Skip to content
Home » அலப்பறை கல்யாணம்-13

அலப்பறை கல்யாணம்-13

அத்தியாயம்-13

   அதிகாலை பால் கறக்கும் போதே, நெத்து என்னயென்னவோ பேசினான். நானும் பேசினேன். இப்ப என்ன முடிவில் இருக்கானோ? இன்னிக்கு பார்த்து லேட்டா எழுந்து தொலைச்சிட்டேன். அங்க என்ன நடந்ததோ, என்று வேகவேகமாய் பாலை கறந்து அரசன் வீட்டிற்கு வர, கதவு திறந்திருந்தது.
 
   மலர் வரும் நேரம், ‘அடப்பாவிகளா… கண் முன்ன காணாம போகாதிங்கடா. ராத்திரி தூக்கம் வரமாட்டேங்குது.’ என்று நடுக்கமாய் வர, அரசனோ பட்டுயுடுத்திய பெண்மணியை, அணைத்து “அம்மா.. அம்மா.. என்னை விட்டு எங்கயும் போகாத” என்று உலர, “டேய் கண்ணா… கல்யாண பொண்ணு ஓடினா என்னடா. இந்த நிமிஷம் ஒருத்தி உனக்காக வருவா.” என்று அணைத்து ஆறுதலுரைக்க, “சார்.. தமிழரசன் சார்” என்று அழைத்தாள்.

  “ஆங்.” என்று சுற்றி முற்றி பார்க்க, அனைவரும் காணாமல் போயிருந்தனர். அம்மா என்ற கேரக்டர் மட்டும் இருந்தது.
   அதுவும் நகை உடை என்று பணக்கார வீட்டு பெண்மணி போல, நிற்க, லேசாய் கையை விடுவிக்க, அந்த அம்மா மாயமாகாமல் இருந்தார்.

  நிம்மதியுற்றவன் “ஒரு நிமிஷம் அம்மா” என்று பால் வாங்க சென்றான்.

  “ஆடலரசா… என்னடா இது கல்யாணம் என்னாச்சு? அப்பா எங்க? உங்க அக்கா எங்க? இது அதேயிடம் தானே?” என்று பின்னாலே வந்தார்.

   ஏதாவது பேசினால் பால்கார பெண் சந்தேகப்படுவாளென்று அமைதியாக பால் வாங்கினான்.

   “இங்க கல்யாணம் என்னாச்சுனு கேட்கறேன். நீ பால் வாங்கிட்டு இருக்க” என்று தட்டிவிட்டார். பால் பாத்திரம் சிதற, அதில் பாலும் கொட்டியது.

  “சாரிங்க.. கை வழுக்கிடுச்சு. நான் துடைச்சிக்கறேன். நீங்க போங்க” என்று தமிழை அனுப்புவதில் மும்முரமானான்.

  ‘அம்மாடி இந்த பேய் என்ன பாத்திரத்தை தட்டி விடுது. அரசு.. எப்படி சமாளிக்க போறார். ஆண்டவா’ என்று பயந்து திரும்பி திரும்பி பார்த்தாள்.

   “அம்மா… கொஞ்சம் நான் சொல்லறதை கேளு” என்று அமர வைத்து, தான் ஒரு அனாதை என்றும், இந்த வீட்டை விலைக்கு வாங்கி வந்ததிலிருந்து நடக்கும் கூத்தையும் ஒப்புவித்தான்.

  கதையை கேட்டுவிட்டு “அப்ப நாங்க எல்லாமா இறந்துட்டோம்னு சொல்லறியா அரசு” என்று கேட்டார்.

  ”அம்மா… ஏற்றுக்க கஷ்டமாயிருந்தாலும் அதான் நிஜம்.” என்றான்.

   “எ…. எல்லாருமா? உன் கல்யாணத்துக்கு வந்த எல்லாருமா?” என்று அதிர்ச்சியாக கேட்க, அங்கே சுவற்றில் மாட்டிய புகைப்படத்தை எடுத்து, இது நான் வரைந்தது. கனவுல வந்தவங்களை வரையறதா நினைச்சு வரைந்தேன். ஆனா பாருங்க..” என்று கொடுக்க, அரசனை பார்த்து திகைத்து, படத்தை கவனித்தார்.

   “நம்ம குடும்பம் டா. இதுல இருக்கறவங்க எல்லாருமே நம்ம குடும்ப உறுப்பினர்கள்” என்று அதிலிருந்த இருபத்தி மூன்று பேரையும் சுட்டிக் காட்டினார்கள். அதில் மிக நெருக்கமான உறவுகளை சுட்டிக்காட்டினார்.

  நீங்க இப்படி ஆனதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?” என்று பரிதவிப்பாய் கேட்டான்.

  “நான் இறந்துட்டதா சொல்வதையே என்னால நம்ப முடியலை அரசு‌. இதுல… ம்ம் நான் ஆவியா சுத்தறதுக்கு காரணம் தெரியலைப்பா. முதல்ல நாங்க இறந்ததை என்னால நம்பமுடியலை.” என்று கண்ணீர் உகுத்தினார்.
 
   “உங்க பையன் என்னை மாதிரி இருப்பாரா?” என்று கேட்டதும் அரசனை ஆராய்ந்த பார்வை பார்த்தார் இதுவரை மகன் என்று தானே அணைத்தது, “உன்னை மாதிரினு சொல்ல முடியாது. லேசா… உனக்கு வயசு என்ன?” என்றார்.

“இருபத்தி எட்டும்மா” என்றான்.

  “என் பையனுக்கு வயசு இருபத்தி மூன்று இருக்கும். ஆனா உன் அளவு வளர்த்தி இருப்பான். 

  ரொம்ப உற்று பார்த்தா கொஞ்சம் வேற மாதிரி இருக்க நீ. சட்டுனு பார்த்தா என் கண்ணுக்கு என் பையனா தெரியற” என்றார்.

  “வேற ஏதாவது உங்க பையனுக்கும் எனக்கும் ஒற்றுமை? இல்லை… ஏதாவது வித்தியாசமா நடந்ததா?” என்று கேட்டான்.
 
  இதில் நடுநடுவே மலர் போனில் அழைக்க, கத்தரித்து விட்டான்.

  “ஹே… அரசன்… உனக்கு ஒன்னும் ஆகலையே. நீ நல்லாயிருக்காயா?” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

  “பைன். அம்மாவிடம் பேசறேன். நானே கால் பண்ணறேன்” என்று வாய்ஸ் ஒன்றை அனுப்பிவிட்டு “சொல்லுங்கம்மா” என்று கேட்டான்.

  மலரிடம் போனில் பேசவும் லதாங்கி,(பேயோட பெயர்) யோசனை செய்தார்.
 
  “அவன் பெயர் ஆடலரசன்.” என்று கூற, தமிழரசனோ “அம்மா.. என் பெயர் தமிழரசன்” என்று திகிலடைய, “அவனுக்கு கல்யாணம் செய்ய நாயா‌ பேயா பொண்ணு தேடினோம்” என்று கூற, “அம்மா… நானுமே நாயா பேயா பொண்ணு தேடி அலையறேன். யாரும் பொண்ணு தரலை. இப்ப தான் ஒரு லவ் டிராக் போகுது. அவளுமே காதலிக்கறேன்னு வாய் திறக்க மாட்டேங்கறா. ஆனா லவ் பண்ணறா” என்று வெட்கப்பட்டு கூறினான்.

  லதாங்கியோ, “ஆடலரசனுக்கு காதல் எல்லாம் இல்லைப்பா. அவனுக்கு நாங்க தான் பொண்ணு பார்த்தது. கல்யாணம் கூட நாங்க வாங்கின புது வீட்ல தான் வச்சோம். அப்ப இந்த இடத்துல யாரும் வரமாட்டாங்க. ஊருக்கு ஒதுக்குப்புறமான இடம்னு சொன்னாங்க. ஆனா ஆடலரசனோட அப்பா தான் இந்த இடம் போக போக, நிறைய வீடு அதிகமாக அமையும் பேமஸாகும் சொல்லி கட்டினார்.

புது வீட்ல தான் கல்யாணத்தையும் நடத்த பொண்ணு வீட்ல சம்மதம் வாங்கினோம். ஆனா அந்த பொண்ணு ஓடிப்போயிட்டா. ஆடலரசனுக்கு பார்த்த பொண்ணு ஓடிப்போனதா அரசனோட அப்பா கடைசியா சொன்னார். கல்யாணம் நடந்த எங்க புது வீடு ஒவ்வொருத்தர் கலங்கி போக, சட்டுனு நின்ற இடத்துலயே மயங்கி விழுந்தோம். அதோட எதுவும் நினைவு வரலை.” என்று குறிப்பிட்டு கூறினார்.

  தமிழரசனோ “அப்ப தாலி கட்டும் நேரத்துக்கு முன்ன‌, அதாவது ஏழு டூ எட்டுக்கு கல்யாணம் நீங்க எல்லாம் நாலு டூ ஐந்துக்கு கல்யாணத்துக்கு ரெடியாகிட்டு இருக்க, பொண்ணு காணோம்னு அப்பாவுக்கு தெரிய வந்திருக்கு. அதை சொல்லி வேதனைப்படும் நேரம் நீங்க எல்லாரும் ஒன்னுப்போல ஆறு மணிக்கு இறந்திருக்கிங்க?” என்றதும் அப்படி தான் என்பது போல லதாங்கி கலங்கி நின்றார்.

   “என் பையன் கல்யாணம் நடக்கலை” என்று கலங்கிட, “எனக்கு கூட அப்படி தான்மா. கல்யாண யோகமே அமையலை. பெரிய ஆசையெல்லாம் இல்லைம்மா. பிறந்தப்ப அனாதை என்ற அடையாளமிருக்க, கல்யாணம் முடிந்து வீடு முழுக்க சொந்தம் வேண்டும்னு ஆசைப்பட்டேன்.  பொண்ணு வீட்ல நிறைய சொந்தக்காரங்க வேண்டும் கண்டிஷன் போட்டேன். எல்லாரும் அனாதையை அவங்க குடும்பத்துல ஒருத்தரா ஏற்றுக்க தயங்குறாங்க.” என்றான் கவலையோடு.

  “தங்கமே.. என் தமிழே.. தமிழ் களங்கலாமா? பெயரில் கூட வீரம் கெத்து இருக்கற மொழி ஐயா நம்மளோடது. அந்த மொழியோட பெயரையே வச்சிட்டு களங்கலாமா? தமிழுக்கு யாருமில்லைன்னு யார் சொன்னா. இந்த உலகத்துல எந்த மூலைக்கு போனாலும் தமிழ் இருக்கும்யா. நல்லோர்கள் பரவி கிடக்கற மொழியோட ஆளைமையான பெயரை வச்சிட்டு இப்படி பேசற. நான் உன் அம்மா ஐயா. லதாங்கி உன் அம்மா பேரு. நீ அனாதை இல்லையா” என்று அணைத்துக் கொண்டார்.

“பேயுங்கன்னா பழிவாங்கும், பயமுறுத்தும், தன் சுயநலத்துக்காக அலையும்னு சொல்வாங்க. நான் பழிவாங்க வரலை, பயமுறுத்த வரலை, என் சுயலமும் இல்லைய்யா. உனக்காக வந்தேன்னு வச்சிக்கோ. அம்மாவா உனக்கு பாசத்தை கொடுக்க வந்தேன்.” என்று தலையை வருடினார்.

  இத்தனை ஆண்டுகள் கிடைத்திடாத தாய்பாசம் தமிழரசனுக்கு கிடைத்திட, அன்னையாக “நான் என் பையனுக்கு டீ போடறேன், சமைக்கறேன். அவனுக்கு இப்ப அம்மா கையால சாப்பாடும் அன்பும் தான் வேண்டும். என்னால இங்க இருக்கற நிமிஷம் வரை அதை கொடுக்கப் போறேன்” என்று ஆனந்த கண்ணீரோடு டீயை போட இஞ்சி தட்டினார்.

  தனக்கிருக்கும் பிரச்சனைகள் அடியோடு மறந்தவனாக, அன்னையின் அன்பில் நனைய துவங்கினான்.‌

    அன்னையின் கையால் சமைத்ததை சாப்பிட்டு அவரோடு புகைப்படம் எடுத்தான்.
  ஆனால் விக்கியை போலவே புகைப்படத்தில் லதாங்கியும் பதிவாகவில்லை.

   ‘அன்னையோடு புகைப்படம் கூட எடுக்க முடியாத வருத்தத்தில் இருக்க, மலர் போன் செய்தாள்.

  கண் கலங்குவதை மறைக்க எழுந்தவன், “போன் பேசிட்டு வர்றேன் அம்மா” என்று தள்ளி சென்றான்.‌ அவனது கலக்கம் அறிந்த லாதங்கியோ, புரிந்துக்கொண்டு மகனுக்கு தன்னால் முயன்றளவு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு, இனிப்பு காரம் பலகாரம் செய்யும் வேலையில் மூழ்கினாள்.

  அரசன் தான் அம்மா கையால் பலகாரம் உணவு சாப்பிட்டதேயில்லை. ஆசிரமத்தில் சாப்பிட்டது என்று ஏக்கமாய் உதிர்த்தான். அதன் காரணமாய் நளபாகத்தில் மூழ்கினார்.

  “சொல்லு தமிழ்” என்றான்.‌

   “ஆர் யூ ஓகே?” என்றாள்.
  
  “ம்ம்ம். அம்மா டீ போட்டு தந்தாங்க. காலையில் குரும்மா வச்சி இட்லி அவிச்சி தந்தாங்க. நிறைய பேசினோம்.

   என் பெயர்ல ஆடலரசன்னு ஒருத்தன் இருந்திருக்கான். அவனுக்கு கல்யாணம் என்று புது வீட்லயே கல்யாணத்தை முடிவு செய்திருக்காங்க‌. அன்பார்சினிட்லி பொண்ணு ஓடி போகவும் கல்யாணம் நின்றிருக்கு. இதுல எல்லாரும் இறந்துட்டாங்க. எப்படி இறந்தாங்கன்னு அவங்களுக்கு தெரியலை.

  அப்பா தான் பொண்ணு ஓடியதா சொன்னாராம். குடும்பமா இறந்துப்போனப்ப பொண்ணு வீட்டுக்காரங்க யாருமில்லை. எல்லாரும் லாட்ஜில் தங்கியதா சொன்னாங்க. இப்ப அந்த லாட்ஜ் இல்லை. அங்க பஸ் ஸ்டாப் இருக்கு. மற்றபடி வேற விவரம் இல்லை.” என்றான்.‌

  “உனக்கு ஏதும் அவங்களால் ஆபத்தில்லையே?” என்றாள்.

   “இல்லை… அம்மாவால ஆபத்து வருமா?” என்று நெகிழ்ந்து கூறினான்.‌

  ‘இறைவா… இவனை என்னப் பண்ணறது?’ என்று பல்லைக்கடித்து, “மிஸ்டர் தமிழ்…. அவங்க பேய். உன் வீட்ல பேய் இருக்குடா.” என்றாள்.

   “அவங்க பேய் இல்லை. அம்மா… என் வீட்ல பேய்கள் இல்லை. ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இந்த வீட்ல வாழ்ந்தவங்க. கிட்டதட்ட மூதாதையர்கள். குலதெய்வமா வழிபடலாம் தப்பில்லை. நான் பேயா பார்க்கலை.” என்றான்.‌

  “முட்டாளா நீ… உறவுகள் சொந்தபந்தம் வேண்டும்னு பேயா அலையற. எனக்கு அது புரியுது. ஆனா அதுக்காக பேயையே உறவுகளா ஏத்துக்கற உன் அறிவுத்திறனை கண்டு வியக்கறேன்.” என்று திட்ட தமிழரசன் சிரித்தான்.

  “நான் முட்டாளாவே இருந்துக்கறேன் தமிழ்.
   உன்னை விட இவங்க பெட்டரானவங்க தான்.

என்னோட தினமும் பேசற, உன் பெயரை கூட சொல்ல மாட்டேங்கற. காதலிப்பதா ஒப்புதல் தரலை. என் வீட்ல பேய்கள் உலாவறது உனக்கு தெரியும். ஆனா ஓரெட்டு என்னனு வந்து பார்க்கறியா? எல்லாமே போன் மூலமா பேசற, ஜஸ்ட் அவ்ளோ தான் உன்னோட பழக்கம். ஆனா பேயா வந்தாலும் எங்கம்மா எனக்காக சமைக்கறாங்க.” என்றதும் தமிழ்மலர் திகைத்து போனாள். என்னயிருந்தாலும் அவள் அக்கறை எல்லாம் இந்த போன் மூலமாக மட்டும் தானே?! அவன் அதை நக்கலாய் சொல்வதில் தப்பில்லையே.

  “ஹலோ ஹலோ..” என்றவன் தன்னவளை காயப்படுத்துவதை உணர்ந்து “சாரி” என்று கூறினான்.

  தமிழ்மலருக்கு அரசனிடம் நேரிடையாக போனில் பேசுபவள் பால்காரியான தான் என அறிமுகமாகிடலாமா? என்று யோசித்தாள்‌.

-தொடரும்.
    
  
 
  

13 thoughts on “அலப்பறை கல்யாணம்-13”

  1. M. Sarathi Rio

    அலப்பறை கல்யாணம்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 13)

    ரெண்டு வார்த்தை கேட்டாலும் நல்லா நச்சுன்னுத்தான் கேட்டுப்பூட்டான் பயபுள்ளை.
    சொன்னா மாதிரி தமிழ் கிட்ட போன்ல பேசறாளே தவிர நேர்ல வந்து நான் தான் அந்த தமிழ் மலர், அந்த வீட்ல எப்படி இருக்கே, சாப்பிடறியா இல்லையான்னு ஒருவார்த்தை இதுவரைக்கும் கேட்டதுண்டா அந்த மலர்…?

    ஆனா, இப்ப வந்த இந்த லலிதாங்கி அம்மா வந்தவுடனே அவனுக்கு காபி போட்டு கொடுத்து, டிபன் பண்ணி கொடுத்து, இதோ இப்ப பையன் சாப்பிட நொறுக்குத்தீனியும்
    பண்ணித்தர போயிருக்காங்க.
    அம்மான்னா சும்மா இல்லைடான்னு…. பேக் க்ரவுண்ட் சாங்கே இந்த அத்தியாயம் முழுக்க காதாண்ட
    கேட்டுக்கிட்டே இருக்குது போங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *