Skip to content
Home » அரளிப்பூ 8

அரளிப்பூ 8

அரளிப்பூ 8

பாட்டி செல்லத்தாயி அழைத்ததும் விசாலமும் நான் வர தான் இருந்தேன் என்று கூறி கொண்டே வீட்டிற்கு வந்தார்.

அவர்கள் வரும் போது எல்லாம் கஞ்சி வடிந்து முடிந்து இருந்த சாப்பாட்டை நிமிர்த்தி எடுத்து வந்து வைத்து விட்டு செல்லத்தாயி சமைத்து வைத்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டு நெஞ்சி எலும்பு பிரட்டல், மீன் வறுவல் என்று  அத்தனையையும் எடுத்து வந்து வைத்து விட்டு அவள் காட்டில் இருந்து வரும் போது நறுக்கி எடுத்து வந்த வாழை இலையை அலசி கொண்டு வந்தாள் இயலினி.

இவைகளை எல்லாம் செய்து கொண்டு இருந்த இயலினியை வீட்டிற்குள்ளே வந்த செல்லத்தாயி விசாலம் இருவரும் கவலையாக தான் பார்த்தனர்… நிற்காமல் ஓடும் பேத்தி வீட்டிலாவது வேலை செய்யாமல் அவளுக்கு ஓய்வு தந்து அவளை பார்த்து கொள்ள நினைப்பவர் செல்லத்தாயி… ஆனால் பாரு நான் அந்தாண்ட போன உடனே இந்தாண்ட அவ பாட்டுக்கு வேலையை செஞ்சி கிட்டு இருக்கிறா என்றே நினைத்தார்.

அதே போல் விசாலத்திற்கும் கவலையாகி தான் போனது… தன்னை அழைக்க வந்ததால் தான் காலையில இருந்து ஓடி ஆடி வேலையா செஞ்சி கிட்டு இருக்குற புள்ள வீட்டுக்கு வந்தும் வேலை செஞ்சி கிட்டு இருக்கு என்றே தன்னையே திட்டி கொண்டார்.

அப்போ செல்லத்தாயி தன் பேத்தியின் கையை பிடித்து இழுத்து, “போதும்… போதும் வேலை பார்த்தது எல்லாம்… உக்காரு முதல்ல… உக்காந்து சாப்பிடு… நான் போடுறேன்… விசாலம் வா நீயும்… இங்க வந்து உட்காரு…” என்று கூறி இயலினி கையில் இருந்த இலையை வாங்கி இருவருக்கும் போட்டார்.

அவர்களின் அருகிலே அமர்ந்து கொண்டு இலையில் கொஞ்சம்மாக சாப்பாட்டை வைத்து இயலினிக்கு பிடித்த கறி துண்டுகளாக அவள் இலையில் முதலில் வைத்தார்… விசாலம் அதிகம் எலும்பு சாப்பிடாதவர் ஆகையால் அவருக்கு அதற்கு ஏற்ப என்று இருவருக்கும் குறை இல்லாமல் வைத்தார்… என்ன செல்லத்தாயின் பாசம் இயலுக்கு சிறிது தூக்கல் என்பதால் அவளுக்கு பிடித்த எலும்பு கறி… மீன் துண்டு மீன் தலை துண்டுகள் முட்டை என்று அடுக்கி வைத்தார்.

அதை விசாலமும் கண்டார் தான்… ஆனால் எதுவும் கூற வில்லை… பின்ன இருக்காதா என்ன? செல்லத்தாயின் உயிரே அவரின் பேத்தியாயிற்றே… கூடவே இயலு சாப்பிடும் விஷயத்தில் வஞ்சகம் வைக்க மாட்டாள் என்பது விசாலமே அறிந்த ஒன்று என்பதால் அவரும் அவள் உண்பதை பேச்சிக்கு கூட பார்க்க மாட்டார் எப்போதும்… அவருக்கும் மனதிற்குள் எங்கு தான் பார்த்து அதுவே கண்ணாக மாறி இயலு உடம்பு கெட்டு விடும்மோ என்று பார்க்க மாட்டார்… இப்போதும் அவர் அவரின் இலையில் மட்டும்மே தனது கவனத்தை வைத்து இருந்தார்.

சரியாக அந்த நேரம் வீட்டு வாசலில் நின்று, “இயலினி… இயலினி… யாருமா இயலினி…” என்று குரல் தர தனது பெயரை அழைத்ததும் இயலினியும், “அந்த பைய தான் வந்துட்டான்னா லேடி போலீஸ்சோட?” என்றே பிரட்ச்சனையான காவலன் இளமாறனோ என்று நினைத்து உட்கார்ந்த இடத்தில் இருந்தே எட்டி பார்த்தாள்.

உடனே செல்லத்தாயி எங்க தன் பேத்தி பாதி உணவிலேயே எழுந்து விடுவாளோ என்று அவளை அமர வைத்து விட்டு, “இரு புள்ள இயலு… நான் போயி என்ன ஏதுன்னு பாத்துட்டு வாரேன்…” என்று அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்தவர் தன் பேத்தியின் பெயரை ஏலம் விட்டது யார் என்று பார்த்தார்… அது ஒரு வயசு பொண்ணு ஸ்கூட்டியில் அமர்ந்த படியே வீட்டை பார்த்து கொண்டு இருக்க தன் பேத்தியை அழைத்தது இவள் தான் என்று, “என்ன புள்ள திங்கிற நேரம் வந்து நிக்கித? ஆமாம்… யாரு நீ?” என்று கேட்டார்.

அந்த பெண்ணும், “பாட்டி நான் இந்த ஊருக்கு புதுசா வந்திருக்க போஸ்ட் வுமன்… இயலினின்னு ஒருத்தருக்கு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்து இருக்கு… அத கொடுக்க தான் வந்தேன்…” என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டு வந்த காரணத்தை கூறினாள்.

செல்லத்தாயும், “இயலு புள்ள என் பேத்தி தான்… உள்ள தான் இருக்கிறா… குடு நான் அவ கிட்ட கொடுத்துடுறேன்…” என்று கேட்க

அந்தப் பெண்ணோ, “இல்ல பாட்டி… இது ரிஜிஸ்டர் போஸ்ட்… அந்த பொண்ணு கையெழுத்து போட்டா தான் என்னால கொடுக்க முடியும்… அதனால நீங்க அவங்கள வர சொல்லுங்க…” என்றாள்.

செல்லத்தாயிக்கு எரிச்சலாக வந்தது… என் பேத்தி எப்போ சாப்பிட உட்கார்ந்தாலும் யாருக்காவது மூக்கு வேர்த்துடும் போல என்று ஏதோ பேச வாய் திறக்கும் போதே இயலினியே வெளியே வந்து விட்டாள்.

வந்த தன் பேத்தியை பார்த்ததும் தபால் குடுக்க வந்த பெண்ணை இரண்டு கொட்டு கொட்டினால் தான் என்ன? என்றே செல்லத்தாயி அவளை முறைத்து கொண்டு இருந்தார்.

அந்த பெண்ணோ அப்பாவி பொண்ணாக இயலினிக்கு வந்த போஸ்ட்டை எடுத்து நீட்டியே, “இந்தா ம்மா இதுல ஒரு கையெழுத்து போடு…” என்று குடுக்க இயலும் அவர் நீட்டியதை வாங்கி கொண்டு அந்த பொண்ணு தந்த பேனாவையும் வாங்கி குனிந்து கையெழுத்து போட போனாள்.

அப்போது அந்த பொண்ணு, “ஏம்மா… உன் பேரோட இன்னார் மகள்ன்னு விலாசம் குடுக்குறவங்க கிட்ட குடுக்க வேண்டியது தானே ம்மா…” என்றாள்.

புரியாமலே கையெழுத்து போட்டு முடித்து, “ஏன் அப்படி சொல்லுறிங்க?” என்று நிமிர்ந்து இயலினி கேட்க

அந்த பொண்ணும், “என்ன ம்மா கேள்வி? உன் பேர மட்டும் வச்சி கிட்டு உன் அட்ரஸ்ச தேடி வரதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சி… இதே உன் அப்பா பேர போட்டு இருந்தால் நான் சீக்கிரம்மே இந்த அட்ரஸ்க்கு வந்து இருப்பேன்…” என்றாள்.

அந்த பெண் கேட்டதை கேட்டதும் செல்லத்தாயும் விசாலனும், “ஏதே…” என்றே வந்த பெண்ணையும் இயலினியையும் பார்க்க பக்கத்து வீட்டு ஆட்கள் கூட வெளியே வந்து விட்டனர்.

இயலினியின் முகம் அந்த பெண் சொன்ன விஷயத்தில் வில்லங்கம் செய்யும் எண்ணத்துடன் யோசனையாக மாறி, “என்ன? இன்னும் என் அட்ரஸ்ச சரியா சொல்லாதவங்க இந்த ஊர்ல இருக்காங்கள? அப்போ இன்னம் நம்ப பேமஸ் ஆகணும் போலையே…” என்றே வாய் விட்டு கூறி சிரித்தாள்.

பாவம் செல்லத்தாயி விசாலம் இன்னம் அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் எல்லாம் தான், “எதே… இன்னமும் பேமஸ் ஆகணும்மா?” என்றே நெஞ்சில் கை வைத்து விட்டனர்.

போஸ்ட் குடுக்க வந்த பொண்ணோ எதுவும் புரியாமல், “ம்ச்சே… ஏம்மா நீ பேமஸ் ஆகு இல்ல சும்மா இரு… அது எல்லாம் எனக்கு தேவையில்ல… ஆனால் அடுத்த தெடவ உனக்கு போஸ்ட் பண்ணுறவங்க கிட்ட உன் அப்பா பேர போட்டு சரியான அட்ரஸ்ச குடு… அப்போ தான் போஸ்ட்ட சரியா கொண்டு வந்து என்னால உனக்கு குடுக்க முடியும்…” என்றே கூற இயலினியின் முகம் மாறியது.

உடனே செல்லத்தாயி இவ இன்னைக்கு வில்லங்கத்த இழுத்து விடாம போக மாட்டா போல என்றே, “ஏய் புள்ள… கொடுக்க வேண்டியத தான் குடுத்துட்ட இல்ல… கிளம்பு…” என்று கூற

விசாலம் சரியாகவே, “நீ விசாரிச்ச கிழவிங்க… காது போன கிழவிங்களா இருப்பாளுங்க… இல்லன்னா இவ பேர தப்பா படிச்சி நீ கேட்டு இருப்ப… அதான் அந்த எடுப்பட்ட சிறுக்கிங்க… ஒழுங்கா வூட்ட சொல்லாம விட்டு இருப்பாளுங்க… அதான் இப்போ சரியா வூடு எதுன்னு தெரிஞ்சி போச்சில… போ… போ… அடுத்த தெடவ சரியா வரலாம்…” என்றார்.

அந்த பெண் விட்டால் போதும் என்று ஓடியாவது இருக்கலாம்… ஆனால் பாவம் அவளுக்கு இன்று கெட்ட நேரம்மோ என்னம்மோ இயல் ரூபத்தில் அவள் முன் நின்று விட்டது போல… அதனால் அவள் நான் என்ன தப்பா சொல்லி புட்டேன்னு இந்த கிழவிங்க இப்படி பேசுதுங்க என்றே அங்கையே நின்றாள்.

அதே நேரம் இயலினி விஜய சேதுபதி சொல்லுவாரே யாருன்னே தெரியாத அந்த பொம்பள கூட உன்னைய ஓடி போ ஓடி போன்னு சொல்லுது நீ என்ன டான்னா குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் எல்லாம் நடக்குறத பார்க்காதிங்கன்னு சொல்லிட்டு நின்று வாங்கி கட்டிக்கிறவன் மாதிரியே நிக்கிறீயே உன்னைய என்றே பற்களை கடித்தே இயலினி ஆரம்பித்தாள்.

தன்னை அமைதி படுத்த முயன்றே, “இதோப்பார்… நான் குடுத்த அட்ரஸ்ச சரியா தேடி வந்து குடுக்க தான் உனக்கு மாச சம்பளம்… விட்டா நீயே உன் ஆபிஸ்க்கும் என் வீட்டுக்கும் போஸ்ட் வந்து சேர ஒரு கொரியர் வைப்ப போலையே…” என்றே கேட்டதும்

இன்னைக்கு போஸ்ட் வுமனுக்கு வில்லங்கம் போல… வாய் சும்மா இல்லாமல், “என்ன ம்மா என் வேலைய பத்தி எல்லாம் பேசுற? உன் அப்பா பேர போட தானே சொன்னேன்… இதுல என்ன இருக்கு? ஏன் உன் அப்பா பேரு உனக்கு தெரியாதா?” என்றே வாய் விட சும்மாவே சலைங்கை கட்டி கொண்டு ஆடும் இயலினிக்கு இந்த பொண்ணு தங்க சலங்கையே வாங்கி கட்டி விட்டு விட்டு விட்டால் போல.

அந்த பெண் கூறியதை கேட்டு பதறிய விசாலம், “ஏன் டி? உனக்கு ஏதாவது கூறு இருக்கா? ஒழுங்கா சாப்பிட்டு கிட்டு இருந்த பிள்ளைய இழுத்து வச்சி என்ன என்ன பேசுற? நல்லா வாங்கி கட்டிக்காம ஒழுங்கா ஓடி போ…” என்று அந்த பெண்ணை விரட்டி பேசி விட்டு இயலினியிடம், “ஏய்… எவளோ ஏதோ பேசுறா நீ ஏன் டி நிக்கிற… உள்ள வா டி…” என்றே இழுத்தார்.

செல்லத்தாயி ஒரு பக்கம் விசாலம் ஒரு பக்கம் இயலினியை உள்ளே போக இழுக்க அவளோ, “ஏன் என் அப்பன் பேரு தெரியாது? அவன் பேர் எல்லாம் தெரியும் தான்… ஆனால் என்ன அந்த கேவலம்மான பேர போட தான் எனக்கு விருப்பம் மில்ல…” என்றவள் வாயை விசாலம் அடைத்தார்.

ஆனால் அவளோ திமிரி கொண்டு, “ஏய்… ஆல்ரெடி அப்பன் பேர் போட்டா தான் மதிபீங்களான்னு அரசாங்கத்து மேலயே கேஸ் போட்டு ஓடி கிட்டு இருக்கு… இதுல தேவையில்லாம நீ ஏதாவது பேசுன எவன் எவன் அந்த ஆளு பேர என் கிட்ட கேட்டு அந்த கேஸ்ல அவனுங்க பேர் இருக்கோ கூடவே உன் பேரும் சேர்ந்து உன் வேலைய காலி பண்ணி விட்டுடுவேன்… மரியாதையா ஓடி போயிடு…” என்றே ஏறினாள் அந்த பெண்ணிடம்.

4 thoughts on “அரளிப்பூ 8”

  1. Avatar

    ஏம்மா, அப்பன் பேரை சொல்லாமலே… நல்ல பேரு வாங்குனா, அவங்களை மனுசங்க லிஸ்ட்ல சேர்க்க மாட்டிங்களோ…???
    😜😜😜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *