நேற்று படப்பிடிப்பு தளத்திலேயே ரகு காபியில் எதையோ கலப்பதை கண்ட ஆராதனா, இனிமேல் வெளியிடங்களில் எதுவும் உண்ணக்கூடாது என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
இன்று அவளுக்கு எந்த சூட்டிங் இல்லாமல் இருக்க வீட்டில தான் இருந்தாள். அப்பொழுது அவளுக்கு ஃபோன் செய்த ரகு “என்ன முடிவு செய்திருக்கிறாய் ஆராதனா?” என்றான்.
“எதைப்பற்றி கேட்கிறாய் ரகு? என்று இவளும் தெரியாதது போலவே பேச,
“உன்னோட நடிப்பை எல்லாம் கேமரா முன்னாடி வச்சுக்கோ. ஆராதனா என்கிட்ட வச்சுக்காத, அப்புறம் ரொம்ப கஷ்டப்படுவ” என்றான் கோபமாக.
“இப்ப நீ எதுக்கு கோவப்படுற? என்னன்னு விஷயத்தை சொன்னாதானே தெரியும்?” என்றாள் அவளும் விடாமல்.
“ஓ.. மேடம்க்கு நான் சொல்றது புரியலையா?” என்றான் நக்கலாக.
“ப்ளீஸ் ரகு. என்ன விஷயம் என்றாலும் நேரடியாக சொல்லு. என் நேரத்தை வீணடிக்காதே” என்றாள் கோபமாக.
“சரி, நேராவே கேட்கிறேன். நீ என்னை கல்யாணம் செய்துக்கோ!”
சத்தமாக சிரித்த ஆராதனா “நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ளனுமா? அது கனவிலும் நடக்காது” என்றாள் கோபமாக.
“ஹாஹா, ஏன் நடக்காது? என்னிடம் உள்ள வீடியோவை நான் ரிலீஸ் பண்ணினா போதும். ஒரு வாரத்துக்குள்ள உன் பேரு நாறிடும். அப்புறம் உன்னை எவனும் கட்டிக்க மாட்டான். நீ என்கிட்ட தான் வரணும். அதுக்கு மரியாதையா என்னை இப்ப நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, இதே பேரோடையும் புகழோடையும் சிறப்பா வாழலாம்” என்றான்.
அவன் பேச பேச அவன் இப்படி தான் பேசுவான் என்பதை தெரிந்துகொண்ட ஆராதனாவிற்கு, வாழ்க்கையில் விரக்தி தான் வந்தது ஒரு பெண்ணை மிரட்டுவதற்கு ஒரு ஆண் எடுத்துக் கொள்ளும் ஆயுதத்தை நினைத்து.
இப்பொழுது அவனுக்கு பதில் சொல்லும் நிலையில் ஆராதனா இல்லை. ஃபோனை கட் செய்து விட்டு ஓய்ந்து போய் அப்படியே சோபாவில் அமர்ந்து விட்டாள்.
ரகுவை என்ன செய்யலாம் என்று யோசித்தாள். காவல்துறையின் உதவியை நாடலாமா? என்றாலும், அது எவ்வளவு தூரம் நம்பிக்கையாக இருக்கும் என்ற கவலை தான் அவளுக்கு வந்தது. மீண்டும் கீதாவின் உதவியை நாடவும் தோன்றவில்லை. என்ன செய்யலாம்? ஒரு வேலை காவல்துறைக்கு சென்றால் கூட, ரகு கோபத்தில் வீடியோவை வெளியிட்டு விட்டால், அதை தடை செய்ய குறைந்தது ஒரு நாளாவது ஆகும். அதற்குள் தன் வீட்டில் உள்ளவர்கள் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலைதான் அவளுக்கு ஓடிக்கொண்டே இருந்தது.
இப்போதைக்கு ரகு எதுவும் செய்யாமல் இருக்க அவனை அமைதிப்படுத்த வேண்டும். அவனிடம் இருக்கும் வீடியோவை மீண்டும் எடுக்க முடியாதபடிக்கு அழிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்ற யோசனை தான் அவளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. பத்து நிமிடம் கழித்து மீண்டும் ரகுவே ஃபோன் செய்தான்.
“என்ன? பேசிக்கிட்டே இருக்கும்போது ஃபோன் கட் செய்ற” என்றான் கோபமாக.
“என்னால் இப்பொழுது உனக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது” என்றாள்.
“அப்போ, ஒரு நாள், ஒரு வாரம் இல்லை பத்து நாள் கூட டைம் எடுத்துக்கோ. பொறுமையா நல்ல யோசிச்சு சொல்லு. ஆனா என்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்ற ஒரு பதில் தான் உன் வாயிலிருந்து வரவேண்டும். இல்லையென்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது” என்று கோபமாக பேசி வைத்து விட்டான்.
அவன் பேசி வைத்ததும் அமைதியாக உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாள் ஆராதனா. ரகு தன்னை இப்படி மிரட்டுவது அவளுக்கு வேதனையாக இருந்தது. தான் யாரும் மற்ற அனாதையாக இருப்பது போல் தோன்றியது.
‘வீட்டை விட்டு வந்து, தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி வருந்தினாள். நான் சினிமாவில் நடித்து பெயர் வாங்கிய பிறகு தான் வருவேன் என்று, கடிதம் எழுதி வைத்துவிட்டுதான் வீட்டை விட்டு வந்தாள்.
அதேபோல் அவள் பட வாய்ப்பு வேண்டி கஷ்டப்படும் பொழுது கூட ஊருக்கு செல்லவில்லை. முதல் முதலில் நடித்து தேசிய விருதும் வாங்கிய உடனே, அதை தன் பெற்றோர்களிடத்தும் உறவினர்களிடத்தும் காண்பிக்க வேண்டும் என்ற ஆசையில் ஊருக்கு செல்ல, ஊரின் எல்லையிலேயே அவளது தந்தை அவளை நிறுத்தி ஊருக்குள் வரக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
தந்தை மேல் இருந்த கோபத்தில் மீண்டும் அவள் ஊருக்கு செல்லும் முயற்சி எடுக்கவே இல்லை. அது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுது உணர்ந்து கொண்டாள். தங்கள் வீட்டில் இருந்து நடிக்கச் சென்று இருந்தால் இந்த நாய்கள் தன்னிடம் இப்படி நடந்து கொண்டிருக்குமா? யாருமில்லாமல் அனாதை போல் இருந்ததால்தான் என்னை இப்படி செய்ய அவர்களுக்கு துணிவு வந்தது’ என்று நினைத்து கண்ணீர் சிந்தினாள்.
யாரிடம் உதவி கேட்பது என்றும் தெரியவில்லை. தெரியவில்லை என்பதை விட பயமாக இருந்தது. அவர்களும் தன்னை மிரட்டுவார்களோ என்று. சினிமாத்துறையில் அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து வைத்திருந்தாளே அன்றி, யாரிடமும் நெருக்கமாக அவள் பழகவில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரணவ் என்று கூட சொல்லலாம்.
அவள் மிகவும் விரும்பி பழகிய காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று கனவு கண்டவன் அல்லவா? அவனது பிரிவு அவளை யாரிடமும் நெருங்க விடாமல் செய்து விட்டது.
அவளுக்கு அன்று ராஜேஷை பற்றி தகவல் கொடுத்த குணாவைத்தான் மீண்டும் நாடினாள். ஆராதனா ஃபோன் செய்ததும் போனை எடுத்த குணா, “சொல்லுங்க அக்” அக்கா என்று சொல்ல வந்து “மேடம்” என்றான்.
“தம்பி, எனக்கு ஒரு உதவி வேண்டும்” என்றாள்.
“சொல்லுங்க மேடம்”
“நீ என்னை அக்கா என்று அழைக்கலாம். எனக்கு என்னுடைய மேனேஜர் ரகுவின் குடும்பத்தை பற்றி தெரிய வேண்டும்” என்றாள்.
“சரிங்க அக்கா. நான் விசாரித்து சொல்கிறேன்” என்றான்.
