29
மயிலாடி பாறையின் அடிவாரத்தில் ஓரமாக ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு ரம்யாவும் நிவியும் அந்த சிறு குன்றின் மீது ஏற தொடங்கினார்கள். புதுக்குடி கிராமத்தின் மேற்கில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த சிறு குன்று. மரங்கள் அடர்ந்த, பாறைகள் நிறைந்த குன்றின் மேலே ஒரு சின்ன முருகன் கோயில் உள்ளது.
முருகன் கோயிலின் கதவு திறந்து இல்லை. கம்பி அழி தான் போட்டிருந்தது. சின்ன கோயில் என்று
சொல்வதை விட அது ஒரு சின்ன பிறை அளவு தான் இருக்கும். விசேஷ நாட்களில் மட்டும் வீரமாகாளி அம்மன் கோயில் பூசாரி வந்து இந்த கோயிலுக்கு தேவையானதை செய்து வைத்து செல்வார்.
இன்றும் எத்தகைய அலங்காரமும் செய்யபடவில்லை. இவர்கள் கையோடு கொண்டு வந்திருந்த கிண்ணத்தில் இருந்த எண்ணையை அங்கே எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கில் ஊற்றி விட்டு கும்பிட்டு நகர்ந்தார்கள்.
அந்த குன்றின் பாறைகள் மறைவில் அந்த கிராமத்து இளஞ்சோடிகள் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து அமர்ந்திருந்தார்கள். அது காதலர்களின் பொழுது போக்கு ஸ்தலமாகவும் சந்திக்கும் இடமாகவும் இருப்பதினால் நிறைய காதலர்கள் அங்கே இருந்தார்கள்.
அங்கே இருந்த ஒரு தாழ்வான மரக்கிளையில் ஏறி உட்கார்ந்து கொண்டு சுற்றி இருப்பவர்களை பார்ப்பதும் அவர்களை பற்றி தங்களுக்குள் ஏதேனும் சொல்லி சிரிப்பதுமாக இருந்தார்கள் இருவரும்.
அப்போது கோயில் வாயிலில் நின்ற நெடியவனை கலாய்ப்பதற்காக வாயை திறக்க போகும் முன் ரம்யா “சார், வர்மா சார்” என்று கூப்பாடு போட்டு அவன் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பினாள்.
அவனும் அவர்களை அங்கே கண்டதும் அருகில் போய் “என்ன ரம்யா?” என்று கேட்டான். நிவியின் பக்கம் கூட திரும்பினான் இல்லை. அவனுடைய கோபம் அவளுக்கு நன்றாகவே புரிந்தது. அவளும் அவனுடன் பேச முற்படவில்லை.
அப்போது ரம்யாவின் கல்லூரி தோழிகள் கொஞ்சம் பேர் ஒரு கூட்டமாக வந்தார்கள். ரம்யா அவர்களை கண்டதும் நிவியிடம் கெஞ்சினாள். “அக்கா என் தோழிகள் வந்திருக்கிறார்கள். நான் அவர்களிடம் போய் கொஞ்ச நேரம் பேசி விட்டு வருகிறேன்”
“ஏய், அது வரை நான் ஒத்தையில் இருக்க முடியுமா?”
“அக்கா, ப்ளீஸ் அக்கா, கொஞ்சம் நேரம் அக்கா”
“சரி நானும் உன்னுடன் வருகிறேன்.”
“அக்கா, ப்ளீஸ் அக்கா, நீ இருக்கும் போது அவர்கள் எப்படி என்னோடு சகஜமாக பேசுவார்கள்?”
“ஓ, அது வேறு இருக்கிறதா?”
“கொஞ்ச நேரம் இரு அக்கா. சார், நான் வரும் வரை அக்காவுடன் பேசி கொண்டு இருங்கள் சார்”
அவன் பதிலுக்கோ அல்லது அவளுடைய மறுப்பிற்கோ காத்திராமல் சட்டென்று விரைந்து மறைந்து விட்டாள். “ஏய், ரம்யா” என்று பின்னாலிலிருந்து நிவி அவளை அழைத்ததை காதிலே வாங்காமல்.
கொஞ்ச நேரம் இருவரும் ஒருவரோடு ஒருவர் பேசி கொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள்.
அடர்ந்த அந்த மௌனம் இருவருக்குமே வசதியாக இல்லை. ஆண்டாண்டு காலமாகவே பெண்களுக்கு ஆண்கள் தானே அடிபணிவது. அவனாக பேசட்டும் என்று காத்திருந்தாள் அவள். அவள் நம்பிக்கை வீண் போகவில்லை.
“எப்போது வந்தீர்கள்?” ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக கேட்டான்.
அவளும் தன்மையாகவே பதில் சொன்னாள். “இப்போது தான் வந்தோம்”
“இந்த மயிலாடும் பாறையின் மீது இருக்கும் முருகன் கோயிலில் எது வேண்டி கொண்டாலும் கண்டிப்பாக நிறைவேறும்”
“மயிலாடி பாறை என்று ரம்யா சொன்னாளே. நீங்கள் வேறு என்னவோ பெயர் சொல்கிறீர்களே”
“இந்த குன்றின் மீது அநேகம் மயில்கள் இருக்கும். அது அவ்வப்போது தோகையை விரித்து ஆடும். அதனால் இந்த பாறைக்கு மயிலாடும் பாறை என்று பெயர்.”
“இப்போது மயில் இருக்கிறதா?”
“இப்போது இங்கே மனித நடமாட்டம் அதிகமாகி விடவே மயில்கள் குறைந்து விட்டன. ஆனாலும் எப்போதேனும் சமயத்தில் ஒன்றிரண்டு மயில்கள் வரும். வா போய் பார்க்கலாம்.”
அவனை பின் தொடர்ந்தவள் நெட்டுகுத்தாக இறங்கும் குன்றின் சரிவில் சற்றே தடுமாறினாள். தன் வலது கையால் அவளை புஜத்தில் பிடித்து கொண்டு ஜாக்கிரதையாக இறங்கினான் அருள்.
அந்த சரிவு மேலே இருந்து பார்வைக்கு தெரியாத வகையில் பாறைகளாலும் அடர்ந்த மரங்களாலும் சூழ பட்டிருந்தது. மரங்களின் குளிர்ச்சியும் அந்த சூழ்நிலையின் தனிமையும் அவளுக்கு தன்னிலை மறக்க செய்ய போதுமானதாக இருந்தது. அப்போது தான் மரக்கிளையில் உட்கார்ந்திருந்த மயில் ஒன்று பறந்து கீழே தரையில் வந்து தத்தி தத்தி நடந்து சட்டென்று தோகையை விரித்து ஒய்யாரமாக நடந்தது கண் கொள்ளா காட்சியாக இருந்தது. அஞ்சாறு அணில் பிள்ளைகள் வாலை நன்றாக நிமிர்த்தி கொண்டு அங்கும் இங்கும் ஓடியது வேடிக்கையாக இருந்தது.
தான் கையில் வைத்திருந்த வேர்கடலையை குனிந்து அணில்களுக்கு போட்டு கொண்டிருந்த நிவி அவளை நெருங்கி நின்று கொண்டிருந்த அருளை கவனிக்காமல் சூழ்நிலையின் அழகில் நிகழ்காலத்தை மறந்து இருந்தாள்.
அவளை இடிப்பில் வலது கரத்தை கொடுத்து தனக்காக இழுத்து கொண்டவன் தன்னுடன் சேர்த்து இறுக அணைத்தான்.
அதை சற்றும் எதிர்பாராதவள் திகைத்து “ஏ, என்ன பண்றீங்க?” பதறினாள்.
அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் அவளை இன்னும் நெருக்கி பிடித்தான். அவள் அவன் புறம் திரும்பி நிமிர்ந்து அவன் கண்களுக்குள் பார்த்தாள். அதில் தெரிந்த தாபம், காதல்..! என்னவோ இடையில் இந்த மூன்று வருடம் இல்லவே இல்லாதது போலவும், இருவரும் அப்போது தான் திருமணம் முடித்து இருப்பது போலவும், தான் அவனுக்கே அவனுக்கு முற்றிலுமாக உடமைப்பட்டவளை போன்றும் ஒரு மன மயக்கத்தை கொடுத்தது நிவிக்கு.
“நிவேதி..”
“ம் .”
அவள் காதருகில் இதழ்களை பதித்து அவன் ஊனுருக உயிருருக அழைத்த போது ஒருகாலத்தில் அவன் அப்படி செல்ல அழைப்பாக அழைத்த போது தான் அவனை செய்த ஏகடியம் நினைவுக்கு வந்தது.
இன்றைக்கு தனக்கு என்ன வந்தது?
அவன் புறம் நன்றாக திரும்பி அவளுடைய இரு கரங்களையும் மாலையாக்கி அவன் தோளை சுற்றி போட்டு கொண்டு அவனுடைய தோளிலேயே சாய்ந்து கொண்டாள்.
Nice epi😍
💜💜💜💜💜
Wow