கமாக
இருந்தது.. “என்ன அப்படி பார்க்கிறீர்கள்?”
“நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் ரோகிணி?”
“இப்போது தான் பார்ப்பது போல தெரிகிறது?” புருவம் உயர்த்தி கேலியில் கண்கள் மின்ன
கேட்டாள்
அவளை விடுவித்து விட்டு அறையின் நிலைப்படியில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். கண்கள்
எதிரே பறந்து விரிந்திருந்த ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தது. திடீரென்று தன்னை விட்டு
நகர்ந்து போய் நின்று கொண்டு எங்கோ நினைவாக இருப்பவனின் தோளில் சாய்ந்து கொண்டு
அவளும் எதிரே தெரிந்த ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவன்
அவள் புறம் திரும்பி மீண்டும் அவளை தன் கைகளில் அணைத்துக் கொண்டு சொன்னான்.”நான
முதன்முதலில் வேட்டுவமங்கலத்திற்கு வரும் வழியில் இதே விடுதியில் இதே அறையில் தான்
தங்கினேன். இதே ஏரியைப் பார்த்துக் கொண்டிருந்த போது உன்னை நினைத்து
கொண்டிருந்தேன். என் எதிர்காலம் எனக்கு எத்தகைய புதிர்களை வைத்திருக்குமோ அதை
களைந்திட இயலுமோ என்றெல்லாம் யோசித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்”
“இப்போதுமா கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?”
“இல்லை. நீ ஒரு பொக்கிஷம் ரோகிணி”அவன் குரல் உணர்சி வயப்பட்டிருந்தது.
“அப்படியா? நீங்கள் என்னைக் காண வரும் வரை அப்படி யாரும் சொல்லவில்லைஎய்”
“உன் மதிப்புத் தெரிந்து தானே அத்தனைப் பேரும் போராடினார்கள்”
“ஆனால் யாரும் வெற்றிப் பெறவில்லையே”
“பொறுமையுடன் போராட வேண்டும் ரோகிணி. பொக்கிஷம் அவ்வளவு சுலபத்தில் கிடைத்து
விடுமா என்ன?”
“நீங்கள் பொறுமையுடன் மட்டுமன்றி புத்தியுடனும் போராடினீர்கள்”
“புத்திக்கு சவால் விடும்படியாகத் தானே இருந்தது உன் நிலைமை.”
“ஆம் அது உண்மை தான். நீங்கள் மட்டும் சரியான தருணத்தில் என்னை வந்து
காப்பாற்றியிருக்கா விட்டால் நான் பாதாள சிறையில் பசியும் பட்டினியுமாக மாண்டிருப்பேன்”
இதை சொல்லும் போது அவள் உடல் ஒருமுறை நடுங்கியது. அதை உணர்ந்தவனாக அவளை
நெருங்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் விஜயன். தாய் தந்தையரின் மறைவிற்குப்
பிறகு இன்று தான் பாதுகாப்பாக உணர்ந்தாள் ரோகிணி.
வேட்டுவமங்கலத்தின் எல்லையை கடக்கும் போது நாட்டினரின் அதி முக்கியஸ்தர்கள் தங்கள்
பதவிக்குரிய தோரணையுடன் படோடாபமாக நின்று கொண்டிருந்தார்கள். வேத விற்பன்னர்கள்
மந்திரம் ஓத பூர்ண கும்ப மரியாதை செய்வதற்கு காத்திருந்தார்கள். திவான் தன் உள்ளத்து
உணர்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தானே முன்னின்று திருமணம் முடிந்து தன்
கணவருடன் வரும் இளவரசியை வரவேற்க சகல ஏற்பாடுகளும் சரி வர செய்திருந்தார்.
மன்னரும் ராணியும் இறந்து இத்தனை வருடங்கள் எந்த கொண்டாட்டங்களும் சிறப்பானதாக
இல்லாமல் இருந்தது. அவர்கள் மறைவிற்குப் பிறகு எந்த பொது வெளியிலும் காண இயலாத
இளவரசியை நீண்ட வருடங்களுக்குப் பிறகு இன்று தான் கண்களால் பார்க்கும் வாய்ப்பு
கிடைத்தது. அதுவும் தன் கணவருடன் வரும் இளவரசியை தங்கள் சொந்த பெண்ணைப் போல
பாவித்து வரவேற்க காத்திருந்தார்கள். மிகுந்த ஆரவாரத்துடன் கோட்டைக் கதவை தாண்டி
ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்கள் விஜயனும் ரோகிணியும். கோட்டைவாயிலை கடந்து
சென்ற போது தூரத்தில் தென்னந் தோப்பிற்கு இடையே தென்பட்ட வேட்டீஸ்வரன் கோயில்
திசையை பார்த்து கும்பிட்டார்கள் இருவரும்.
சாரட் வண்டியை விட்டு இறங்கி மக்கள் வெள்ளம் புடை சூழ ஆர்பரிப்பிலும் ஆரவாரத்திற்கும்
இடையில் நீந்தி அரண்மணையை வந்து சேர்ந்தார்கள். ஆரத்தி சுற்றி திருஷ்டி கழித்து உள்ளே
அழைக்கப்பட்டவர்கள் படிக்கட்டுகளின் உச்சியில் நின்று மக்களை பார்த்து கரம் குவித்து
கும்பிட்டு அவர்கள் எழுப்பிய வாழ்த்து கோஷங்களை ஏற்று கொண்டு உள்ளே திரும்ப எத்தனித்த
போது தான் யாரும் எதிஹ்ர்பாராத அந்த நிகழ்வு நடந்தேறியது. அதிர்ந்து போய் நின்றது மொத்த
கூட்டமும்.
விர் …………!
அம்பு ஒன்று பறந்து வந்து விஜயன் காதோடு உராய்ந்து கொண்டு சென்று படிகட்டின்
பக்கவாட்டு சுவற்றில் கிளாங் என்று பட்டு தெறித்து கீழே விழுந்தது.
மூச்…………………..அமைதி…………………!
எள் போட்டால் எண்ணை எடுத்து விடலாம். அத்தனை கொண்டாட்டங்களும் சட்டென்று
அடங்கி செய்வதறியாது திகைத்து நின்றது மக்கள் கூட்டம்.
சட்டென்று சுதாரித்து கொண்ட மெய்காப்பாள படை வீரர்கள் விரைந்து அம்பு வந்த திசையை
நோக்கி பாய்ந்து சென்றார்கள. நீண்ட நெடு நேரத்திற்குப் பிறகு கண்டுபிடக்க இயலாமல்
முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பி வந்தார்கள்.
இந்த நாச வேலையை செய்திருப்பார்கள்? என்றும் அப்படி செய்தவனை சபித்து கொண்டும்
மக்கள் கூட்டம் கலைந்து சென்றது. பின்னால் இருந்த மக்கள் கூட்டத்திற்கு முன்னால் என்ன
நடந்தது என்பது புரியாமல் ஆளாளுக்கு அவரவருக்கு தோன்றியதை சொல்லி
கொண்டிருந்தார்கள்.
திருமணம் முடிந்து மணப்பெண்ணும் மணமகனும் அரண்மனையில் காலெடுத்து வைக்கும் முதல்
நாளே இப்படி ஆயிற்றே இது என்னவாக இருக்குமோ அபசகுனமாக இருக்கிறதே இது எங்கே
போய் முடியுமோ என்றெல்லாம் வயதில் பெரியவர்கள் கவலை பட தொடங்கி விட்டார்கள்.
வேதபண்டிதர்களிடம் இது குறித்து விசாரிக்கவும் ஏதேனும் பரிகார பூசைகள் இருந்தால் அதை
மிக விரைவில் செய்து முடிக்கவும் வேண்டி அரசாங்க உயர் அதிகாரிகள் அரண்மனை பண்டிதரை
தொடர்பு கொள்ள விரைந்தார்கள். நாடே ஒரு கலக்கத்தில் இருந்தது.
இந்த செய்தியைக் எடுத்துக் கொண்டு வீரையன் கோட்டை மற்றும் சொக்கநாதபுரம் திசை
நோக்கி இரு வீர்கள் காற்றாகப் பறந்து சென்றார்கள்.
விஜயன் சட்டென்று கூட்டத்தில் திவானைப் பார்த்தான். அவன் கண்களுக்கு முன்பு
மற்றவர்களைப் போலத் தான் அவரும் கவலைப்பட்டவராகத் தெரிந்தார். அவருடைய முகத்தில்
தென்பட்ட உணர்சிகள் விஜயனுக்குப் புதிராகத் தான் இருந்தது. ஒருவேளை இதை விஜயன்
எதிர்பார்த்தானா? அதற்காக இன்றேவா? இதன் மூலம் ரோகிணியின் ஜாதக விசேஷத்தின் படி
ரோகிணியின் கணவன் இறந்து தான் போவான் என்று மெய்பிப்பது போல அமைந்து விட்டது என்று யோசித்தான் விஜயன்.
பார்ப்போம். மந்திரம் கால். மதி முக்கால் என்று ஒரு பழமொழி உண்டே. ரோகிணியின் ஜாதக
விசேஷமா? அல்லது தன்னுடைய மதியின் பலமா? விஜயன் திடமான முடிவுடன்
அரண்மனையின் உள்ளே சென்றான்.
தொடரும்
ஷியாமளா கோபு