அதன்படியே மறுநாள் அவளுக்கு ஃபோன் செய்து, தென் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் அவனது தாய் தந்தையர் தங்கையுடன் வசிப்பதாக கூறினான். அவனின் தந்தை அரசாங்க பள்ளியில் வேலை செய்வதாகவும் அம்மா ஹவுஸ் வைஃப் என்றும் தங்கை கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறாள் என்றும் தெரிவித்தான்.
“அப்பா டீச்சரா?”
“இல்லை அக்கா. ஸ்கூல்ல ஆபீஸ்ல வேலை செய்றாராம்”
“சரி, ரொம்ப தேங்க்ஸ் குணா” என்று அவனுக்கு நன்றி சொல்லிய ஆராதனா,
‘பள்ளியில் வேலை செய்கிறார். நடுத்தர குடும்பம் தான். அப்படி என்றால் நிச்சயமாக இவனைப் போல் இருக்க மாட்டார்கள். மான அவமானங்களுக்கு கட்டுப்பட்டு தான் இருப்பார்கள். அவர்களிடம் பேசினால் ஒருவேளை அவன் திருந்தலாம்’ என்று நினைத்தாள்.
ஒருவேளை திருந்தாவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணமும் உடனே தோன்ற, முடிவெடுக்க முடியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருந்தாள். பசியோ வயிற்றைக் கிள்ள, முதலில் சாப்பிடுவோம் என்று அவசர அவசரமாக ஏதோ ஒரு சமையல் செய்து சாப்பிட்டாள்.
பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவளாக அவன் மீண்டும் ஃபோன் செய்து கேட்கும்பொழுது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பின்னர் தான் கொஞ்சம் நிம்மதியாக இருக்க பேசாமல் படுத்து உறங்கி விட்டாள். மறுநாள் ஷூட்டிங் இருக்க, கிளம்ப ஆரம்பித்தாள்.
அவளை அழைத்துச் செல்ல அப்பார்ட்மெண்ட்ஸ்க்கு வந்து விட்டான் ரகு.
அவள் வேண்டாம் என்று மறுத்தாலும், அவளது காரின் டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். வேறு வழியில்லாமல் அவளும் பின் இருக்கையில் ஏறி அமர்தாள்.
“என்ன முடிவு பண்ணி இருக்க?” என்றான் கார் கிளம்பியதும்.
சாலையில் எங்கோ வெறித்து பார்த்தபடியே, “கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனால் இப்பொழுது அல்ல. நான் ஒத்துக் கொண்ட படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு தான்” என்றாள்
“ஏன்? கல்யாணம் பண்ணிக்கிட்டு கூட நடிக்கலாமே! உன்னை நான் நடிக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லவில்லையே”
“ஏன்? சொல்லித்தான் பாரேன். நீ சொன்னால் நான் கேட்பேன் என்று நினைக்கிறாயா? என்று நக்கலாக கேட்டு, “என்னை உன்னால் கட்டுப்படுத்த முடியாது”
“அதைத்தான் நானும் சொல்கிறேன். இப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளலாம். உன்னை நான் கட்டுப்படுத்த மாட்டேன். நீ உன் இஷ்டப்படி நடி” என்றான்.
“இல்லை என்னால் இப்பொழுது உன்னை கல்யாணம் செய்து கொள்ள முடியாது. அது மட்டும் அல்ல உன்னை கட்டிக்கிட்ட பிறகு நான் நிச்சயமாக நடிக்கவும் மாட்டேன். என்னை நடிக்க வைத்து பணம் சம்பாதிக்கலாம் என்று கனவு கண்டு கொண்டு இருந்தால், அதை இப்பொழுதே அழித்துவிடு” என்று உறுதியாக கூறினாள் ஆராதனா.
– தொடரும்..
– அருள்மொழி மணவாளன்..
சூப்பர். … இந்த ரகுவுக்கு முடிவு கட்டிவிடுங்க ஆராதனா… நிகேதன் தான் சரியான ஜோடி…
Etho oru mudivoda tha raghu ku ippadi pathil solli iruka papom adutha step ena panna pora aaradhana athellam mudichitu nikethan mrg panniko aaru
Nice epi👍