Skip to content
Home » அரிதாரம் – 1

அரிதாரம் – 1

வானை முட்டும் உயர்ந்த மலைகள். மலை முகடுகளை மறைத்துக் கொண்டு தொட்டு விடும் தூரத்தில் ஓடும் மேக கூட்டங்களை பார்ப்பதற்கு, மலை ஏறினால் வானத்திற்குள் சென்றுவிடலாம் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. 

வளைந்து நெளிந்து உயரே செல்லும் சாலை. ஒரு புறம் உயர்ந்த மலையென்றால், மறுபுறம் அதல பாதாளம். வானை தொடும் அளவிற்கு உயர்ந்து வளர்ந்த மரங்கள். நீலகிரி என்ற பெயருக்கு இனங்க உயர்ந்த மரங்களில் எல்லாம் நீல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி கிடக்கிறது. 

ஊட்டி என்று சொன்னாலே உள்ளமெல்லாம் குளிரும் எண்ணம் தோன்றும் அல்லவா? அது சற்றும் குறையாமல் நடு முதுகு வரை குளிர் தாக்கும் அளவு இருந்தது. சென்னையில் மார்கழி மாதத்தின் ஆறுமணி போல் இருந்தது, ஊட்டியில் எட்டரை மணி. 

தனது அறையின் பால்கனியில் இருந்து எதிரே தெரிந்த ஏரியை இலக்கின்றி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.

சிறந்த நடிகைக்கான இந்திய அரசின் தேசிய விருதை, தனது முதல் படத்திலேயே பொற்றவள்.

குட்டி சாவித்திரி, ஜூனியர் நடிகையர் திலகம் என்று தமிழ் திரையுலகில் பெயரெடுத்த இளம் நடிகை.

ஏரியைப் சுற்றி மக்கள் விதம் விதமாக செல்ல, அவர்களின் செயல்களில், அவளது பார்வை நின்றது ஒரு கூட்டுக்குடும்பத்தை கண்டு. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணன், அக்கா, குழந்தைகள் என்று பல உறவுகளை கொண்டிருப்பது போல் அவளுக்கு தோன்றியது. 

கிட்டத்தட்ட பத்து பன்னிரெண்டு பேர் இருந்தனர். அவர்களின் நடவடிக்கையை பார்த்த அவளது முகத்தில் தன்னாகவே புன்னகை வந்தது. தங்கள் குடும்பமும் இப்படி தானே, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அண்ணா, அக்கா என்று உறவுகளால் நிறைந்து இருக்கும். 

எனக்கு மட்டும் அன்று அந்த எண்ணம் வராமல் இருந்திருந்தால், நான் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கமாட்டேன். சொந்தம் பந்தம் எல்லாம் சுற்றியிருக்க, சந்தோஷமாக இருந்திருப்பேன். இப்படி கேவலமான வாழ்க்கை வாழ்ந்திருக்க மாட்டேன் என்ற எண்ணம் ஓடியது. 

அந்த கசப்பான நினைவு வந்ததும், அவள் முகத்தில் உணர்வுகள் மாற, கண்ணீர் கோடுகள் அவளின் கன்னத்தில் தடம் பதித்து ஓடியது. 

அவளது முகத்தில் வந்து போன உணர்வுகள் அனைத்தனையையும் தன் அறையின் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் தொழில் துறையில் பிசினஸ் மேக்னட் நிக் என்று அழைக்கப்படும் நிகேதன்.

ஆராதனாவை முதல் முறை பார்த்த நிகழ்ச்சிக்கு அவனது எண்ணம் சென்றது. சென்ற வருடத்தின் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த நடிகை விருது வழங்க, “இவர் செய்யாத தொழில் இல்லை. எந்த தொழில் தொடங்கினாலும் அதில் முதன்மை இடத்தில் இருப்பவர். வியாபார துறையின் ராஜா என்று அழைக்கப்படுபவர்” என்று புகழாரம் சூட்டி நிகேதனை அழைத்தார் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் பெண். 

அவன் பெயர் அறிவித்த அடுத்த நொடியே சிறிதும் தயக்கம் என்பது சிறிதும் இல்லாமல் கம்பீரமாக எழுந்து மேடையை நோக்கிச் சென்ற நிக் என்ற நிகேதனை சுற்றி அனைவரது பார்வை சென்றது. 

மேடையில், பெரிய திரையில், சிறந்த நடிகைக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும், ஐந்து நடிகைகளின் படத்தில் உள்ள ஒரு நிமிட காட்சிகள் வரிசையாக ஒளிபரப்பப்பட்டது. அந்த ஒரு நிமிடத்திலேயே ஆராதனாவின் முகம் நிகேதனின் மனதில் ஆணி அடித்தார் போல் பதிந்தது. 

இதுவரை அதிகமாக படங்களின் மீது நாட்டம் இல்லாதவனுக்கு இந்த பொண்ணுக்கு பரிசு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்ற, அவன் கையில் இருந்த கவரை பிரித்து பார்த்தவுடன் வியந்து, அதே ஆச்சரியத்தில் அவள் பெயரையும் உச்சரித்தான் “த வின்னர் இஸ் ஆராதனா” என்று. அப் பெயரையும் உச்சரிக்கும் பொழுது அவனது உள்ளத்திற்கு இதமாக இருப்பது போல் தோன்ற, ஃபோக்கஸ் லைட் ஆராதனாவை காண்பிக்க, இவன் கண்களும் விளக்கு ஒளியை நோக்கி திரும்பியது. 

அவள் பெயர் வந்ததும் மகிழ்ச்சியாக தன்னிடத்தில் இருந்து எழுந்து, வாழ்த்து சொன்னவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொண்டே, மேடையை நோக்கி விரைவாக வந்தாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் தன்னுள் புதைத்துக் கொண்டான் நிகேதன். 

எவ்வளவுதான் வேகமாக வந்தாலும், எதிரில் ஒவ்வொருவரும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்க, புன்சிரிப்புடன் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறியபடியே மேடைக்கு வந்து, நிகேதனிடம் அவள் வரும் வரை காத்திருந்ததற்கு மனதார மன்னிப்பு கேட்டுவிட்டு, அவன் கையில் இருந்து விருதை பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் நன்றி கூறினாள்.

பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆராதனாவிடம் சில கேள்விகள் கேட்க, அவற்றிற்கு அவள் கூறிய பதிலில் உண்மையில் ஆராதனாவின் ரசிகனாக மாறினான் நிகேதன். 

அது மட்டுமல்லாது சில புகைப்படங்கள் வரிசையை காண்பித்து, அதில் இருப்பது போல் நடித்துக் காட்டும்படி கூற, சற்றும் தாமதியாமல் அடுத்த நொடியே அவர்கள் காண்பித்த புகைப்படத்தில் இருக்கும் உணர்வுகளை தன் முகத்தில் கொண்டுவந்தாள் ஆராதனா.

ரசிகர்களின் ஆரவார கைத்தட்டல்கள் அடங்கியதும், அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி, தன் இருப்பிடம் வந்து அமர்ந்தாள். 

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் விருந்து ஏற்பாடு செய்து பட்டிருக்க, அதற்கும்  நிகேதனை அழைத்தனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர். அவன் விருது வழங்கி விட்டு செல்வதாக கூறியிருந்தான் ஆனால் இப்பொழுது ஆராதனாவின் பின்னே அவன் கண்கள் பயணிக்க, விருந்து நடக்கும் ஹோட்டலை நோக்கி அவன் கார் பயணித்தது.

அங்கும் ஆராதனாவின் செயல்களேயே அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவள் யாரிடமும் அனாசியமாக பேசவில்லை. தனக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்பவர்களுக்கு கை கொடுத்தும், தன்னை அணைத்து வாழ்த்து சொல்ல வருபவர்களிடம் நாகரிகமாக வணக்கம் கூறி விலகிக் கொண்டாள்.

அவளின் ஒவ்வொரு செயல்களுமே அவனது உள்ளத்தில் பசுமையாக பதிந்து, ஆராதனாவை அவன் உள்ளம் ஆராதிக்க தொடங்கியது. அதில் வந்திருந்த ஒரு பிசினஸ் மேன், நிகேதன் பார்வை செல்லும் இடத்தை கண்டு, உதடு கோனி சிரித்துக் கொண்டு, “என்ன மிஸ்டர் நிக்? புதிதாக சினிமா பக்கம் உங்கள் பார்வை திரும்பி இருக்கிறது! ஏதாவது ஹீரோயினை கல்யாணம் பண்ண போறீங்களா?” என்று இளக்காரமாக கேட்டான்.

தன்னை வியாபாரத்தில் ஜெயிக்க முடியாமல் இதுபோல் பேசுகிறான் என்று தெரியாதவனா நிகேதன். “ஆமாம் மிஸ்டர். இன்று சினிமா பக்கம் என் பார்வை திரும்பி விட்டது. ஒரு படம் எடுக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று அவனது தலையில் அலுங்காமல் குலுங்காமல் கல்லை தூக்கி போட்டான். 

அதில் அரண்ட அவன் “என்ன சொல்றீங்க மிஸ்டர் நிக், நீங்க சினிமா புரொடியூஸ் பண்ண போறீங்களா?” என்று அதிர்ச்சியாக கேட்டான். 

அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்துக் கொண்டே, “ஆமாம்” என்று அழுத்தமாக தலையாட்டினான். 

தங்கள் பத்திரிக்கைக்கும் சேனலுக்கும் புதிதாக செய்தி கிடைக்காதா? என்று சுற்றும் முற்றும் கழுகு பார்வை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்களின் காதுகளில் தெளிவாக அவர்களது பேச்சு விழுந்தது. 

அடுத்த நொடியே பத்து பதினைந்து மைக் நிகேதன் முன் நின்றது. “நீங்கள் படம் புரொடியூஸ் பண்ண போறீங்களா சார்? இதுவரை நீங்கிய சினிமா பக்கம் வந்ததில்லையே? அப்படி சினிமா பக்கம் வருவதற்கு என்ன காரணம்? நீங்கள் செய்யும் தொழில் உங்களுக்கு பத்தலையா? பார்ப்பதற்கும் சிக்ஸ் பேக் வைத்து ஹீரோ போல் இருக்கிறீங்க. நீங்களே ஹீரோவாக நடிக்க போறீங்களா?” என்று விதவிதமான கேள்விகள் அவனை நோக்கி பாய்ந்தது. 

எதற்கும் அசராத நிகேதன், ஆமாம் நான் ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். ஏன் நான் படம் எடுக்க கூடாதா?” என்று அவர்களிடமே கேட்டான். பின்னர் “கூடிய விரைவில் அதை அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்துவேன். அதுவரை காத்திருங்கள்” என்று பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் நிகேதன். 

நிகேதன் கூறியபடி திரைப்படம் எடுத்தானா? ஆராதனாவின் கண்ணீருக்கு காரணம் என்ன? அடுத்த அத்தியாயத்தில்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

7 thoughts on “அரிதாரம் – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *