மறுநாள் காலையில் வழக்கம் போல் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கியது.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு நொடி கூட ரகு ஆராதனாவை விட்டு அங்கும் இங்கும் நகரவே இல்லை.
அது, அவன் அவளின் மேல் அக்கறையாக இருப்பது போல் எல்லோருக்கும் தெரிய, எல்லோரும் குசு குசு என்று பேசிக் கொண்டார்கள். இது ஆராதனாவின் கண்களுக்கு தெரிந்தாலும், அவள் எதுவும் கண்டு கொள்வதாக இல்லை.
அவனின் அக்கறை மற்றவர்களுக்கு நல்ல விதமாக தெரிந்தாலும், அதில் ஒருவித செயற்கைத் தனம் இருப்பது போல் தோன்றியது நிகேதனுக்கு.
அன்று சீதோசன நிலையின் காரணமாக விரைவாகவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவரவர்கள் அவரவர்கள் இருப்பிடம் செல்ல, ஆராதனாவின் காரை எடுத்து வர ரகு சென்றதும், அவளின் அருகில் வந்த பிரணவ், ஆராதனாவை அழைத்தான்.
என்ன? என்று பார்த்தவளிடம், “உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும். நீ எப்பொழுது ஃப்ரீயாக இருப்பாய்?” என்றான்.
அவளுக்கு அவன் முகத்தை பார்த்து பதில் சொல்ல முடியாமல், “நம்மளுக்குள் என்ன முக்கியமான விஷயம் இருக்கிறது?” என்றாள் எங்கோ பார்த்தவாறு.
“நம்மைப் பற்றியான பேச்சு அல்ல. படத்தைப் பற்றி தான்” என்றான் அவனும் அழுத்தமாக.
“இல்லை, எது என்றாலும் ரகுவுடன் பேசிக் கொள்ளுங்கள்” என்றாள் உணர்ச்சியற்ற குரலில்.
“உன்னுடன் தனியாக பேச வேண்டும். ரகுக்கு தெரியாமல்” என்றான் அவனும் அழுத்தமாக.
அவனை குரலில் இருந்த அழுத்தத்தை கண்டு நிமிர்ந்து அவனைப் பார்த்த ஆராதனாவிற்கு, அவனிடம் மறுப்பதற்கு முடியாமல் சரி என்று தலையை ஆட்டினாள்.
அவள் சம்மதம் சொன்னதும் “ஃபோன் பண்றேன், அட்டென்ட் பண்ணு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விலகி விட்டான்.
அவன் சென்றதும் அங்கு வந்த ரகு “டைரக்டர் சார் உன்கிட்ட பேசினாரா? என்ன பேசினார்?” என்றான்.
அவனை அமைதியாக பார்த்த ஆராதனா, “இன்றைக்கு நன்றாக நடித்தேன் என்று கூறினார்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அவள் ஏறியதும் அவனும் அமைதியாக ஏரி காரை ஸ்டார்ட் செய்ய, அவளது இருப்பிடம் நோக்கி கார் பயணித்தது.
கார் கிளம்பியதும் “நான் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன். பொதுவாக எல்லோர் முன்னிலையிலும் என்னை ஒருமையில் கூப்பிடக்கூடாது என்று” என்று கோபமாக ரகுவை பார்த்தாள்.
“இல்லை, டைரக்டர் பேசியதும் ஏதோ அவசரத்தில்” என்று தடுமாறினான் ரகு.
“நீ என்னிடம் வேலை பார்க்கிறாய். நான் உன்னை என்னிடம் வேலை பார்ப்பவன் தானே என்று என்றாவது மரியாதை குறைவாக பொது இடங்களில் உன்னிடம் நடந்து கொண்டிருக்கின்றேனா?” என்ற என்றால் கோபம் சற்றும் குறையாத பாவனையில்.
“அது, இல்லை. நான்” என்று அவன் ஏதோ பேச வர,
“இதுதான் உனக்கு முதலும் கடைசியும். இனி என் பெயரை சொல்லி என்னை நீ அழைக்கக்கூடாது. அது மட்டுமல்ல, வெளியே மேடம் என்ற வார்த்தைக்கு மறுப்பேச்சு இருக்கக் கூடாது” என்று சொல்லி முடித்தாள். பேசி முடித்த பிறகு கூட அவளுக்கு கோபம் குறையவில்லை.
ஒரு நிமிடம்ஷஅவ்விடம் அமைதியாக இருந்தது.
“ஆராதனா, நாம தான் கல்யாணம் பண்ணிக்க போறோமே என்று தான்” என்று பேச்சை ஆரம்பித்தான் ரகு.
கல்யாணம் என்று சொல்லும் பொழுதே அவள் வாய் கோணலாக சிரித்தது. “கல்யாணம் என்று நீ தான் சொல்லிக் கொண்டிருக்கிறாய். இதுவரை நான் ஏதாவது சொன்னேனா?” என்று அவனைப் பார்த்தாள்.
அவள் அவனை பார்த்ததும், என்னைத் தவிர வேறு யார் உன்னை கல்யாணம் செய்து கொள்வார்கள் என்ற ஒரு அலட்சிய பார்வையை செலுத்தினான் ரகு.
அவனது பார்வையில் அவளது உடல் கூச, மௌனமாக மலைகளை வேடிக்கை பார்க்க திரும்பிக் கொண்டாள். சிறிது நேரம் கழித்து அவளே பேச்சை தொடர்ந்தாள். “முதலில் கல்யாணம் நடக்கட்டும். கல்யாணத்திற்கு பிறகு உன் உரிமையை பொது இடங்களில் காண்பிக்கலாம். அதுவரைக்கும்” வாயை மூடி கொண்டு இரு என்று செய்கையில் காண்பித்து விட்டு, பேச்சை அத்துடன் முடித்துக் கொண்டாள்.
அவர்கள் தங்கும் இடம் நெருங்க, ஷாலை எடுத்து முகத்தை மறைக்கும்படி கட்டிக் கொண்டு, கண்களுக்கு அணிய கண்ணாடியை எடுக்க, “இப்ப எங்க போற” என்றான் ரகு.
அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் “காரை கொஞ்சம் ஓரமாக நிறுத்து” என்றாள்.
“எங்க போறேன்னு சொல்லு” என்றான் சற்று எரிச்சலாக.
அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல், கருப்பு கண்ணாடியை எடுத்து கண்களுக்கு அணிந்து கொண்டு, காரை விட்டு இறங்கினாள். “நீ ஹோட்டலுக்கு போ. நான் இன்னும் பத்தினை நிமிசத்துல வந்துருவேன்” என்று சொல்லி அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்துவிட்டாள்.
“கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றாளா பாரு? திமிருடி. உடம்பெல்லாம் திமிரு. ஆடு, எவ்வளவு ஆட முடியுமோ ஆடு. கல்யாண வரைக்கும் தான் எல்லாம். அதுக்கப்புறம் பெட்டி பாம்பா என்கிட்ட அடக்கி கிடப்ப பாரு” என்று வன்மமாக சொல்லிக் கொண்டு காரை சற்று தள்ளி நிறுத்தி, அவள் வருகைக்காக காத்திருந்தான்.
சொன்னது போலவே கால் மணி நேரத்தில் கடையை விட்டு வெளியே வந்து விட்டாள். அவள் பாட்டிற்கு நடக்க ஆரம்பிக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான் ரகு.
திரும்பிப் பார்த்துவிட்டு, எதுவும் சொல்லாமல் விறு விறு என்று நடந்து அவர்கள் தங்கும் ஹோட்டலுக்கு வந்து விட்டாள்.
அவளின் செயலில் கோபம் கொண்ட ரகு, “இருடி, ரூமுக்கு வந்து வச்சிக்கிறேன்” என்று கோவமாக கூறி வேகமாக காரை இயக்கி ஹோட்டலில் பார்க் செய்து விட்டு, அவளது அறையின் கதவைச் சென்று தட்டினான்.
எப்படி அவன் வருவான் என்று தெரிந்த ஆராதனா, பெருமூச்சுடன் சென்று கதவைத் திறந்து, “என்ன?” என்று கேட்டாள்.
“மேடம், கொஞ்சம் வழி விடுங்க. உள்ள போய் பேசலாம்” என்றான் நக்கலாக.
அவனின் மேடம் என்ற சொல்லில் உள்ள நக்கலை புரிந்து கொண்ட ஆராதனா, “ப்ளீஸ் ரகு. தயவுசெய்து உங்க ரூமுக்கு போங்க. நாளைக்கு கொஞ்சம் சீக்கிரமா ஷூட்டிங் போகணும். நான் ரெஸ்ட் எடுக்கணும்” என்றால் வழி விடாமல் கதவை பிடித்துக் கொண்டு.
“ஓகே ஓகே ரெஸ்ட் எடுங்க. நைட் என்ன சாப்பிடுறீங்க” என்றால் அவனும் தன்மையாக.
“நான் எனக்கு தேவையானதை வாங்கிக் கொண்டேன். எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் போய் என்ன வேண்டுமோ சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி கதவை மூடி தாள் போட்டுவிட்டு கதவிலேயே சாய்ந்து பெருமூச்சு விட்டாள் ஆராதனா.
சற்று நேரம் அப்படியே நின்ற ஆராதனா மெதுவாக வந்து கட்டிலில் படுத்துக்கொண்டு, “கடவுளே, இதிலிருந்து நான் எப்போ வெளியே வருவேன்? எப்படி வெளியே வருவேன்?” என்று வாய் விட்டே புலம்பினாள்.
படுத்ததும் அவளது எண்ணங்கள் தாறுமாறாக எங்கெங்கோ செல்ல, அழுது கொண்டே அப்படியே எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் கண்ணுறங்கி விட்டாள்.
காதருகே ஒழித்த ஃபோன் சத்தத்தில் மெதுவாக தூக்கம் கலைந்து எழுந்த ஆராதனாவிற்கு அறையின் இருள் ஒருவித பயத்தை தர, டக்கென்று எழுந்து விளக்கு சுவிட்சை போட்டாள்.
வெளிச்சம் வந்த பிறகுதான் சற்று நிதானத்திற்கு வந்தாள் ஆராதனா. அதற்குள் ஃபோன் ஒலித்து முடிந்திருக்க, யாராக இருக்கும்? என்று எடுத்து ஃபோனை பார்க்கும் பொழுது, மீண்டும் ஒலித்தது.
பிரணவ் தான் அழைத்து இருந்தான். ‘அச்சோ, இவர் ஏதோ பேசணும் என்று சொன்னாரே’ என்று ஃபோனை எடுத்து காதில் வைத்து, “ஹலோ” என்றதும்,
“சாரி ஆராதனா, தூங்கிட்டியா?” என்றான். ஒருவேளை தூங்கி இருந்தால் அவளை தொந்தரவு பண்ணுகின்றோமே என்ற எண்ணத்தில்.
“இல்லை சார். சும்மாதான் இருந்தேன். என்ன விஷயம் சொல்லுங்க” என்றாள் தன் குரலை சரி செய்து கொண்டு.
“உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றேனே?” என்றான். ஒருவேளை மறந்து விட்டாளோ என்று அவனும் தயக்கமாக.
“ம்ம், நினைவிருக்கு சார். ஆனால் நேரம்” என்று தயங்கி, “சரி எங்கு வரவேண்டும்” என்றாள் இன்றே பேசி விட வேண்டும் என்ற முடிவுடன்.
ரூம் நம்பர் சொல்லிவிட்டு, “ஆனால் ரகுவுக்கு நாம் சந்திப்பது தெரிய கூடாது என்றான் பிரணவ்.
“சரி” என்று சொல்லி, ஃபோனை வைத்து விட்டு, பிரணவ்வை பார்க்க கிளம்பினாள் ஆராதனா.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
நிகேதன் ஆராதனா ஜோடி சூப்பரா இருக்கும். .. இந்த ரகு கேவலமான பிறவி
👌👌👌💕💕💕💕💕💕