Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-12

அந்த வானம் எந்தன் வசம்-12

12

மெல்ல கண்களை திறந்தவள் தூக்கிவாரி போட்டு எழுந்தாள். அவள் முகத்தருகே மிகவும் நெருக்கமாக அருளின் முகம் இருந்தது. 

“ஏய், என்ன செய்ய போறே?”

“ரிலாக்ஸ் நிவி. ரிலாக்ஸ். அம்மா எழுப்ப சொன்னாங்க.”

“அதுக்காக இப்படியா கிட்ட வந்து பயமுறுத்துவே”

“எழுந்து வெளியே வா. தலையில் எண்ணை  வைக்க வேண்டுமாம்”

“என்ன  எண்ணை  வைப்பது? எனக்கே வைத்து கொள்ள தெரியாதா?”

“அப்படி ஒரு சாங்கியமாம்.”

“சரி. நீ போ வரேன்”

“நிவி, ஒரு ரிக்வெஸ்ட், தயவு செய்து”

“தயவு செய்து?”

“அங்கே வெளியே எல்லோருக்கும் முன்பும் என்னை பெயர் சொல்லி அழைக்காதே”

“ஓ,உனக்கு தன்மான பிரச்சினையா?” குரலில் இகழ்ச்சி ஏகத்துக்கும் மண்டி கிடந்தது.

“கொஞ்சம் உதவி பண்ணு ப்ளீஸ்”

“சரி…பார்ப்போம். அது நீ நடந்து கொள்வதை பொருத்தது”

“நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்” குரலில் பணிவும் இல்லை. நிமிர்வும் இல்லை. கேள்வியும் இல்லை. பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை. உணர்ச்சிகள் சுத்தமாக துடைத்த குரலாக  இருந்தது.

ஆனால் வீம்புக்கு தான் அப்படி சொன்னாளே  தவிர மற்றபடி அவளுக்குத் தான் எப்படி என்று பதில் சொல்ல தெரியவில்லை.

“அது…ம்…பார்க்கலாம்” 

“நன்றி…” என்றான் அதே குரலில்.

வெளியே வந்ததும் இவளுக்காகவே காத்திருந்தது போல எல்லோரும் கூடத்தில் கூடி வந்தார்கள். இரண்டு ஸ்டூலில் இருவரையும் உட்கார வைத்தார்கள். எண்ணை நலுங்கு வைத்து விட்டு எழுந்து அவளை குளிக்க போக சொன்னார்கள். வானதியும் குந்தவையும் கூட  வந்தார்கள்.

“இரு அண்ணி, நாங்களும் வருகிறோம்”

“என்னது?”

“இன்னைக்கு நாங்கள் உன்னை கூட இருந்து குளிக்க ஊற்றனும்”

“இல்லை. வேண்டாம். நானே போய் குளித்து  கொள்கிறேன்”

“இல்லை அண்ணி, இன்று நாங்கள் தான் உங்களுக்கு குளிக்க வைக்கணும்”

“நானே குளித்து கொள்வேன்” எரிச்சலில் அவள் குரல் சற்றே உயர்ந்தது.

“அப்படி இல்லை, நாத்தனார்கள் நாங்கள் தான் ஊற்றனும்” குந்தவை பெரியவள் ஆதலால் அவளுடைய முக்கியத்துவத்தை விட்டு விட மறுத்து பிடிவாதமாக சொன்னாள்.

இழுத்து பிடித்த பொறுமையுடன் சொன்னாள் நிவேதிதா. “இல்லை, எனக்கு அதெல்லாம் பிடிக்காது”

பின்னால் வந்த மாமியார் சொன்னாள். “கல்யாணத்தில் சடங்கெல்லாம் பிடிச்சிருக்கா என்று நம்மை யாரும் கேட்டு செய்வதில்லை.”

“அதெல்லாம் அந்த காலம்”

“பாரு, நாத்தனார் தான் கூட இருந்த குளிக்க ஊற்றனும் என்பது சடங்கு. வம்பு பண்ணாமல் குளித்து விட்டு வா.”

மாமியார் குரலில் சூடு இருந்தது. வானதிக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாக தான் இருந்தது. இந்த காலத்தில் போய் இது போல எல்லாம் கட்டாயப்படுத்துகிரார்களே என்று. ஆனால் அவளுக்கும் இப்படி தானே நடந்தது. அவளாவது கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். பெரிதாக இதை எல்லாம் பொருட்படுத்தவில்லை. இந்த ஊர் பக்கம் பழக்க வழக்கம். என்ன செய்வது? அண்ணி சென்னை பொண்ணு. கூச்ச படத்தானே செய்யும்.

“அண்ணி. சும்மா நீங்க தலையில் தண்ணி விட்டதும் நாங்கள் வெளியே வந்து விடுகிறோம்”

“ஏய், நீ என்ன பெரிய மனுஷி போல பேசிகிட்டு. அம்மாவுக்கு தெரிந்தால் கோபப்படும்.”

“அக்கா, பாவம் அக்கா அண்ணி. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அம்மாவிடம் சொல்லாதே.”

நிவிக்கு பிரச்சினை பெரிதாகாமல் இந்த மட்டும் வானதி உதவினாளே  என்று அவள் மேல் ஒரு சின்ன அபிப்ராயம் ஏற்பட்டது.

இந்த மன  விருப்பம் இல்லாத கல்யாணத்தில், கூட வாழ போகும் கணவன் என்பவனுடன் தனக்கு ஆயுள் நாள் பரியந்தம் ஒத்து போகாவிட்டாலும் குறைந்த பட்சம் இவளாவது அனுசரணையாக இருக்கிறாளே அந்த மட்டும் கடவுளுக்கு நன்றி. 

“முடியாதும்மா.” என்றாள் நிவி கடுப்புடன்.

“என்ன நிவி, உன்னோடு அக்கபோரா இருக்கு” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அம்மா.

“நான் ஒரு தடவை சொன்னால் சொன்னது தான்.”

“இப்படி பேசினால் ஆச்சா?”

“வேறு என்ன செய்யணுமாம்”

“எழுந்து மேலே போ நிவி. மாப்பிள்ளை காத்து கொண்டிருப்பார்”

“அதை நினைத்தாலே எரிச்சலா இருக்கு. ஆளை விடு”

“எரிச்சல் பட்டு என்ன பண்ணுவது? எழுந்து போ”

“அம்மா தயவு செய்து புரிந்து கொள்ளேன். அவனை பார்த்தாலே குமட்டுதுமா”

“ரொம்ப தான் பண்றே. கொஞ்சம் பூசினார் போல இருப்பதெல்லாம் ஒரு தப்பா?”

“உனக்கு கண்ணு குருடாக தான் போய் விட்டது. அவன் பூசினார் போல தான் இருக்கிறானா?”

அவள் இரு கைகளையும் பக்கவாட்டில் அகற்றி குண்டு என்பது போல ஜாடை செய்யவும் 

அம்மாவிற்கே கொஞ்சம் புன்னகை தான். அதே சின்ன சிரிப்போடு மேலும் விவரம் கேட்டாள்.“சரி விடு. நேற்றிரவு என்ன செய்தாய்?”

“படுத்து தூங்கி விட்டேன்.”

“அதையே இன்னைக்கும் செய். ஆனால் இங்கே மட்டும் இருக்காதே. உன் அப்பாவிற்கு விவரம் எதுவும் தெரியாது. பாவம் அவரேனும் நிம்மதியாக இருக்கட்டும்.”

“அம்மா அது அவர்கள் வீடு. என்னால் அவர்கள் சொன்ன இடத்தில் தான் இருக்க முடியும். இது நம்ம வீடாச்சே. நான் இங்கே என் ரூமில் தான் இருப்பேன்.”

“ஏ மணி, என்ன இவளோடு இப்படி போராட்டமா போச்சு.” அம்மா கையாலாகாமல் தலையில் கையை வைத்து கொண்டு அருகில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்து விட்டாள். 

4 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *