37
பின்னுக்கு தள்ளி விடப்பட்டவன் சற்றே தடுமாறி அவள் எழுந்த வேகத்தையும் போட்டோவின் அருகில் போய் அதையே உற்று பார்த்தவாறு நிற்பதையும் கண்டவன் அவளை பின்புறமாக மீண்டும் அணைத்தான். ஆனால் அவள் அவனுடைய அணைப்பிற்கு இடம் கொடுக்காமல் சற்றே நகர்ந்து அவனிடம் எட்டி நின்றாள். அவன் அருகாமையில் தன்னை மறந்து நின்றவள் சுதாரித்து கொண்டாள்.
அவளுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. தெரிந்து கொள்ள வேண்டியும் இருந்தது.
“ஏன் இந்த படத்தை இங்கே மாட்டி வைத்துள்ளீர்கள்?”
“அதை சொல்கிறேன்.” என்றவன் பதிலை சொல்ல முற்படாமல் அவளை மீண்டும் தன் புறமாக திருப்பவே முற்பட்டான்.
அவள் அவனை விலக்கி விட்டு மீண்டும் அதே கேள்வியை கேட்டாள். அவள் நெகிழ்ந்து இருந்தது மாறி விட்டது என்று அறிந்தவன் அதற்கு மேல் அவளை அணைக்க முற்படாமல் அவளை அணைத்திருந்த கரங்களை விலக்கி கொண்டு அந்த போட்டோவையே பார்த்தான். அதை அவன் எடுத்த நேரத்தை சொன்னால் நம்புவாளா இவள்? என்று யோசித்தான்.
“என்ன யோசிக்கிறீங்க?”
“ம். அது வந்து….”
“மாட்டி வைத்த காரணம் மறந்து போய் விட்டதா? அல்லது இவளுக்கு எப்படி சொல்வது என்று யோசிக்கிறீர்களா?”
“என்ன காரணம்? ம். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை.”
“நான் சொல்லட்டா?”
“நீயா.? நீயா சொல்லுவே? உனக்கு என்ன தெரியும்?”
“ஏன் இந்த போட்டோவை இங்கே மாட்டி இருக்கிறீர்கள் என்ற உண்மை தெரியும்”
“என்னுடைய காரணம் என்னவென்று நானே சொல்கிறேன்”
“வேண்டாம். நானே சொல்கிறேன்”
“என் காரணத்தை உன்னால் எப்படி சொல்ல முடியும்?”
“இதற்கு பெரிய மூளை தேவையில்லை. யாராலும் ஊகிக்க முடியும்”
இவள் என்னவோ தவறாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்து அவன் அவசர அவசரமாக விளக்கம் சொல்ல முற்பட்டான். ஆனால் அவள் அவனை பேச விட்டால் தானே. அவள் புறமாக நீண்ட கையை தட்டி விட்டு தொடர்ந்தாள்.
“தோற்று போய் வந்தேன், தோற்று போய் வந்தேன் என்று புலம்பினீர்களே, அப்படி தோற்று போய் வந்த நீங்கள் இந்த மூன்று வருட காலத்தில் இத்தகைய மாற்றத்திற்கு ஆளானதற்கு உங்கள் உழைப்பு தான் காரணம் என்று சொன்னீர்களே, அதற்கு வெறி கொண்டு உழைத்தேன் என்றும் சொன்னீர்களே, இதை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் ஒன்றே ஒன்று தான் விளங்குகிறது.”
இவள் பழைய மாதிரி அவசர அவசரமாக ஏதோ தவறாக புரிந்து கொண்டு அதையே நம்பி அதனால் நம்மை விட்டு மீண்டும் விலகி விட போகிறாள் என்பது அருளின் தலையில் அடித்து பட்டு விட்டது. இனி இவள் யார் பேச்சையும் கேட்பாள் என்பதில் நம்பிக்கை இல்லை. சரி சொல்லட்டும். பார்ப்போம். எனவே அவளிடம் இருந்து தள்ளி நின்று கையை நெஞ்சின் குறுக்கே மடித்து வைத்து கொண்டு அவள் பேசுவதை கவனித்து கொண்டிருந்தான்.
“நீங்கள் இங்கே வந்ததும் உழைக்க தொடங்கி இருந்திருப்பீர்கள். இவ்வளவு பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பீர்கள். எனக்கு மட்டுமல்ல வேறு எந்த பெண்ணுக்குமே உங்களை பிடிக்காது என்று நான் சொன்னது உங்கள் காதில் ஒலித்து கொண்டிருந்திருக்கும். இந்த ஊரில் இருக்கும் எல்லா பெண்களும் உங்களை ஏகத்திற்கும் மதிப்பு கொடுக்கும் போது இதோ இந்த போட்டோவை பார்த்து நான் ஜெயித்து விட்டேன் பார்த்தாயா என்று தினசரி கொக்கலித்து இருப்பீர்கள். அதற்காக தான், என்னை நையாண்டி செய்வதற்காக தான், இதை இங்கே வைத்துள்ளீர்கள்.”
அவள் பேசிய பேச்சின் உஷ்ணமா அல்லது அவளது எண்ணங்களின் விளைவினால் அவளுக்குள் ஏற்பட்டிருந்த உஷ்ணமா என்று தெரியவில்லை. அருகில் இருந்த ஜக்கில் நீரை எடுத்து பருகினாள்.
“அதனால் தான் என்னை வெற்றி பெறவேண்டும் என்கின்ற வெறியினால் தான் இன்னொருவளுடன் திருமணம் பேசி முடித்தும் கூட உங்களால் என்னுடன் காதல் நாடகம் ஆட முடிந்தது. அதன் உச்சகட்டம் தான் இன்றைய இந்த நாடகம்.”
மூச்சு விடாமல் பேசியவள் ஒரு நீண்ட மூச்சு எடுத்து தன்னை சமன் செய்து கொண்டு நெஞ்சில் வலது கையை வைத்து சொன்னாள்.
“அப்பா..! நல்லவேளை தப்பினேன். இன்று உங்கள் சுயரூபம் தெரிந்தது. நினைத்து பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது. எவ்வளவு தூரம் உங்களை நான் வெறுத்திருந்தால் இந்த மூன்று வருட காலங்கள் அஞ்ஞாத வாசம் செய்திருப்பேன். இன்று ஒரு நிமிடத்தில் எல்லாம் வீணாக போய் விட பார்த்தது.”
நினைத்து பார்த்து மீண்டும் சொன்னாள்.
“அப்பாடா…! நல்லவேளை தப்பினேன்”
“அப்படி எல்லாம் இல்லை நிவேதி. நீயாக ஏதேனும் கற்பனை செய்து கொண்டு பேசாதே. கொஞ்சம் நான்.!”
அவனை மேற்கொண்டு பேச விடாமல் தடுத்தவள்,
“ஆக மொத்தம் உங்கள் வெற்றிக்கு, பார்த்தாயா வெற்றி பெற்றேன். இப்போது என்ன சொல்ல போகிறாய்? என்று என்னை கறுவுவதற்க்காக தான் இந்த போட்டோ இங்கே இருக்கிறது.”
“நீ சொன்ன விஷயங்கள் உண்மை. ஆனால்..”
“நான் சொன்ன விஷயங்கள் உண்மை என்று ஒப்பு கொள்ளுகிறீர்களா? ஆளை விடுங்கள்” சொன்னவள் அறையின் உள்ளிருந்து வெளியே வந்தாள். நிலைவாசல்படி தடுக்கி கீழே விழப் போனவளை பின்னால் வந்த அருள் கையை நீட்டி இடையோடு பிடித்து தாங்கி கொண்டான். அப்போது முன் கதவு திறந்து கொண்டு உள்ளே வந்தது……செல்வி.
இருவரும் அதை எதிர்பார்க்கவில்லை. உள்ளே வந்த செல்வி இருவரையும் அருளின் அறையிலிருந்து வெளியே வரும் போது பார்த்து விட்டு அருளின் கையை நிவியின் இடுப்பில் பார்வையை செலுத்தி விட்டு மீண்டும் கதவை திறந்து கொண்டு வெளியே போக யத்தனித்தாள்.
அவள் போக திரும்புவதை கண்ட அருள் அவசர அவசரமாக நிவியின் இடையில் இருந்த கையை
விலக்காமலே செல்வியை பார்த்து சொன்னான்.
“செல்வி, எங்கே போகிறாய்? உள்ளே வா” என்று அழைத்தான்.
ஏற்கனவே கொதிநிலையின் உச்சியில் இருந்த நிவி அருளின் கையை தள்ளி விட்டு வெளியேறினாள். அவள் போன வேகத்தை கண்டு பயந்தவளாய் செல்வி உள்ளே வந்தாள்.
“அவள் யாரு?”
நிவி தெருவில் இறங்கி போவதை ஜன்னல் வழியே பார்த்து கொண்டு நின்றிருந்த அருள் அவள் கண்பார்வைக்கு மறைந்த பின் செல்வியின் புறமாய் திரும்பி, “என்ன கேட்டாய்?’என்றான்.
“அவள் யார்? ஏன் கோபமாக போகிறாள்?”
“சொல்கிறேன் செல்வி”
சொன்னான். அவன் பட்ட அவமானங்களை மறைக்காமல் சொன்னான். சொல்லும் போது அவள் என்ன நினைப்பாளோ என்று அவமானங்களுக்கு அஞ்சாமல் சொன்னான். உண்மையை சொன்னான். மேலும் மேலும் சொல்லி கொண்டே போனான்.
செல்வியின் கண்களுக்கு முன்பு விரிந்தது மூன்று வருடத்திற்கு முந்தைய கதை. அவளுடைய இடம் என்ன என்பதும் கூட. அவன் சொல்லி முடிக்கும் போது அவள் தீர்மானித்து விட்டிருந்தாள் இனி அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை. அதை செயல் படுத்த விரைந்தாள்.
ena seiya pora selvi
💜💜💜
Interesting😍