Skip to content
Home » அந்த வானம் எந்தன் வசம்-2

அந்த வானம் எந்தன் வசம்-2

2

அவளுடைய அறையை அவளுடன் பகிர்ந்து கொள்ளும் நம்ருதா முன்பே வந்து அறையில் ஏசியை போட்டு வைத்திருந்தது அவளுக்கு இதமாக இருந்தது.

‘அப்பாடா’ படுக்கையில் தொப்பென்று விழுந்தாள். நிவேதிதா ஒரு மல்டி நேஷனல் கம்பனியில் மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கிறாள். சீனியம்மாவை பொறுத்தவரை மார்கெட்டிங் என்பதெல்லாம் பெரிய வேலை இல்லை. புரியவும் புரியாது. ஐ.டி கம்பனி தான் உசத்தி. அதனால் அவளுக்கு புரிய வைப்பதை விட அவளும் கம்ப்யூட்டர் கம்பனி தான். ஆனால் உண்மையிலேயே நம்ருதா  ஐ.டி யில் தான் பணி புரிகிறாள். நல்ல உயரமாக சுருட்டை முடியுடன் அம்சமாக இருப்பாள். பழகுவதற்கு இனிமையானவள். திருச்சி பக்கத்தில் சொந்த ஊர். இவளுடன் கடந்த மூன்று வருடங்களாக ஒரே அறையில் தங்கி வருபவள். இவள் குண விசேஷம் புரிந்தவள்.      

“இன்றைக்கு ரொம்ப வெயில் என்ன நிவி”

“ம்!”

“என்ன இன்றைக்கு சீக்கிரம் வந்துட்டே?”

“இதோட மூன்றாவது ஆள். ஒருநாளைக்கு சீக்கிரம் வரக்கூடாது என்று ஏதேனும் சட்டமா?”

“எதுக்கு இப்படி கோவித்து கொள்கிரே?”

“பின்னே என்ன?”

அறை கதவு தட்டப்பட்டது. நமரு போய் கதவை திறந்து வெளியே  நின்று கொண்டிருந்த மணியிடம் டீக் கப்பை வாங்கி கொண்டு உள்ளே வந்தவள் “சரி எழுந்திரு. டீயை குடி” என்றாள்.

“எனக்கொண்ணும் வேண்டாம்.”

“ஏய், நீ தானே டீ கேட்டே. எழுந்து குடி.”

அவளுடைய அதட்டலில் எழுந்து வாங்கி கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து குடித்தாள். “ஆமாம் நமரு, இன்றைக்கு நீ கூட தான் சீக்கிரம் வந்து விட்டாய்”

இவள் விஷயம் தெரிந்து கொண்டே நம்மை ஆழம் பார்க்கிறாள் என்பது நம்ருவிற்கு புரிந்தது. எவ்வளவு தூரத்திற்கு வம்பு இழுக்கிறாள் பார்ப்போம். அவளுடைய கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் சற்று நேரம் நிவியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள். 

“நிவி, இன்றைக்கு காலையில் உங்க அம்மா எனக்கு போன் பண்ணினாங்க”

“பண்ணிட்டாங்களா. அதானே பார்த்தேன். அவர்களால் சும்மா இருக்க முடியாதே”

“ரொம்ப அலுத்துக்காதே. அவ அவ வீட்டில் கல்யாணம் செய்து வைக்க மாட்டேன்கரான்களே என்று தவிக்கிறாங்க.”

“சரி விடு, என்ன சொன்னார்கள்.?”

“இன்றைக்கு மாலை ஆறுமணிக்கு மாப்பிள்ளை வீட்டில் வருகிறார்களாம்.”

“போட்டோ அனுப்பி இருந்திருக்கலாம் இல்லே”

“எதுக்கு.? எதுக்குன்னு கேக்கறேன்?”ஆவேசமாக கேட்டவள், பிறகு இவளிடம் இந்த நேரம் 

சண்டை போட்டு அவளுடைய மூடை கெடுத்து விடக்கூடாது. நல்லநாளே துற்குணி அதிலும் இப்போது கர்ப்பிணி என்பது போல இந்த கல்யாணத்தை நிறுத்த வழி தேடுகிறவளுக்கு தானாக வலிய ஒரு காரணத்தை கொடுக்க கூடாது என்று தீர்மானித்து கொண்டு அவளிடம் மிகவும் பொறுமையுடனே பதில் சொன்னாள். “போட்டோவை பார்த்து விட்டு இது சொத்தை அது சொள்ளை  என்று சொல்லவா?”

“உண்மையை தானே சொல்ல முடியும்?”

“எது உண்மை.? நான் தெரியாமல் தான் கேட்கிறேன். இதுவரைக்கும் போட்டோவை பார்த்து விட்டு நீ கொஞ்சம் பேச்சா பேசியிருக்கே? அந்த மாப்பிள்ளை பையன்கள் காது கொடுத்து கேட்டிருந்தாங்கன்னு வெச்சிக்க, தூக்கு போட்டு கொண்டு தொங்கி இருப்பாங்க.”

“ஏய், என்னப்பா ரொம்ப தான் பில்ட் அப் பண்றே?”

“அடடா, நீ மோசமா கமென்ட் அடித்ததில்லை?”

“அப்படி என்ன கமென்ட் அடித்தேனாம்?”

“திருச்சியிலிருந்து ஒரு எஞ்சினீயர் மாப்பிள்ளை வந்தானே. அவன் போட்டோவை பார்த்து விட்டு அவனுக்கு முன் மண்டையில் முடி குறைவாக இருக்கிறது. அதனால் அவனுக்கு கூடிய சீக்கிரம் தலையில் வழுக்கை விழுந்து விடும் என்று சொல்லவில்லை.”

“ஆமாம். அப்படி தானே இருந்தது அந்த ஆள்”

“இப்போது வழுக்கையாக இருந்திருந்தால் தேவலை. நா….ளை…..க்..கு வழுக்கை விழும் என்று இன்றே அவனை வேண்டாம் என்று சொன்னாய்”

“அதெல்லாம் ஒரு தீர்க்கதரிசனம். ஒரு கால்குலேஷன். ஒரு கலை.”

“மண்ணாங்கட்டி. உன் குணம் தெரிந்து தான் உன் அம்மா இந்த வரனுடைய போட்டோவை அனுப்பவில்லை.”

“வேறே என்ன சொன்னார்கள்?”

“இது தான் உனக்கு கடைசி சந்தர்ப்பம். இதற்கு நீ சம்மதம் சொல்லி தான் ஆக வேண்டும் என்று நேரிடையாக சொல்லாமல் ஆனால் கிட்டத்தட்ட மிகவும் உறுதியாக சொன்னார்கள்”

“நீ என்ன சொன்னே?”

“நான் என்ன சொல்லணும்”

“சொல்லியிருந்திருப்பியே, அம்மா, அம்மா அவளை எப்படியாவது இன்றைக்கு  சம்மதிக்க வைக்கிறேன் என்று” நம்ரூ பேசுவது போலவே நிவி மிமிக்கிரி செய்தாள்.

இப்போது நம்ருவிற்கு  உண்மையில் ரொம்ப கோபம் வந்து விட்டது. “ஏய், நீ எப்படியோ போ. என்னை விடு” சொன்னவள் கோபத்துடன் படுக்கையில் நீட்டி நிமிர்ந்து படுத்து விட்டாள்.

“சரி விடுப்பா, ரொம்ப கோவித்து கொள்ளாதே. எங்க வீட்டில் பண்ற அலும்புக்கு உன்னிடம் கோவித்து கொள்வதில் பயனில்லை.”

“நிவி, நான் கேட்கிறேன் என்று தப்பாக நினைக்காதே.” படுத்திருந்தவள் எழுந்து உட்கார்ந்து ரொம்ப தன்மையாக தணிவாக கேட்டாள்.

“இல்லை, கேள். உன்னை நான் தப்பாக நினைப்பேனா?”

“நீ யாரையாவது காதலிக்கிறாயா? வீட்டில் சொல்ல பயமாக இருக்கிறது அப்படி என்றால் நான் வேண்டுமானால் சொல்லட்டுமா?”

“நீ இப்படி ஏதாவது தான் கேட்பாய் என்று தெரியும். நானும் தெரியாமல் தான் கேட்கிறேன். ஒரு பெண் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால் ஒன்று  அவள் ஏற்கனவே ஒருவனை காதலித்து தோல்வி அடைந்திருக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் இப்போது யாரையாவது காதலித்து கொண்டிருந்திருக்க வேண்டும் என்பது பொது விதியா?”

“அப்படி இல்லை தான். கல்யாணம் வேண்டாம் என்று சொல்ல நமக்கு ஒன்றும் சின்ன வயதில்லையே”

“அப்படி என்ன வயதாகி போயிற்று எனக்கு?”

“நீயே சொல்லேன்”

“ம்.! இருபத்தி எட்டு நடக்கிறது.”

“ஒருவேளை நான்கைந்து வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்து வைத்திருந்தால் ரொம்ப யோசிக்காமல் சரி என்று சம்மதித்து இருந்திருப்பாயோ.” 

“ஒருவேளை இருந்திருக்கலாம்”

“கல்யாண பருவத்தில் அந்த சின்ன வயதில் நாமும் ரொம்ப யோசிக்காமல் வீட்டில் சொல்பவரை கட்டி இருந்திருப்போம்.”

“அப்படி இல்லாவிட்டால் யாரையாவது காதலித்து இருந்திருப்போம்”

“அதுவும் சாத்தியம் தான்”

“இப்போது பேசி என்ன புண்ணியம்? அது போகட்டும். நம்ரூ நீ யாரையாவது காதலிக்கிறாயா?”

“இப்போது அது ரொம்ப முக்கியம் பார். எழுந்து வேறு உடை மாற்றி சின்னதா ஒரு அலங்காரம் செய்து கொள் நிவி. நேரமாகிறது. அவர்கள் வந்து விட போகிறார்கள்.”

“வேறு உடை எல்லாம் மாற்ற முடியாது. வேண்டுமானால் முகம் கழுவி கொள்கிறேன்”

தான் படுத்திருந்த படுக்கையை விட்டு எழுந்து சற்று தள்ளி போய் நின்று நிவேதிதாவை முழுமையாக பார்த்தாள் நம்ரதா. அவளோ இவளுடைய பார்வையை கவனியாதவள் போல மீதமுள்ள டீயை சொட்டு சொட்டாக குடித்து கொண்டிருந்தாள் என்னவோ அது தான் தன்னுடைய வாழ்நாள் சாதனை என்பதைப் போல

5 thoughts on “அந்த வானம் எந்தன் வசம்-2”

  1. M. Sarathi Rio

    இவளுக்கு என்னாச்சு…? ஏன் இப்படி கல்யாணம் வேண்டாம்ங்கிறதுல பிடிவாதமா இருக்கிறான்னு தெரியலையே..? அதிக சுதந்திரம் கூட இப்படி அலுப்பை கொடுத்திடுமோ..?

    😀😀😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *