31
“வேணாம், போகாதீர்கள். வேண்டாம்.”
“நிவி, நிவி, என்னம்மா கண்ணை திறந்து தான் பாரேன். ஏன் இப்படி உளறுகிறே? ஏதேனும் கனவு கண்டாயா? பயங்கரமான கனவா?”
தூக்கத்தில் உளறியவளை உலுப்பினாள் நிவியின் அம்மா. அவளருகில் படுத்திருந்த ரம்யாவிற்கு தூக்க கலக்கத்தில் ஒன்றும் புரியவில்லை ஏன் இந்த அக்கா இப்படி சத்தம் போடுகிறாள் என்று.
அவள் உலுக்கவும் கண்களை திறந்து பார்த்தவள் சில்லென்ற காற்றிலும் வேர்த்து விறுவிறுத்து போய் இருந்தாள். அம்மாவை கண்டதும் தான், தான் உறக்கத்தில் ஏதோ சப்தம் போட்டிருக்கிறோம் என்பது புரிந்தது அவளுக்கு. அதற்குள் கட்டிலில் பாதி தூக்கத்தில் எழுந்து அவளருகில் உட்கார்ந்திருந்த ரம்யா வேர்த்திருந்தவளை தான் போர்த்திருந்த பெட்ஷீட்டால் துடைத்து விட்டாள். அம்மா சாமி படத்தின் முன்பிருந்த சம்புடதிலிருந்து விபூதியை எடுத்து வந்து நெற்றி நிறைய பூசி மீதியை அவள் வாயில் போட்டு குடிக்க தண்ணீர் குடுத்தாள்.
“ஏன் நிவி, ஏதேனும் கனவு கண்டாயா?”
கனவா அது? மயிலாடி குன்றின் மீது அருள் நிவியின் கையை பிடித்து கொண்டு ஏறி கொண்டிருக்கிறான். அவள் அவன் தோளின் மீது சாய்ந்தவாறு நடந்து கொண்டிருக்கிறாள். உச்சிக்கு போன போது பக்கவாட்டு சரிவிலிருந்து திடீரென்று மேலே ஏறி வந்த செல்வி கண்ணிமைக்கும் நேரத்தில் அருளை பிடித்து கீழே தள்ளி விட்டு சிரிக்கிறாள். அருள் கீழே கீழே போகிறான். போகும் போது நிவேதி நிவேதி என்று கூவி கொண்டே இருக்கிறான்.
என்ன ஒரு தொடர்ச்சியான அருவருப்பான கனவு.
தாய் திரும்ப திரும்ப என்ன என்ன என்று கேட்கவும் பதில் சொல்லாமல் இருந்தவள் திடீரென்று நினைத்து கொண்டு அம்மா இப்போது மணி என்ன என்று கேட்டாள்.
தாயிற்கு புரியாமல் இல்லை. அதிகாலை கனவு பலிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவள் பயந்து நடுங்கி கொண்டு கேட்கிறாள் என்று. அவள் தலையை தடவி வாஞ்சையுடன் சொன்னாள்.
“எதுவாக இருந்தாலும் கண்ட கனவை யாரிடமேனும் சொல்லி விட்டால் அது பலிக்காது என்பது ஐதீகம்”
சொல்லுவதா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்தாலும் சொல்லாவிட்டால் அதனால் அவனுக்கு ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று அடிமனதில் பிராண்டிய பயத்தை புறந்தள்ள வழி இல்லாமல் அதை எப்படி சொல்வது என்று தயக்கத்துடன் ரம்யாவை பார்த்தாள்.
“ரம்யா, இன்னும் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வாம்மா”
“சரி. பெரிம்மா”
“இப்போது சொல், என்ன உன் கனவு?”
“அருளை மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டு விட்டார்கள்”
“அருளா.? நீ எங்கே அவரை பார்த்தாய்? இன்னுமா நீ அவரை ஞாபகம் வைத்து கொண்டிருக்கிறாய்? சரி அப்படியே இருந்தாலும் நீ என்னவோ அவனிடமிருந்து விலகியாயிற்று. அப்புறம் அவன் எப்படி போனால் உனக்கென்ன?”
உண்மை தான். அவனுக்கு ஆபத்து என்றதும் அதுவும் கனவில் தான் ஏன் இத்தனை பாதிக்க படவேண்டும்? அதுவும் செல்வி.! யார் அவள்?
தான் அவசரப்பட்டு அவனிடமிருந்து பிரிந்து வந்தது தப்போ?. தான் அவனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்த அந்த ஆறு மாதம் என்பது ஒரு குறுகிய காலம் அல்லவா ஒரு திருமணத்தை புரிந்து கொள்ள. முதன் முதலில் சிந்தனை வயப்பட்டாள்.
அவளுடைய சிந்தனை அவளுக்கே புரிபடவில்லை. அவனை நினைப்பதும் பிடிக்கவுமில்லை. தான் எங்கோ தொலை தூரத்தில் இருக்கிறோம். நம் பதவி என்ன? சம்பாத்தியம் என்ன? நம் வாழ்க்கை முறை என்ன? இங்கு வந்து இந்த பட்டிகாட்டில் நம்மால் வசிக்க முடியுமா?
சீ…………சீ… இந்த பழம் புளிக்கும் என்பதான சிந்தனையில் தலையை உலுக்கி நடைமுறைக்கு தன்னை கொண்டு வந்தவள், எப்போதும் போல இந்த பட்டிகாட்டு மைனருக்கு ஏற்ற பட்டிக்காட்டு பெண் அவள் தான். அவளால் தான் ஆடி சீர் ஆடாத சீர் எல்லாம் வைத்து அவனுடைய அம்மாவை திருப்தி படுத்த முடியும் என்று சால்ஜாப்பு சொல்லி கொண்டாள். இனி கூடுமானவரை அவன் கண்களில் படாமல் ஒதுங்கியே இருக்க வேண்டும்.
தீர்மானித்து கொண்டவள் திரும்பி படுத்து உறங்கி போனாள்.
இரவு சரியாக உறங்காதது கண்கள் எரிச்சல் உற்று தலையை வலித்தது நிவேதிதாவிற்கு. காலை உணவிற்கு பிறகு எல்லோரும் வெளியே கிளம்பினார்கள். திருச்சியில் கல்யாண பெண்ணிற்கு அழகு நிலையத்திற்கு போக வேண்டியது இருந்தது. அப்படியே அக்காவும் அண்ணியும் அவளுடன் சென்றார்கள். சாருவின் கணவன் அவளை தனியாக கல்யாணத்திற்கு என்று புதிதாக போட்டு கொள்ளவென்று நகையும் புடவையும் வாங்கி தருவதாக அவர்களும் உடன் கிளம்பினார்கள்.
இந்த திருமணத்திற்கு வந்ததில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இப்போதெல்லாம் அண்ணன் அண்ணியை கைகளில் எந்நேரமும் பிடித்து கொண்டே சுற்றுவது தான். அக்காவை எந்நேரமும் எதற்காவது எதையாவது சொல்லி கொண்டே இருக்கும் மாமா சந்திரன் கூட இங்கே வந்ததிலிருந்து அவளிடம் பதவிசாகவும் பாசமாகவும் நடந்து கொள்வது கண் கொள்ளா காட்சி. சாரு சிவாவை பற்றி கேட்க வேண்டாம். காதலித்து மணந்தவர்கள்.
பெரியவர்கள் எல்லோரும் திருமண வேலையாக யாரயோ பார்க்க கிளம்பினார்கள். ரம்யா கூட அன்று கல்லூரியில் முக்கிய வேலை என்று எல்லோருக்கும் முன்பாக கிளம்பி விட்டாள்.
நிவி மட்டும் தலைவலி என்று வாசல் கதவையும் வெளிச்சம் கண்களை குத்துகிறது என்று ஜன்னல் கதவையும் மூடி கொண்டு படுத்திருந்தாள். என்னெனவோ சிந்தனை. ஒருவேளை எல்லோரும் ஜோடி ஜோடியாக சேர்ந்து சுற்றுவதை பார்த்தும் கல்யாண பெண் கண்களில் கனவுடன் அலைவதை கண்டும் நாம் இப்படி இருக்க முடியவில்லையே என்ற ஏக்கமாக கூட இருக்க கூடும்.
பெரியவர்களும் தான் ஆகட்டும், சடங்குகள் சம்பிரதாயங்களில் மறைமுகமாக இவள் கலந்து கொள்வதை விரும்பாதது போல் உணர்ந்தாள். இத்தனை பெரிய கூட்டத்தில் தான் மட்டும் தனிமைப்பட்டு போனதை போன்று தவித்தாள் நிவேதிதா. இதுவே கூடுதல் காரணம் அவளுடைய தலைவலிக்கு. காரணம் தெரியாத வெறுமை மனதை ஆக்கிரமித்து இருந்தது. மனம் மிகவும் பாரமாக இருந்தது.
தான் அப்பா அழைத்தார் என்று இந்த ஊருக்கு வந்திருக்க கூடாது. அப்படியே வந்திருந்தாலும் அருளை சந்தித்து இருந்திருக்க கூடாது. அப்படியே சந்திக்க நேர்ந்திருந்தாலும் அவன் தோற்றத்தை கண்டு வியந்திருக்க கூடாது. அப்படியே வியப்பு ஏற்பட்டிருந்தாலும் அதை தன் மனதிற்குள் மட்டுமாக வைத்திருக்கனும். கண்களில் காட்டி இருந்திருக்க கூடாது. அவனுடன் பேச முற்பட்டிருக்க கூடாது. அப்படியே பேசி இருந்தாலும் அவனை தொட அனுமதித்து இருக்க கூடாது. அப்படியே அவனே தொட்டிருந்தாலும் தான் அதற்கு ரயாக்ட் பண்ணி இருந்திருக்க கூடாது.
இந்த மூன்று வருட காலத்தில் அவள் அருளை நினைத்து பார்த்ததே இல்லை.
ஆனால் இன்று.!
அவனை தவிர வேறு யாரையும் நினைக்கவும் தோன்றியது இல்லை.
ஒவ்வொன்றாக நினைத்து பார்த்து தான் அவனுக்கு எத்தகைய இடம் கொடுத்திருக்கிறோம் அதற்கான காரணம் என்ன என்பதை அலசி ஆராய்ந்து உண்மையை தெளிவு பட கண்டு கொண்டாள்.
அது…..அது…!
தான் அவனை மனதார விரும்புகிறோம் என்பது தான்.
இது எப்படி சாத்தியம் ஆகும்?
Interesting
💜💜💜💜
Interesting