23
எல்லோரையும் விட ரம்யா தான் அவளுடன் மிகவும் ஒட்டுதலாக இருந்தாள். அவள் வரும் வழியில் இருந்த கலை கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறாள். இது மூன்றாம் ஆண்டு.
வந்த ஒன்றிரண்டு நாட்கள் எல்லோரிடம் பேசவும் தூங்கவும் என்று பொழுது சரியாக இருந்தது. அதற்கு மேல் அங்கே பொழுது போகவில்லை. குறிப்பிட்ட தினசரி தான் கிடைத்தது. எதாவது படிக்கலாம் என்றால் சொல்லி கொள்ளும் படியாக ஒன்றும் சுவாரஸ்யமாக இல்லை. ஒருநாள் மாலை ரம்யா அவளை அழைத்து கொண்டு உள்ளூரில் இருக்கும் வீரமாகாளி கோவிலுக்கு போகலாம் என்று கிளம்பினாள். எல்லாவிதமான சடங்குகளில் சம்பிரதாயங்களில் நிவேதிதா கலந்து கொள்வது என்பது நேரிடையாக சொல்லப்படாவிட்டாலும் அது ஒருவகையில் உறவின் வகையில் வயதான பெண்களால் அச்சான்யமாக கருதப்பட்டது. இயற்கையில் அத்தகைய நடபடிகளில் நாட்டம் இல்லாததால் நிவிக்கு மனவருத்தம் ஏதும் இல்லை. ஆகையினால் ரம்யாவுடன் வெளியே கிளம்பி விடுவது அவளுக்குமே நன்மையாக போயிற்று.
ரம்யாவிற்கு எந்நேரமும் அவள் கல்லூரி கதை தான். நிவியும், அவள் கல்லூரியின் முகப்பு மட்டுமல்லாமல் வளாகத்தின் எல்லா இடங்களிலும் மரங்கள் அடர்ந்து இருப்பதை குறிபிட்டாள். உடனே ரம்யா சொன்னாள்,
“அக்கா, மூணு வருசத்திற்கு முன்பு, அதாவது நான் முதல் வருடம் சேரும் போது அந்த வளாகம் முழுவதும் பொட்டல் காடாகத் தான் இருந்தது. எங்கள் வர்மா சார் வந்த பிறகு தான் அவர் ஐடியா தான் இந்த மரங்கள் எல்லாம்.”
“அந்த காலத்து ஆட்களுக்கு தான் இந்த மாதிரி எல்லாம் யோசிக்க தோணும்.”
விழுந்து விழுந்து சிரித்தவளை என்ன நாம் சிரிக்கும்படியாக சொல்லிவிட்டோம் என்று புதிராக பார்த்தாள்.
ரம்யாவே சிரித்து முடித்து சொன்னாள். “அக்கா, அவர் அந்த காலத்து ஆள் இல்லைக்கா. சின்ன வயசுக்காரர் தான். என்னமோ குடுமி வெச்சி பஞ்சகச்சம் கட்டிய ஆளை போல அந்த காலத்து ஆள் என்கிறாயே.”
“ஓ, அப்படியா. சரிம்மா தெரியாமல் சொல்லிட்டேன்.”
“அவர் வந்ததற்கு பிறகு தான் எங்கள் டிபார்ட்மெண்டே நல்லா ஆச்சு. கம்ப்யுட்டர் லேப் செல்வி மேடம் கூட இப்போ தான் நல்லா சொல்லி தராங்க.”
“ஏன் அதற்கு முன்னாடி நல்லா சொல்லி தர மாட்டாங்களா?”
“முன்பெல்லாம் போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. வர்மா சார் வந்ததும் தான் கல்லூரியின் தரமே உயர்ந்தது.”
“வர்மா.! பெயரை பார்த்தால் நார்த் இந்தியன் போல இருக்கிறதே”
“இல்லைக்கா. அவர் நம் ஊர் தான்.”
“பரவாயில்லையே. இங்கே கூட அப்படி எல்லாம் பெயர் வைத்துள்ளார்களே.”
“அக்கா, அவர் வீட்டுக்கே வந்து விட்டோம். வாக்கா, உள்ளே போலாம்”
“ஏய் ரம்யா, என்ன தெரியாதவர்கள் வீட்டுக்கு கூப்பிடுகிறாய்”
“தெரியாதவர் இல்லைக்கா. நமக்கு கூட ஒரு வகையில் சொந்தம் தான்.”
“இருக்கட்டும். எனக்கு அங்கே போக வேண்டாம். வா வீட்டுக்கு போகலாம்.”
“அக்கா, அவருடைய வீட்டில் நிறைய புத்தகம் இருக்கு. இங்க்லீஷ் புக்ஸ் கூட நிறைய இருக்கு”
புத்தகம் என்றதும் நின்றாள்.
“உடனே திரும்பி விட வேண்டும்”
“சரி. ஆனால் உனக்கு தான் புக்ஸ் ஐ பார்த்து விட்டு வர மனசு இல்லாமல் போய் விடும்.”
“ரொம்ப தான் பில்ட் அப் குடுக்கிறே. சரி போய் தான் பார்ப்போம்”
காம்பவுண்ட் சுவர் இல்லை. ஒதிய மரத்தால் ஆன வேலி தான். ஆனால் வாயிலின் இருபுறமும் சிமென்ட் பில்லர் போட்டு அதில் கேட் விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. சாதா மர கேட் தான். திறந்தே இருந்தது. உள்ளே நூறடியில் உள்வாங்கியது போல இருந்தது அந்த பழைய காலத்து வீடு. ஆனால் மிகவும் பிரமாண்டமாக இருந்தது. வீட்டின் முகப்பில் தென்னங்கீற்றினால் ஆன அடர்த்தியான தட்டை பந்தல் போட்டிருந்தது. அது குளுகுளு வென்று இருந்தது. வருவோர் அமர வசதியாக மர நாற்காலிகள் போடபட்டிருந்தது.
வாயில் கதவு திறந்தே இருந்தது. உள்ளே நுழைந்த ரம்யா பாட்டி பாட்டி என்று குரல் கொடுத்தாள். யாரு, ரம்யாவா என்று கேட்டு கொண்டே வந்தவளுக்கு சுமார் அறுபது வயது இருக்கும். தலை தும்பைபூவாய் வெளுத்திருந்தது. புடவையை பின்கொசுவம் வைத்து கட்டி இருந்தாள். கண்களில் கண்ணாடி அணிந்து இருந்தாள். பழைய கால பண்ணையாரம்மாள் போன்ற தோற்றம். தோற்றத்தில் ஒரு நிமிர்வு இருந்தது.
ரம்யாவுடன் உடன் வந்தவளை கண்டதும்,
“இது யார் புதுசாக இருக்கிறதே” என்றாள்.
“எங்க அக்கா. பெரியப்பா பொண்ணு. தில்லியில் வேலை பார்க்கிறாள்.”
“எங்கே இந்த பக்கம் உன்னை ரொம்ப நாளா ஆளை காணோம் ரம்யா” என்று கேட்டாள்.
“திவ்யா அக்காவுக்கு கல்யாணம் ஆச்சே பாட்டி.”
“நல்லது. கல்யாண வேலை எல்லாம் நடக்கிறதா?”
என்று கேட்டவள் நிவியின் அருகில் வந்து அவளை முகத்தினருகில் உற்று பார்த்து,
“உனக்கு எப்போது கல்யாணம்?” என்று நேரிடையாக கேட்டாள்.
எதிர்பாராத இந்த கேள்வியால் நிவி திகைத்து போனாள். இதை தான், இப்படி வெள்ளந்தியாக மனதில் பட்டதை முகத்திற்கு நேராக கேட்கும் கிராமத்தார்களை சமாளிக்க முடியாமல் தான், அருள் வீட்டார் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் போலும். ஆனால் அவளுக்கு தான் பதில் சொல்ல தெரியவில்லை. இன்னும் எத்தனை பேர் இப்படி கேட்க போகிறார்களோ? ஆனால் இத்தகைய கேள்விக்கெல்லாம் ரம்யா அசரவில்லை. பெரிய மனுஷி போல ரம்யா தான் சமாளித்தாள்.
“இவளுக்கு பார்த்து கொண்டிருக்கு பாட்டி. அக்கா புக்ஸ் பார்க்கணும் பாட்டி. சார் இருக்காரா?”
“அவன் வெளியே போயிருக்கான். புத்தகம் தானே பார்க்கணும். இப்படியே மேலே போய் பாரு. போகும் போது சொல்லி கொண்டு போ”
சாவியை கொடுத்து சொல்லிவிட்டு அவள் உள்ளே போய் விட்டாள். ரம்யா மாடியில் உள்ள புத்தகத்தை பார்க்க நிவியை அழைத்து கொண்டு சென்றாள். கதவு மூடி இருந்தது. சாவியால் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள்.
மர அலமாரியில் மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கபட்டிருந்த புத்தகங்களை மிகுந்த ஆவலுடன் நிவி நோட்டம் விட்டாள். இலக்கியம் முதல் விவசாயம் வரை ஆங்கிலம் தமிழ் என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
nice
💜💜💜💜
Interesting