Skip to content
Home » அரளிப்பூ 12

அரளிப்பூ 12

தலையணையில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டு இருந்த இயலினியின் முகத்தையே சிறிது நேரம் அந்த உருவம் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது… பொறுமையாக அந்த உருவம் அதன் கரத்தை இயலினியின் முகத்தை நோக்கி கொண்டு செல்ல செல்ல தானாக அந்த கரம் நடுங்கியது… இதோ அவளின் முகத்தை அந்த கரம் தீண்டி இருக்கும்… தீண்ட போன அந்த கரத்தை பட்டென ஒரு கரம் பிடிக்க அப்படியே அந்த உருவம் தனது வாயை மறு கரத்தால் பொத்தி கொண்டு படபடக்கும் இதயத்துடனே திரும்பிப் பார்க்க அங்கு செல்லத்தாயின் நின்று கொண்டிருந்தார்.

அவரின் முகத்தை பார்த்ததும் முகம் எல்லாம் வியர்த்து, “அம்மா…” என்று காத்தாக மட்டும் அந்த உருவம் வாயசைக்கும் போதே செல்லத்தாயி அவரின் வாயில் அவரின் ஆட்காட்டி விரலை வைத்து, “பேசாதே…” என்று சத்தம் இல்லாமல் சிரத்தை இடவலம் அசைத்தே அந்த உருவத்தை இழுத்துக் கொண்டு அவரின் பேத்தியை விட்டுத் தள்ளி சென்று அந்த உருவத்தை தன்னை விட்டு தூரம் தள்ளி விட்டது.

கீழே விழாத குறையாக இரண்டு அடி தள்ளி சென்ற அந்த உருவம், “அம்மா…” என்று உள் போன குரலில் அழைக்க செல்லத்தாயோ, “ஏய்ய்ய்… பேசாத… அம்மான்னு மட்டும் சொல்லிடாத… உன்னைய மாதிரி ஒரு பிள்ளையை பெத்ததுக்கு பெட்காமையே இருந்து இருக்கலாம்… இல்ல… என் பேத்தியா பொறந்த என் இயலே எனக்கு மகளா பொறந்திருக்கலாம்… ஆனா நீ பொறந்து என்னைய மலடியா ஆக்கி புட்டடி…” என்றே சுடு சொற்களாக இயலினியின் தாயார் சாந்தாவின் மீது கொட்டினார்.

அவரோ விழிகளின் நீருடன், “நான் என்ன ம்மா பண்ணுனேன்? எல்லாமே…” என்று வாயை திறக்க, “ஏய்ய்… ச்சி… பேசாதடி…” என்றே அருகில் எச்சில் துப்பினார்.

தன்னை பார்த்து தன்னை பெத்தவளே இவ்வாறு செய்தது அவமானம்மாக இருந்தது… ஆனாலும் சாந்தாவுக்கு அவர்கள் பண்ணியதற்கு இது எல்லாம் தேவை தான் என்பது போலவே அவர் அம்மா என்ற வார்த்தையை கூட கூற முடியாமல் அப்படியே நின்றார்.

சிறிது தள்ளி இருந்தாலும் செல்லத்தாயி இன்னொரு முறை தன் பேத்தியை திரும்பி பார்த்து அவள் உறங்கி கொண்டு தான் இருக்கின்றாள் என்பதை கண்டு கொண்டே பற்களை கடித்து கொண்டு அதே நேரம் சாந்தாவின் காதில் மட்டும் விழும் படி, “எந்த நேரம் உன் பிள்ளைக்கு ஆறுதலா நிக்கணுமோ துணையாக நிக்கணுமோ அப்ப எல்லாம் என் புருஷன் **** ****ன்னு அவன் பின்னாடியே நின்னு என் பேத்திய நீயும் அந்த ஆளோட சேர்ந்து கை கழுவி விட்டுட்ட நீ எல்லாம் என் பேத்தி கிட்டையே வர கூடாது டி…” என்ற செல்லாத்தாயிக்கு இன்று மதியம் தன் பேத்தி அறை வாங்கியதும் சதாசிவம் பேசி சென்ற வார்த்தைகளும் அனலாக அவரின் கண் முன் வந்து போனநு.

தன் மகளையாவது அறைந்து ஆத்திரத்தை தீர்த்து கொள்ளலாம்மா என்று கூட தோன்றியது… இருந்தும், “இல்ல… இல்ல… இவள எல்லாம் தொடவே கூடாது… இப்ப கூட இவ என் பேத்திய தொட்டு விட கூடாதுன்னு தான் இவள தொட்டே இழுத்து கிட்டு வந்தேன்…” என்றே நினைத்த செல்லத்தாயி

“இன்னைக்கு எப்படி அந்த ஆளு கண்டதை யோசித்துக்கிட்டு வந்து என் பேத்திய அடிச்சி எல்லார் முன்னாடியும் திட்டினாரோ அதே மாதிரி தாண்டி அன்னைக்கும் பண்ணுனாரு… அன்னைக்கே தீர விசாரிச்சி இருந்தால் என் பேத்தி பஞ்சாயத்துல இந்த ஊரு முன்னாடி அப்படி தலை குனிஞ்சி நின்னு இருப்பாளா? எல்லாம் உன் புருஷனாலையும் உன்னாலையும் தான் நடந்தது… தயவு செஞ்சி போயி தொலைஞ்சிடு… இதுக்கு மேல என் பேத்தியை தேடி உன் புருஷனோ நீயோ இன்னொரு தடவை வந்தீங்க… பெத்த புள்ளனு கூட பாக்க மாட்டேன்… சாணிய கரைச்சி ரெண்டு பேத்து மொவரலையே ஊத்தி விட்டுடுவேன்…” என்றே திட்டி தீர்த்து விட்டு

மீண்டும் தன் பேத்தியின் கட்டில் பக்கம் ஒரு முறை பார்த்து விட்டு, “போயிடு… என் பேத்தி கிட்ட வராத… அவளா உன் மூஞ்சில காரி துப்புறதுக்குள்ள நீயா ஒதுங்கி போயிடு…” என்று கூற அவரோ அப்படியே அந்த இடத்திலேயே மடங்கி அமர்ந்து விட்டார்.

ஆனால் செல்லத்தாயோ சிறிதும் இரக்கமின்றி தன் மகளின் பக்கம் கூட திரும்பாமல் சென்று தனது பேத்தியின் அருகே தரையில் போட்டிருந்த பாயில் படுத்து கொண்டார்.

படுத்த அவருக்கும் உறக்கம் இல்லை… தரையில் மண்டியிட்டு அமர்ந்து அழுது கொண்டிருந்த சாந்தாவிற்கும் உறக்கம் இல்லை… மூன்றாவது ஆளாக இயலினிக்கும் எப்போதோ உறக்கம் கலைந்து இருந்தது.

செல்லத்தாயி பாட்டி எப்போது சாந்தாவை இழுத்து கொண்டு சென்றாரோ அப்போதே இயலினிக்கு உறக்கம் கலைந்து விட்டது… ஆனாலும் அவள் சிறிதும் அசையாமல் அப்படியே படுத்து இருந்தாள்… அவளுக்கு எழ விருப்பம் மில்லை… அவர்கள் பேசிய அனைத்தும் அவளின் செவிகளுக்கும் விழுந்தது தான்… எழுந்து சென்று யார் பக்கமும் பெசவும் விருப்பம் மில்லை… அதே நேரம் அவளின் விழிகளும் கலங்கி தான் இருந்தது.

மூவருக்குமே அன்றைய பஞ்சாயத்து நாள் மட்டும் வந்தே இருக்கக் கூடாது என்று தான் தோன்றியது… பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இயலினி வகுப்பில் படித்த மாணவன் ஏதோ பாடத்தில் சந்தேகம் என்று அவளின் அருகே வந்து அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்க அவளும் அதை பெரியதாக கண்டு கொள்ளாமல் அவளுக்கு விளக்கம் தந்து புரிய வைத்து கொண்டு இருந்தாள்.

அந்த நேரம் அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்ட ஊரார்கள் இரு ஜாதி பெயரை கூறி அவர்கள் இருவரையும் பஞ்சாயத்தில் நிறுத்தி விட்டனர்… பள்ளி படிக்கும் இருவருக்கும் பழக்கம் இருக்கு என்பதாக.

அந்த பையன் சிறிது கீழே உள்ள ஜாதியை சேர்ந்தவன்… அதாவது இயலினியை காட்டிலும் கீழே உள்ள ஜாதியை சேர்ந்தவன்… ஆகையால் அந்த சிறுவனை மரத்தில் கட்டி வைத்து சிறுவன் என்றும் பாராமல் அடிக்கவே ஆரம்பித்து விட்டனர்… கூடவே இயலினியையும் அனைவரின் முன் நிறுத்தி சரமாரியாக கேள்விகளாக கேட்டுக்கொண்டு இருந்தனர்.

இயலினியை ஊர் பஞ்சாயத்தில் நிறுத்தி விட்டனர் என்று சாந்தாவிற்கு தகவல் செல்ல அவர் வந்ததுமே தன் மகளின் மீது தவறில்லை என்று கூறுவதற்கு பதிலாக என்ன நடந்தது என்று கூட கேட்காமல் வந்த வேகத்தில் அடித்து விட்டார்… “எதுக்கு டி அவனோட பேசின? நீ பேசினதால தான் இப்படி ஒரு பிரச்சனையே வந்து மானம் போகுது…” என்று கேட்க ஆரம்பித்து விட்டார்.

சரியாக அன்று காலை தான் இயலினி வயதுக்கு வந்த நேரத்தை குறித்து கொண்டு சதாசிவம் தன் மகளுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் என்று வெளியூர் சென்றார்.

அங்கு அந்த ஜோசியர் என்ன நினைத்து கொண்டு உட்கார்ந்து இயலினியின் நேரத்தை கணித்தாரோ அது கடவுளுக்கு தான் தெரியும்… அவர் முதலில் ஏதேதோ நோட்டுகளை எடுத்து எடுத்து பார்த்தார்… பேப்பரில் எதை எதையோ எழுதினார்… அதன் பின் விரல்களை விட்டு விட்டு எண்ணினார்.

இறுதியாக ஒரு பெரும்மூச்சியை விட்டே அந்த ஜோசியர் நல்ல விதமாகவே, “உங்க பொண்ணு மாதிரி அழகு அறிவு திறமை உள்ள பொண்ண யாராலையும் பார்க்க முடியாது… அந்த அளவுக்கு எல்லாருக்கும் பிடித்த பொண்ணு தான் உங்க பொண்ணு… படிப்பு விஷயத்துல சொல்லவே வேணாம்… இந்த சாதக கார பொண்ண அடிச்சிக்க யாராலையும் முடியாது… படிப்புல சிறந்து பேர் புகழ் எல்லாம் பெற்று உங்கள நல்லா பெருமை படுத்துவார்…” என்று எல்லாம் அந்த ஜோசியர் கூற கூற சதாசிவத்தின் முகமோ அவ்வளவு பொலிவாக மாறியது.

என் பொண்ணு என் பொண்ணு என்று மார்தட்டி கொள்ளாத குறையாக அகம் மகிழ்ந்து அமர்ந்திருந்தார்.

அதனை தொடர்ந்து அவர் கூற கூற தானாக சதாசிவத்தின் முகம் அப்படியே மாறியது.

“ஆனால் என்ன பண்ண? எல்லாத்தையும் சரியா எழுதுன இந்த ஜாதகக்கார பொண்ணோட தலைவிதிய சரியா கடவுள் எழுதல போல… அதனால உங்க குடும்பத்துக்கும் இனி துயர காலம் வர வாய்ப்பு உள்ளது… போதும்… இதுக்கு அப்பறம் ஏதாவது பிரச்சனை வந்தா மட்டும் ஜாதகத்த எடுத்து கிட்டு வாங்க… இல்லாட்டி வேணாம்… நீங்க போங்க…” என்று அவர் கூறும் போதே சதாசிவம் எழுந்து வந்து இருந்தால் ஓரளவுக்கு அனைத்தும் சரியாக ஆகி இருக்குமோ? என்னமோ? அதுவும் சந்தேகம் தான்.

அதான் ஏதோ பிரச்சனை வந்தா எடுத்து கிட்டு வரச் சொல்லி இருக்காரே… வந்ததுக்கு அப்புறம் அந்த ஜோசியர் சொல்ல வேண்டியத சொல்லி இருப்பாரு… அப்பையும் பிரச்சனை தான்… சதாசிவமும், “சாமி… எதுவா இருந்தாலும் இப்பையே நீங்க சொல்லிடுங்க சாமி… இப்பவே நீங்க சொல்லிட்டீங்கன்னா நான் கொஞ்சம் முன் எச்சரிக்கையா இருப்பேன் இல்ல…” என்று கேட்டார்.

அவரும் கடவுள் மீது பாரத்தை போட்டாரோ அல்லது இயலினியின் மீது பாரத்தை தூக்கிப் போட்டாரோ தெரிய வில்லை… ஆனால் ஏதோ ஒருவரின் மீது பாரத்தை போட்டே, “இந்த ஜாதகக்கார பொண்ணால தான் உங்க குடும்ப மானமே சந்தி சிரிக்க போகுது… நீங்க படக்கூடாத அத்தனை அவமானங்களையும் உங்க பொண்ணு அதாவது இந்த ஜாதகம் பண்ணி வைக்கும்… கண்டிப்பாக ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கும்… அதுவும் வேத்த ஆள… அது… இது…” என்று பாவம் அந்த பச்ச பிள்ளையின் பெயரில் அவர் என்ன வன்மத்தை வைத்து இருந்தாரோ அத்தனையும் கொட்டி முடித்து விட்டார்.

இது ஜோசியரின் நேரமோ அல்லது சதாசிவத்தின் நேரமோ அல்லது இப்படி மாட்டிக் கொண்டு நிற்கும் இயலினியின் நேரமோ என்னமோ எல்லாத்தையும் கேட்டு முடித்து மன வேதனையுடன், “அடுத்து என்ன என் குடும்பத்துல நடக்க போகுதோ?” என்று மனம் கலங்கி, “தன் மானம் கௌரவம் எல்லாம் என்னைய விட்டுட்டு போக போகுதா? அப்படி மட்டும் போயிட்டா அதுக்கு அப்பறம் நான் உயிரோட இருப்பேன்னா? பேசாம அதுக்கு முன்னாடியே அந்த கழுதைக்கு கல்யாணத்த பண்ணி வச்சிட்டா என்ன?” என்று எல்லாம் யோசித்து கொண்டே தான் ஊருக்கு வந்தார்.

காலை வரைக்கும் செல்ல மகளாக ஆசை மகளாக இருந்த அவரின் பதினைந்து வயதை தொட்டி மகள் இயலினி ஜோசியர் கூறிய விஷயங்களால் கழுதையாக மாறி விட்டாள்… அதை கூட அவர் உணராமல் தான் ஊரின் உள்ளே நுழைந்தார்.

அவர் ஊரின் உள்ளே நுழைந்ததும்மே அவரின் காதில் ஊர் பஞ்சாயத்தில் உங்களின் மகள் நிற்கிறாள் குற்றவாளியாக என்ற செய்தி விழ நேராக பஞ்சாயத்து நடக்கும் இடம் நோக்கி விரைந்தார்.

6 thoughts on “அரளிப்பூ 12”

  1. CRVS 2797

    அடப்பாவி மனுசா..! இவர் அப்பனா..? இல்லை குப்பனா..? இப்ப ஒரு ஜோசியக்கார் சொன்னதை வைச்சே எல்லாத்தையும்
    தீர்மானிச்சிடுவார் போலயிருக்கே..!!?

  2. Kalidevi

    Adapavi jathagam la ippadi sollitanga athuku etha inga nadakuthunu avala intha padu paduthuringla konjam kuda yosikama avala ethum kekama ippadi nika vaikiringa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *